உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • w95 8/1 பக். 4-7
  • மேம்பட்ட காலங்கள் விரைவில்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • மேம்பட்ட காலங்கள் விரைவில்
  • காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1995
  • துணை தலைப்புகள்
  • இதே தகவல்
  • உணவுப் பற்றாக்குறைகள் முன்னறிவிக்கப்பட்டிருக்கின்றன
  • கடந்தகாலத்தில் யெகோவா தம் ஊழியர்களைப் பராமரித்தார்
  • இன்றும் கடவுள் தம்முடைய ஊழியர்களை ஆதரிக்கிறார்
  • மேம்பட்ட காலங்கள் விரைவில்
  • ஏழை ஆனாலும் செல்வந்தர் அது எப்படி?
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1997
  • உண்மையான பாதுகாப்பு—இப்போதும் எப்போதும்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1996
  • “ஜீவ அப்பம்” அனைவருக்கும் கிடைக்கிறது
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1986
  • உதவிக்காகக் கூப்பிடுவோரை யார் விடுவிப்பார்?
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2010
மேலும் பார்க்க
காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1995
w95 8/1 பக். 4-7

மேம்பட்ட காலங்கள் விரைவில்

“எ ங்களுக்கு ஒன்று-பூஜ்யம்-ஒன்று தான்,” என்று ஒரு பெண் சொல்கிறாள்.

“என் நிலைமை இன்னும் மோசம்,” என்று அவளுடைய சிநேகிதி பதிலளிக்கிறாள். “எனக்கு பூஜ்யம்-பூஜ்யம்-ஒன்று தான்.”

மேற்கு ஆப்பிரிக்காவின் சில பகுதிகளில் அப்படிப்பட்ட சிறிய உரையாடலுக்கு எந்த விளக்கமும் தேவையில்லை. ஒரு நாளைக்கு மூன்றுமுறை (ஒன்று-ஒன்று-ஒன்று) சாப்பிடுவதற்குப் பதிலாக, ஒன்று-பூஜ்யம்-ஒன்றில் இருக்கும் ஒருவர் ஒருநாளைக்கு இருமுறை மட்டுமே—காலையில் ஒருமுறை மாலையில் ஒருமுறை மட்டுமே—சாப்பிட முடியும். பூஜ்யம்-பூஜ்யம்-ஒன்றில் இருக்கும் ஒரு இளைஞன் தன் நிலைமையை இவ்வாறு விவரிக்கிறான்: “நான் ஒரு நாளைக்கு ஒருமுறை சாப்பிடுகிறேன். என் குளிர்சாதன பெட்டியில் தண்ணீரை நிரப்பி வைக்கிறேன். இரவில் படுக்கைக்குச் செல்லும் முன்பு காரியை [மரவள்ளிக்கிழங்கு வகை] சாப்பிடுகிறேன். நான் இப்படித்தான் சமாளிக்கிறேன்.”

அதிகரிக்கும் எண்ணிக்கையான மக்களின் நிலைமை இன்று இப்படித்தான் இருக்கிறது. விலைவாசி அதிகரிக்கிறது; பணத்தின் வாங்கும் மதிப்பு குறைந்துவருகிறது.

உணவுப் பற்றாக்குறைகள் முன்னறிவிக்கப்பட்டிருக்கின்றன

அப்போஸ்தலன் யோவானுக்குக் கொடுக்கப்பட்ட தொடர்ச்சியான தரிசனங்களில், இன்று அநேகர் எதிர்ப்படக்கூடிய கடினமான நிலைமைகளைப்பற்றி கடவுள் முன்னறிவித்தார். அவற்றுள் உணவுப் பற்றாக்குறையும் அடங்கும். யோவான் கூறுகிறார்: “நான் பார்த்தபோது, இதோ, ஒரு கறுப்புக்குதிரையைக் கண்டேன்; அதின்மேல் ஏறியிருந்தவன் ஒரு தராசைத் தன் கையிலே பிடித்திருந்தான்.” (வெளிப்படுத்துதல் 6:5) வரப்போகும் தீங்கை முன்னறிவித்த இந்தக் குதிரையும் அதில் சவாரி செய்கிறவனும் பஞ்சத்தைச் சித்தரிக்கின்றன—உணவு அவ்வளவு குறைவாக இருப்பதால் அது தராசில் நிறுத்துத்தரப்படும்.

அடுத்ததாக அப்போஸ்தலன் யோவான் சொல்கிறார்: “அப்பொழுது, ஒரு பணத்துக்கு ஒருபடி கோதுமையென்றும், ஒரு பணத்துக்கு மூன்றுபடி வாற்கோதுமையென்றும், . . . உண்டான சத்தத்தைக் கேட்டேன்.” யோவானின் நாளில், ஒருபடி கோதுமை ஒரு படைவீரனுக்குக் கொடுக்கப்பட்ட தினசரி பங்காக இருந்தது; ஒரு பணம் ஒரு நாளின் கூலியாக இருந்தது. இதன் காரணமாக, ரிச்சர்ட் வேமத்தின் மொழிபெயர்ப்பு, இந்த வசனத்தை இவ்வாறு மொழிபெயர்க்கிறது: “ஒரு ரொட்டிக்கு ஒரு முழு நாளுக்குரிய கூலி, மூன்று வாற்கோதுமை அப்பங்களுக்கு ஒரு முழு நாளுக்குரிய கூலி.”—வெளிப்படுத்துதல் 6:6.

இன்று ஒரு முழு நாளின் கூலி எவ்வளவாக இருக்கிறது? உலக மக்கள்தொகையின் நிலை, 1994 என்ற ஆங்கில சிற்றேட்டின் அறிக்கை இவ்வாறு குறிப்பிடுகிறது: “சுமார் 110 கோடி மக்கள், வளர்ச்சியடைந்து வரும் தேசங்களின் மக்கள்தொகையில் சுமார் 30 சதவீதத்தினர், ஒரு நாளைக்கு ஏறக்குறைய $1-ல் வாழ்க்கை நடத்துகிறார்கள்.” இதன் காரணமாக, உலகிலுள்ள ஏழைகளுக்கு ஒரு நாள் கூலியில், சொல்லர்த்தமாகவே, கிட்டத்தட்ட ஒரு ரொட்டியையே வாங்க முடிகிறது.

மிகவும் ஏழ்மையாக இருப்பவர்களுக்கு நிச்சயமாகவே இது ஆச்சரியமாக இல்லை. ஒரு மனிதன் இவ்வாறு வியந்து கூறினான், “ரொட்டியா! ரொட்டியை யாரால் வாங்க முடியும்? இந்தக் காலத்தில் அது விசேஷித்த உணவாக இருக்கிறதே!”

இதற்கு எதிரிடையான உண்மை என்னவெனில், உணவில் எந்தப் பற்றாக்குறையும் இல்லை. ஐநா மூலங்களின்படி, கடந்த பத்து வருடங்களின்போது, உலகின் உணவு உற்பத்தி அளவில் 24 சதவீத அதிகரிப்பு ஏற்பட்டது; அது உலகின் மக்கள்தொகை அதிகரிப்பைவிட அதிகமானது. என்றபோதிலும், இந்த உணவு அதிகரிப்பு எல்லாராலும் அனுபவிக்கப்படவில்லை. உதாரணமாக, ஆப்பிரிக்காவில், உணவு உற்பத்தி உண்மையில் 5 சதவீதம் குறைந்தது; அதேநேரத்தில் மக்கள்தொகை 34 சதவீதம் அதிகரித்தது. ஆகவே உலகளாவிய விதத்தில், மொத்தமாக உணவு ஏராளமாக இருந்தாலும், அநேக நாடுகளில் உணவுப் பற்றாக்குறை தொடர்கிறது.

உணவுப் பற்றாக்குறை என்றால் அதிக விலைவாசியை அர்த்தப்படுத்துகிறது. வேலையின்மை, குறைந்த ஊதியங்கள், அதிகரிக்கும் பணவீக்கம் ஆகியவை, கிடைக்கக்கூடியவற்றை வாங்குவதற்கான பணத்தைப் பெறுவதை அதிக கடினமாக்குகின்றன. மனித வளர்ச்சி அறிக்கை 1994 (ஆங்கிலம்) குறிப்பிட்டது: “உணவு கிடைக்காததன் காரணமாக மக்கள் பசியால் வாடுவதில்லை—ஆனால் அவர்களால் அதை வாங்க முடியாததால் வாடுகிறார்கள்.”

நம்பிக்கையின்மை, ஏமாற்றம், மனக்கசப்பு ஆகியவை அதிகரிக்கின்றன. “இன்று மோசமாக இருக்கிறது, ஆனால் நாளை இன்னும் மோசமாகிவிடும் என்ற ஓர் உணர்வை மக்கள் கொண்டிருக்கிறார்கள்,” என்று மேற்கு ஆப்பிரிக்காவில் வாழும் ஒரு பெண் க்ளோரி சொன்னார். மற்றொரு பெண்மணி இவ்வாறு சொன்னார்: “மக்கள் ஒரு பேரழிவை நெருங்கிக்கொண்டிருப்பதாக உணருகிறார்கள். மார்க்கெட்டில் ஒன்றுமே விட்டுவைக்கப்பட்டிராத ஒரு நாள் வரும் என்று அவர்கள் நினைக்கிறார்கள்.”

கடந்தகாலத்தில் யெகோவா தம் ஊழியர்களைப் பராமரித்தார்

யெகோவா தம்முடைய உண்மையுள்ள ஊழியர்களுக்கு, தேவையானவற்றை அளிப்பதன்மூலமும் கஷ்டமான சூழ்நிலைகளைச் சமாளிக்க பெலனளிப்பதன்மூலமும் அவர்களுக்குப் பலனளிக்கிறார் என்று அவர்கள் அறிந்திருக்கிறார்கள். கடவுளின் பராமரிக்கும் திறமையின்மீதுள்ள அப்பேர்ப்பட்ட நம்பிக்கை, உண்மையில் நம் விசுவாசத்தின் இன்றியமையாத பாகமாக இருக்கிறது. அப்போஸ்தலன் பவுல் எழுதினார்: “தேவனிடத்தில் சேருகிறவன் அவர் உண்டென்றும், அவர் தம்மைத் தேடுகிறவர்களுக்குப் பலன் அளிக்கிறவரென்றும் விசுவாசிக்கவேண்டும்.”—எபிரெயர் 11:6.

யெகோவா எப்போதும் அவருடைய உண்மையுள்ள ஊழியர்களைப் பராமரித்திருக்கிறார். மூன்றரை வருட வறட்சி ஒன்றின்போது யெகோவா, எலியா தீர்க்கதரிசிக்கு உணவளித்தார். ஆரம்பத்தில், எலியாவுக்கு அப்பமும் இறைச்சியும் கொண்டுவரும்படி கடவுள் காகங்களுக்குக் கட்டளையிட்டார். (1 இராஜாக்கள் 17:2-6) பின்னர், எலியாவுக்கு உணவளித்த விதவையிடம் மாவும் எண்ணெய்யும் அற்புதகரமாக தொடர்ந்திருக்கும்படி யெகோவா பார்த்துக்கொண்டார். (1 இராஜாக்கள் 17:8-16) அதே பஞ்சத்தின்போது, பொல்லாத ராணியாகிய யேசபேலால் அவருடைய தீர்க்கதரிசிகளுக்குக் கடுமையான மதத் துன்புறுத்தல் கொண்டுவரப்பட்டபோதிலும், அவர்களுக்கு அப்பமும் தண்ணீரும் கிடைக்கும்படியும் யெகோவா பார்த்துக்கொண்டார்.—1 இராஜாக்கள் 18:13.

பின்னர், விசுவாசதுரோக எருசலேமை பாபிலோனின் ராஜா முற்றுகையிட்டபோது, மக்கள் ‘அப்பத்தை நிறையின்படியே விசாரத்தோடே சாப்பிட’ வேண்டி இருந்தது. (எசேக்கியேல் 4:16) சில பெண்கள் தங்கள் சொந்த பிள்ளைகளின் மாம்சத்தைத் தின்னும் அளவிற்கு நிலைமை அவ்வளவு மோசமானது. (புலம்பல் 2:20) இருப்பினும், தீர்க்கதரிசியாகிய எரேமியா பிரசங்கித்ததன் காரணமாக காவலில் இருந்தபோதுகூட, “நகரத்திலே அப்பமிருக்குமட்டும் அப்பஞ்சுடுகிறவர்களின் வீதியிலே தினம் ஒரு அப்பத்தை அவனுக்கு [எரேமியாவுக்கு] வாங்கிக்கொடுக்க” செய்யும்படி யெகோவா பார்த்துக்கொண்டார்.—எரேமியா 37:21.

அப்பங்கள் தீர்ந்துபோனபோது யெகோவா எரேமியாவை மறந்துவிட்டாரா? இல்லை என்பது தெளிவாக இருக்கிறது; ஏனென்றால், அந்த நகரம் பாபிலோனியர்களிடம் விழுந்தபோது, எரேமியா, ‘சாப்பாட்டுக்குத் தேவையானவையும் ஓர் அன்பளிப்பும் கொடுக்கப்பட்டு அனுப்பிவிடப்பட்டார்.’—எரேமியாஸ் ஆகமம் 40:5, 6, தமிழ் கத்தோலிக்க பைபிள்; சங்கீதம் 37:25-ஐயும் காண்க.

இன்றும் கடவுள் தம்முடைய ஊழியர்களை ஆதரிக்கிறார்

கடந்த தலைமுறைகளில் யெகோவா தம்முடைய ஊழியர்களைக் காத்துவந்ததுபோலவே, அவர் இன்றும் செய்கிறார்; பொருள்சம்பந்தமாகவும் ஆவிக்குரிய விதத்திலும் அவர்களைப் பராமரிக்கிறார். உதாரணமாக, மேற்கு ஆப்பிரிக்காவில் வாழ்ந்து வருகிற லாமிட்யூன்டெயின் அனுபவத்தைக் கவனியுங்கள். அவர் கூறுகிறார்: “நான் ஓரளவுக்குப் பெரிய கோழிப் பண்ணையைச் சொந்தமாக வைத்திருந்தேன். ஒருநாள் ஆயுதங்களுடன் திருடர்கள் பண்ணைக்கு வந்து பெரும்பாலான கோழிகளையும், அவசரத்திற்குப் பயன்படுத்தக்கூடிய ஜெனரேட்டரையும், எங்களிடமிருந்த பணத்தையும் திருடிச் சென்றார்கள். அதற்குச் சிறிது காலத்திற்குப்பின், மீதமிருந்த சில கோழிகளும் நோயால் இறந்தன. அது என்னுடைய கோழி வியாபாரத்தைக் கெடுத்துவிட்டது. இரண்டு வருடங்களாக ஒரு வேலைக்காக முயற்சிசெய்தும் எந்தப் பயனுமில்லை. காரியங்கள் நிஜமாகவே கடினமாக இருந்தன; ஆனால் யெகோவா என்னை ஆதரித்தார்.

“நம்மை மேம்பட்டவர்களாக்குவதற்காகக் காரியங்கள் நமக்குச் சம்பவிக்கும்படி யெகோவா அனுமதிக்கிறார் என்பதை உணர்ந்துகொண்டதே, கடினமான காலங்களை நான் சமாளிக்கும்படியாக எனக்கு உதவிசெய்தது. என் மனைவியும் நானும் எங்களுடைய வழக்கமான குடும்ப பைபிள் படிப்பைத் தொடர்ந்தோம்; இது நிஜமாகவே எங்களுக்கு உதவி செய்தது. ஜெபமும் பலத்தின் ஒரு பெரிய ஊற்றுமூலமாக இருந்தது. சிலசமயங்களில் ஜெபம் செய்ய விருப்பமற்றவனாக உணர்ந்தேன்; ஆனாலும் நான் ஜெபித்தபோது, நன்றாக உணர்ந்தேன்.

“அந்தக் கடினமான காலத்தின்போது, வேதவசனங்களைக் குறித்து தியானிப்பதன் மதிப்பைக் கற்றுக்கொண்டேன். யெகோவாவை நம் மேய்ப்பராகப் பேசும் சங்கீதம் 23-ஐக் குறித்து நான் அதிகம் சிந்திப்பதுண்டு. என்னை உற்சாகப்படுத்திய மற்றொரு வசனம், பிலிப்பியர் 4:6, 7; அது ‘எல்லா புத்திக்கும் மேலான தேவசமாதானத்தை’ குறித்துப் பேசுகிறது. என்னைப் பலப்படுத்திய மற்றொரு பகுதி, 1 பேதுரு 5:6, 7; அது இவ்வாறு வாசிக்கிறது: ‘ஆகையால், ஏற்றகாலத்திலே தேவன் உங்களை உயர்த்தும்படிக்கு, அவருடைய பலத்த கைக்குள் அடங்கியிருங்கள். அவர் உங்களை விசாரிக்கிறவரானபடியால், உங்கள் கவலைகளையெல்லாம் அவர்மேல் வைத்துவிடுங்கள்.’ இந்த எல்லா வசனங்களும் என்னுடைய அந்தக் கஷ்டமான காலங்களில் உதவின. நீங்கள் தியானிக்கும்போது, உங்களுக்கு மனச்சோர்வுண்டாக்கும் காரியங்களை அவை உங்கள் மனதிலிருந்து மாற்றீடு செய்யமுடிகிறது.

“இப்போது எனக்குத் திரும்பவும் வேலை கிடைத்திருக்கிறது, ஆனால் உண்மையைச் சொல்லவேண்டுமானால், நிலைமை இன்னும் கஷ்டமாகவே உள்ளது. பைபிள், 2 தீமோத்தேயு 3:1-5-ல் (NW) முன்னுரைத்ததுபோல, ‘கையாளுவதற்குக் கடினமான கொடிய காலங்களால்’ குறிக்கப்பட்ட “கடைசி நாட்களில்” நாம் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். வேதவசனம் சொல்வதை நம்மால் மாற்றமுடியாது. ஆகவே வாழும் நிலைமைகள் சுலபமாக இருக்கும் என்று நான் எதிர்பார்ப்பதில்லை. இருந்தாலும், சமாளிப்பதற்கு யெகோவாவின் ஆவி எனக்கு உதவுகிறதென்று நான் நினைக்கிறேன்.”

நாம் வாழ்ந்துவருகிற கொடிய காலங்களின் மத்தியிலும், யெகோவாவிலும் அவருடைய அரசகுமாரனாகிய கிறிஸ்து இயேசுவிலும் நம்பிக்கை வைப்போர் ஏமாற்றம் அடையமாட்டார்கள். (ரோமர் 10:11) இயேசுதாமே நமக்கு உறுதியளிக்கிறார்: “ஆகையால், என்னத்தை உண்போம், என்னத்தைக் குடிப்போம் என்று உங்கள் ஜீவனுக்காகவும்; என்னத்தை உடுப்போம் என்று உங்கள் சரீரத்துக்காகவும் கவலைப்படாதிருங்கள் என்று, உங்களுக்குச் சொல்லுகிறேன்; ஆகாரத்தைப்பார்க்கிலும் ஜீவனும், உடையைப்பார்க்கிலும் சரீரமும் விசேஷித்தவைகள் அல்லவா? ஆகாயத்துப் பட்சிகளைக் கவனித்துப்பாருங்கள்; அவைகள் விதைக்கிறதுமில்லை, அறுக்கிறதுமில்லை, களஞ்சியங்களில் சேர்த்துவைக்கிறதுமில்லை; அவைகளையும் உங்கள் பரமபிதா பிழைப்பூட்டுகிறார்; அவைகளைப்பார்க்கிலும் நீங்கள் விசேஷித்தவர்கள் அல்லவா? கவலைப்படுகிறதினாலே உங்களில் எவன் தன் சரீர அளவோடு ஒரு முழத்தைக் கூட்டுவான்? உடைக்காகவும் நீங்கள் கவலைப்படுகிறதென்ன?”—மத்தேயு 6:25-28.

இந்தக் கொடிய காலங்களில் இவை நிச்சயமாகவே உள்ளத்தைத் துருவக்கூடிய கேள்விகளாக இருக்கின்றன. ஆனால் இந்த உறுதியளிக்கும் வார்த்தைகளுடன் இயேசு மேலும் தொடர்ந்தார்: “காட்டுப் புஷ்பங்கள் எப்படி வளருகிறதென்று கவனித்துப்பாருங்கள்; அவைகள் உழைக்கிறதுமில்லை, நூற்கிறதுமில்லை; என்றாலும், சாலொமோன் முதலாய் தன் சர்வ மகிமையிலும் அவைகளில் ஒன்றைப்போலாகிலும் உடுத்தியிருந்ததில்லை என்று, உங்களுக்குச் சொல்லுகிறேன். அற்ப விசுவாசிகளே! இன்றைக்கு இருந்து நாளைக்கு அடுப்பிலே போடப்படும் காட்டுப் புல்லுக்கு தேவன் இவ்விதமாக உடுத்துவித்தால், உங்களுக்கு உடுத்துவிப்பது அதிக நிச்சயமல்லவா? ஆகையால், என்னத்தை உண்போம், என்னத்தைக் குடிப்போம், என்னத்தை உடுப்போம் என்று, கவலைப்படாதிருங்கள். இவைகளையெல்லாம் அஞ்ஞானிகள் நாடித்தேடுகிறார்கள்; இவைகளெல்லாம் உங்களுக்கு வேண்டியவைகள் என்று உங்கள் பரமபிதா அறிந்திருக்கிறார். முதலாவது தேவனுடைய ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேடுங்கள், அப்பொழுது இவைகளெல்லாம் உங்களுக்குக்கூடக் கொடுக்கப்படும்.”—மத்தேயு 6:28-33.

மேம்பட்ட காலங்கள் விரைவில்

உலகின் அநேக பகுதிகளில் சிதைந்துவரும் பொருளாதார மற்றும் சமுதாய நிலைமைகள் தொடர்ந்து மோசமாகும் என்பதற்கான எல்லா அறிகுறிகளும் இருக்கின்றன. இருப்பினும், இந்த நிலைமைகள் தற்காலிகமானவை என்பதைக் கடவுளுடைய மக்கள் அறிந்துள்ளனர். அரசனாகிய சாலொமோனின் மகிமையுள்ள ஆட்சி முழு பூமியையும் ஆட்சி செய்யப்போகிற சாலொமோனிலும் பெரிய ஒரு அரசரின் நீதியுள்ள ஆட்சிக்கு முன்நிழலாக இருந்தது. (மத்தேயு 12:42) அந்த அரசர் இயேசு கிறிஸ்து, “ராஜாதி ராஜா, கர்த்தாதி கர்த்தா.”—வெளிப்படுத்துதல் 19:16.

அரசனாகிய சாலொமோனைக் குறித்து ஆரம்ப நிறைவேற்றத்தைக் கொண்டிருந்த சங்கீதம் 72, இயேசு கிறிஸ்துவின் மகத்தான ஆட்சியை விளக்குகிறது. அரசராகிய கிறிஸ்துவின்கீழ் பூமியின் எதிர்காலத்தைக் குறித்து அது முன்னறிவிக்கும் சில மகத்தான காரியங்களைக் கவனியுங்கள்.

உலகெங்கும் சமாதானமான நிலைமைகள்: “அவருடைய நாட்களில் நீதிமான் செழிப்பான்; சந்திரனுள்ளவரைக்கும் மிகுந்த சமாதானம் இருக்கும். ஒரு சமுத்திரந்தொடங்கி மறு சமுத்திரம்வரைக்கும், நதிதொடங்கிப் பூமியின் எல்லைகள்வரைக்கும் அவர் அரசாளுவார்.”—சங்கீதம் 72:7, 8.

எளியவர்களுக்குக் கரிசனை: “கூப்பிடுகிற எளியவனையும், உதவியற்ற சிறுமையானவனையும் அவர் விடுவிப்பார். பலவீனனுக்கும் எளியவனுக்கும் அவர் இரங்கி, எளியவர்களின் ஆத்துமாக்களை இரட்சிப்பார். அவர்கள் ஆத்துமாக்களை வஞ்சகத்திற்கும் கொடுமைக்கும் தப்புவிப்பார்; அவர்களுடைய இரத்தம் அவருடைய பார்வைக்கு அருமையாயிருக்கும்.”—சங்கீதம் 72:12-14.

ஏராளமான உணவு: “பூமியில் ஏராளமான தானியம் உண்டாயிருக்கும்; மலைகளின் உச்சியில் நிறைந்து வழியும்.”—சங்கீதம் 72:16, NW.

யெகோவாவின் மகிமை பூமியை நிரப்பும்: “இஸ்ரவேலின் தேவனாயிருக்கிற கர்த்தராகிய தேவனுக்கு ஸ்தோத்திரமுண்டாவதாக; அவரே அதிசயங்களைச் செய்கிறவர். அவருடைய மகிமைபொருந்திய நாமத்துக்கு என்றென்றைக்கும் ஸ்தோத்திரமுண்டாவதாக; பூமிமுழுவதும் அவருடைய மகிமையால் நிறைந்திருப்பதாக.”—சங்கீதம் 72:18, 19.

ஆகவே உண்மையிலேயே மேம்பட்ட காலங்கள் விரைவில் வரவிருக்கின்றன.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்