நூறு வயதாகியும் இன்னும் நலமோடு இருத்தல்
ரால்ஃப் மிட்ச்செல் சொன்னபடி
என் தந்தை, சராசரி உயரமுள்ளவர், ஒரு மெதடிஸ்ட் பிரசங்கியாக இருந்தார். ஒவ்வொரு இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை அவர் ஒரு சர்ச்சிலிருந்து மற்றொரு சர்ச்சுக்கு ஒன்றன் பின் ஒன்றாக மாற்றப்பட்டார், அவை பெரும்பாலும் சிறிய பட்டணங்களாய் இருந்தன. அதில் ஒரு பட்டணம் ஆஷ்வில், வட கரோலினா, அ.ஐ.மா., அங்குதான் நான் பிப்ரவரி, 1895-ல் பிறந்தேன். ஆகையால் நான் வளர்ந்து வருகையில் கிறிஸ்தவமண்டலத்துடன் நன்கு அறிமுகமாகியிருந்தேன்.
நான் ஒரு சிறு பையனாக இருக்கையில் புத்தெழுச்சி கூட்டங்களில் பரிசுத்த ஆவியால் நிரப்பப்படுவதற்கு—அவர்கள் அழைத்தது போல் “மதத்தை நினைவில் வைத்திருப்பதற்கு” “துயரங்கொண்டாடுபவர்களின் பெஞ்ச்” என்றழைக்கப்பட்ட இடத்துக்கு நான் அழைத்துச் செல்லப்பட்டது எனக்கு நினைவிருக்கிறது. நான் என் பாவங்களை அறிக்கையிட்டு, பத்து கற்பனைகளைக் கடைப்பிடித்து, நல்லவனாய் இருக்கும்படி எனக்கு சொல்லப்பட்டது. அப்படி செய்தால் நான் இறந்து போகையில் பரலோகத்துக்குச் செல்வேன். நான் எனக்குள்ளே இவ்வாறு சொல்லிக்கொண்டேன்: ‘நான் நரகத்துக்கு செல்வேன் என்று நினைக்கிறேன், ஏனென்றால் நான் பரலோகத்துக்குச் செல்லும் அளவுக்கு நல்லவனாய் இருக்கமுடியாது.’ பெரியவர்கள் மட்டும்—விசேஷமாக பிரசங்கிகள்—பைபிள் தராதரங்களுக்கு இசைய வாழ்ந்து கொண்டிருந்தனர் என்று நான் நினைத்துக்கொண்டு இருந்தேன்.
ஆனால் நான் என் பருவ வயதுக்கு முன்பாகவே மதத்தில் இருக்கும் மாய்மாலத்தனத்தை கண்டுபிடிக்க ஆரம்பித்தேன். உதாரணமாக, என் தந்தை தன் குடும்பத்தின் பொருளாதார தேவைகளை தியாகம் செய்து, பிஷப்பின் நிதிக்கு உதவி செய்வதற்கென்று பெரும் தொகையான பணத்தை பிஷப் பொது மாநாட்டில் கொடுப்பார். அவ்வாறு கொடுத்தால் ஒரு பெரிய சர்ச்சில் அவருக்கு ஸ்தானம் கிடைக்கும் என்று அவர் எண்ணினார். பருத்தி விவசாயியாகவும் இருந்த ஒரு உள்ளூர் பிரசங்கியைப் பற்றி எனக்கு ஞாபகம் வருகிறது. அவர் ஒரு முக்கியத்துவம் வாய்ந்த ஸ்தானத்தைப் பெற்றுக்கொள்ள ஆர்வமுள்ளவராக இருந்தார், ஆகையால் அவர் நூறு பெரிய பருத்தி மூடைகளை விற்று அதிலிருந்து பெற்றுக்கொண்ட நிறைய பணத்தை எடுத்துக்கொண்டு பிஷப் பொது மாநாட்டுக்குச் சென்றார். அங்கு வந்திருந்தவர்கள்—பெரும்பாலும் பிரசங்கிகளாக இருந்தவர்கள்—நன்கொடையாக அளித்த எல்லா பணத்தையும் அவர்கள் பெற்றுக்கொண்டதாக தோன்றியபோது, இந்த பருத்தி விவசாயி பிரசங்கி குதித்தெழுந்து இவ்வாறு கத்தினார்: “உங்களுடைய பிஷப்புக்கு நீங்கள் இவ்வளவுதான் கொடுக்கிறீர்களா? ஐந்து டாலர்களோடு வரும் ஒவ்வொரு பிரசங்கிக்கும் நான் பத்து டாலர்கள் கொடுப்பேன்!” ஆயிரத்துக்கும் மேற்பட்ட டாலர் திரட்டப்பட்டது, பிஷப் இந்த மனிதனை என் தந்தைக்கு மேலாக நடத்தும் மூப்பராக நியமனம் செய்தார். அப்படிப்பட்ட ஒரு நியமனம் கடவுளிடமிருந்து வந்ததாக என்னால் நம்ப முடியவில்லை. அதுமுதற்கொண்டு, மத சம்பந்தப்பட்ட விஷயம் எதுவாக இருந்தாலும், அதைக் குறித்து நம்புவதற்கு நான் சந்தேகப்பட்டேன்.
முதல் உலக யுத்தத்தில் ஐக்கிய மாகாணங்கள் ஈடுபட்டிருந்தபோது நான் இராணுவ சேவைக்கு அமர்த்தப்பட்டேன். நம்முடைய தேசத்துக்காக உண்மைத்தன்மையோடு போராட வேண்டும் என்று வீரர்களாயிருந்த எங்களிடம் இராணுவ குருமார்கள் பிரசங்கித்துக்கொண்டிருந்ததை நாங்கள் கேட்டுக்கொண்டிருந்தது எனக்கு நன்றாக ஞாபகம் இருக்கிறது, இது மதத்தின் பேரில் இருந்த என் வெறுப்பை அதிகரிக்கத்தான் செய்தது. உயிர்வாழ்ந்து, என் படிப்பை முடித்து, விவாகம் செய்துகொண்டு தொடர்ந்து வாழ வேண்டும் என்பதுதான் என் இலக்குகளாக இருந்தன. எதிர்காலத்துக்காக நான் போட்டிருந்த திட்டங்களில் மதம் இடம்பெறவில்லை.
மனநிலையில் ஒரு மாற்றம்
நான் 1922-ல் லூயெஸ் என்ற இளம் பெண்ணின் மீது காதல் கொண்டேன். அவள் ஒரு மதப்பற்றுள்ள கத்தோலிக்க பெண்ணாக இருந்தாள், நாங்கள் விவாகம் செய்துகொள்ள தீர்மானித்தபோது, அவள் கத்தோலிக்க முறைப்படி விவாகம் செய்துகொள்ள வேண்டும் என்று விரும்பினாள். நான் எந்த வகையான மத சடங்குகளையும் விரும்பவில்லை, ஆகையால் நியூ யார்க் பட்டணத்தில் இருந்த ஒரு நகராட்சி கட்டடத்தில் விவாகம் செய்துகொள்ள அவள் ஒப்புக்கொண்டாள்.
நாங்கள் முதலில் எந்தவிதமான மத சம்பந்தப்பட்ட முரண்பாடுகளையும் கொண்டில்லை. மதத்தின் பேரில் எனக்கு எந்த நம்பிக்கையும் இல்லை, அதைப் பற்றி எதுவும் பேசாமல் இருக்கும்வரை நாம் தொடர்ந்து ஒற்றுமையாக வாழலாம் என்று நான் அவளிடம் தெளிவாக கூறினேன். பின்னர், 1924 மற்றும் 1937 ஆண்டுகளுக்கு இடையில் பிள்ளைகள் பிறந்தனர்—ஒன்றன் பின் ஒன்றாக, ஐந்து பையன்களும் ஐந்து பெண்களும்! எங்கள் பிள்ளைகள் கத்தோலிக்க பள்ளிக்கு செல்ல வேண்டும் என்று லூயெஸ் விரும்பினாள். அவர்கள் எந்தவிதமான மத பயிற்றுவிப்பும் பெற்றுக்கொள்ளக்கூடாது என்று நான் விரும்பினேன், ஆகையால் நாங்கள் அதைக் குறித்து தர்க்கித்தோம்.
1939-ஆம் ஆண்டு ஆரம்பத்தில் ஏதோவொன்று நடந்தது, அது மதத்தின் பேரில் நான் கொண்டிருந்த எண்ணத்தை முழுவதுமாக மாற்றியது. ஹென்ரி வெபர் மற்றும் ஹாரி வையட் என்ற இரண்டு யெகோவாவின் சாட்சிகள் ரோசல், நியூ ஜெர்சியில் இருந்த என் வீட்டுக்கு வந்தனர். எனக்கு ஆர்வமே இல்லாத ஒரு பொருளின் பேரில்—மதத்தின் பேரில்— கலந்தாலோசிக்க அவர்கள் விரும்பினர் என்பது விரைவில் எனக்கு தெளிவானது. இராணுவத்தில் இருந்த மத குருக்கள் ‘உங்களுடைய தேசத்துக்காக போரிடுங்கள்,’ என்று கூறினர், ஆனால் மத குருமார்களோ ‘நீங்கள் கொலை செய்யக்கூடாது’ என்று சொன்னதால் என் விசுவாசத்தின் பேரில் எனக்கு இன்னும் வெறுப்பு இருந்தது. என்னே ஒரு மாய்மாலம்! நான் இந்த இரண்டு சாட்சிகளையும் திருத்திவிடுவேன் என்று நினைத்தேன். “நான் ஒன்று சொல்ல விரும்புகிறேன். உங்களுடைய மதம் உண்மையானதாக இருந்தால், மற்ற எல்லா மதங்களும் பொய்யானவையாக இருக்க வேண்டும். மற்ற மதங்களில் ஏதாவது ஒரு மதம் உண்மையானதாக இருந்தாலும்கூட, உங்களுடைய மதம் உட்பட மீதமாயிருக்கும் மற்றெல்லா மதங்களும் சேர்ந்து பொய்யானவையாக இருக்க வேண்டும். மெய் மதம் ஒன்று மட்டுமே இருக்கமுடியும்,” என்று நான் அவர்களிடம் சொன்னேன். எனக்கு ஆச்சரியமளிக்கும் விதத்தில் அவர்கள் அதை ஒப்புக்கொண்டனர்!
அடுத்து, அவர்கள் என் பைபிளை எடுத்து 1 கொரிந்தியர் 1:10-க்கு திருப்பும்படி கூறினர். அங்கு நான் வாசித்தேன்: “சகோதரரே, நீங்களெல்லாரும் ஒரே காரியத்தைப் பேசவும், பிரிவினைகளில்லாமல் ஏகமனதும் ஏகயோசனையும் உள்ளவர்களாய்ச் சீர்பொருந்தியிருக்கவும் வேண்டுமென்று, நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே உங்களுக்குப் புத்திசொல்லுகிறேன்.” நான் இந்த வசனத்தை படித்தபோது கிளர்ச்சியடைந்தேன். அதே சமயத்தில், இந்த இரண்டு மனிதர்களும் என்னை ஏதோ ஒரு போலியான மதத்தில் ஈடுபடுத்துவதற்கு முயற்சி செய்வதாக எண்ணி பயந்தேன். இருப்பினும் நான் ஒன்றைக் கற்றுக்கொண்டேன்—கிறிஸ்தவர்கள் மத்தியில் எந்த பிரிவினைகளும் இருக்கக்கூடாது. என் மனதில் வேறு அநேக கேள்விகளும் இருந்தன. உதாரணமாக, மரணத்தின் போது ஆத்துமாவுக்கு என்ன நேரிடுகிறது? நான் அந்தக் கேள்வியை அவர்களோடு கலந்து பேச எவ்வளவு ஆசைப்பட்டேன்! ஆனால் அது அதிகப்படியான மத சம்பந்தமான கருத்து வேறுபாட்டை வீட்டில் உண்டாக்கும் என்று நான் நினைத்தேன்.
பிறகு அந்த இரண்டு மனிதர்களில் ஒருவர் சொன்னார்: “நாங்கள் மறுபடியும் வந்து உங்களோடு அடுத்த வாரம் பேச விரும்புகிறோம்.” நான் சாதுரியமாக பேசி அவர்களை அனுப்பிவிட முயற்சி செய்தேன், ஆனால் என் மனைவி தைரியமாக பேசினாள். “அவர்கள் எப்போது மீண்டும் வரலாம் என்பதை அறிந்துகொள்ள விரும்புகின்றனர், ரால்ஃப்” என்று அவள் சொன்னாள். இது எனக்கு ஆச்சரியமாய் இருந்தது, ஏனென்றால் அவள் அதிக மதப்பற்றுள்ள கத்தோலிக்கராக இருந்தாள்! இருப்பினும், ‘மதம் என்ற பொருளின் பேரில் நாம் ஒப்புக்கொள்ளக்கூடிய சில குறிப்புகளை ஒருவேளை நாம் கண்டுபிடிக்கலாம்’ என்று நான் நினைத்தேன். ஆகையால் ஹென்ரி வெபர் மற்றும் ஹாரி வையட் அடுத்த வெள்ளிக்கிழமை எங்களை வந்து சந்திக்கும்படி நான் ஒப்புக்கொண்டேன்.
இப்படியாக நான் யெகோவாவின் சாட்சிகளோடு பைபிளைப் படிக்க ஆரம்பித்தேன். அதற்குப் பிறகு விரைவில் நான் நியூ யார்க் பட்டணத்தில் இருந்த மாடிசன் ஸ்கொயர் கார்டனில் நடந்த மாநாட்டுக்கு ஆஜராகும்படி அழைக்கப்பட்டேன். “அரசாங்கமும் சமாதானமும்” என்ற பொருளின் பேரில் ஜூன் 25, 1939-ல் ஜோசஃப் எஃப். ரதர்ஃபர்ட் அவர்கள் கொடுத்த பேச்சு எனக்கு மீண்டும் தெளிவாக நினைவுக்கு வருகிறது. அங்கு ஆஜராகியிருந்த 18,000 நபர்களில் நானும் ஒருவனாய் இருந்தேன். வானொலி-தொலைபேசி கம்பிகளை உபயோகித்து எல்லா தேசங்களும் தற்காலிகமாக இணைக்கப்பட்டு அதன் மூலம் சொற்பொழிவைக் கேட்டவர்களையும் சேர்த்துக்கொண்டால், மொத்தத்தில் 75,000 பேர் அந்த சொற்பொழிவைக் கேட்டனர்.
ஆனால் விஷயங்கள் சுமூகமாக செல்லவில்லை. கத்தோலிக்க பாதிரி சார்ல்ஸ் காக்லன்-ஐ பின்பற்றியவர்கள் மாநாட்டை கலைத்துப்போடப் போவதாக பயமுறுத்தினர், அவர்கள் சொன்னபடியே சகோதரர் ரதர்ஃபர்ட் சொற்பொழிவின் மத்தியில், நூற்றுக்கணக்கான ஜனங்கள் கோபாவேசத்தில் கூப்பாடு போட்டுக்கொண்டு, “ஹேல் ஹிட்லர்!” “விவா பிரான்கோ!” போன்ற ஊக்கொலிகளை முழக்கமிட ஆரம்பித்தனர். அவ்வளவு குழப்பம் இருந்ததால் அந்த இரைச்சல் தொலைபேசிகள் மூலமும்கூட கேட்கப்பட்டது! அந்த கலகக் கும்பலை அடக்குவதற்கு அதிகாரிகளுக்கு சுமார் 15 நிமிடங்கள் எடுத்தன. அந்த சமயம் முழுவதும் சகோதரர் ரதர்ஃபர்ட் பயப்படாமல் உறுதியாக தொடர்ந்து பேசிக்கொண்டே இருந்தார், சபையாரிடமிருந்து தொடர்ச்சியாக வந்துகொண்டிருந்த கைதட்டுதல் அவருக்கு ஆதரவாக இருந்தது.
நான் இப்போது உண்மையிலேயே அதிக ஆவலுள்ளவனாக ஆனேன். ஏன் ஒரு கத்தோலிக்க பாதிரி யெகோவாவின் சாட்சிகளுக்கு விரோதமாக இத்தனை விரோதத்தைத் தூண்ட வேண்டும்? ரதர்ஃபர்ட் பிரசங்கித்துக் கொண்டிருந்த விஷயத்தில் சத்தியம் இருக்க வேண்டும் என்று நான் நினைத்தேன்—என்னைப் போன்ற ஜனங்கள் கேட்கக்கூடாது என்று குருமார் விரும்பிய ஏதோவொன்று. ஆகையால் நான் பைபிளை தொடர்ந்து படித்து முன்னேற்றம் செய்தேன். இறுதியில், அக்டோபர் 1939-ல் தண்ணீர் முழுக்காட்டுதலின் மூலம் நான் யெகோவாவுக்கு என் ஒப்புக்கொடுத்தலை அடையாளப்படுத்திக் காண்பித்தேன். என்னுடைய பிள்ளைகளில் சிலர் அதற்கு அடுத்த ஆண்டு முழுக்காட்டப்பட்டனர், என்னுடைய மனைவி லூயெஸ் 1941-ல் முழுக்காட்டப்பட்டார்கள்.
சோதனைகளை தைரியத்துடன் எதிர்ப்படுதல்
நான் சத்தியத்தை ஏற்றுக்கொண்டவுடனேயே, என்னுடைய தாய் இறந்து போனார்கள், அவர்களுடைய சவ அடக்கத்துக்காக நான் வட கரோலினாவுக்குத் திரும்பிச் செல்ல வேண்டியிருந்தது. மெதடிஸ்ட் சர்ச்சுக்கு உள்ளே நடத்தப்படப்போகும் சவ அடக்க நிகழ்ச்சிக்கு ஆஜரானால் நான் சுத்தமான மனச்சாட்சியைக் கொண்டிருக்க முடியாது என்று உணர்ந்தேன். எனவே நான் அங்கு பயணம் செய்வதற்கு முன்பு என் தந்தையிடம் தொலைபேசி மூலம் பேசினேன். சவ அடக்கம் செய்யும்முன் பார்ப்பதற்காக வைக்கப்படும் இடத்திலேயே வைக்கும்படி கூறினேன். அவர் ஒப்புக்கொண்டார், ஆனால் நான் அங்கு சென்றபோது, அவர்கள் சர்ச்சுக்கு போய்க்கொண்டு இருந்தனர், அப்போது நான் அவர்களோடு நிச்சயமாக சேர்ந்துகொள்வேன் என்று அவர்கள் எண்ணினர்.
நான் அதை செய்யவில்லை, இது குடும்பத்தில் அதிக குழப்பத்தை ஏற்படுத்தியது. நானும் என் சகோதரி எட்னாவும் எப்போதும் அதிக நெருக்கமாக இருந்தபோதிலும், அம்மாவின் சவ அடக்கத்துக்குப் பிறகு அவர்கள் என்னோடு பேசுவதை நிறுத்திக்கொண்டார்கள். நான் கடிதங்கள் எழுதினேன், ஆனால் அவர்கள் அதற்குப் பதில் எழுதவில்லை. ஒவ்வொரு கோடை காலத்திலும் எட்னா ஆசிரியர்களின் பயிற்சிப்பள்ளிக்கு ஆஜராவதற்காக சிட்டி காலேஜுக்கு நியூ யார்க் வந்தபோது நான் அவர்களைக் காண முயற்சி செய்தேன். ஆனால் அவர்கள் எப்போதும் வேலையாய் இருப்பதாக சொல்லி என்னைப் பார்க்க மறுத்துவிடுவார்கள். இறுதியில் நான் நிறுத்திவிட்டேன், ஏனென்றால் நான் அவர்களை தொல்லைபடுத்திக் கொண்டிருந்ததைப் போல் எனக்குத் தோன்றியது. மறுபடியும் நான் அவர்களிடமிருந்து செய்தி பெற்றுக்கொள்வதற்கு முன் அநேக வருடங்கள் கடந்துவிடும்.
கொடி வணக்கம் செய்ய மறுத்ததன் காரணமாக, என்னுடைய பிள்ளைகளில் ஆறு பேர் 1941-ல் பள்ளியிலிருந்து நீக்கப்பட்டனர், ஐக்கிய மாகாணங்களிலும் கனடாவிலும் இருந்த மற்ற அநேக பிள்ளைகளும்கூட நீக்கப்பட்டனர். சட்டப்பூர்வமான கல்வி தேவைகளை பூர்த்தி செய்வதற்கு, சாட்சிகள் ராஜ்ய பள்ளிகள் என்றழைக்கப்பட்ட தங்களுடைய சொந்த பள்ளிகளை ஏற்பாடு செய்தனர். முன்பு லேக்வுட், நியூ ஜெர்சியில் ஒரு ஹோட்டல் இருந்த இடத்தில் என்னுடைய பிள்ளைகள் ஆஜரான பள்ளி இருந்தது. ஒரு ராஜ்ய மன்றம் முதல் மாடியில் இருந்தது, அதோடு பள்ளி வகுப்பறை, ஒரு சமையலறை, ஒரு சாப்பாட்டு அறை ஆகியவையும் இருந்தன. பெண்களின் படுக்கை அறைகள் இரண்டாவது மாடியில் இருந்தன, பையன்களின் படுக்கை அறைகள் மூன்றாவது மாடியில் இருந்தன. அது ஒரு நல்ல பள்ளியாக இருந்தது. அங்கு தங்கியிருந்த பிள்ளைகளில் பெரும்பான்மையர் வாரயிறுதி நாட்களில் மட்டுமே வீட்டுக்குச் சென்றனர். வெகு தொலைவில் வசித்து வந்தவர்கள் இரண்டு வாரயிறுதி நாட்களுக்கு ஒரு முறை வீட்டுக்குச் சென்றனர்.
நான் சத்தியத்தைக் கற்றுக்கொண்ட ஆரம்ப வருடங்களிலிருந்து பயனியராக ஆக வேண்டும் என்று நான் மிகுந்த ஆவலுள்ளவனாக இருந்தேன்—யெகோவாவின் சாட்சிகளுடைய முழு-நேர பிரசங்கிப்பாளர்கள் பயனியர்கள் என்று அழைக்கப்படுகின்றனர். 1941-ல் செயின்ட் லூயி, மிஸ்ஸௌரியில் நடந்த மாநாட்டின்போது அந்த நிகழ்ச்சிநிரலில் பங்குகொண்ட ஒரு சகோதரர் எப்படி 12 பிள்ளைகளை வைத்துக்கொண்டு பயனியர் செய்ய முடியும் என்று கூறினார். ‘அவர் 12 பிள்ளைகளை வைத்துக்கொண்டு பயனியர் செய்தால் நான் 10 பிள்ளைகளை வைத்துக்கொண்டு பயனியர் செய்ய முடியும்’ என்று நான் நினைத்தேன். இருப்பினும், 19 வருடங்கள் கழித்துதான் பயனியர் சேவை ஆரம்பிக்கும்படி என்னுடைய சூழ்நிலைகள் என்னை அனுமதித்தன. இறுதியில், அக்டோபர் 1, 1960-ல் ஒரு ஒழுங்கான பயனியராக நான் யெகோவாவை சேவிக்க ஆரம்பித்தேன்.
ஒரு எதிர்பாரா விஜயம்
1975-ல் என் சகோதரி எட்னா என்னிடம் தொலைபேசியில் பேசினார்கள். எனக்கு வயது இப்போது 80, நான் சுமார் 20 வருடங்களாக அவர்களை பார்க்கவோ அல்லது அவர்களுடைய குரலைக் கேட்கவோ இல்லை. அவர்கள் விமான நிலையத்திலிருந்து பேசினார்கள், அவர்களையும் அவர்களுடைய கணவரையும் வந்து அழைத்துச் செல்லும்படி கூறினார்கள். எட்னாவைப் பார்ப்பதில் சந்தோஷப்பட்டேன், ஆனால் மிகப் பெரிய ஆச்சரியம் இனிதான் வரவிருந்தது. வீட்டுக்குச் செல்லும் வழியில் அவர்களுடைய கணவர் சொன்னார், “இங்கே மதம் மாறியவர் ஒருவர் இருக்கிறார்.” அவர் எதை அர்த்தப்படுத்தினார் என்பதை நான் புரிந்துகொள்ளவில்லை. நாங்கள் வீடு வந்து சேர்ந்தபிறகு, அவர் மறுபடியும் ஒரு முறை சொன்னார், “இங்கே மதம் மாறியவர் ஒருவர் இருக்கிறார்.” என்னுடைய மனைவி உடனே புரிந்துகொண்டார்கள். என்னுடைய சகோதரியிடமாகத் திரும்பி, “எட்னா, நீங்கள் ஒரு சாட்சியா?” என்று கேட்டார்கள். “ஆம், நான் ஒரு சாட்சிதான்,” என்று எட்னா பதிலளித்தார்கள்.
எட்னா எவ்வாறு சத்தியத்தை ஏற்றுக்கொண்டார்கள்? 1972-ல் எங்களுக்கிடையே ஏற்பட்ட மனஸ்தாபத்தை சரிசெய்து கொள்வதற்காக, நான் காவற்கோபுரம் பத்திரிகைக்கு ஒரு வெகுமதி சந்தா அனுப்பியிருந்தேன். ஒரு வருடத்துக்குப் பிறகு, எட்னா நோய்வாய்ப்பட்டதனால் வீட்டுக்குள்ளேயே இருக்கும் நிலை ஏற்பட்டது. அவர்களுடைய மேசையில் பத்திரிகைகள் இன்னும் அதன் உறைகளிலேயே இருந்தன. எட்னா அவற்றில் உள்ள விஷயங்களை அறிய ஆசைப்பட்டதனால், ஒரு பத்திரிகையை பிரித்து வாசிக்க ஆரம்பித்தார்கள். பத்திரிகையை வாசித்து முடித்தவுடனேயே, அவர்கள் தங்களுக்குள்ளே ‘இதுதான் சத்தியம்!’ என்று எண்ணிக்கொண்டார்கள். யெகோவாவின் சாட்சிகள் அவர்களுடைய வீட்டுக்குச் செல்வதற்குள்ளாக, காவற்கோபுரம் பத்திரிகை குவியல் முழுவதையும் வாசித்து முடித்து விட்டிருந்தார்கள். அவர்கள் ஒரு பைபிள் படிப்பை ஏற்றுக்கொண்டு, காலப்போக்கில் யெகோவாவின் சாட்சிகளில் ஒருவராக ஆனார்கள்.
இழப்பை சமாளித்தல்
என் மனைவி லூயெஸ்-க்கு இறுதியில் நீரிழிவு நோய் ஏற்பட்டது, அதிலிருந்து அவர்களுடைய உடல்நிலை மோசமடைந்தது, கடைசியில் 1979-ல் 82-ஆம் வயதில் இறந்து போனார்கள். லூயெஸ் இறந்துபோனபோது என்னுடைய உடலின் ஒரு பாகமும் மரித்துப் போனது. என்னுடைய முழு உலகமும் நின்றுபோனது. எனக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. எதிர்காலத்துக்காக எனக்கு எந்த திட்டங்களும் இல்லை, எனக்கு உற்சாகம் மிகவும் தேவைப்பட்டது. ரிச்சர்ட் ஸ்மித் என்ற ஒரு பயணக் கண்காணி தொடர்ந்து பயனியர் செய்யும்படி என்னை உற்சாகப்படுத்தினார். அன்பானவர்களை மரணத்தில் இழந்தவர்களை ஆறுதல்படுத்துவதிலிருந்துதான் எனக்கு மிகுதியான ஆறுதல் கிடைத்தது.
1979-ல் உவாட்ச் டவர் சொஸைட்டி இஸ்ரேல் நாட்டைப் பார்ப்பதற்கு ஒரு சுற்றுப்பயணத்தை ஏற்பாடு செய்தது, ஆகையால் நான் அதில் சேர்ந்துகொண்டேன். அந்தப் பயணம் எனக்கு பெரும் உற்சாகத்தை அளித்தது, நான் வீடு திரும்பியபோது நேரடியாக பயனியர் சேவை செய்ய ஆரம்பித்தேன். அந்த சமயத்திலிருந்து ஒவ்வொரு ஆண்டும், நியமிக்கப்படாத அல்லது தேசத்தின் மற்றொரு பகுதியில் அடிக்கடி வேலை செய்யப்படாத பிராந்தியங்களில் உதவி செய்ய நான் தீர்மானித்தேன். எனக்கு வயது அதிகமாகிக்கொண்டே இருக்கிறபோதிலும், இந்த சிலாக்கியத்திற்காக என்னையே நான் அளிக்க முடிகிறது.
கடந்த பல வருடங்களாக சுமார் 50 நபர்களை ஜீவனுக்குச் செல்லும் பாதையில் செல்ல நான் அவர்களை உதவியிருக்கும் மகிழ்ச்சியைப் பெற்றிருப்பதாக மதிப்பிடுகிறேன். என்னுடைய பிள்ளைகளில் அநேகர் சத்தியத்தில் இருக்கின்றனர். என்னுடைய மகள்களில் இரண்டு பேர் ஒழுங்கான பயனியர்களாக சேவித்து வருகிறார்கள். மற்றொரு மகள் லூயெஸ் ப்லான்ட்டன், நியூ யார்க், புருக்லினில் உள்ள யெகோவாவின் சாட்சிகளுடைய தலைமை அலுவலகத்தில் தன் கணவர் ஜார்ஜுடன் சேவை செய்து வருகிறார். என்னுடைய மகன்களில் ஒருவர் அநேக வருடங்களாக மூப்பராக சேவித்து வருகிறார்.
நம்முடைய முதல் மானிட பெற்றோரிடமிருந்து சுதந்தரித்துக்கொண்ட அபூரணத்தின் காரணமாக, நாம் அனைவரும் வியாதி மற்றும் மரணத்துக்கு ஆளாகிறோம். (ரோமர் 5:12) நிச்சயமாகவே என் வாழ்க்கை, வலிகளிலிருந்தும் வேதனைகளிலிருந்தும் விடுபட்டதாய் இருந்திருக்கவில்லை. நான் இப்போது என் இடது காலில் ஏற்பட்டிருக்கும் மூட்டுவாத நோயினால் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறேன். அது சில சமயங்களில் எனக்கு அதிக அசௌகரியத்தைக் கொடுக்கிறது, இருப்பினும் நான் சுறுசுறுப்பாய் இருப்பதிலிருந்து அது என்னை தடை செய்வதில்லை. அவ்விதம் ஆகாதபடி இருக்க நான் ஜெபிக்கிறேன். நான் தொடர்ந்து சுறுசுறுப்பாய் இருக்க விரும்புகிறேன். யெகோவாவின் நாமத்தையும் நோக்கங்களையும் அறிவிப்பதற்கு என்னால் ஆன எல்லாவற்றையும் செய்து, இறுதி வரை பயனியர் சேவையில் தொடர்ந்து நிலைத்திருக்க வேண்டும் என்பதுதான் என்னுடைய மிகப்பெரிய விருப்பம்.
[பக்கம் 23-ன் படம்]
என் மகள் ரீட்டாவோடு