அவர்களுடைய வெளிச்சம் அணைந்துவிடவில்லை
பைபிள் காலங்களிலும் பின்னடைவுகளையும் கஷ்டங்களையும் அனுபவித்த, யெகோவாவின் உண்மையான சாட்சிகள் இருந்தனர். அவர்கள் எதிர்ப்பையும் தோல்விகளாகத் தோன்றிய நிலைமைகளையும் எதிர்ப்பட்டனர். இருந்தாலும், சோர்வின் காரணமாக தங்கள் நிலையை விட்டுவிடவில்லை. உண்மையில், அவர்களுடைய வெளிச்சம் அணைந்துவிடவில்லை.
உதாரணமாக, விசுவாசதுரோக யூதா தேசத்தாருக்கு கடவுளுடைய தீர்க்கதரிசியாக இருக்கும் கட்டளை எரேமியா தீர்க்கதரிசிக்குக் கொடுக்கப்பட்டது. எருசலேமுக்கு வரப்போகும் அழிவைக் குறித்து அவர் எச்சரிக்கையை அறிவித்தார். (எரேமியா 1:11-19) அதன் விளைவாக, இடுக்கணைக்கூறி அலறுபவராக எரேமியாவைக் கருதிய அவருடைய உடன் நாட்டாருடன், அவர் பல எதிர்ப்புகளை எதிர்ப்பட்டார்.
எரேமியா, தீர்க்கதரிசனமாக உரைத்த காரியத்தின் காரணமாக, கர்த்தருடைய ஆலயத்தின் பிரதான விசாரணைக் கர்த்தனாக இருந்த ஆசாரியனாகிய பஸ்கூர் ஒருமுறை அவரை அடித்து சிறையின் துளைகளுள்ள மரச்சட்டங்களில் போட்டான். பின்னடைவாகத் தோன்றிய இந்தக் காரியம் சம்பவித்தபோது, எரேமியா இவ்வாறு சொன்னார்: “நாள்தோறும் நகைப்புக்கு இடமானேன்; எல்லாரும் என்னைப் பரிகாசம்பண்ணுகிறார்கள். நான் பேசினது முதற்கொண்டு கதறுகிறேன்; கொடுமையென்றும் பாழ்க்கடிப்பென்றும் சத்தமிட்டுக் கூறுகிறேன்; நான் கூறின கர்த்தருடைய வார்த்தை நாள்தோறும் எனக்கு நிந்தையும், பரிகாசமுமாயிற்று.” பின்வருமாறு சொல்லும் அளவுக்குக்கூட அந்தத் தீர்க்கதரிசி சோர்வடைந்தார்: “நான் அவரைப் [யெகோவாவைப்] பிரஸ்தாபம்பண்ணாமலும் இனிக் கர்த்தருடைய நாமத்திலே பேசாமலும் இருப்பேன் என்றேன்.”—எரேமியா 20:1, 2, 7-9.
என்றபோதிலும், எரேமியா சோர்வுக்கு அடிபணிந்துவிடவில்லை. “கர்த்தருடைய வார்த்தை”யைப் பற்றி பேசுகிறவராய் அவர் அறிவித்தார்: “அவருடைய வார்த்தை என் எலும்புகளில் அடைபட்டு எரிகிற அக்கினியைப் போல் என் இருதயத்தில் இருந்தது; அதைச் சகித்து இளைத்துப்போனேன்; எனக்குப் பொறுக்கக்கூடாமற்போயிற்று.” (எரேமியா 20:8, 9) கடவுளுடைய அறிவிப்புகளைப் பற்றி பேசுவதற்கு பலமாகத் தூண்டப்பட்டவராக, எரேமியா, பரிசுத்த ஆவியால் ஊக்கமளிக்கப்பட்டு, தன் கட்டளையை நிறைவேற்றினார்.
அப்போஸ்தலன் பவுலும் விட்டுக்கொடுத்திருந்தாரேயானால், சோர்வடைவதற்கு ஏராளமான காரணங்கள் அவருக்கு இருந்தன. அவர் இயற்கை சேதங்கள், கப்பற்சேதம், துன்புறுத்தல், மற்றும் அடிகளைச் சகித்தார். மேலுமாக, ‘எல்லாச் சபைகளைக்குறித்தும் உண்டாயிருந்த கவலையும் அவரை நாள்தோறும் நெருக்கியது.’ (2 கொரிந்தியர் 11:23-28) ஆம், சபைகள் உருவாகும்படியாக தான் உதவியிருந்த புதிய சபைகளைக் குறித்து கவலைப்பட்டுக் கொண்டு, பவுல் தினமும் பிரச்சினைகளைச் சமாளிக்க வேண்டியிருந்தது. மேலுமாக, அவர் அபூரணராக இருந்தார்; போராடுவதற்கு “மாம்சத்திலே ஒரு முள்” இருந்தது, அவருடைய மோசமான கண்பார்வையாக அது இருந்திருக்கலாம். (2 கொரிந்தியர் 12:7; ரோமர் 7:15; கலாத்தியர் 4:15) சிலர் பவுலுக்கு விரோதமாக புறங்கூறுகிறவர்களாகக்கூட இருந்தனர், இது பின்னர் அவருடைய காதுகளுக்கு வந்தெட்டியது.—2 கொரிந்தியர் 10:10.
என்றாலும், சோர்வு தன்னை மேற்கொள்ளும்படி பவுல் அனுமதிக்கவில்லை. இல்லை, அவர் இயல்புக்கு அப்பாற்பட்ட மனிதனாக இருக்கவில்லை. (2 கொரிந்தியர் 11:29, 30) அவருக்கு ‘உள்ளுக்குள்ளிருந்த அக்கினியை’ எரிந்துகொண்டிருக்கச் செய்தது எது? ஒரு காரியமென்னவென்றால், அவருக்கு ஆதரவளிக்கும் கூட்டாளிகள் இருந்தனர்; சிலர் ரோமாபுரி வரையாகக்கூட அவருடன் சென்றனர்; அங்கு அவர் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டார். (அப்போஸ்தலர் 28:14-16) இரண்டாவதாக, அந்த அப்போஸ்தலன் தன் நிலைமையை சமநிலையுடன் நோக்கினார். பவுல் அல்ல, ஆனால் அவரைத் துன்புறுத்தியவர்களும் அவருடைய எதிராளிகளுமே குற்றஞ்சாட்டப்பட வேண்டியவர்களாய் இருந்தனர். தன்னுடைய பூமிக்குரிய வாழ்க்கையின் முடிவுகாலத்தில், அவர் தன்னுடைய ஊழியத்தை நம்பிக்கையான முறையில் மதிப்பிட்டு இவ்வாறு சொன்னார்: “இதுமுதல் நீதியின் கிரீடம் எனக்காக வைக்கப்பட்டிருக்கிறது, நீதியுள்ள நியாயாதிபதியாகிய கர்த்தர் . . . அதை எனக்குத் தந்தருளுவார்.”—2 தீமோத்தேயு 4:8.
எல்லாவற்றிற்கும் மேலாக, பவுல் ஒழுங்காக யெகோவா தேவனை ஜெபத்தில் அணுகினார்; ‘கர்த்தரோ அவருக்குத் துணையாக நின்று, அவரைப் பலப்படுத்தினார்.’ (2 தீமோத்தேயு 4:17) ‘என்னைப் பெலப்படுத்துகிற அவராலே எல்லாவற்றையுஞ்செய்ய எனக்குப் பெலனுண்டு,’ என்றார் பவுல். (பிலிப்பியர் 4:13, NW) கடவுளுடனும் உடன் கிறிஸ்தவர்களுடனும் பேச்சுத்தொடர்பு கொள்வதும், தன் ஊழியத்தை நம்பிக்கையான முறையில் மதிப்பிடுவதும், யெகோவாவின் சேவையில் தொடர்ந்திருக்க பவுலுக்கு உதவின.
இவ்வாறு எழுதும்படியாக கடவுளுடைய ஆவியால் பவுல் ஏவப்பட்டார்: “நன்மைசெய்கிறதில் சோர்ந்துபோகாமல் இருப்போமாக; நாம் தளர்ந்துபோகாதிருந்தால் ஏற்றகாலத்தில் அறுப்போம்.” (கலாத்தியர் 6:7-9) எதை அறுப்போம்? நித்திய ஜீவனையே. ஆகவே, எரேமியா, பவுல், வேத எழுத்துக்களில் குறிப்பிடப்பட்டுள்ள இன்னும் அநேக உண்மையுள்ள சாட்சிகள் ஆகியோரைப் போல இருங்கள். ஆம், அவர்களைப்போலவே இருங்கள், சோர்வுக்கு அடிபணிந்துவிடாதீர்கள். உங்கள் வெளிச்சத்தை அணையும்படி விட்டுவிடாதீர்கள்.—மத்தேயு 5:14-16-ஐ ஒப்பிடுக.
[பக்கம் 25-ன் படங்கள்]
பவுலும் எரேமியாவும் தங்கள் வெளிச்சத்தை அணையும்படி விட்டுவிடவில்லை