உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • w95 8/15 பக். 4-7
  • பயம் எப்போது முடிவடையும்?

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • பயம் எப்போது முடிவடையும்?
  • காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1995
  • துணை தலைப்புகள்
  • இதே தகவல்
  • கடவுளுடைய புதிய உலகில் பாதுகாப்பு
  • திருடர்களே இல்லாத ஓர் உலகம்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1993
  • குற்றச்செயலுக்கு முடிவு இப்பொழுது சமீபம்!
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1990
  • பயத்திலிருந்து விடுதலை சாத்தியமா?
    விழித்தெழு!—2005
  • பாதுகாப்பான ஓர் எதிர்காலம்—இதை நீங்கள் எப்படிக் கண்டடையலாம்
    பாதுகாப்பான ஓர் எதிர்காலம்
மேலும் பார்க்க
காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1995
w95 8/15 பக். 4-7

பயம் எப்போது முடிவடையும்?

மெய்யான பாதுகாப்பு 2,000 வருடங்களுக்கு முன்பு வாழ்ந்த ஒரு மனிதரோடு சம்பந்தப்பட்டிருக்கிறது என்பதை அறிவது உங்களுக்கு ஆச்சரியமூட்டுவதாய் இருக்குமா? அன்பு தேவைப்படுவதைக் குறித்து இயேசு கிறிஸ்து ஒரு குறிப்பிடத்தக்க உவமையைக் கூறினார்: “ஒரு மனுஷன் எருசலேமிலிருந்து எரிகோவுக்குப் போகையில் கள்ளர் கையில் அகப்பட்டான்; அவர்கள் அவன் வஸ்திரங்களை உரிந்துகொண்டு, அவனைக் காயப்படுத்தி, குற்றுயிராக விட்டுப் போனார்கள்.” இரண்டு வழிப்போக்கர்கள் அவனைக் காணாதது போல் இருந்துவிட்டபோதிலும், ஒரு தயவான சமாரியன் இரக்கம் காண்பித்தான். இன்று குற்றச்செயலுக்கு ஆளாகுபவர்களை யார் கவனித்துக் கொள்கின்றனர்? பயத்திலிருந்து என்ன விடுதலையை நாம் எதிர்பார்க்கலாம்?—லூக்கா 10:30-37.

கடவுள் பேரில் நம்பிக்கையிருப்பதாக உரிமைபாராட்டிக்கொண்டபோதிலும், சட்டமும் ஒழுங்கும் மனிதனால் நடைமுறைக்குக் கொண்டுவரப்பட வேண்டும் என்று அநேகர் நினைக்கின்றனர். ஆனால் அதிக கடுமையான சிறை தண்டனைகள் அல்லது காவலர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பது மற்றும் அவர்களுக்கு நல்ல வருவாய் கொடுப்பது போன்றவை வன்முறையான குற்றச்செயலுக்கு ஒரு முடிவைக் கொண்டுவருமா? சட்டத்தை அமுலுக்குக் கொண்டுவரும் செயலாண்மைகள், ஓரளவு பாதுகாப்பு அளிப்பதற்கு உண்மை மனதோடு முயற்சிகள் எடுத்தபோதிலும், போதைப்பொருள் துர்ப்பிரயோகம், ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல், ஏழ்மை போன்றவற்றை நீக்கிவிடும் என்று நீங்கள் உண்மையிலேயே நம்புகிறீர்களா? இருப்பினும், நீதியின் பேரில் நமக்கிருக்கும் பசியும் தாகமும் வீணாய்ப்போக வேண்டிய அவசியமில்லை.—மத்தேயு 5:6.

சங்கீதம் 46:1 சொல்கிறது: “தேவன் நமக்கு அடைக்கலமும் பெலனும், ஆபத்துக்காலத்தில் அநுகூலமான துணையுமானவர்.” இந்தச் சொற்கள் வெறும் அழகான கவிதை மட்டுமல்ல என்பதை நாம் காண்போம்.

உள்நாட்டுப் போர்களிலும் பயங்கரவாதிகளின் தாக்குதல்களிலும் கொடூரமான கொலைகள் செய்யப்படுவதை செய்தித்தொடர்பு சாதனங்கள் தினமும் அறிக்கை செய்கின்றன என்பதை நீங்கள் அறிந்திருக்கிறீர்கள். உலகத்தின் சில பாகங்களில், வீடில்லாத பிள்ளைகள் அல்லது குற்றச்செயலைக் கண்கூடாகக் கண்ட சாட்சிகள் ஆகியோரை பூண்டோடு அழிப்பது சர்வசாதாரணமாய் ஆகிவிட்டிருக்கிறது. வாழ்க்கை ஏன் அவ்வளவு குறைவான மதிப்புடையதாய் ஆகிவிட்டிருக்கிறது? அப்படிப்பட்ட வன்முறைக்கு பல்வேறு காரணங்கள் இருந்தபோதிலும், ஒரு காரணத்தை நாம் கவனியாமல் விட்டுவிடக்கூடாது.

கடவுளுடைய வார்த்தையாகிய பைபிளின்படி, ‘உலகமுழுவதும் பொல்லாங்கனுக்குள் கிடக்கிறது.’ (1 யோவான் 5:19) உண்மையில், இயேசு கிறிஸ்து பிசாசாகிய சாத்தானை பொய்யன் என்று மட்டுமல்லாமல் ‘மனுஷகொலைபாதகன்’ என்றும்கூட அடையாளம் காண்பித்தார். (யோவான் 8:44) மனிதவர்க்கத்தின் மீது பல்வேறு வழிகளில் செல்வாக்கு செலுத்துவதன் மூலம் இந்த வல்லமைவாய்ந்த ஆவி சிருஷ்டி இன்று அதிகரித்து வரும் வன்முறையை முன்னேற்றுவித்து வருகிறான். “பூமியிலும் சமுத்திரத்திலும் குடியிருக்கிறவர்களே! ஐயோ, பிசாசானவன் தனக்குக் கொஞ்சக்காலமாத்திரம் உண்டென்று அறிந்து, மிகுந்த கோபங்கொண்டு, உங்களிடத்தில் இறங்கினபடியால், உங்களுக்கு ஆபத்து வரும்,” என்று வெளிப்படுத்துதல் 12:12 சொல்கிறது. மகிழ்ச்சிகரமாக, இந்தப் பொல்லாத ஒழுங்குமுறைக்குப் பதிலாக “நீதி வாசமாயிருக்கும் புதிய வானங்களும் புதிய பூமியும்” உண்டாகும்.—2 பேதுரு 3:13.

ஒரு புதிய உலகத்துக்கான இந்த மகத்தான நம்பிக்கையோடுகூட, இப்போதே என்ன உதவி நமக்கு இருக்கிறது?

அதற்கான திட்டவட்டமான பதிலைக் காண்பதற்கு முன், உண்மையான கிறிஸ்தவர்களும்கூட குற்றச்செயலிலிருந்து பாதுகாக்கப்படுவர் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை என்பதை மனதில் நன்கு பதிய வைத்திருப்பது நல்லது. அப்போஸ்தலனாகிய பவுல் தான் தனிப்பட்டவிதமாய் எதிர்ப்பட்ட சில இடர்ப்பாடுகளை விவரித்தார். அவர் “ஆறுகளால் வந்த மோசங்களிலும், கள்ளரால் வந்த மோசங்களிலும், . . . சுயஜனங்களால் வந்த மோசங்களிலும், அந்நிய ஜனங்களால் வந்த மோசங்களிலும், பட்டணங்களில் உண்டான மோசங்களிலும், வனாந்தரத்தில் உண்டான மோசங்களிலும், சமுத்திரத்தில் உண்டான மோசங்களிலும்” இருந்திருக்கிறார். (2 கொரிந்தியர் 11:26) அப்படியிருந்தபோதிலும் பவுல் இப்படிப்பட்ட ஆபத்துகளிலிருந்து உயிர்தப்பினார். அதே விஷயம் இன்றைக்கும் உண்மையாயிருக்கிறது; ஜாக்கிரதையாய் இருப்பதன் மூலம், நாம் தொடர்ந்து நம்முடைய வேலைகளை கூடுமானவரை இயல்பான முறையில் செய்துவரலாம். உதவியாயிருக்கக்கூடிய சில விஷயங்களை நாம் சிந்திப்போம்.

ஒருவர் ஆபத்து நிறைந்த சுற்றுவட்டாரத்தில் வாழ்ந்துகொண்டிருக்கிறார் என்றால், நல்நடத்தை பாதுகாப்பானதாய் இருக்கக்கூடும், ஏனென்றால் ஜனங்கள் மற்றவர்களை கூர்ந்து கவனிக்கின்றனர். கள்ளர்கள் குற்றச்செயலைத் திட்டமிட்டு நிறைவேற்றுகிறபோதிலும், அநேகர் தங்களை சாதாரணமானவர்களாக கருதிக்கொள்கின்றனர். அவர்கள் செய்யும் காரியங்களில் குற்றம் கண்டுபிடிப்பதைத் தவிருங்கள், அவர்கள் என்ன காரியங்களில் உட்பட்டிருக்கிறார்கள் என்பதைக் கண்டுபிடிக்க முயற்சி செய்யாதீர்கள். இவ்வாறு, பழிக்குப்பழி வாங்கும் செயலுக்கு நீங்கள் இலக்காகும் சாத்தியத்தைக் குறைக்கலாம். யார் புதிதாக ஏதோவொன்றை வாங்கியிருக்கின்றனர் அல்லது யார் தங்களுடைய வீடுகளை விட்டு விடுமுறைக்காக வெளியே செல்கின்றனர் என்பதை திருடர்கள் அறிந்துகொள்ள முயற்சி செய்வர் என்பதை மனதில் வையுங்கள், ஆகையால் நீங்கள் எதை மற்றவர்களுக்கு வெளிப்படுத்திக் காண்பிக்கிறீர்கள் என்பதில் விழிப்புள்ளவர்களாய் இருங்கள்.

யெகோவாவின் சாட்சிகள் ஊழியம் செய்பவர்கள் என்ற நற்பெயரைப் பெற்றிருப்பதால், அது அவர்களுக்கு குறிப்பிடத்தக்க அளவு பாதுகாப்பை அளித்திருக்கிறது என்பதை யெகோவாவின் சாட்சிகளில் அநேகர் கண்டுபிடித்திருக்கின்றனர். சமுதாயத்தில் உள்ள மக்களுக்கு உதவிசெய்வதில் பட்சபாதமின்றி தங்களையே அளிக்கும் அப்படிப்பட்ட கிறிஸ்தவர்களைத் தாங்கள் மதிக்கின்றனர் என்பதை குற்றச்செயலில் ஈடுபடுவோர் அடிக்கடி காண்பித்திருக்கின்றனர். யெகோவாவின் சாட்சிகள் கொலையாளிகளாகவோ அல்லது திருடர்களாகவோ இருப்பதில்லை, அவர்கள் ‘மற்றவர்களின் விஷயங்களில் தலையிடுவதில்லை,’ எனவே அவர்கள் ஓர் ஆபத்தாக இல்லை.—1 பேதுரு 4: 15.

கடவுளுடைய புதிய உலகில் பாதுகாப்பு

இயேசு கிறிஸ்து முன்னறிவித்த ‘அக்கிரமம் மிகுதியாதலைக்’ கண்டு நாம் வருந்துகிறோம், ஆனால் அளவுக்கு மீறி கவலைப்படுவதற்கு மாறாக, கடவுள் விரைவில் இந்தப் பொல்லாத ஒழுங்குமுறையை அடியோடு அழித்து விடுவார் என்ற நம்பிக்கையோடு நாம் இருக்கலாம். “ராஜ்யத்தினுடைய இந்தச் சுவிசேஷம்” உலகமுழுவதும் பிரசங்கிக்கப்படும் என்பதை முன்னறிவித்தது மட்டுமன்றி, இயேசு தம்மைப் பின்பற்றியவர்களுக்கு பின்வருமாறு நினைப்பூட்டினார்: “முடிவுபரியந்தம் நிலைநிற்பவனே இரட்சிக்கப்படுவான்.”—மத்தேயு 24:12-14.

மற்றவர்களை கொள்ளையிடுபவர்கள், சில சமயங்களில் நம்பமுடியாத அளவுக்கு கொடூரத்தோடு செய்பவர்கள் நீக்கப்படுவர் என்று நாம் நிச்சயமாய் இருக்கலாம். நீதிமொழிகள் 22:22, 23 சொல்கிறது: “ஏழையாயிருக்கிறான் என்று ஏழையைக் கொள்ளையிடாதே; சிறுமையானவனை நியாயஸ்தலத்தில் உபத்திரவப்படுத்தாதே. கர்த்தர் அவர்களுக்காக வழக்காடி, அவர்களைக் கொள்ளையிடுகிறவர்களுடைய பிராணனைக் கொள்ளையிடுவார்.” திருடர்கள், கொலையாளிகள், பாலினத்தை தகாவழியில் பயன்படுத்துபவர்கள் போன்ற பொல்லாதவர்களை யெகோவா அழித்து விடுவார். கூடுதலாக, அப்படிப்பட்ட குற்றச்செயலுக்கு பலியானவர்களை அவர் கவனியாமல் இருந்துவிட மாட்டார். அவர் அவர்களுடைய இழப்புகளை மேற்கொண்டு அவர்களுடைய ஆரோக்கியத்தை திரும்பவும் முழுவதுமாக நிலைநாட்டுவார்.

உண்மையில், ‘தீமையை விட்டு விலகி நன்மை செய்பவர்கள்’ வரப்போகும் மிகுந்த உபத்திரவத்தைத் தப்பிப்பிழைப்பதன் மூலமாகவோ அல்லது மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுப்பப்படுவதன் மூலமாகவோ நித்திய ஜீவனைப் பெற்றுக்கொள்வர். “நீதிமான்கள் பூமியைச் சுதந்தரித்துக்கொண்டு, என்றைக்கும் அதிலே வாசமாயிருப்பார்கள்.” (சங்கீதம் 37:27-29) இப்படிப்பட்ட பலன்கள் இயேசுவின் மீட்கும்பொருள் பலியினால் கிடைக்கக்கூடியதாயிருக்கும். (யோவான் 3:16) ஆனால் திரும்பவும் நிலைநாட்டப்பட்ட பரதீஸில் வாழ்க்கை எப்படியிருக்கும்?

கடவுளுடைய ராஜ்யத்தின்கீழ் வாழ்க்கை உண்மையிலேயே இன்பம் தருவதாய் இருக்கும். யெகோவா முன்னறிவிக்கிறார்: “என் ஜனம் சமாதான தாபரங்களிலும், நிலையான வாசஸ்தலங்களிலும், அமைதியாய்த் தங்கும் இடங்களிலும் குடியிருக்கும்.” (ஏசாயா 32:18) நித்திய ஜீவனைப் பெறப்போகும் அனைவரும் தங்கள் ஆளுமையை ஏற்கெனவே சரிப்படுத்திக் கொண்டிருப்பர். எவருமே பொல்லாதவர்களாகவோ அல்லது அநீதியானவர்களாகவோ இருக்கமாட்டார்கள், அப்படிப்பட்ட ஆட்களின் செயல்களுக்கு பலியாகப் போகிறவர்கள் எவருமே இருக்கமாட்டார்கள். தீர்க்கதரிசியாகிய மீகா சொல்கிறார்: “அவனவன் தன்தன் திராட்சச்செடியின் நிழலிலும், தன்தன் அத்திமரத்தின் நிழலிலும் பயப்படுத்துவார் இல்லாமல் உட்காருவான்.” (மீகா 4:4; எசேக்கியேல் 34:28) இன்றைய ஆபத்து நிறைந்த சுற்றுவட்டாரங்களிலிருந்து என்னே ஒரு வித்தியாசம்!

[பக்கம் 6-ன் பெட்டி]

ஜாக்கிரதையாய் இருங்கள்

அநேக குற்றவாளிகள் முழு நேரமாக வேலைசெய்து, குற்றச்செயல் செய்வதை ஒரு தொழிலாக ஆக்கிக்கொண்டிருக்கின்றனர். ஒருவரே உங்களுக்கு எதிராக துப்பாக்கியை நீட்டினாலும்கூட, அவர்கள் இரண்டு அல்லது மூன்று பேர்கள் அடங்கிய தொகுதிகளாக வேலை செய்யலாம். குற்றவாளி எந்தளவு இளைஞனாக இருக்கிறானோ அந்தளவு அவன் அதிக ஆபத்தானவனாக இருப்பான் என்பது அதிக தெளிவாகிக்கொண்டே வருகிறது. நீங்கள் தாக்குதலுக்கு உட்பட்டால் என்ன செய்யலாம்?

திருடன் எளிதில் கலக்கமடைந்துவிடாமல் இருப்பதற்காக அமைதியாய் இருங்கள்—அவனுடைய அனுபவமின்மை நீங்கள் கொல்லப்படுவதில் முடிவடையக்கூடும். நீங்கள் யெகோவாவின் சாட்சிகளில் ஒருவராக இருந்தால், அவ்வாறே உங்களை அடையாளப்படுத்திக் கொள்ளுங்கள். இருந்தபோதிலும், திருடன் கேட்பவற்றைக் கொடுத்துவிட தயாராயிருங்கள். நீங்கள் காலங்கடத்தினால், ஆபத்து அதிகரிக்கும். பின்பு, உங்களுடைய அடையாள அட்டையை அல்லது பஸ் கட்டணத்தைத் திருப்பிக் கொடுத்துவிடும்படி கேட்பது தீங்கு விளைவிக்காது என நீங்கள் உணரலாம்.

பெரும்பாலும் யார் குற்றவாளி என்பதை நீங்கள் கண்டுபிடிக்க முடியாது. சில திருடர்கள் போதை மருந்துக்கு அடிமைகளாகவோ அல்லது குற்றச்செயலை வாழ்க்கைத் தொழிலாகக் கொண்டவர்களாகவோ இருக்கின்றனர், வேறு சிலர் வெறுமென சாப்பிடுவதற்காகப் பணம் கேட்கின்றனர். எப்படியிருந்தாலும், பணம் நிறைய கொண்டு செல்லாதீர்கள். நகைகள், தங்க மோதிரங்கள் அல்லது விலையுயர்ந்த கைக்கடிகாரங்கள் போன்றவற்றை பகட்டாகக் காண்பிப்பதைத் தவிருங்கள். பயத்தை வெளிக்காட்டாமல் சாதாரணமாக நடந்து செல்லுங்கள், பிரயாணம் செய்யுங்கள். நீங்கள் ஆட்களை அடையாளம் கண்டுபிடிக்க விரும்புவது போல் தனிப்பட்ட நபர்களை உற்றுப் பார்க்காதீர்கள். தெருவில் துப்பாக்கி சூடு நடைபெற்றுக்கொண்டிருந்தால், தரையில் படுத்துக்கொள்ளுங்கள்; ஆடைகளை பின்பு சுத்தம் செய்துகொள்ளலாம்.—ரியோ டி ஜெனீரோவில் உள்ள ஒரு முன்னாள் காவலர்.

[பக்கம் 5-ன் படம்]

அமைதலாய் இருந்து திருடன் கேட்பவற்றைக் கொடுத்து விடுங்கள். நீங்கள் காலங்கடத்தினால் ஆபத்து அதிகரிக்கும்.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்