அம்மோனியர்—தயவுக்குக் கைம்மாறாக பகைமை காட்டிய ஒரு ஜனம்
ஜோர்டானின் ஹெஷிமைட் ராஜ்யத்தினுடைய தலைநகராகிய, அம்மான் என்ற பெயரையுடைய தற்கால நகரம், பூமிக்குரிய காட்சியிலிருந்து மறைந்துபோய்விட்ட ஒரு ஜனத்தினரின் நினைவைப் பாதுகாக்கிறது. அவர்கள் அம்மோனியர் என்று அழைக்கப்பட்டனர். அவர்கள் யாவர், அவர்களுடைய வீழ்ச்சியிலிருந்து என்ன பாடங்களை நாம் கற்றுக்கொள்ளலாம்?
இந்த அம்மோனியர் நீதிமானாகிய லோத்தின் சந்ததியாராக இருந்தனர். (ஆதியாகமம் 19:35-38) லோத்து ஆபிரகாமின் உடன்பிறந்தார் மகனாக இருந்ததனால், அம்மோனியர் இஸ்ரவேலருக்கு அத்தை மாமன் பிள்ளைகளாக இருந்தனர் என்று சொல்லலாம். எனினும், லோத்தின் சந்ததியார், பொய்க் கடவுட்களின் வணக்கத்துக்குத் திரும்பினர். இருப்பினும், யெகோவா தேவன் அவர்களில் தொடர்ந்து அக்கறை காட்டினார். இஸ்ரவேல் ஜனம் வாக்குப்பண்ணப்பட்ட தேசத்தை நெருங்கினபோது, கடவுள் அவர்களை இவ்வாறு எச்சரித்தார்: “நீ [அம்மோனியரை] வருத்தப்படுத்தவும் அவர்களோடே போர்செய்யவும் வேண்டாம்; அம்மோன் புத்திரரின் தேசத்தில் ஒன்றும் உனக்குச் சுதந்தரமாகக் கொடேன்; அதை லோத் புத்திரருக்குச் சுதந்தரமாகக் கொடுத்திருக்கிறேன்.”—உபாகமம் 2:19.
அத்தகைய தயவை அம்மோனியர் நன்றியோடு மதித்தனரா? நேர்மாறாக, யெகோவா தங்களுக்கு எதையாகிலும் கொடுத்திருந்தாரென்று ஒப்புக்கொள்ள மறுத்துவிட்டனர். அவர்கள்பேரில் காட்டின கடவுளின் தயவான அக்கறைக்குக் கைம்மாறாக, கடவுளுடைய ஜனமாகிய இஸ்ரவேலரிடம் இரக்கமற்ற பகைமையைக் காட்டினர். இஸ்ரவேலர் யெகோவாவின் கட்டளையை மதித்துக் கீழ்ப்படிந்து இந்த அம்மோனியருக்கும் அவர்களுடைய மோவாபிய சகோதரருக்கும் எதிராக எந்தத் தாக்குதலும் செய்யாதபோதிலும், இவர்கள் பயமுறுத்தப்பட்டவர்களாக உணர்ந்தனர். உண்மைதான், அம்மோனியர் இராணுவ தாக்குதல் எதுவும் செய்யவில்லை, ஆனால் நிச்சயமாகவே, பிலேயாம் என்ற பெயர்கொண்ட ஒரு தீர்க்கதரிசியை கூலிக்கு அமர்த்தி, இஸ்ரவேலைச் சபிக்கும்படி அவனைக் கேட்டார்கள்!—எண்ணாகமம் 22:1-6; உபாகமம் 23:3-6.
வியப்புண்டாக்கின ஒன்று அப்போது நடந்தது. பிலேயாம் தன் சாபத்தைக் கூற முடியவில்லை என்று பைபிள் அறிவிக்கிறது. இவ்வாறு சொல்லி, அவர்கள்மீது ஆசீர்வாதங்களை மாத்திரமே அவன் கூற முடிந்தது: “உங்களை ஆசீர்வதிக்கிறவன் ஆசீர்வதிக்கப்பட்டவன், உங்களைச் சபிக்கிறவன் சபிக்கப்பட்டவன்.” (எண்ணாகமம் 24:9) அம்மோனியர் உட்பட, அதில் சம்பந்தப்பட்டிருந்தவர்கள் இதிலிருந்து வல்லமைவாய்ந்த ஒரு பாடத்தை கற்றிருக்க வேண்டும்: கடவுளுடைய ஜனங்கள் உட்பட்டிருந்தபோது, அவர்களுடைய சார்பாகக் குறுக்கிட அவர் நன்றாய் ஆயத்தமாயிருந்தார்!
எனினும் அம்மோனியர், இஸ்ரவேலை எதிர்ப்பதற்குத் தொடர்ந்து வழிகளைத் தேடிக்கொண்டிருந்தனர். நியாயாதிபதிகளின் சகாப்தத்தின்போது, அம்மோன் மோவாபுடனும் அமலேக்குடனும் ஒன்றுசேர்ந்து வாக்குப்பண்ணப்பட்ட தேசத்தின்மீது படையெடுத்து, எரிகோ வரையில் முன்னேறினது. எனினும் வெற்றி சொற்ப காலத்துக்கே நீடித்தது, படையெடுத்தவர்களை நியாயாதிபதி ஏகூத் துரத்திவிட்டார். (நியாயாதிபதிகள் 3:12-15, 27-30) நியாயாதிபதி யெப்தாவின் நாட்கள் வரையில் அமைதிகுலைவான தற்காலப் போர்நிறுத்தம் நீடித்திருந்தது. அதற்குள் இஸ்ரவேல் ஜனம் விக்கிரக வணக்கத்துக்குள் வீழ்ந்துவிட்டிருந்தது, ஆகவே யெகோவா தம்முடைய பாதுகாப்பை விலக்கிவிட்டார். ஏறக்குறைய 18 ஆண்டுகள், இவ்வாறாக கடவுள் அவர்களை ‘அம்மோன் புத்திரர் கையில் விற்றுப்போட்டார்.’ (நியாயாதிபதிகள் 10:6-9) இஸ்ரவேலர் விக்கிரக வணக்கத்தை விட்டுவிலகி, யெப்தாவின் தலைமைவகிப்பின்கீழ் கூடிவந்தபோது, அம்மோனியர் மறுபடியுமாகக் கடும் தோல்வியை அனுபவித்தனர்.—நியாயாதிபதிகள் 10:16–11:33.
இஸ்ரவேலின் முதல் அரசனான சவுல் முடிசூட்டப்பட்டதோடு, நியாயாதிபதிகளின் ஆட்சிக்குரிய அதன் சகாப்தம் முடிவடைந்தது. சவுல் ஆளத் தொடங்கினவுடன், அம்மோனின் பகைமைப் போர் மறுபடியும் தொடங்கினது. அரசன் நாகாஸ், இஸ்ரவேலரின் பட்டணமாகிய யாபேஷ்-கிலெயாத்தின்மீது திடீர் தாக்குதல் செய்தான். அந்தப் பட்டணத்தின் மனிதர் சமாதான உடன்படிக்கை கோரினபோது, அம்மோனியனாகிய நாகாஸ் இந்தக் கொடுமையான கோரிக்கை செய்தான்: “நான் உங்களோடு உடன்படிக்கை செய்யும் நிபந்தனை இதுவே: நான் உங்கள் ஒவ்வொருவருடைய வலது கண்ணையும் பிடுங்குவேன்.” சரித்திராசிரியர் ஜொஸிஃபஸ் ஃப்ளேவியஸ் இதைக் குறித்து சொல்பவராய், இது ஓரளவான தற்காப்பு நடவடிக்கையாகச் செய்யப்பட்டதென்றும், இவ்வாறு ‘அவர்களுடைய இடது கண்கள் அவர்களுடைய கேடகங்களால் மூடப்படும்போது, போருக்கு முற்றிலும் பயனற்றவர்களாக இருப்பார்கள்,’ என்றும் குறிப்பிடுகிறார். எனினும், இந்த இரக்கமற்ற முடிவான நிபந்தனையின் உண்மையான நோக்கமானது, இந்த இஸ்ரவேலரைத் தாழ்வுபடுத்தின ஒரு மாதிரியாக்குவதேயாகும்.—1 சாமுவேல் 11:1, 2, திருத்திய மொழிபெயர்ப்பு.
மறுபடியுமாக இந்த அம்மோனியர் யெகோவாவின் தயவுக்குக் கைம்மாறாகப் பகைமையைச் செலுத்தினர். இந்தக் கொடிய பயமுறுத்தலை யெகோவா கவனியாமல் விடவில்லை. “சவுல் [நாகாஸின்] இந்தச் செய்திகளைக் கேட்டவுடனே, தேவனுடைய ஆவி அவன்மேல் இறங்கினதினால் அவன் மிகவும் கோபம் மூண்டவனா”னான். கடவுளுடைய ஆவியின் வழிநடத்துதலின்கீழ், சவுல் 3,30,000 போர்வீரரைக் கொண்ட ஒரு சேனையைத் திரட்டினார். இவர்கள் அம்மோனியரை அவ்வளவு முழுமையாக முறியடித்ததனால், “தப்பினவர்களில் இரண்டுபேராகிலும் சேர்ந்து ஓடிப்போகாதபடி”யாயிற்று.—1 சாமுவேல் 11:6, 11.
அம்மோனியர் தங்கள் சொந்த அக்கறைகளில் தன்னலத்தோடு முழுமையாக ஈடுபட்டிருந்ததும், அவர்களுடைய இரக்கமற்ற தன்மையும், அவர்களுடைய பேராசையும், அவர்களுடைய முழுமையான அழிவுக்கே முடிவில் வழிநடத்தின. “கொமோராவைப்போலுமாகும்; . . . நித்திய பாழுமாகும்; . . . [ஏனெனில்] அவர்கள் சேனைகளுடைய யெகோவாவின் ஜனத்துக்கு விரோதமாய்ப் பெருமைபாராட்டி அவர்களை நிந்தித்தார்களே,” என்று யெகோவாவின் தீர்க்கதரிசியாகிய செபனியா முன்னறிவித்திருந்ததுபோல், அவர்கள் ஆனார்கள்.—செபனியா 2:9, 10, தி.மொ.
அம்மோனுக்கு நேரிட்டதை இன்று உலகத் தலைவர்கள் கவனத்தில் ஏற்க வேண்டும். அவ்வாறே கடவுள், தேசங்களைத் தம்முடைய பாதபடியாகிய இந்தப் பூமியில் வாழும்படி அனுமதித்ததில் அவற்றிற்கு ஓரளவு தயவைக் காட்டியிருக்கிறார். ஆனால் பூமியைக் கவனித்துக் காப்பதற்குப் பதிலாக, தன்னல தேசங்கள் அதைப் பாழாக்குகின்றன. இந்தக் கிரகத்துக்கு அணுசக்தியால் அழிவைக் கொண்டுவருவதாகவும் பயமுறுத்தியிருக்கின்றன. பூமியிலுள்ள யெகோவாவின் வணக்கத்தாருக்குத் தயவைக் காட்டுவதற்கு மாறாக, தேசங்கள் அடிக்கடி பகைமையைக் காட்டி, கடுமையான துன்புறுத்தலுக்கு அவர்களை உட்படுத்துகின்றன. ஆகையால், யெகோவாவின் தயவுக்குக் கைம்மாறாகப் பகைமை செலுத்துவதை யெகோவா அற்பமாகக் கருதுகிறதில்லை என்பதே அம்மோனியரைப் பற்றிய இந்தப் பாடமாயுள்ளது. பூர்வ காலங்களில் அவர் செய்ததைப்போல், தாம் குறித்திருக்கும் காலத்தில் அவர் நடவடிக்கை எடுப்பார்.—சங்கீதம் 2:6-12-ஐ ஒப்பிடுக.
[பக்கம் 8-ன் படத்திற்கான நன்றி]
அம்மானில் ரோம பாழிடங்கள், அம்மோனியரின் தலைநகராகிய ரப்பா இருந்த இடம்
[பக்கம் 9-ன் படம்]
அம்மோனியர் இந்தப் பகுதியில் குடியிருந்தனர்
[படத்திற்கான நன்றி]
Pictorial Archive (Near Eastern History) Est.
[பக்கம் 10-ன் படம்]
The Ammonites lived in this area
[படத்திற்கான நன்றி]
Pictorial Archive (Near Eastern History) Est.