ஆபத்து நிறைந்த ஒரு சுற்றுவட்டாரத்தில் நீங்கள் எவ்வாறு உயிர்வாழலாம்?
“நான் எப்போதும் பயந்துகொண்டே இருந்தேன். லிஃப்டில் இருந்தபோது பயந்துகொண்டு இருந்தேன். என் காரில் இருந்தபோது பயந்துகொண்டு இருந்தேன். என் வீட்டில் இருந்தபோது பயந்துகொண்டு இருந்தேன். எல்லா இடங்களிலும் குற்றச்செயல் இருந்தது. ஜனங்கள் எப்போதும் கொள்ளையாடப்பட்டு வந்தனர்,” என்று மரியா சொல்கிறாள். உங்களுடைய சுற்றுவட்டாரத்தில், விசேஷமாக இரவுநேர இருளில் இருக்கும்போது இந்த பிரேஸில் தேசத்துப் பெண்ணைப் போல் நீங்கள் உணருகிறீர்களா?
துப்பறியும் கதைகளை வாசிப்பது ஒருவேளை கிளர்ச்சியூட்டுவதாய் இருக்கலாம், ஆனால் மெய் வாழ்க்கையில் அவை பெரும்பாலும் மகிழ்ச்சியான விளைவுகளைக்கொண்டு முடிவதில்லை. ஒரு குற்றச்செயல் தீர்க்கப்படாமலேயே இருந்துவிடலாம். அல்லது கொலை சம்பந்தப்பட்ட விஷயங்களில் எவராவது ஒருவர் கணவர், தந்தை, அல்லது மகன், மனைவி, தாய், அல்லது மகள் இல்லாமலேயே தொடர்ந்து வாழ வேண்டியிருக்கிறது. உங்களுடைய பிராந்தியத்தில் வன்முறையான குற்றச்செயல் அதிகரித்து வருகிறதா? உங்களுடைய குடும்பம் பாதுகாப்பாய் இருக்கக்கூடிய ஒரு அமைதியான இடத்துக்காக நீங்கள் மிகவும் ஆசைப்படுகிறீர்களா? அல்லது, குற்றச்செயல் நிரம்பிய பிராந்தியத்தில் உங்களுடைய பிள்ளைகளை வளர்க்கவேண்டிய கட்டாயம் இருந்தால், அந்த இடத்தில் தொடர்ந்து உயிர்வாழ்வதற்கு நீங்கள் என்ன செய்யலாம்?
குற்றச்செயல்கள் குறைவாக உள்ள நகரங்கள் இன்னும் உள்ளன என்பது உண்மைதான். அநேக தேசங்களில் மக்கள் இன்னும் அமைதியான நாட்டுப்புறங்களிலோ அல்லது கலக்கமற்ற கிராமங்களிலோ வாழ்ந்துகொண்டிருக்கின்றனர். ஆனால் குற்றச்செயல் நடைபெறாத பிராந்தியங்கள் என்று முன்பு கருதப்பட்ட இடங்களிலும்கூட காரியங்கள் விரைவாக மாறிக்கொண்டேயிருக்கின்றன. உதாரணமாக, பிரேஸிலில் 50 ஆண்டுகளுக்கு முன்பிருந்த ஜனத்தொகையில் 70 சதவீதத்தினர் நாட்டுப்புறங்களில் வாழ்ந்தனர். இப்போது 70 சதவீதத்தினர் நகரங்களில் வாழ்கின்றனர். வேலைவாய்ப்புகளோடுகூட, குற்றச்செயல் மற்றும் வன்முறை போன்ற நகர் சார்ந்த பிரச்சினைகள் அதிகரித்திருக்கின்றன. ஆபத்தான பிராந்தியத்தில் வாழ்ந்துகொண்டிருந்தாலும்சரி அப்படிப்பட்ட இடத்தில் வாழ்ந்துகொண்டில்லையென்றாலும்சரி, வேலைக்கு அல்லது பள்ளிக்கு மற்றும் இன்னும் அநேக வேலைகளை செய்ய வீட்டை விட்டு வெளியே செல்லவேண்டிய நிலை உள்ளது.
நிலவி வரும் “திகில் நோய்க்குறித் தொகுதியை” ஒப்புக்கொண்டு, சமூக அநீதியும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயலுமே அதற்கான காரணங்கள் என்று ரியோ டி ஜெனீரோவில் உள்ள ஒரு காவல்துறை அதிகாரி குறிப்பிடுகிறார். செய்தித்தாள்களும் தொலைக்காட்சிகளும் பரவலாகக் காணப்படும் பயத்துக்கு காரணங்களாக இருக்கின்றன, அவை “கடுந்துயரமான செய்தியைக்கொண்டு பொதுமக்களை பாதித்து அவர்களை அதைரியப்படுத்துகின்றன.” போதை மருந்துகளுக்கு அடிமையாதல், குடும்ப சீர்குலைவு, குறைபாடுகளுள்ள மதசம்பந்தமான கல்வி ஆகியவையும்கூட அதிகரித்து வரும் அக்கிரமத்துக்குக் காரணங்களாய் இருக்கின்றன. எதிர்காலம் எதைக்கொண்டு வரும்? பொழுதுபோக்கு என்ற பெயரில் வன்முறையான காட்சிகள் புத்தகங்களிலும் திரைப்படங்களிலும் மிகவும் சர்வ சாதாரணமாகக் கருதப்பட்டு தொடர்ச்சியாக வந்துகொண்டேயிருப்பது, ஜனங்களை மற்றவர்களிடமாக உணர்ச்சியற்றவர்களாக ஆக்குமா? குற்றச்செயல் நடைபெறாத பிராந்தியங்கள் என்று கருதப்படுபவையும்கூட ஆபத்தானவையாக ஆகிவிடுமா?
வன்முறைக்கு இலக்காகுபவர்களுக்கு அது துயர் உண்டாக்குகிறபடியால், பாதுகாப்பாய் இருக்க வேண்டும் என்ற பலமான ஆசையை நாம் கொண்டிருக்கிறோம். தெருக்களில் கூடுதலான காவல்துறை அதிகாரிகள் இருக்க வேண்டும், கடினமான சிறைதண்டனைகள் அல்லது மரணதண்டனையும்கூட கொடுக்க வேண்டும் என்று கவலைப்படும் குடிமக்கள் வற்புறுத்திக் கேட்பது ஆச்சரியமாயில்லை! ஆபத்துகள் இருந்தபோதிலும், சிலர் சுய-பாதுகாப்புக்காக துப்பாக்கிகளை வாங்குகின்றனர். ஆனால் மற்றவர்கள் துப்பாக்கிகளை விற்பனை செய்வதை அதிகாரிகள் தடைசெய்யும்படி விரும்புகின்றனர். ஆனால் குற்றச்செயல் மிகுந்துள்ளது என்ற கெட்ட செய்தி இருந்தபோதிலும், அதற்காக மனமுறிவடைந்து போகவேண்டிய அவசியமில்லை. உண்மையில், ஜோஹன்ஸ்பர்க், மெக்ஸிகோ நகரம், நியூ யார்க், ரியோ டி ஜெனீரோ, சாவோ பாலோ போன்ற பெரிய நகரங்களில் வாழும் பெரும்பாலான மக்கள் இதுவரை ஒருபோதும் கொள்ளையிடப்படவில்லை. ஒரு ஆபத்தான சுற்றுவட்டாரத்தில் ஜனங்கள் எவ்வாறு குற்றச்செயலை சமாளிக்கின்றனர் என்பதை நாம் ஆராய்வோம்.
ஒரு நல்நம்பிக்கையுள்ள மனநிலையைக் காத்துக்கொள்ளுதல்
குற்றச்செயல்-நிறைந்த ஒரு பிராந்தியத்தைக் குறித்து, ஒரு எழுத்தாளர் தன் கருத்தைக் குறிப்பிடுகிறார்: “இன்னும் கடினமாயிருக்கும் சூழ்நிலையில் ஓரளவு கண்ணியத்தோடும் மரியாதையோடும் வாழ சமாளித்துக்கொண்டிருக்கும் பிரேஸில் நாட்டைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானவர்கள் புத்திசாலித்தனத்தோடும் விடாமுயற்சியோடும் வாழ்கின்றனர்.” ரியோ டி ஜெனீரோவில் 38 ஆண்டுகள் இருந்தபிறகு, ஷார்சே என்பவர் இவ்வாறு சொல்கிறார்: “நான் சில தெருக்களிலும் பிராந்தியங்களிலும் செல்வதைத் தவிர்க்கிறேன். தெருக்களில் நடக்கும் காரியங்களில் நான் ஆர்வத்தைக் காட்டிக்கொள்வதில்லை. இரவு நேரங்களில் அதிக நேரம் கழித்து தெருக்களில் வருவதையும்கூட நான் தவிர்க்கிறேன், அளவுக்கு மீறிய பயத்தை வெளிக்காட்டுகிறதில்லை. நான் அதிக கவனமுள்ளவனாய் இருக்கிறபோதிலும், நான் ஜனங்களை நேர்மையானவர்களைப் போல் கருதி, அவர்களை கண்ணியத்தோடும் மரியாதையோடும் நடத்துகிறேன்.”
ஆம், தேவையற்ற தொந்தரவுகளைத் தவிருங்கள். மற்ற ஜனங்களுடைய பிரச்சினைகளில் தலையிடாதீர்கள். அளவுக்கு மீறி பயப்படுவது உங்களுடைய நரம்பு மண்டலத்தை பாதித்து, நல்லமுறையில் நடந்துகொள்ளும் ஆட்களையும்கூட குளறுபடியாக நடக்கும்படி செய்விக்கும் என்ற உண்மையின் முக்கியத்துவத்தைக் குறைத்து விடாதீர்கள். ஆபத்து நிறைந்த இடங்களில் தான் செய்யும் வேலையைக் குறித்து ஓடர் என்பவர் பின்வருமாறு குறிப்பிடுகிறார்: “நான் நல்நம்பிக்கையுள்ள மனநிலையோடு இருக்க முயற்சி செய்கிறேன், நடக்கக்கூடும் என்ற சாத்தியத்தையுடைய கெட்ட காரியங்களைக் குறித்த பயத்தால் நான் என் மனதை போஷிப்பதில்லை, ஏனென்றால் இது தேவையற்ற மன இறுக்கத்தையும் திகிலையும் உண்டுபண்ணுகிறது. நான் எல்லா ஆட்களிடமும் மரியாதை காண்பிக்க முயற்சி செய்கிறேன்.” விழிப்போடு இருப்பதும், சந்தேகமாயிருக்கும் ஆட்களிடமிருந்து விலகியிருப்பதும் மட்டுமன்றி, ஒருவருடைய உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்துவதற்கு மற்றொரு உதவியை அவர் கூடுதலாக சொல்கிறார்: “எல்லாவற்றுக்கும் மேலாக, நான் யெகோவா தேவனில் என் நம்பிக்கையை வளர்க்கிறேன், அவருடைய கண்களுக்கு எதுவும் தப்புவதில்லை, நடைபெறும் எந்தக் காரியமும் அவருடைய அனுமதியோடுதான் நடைபெறுகிறது என்பதை நான் ஞாபகத்தில் வைத்திருக்கிறேன்.”
இருப்பினும், எவருமே எப்போதும் பயத்தில் வாழ விரும்புவதில்லை. கூடுதலாக, அளவுக்கு மீறிய பயமும் மனவேதனையும் உணர்ச்சி சம்பந்தமான மற்றும் உடல் சம்பந்தமான ஆரோக்கியத்துக்கு தீங்கு விளைவிப்பவை என்பதை யார் மறுப்பர்? எனவே, எந்தச் சமயத்திலும் தாக்கப்படுவோம் என்று பயப்படுவோருக்கு என்ன நம்பிக்கை உள்ளது? குற்றச்செயல் சம்பந்தமாக மிகவும் மோசமான நிலைமைகள் இனிமேல் வரப்போவதாக அநேகர் பயப்பட்டுக்கொண்டிருப்பதால், குற்றச்செயலுக்கு ஒரு முடிவை நாம் எப்போதாவது காண்போமா? “பயம் எப்போது முடிவடையும்?” என்ற பின்வரும் கட்டுரையை நீங்கள் வாசிக்கும்படி நாங்கள் உங்களை அழைக்கிறோம்.