வாசகரிடமிருந்து வரும் கேள்விகள்
பிலிப்பியர் 2:9, 11-ல் பவுல் இயேசுவைப்பற்றி இவ்வாறு சொன்னார்: “தேவன் எல்லாவற்றிற்கும் மேலாக அவரை உயர்த்தி, . . . எல்லா நாமத்திற்கும் மேலான நாமத்தை அவருக்குத் தந்தருளினார்.” இந்தப் புதிய பெயர் என்ன? இயேசு யெகோவாவுக்குத் தாழ்ந்தவரென்றால், எவ்வாறு இயேசுவின் பெயர் மற்ற எல்லா பெயருக்கும் மேலானது?
பிலிப்பியர் 2:8, 9, 11 வாசிப்பதாவது: “அவர் [இயேசு] மனுஷரூபமாய்க் காணப்பட்டு, மரணபரியந்தம், அதாவது சிலுவையின் [“வதைப்பதற்குரிய கழுமரத்தின்,” NW] மரணபரியந்தமும் கீழ்ப்படிந்தவராகி, தம்மைத்தாமே தாழ்த்தினார். ஆதலால் தேவன் எல்லாவற்றிற்கும் மேலாக அவரை உயர்த்தி, . . . எல்லா நாமத்திற்கும் மேலான நாமத்தை அவருக்குத் தந்தருளினார்.”
யெகோவா மாத்திரமே மற்ற எல்லா பெயருக்கும் மேலாகத் தனிமுதலான பெயருடையவராக இருப்பதால், இயேசுவும் யெகோவாவும் ஒரே ஆளையே குறிக்க வேண்டுமென்பதாக இந்தப் பகுதி அர்த்தம் கொள்வதில்லை. பிலிப்பியர் 2-ம் அதிகாரத்தின் சூழமைவு காட்டுகிறபடி, இயேசு தம்முடைய உயிர்த்தெழுதலுக்குப் பின்பே தம்முடைய உயர்த்தப்பட்ட பெயரைப் பெற்றார். அதற்கு முன்பாக, அவர் அதை உடையவராக இல்லை. மறுபட்சத்தில், யெகோவா எப்போதுமே ஈடற்ற உன்னதராக இருந்து வருகிறார், அவருடைய ஸ்தானம் ஒருபோதும் மாறவில்லை. இயேசு, தம்முடைய பூமிக்குரிய சேவைக்கு முன்னால் கொண்டிருந்த பெயரைப் பார்க்கிலும் மேலான பெயரைப் பெற்ற இந்த உண்மையானது, அவர் யெகோவாவுக்குச் சமமானவராக இல்லை என்று நிரூபிக்கிறது. மற்ற எல்லா பெயருக்கும் மேலான ஒரு பெயர் இயேசுவுக்குக் கொடுக்கப்பட்டது என்று பவுல் சொன்னபோது, இப்போது இயேசு, கடவுளுடைய சிருஷ்டிகள் எல்லாருடையதையும் பார்க்கிலும் மேலாக உயர்ந்த பெயரை உடையவராயிருக்கிறார் என்றே அர்த்தம் கொண்டார்.
இயேசுவின் உயர்ந்த பெயர் என்ன? பதிலளிக்க ஏசாயா 9:6 (தி.மொ.) நமக்கு உதவிசெய்கிறது. வரவிருந்த மேசியாவாகிய இயேசுவைப்பற்றி தீர்க்கதரிசனம் உரைத்ததில் அந்த வசனம் சொல்வதாவது: “ராஜாதிகாரம் அவர் தோள்மேலிருக்கும்; அவர் நாமம் அதிசயமான ஆலோசனைக் கர்த்தா, வல்லமையுள்ள கடவுள், நித்திய பிதா, சமாதானபிரபு எனப்படும்.” (நேரெழுத்துக்கள் எங்களுடையவை.) இங்கே இயேசுவின் “நாமம்” அவருடைய உயர் பதவியுடனும் அதிகாரத்துடனும் சம்பந்தப்பட்டிருக்கிறது. இதுவும் ‘[“மற்ற,” NW] எல்லா நாமத்திற்கும் மேலான நாமம்’ என்று பிலிப்பியர் 2:11-ல் குறிப்பிட்டுள்ளதை நாம் புரிந்துகொள்ளும் முறையில் உள்ளது. யெகோவா அவருக்கு அளித்திருக்கும் உயர் அதிகாரப் பதவியை—வேறு எந்த சிருஷ்டிக்கும் அளிக்கப்பட்டதைப் பார்க்கிலும் உயர்ந்த ஒரு அதிகாரப் பதவியை—மதித்து ஏற்போராக முழங்கால் யாவும் முடங்கும்படி கட்டளையிடப்பட்டிருக்கிறது. இந்த ஆங்கில மொழிபெயர்ப்பில் “மற்ற” என்றுள்ள சொல் அடிப்படையான கிரேக்க மூலவாக்கியத்தில் நேர்முகமாகக் குறிக்கப்பட்டில்லை, ஆனால் அந்த வசனத்தின் கருத்தால் குறிப்பாகத் தெரிவிக்கப்படுகிறது. இயேசுவின் “நாமம்” தம்முடைய சொந்த நாமத்திற்கு மேலானதாக இல்லை ஆனால் மற்ற எல்லா சிருஷ்டியின் பெயருக்கும் மேலாக உள்ளது.
இயேசுவின் பெயரை மதித்து ஏற்போராய் முழங்காலை மடக்குவதற்கு, உண்மையுள்ள எல்லா தூதர்களுடனும் மனிதருடனும் சேர்ந்துகொள்வதில் நாம் எவ்வளவு மகிழ்ச்சியுள்ளவர்களாக இருக்கிறோம்! யெகோவா இயேசுவுக்கு அளித்திருக்கிற அந்த உயர்ந்த வல்லமைவாய்ந்த பதவியில் இயேசுவுக்கு நம்மைக் கீழ்ப்படுத்துவோராய்—“பிதாவாகிய தேவனுக்கு மகிமையாக”—நாம் இதைச் செய்கிறோம்.—பிலிப்பியர் 2:11; மத்தேயு 28:18.