உலகெங்குமுள்ள யெகோவாவின் சாட்சிகள்—இந்தியா
இந்தியா! இந்தப் பெரிய துணைக்கண்டத்தில்தான் பூமியிலுள்ள மனிதர்களில் 6 பேருக்கு ஒருவர் வாழ்கின்றனர். மொத்தத்தில், 1,000-க்கும் மேலான மொழிகளும் பேச்சு வழக்குகளும் பல்வேறு வித்தியாசங்கள் கொண்ட இந்த தேசத்தில் பேசப்படுகின்றன. மக்களில் பெரும்பாலானவர்கள், அவர்களில் 83 சதவீதமானோர் இந்துக்களாகவும், 11 சதவீதமானோர் முஸ்லிம்களாகவும், மீதிபேர் சீக்கியர்கள், பௌத்தர்கள், ஜைனர்கள், மற்றும் பெயர் கிறிஸ்தவர்களாகவும் இருக்கிறார்கள்.
சமீபத்திய வருடங்களில், இந்தியாவில் யெகோவாவின் சாட்சிகள் மிகச் சிறந்த வெற்றியை அனுபவித்திருக்கிறார்கள். எல்லா வகையான அழுத்தங்கள் மற்றும் எதிர்ப்புகளின் மத்தியிலும், யெகோவாவின் ராஜ்யத்தின் பக்கமாக உறுதியான நிலைநிற்கை எடுக்க மனமுள்ளவர்களாக இருக்கும் செம்மறியாட்டைப்போன்ற மக்களை அவர்கள் கண்டுபிடித்திருக்கின்றனர்.
உதாரணமாக, இந்து மதப்பற்றுமிக்க குடும்பத்திலுள்ள ஒரு பெண், குழந்தைப்பருவத்திலிருந்தே இளம்பிள்ளைவாதத்தால் முடமாக்கப்பட்டிருந்தார். அவர் அனுபவித்துக்கொண்டிருந்த துன்பம், கடவுளைப் பற்றியும் வாழ்க்கையின் நோக்கத்தைப் பற்றியும் சிந்திக்க வைத்தது. பதிலுக்காக அவர் அநேக மதங்களை ஆராய்ந்தார், ஆனால் எவ்வித ஆறுதலையும் கண்டடையவில்லை. அதன் விளைவாக, அவர் கடவுள் நம்பிக்கையற்றவராகவில்லை என்றாலும், மதத்தில் நம்பிக்கையை இழந்தார்.
ஏறக்குறைய இந்தச் சமயத்தில், வீட்டுக்கு வீடு ஊழியத்தில் இரண்டு சாட்சிகள் இவரைச் சந்தித்தனர். “வெளிப்படுத்துதல் 21:4-ஐ அவர்கள் வாசித்ததைக் கேட்டதும் என் கண்களில் நீர் ததும்பியது,” என்று அவர் நினைவுகூருகிறார். உவாட்ச் டவர் சொஸைட்டியின் பிரசுரங்கள் பலவற்றை பெற்றுக்கொண்டார்; தன் தாயுடைய எதிர்ப்பின் மத்தியிலும் வீட்டு பைபிள் படிப்பு ஒன்றுக்கு ஒத்துக்கொண்டார். அந்தப் பெண் தன் வாழ்க்கையில் அநேக மாற்றங்களைச் செய்து, உறவினர்களிடமிருந்து வந்த எதிர்ப்புகளைத் தைரியமாகச் சமாளித்து, முழுக்காட்டப்பட்ட ஒரு சாட்சியானார். அவர் சொல்லுகிறார்: “நான் அதிக முன்னேற்றத்தைச் செய்திருக்கிறேன், அது மிகக் கஷ்டமாகவே இருந்துவந்திருக்கிறது. ஆனால் யெகோவா தேவன் எப்போதுமே என்னோடுகூட இருந்து, எனக்கு அதிக சமாதானத்தையும் சந்தோஷத்தையும் கொடுத்துவந்திருக்கிறார்.”
தூய வணக்கத்துக்காக பள்ளியில் உறுதியாக இருத்தல்
ஓர் இளம் சகோதரி தன் ஆசிரியையால், வகுப்பிலுள்ள மற்றவர்களுடன் சேர்ந்து ஒரு கத்தோலிக்க சர்ச்சுக்குப் போகும்படி சொல்லப்பட்டாள். இந்தச் சகோதரி, தான் யெகோவாவின் சாட்சிகளில் ஒருத்தி என்றும் யெகோவாவைத் தவிர வேறு எவரையும் அல்லது எதையும் வழிபடமாட்டாள் என்றும் பண்புடன் கூறி, போக மறுத்தாள். மற்ற எல்லாரும் சர்ச்சுக்குப் போகும்போது அவளும் போக வேண்டும் என்று ஆசிரியை கூறினார். ஆனால் அந்தச் சகோதரி உறுதியாக இருந்து, சர்ச்சுக்குச் செல்கிறவர்கள் யெகோவாவிடம் ஜெபிக்கமாட்டார்கள் என்றும், தான் அங்கு இருப்பது தனக்கு சரியென தோன்றவில்லை என்றும் சொன்னாள்.
அந்தப் பெண்ணின் உறுதியான நிலைநிற்கையின் காரணமாக, அந்த ஆசிரியை இன்னுமதிகத்தைத் தெரிந்துகொள்ள விரும்பினார். ஆகவே, யெகோவாவின் வணக்கத்தைப் பற்றிய ஒரு காவற்கோபுர கட்டுரையை அடுத்த நாள் அந்தச் சகோதரி அவருக்குக் கொடுத்தாள். தான் வாசித்தவற்றால் கவரப்பட்டவராக அந்த ஆசிரியை, அதற்குப்பின், பள்ளியில் நடந்த மதச் சம்பந்தமான நடவடிக்கைகள் எல்லாவற்றிலிருந்தும் அவளுக்கு விலக்குதல் அளித்தார். அவரோடும் மற்ற ஆசிரியைகளோடும் அந்தச் சகோதரியால் பத்து பத்திரிகைகளை அளிக்க முடிந்தது.
இரத்தத்தைக் குறித்த கடவுளுடைய சட்டத்திற்குக் கீழ்ப்படிதல் பலனளிக்கப்பட்டது
சமீபத்தில் வைரஸ் காய்ச்சல் ஒன்று பெருவாரியாகப் பரவும் நோயாக கேரள மாநிலத்தின் சில பாகங்களில் காணப்பட்டது. இந்த நோய், சிறுநீரகங்களைக் கடுமையாகச் சேதப்படுத்தி, கூழ்மாறி (dialysis) செய்யப்படுவதற்கு வழிநடத்துகிறது. சர்வசாதாரணமாக இரத்தமேற்றப்படுகிறது. ஒரு நகரில், இந்த நோயை உடைய 14 பேர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இந்த நோயாளிகளில் ஒருவர் ஒரு சாட்சி, உள்ளூர் சபையில் ஒரு மூப்பராக இருந்தார். இரத்தமேற்றுதல் மட்டுமே அங்கு கிடைக்கக்கூடிய ஒரே சிகிச்சை என்று அவருக்குச் சொல்லப்பட்டது. அந்த மூப்பர் தன்னுடைய வேதப்பூர்வ நம்பிக்கைகளை விளக்கி, இரத்தத்தை உறுதியாக மறுத்தார். (அப்போஸ்தலர் 15:28, 29) அவர் இரத்தமேற்றுதலை மறுப்பதன் காரணமாக செத்துப்போவார் என்பதாக அதிக தர்க்கத்திற்குப்பின் அந்த மருத்துவர்கள் கூறினர்.
மற்ற 13 நோயாளிகளும் இரத்தத்தை ஏற்றனர். வருத்தகரமாக, ஒருசில நாட்களில் அவர்கள் அனைவரும் இறந்துவிட்டனர். அந்தச் சகோதரர் மட்டுமே பிழைத்தார்! மருத்துவமனை அதிகாரிகள் அதிக ஆச்சரியப்பட்டனர். சபை அங்கத்தினர்கள் ஒழுங்காகச் சந்திக்க வந்தது, மருத்துவ ஊழியர்களை மிகவும் கவர்ந்தது. மருத்துவமனையிலிருந்து வெளியேறுகையில் அந்தச் சகோதரர் மருத்துவர்களுக்கு நன்றி கூறும்படியாகச் சென்றார்; ஆனால் அவர்கள் இவ்வாறு சொன்னார்கள்: “எங்களுக்கு ஏன் நன்றி சொல்கிறீர்கள்? உங்கள் கடவுளாகிய யெகோவாவுக்கு நன்றி சொல்லுங்கள். உங்களைக் காப்பாற்றியது அவர்தான். எங்களுக்காகவும் உங்கள் கடவுளாகிய யெகோவாவிடம் ஜெபியுங்கள்.”
[பக்கம் 24-ன் பெட்டி]
நாட்டு விவரங்கள்
1994 ஊழிய ஆண்டு
சாட்சிபகருவோரின் உச்ச எண்ணிக்கை: 14,271
வீதம்: 65,266-க்கு 1 சாட்சி
நினைவு ஆசரிப்புக்கு வந்திருந்தோர்: 38,192
சராசரி பயனியர் பிரஸ்தாபிகள்: 1,780
சராசரி பைபிள் படிப்புகள்: 12,453
முழுக்காட்டப்பட்டவர்களின் எண்ணிக்கை: 1,312
சபைகளின் எண்ணிக்கை: 410
கிளை அலுவலகம்: லோனாவ்லா
[பக்கம் 25-ன் படம்]
கிளை அலுவலகம், லோனாவ்லா
[பக்கம் 25-ன் படம்]
1963-ல் “நித்திய நற்செய்தி” மாநாட்டின் தொடர்பாக சாட்சிபகருதல்
[பக்கம் 25-ன் படம்]
டில்லியிலுள்ள செங்கோட்டைக்கு வெளியே விற்பனையாளர் ஒருவரிடம் பிரசங்கித்தல்