வாக்குப்பண்ணப்பட்ட தேசத்திலிருந்து காட்சிகள்
கீலேயாத்—தைரியமுள்ள மக்களுக்கான ஓர் இடம்
இஸ்ரவேலர் யோர்தானைக் கடந்து வாக்குப்பண்ணப்பட்ட தேசத்திற்குச் செல்வதற்குச் சற்று முன்னர், மோசே அவர்களை உந்துவித்தார்: “நீங்கள் பலங்கொண்டு திடமனதாயிருங்கள், . . . உன் தேவனாகிய கர்த்தர்தாமே உன்னோடேகூட வருகிறார்.”—உபாகமம் 31:6.
ரூபன் மற்றும் காத் கோத்திரங்களும், மனாசேயின் பாதி கோத்திரமும் மோசேயின் அறிவுரையில் உட்பட்டிருந்தனர். அவர்கள் ‘அந்தக் கீலேயாத் தேசம் ஆடுமாடுகளுக்குத் தகுந்த இடம்’ என்று கண்டபடியால், வசிப்பதற்கு கீலேயாத் பகுதியைத் தங்களுக்கு ஒதுக்கித் தரும்படி கேட்டனர்.—எண்ணாகமம் 32:1-40.
கீலேயாத் மறுபக்கத்தில், யோர்தானின் கிழக்குப் பக்கத்தில் இருந்தது. அது சரியாகவே சவக் கடலின் வடக்கு முனையிலிருந்து கலிலேயா கடல் வரையாக முழு கிழக்கு பாகமுமாக இருந்தது. இந்தப் பகுதி யோர்தான் பள்ளத்தாக்கிலிருந்து எழும்பி நீர்வளம் பொருந்திய பீடபூமிகள் வழியாகக் குன்றுகளைச் சுற்றி அமைந்திருந்தது. ஆகவே கீலேயாத் தானியம் விளைவிப்பதற்கும் ஆடுமாடுகள் புல்மேய்வதற்கும் ஒரு நல்ல பகுதியாக இருந்தது. கீலேயாத்தின் ஒரு பாகம் எப்படிப்பட்டதாய் இருந்தது என்று மேற்காணும் படம் உங்களுக்கு ஓர் எண்ணத்தைக் கொடுக்கும். ஆனால் ஓரளவிற்கு மனதிற்குகந்த அப்படிப்பட்ட ஒரு பகுதியுடன் ஏன் தைரியத்தைத் தொடர்புபடுத்த வேண்டும்?
கீலேயாத்தில் வாழும்படி தெரிவு செய்த அந்தக் கோத்திரங்கள் தெளிவாகவே பயத்தின் காரணமாக அவ்வாறு செய்யவில்லை. வாக்குப்பண்ணப்பட்ட தேசத்திலுள்ள பகைவர்களுக்கு எதிராகச் சண்டையிட அவர்கள் யோர்தானைக் கடப்பதற்கு ஒத்துக்கொண்டனர் என்பதை நினைவுகூருங்கள். மேலும் அவர்கள் கீலேயாத்துக்குத் திரும்பியபோது, அவர்களுக்கு அதிக தைரியம் தேவைப்பட்டது. ஏன்? தென்கிழக்கில் அம்மோனியராலும் வடக்கில் சீரியராலும் தாக்கப்படக்கூடியவிதத்தில் அவர்கள் எல்லைப்புறத்தில் இருந்தனர். அவர்கள் அவ்வாறு தாக்கவும்பட்டார்கள்.—யோசுவா 22:9; நியாயாதிபதிகள் 10:7, 8; 1 சாமுவேல் 11:1; 2 இராஜாக்கள் 8:28; 9:14; 10:32, 33.
அந்தத் தாக்குதல்கள், தைரியம் தேவைப்பட்ட குறிப்பிடத்தக்க நிகழ்ச்சிகளாகும். உதாரணமாக, அம்மோனியர்கள் கீலேயாத்தை ஒடுக்குவதற்கு யெகோவா அனுமதித்தப் பின்னர், கடவுளுடைய மக்கள் மனந்திரும்பி, “பலத்த பராக்கிரமசாலியாயிருந்த” ஒருவன் அவர்களைத் தலைமை தாங்கும்படி நாடினர்; அவருடைய தகப்பனும் கிலெயாத் என்று பெயரிடப்பட்டிருந்தார். இந்தப் பராக்கிரமசாலியான, அல்லது தைரியமான மனிதன், யெப்தா. அவர் ஒரு பொருத்தனைக்காக நன்கு அறியப்பட்டவராய் இருக்கிறார்; அது அவர் தைரியமாக இருந்தபோதிலும் கடவுளுடைய வழிநடத்தலையும் ஆதரவையும் அவர் நாடினார் என்பதைப் பிரதிபலித்தது. ஒடுக்கக்கூடிய அம்மோனியர்களைத் தான் கீழ்ப்படுத்த கடவுள் உதவி செய்தால், தன்னுடைய வீட்டிலிருந்து தன்னைச் சந்திக்க முதலாவது எதிர்கொண்டு வருவது ‘சர்வாங்க தகனபலியாக கொடுக்கப்படும்,’ அல்லது கடவுளுக்குப் பலியாகச் செலுத்தப்படும் என்று யெப்தா நேர்ந்துகொண்டார்.a அது யெப்தாவின் ஒரே பிள்ளையாக, அவருடைய மகளாக ஆகும்படி நேரிட்டது; அவள் பின்னர் கடவுளுடைய பரிசுத்த ஸ்தலத்தில் சேவிப்பதற்குச் சென்றாள். ஆம், யெப்தாவும், ஒரு வித்தியாசமான முறையில் அவருடைய மகளும் தைரியத்தைக் காண்பித்தனர்.—நியாயாதிபதிகள் 11:1, 4-40.
ஒருவேளை அவ்வளவு நன்கு அறியப்படாமல் இருக்கும் தைரியத்தின் ஒரு வெளிக்காட்டுதல் சவுலின் காலத்தில் நடந்தது. அந்தச் சூழமைவை யோசிப்பதற்கு, சவுல் அரசனானபோது, கீலேயாத்திலிருக்கிற யாபேசின் மனிதருடைய வலது கண்ணைப் பிடுங்குவதாக அம்மோனியர் அச்சுறுத்தியதை நினைவுகூருங்கள்; அந்தப் பட்டணம் குன்றுகளின் வழியாய் கீழ்நோக்கி யோர்தானை நோக்கிச் செல்லும் ஓர் ஆற்றுப்படுகையில் அமைக்கப்பட்டிருந்திருக்கக்கூடும். யாபேசைப் பலப்படுத்தும்படி சவுல் ஒரு படையை விரைவாகத் திரட்டினார். (1 சாமுவேல் 11:1-11) அந்தப் பின்னணியை மனதிற்கொண்டு, சவுலின் ஆட்சியின் முடிவிற்குச் சென்று எப்படி தைரியம் காண்பிக்கப்பட்டது என்று நாம் பார்ப்போம்.
பெலிஸ்தரோடான ஒரு யுத்தத்தில் சவுலும் அவருடைய மூன்று மகன்களும் இறந்துவிட்டனர் என்பது உங்களுக்கு நினைவிருக்கக்கூடும். அந்தப் பகைவர்கள் சவுலின் தலையை வெட்டிப்போட்டு, வெற்றிகரமாக சவுல் மற்றும் அவருடைய மகன்களின் உடல்களை பெத்சான் அலங்கத்தில் தொங்கும்படிச் செய்தனர். (1 சாமுவேல் 31:1-10; வலது பக்கத்தில், தோண்டியெடுக்கப்பட்ட பெத்சான் குன்றைக் காண்கிறீர்கள்.) இதைக்குறித்த செய்தி, யோர்தானைக் கடந்து கீலேயாத்தின் குன்றுகளில், யாபேசைச் சென்றெட்டியது. இஸ்ரவேலின் அரசனை முறியடிக்கும் அளவிற்கு வல்லமை வாய்ந்த ஒரு பகைவனின் எதிரில் கீலேயாத்தியர் என்ன செய்ய முடியும்?
நிலப்படத்தில் கவனியுங்கள். “அவர்களிலே பலசாலிகள் எல்லாரும் எழுந்து இராமுழுதும் நடந்துபோய், பெத்சானின் அலங்கத்திலிருந்த சவுலின் உடலையும் அவன் குமாரரின் உடல்களையும் எடுத்து, யாபேசுக்குக் கொண்டுவந்து, அவைகளை அங்கே தகனம்பண்ணி”னார்கள். (1 சாமுவேல் 31:12) ஆம், அவர்கள் பகைவனின் அரணிற்குள் இரவுநேரத்தில் திடீரென புகுந்தனர். பைபிள் அவர்களைப் பராக்கிரமசாலிகள், அல்லது தைரியசாலிகள் என்று ஏன் அழைக்கிறது என்பதை நீங்கள் புரிந்துகொள்ளலாம்.
காலப்போக்கில், பத்து கோத்திரங்கள் பிரிந்து, இஸ்ரவேலின் வடக்கு ராஜ்யத்தை அமைத்துக்கொண்டன; இது கீலேயாத்தை உட்படுத்தியது. சுற்றியுள்ள தேசங்கள், முதலில் சீரியரும், பின்னர் அசீரியரும், யோர்தானுக்குக் கிழக்கு பக்கத்திலுள்ள பிராந்தியத்தின் பாகங்களைக் கைப்பற்றத் துவங்கினர். ஆகவே, தைரியத்தின் பழைய சம்பவங்கள் இருந்தபோதிலும், கீலேயாத்தின் மக்கள் எல்லைப்புற பகுதியில் இருந்ததன் விளைவை அனுபவித்தார்கள்.—1 இராஜாக்கள் 22:1-3; 2 இராஜாக்கள் 15:29.
[அடிக்குறிப்புகள்]
a அந்தப் பதிவைப்பற்றிய கவனமான மதிப்பீடு, யெப்தா தன்னுடைய பிள்ளையை மனித பலியாகக் கொடுத்தார் என்ற குற்றச்சாட்டை தவறெனக் காட்டுகிறது. உவாட்ச்டவர் பைபிள் அண்ட் டிராக்ட் சொஸையிட்டியால் பிரசுரிக்கப்பட்ட வேதவாக்கியங்களின்பேரில் உட்பார்வை, (ஆங்கிலம்) தொகுதி 2, பக்கங்கள் 27-8-ஐ பாருங்கள்.
[பக்கம் 8-ன் படத்திற்கான நன்றி]
Pictorial Archive (Near Eastern History) Est.
[பக்கம் 9-ன் படத்திற்கான நன்றி]
Pictorial Archive (Near Eastern History) Est.
[பக்கம் 8-ன் வரைப்படம்]
கலிலேயா கடல்
பெத்சான்
ராமோத்-கீலேயாத்
யாபேஸ்
யோர்தான் நதி
சவக்கடல்
கீலேயாத்