குறைவான சுயாதீனமுள்ள ஓர் விரிவான பாதை
மூன்று பேர்கள் அடங்கிய ஒரு குடும்பம்—தந்தை, தாய், சிறிய மகள்—ஆஸ்திரேலியாவின் சிட்னியில் உள்ள வீட்டில் இருந்தபோது வீடு தீப்பற்றியெரிந்தது. அவர்கள் ஜன்னல்கள் வழியாக வெளியே குதிக்க முயற்சி செய்தனர், ஆனால் அவை கம்பிகளால் அடைக்கப்பட்டிருந்தன. பாதுகாப்புக்காக போடப்பட்டிருந்த கம்பித்தடுப்புகளின் காரணமாக தீயணைப்பு படையினர் அவர்களைப் பாதுகாக்க முடியவில்லை. தாயும் தந்தையும் புகையிலும் எரிதழலிலும் இறந்து போயினர். மகள் பின்னர் மருத்துவமனையில் இறந்து போனாள்.
அவர்களுக்கு பாதுகாப்பு கொடுத்திருக்கவேண்டிய அந்தக் கம்பி அடைப்புகள் காரணமாக இந்தக் குடும்பம் இறந்துபோனது எவ்வளவு வருந்தத்தக்கது! நம்முடைய காலங்களில் கம்பிகளாலும் பாதுகாப்பு பூட்டுகளாலும் பாதுகாக்கப்பட்டிருக்கும் வீட்டைக் கொண்டிருப்பது இந்த ஒரு குடும்பம் மட்டுமல்ல. அயலகத்தாரில் அநேகரும்கூட கோட்டைகளைப் போன்று தோற்றமளிக்கும் வீடுகளையும் சொத்துக்களையும் வைத்திருக்கின்றனர். ஏன்? அவர்கள் பாதுகாப்பையும் மனசமாதானத்தையும் தேடிக்கொண்டிருக்கின்றனர். ஜனங்கள் தங்கள் சொந்த வீடுகளில் சிறைவாசிகளைப் போன்று அடைத்து வைக்கப்பட்டிருக்கும்போது மட்டுமே பாதுகாப்பாய் உணர்வது “சுயாதீனமுள்ள” சமுதாயத்தில் என்னே ஒரு கேடு! பெரும்பாலான சுற்றுவட்டாரங்களில் பிள்ளைகள் அருகாமையில் இருக்கும் பூங்காவில் விளையாடவோ அல்லது பள்ளிக்கு செல்கையில் பெற்றோரையோ அல்லது வேறு பெரியவர்களையோ வழிக்குத் துணையின்றி செல்லமுடியாத ஒரு நிலை உள்ளது. வாழ்க்கையின் அநேக அம்சங்களில் சுயாதீனம் காலை பனியைப் போல் ஆவியாய் மறைந்துகொண்டிருக்கிறது.
மாற்றமடைந்துள்ள ஒரு வாழ்க்கைபாணி
நம்முடைய தாத்தாபாட்டிமார்களின் காலம் வித்தியாசமாய் இருந்தது. அவர்கள் பிள்ளைகளாக இருக்கையில் சாதாரணமாக தங்களுக்கு விருப்பமான இடத்தில் பயமின்றி விளையாடினர். அவர்கள் பெரியவர்களாக ஆனபோது பூட்டுகள், தடுப்புகள் போடுவதைப் பற்றி எப்போதும் நினைத்துக் கொண்டேயில்லை. அவர்கள் சுயாதீனமுடையவர்களைப் போல் உணர்ந்தனர், அவர்களுக்கு ஓரளவு சுயாதீனம் இருந்தது. ஆனால் நம் தாத்தாபாட்டிமார்கள் தங்கள் வாழ்நாட்காலத்தில் சமுதாயத்தின் மனநிலை மாறிவருவதை பார்த்திருக்கின்றனர். அது உணர்ச்சியற்றதாகவும் அதிக சுயநலமுள்ளதாகவும் ஆகியிருக்கிறது; அநேக இடங்களில் அயலார் பேரில் அன்பு இருப்பதற்குப் பதிலாக அயலார் பேரில் பயம் ஏற்பட்டிருக்கிறது, அது தான் மேலே கொடுக்கப்பட்டிருக்கும் பெரும் வருத்தம் தரும் சம்பவம் ஏற்பட காரணமாயிருந்திருக்கிறது. சுயாதீனம் அதிகமதிகமாக குறைவுபடுவதோடு சேர்ந்து ஒழுக்க மதிப்பீடுகளும் ஒரே சீராக மோசமடைந்துகொண்டே வந்திருக்கிறது. சமுதாயம் “புதிய ஒழுக்கநெறியால்” மயக்கப்பட்டிருக்கிறது, ஆனால் உண்மையில் ஒழுக்கநெறி முழுவதுமாக ஒதுக்கிவைக்கப்பட்டிருக்கும் நிலைமை இப்போது எட்டப்பட்டிருக்கிறது.
குவின்ஸ்லாந்து பல்கலைக்கழகத்து கல்வித்துறையில் முன்னாள் ஆசிரியராயிருந்த டாக்டர் ரூப்பர்ட் குட்மேன் பின்வருமாறு எழுதுகிறார்: “இளைஞர்கள் இப்போது ஒரு வித்தியாசமான இன்பமே பிரதானமெனும் . . . வாழ்க்கைபாணிக்கு ஆளாகும் நிலையில் இருக்கின்றனர். அதில் ‘தான்’ எனும் தன்மையே முக்கியமானது: சுய விருப்பப்படி காரியங்களில் ஈடுபடுதல், சுய-தெரிநிலை, சுய-திருப்தி, சுய அக்கறை.” அவர் கூடுதலாக சொல்கிறார்: “சுய-கட்டுப்பாடு, சுய-மறுப்பு, கடினமான வேலை, சிக்கனம், அதிகாரத்துக்கு மரியாதை, பெற்றோர் பேரில் அன்பு மற்றும் மரியாதை . . . இவையெல்லாம் அநேகருக்கு அறிமுகமாகாத கருத்துக்கள்.”
உண்மையிலேயே ஒரு விரிவான பாதை
பைபிள் தீர்க்கதரிசனங்களை நன்றாக அறிந்திருப்பவர்கள் பரவலாகக் காணப்படும் சுயநல நாட்டத்தைக் கண்டு ஆச்சரியப்படுவதில்லை, ஏனென்றால் இயேசு கிறிஸ்து தமக்கு செவிகொடுத்துக் கேட்டுக்கொண்டிருந்தவர்களை பின்வருமாறு எச்சரித்தார்: “இடுக்கமான வாசல்வழியாய் உட்பிரவேசியுங்கள்; கேட்டுக்குப் போகிற வாசல் விரிவும், வழி விசாலமுமாயிருக்கிறது; அதின் வழியாய்ப் பிரவேசிக்கிறவர்கள் அநேகர். ஜீவனுக்குப் போகிற வாசல் இடுக்கமும், வழி நெருக்கமுமாயிருக்கிறது; அதைக் கண்டுபிடிக்கிறவர்கள் சிலர்.” (மத்தேயு 7:13, 14) அநேக பயணிகள் தாராளமாக செல்லத்தக்க முதலாவது பாதை ‘விரிவாக’ உள்ளது, ஏனென்றால் அது ஒழுக்கநெறி மற்றும் அன்றாடக வாழ்க்கை ஆகியவற்றைக் கட்டுப்படுத்தும் பைபிள் நியமங்களை தடைசெய்வதில்லை. தங்களுக்கு விருப்பமானபடி யோசிப்பதற்கும், தங்களுக்கு விருப்பமானபடி வாழ்வதற்கும் விரும்பும் ஆட்களுக்கு அது கவர்ச்சியூட்டுவதாய் இருக்கிறது—எந்த விதிகளும் இல்லை, எந்த பொறுப்புகளும் இல்லை.
விரிவான பாதையை தெரிந்தெடுத்திருக்கும் அநேகர் தாங்கள் சுயாதீனத்தை அனுபவித்துக்கொண்டிருப்பதாக உரிமைபாராட்டிக் கொள்கின்றனர் என்பது உண்மைதான். ஆனால் அவர்களில் பெரும்பாலானோர் தற்போது நிலவிவரும் சுயநலம் என்ற மனப்பான்மையால் உந்துவிக்கப்பட்டிருக்கின்றனர். அவர்கள் ‘கீழ்ப்படியாமையின் பிள்ளைகளிடத்தில் இப்பொழுது கிரியைசெய்கிற ஆவியால்’ கட்டுப்படுத்தப்பட்டிருக்கின்றனர் என்று பைபிள் சொல்கிறது. அது ஒழுக்கயீனம், போதைப்பொருட்கள் துர்ப்பிரயோகம், அல்லது இரக்கமற்றவிதத்தில் செல்வம், கௌரவம், அல்லது அதிகாரம் ஆகியவற்றை நாடுதல் போன்ற எதுவாக இருந்தாலும்சரி இந்த ஆவி அவர்கள் ‘மாம்ச இச்சையின்படியே நடந்து, மாம்சம் விரும்பினவைகளைச் செய்யும்படி’ வாழ்வதற்கு அவர்களை உந்துவிக்கிறது.—எபேசியர் 2:2, 3.
விரிவான பாதை அழிவுக்கு வழிநடத்துகிறது
விரிவான பாதையில் பயணம்செய்பவர்கள் ‘மாம்சம் விரும்பினவைகளைச் செய்யும்படி’ தூண்டப்படுகின்றனர் என்பதை கவனியுங்கள். இது அவர்கள் சுயாதீனமுள்ளவர்களாய் இல்லவே இல்லை என்பதைக் காண்பிக்கிறது—அவர்கள் ஒரு எஜமானை உடையவர்களாய் இருக்கின்றனர். அவர்கள் மாம்சத்திற்கு அடிமைகள். இந்த எஜமானுக்கு சேவை செய்வது அநேக பிரச்சினைகளுக்கு வழிநடத்தக்கூடும்: பாலுறவினால் கடத்தப்படும் நோய்கள் பெருமளவில் காணப்படுவது, பிளவுபட்ட குடும்பங்கள், போதைப்பொருட்கள் மற்றும் மதுபானம் துர்ப்பிரயோகம் ஆகியவற்றால் நோயுற்றிருக்கும் உடல்களும் மனங்களும். இவையே அதனுடைய விளைவுகளில் சில. வன்முறையான செயல்கள், கொள்ளையடித்தல், கற்பழிப்பு ஆகியவையும்கூட சுயநலமுள்ள சிந்தனையில் வேர் கொண்டிருந்து, இந்த எதையும் அனுமதிக்கும் விரிவான பாதையில் வளர்க்கப்படுகிறது. இந்த “கேட்டுக்குப் போகிற வாசல்” தொடர்ந்து நிலைத்திருக்கும்வரை, அதன் கனிகள் அதிக தீங்கிழைக்கக்கூடியதாய் ஆகும்.—நீதிமொழிகள் 1:22, 23; கலாத்தியர் 5:19-21; 6:7.
ஆஸ்திரேலியாவில் இருக்கும் இரண்டு மெய்-வாழ்க்கை உதாரணங்களை சிந்தித்துப் பாருங்கள். மேரி சோதனைக்கு இடங்கொடுத்து விட்டாள், அடிமைப்படுத்தும் போதைப் பொருட்களை தவறாகப் பயன்படுத்தினாள், ஒழுக்கக்கேட்டிலும் ஈடுபட்டாள்.a ஆனால் அவள் தேடிய மகிழ்ச்சி கிடைக்கப் பெறாமல் நழுவிக்கொண்டிருந்தது. இரண்டு பிள்ளைகள் பெற்ற பிறகும்கூட, அவளுடைய வாழ்க்கை வெறுமையாய்த் தோன்றியது. அவள் தனக்கு எய்ட்ஸ் தொற்றிக்கொண்டிருப்பதை அறிந்தபோது அதிக கீழ்த்தரமான நிலையை அடைந்தாள்.
டாம் ஒரு வித்தியாசமான விதத்தில் பாதிக்கப்பட்டான். “நான் வட குவின்ஸ்லாந்தில் உள்ள ஒரு சர்ச் ஸ்தாபனத்தில் வளர்ந்து வந்தேன்.” என்று அவர் எழுதுகிறார். “நான் 16 வயதாயிருக்கும்போது அதிகமாக மதுபானம் அருந்த ஆரம்பித்தேன். என் தந்தை, மாமன்மார்கள், நண்பர்கள் எல்லாரும் அளவுக்கு மீறி மதுபானம் அருந்தினார்கள், ஆகையால் அது இயல்பான காரியம் போல் தோன்றியது. நான் பீரிலிருந்து மெத்திலேட்டெட் ஸ்பிரிட் வரை எது வேண்டுமென்றாலும் குடிக்கும் அளவுக்குச் சென்றுவிட்டேன். நான் குதிரைகள் மீது பந்தயங்கட்டவும்கூட ஆரம்பித்தேன், சில சமயங்களில் அதிக கடினமாக உழைத்துப் பெற்ற வருவாயில் பெரும்பாலானவற்றை இழந்துவிட்டேன். இது பெரும் தொகையாய் இருந்தது, ஏனென்றால் கரும்பு வெட்டும் வேலையில் எனக்கு நல்ல வருவாய் கிடைத்தது.
“பிறகு நான் திருமணம் செய்துகொண்டேன், எங்களுக்கு இரண்டு பிள்ளைகள் இருந்தார்கள். என் உத்தரவாதங்களை ஏற்றுக்கொள்வதற்கு மாறாக, நான் என் நண்பர்கள் செய்தது போல் செய்தேன்—குடித்தேன், சூதாடினேன், சண்டை போட்டேன். நான் அடிக்கடி உள்ளூர் சிறையில் அடைக்கப்பட்டேன். ஆனால் இதுவும்கூட என் மீது எந்த பாதிப்பையும் கொண்டில்லை. என் வாழ்க்கை கீழ்நோக்கி சென்றுகொண்டேயிருந்தது. அது பிரச்சினைகளால் நிரம்பியிருந்தது.”
ஆம், தவறான ஆசைகளை திருப்திசெய்துகொள்வதன் மூலம் டாம் மற்றும் மேரி தங்களை மட்டுமல்ல, தங்கள் குடும்பங்களுக்கும்கூட தீங்கு வருவித்துக்கொண்டார்கள். விசனகரமாக, பெரும்பாலான மற்ற இளைஞர்கள் விரிவான பாதை அளிக்கும் பரந்த, தவறாக நடக்கும்படி செய்விக்கும் சுயாதீன ஆவியால் தூண்டுவிக்கப்படும் போக்குள்ளவர்களாய் இருக்கின்றனர். இளைஞர்கள் இந்த சுயாதீனத்தின் ஏமாற்றும் தன்மையுள்ள தோற்றத்தை உணர்ந்துகொண்டால் எவ்வளவு நன்றாக இருக்கும்! விரிவான பாதையின் மெய்மைகளை, அதில் பயணம் செய்யும் அனைவரும் இறுதியில் அனுபவிக்க வேண்டிய கடுமையான விளைவுகளை அவர்கள் காண முடிந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும். அது விரிவானதும் செல்வதற்கு சுலபமானதாய் இருப்பதும் உண்மைதான். ஆனால் அந்த விரிவுதானே அதன் சாபமாய் இருக்கிறது. “தன் மாம்சத்திற்கென்று விதைக்கிறவன் மாம்சத்தினால் அழிவை அறுப்பான்,” என்ற மறுக்கமுடியாத உண்மையை இருதயத்தில் ஏற்றுக்கொள்வதுதானே ஞானமான போக்காக இருக்கிறது.—கலாத்தியர் 6:8.
இருப்பினும் மேலான தெரிவு ஒன்று உள்ளது. அது இடுக்கமான பாதை. ஆனால் எவ்வளவு கட்டுப்படுத்தக்கூடியதாய், எவ்வளவு குறுகியதாய் இந்த பாதை இருக்கிறது? அது எங்கே வழிநடத்திச் செல்கிறது?
[அடிக்குறிப்புகள்]
a பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன.