சுயாதீனத்திற்கு வழிநடத்தும் இடுக்கமான பாதை
இப்பிரபஞ்சம் இயற்கை விதிகளால் கட்டுப்படுத்தப்பட்டிருக்கிறது என்பதை வெகு சில புத்திக்கூர்மையுள்ள ஆட்களே விவாதிப்பர். இந்தச் சட்டங்கள் சின்னஞ்சிறிய அணுவிலிருந்து கோடான கோடி நட்சத்திரங்கள் அடங்கியிருக்கும் பேராற்றல்மிக்க பால்வீதிமண்டலம் வரை எல்லாவற்றையும் கட்டுப்படுத்துகின்றன. இயற்கை விதிகள் எதுவும் இல்லையென்றால், எந்தவிதத் திட்டமிடுதலும் புரிந்துகொள்ளுதலும் இருக்காது; உயிர் வாழ்வுதானேயும் இருக்காது. இயற்கை விதிகளைப் புரிந்துகொண்டு அவற்றோடு ஒத்துழைப்பதன் மூலம், சந்திரமண்டலத்தில் நடப்பது, பூமியில் எந்த இடத்திலுமிருந்து அல்லது பூமியின் வளிமண்டலத்துக்கும் அப்பாலிருந்து நம்முடைய வீடுகளில் இருக்கும் தொலைக்காட்சித்திரைகள் மீது வண்ணப்படங்களை ஒளிவீசச்செய்வது போன்ற வியக்கத்தக்க செயல்களை மனிதன் சாதிக்க முடிந்துள்ளது.
ஆனால் ஒழுக்க விதிகளைப் பற்றியென்ன? அவற்றை கடைப்பிடிப்பது அவ்வாறே பலனளிப்பதாயும் நன்மை பயப்பதாயும் இருக்கிறதா? ஒழுக்க விதிகள் எதுவும் இல்லை என்று அநேகர் உணருவதாகத் தோன்றுகிறது, ஆகையால் அவர்கள் எதையும் அனுமதிக்கும் தத்துவத்தை அல்லது தங்கள் சொந்த விருப்பங்களுக்குப் பொருத்தமாயிருக்கும் மதத்தை தெரிந்தெடுக்கின்றனர்.
ஆனால் சிலரோ மற்றொரு வழியைத் தெரிந்தெடுக்கின்றனர், அது பைபிளில் விவரித்துக் கூறப்பட்டிருக்கும் ‘ஜீவனுக்குப் போகிற இடுக்கமான பாதை.’ இது சிறுபான்மையரின் தெரிவு மட்டுமே என்பதைக் குறித்து நாம் ஆச்சரியப்படக்கூடாது, ஏனென்றால் இடுக்கமான பாதையைக் குறித்து இயேசு இவ்விதம் சொன்னார்: “அதைக் கண்டுபிடிக்கிறவர்கள் சிலர்.” (மத்தேயு 7:14) ஏன் வெகு சிலர்?
ஏனென்றால் இடுக்கமான பாதை கடவுளுடைய சட்டங்களாலும் நியமங்களாலும் கட்டுப்படுத்தப்பட்டிருக்கிறது. தன் வாழ்க்கையை கடவுளுடைய தராதரங்களுக்கு இணக்கமாக வைத்திருக்க விரும்பும் உண்மை மனதுள்ள நபருக்கு மட்டுமே அது கவர்ச்சியூட்டுவதாய் இருக்கும். சுயாதீனம் அளிப்பது போன்று பொய்த்தோற்றம் அளித்து ஆனால் உண்மையில் அடிமையாக்கும் விசாலமான பாதைக்கு நேர் எதிரிடையாக, கட்டுப்படுத்துவதைப் போல் தோற்றமளிக்கும் இடுக்கமான பாதை ஒரு நபரை ஒவ்வொரு முக்கியமான அம்சத்திலும் விடுதலையாக்கும். அதன் எல்லைகள் ‘சுயாதீனப்பிரமாணமாகிய பூரணப்பிரமாணத்தால்’ வைக்கப்படுகின்றன.—யாக்கோபு 1:25.
இடுக்கமான பாதை எவ்வாறு விடுதலையளிக்கிறது
இடுக்கமான பாதையில் நிலைத்திருப்பது எப்போதும் சுலபமானதாய் இருக்காது என்பது உண்மைதான். உயிரோடிருக்கும் ஒவ்வொரு மனிதனும் அபூரணனாய் இருக்கிறான், சுதந்தரிக்கப்பட்ட மனச்சாய்வின் காரணமாக தவறுசெய்யும் இயல்புடையவனாய் இருக்கிறான். ஆகையால் ஒரு நபர் சிறிது வழிவிலகிச் செல்லக்கூடிய மனச்சாய்வைக் கொண்டிருக்கக்கூடும். இருப்பினும், ‘இடுக்கமான பாதையைக்’ கடைப்பிடிப்பதனால் வரும் நன்மைகளைப் பார்க்கையில் தேவைப்படும் சுய-சிட்சை அல்லது சரிப்படுத்தல்கள் ஆகியவற்றைச் செய்துகொள்வது தகுதியானதாகவே இருக்கிறது, ஏனென்றால் கடவுள் ‘நாம் பயனடைவதற்கென்றே நமக்கு போதிக்கிறார்.’—ஏசாயா 48:17, NW; ரோமர் 3:23.
உதாரணமாக: ஞானமான பெற்றோர் தங்கள் பிள்ளைகள் வழக்கமாக சாப்பிடும் ஆகாரத்தில் ஒரு கட்டுப்பாட்டை வைக்கின்றனர். இது உணவு உண்ணும் நேரங்களில் கண்டிப்பாக இருப்பதை சில சமயங்களில் அர்த்தப்படுத்துகிறது. ஆனால் பிள்ளைகள் பெரியவர்களாக ஆகும்போது, தங்கள் பெற்றோரின் அன்பான சிட்சைக்கு போற்றுதல் தெரிவிப்பர். பெரியவர்களாக ஆனபிறகு, அவர்கள் ஆரோக்கியமான உணவை உண்பதற்கு சுவையைப் பெற்றுக்கொண்டிருப்பர். பல்வேறுவகைப்பட்ட ஊட்டச்சத்துமிக்க உணவு கிடைக்கக்கூடியதாக இருப்பதனால் அவர்கள் கட்டுப்படுத்தப்பட்டதாக ஒருபோதும் உணரமாட்டார்கள்.
ஆவிக்குரியவிதத்தில், ஜீவனுக்கு வழிநடத்தும் இடுக்கமான பாதையில் இருப்பவர்களுக்கு கடவுள் அதைத்தான் செய்கிறார். மகிழ்ச்சிக்கும் மெய்யான சுயாதீனத்துக்கும் வழிநடத்தும் ஆரோக்கியமான விருப்பங்களை அவர் சாந்தகுணமுள்ள நபர்களுக்குள் பேணி வளர்க்கிறார். அவருடைய வார்த்தையாகிய பைபிளை அளிப்பதன் மூலம் அவர் இதைச் செய்கிறார். கூடுதலாக, அவருடைய ஆவியைப் பெற்றுக்கொண்டு நமக்கு உதவிசெய்வதற்காக அவரிடம் ஜெபிக்கும்படி நம்மை அழைக்கிறார், இடுக்கமான பாதையில் நிலைத்திருப்பதற்கு நமக்கு உற்சாகம் அளிக்கக்கூடிய உடன்கிறிஸ்தவர்களோடு கூட்டுறவுகொள்ளும்படி அவர் நமக்கு கட்டளையிடுகிறார். (எபிரெயர் 10:24, 25) ஆம், கடவுள் அன்பாகவே இருக்கிறார், இந்த உயரிய குணமே அவருடைய நோக்கங்கள் மற்றும் அவருடைய எல்லா முறைமைகளிலும் அடிப்படையாய் அமைந்துள்ளது.—1 யோவான் 4:8.
அன்பு, சமாதானம், நற்குணம், இச்சையடக்கம், மேலும் கடவுளுடைய ஆவியின் இன்னும் மற்ற கனிகள் மேலோங்கியிருக்கும்போது, இடுக்கமான பாதை கட்டுப்படுத்துவதாய் தோன்றுவதில்லை. வேதாகமம் சொல்கிறபடி, “இப்படிப்பட்டவைகளுக்கு விரோதமான பிரமாணம் ஒன்றுமில்லை.” (கலாத்தியர் 5:22, 23) “கர்த்தருடைய ஆவி எங்கேயோ அங்கே விடுதலையுமுண்டு.” (2 கொரிந்தியர் 3:17) இப்போதும்கூட மெய்க் கிறிஸ்தவர்கள் இந்த சுயாதீன ஆவியின் சுவையை பெற்றுக்கொண்டிருக்கின்றனர். எதிர்காலத்தைப் பற்றிய பயம், மரணத்தைப் பற்றி மூடநம்பிக்கையுள்ள பயம் போன்ற ஜனங்களை இன்று அல்லற்படுத்தும் அநேக பயங்களிலிருந்து அவர்கள் விடுவிக்கப்பட்டிருக்கின்றனர். ‘சமுத்திரம் ஜலத்தினால் நிறைந்திருக்கிறதுபோல், பூமி கர்த்தரை அறிகிற அறிவினால் நிறைந்திருக்கப் போகும்’ எதிர்காலத்தைப் பற்றி ஆழ்ந்து சிந்திப்பது எவ்வளவு கிளர்ச்சியூட்டுவதாய் இருக்கும்! (ஏசாயா 11:9) அப்போது குற்றச்செயலைப் பற்றிய பயமும்கூட இருக்காது. பூட்டுகளும் கம்பிகளும் என்றென்றுமாக இல்லாதபடி போய்விட்டிருக்கும். வீட்டிலும் வெளியிலும், பகலிலும் இரவிலும், அனைவரும் சுயாதீனமாகவும் பாதுகாப்பாகவும் உணருவர். அது உண்மையிலேயே சுயாதீனமாக இருக்கும்!
கடவுளுடைய உதவி நமக்கு உறுதியளிக்கப்படுகிறது
கடவுளுடைய தராதரங்களின்படி வாழ்வதற்கு முயற்சி தேவைப்படுகிறது என்பது உண்மைதான், இருப்பினும் அபூரண மனிதர்களுக்கும்கூட “அவருடைய கற்பனைகள் பாரமானவைகளுமல்ல.” (1 யோவான் 5:3) இடுக்கமான பாதைக்கு ஏற்றபடி நாம் நம்மை சரிப்படுத்திக்கொண்டு அதில் நடப்பதனால் ஏற்படும் நன்மைகளை உணரும்போது, விரிவான பாதையில் இருப்போருக்குள்ள செயல்களையும் சிந்தனைகளையும் நாம் அதிகமாக வெறுக்க ஆரம்பிக்கிறோம். (சங்கீதம் 97:10) கடவுளுடைய சட்டத்துக்குக் கீழ்ப்படிவது அவர் நமக்குக் கொடுத்திருக்கும் மனச்சாட்சிக்கு கவர்ச்சியூட்டுவதாய் இருக்கிறது. அநேகர் ‘மனநோவினாலே அலறி, ஆவியின் முறிவினாலே புலம்பிக்கொண்டிருக்கையில்,’ அதற்கு மாறாக கடவுள் இவ்வாறு வாக்குறுதியளிக்கிறார்: “இதோ, என் ஊழியக்காரர் மனமகிழ்ச்சியினாலே கெம்பீரிப்பார்கள்.” ஆம், யெகோவாவால் பயிற்றுவிக்கப்பட்ட இருதயம் மகிழ்ச்சியாயும் சுயாதீனமுள்ளதாயும் இருக்கிறது.—ஏசாயா 65:14.
மெய்யான சுயாதீனத்தை நாம் பெற்றுக்கொள்வதற்கு இயேசு நமக்காக மரித்தார். பைபிள் சொல்கிறது: “தேவன் தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார்.” (யோவான் 3:16) இப்போது கடவுளுடைய பரலோக ராஜ்யத்தின் ராஜாவாக இயேசு அந்த பலியின் நன்மைகளை செயற்படுத்தி வருகிறார். ‘மிகுந்த உபத்திரவத்திற்கு’ பிறகு சிறிது காலம் கழித்து விரிவான பாதையும் அதில் இருப்பவர்களும் அழிக்கப்பட்ட பின்னர், இடுக்கமான பாதையில் மீதமாயிருக்கும் பகுதியிலிருந்து அதன் கடைசிவரையாக அவர் கீழ்ப்படிதலுள்ள மனிதவர்க்கத்தை பொறுமையோடு வழிநடத்திச்செல்ல ஆரம்பிப்பார், அதாவது மானிட பரிபூரணம். (வெளிப்படுத்துதல் 7:14-17; மத்தேயு 24:21, 29-31) இறுதியில் நாம் அந்த மகத்தான வாக்குத்தத்தத்தின் நிறைவேற்றத்தை அனுபவிப்போம்: “அதேனென்றால் சிருஷ்டியானது அழிவுக்குரிய அடிமைத்தனத்தினின்று விடுதலையாக்கப்பட்டு, தேவனுடைய பிள்ளைகளுக்குரிய மகிமையான சுயாதீனத்தைப் பெற்றுக்கொள்ளும்.” கடவுள் கொடுத்திருக்கும் இந்த சுயாதீனம் வெல்லப்பட முடியாதது. மரணம்கூட எடுக்கப்பட்டுவிடும்.—ரோமர் 8:20; வெளிப்படுத்துதல் 21:3, 4.
இடுக்கமான பாதை எங்கே வழிநடத்துகிறது என்பதை பார்த்து தெளிவாக புரிந்துகொள்வதன் மூலம், ஒரு நபர் இந்தப் பாதையை தெரிந்தெடுப்பதற்கு மேலான நிலையில் இருப்பார், மேலும் அதில் தொடர்ந்து நடந்து செல்வார். எதிர்கால நலனைக் கவனிக்காமல் குறுகிய நோக்குடன் இல்லாமல் இருக்கும்படியும், கடவுளுடைய தராதரங்கள் விதிக்கும் தடைகளைக் குறித்து எரிச்சலடையாமல் இருக்கும்படியும் இளைஞர்கள் குறிப்பாக உதவப்படுகின்றனர். இவை கடவுளுடைய அன்புக்கு நிரூபணமாகவும் விரிவான பாதையின் தீங்குகளுக்கு எதிராக ஒரு கேடயமாகவும் இருப்பதாக அவர்கள் கற்றுக்கொள்கின்றனர். (எபிரெயர் 12:5, 6) கனிகொடுக்கும் மரம் ஒன்றுக்கு நல்ல கனிகளைக் கொடுப்பதற்கு நேரம் எடுப்பது போல தெய்வீக குணங்களையும் விருப்பங்களையும் வளர்த்துக்கொள்வதற்கு நேரம் எடுக்கும் என்பதை ஒருவர் ஞாபகத்தில் வைத்து பொறுமையாய் இருக்க வேண்டும். ஆனால் அந்த மரத்தை பண்படுத்தி நீர் பாய்ச்சினால் அது கனி கொடுக்கும்.
ஆகையால் கடவுளுடைய வார்த்தையைப் படியுங்கள், மற்ற கிறிஸ்தவர்களோடு கூட்டுறவு கொள்ளுங்கள், பரிசுத்த ஆவிக்காக “இடைவிடாமல் ஜெபம்பண்ணுங்கள்.” (1 தெசலோனிக்கேயர் 5:17) கடவுள் ‘உங்கள் பாதைகளைச் செவ்வைப்படுத்துவதற்கு’ உதவிசெய்ய அவர் பேரில் நம்பிக்கை வையுங்கள். (நீதிமொழிகள் 3:5, 6) ஆனால் இவையனைத்தும் நடைமுறையானதா? இது உண்மையிலேயே செயல்படுகிறதா? ஆம், இது முந்தின கட்டுரையில் குறிப்பிடப்பட்டிருக்கும் டாம், மற்றும் மேரியின் விஷயங்களில் செயல்பட்டது.
அவர்கள் விரிவான பாதையில் நடந்துசெல்வதை நிறுத்திவிட்டனர்
டாம் எழுதுகிறார்: “70-களின் மத்தியில் யெகோவாவின் சாட்சிகளில் ஒருவர் எங்கள் வீட்டுக்கு வந்தபோது நாங்கள் அவர்களோடு தொடர்புகொண்டோம். கலந்தாலோசிப்பு பைபிளைப் படிப்பதற்கு வழிநடத்தியது. படிப்படியாக நான் என் வாழ்க்கையை சுத்தம் செய்ய ஆரம்பித்தேன். நான் 1982-ல் முழுக்காட்டுதல் பெற்றேன், இப்போது உள்ளூர் சபையில் சேவித்து வருகிறேன். எங்களுடைய மகனும்கூட இப்போது முழுக்காட்டுதல் பெற்றிருக்கிறான். நான் சத்தியத்தைக் கற்றுக்கொள்வதற்கு முன்பு பல வருடங்கள் என் மனைவி என்னோடு அதிக பொறுமையாய் இருந்ததற்காக நான் அவளுக்கு நன்றி சொல்கிறேன். எல்லாவற்றுக்கும் மேலாக, யெகோவா தேவனும் அவருடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவும் நமக்குக் கொடுத்திருக்கும் எல்லாவற்றுக்காகவும், எதிர்காலத்துக்காக நாம் இப்போது கொண்டிருக்கும் நம்பிக்கைக்காகவும் நான் அவர்களுக்கு நன்றி சொல்கிறேன்.”
மேரியைப் பற்றியென்ன? கடவுள் அவளை ஒருபோதும் மன்னிக்கவே மாட்டார் என்று நினைத்தாள், ஆனால் தன்னுடைய பிள்ளைகளுக்காக கடவுளைப் பற்றி அறிந்துகொள்ள வேண்டும் என்று அவள் விரும்பினாள். அவளுடைய அயலாருக்கு யெகோவாவின் சாட்சிகள் பைபிளை கற்றுக்கொடுத்துக் கொண்டிருந்ததை அவள் கேள்விப்பட்டபோது, அவளும் உதவிக்காக கேட்டாள். இருப்பினும், ஆழமாகப் பதிந்திருந்த அவளுடைய கெட்ட பழக்கங்கள் முன்னேற்றம் செய்வதை கடினமானதாக ஆக்கின. படிப்பு முன்னோக்கியும் பின்னோக்கியும் சென்றுகொண்டிருந்தது. ஆனால் அவளுடைய சிறிய ஏழு வயது மகள் தொடர்ந்து அவளை உற்சாகப்படுத்திக்கொண்டே இருந்தாள். “விட்டுக்கொடுத்து விடாதீர்கள், அம்மா. அதை உங்களால் செய்யமுடியும்!” என்று அவள் சொல்வாள். பிறகு மேரி அதிக கடினமாக முயற்சி செய்வாள்.
அவளுக்கு வழக்க சட்டப்படி கணவனாய் இருந்தவர் வீட்டுக்குத் திரும்பி வந்தார், அவர் போதைப்பொருள் துர்ப்பிரயோகம் செய்துவந்தார். அவரும் படிப்பில் சேர்ந்துகொண்டார். இறுதியில் இருவருமே தங்கள் கெட்ட பழக்கங்களை மேற்கொண்டு விட்டனர். பிறகு தங்கள் விவாகத்தை சட்டப்பூர்வமானதாக்கி முழுக்காட்டுதல் பெற்ற பின்பு அவர்கள் பெரும் மகிழ்ச்சியை அனுபவித்தனர், அப்போதுதான் ஒரு உண்மையான குடும்பத்தைப் போன்று அவர்கள் முதல் முறையாக உணர்ந்தனர். விசனகரமாக, எய்ட்ஸ் இறுதியில் மேரியின் உயிரை எடுத்துக்கொண்டது, ஆனால் உயிருக்கு ஆபத்தை விளைவித்த விரிவான பாதை விட்டுச்சென்ற ஒவ்வொரு தடமும் சுத்தப்படுத்தப்பட்ட நிலையில், பரதீஸிய பூமியின் மீது உயிர்த்தெழுதல் மற்றும் வாழ்க்கையின் பேரில் அவளுடைய இருதயம் உறுதியாய் இருந்த நிலையிலேயே அவள் இறந்து போனாள்.
ஆம், அழிவுக்கு வழிநடத்தும் அகலமான விரிவான பாதையை விட்டு வெளியேறுவது கூடிய காரியம். கிறிஸ்து இயேசு சொன்னார்: “ஒன்றான மெய்த்தேவனாகிய உம்மையும் நீர் அனுப்பினவராகிய இயேசு கிறிஸ்துவையும் அறிவதே நித்திய ஜீவன்.” (யோவான் 17:3) அப்படியென்றால், ஜீவனுக்கு வழிநடத்தும் இடுக்கமான பாதையில் நடந்துசெல்ல ஏன் நீங்கள் தீர்மானமாயிருக்கக்கூடாது? கடவுளுடைய வார்த்தையிலிருந்து நீங்கள் கற்றுக்கொள்பவற்றை இருதயத்தில் ஏற்றுக்கொண்டு அதைப் பொருத்துவதன் மூலம், இருதயத்துக்கு அனலூட்டும் பைபிளின் வாக்கை நீங்கள் தனிப்பட்டவிதமாய் அனுபவிப்பீர்கள்: “சத்தியத்தையும் அறிவீர்கள், சத்தியம் உங்களை விடுதலையாக்கும்.”—யோவான் 8:32.