உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • w93 10/15 பக். 4-7
  • திருடர்களே இல்லாத ஓர் உலகம்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • திருடர்களே இல்லாத ஓர் உலகம்
  • காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1993
  • துணை தலைப்புகள்
  • இதே தகவல்
  • ‘திருடுகிறவன் இனித் திருடாமல் இருக்கக்கடவன்’
  • கடவுளுடைய புதிய உலகில் பாதுகாப்பு
  • பயம் எப்போது முடிவடையும்?
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1995
  • திருடுதல் ஏன் அதிகரித்துக்கொண்டிருக்கிறது?
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1993
  • உங்கள் நம்பிக்கை—கடவுளா அல்லது செல்வங்களா?
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1987
  • திருடுதல்—ஏன் கூடாது?
    விழித்தெழு!—1995
மேலும் பார்க்க
காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1993
w93 10/15 பக். 4-7

திருடர்களே இல்லாத ஓர் உலகம்

அது அவ்வளவு விரைவில் நடந்தது. பிரேஸிலில் சாவோ பாலோ என்ற இடத்திலிருந்த ஆன்டோனியோவின்a வீட்டிற்கு முன் நேர்த்தியாக உடையணிந்திருந்த ஒரு மனிதன், அவர் தலையில் ஒரு துப்பாக்கியை வைத்து, அவருடைய காரின் சாவிகளையும், ஆவணங்களையும் தரும்படி மிரட்டி வாங்கிக்கொண்டு, மிக விரைவாகக் காரை ஓட்டிச் சென்றுவிட்டான்.

ரியோ டி ஜனீரோ-வில், பாலோ என்ற மனிதனை அவனுடைய பத்து வயது மகளுக்கு முன்பாக, முழு ஆயுதமணிந்த நான்கு மனிதர்கள் அடித்து கீழ்ப்படுத்தினர். பின்பு அவனுடைய வீட்டிற்கு காரை ஓட்டிக்கொண்டுபோய், தங்களுக்கு என்னென்ன இஷ்டமோ அனைத்தையும் திருடிக்கொண்டு, பாலோவின் இரண்டு கார்கள் முழுவதும் நிரப்பினர். பாலோவின் மனைவியைக் கொன்றுவிடப்போவதாக மிரட்டி, அவர்கள் அவளையும் ஒரு வேலைக்காரனையும் பணயக் கைதிகளாக அழைத்துக்கொண்டு பாலோவின் நகர்ப்புற நகைக் கடைக்குப் போனார்கள்; அங்கு மதிப்புள்ள அனைத்தையும் எடுத்துவிட்டனர். இருந்தாலும் எதிர்பாராத விதமாக, பின்பு திருடர்கள் தொலைபேசியின்மூலம், அவர்கள் எங்கு கார்களை விட்டுச்சென்றனர் என்பதை சொன்னார்கள்.

கடினமாக உழைத்துச் சம்பாதித்தப் பணத்தையும் பொருள்களையும் கொள்ளையடிக்கப்படுவதில் இழப்பது எவ்வளவு ஊக்கம் இழக்கச் செய்கிறது! மற்றவர்கள் செய்வதுபோல, ஆன்டோனியோவும் பாலோவும் சட்டப்படி நடவடிக்கை எடுக்காமல் தாங்களாகவே பழிக்குப்பழி வாங்க முயற்சிக்கவில்லை. மற்றவர்கள் ஒருவேளை திருடனைத் தாக்கியிருக்கவோ கொலைசெய்தோ இருக்கலாம், அல்லது தங்களுடைய உயிர்களை இழந்திருக்கலாம். எடுத்துக்காட்டாக, ஓர் இளைஞன் பிரேஸிலிய பெண்ணிடமிருந்து அவளுடைய கடிகாரத்தை லபக் என்று பிடுங்கினபோது, கடுஞ்சினம் கொண்ட அந்தப் பெண் தன்னுடைய பையிலிருந்து ஒரு துப்பாக்கியை எடுத்து, திருடனைச் சுட்டுக்கொன்றாள். விளைவு? உ எஸ்டடோ டி S. பவ்லு அறிக்கையிடுகிறது: “இந்தக் காட்சியைக் கண்டுகொண்டிருந்த மக்கள் முன்பின் தெரியாத அந்தப் பெண்ணின் நோக்குநிலையைப் போற்றிப் பேசினர். அவளை அடையாளம் கண்டுகொள்வதற்கு காவல்துறையினரின் உதவிக்கு வருவதற்கு யாருமே விரும்பவில்லை.” திருடர்களே இல்லாத ஓர் உலகத்திற்காகக் கிறிஸ்தவர்கள் ஏங்கிக்கொண்டிருந்தாலும், அவர்கள் அந்தப் பெண் செய்ததுபோல பழிக்குப் பழிவாங்குவதில்லை. பழிவாங்குதல் யெகோவாவுக்குரியதாக இருப்பதால், அவர்கள் நீதிமொழிகள் 24:19, 20-ல் உள்ள வார்த்தைகளுக்குச் செவிசாய்க்கின்றனர்: “பொல்லாதவர்களைக்குறித்து எரிச்சலாகாதே; துன்மார்க்கர்மேல் பொறாமை கொள்ளாதே. துன்மார்க்கனுக்கு நல்முடிவு இல்லை.”

ஆனால் தாக்கப்பட்டால், நீங்கள் என்ன செய்யலாம்? ரியோ டி ஜனீரோ-வில் நடந்த சம்பவம், அமைதலாய் இருப்பதன் முக்கியத்துவத்தை எடுத்துக்காண்பிக்கிறது. எலாயிஸா என்னும் ஒரு கிறிஸ்தவர், ஒரு பைபிள் படிப்பை நடத்துவதற்காகப் பேருந்தில் பயணம் செய்துகொண்டிருந்தார். இரண்டு மனிதர்கள் பயணிகளைக் கொள்ளையடிக்க ஆரம்பித்தார்கள். அவள் இறங்கவேண்டிய பேருந்து நிற்குமிடம் வந்தபோது, எலாயிஸா அவர்களிடம், தான் யெகோவாவின் சாட்சிகளில் ஒருத்தி என்றும் ஒரு பைபிள் படிப்பை நடத்தப் போய்க்கொண்டிருப்பதாகவும் சொன்னாள். அவளுடைய பைபிளையும், படிப்புப் புத்தகத்தையும் காண்பித்தாள். திருடர்கள் அவளைக் கொள்ளையடிக்காமல், அவள் கீழே இறங்கிப்போக அனுமதித்தனர். மற்றொரு பயணியோ அனுமதிக்கப்படவில்லை. பிறகு ஓட்டுநர், இதைப்போன்ற ஒன்றை தான் ஒருபோதும் கண்டதேயில்லையென்று சொன்னார்.

ரெஜீனாவும் இரண்டு ஆயுதம் தரித்த மனிதர்களால் அவளுடைய காருக்குள் போகும்படி கட்டளையிடப்பட்டபோது அமைதியாக இருந்தாள். ரெஜீனா, அவேக்! பத்திரிகையின் தன்னுடைய சொந்த பிரதியைக் காண்பிப்பதன்மூலம் அவர்களுக்குச் சாட்சிகொடுத்தாள். கொள்ளைக்காரர்கள் சிறிது பயந்திருந்ததால், அவள் சில கற்கண்டுகளை வைத்திருந்த சாமான்கள் பகுதியைத் திறக்கும்படி அவர்களிடம் கேட்டாள். ஆனால் ராஜ்ய இன்னிசைகள் (Kingdom Melodies) ஒலிப்பேழைகளை (கேஸட்டுகளை) அவர்கள் பார்த்தபோது, அந்த இசையைக் கேட்க ஆரம்பித்தனர். சூழ்நிலைமை சிநேகப்பான்மையோடு இருந்ததால், ரெஜீனாவைப் புண்படுத்தாமல் நெடுஞ்சாலையில் இறக்கிவிட கொள்ளைக்காரர்கள் தீர்மானித்தனர்; அவருக்கு உதவ கருணையுடைய ஒரு நபரை அவள் கண்டுகொள்வாள் என்று அவளுக்கு நம்பிக்கை அளித்தனர். பத்து நிமிடங்கள் அவள் நடந்த பிறகு, ஒரு வீட்டைக் கண்டுபிடித்தாள். ஆனால் வீட்டுக்காரரோ அவளுக்கு நேர்ந்திருப்பதை நம்பத் தயாராக இல்லை, அவர் சொன்னார்: “நீ தாக்கப்பட்டதாகவே தோன்றவில்லை; நீ அவ்வளவு அமைதியாய் இருக்கிறாயே.”

ஒரு பலியாள் உடல் சம்பந்தமான பாதிப்புகளைப் பெறாமல் இருந்தாலும், இப்படிப்பட்ட நரம்பு-மண்டலத்தைத் தாக்கும் அனுபவம் வினைமையான பின்விளைவுகளைக் கொண்டிருக்கக்கூடும். ‘பலியாள் பாதுகாப்பற்றவராக உணரக்கூடும், குடும்ப அங்கத்தினர்களை அல்லது உதவிசெய்ய முயற்சிசெய்பவர்களை வெறுக்க ஆரம்பிக்கக்கூடும், மற்றவர்களை நம்பமுடியாதவராக மாறக்கூடும், நுட்பமான விவரங்களுக்கு ஏற்பாடு செய்வது மனதை ஆக்ரமித்துக் கொள்ளக்கூடும், உலகமே அநீதி நிறைந்ததாக இருக்கிறது என்று உணரக்கூடும்,’ என்று உ எஸ்டடோ டி S. பவ்லு அறிக்கையிடுகிறது. இதற்கு மாறாக, யெகோவா தேவன்மீது நம்பிக்கை கொண்டுள்ள ஒரு பலியாள் பெரும்பாலும் உடல் சம்பந்தமாகவும் உணர்ச்சி சம்பந்தமாகவும் பாதிக்கப்படாமல் தப்பிப்பிழைக்கிறார். ஆனாலும், இனிமேல் ஒருபோதும் குற்றமோ பயத்தை உண்டாக்கும் எதுவுமோ இல்லாதிருப்பது ஆசீர்வாதமாய் இருக்கும் என்பதை நீங்கள் ஒத்துக்கொள்ள மாட்டீர்களா?

‘திருடுகிறவன் இனித் திருடாமல் இருக்கக்கடவன்’

தங்களுடைய பேராசைமிக்க வாழ்க்கை-பாணியைப் பலர் விரும்பினாலும், திருடர்கள் தங்களுடைய ஆசைகளையும் தங்களுடைய ஆளுமைகளையும் மாற்றுவதற்கு கடவுளுடைய வார்த்தை உதவிசெய்திருக்கிறது. (எபேசியர் 4:23) உண்மையான பைபிள் அடிப்படையிலான நோக்கத்தை வாழ்க்கையில் உடையவர்களாக, அவர்கள் பின்வரும் வார்த்தைகளை தங்கள் இருதயங்களில் ஏற்றுக்கொண்டிருக்கின்றனர்: “அநியாயமாய் வந்த அதிக வருமானத்திலும், நியாயமாய் வந்த கொஞ்ச வருமானமே உத்தமம்.” (நீதிமொழிகள் 16:8) கிளாடியூ சொல்கிறார்: “என் குடும்பத்தில் ஏறக்குறைய அனைவருமே சாட்சிகள்தான், ஆனால் யெகோவாவைப் பற்றியும் அவருடைய நோக்கங்களைப் பற்றியும் அவர்கள் என்ன சொல்ல இருந்தனர் என்பதைக் குறித்து நான் ஒருபோதும் கேட்கவில்லை. திருட்டு லாரியில் கிட்டத்தட்ட 2,000 கிலோமீட்டர் பயணத்திலிருந்து திரும்பிவருகையில், நான் பல போலீஸ் சோதனைச் சாவடிகளையெல்லாம் கடந்துவர வேண்டியதிருந்தது. இதை நான் செய்யும்போது, என் வாழ்க்கையை நான் மாற்றவேண்டும் என்று உணர்ந்தேன். முன்பு அதைச் செய்ய நான் முயற்சிசெய்திருந்தேன், ஆனால் செய்ய முடியவில்லை. இந்த முறை, யெகோவாவின் சாட்சிகளாக இருக்கும் என் உறவினர்களைப் பற்றிச் சிந்திக்க ஆரம்பித்தேன்; அவர்கள் எவ்வளவு வித்தியாசமாக இருக்கிறார்கள், சந்தோஷம், மகிழ்ச்சி, சமாதானத்தை உடையவர்களாக இருக்கிறார்கள்.” இதன் விளைவாக, கிளாடியூ கடவுளுடைய வார்த்தையைப் படிக்க ஆரம்பித்தார், போதை மருந்துகளையும் முந்தின நண்பர்களையும் கைவிட்டுவிட்டு, ஒரு கிறிஸ்தவ ஊழியராக ஆனார்.

இப்பொழுது மற்றவர்களும் இந்த வார்த்தைகளுக்குச் செவிசாய்க்கின்றனர்: “கொடுமையை நம்பாதிருங்கள்; கொள்ளையினால் பெருமைபாராட்டாதிருங்கள்.” (சங்கீதம் 62:10) கொள்ளையடிக்கும்போது கொலைசெய்ய முயற்சிசெய்ததற்காகச் சிறைத் தண்டனையைப் பெற்றபின்பு, போதை மருந்துக்கு அடிமையானவரும், போதை மருந்து கடத்தல்செய்தவராகிய ஷூஸி தன்னுடைய மைத்துனனோடு பைபிளைப் படிப்பதன்மூலம் பயனடைந்தார். அவர் போதை மருந்துகளைப் பயன்படுத்துவதையும் விற்பதையும் நிறுத்தினார், இப்போது அவர் வைராக்கியமுள்ள ஒரு சாட்சியாக இருக்கிறார்.

ஆனாலும், ஒரு புதிய ஆளுமை தானாக அல்லது அற்புதம்போல வந்துவிடுவதில்லை. போதை மருந்துகளிலும் திருடுவதிலும் மும்முரமாக ஈடுபட்டுக் கொண்டிருந்த ஆஸ்கார் சொல்கிறார்: “நான் யெகோவாவிடம் அவ்வளவு உருக்கமாக ஜெபித்ததால், தரையில் என் கண்ணீர் ஒரு சிறிய நீர்த்தேக்கத்தை உருவாக்கியிருந்தது போல் இருந்தது.” ஆம் கடவுளுடைய வார்த்தையை ஊக்கந்தளராது படிப்பதோடு, விடாப்பிடியான இருதயப்பூர்வமான ஜெபம் அவசியம். இந்த ஜெப சிந்தையில் உள்ள ஞானத்தைக் கவனியுங்கள்: “தரித்திரத்தையும் ஐசுவரியத்தையும் எனக்குக் கொடாதிருப்பீராக. நான் பரிபூரணம் அடைகிறதினால் மறுதலித்து, கர்த்தர் யார் என்று சொல்லாதபடிக்கும்; தரித்திரப்படுகிறதினால் திருடி, என் தேவனுடைய நாமத்தை வீணிலே வழங்காதபடிக்கும் என் படியை எனக்கு அளந்து என்னைப் போஷித்தருளும்.”—நீதிமொழிகள் 30:8, 9.

தன்னலம் உண்மையான அன்பினாலே மாற்றீடுசெய்யப்படவேண்டும். “திருடுகிறவன் இனித் திருடாமல், குறைச்சலுள்ளவனுக்குக் கொடுக்கத் தக்கதாகத் தனக்கு உண்டாயிருக்கும்படி, தன் கைகளினால் நலமான வேலைசெய்து, பிரயாசப்படக்கடவன்.” (எபேசியர் 4:28) ‘திருடர்களும் பொருளாசைக்காரருமாக’ முன்பு இருந்த முதல் நூற்றாண்டின் சில கிறிஸ்தவர்களைப்போல மனந்திரும்பினோரை யெகோவா, இயேசு கிறிஸ்துவின் கிரயபலியின்மூலம் இரக்கத்தோடு மன்னிக்கிறார். (1 கொரிந்தியர் 6:9-11) நம்முடைய கடந்த கால வாழ்க்கை எப்படியிருந்தாலும், நாம் நம்முடைய வாழ்க்கை-பாணியை மாற்றி கடவுளுடைய தயவைப் பெற முடியும் என்பது எவ்வளவு ஆறுதல் அளிப்பதாய் இருக்கிறது!—யோவான் 3:16.

கடவுளுடைய புதிய உலகில் பாதுகாப்பு

திருடர்களே இல்லாத ஒரு பூமியைக் கற்பனைசெய்து பாருங்கள். நீதிபதிகள், வக்கீல்கள், போலீஸ்காரர்கள் சிறைச்சாலைகள் போன்ற அதிகச் செலவை உட்படுத்தும் சட்டத்தை அமல்படுத்தும் அமைப்பு உங்களுக்குத் தேவையே இருக்காது! அது செழிப்பான உலகமாக இருக்கும்; அங்கு ஒவ்வொருவரும் மற்றவர்களையும் மற்றவர்களின் சொத்துக்களையும் மதிப்பர்! அது நம்ப முடியாததுபோல் தெரிகிறதா? கடவுள் உண்மையில் மனித விவகாரங்களில் தலையிட்டு, சட்ட மீறுதல்களுக்கு முடிவைக் கொண்டுவருவாரா? பைபிள் கடவுளுடைய வார்த்தையாக இருக்கிறது, அதனுடைய தீர்க்கதரிசனங்கள் நம்பத்தக்கவை என்பதற்கான சான்றுகளை ஆராய நாங்கள் உங்களை அழைக்கிறோம். ஒரு மாற்றம் அண்மையில் இருக்கிறது என்ற நம்பிக்கைக்குத் திடமான அஸ்திவாரத்தை நீங்கள் நிச்சயமாகக் காண்பீர்கள். நீதியை நேசிப்பவர்கள் அனைவருக்கும் கடவுள் வாக்களித்திருக்கும் இடர் உதவியை யாரும் தடுக்கமுடியாது: “பொல்லாதவர்களைக்குறித்து எரிச்சலடையாதே; நியாயக்கேடுசெய்கிறவர்கள்மேல் பொறாமைகொள்ளாதே. அவர்கள் புல்லைப்போல் சீக்கிரமாய் அறுப்புண்டு, பசும்பூண்டைப்போல் வாடிப்போவார்கள்.” (சங்கீதம் 37:1, 2) வெகுகாலத்திற்கு முன்பு எழுதப்பட்ட இந்த வார்த்தைகள் சீக்கிரத்தில் முழுமையாக நிறைவேற்றப்படும்.

அவ்வளவு நம்பிக்கையில்லாமையையும் நிச்சயமற்றத்தன்மையையும் உருவாக்கும் துயரத்தையும் அநீதியையும் கடவுளுடைய ராஜ்யம் முடிவிற்கு கொண்டுவரும். யாரும் தேவை பூர்த்தியாகாமல், திருடவேண்டும் என்ற அழுத்தத்தை உணர மாட்டார்கள். தீர்க்கதரிசனத்தில் நாம் இவ்வாறு உறுதியளிக்கப்படுகிறோம்: “பூமியிலே மலைகளின் உச்சிகளில் ஒரு பிடி தானியம் விதைக்கப்பட்டிருக்கும்; அதின் விளைவு லீபனோனைப்போல அசையும்; பூமியின் புல்லைப்போல நகரத்தார் செழித்தோங்குவார்கள்.” (சங்கீதம் 72:16) திரும்ப நிலைநாட்டப்பட்ட பரதீஸில் உண்மையான கடவுளை அறிந்து வணங்கும் மனிதர்களின் சமாதானத்தைக் குலைக்கும் எதுவும் உண்மையில் இருக்காது.—ஏசாயா 32:18.

இந்தப் பேராசைமிக்க உலகத்தின் போக்குகளை எதிர்த்துச் செயல்பட்டதற்கு என்னே ஓர் ஆசீர்வாதம்! நீதிமொழிகள் 11:19 சொல்கிறது: “நீதி ஜீவனுக்கு ஏதுவாகிறதுபோல், தீமையைப் பின்தொடருகிறவன் மரணத்துக்கு ஏதுவாகிறான்.” ஆம், துன்மார்க்கர் அழிக்கப்பட்ட பிறகு, யாருமே தன்னுடைய உயிரைப் பற்றியும் சொத்துக்களைப் பற்றியும் பயப்படவேண்டிய அவசியமில்லை. சங்கீதம் 37:11 இந்த வாக்குறுதியை நமக்குத் தருகிறது: “சாந்தகுணமுள்ளவர்கள் பூமியைச் சுதந்தரித்து, மிகுந்த சமாதானத்தினால் மனமகிழ்ச்சியாயிருப்பார்கள்.”

[பக்கம் 5-ன் பெட்டி]

திருட்டின் உண்மைநிலையோடு போராடுதல்

வீட்டில்—நீங்கள் வீட்டில் இருந்தாலும் சரி இல்லாவிட்டாலும் சரி, திருடர்கள் உங்கள் வீட்டிற்குள் புகக்கூடுமாகையால் கதவுகளை மூடிப் பூட்டிட்டு வைத்திருங்கள். நிபுணர்கள் அபாய அறிவிப்பொலி சாதனங்களை அல்லது ஒரு காவல் நாயை வைத்திருக்க சிபாரிசு செய்கிறார்கள். நீங்கள் விடுமுறைக் காலத்தில் வெளியே போகும்போது ஒரு நம்பத்தக்க அக்கம்பக்கத்து வீட்டுக்காரரிடம் சொல்லிவிட்டுப் போங்கள். அமைதலாக இருங்கள்—கொள்ளைக்காரர்கள் விரைவாகச் செயல்படுகிறார்கள், எதிர்பாராதவிதமாக, அவர்கள் பய உணர்ச்சியடையும்போது உடனே திட்டங்களை மாற்றிக்கொள்ளக்கூடும். நீங்கள் யெகோவாவின் சாட்சிகளில் ஒருவராக இருந்தால், நீங்கள் யெகோவாவின் சாட்சிகளில் ஒருவர் என்பதைச் சொல்லுங்கள்; சாட்சிக்கொடுக்க முயற்சிசெய்யுங்கள். நீங்கள் சிநேகப்பான்மையை அல்லது இரக்கவுணர்வை வரவழைக்கக்கூடும். உடல் சம்பந்தமாகத் தாக்கப்பட்டாலொழிய எதிர்க்காதீர்கள்.

பொது இடத்தில்—யாரேனும் உங்களைப் பின்தொடர்கிறாரா என்பதை கவனிக்க ஜாக்கிரதையாய் இருங்கள். பக்க நடைபாதையில் நடுவில் நடந்துபோங்கள். இருண்ட, ஆள் நடமாட்டம் இல்லாத தெருக்களைத் தவிருங்கள். உங்களுடைய பணப் பையை அல்லது மற்ற மதிப்புள்ள பொருள்களைப் பாதுகாப்பாய் வையுங்கள். அலைந்து திரிகிறவர்களைப்போல் நடவாமால், சுறுசுறுப்பாய் நடங்கள். அதிக விலையுயர்ந்த ஆடைகளை அல்லது கண்ணைக்கவரும் நகைகளை அணிவதைத் தவிர்த்திடுங்கள். சூழ்நிலைமைகள் அவசியப்படுத்தினால், ஒரு கூட்டாளியுடன் கடைத்தெருவுக்குப் போங்கள். உங்களுக்குத் தேவையான பணத்தை மட்டுமே கொண்டுசெல்லுங்கள்; வித்தியாசமான பைகளில் அல்லது இடங்களில் அவற்றைப் பகிர்ந்து வையுங்கள்.

காரில்—நீங்கள் வாழும் பகுதியில், “கார் கடத்தல்” சர்வசாதாரணமாக நடந்துகொண்டிருந்தால், நிறுத்தப்பட்ட காரினுள் அதிக நேரத்திற்கு இருக்காதீர்கள். நீங்கள் வேலைக்குப் போய் வரும் பாதையை மாற்றுங்கள். கொஞ்சம் கூடுதல் தூரமாக இருந்தாலும் பரவாயில்லை, அதிகப் பாதுகாப்பான வழியைத் தேர்ந்தெடுங்கள். காரை நிறுத்துவதற்கு முன்பு, சந்தேகம் தரக்கூடிய வகையில் ஏதும் இருக்கிறதா என்று சுற்றிநோட்டமிடுங்கள். ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் சாமான்கள் பகுதியைத் திறப்பதைத் தவிர்த்திடுங்கள். விலையுயர்ந்த பொருள்களைப் பார்வையில் படும்படி காரில் வைக்கவேண்டாம். கண்ணுக்குத் தெரியும்படி இருக்கும் பூட்டிடப்பட்ட சங்கிலி அல்லது மற்ற திருடுக்கு எதிரான சாதனங்கள் பொதுவான திருடர்களை உற்சாகமிழக்கச் செய்யும்.

[அடிக்குறிப்புகள்]

a சில பெயர்கள் மாற்றப்பட்டிருக்கின்றன.

[பக்கம் 6-ன் பெட்டி]

“பூமியிலே உங்களுக்குப் பொக்கிஷங்களைச் சேர்த்துவைக்கவேண்டாம்; இங்கே பூச்சியும் துருவும் அவைகளைக் கெடுக்கும்; இங்கே திருடரும் கன்னமிட்டுத் திருடுவார்கள்: பரலோகத்திலே உங்களுக்குப் பொக்கிஷங்களைச் சேர்த்துவையுங்கள்; அங்கே பூச்சியாவது துருவாவது கெடுக்கிறதும் இல்லை; அங்கே திருடர் கன்னமிட்டுத் திருடுகிறதும் இல்லை.”—மத்தேயு 6:19, 20.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்