திருடுதல் ஏன் அதிகரித்துக்கொண்டிருக்கிறது?
ரியோ டி ஜனீரோ—ஞாயிறு, அக்டோபர் 18, 1992. பிரபலமான கோப்பக்கேபெனா, ஈபெனிமா கடற்கரைகளில் ஜன நெரிசல் அதிகமாயிருக்கிறது. இளைஞரின் கும்பல்கள் கடற்கரைக்குள் திடீரென்று புகுந்து தங்களுக்குள்ளேயே சண்டையிட்டுக்கொண்டு, கடற்கரையிலுள்ள மக்களிடமிருந்த மதிப்புள்ள எதையும் திருடிக்கொண்டிருக்கின்றனர். அருகே எண்ணிக்கையில் குறைவாக இருக்கும் காவல்துறையினர் பாதிக்கப்படுவோருக்கு எந்தவித உதவியும் செய்யமுடியாமல் பார்த்துக்கொண்டிருக்கின்றனர். ரியோ டி ஜனீரோவைச் சேர்ந்தவர்களுக்கும், உல்லாச பயணிகளுக்கும் பகல்நேரத்துக் கொடுங்கனவாக அது இருக்கிறது.
உண்மையில், சொத்துக்களை உட்படுத்தும் குற்றச்செயல் சர்வசாதாரணமாகிவிட்டது. பெரிய நகரங்களில் திருடர்கள் இளைஞரின் காலணிகளைத் திருடுவதற்காக அவர்களைக் கொள்ளையடிக்கின்றனர்—சில சமயங்களில் கொலையும்கூட செய்கின்றனர். மக்கள் வீட்டில் இருந்தாலும் சரி இல்லாவிட்டாலும் சரி திருடர்கள் வீட்டிற்குள் புகுந்துவிடுகின்றனர். நேர்மையற்ற வீட்டு வேலைக்காரிகள், பொருள்கள் வீட்டில் எங்கு வைக்கப்படுகின்றன என்பதை அறிந்த பின்பு, நகைகளையும் பணத்தையும் திருடிக்கொண்டு தலைமறைவாகிவிடுகின்றனர். கும்பல்கள் கடைகளைச் சூறையாடுகின்றன. நன்றாகத் திட்டமிட்டு செயல்படும் தொகுதிகள், பிரேஸிலில் அதிகரிக்கும் கடத்தல்களின் எண்ணிக்கையில் காணப்படுவதுபோல, மக்களையுங்கூட திருடுகின்றன. நீங்கள் ஒருவேளை உங்களுடைய சொந்த அனுபவத்திலிருந்து அல்லது உங்கள் வட்டாரத்தில் என்ன நடந்திருக்கிறது என்பதிலிருந்து மற்ற உதாரணங்களைக் கொடுக்கக்கூடும். ஆனால் ஏன் அவ்வளவு திருட்டு நடக்கிறது?
மக்கள் ஏன் திருடுகிறார்கள்?
வறுமையின் அதிகரிப்பும், போதை மருந்துகளின் உபயோகமும் இரண்டு முக்கியமான காரணங்களாக இருந்தாலும், பதில் அவ்வளவு தெளிவாக இல்லை. தி நியூ என்ஸைக்ளோப்பீடியா பிரிட்டானிக்கா இவ்வாறு சொல்கிறது: “குற்றச்செயலுக்கு தனி ஒரு காரணத்தைத் தேடுவது பிரயோஜனமற்றது என்று பொதுவாக நிராகரிக்கப்பட்டிருக்கிறது.” ஆனால், திருட்டு போன்ற பிரச்னைகளுக்கு “பொருளாதார சாதனையிலிருந்தும், சாதாரண வாழ்க்கையின் பலன்களிலிருந்தும் நீக்கப்பட்டிருப்பதால் கசப்புணர்ச்சியுற்றவர்களாகவும் பிரயோஜனமற்றவர்களாகவும் இளைஞர் உணருவதே நேரடியான காரணமாக இருக்கலாம்,” என்று இதே புத்தகம் கருத்துதெரிவிக்கிறது. ஆம், செலவின் பேரளவான அழுத்தத்தின் காரணமாக, பலர் தாங்கள் விரும்பும் பொருள்களைப் பெறுவதற்கு திருடுவதைத் தவிர வேறுவழி இல்லை என உணர்கின்றனர்.
இருந்தபோதிலும், தி உவர்ல்ட் புக் என்ஸைக்ளோப்பீடியா இவ்வாறு குறிப்பிடுவது அக்கறையைத் தூண்டுகிறது: “தங்களுடைய வாழ்க்கை முறை தொடரும் என்று நம்பும் மக்கள் வாழுகின்ற பாரம்பரிய சமுதாயங்களில் ஓரளவிற்கு குற்றவீதம் கட்டுப்பாட்டுக்குள் இருக்கிறது. மக்கள் எங்கே வாழ்கின்றனர், சம்பாதிக்க—மற்றும் தங்கள் எதிர்கால நலனைப் பற்றிய அவர்களுடைய நம்பிக்கையில் என்ன செய்கின்றனர் என்பதைக் குறித்ததில் தீவிரமான மாற்றங்களைப் பெறும் சமுதாயங்களில் குற்றவீதம் அதிகரிப்பதுபோல் இருக்கிறது.” அந்த என்ஸைக்ளோப்பீடியா மேலும் சொல்கிறது: “இளைஞர் குறைவான வேலை வாய்ப்பையே கொண்டிருக்கின்றனர். திருடுவதால் கிடைக்கும் கிளர்ச்சியூட்டும் லாபங்களுடன் ஒப்பிடுகையில், திறமை தேவையற்ற வாய்ப்புகள் வேலை ஆர்வத்தைத் தூண்டுவதாக இல்லை. மேலுமாக இளைஞர் கைதுசெய்யப்படுவதையும் ஒரு பொருட்டாக எடுத்துக்கொள்வதில்லை, ஏனென்றால் அவர்கள் தங்களுடைய உயிருக்குப் பயப்படுவதில்லை.”
ஆனாலும், வேலையில்லாமல் இருப்பவர்களில் அல்லது குறைந்த சம்பளம் கொடுக்கப்படும் வேலையைச் செய்கிறவர்களில் பலர் திருடுவதில்லை. ஆனால் எளிதான வேலைவிரும்பிகளும், கடினமான வேலையைச் செய்கிற வேலையாட்களும் வேலைசெய்கிற இடத்தில், தங்களுடைய சம்பளத்தின் ஒரு பாகம் என்பதுபோல, சிறு சிறு திருட்டுகளைச் செய்கிறார்கள். உண்மையில், சில நேர்மையற்ற பழக்கங்களுக்கு ஏதோ ஒரு சமுதாய அந்தஸ்து தேவையாக இருக்கிறது. அரசியல் வாதிகள், அரசாங்க ஊழியர்கள், வர்த்தகர்கள் போன்றவர்கள் சிக்கியிருக்கும் பெருந்தொகை பணத்தை உட்படுத்திய ஊழல்களைப் பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருக்கிறீர்களல்லவா? இதைப் பற்றி எந்தச் சந்தேகமுமில்லை, திருடுதல் ஏழ்மையில் உள்ளவர்களுக்கு மட்டும் கட்டுப்பட்டதாக இல்லை.
திரைப்படங்களும், டிவி நிகழ்ச்சிகளும் திருடுவதை நகைச் சுவையாக அடிக்கடி காட்டுகின்றன (கதாநாயகன் ஒரு திருடனாககூட இருக்கக்கூடும்) என்பதையும் மனதில் வையுங்கள். இது திருட்டை ஏற்றுக்கொள்ளத்தக்கதாக செய்கிறதுபோலிருக்கிறது. அப்படிப்பட்டவற்றைப் பார்ப்பது பொழுதுபோக்குக்குத்தான் என்று எளிதாகக் கருதப்படுகிறது, ஆனால் அதே சமயத்தில், பார்வையாளர்கள் எப்படித் திருடவேண்டும் என்று காட்டப்படுகிறார்கள். திருடுதல் பயனுள்ளது என்ற கருத்துதானல்லவா இரகசியமாகக் கொடுக்கப்படுகிறது? சந்தேகமின்றி, பேராசை, சோம்பேறித்தனம், திருடுகிற மற்றனைவரும் தப்பித்துக்கொள்கிறார்கள் என்ற எண்ணம் இவையெல்லாம் திருடுதல் அதிகரிப்பதற்கு உதவிசெய்கின்றன. மறுக்கமுடியாதபடி, நாம் தன்னலமும் பண ஆசையும் எங்கும் பரவியிருக்கும் முன்னறிவிக்கப்பட்ட “கடினமான காலங்களில்” வாழ்கிறோம்.—2 தீமோத்தேயு 3:1-5, NW.
திருடாதிருப்பாயாக
உலகின் குழப்பமூட்டும் தராதரங்களுக்கு மத்தியிலும், பின்வரும் கட்டளைக்குக் கீழ்ப்படிவது அத்யாவசியம்: ‘திருடுகிறவன் இனித் திருடாமல் இருக்கக்கடவன்.’ (எபேசியர் 4:28) தன் ஆஸ்திகளை அல்லது இன்பங்களை அளவுக்கு அதிகமாக மதிக்கிற ஒரு நபர், திருடுவதைத் துணிந்துசெய்வது லாபந்தருவதாய் இருக்கிறது என்று தன்னை வஞ்சிக்கிறவராக இருக்கலாம். ஆனால் திருடுவது கடவுளுடைய பார்வையில் ஒரு வினைமையான தவறாக இருக்கிறது; இது உடன் மனிதனுக்கு அன்புகாட்டாமையை வெளிக்காட்டுகிறது. தவிர, ஒரு சிறிய திருட்டும்கூட, ஒருவருடைய இருதயம் கடினப்படுத்தப்படுவதற்கு வழிநடத்தலாம். மேலும் நேர்மையற்றவர் என்று நோக்கப்படுவதைப் பற்றி என்ன? ஒரு திருடனை யார் நம்புவார்? கடவுளுடைய வார்த்தை ஞானத்தோடே இவ்வாறு சொல்கிறது: ‘உங்களில் ஒருவனும் கொலைபாதகனாயாவது திருடனாயாவது பொல்லாங்கு செய்தவனாயாவது பாடுபடுகிறவனாயிருக்கக் கூடாது.’—1 பேதுரு 4:15.
திருட்டு அதிகரிப்பதைக் குறித்து நீங்கள் நிச்சயமாகவே கவலைப்படுகிறீர்கள், ஆனால் குற்றம் நிறைந்த பகுதிகளில் வாழும் மக்கள் எப்படிச் சமாளிக்கிறார்கள்? முன்னாள் திருடர்கள் சிலர் எப்படித் தங்களுடைய வாழ்க்கை-பாணியை மாற்றியிருக்கின்றனர்? உலகமெங்கும், திருடுதல் என்றாவது முடிவிற்கு வருமா? “திருடர்களே இல்லாத ஓர் உலகம்” என்ற பின்வரும் கட்டுரையை படிக்கும்படி நாங்கள் உங்களை அழைக்கிறோம்.