“நான் யெகோவாவுக்கு அருமையானவளாய் இருக்கிறேன்!”
‘கையாளுவதற்குக் கடினமாயிருக்கும்’ இப்படிப்பட்ட ‘கொடிய காலங்களில்’ யெகோவாவின் உண்மையுள்ள ஊழியர்கள் அநேகர், தாங்கள் மதிப்பில்லாதவர்கள் என்ற உணர்ச்சிகளோடு எப்போதும் போராடி வந்திருக்கின்றனர். (2 தீமோத்தேயு 3:1, NW) இது ஆச்சரியமாயில்லை, ஏனென்றால் சாத்தானின் ‘தந்திரமான செயல்களில்’ ஒன்று, நம்முடைய சிருஷ்டிகரும்கூட நம்மை நேசிக்கவில்லை என்று நாம் உணரும்படி செய்வதே! (எபேசியர் 6:11, NW, அடிக்குறிப்பு) பொருத்தமாகவே, ஏப்ரல் 1, 1995, காவற்கோபுர இதழில், “கடவுளின் பார்வையில் நீங்கள் அருமையானவர்கள்!” மற்றும் “அன்புக்கும் நற்பணிகளுக்கும் தூண்டியெழுப்புவது—எப்படி?” என்ற இரண்டு கட்டுரைகள் சபை படிப்புக்காக பிரசுரிக்கப்பட்டிருந்தன. யெகோவா நம்முடைய முயற்சிகளை மதித்துப் போற்றுகிறார் என்பதை நமக்கு நினைப்பூட்டுவதற்கென்று இந்தக் கட்டுரைகள் எழுதப்பட்டன. சங்கம் பெற்றுக்கொண்ட போற்றுதல் தெரிவிக்கும் குறிப்புகள் சில கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
“நான் 27 வருடங்களாக யெகோவாவின் சாட்சிகளில் ஒருத்தியாக இருந்திருக்கிறேன், இந்தப் பத்திரிகையைப் போன்று வேறு எதுவும் என்னை இந்த அளவுக்குப் பாதித்ததில்லை. அழுவதைத் தவிர என்னால் வேறு எதுவும் செய்ய முடியவில்லை—இந்தக் கட்டுரைகள் என் கவலையை பெரிதளவில் நீக்கிப்போட்டன. நான் இப்போது யெகோவாவால் அதிகமாக நேசிக்கப்படுவதாய் உணருகிறேன். என்னிடமிருந்து பெரும் பாரத்தை எடுத்துவிட்டது போல் அது இருக்கிறது.”—சி. ஹெச்.
“நான் ஒரே நாளில் இந்தப் பத்திரிகையை நான்கு முறைகள் வாசித்தேன். நீங்கள் மதிப்பற்றவர்களாக உணர்ந்தீர்கள் என்றால், உங்களுக்கு ஒரு பொய் கற்பிக்கப்பட்டிருக்கிறது என்று அந்த கட்டுரை சொன்ன விதத்தை நான் படித்து மகிழ்ந்தேன். மேய்க்கும் வேலையிலும் வீட்டுக்கு-வீடு பிரசங்கிப்பிலும் நான் இந்தக் கட்டுரையை பயன்படுத்தப் போகிறேன்.”—எம். பி.
“யெகோவாவை நேசிப்பவர்கள்கூட மதிப்பற்றவர்கள் மற்றும் நேசிக்கப்படத்தகாதவர்கள் என்று உணரவைப்பதில் சாத்தான் மிகச்சிறந்த வேலை செய்திருக்கிறான். யெகோவா நம்மை ஆழமாக நேசிக்கிறார் என்பதையும் நாம் அவருக்காக செய்யும் எல்லா சிறிய காரியங்களையும் அவர் போற்றுகிறார் என்பதையும் ‘உண்மையுள்ள அடிமையின்’ மூலம் நினைப்பூட்டப்படுவது, நான் வாசித்தவற்றிலேயே அதிக உற்சாகமூட்டும் ஒன்று. இந்தக் கட்டுரைகளில் நீங்கள் சொல்லியிருக்கும் உணர்ச்சிகள் எனக்கு பல வருடங்களாக இருக்கின்றன. நான் யெகோவாவின் அன்பைப் பெறத் தகுதியற்றவன் என்று நினைத்து அந்த அன்பைப் பெற அவருடைய சேவையில் அதிகமதிகமாக செய்ய முயற்சித்தேன். ஆனால் நான் குற்ற உணர்வாலும் வெட்கத்தாலும் தூண்டப்பட்டிருந்தேன். ஆகையால் நான் ஊழியத்தில் எவ்வளவு மணிநேரங்கள் செலவழித்தாலும், அல்லது எத்தனை ஜனங்களுக்கு உதவினாலும் அதைப் போதுமானதாக நான் உணரவில்லை. என்னில் குறையைக் கண்டேன். நான் இப்போது யெகோவாவை அன்பால் தூண்டப்பட்டு சேவிக்கும்போது, அவர் புன்முறுவல் செய்து என்னைக் குறித்து பெருமைப்படுகிறார் என்று நினைக்கிறேன். இது எனக்கு அவர் பேரில் இருக்கும் அன்பை இன்னும் கூடுதலாக அதிகரிக்கச் செய்து அதை இன்னும் அதிகமாகச் செய்ய என்னை உந்துவிக்கிறது. நான் இப்போது யெகோவாவுக்கு செய்யும் சேவையிலிருந்து பெரும் சந்தோஷத்தை அனுபவித்து வருகிறேன்.”—ஆர். எம்.
“இந்தக் கட்டுரைகள் நான் வாசித்தவற்றிலேயே நம்முடைய இருதயங்களைத் தொடுமளவுக்கு மிகச்சிறந்த, அதிகமாக கட்டியெழுப்பும் கட்டுரைகளாக இருக்கின்றன! நான் காவற்கோபுரம் பத்திரிகையை 55 வருடங்களாக வாசித்துவருகிறேன், அதில் குறிப்பிடத்தக்க இதழ்கள் அநேகம் இருந்திருக்கின்றன. ஆனால் இந்த இதழ் நாம் கொண்டிருந்த எல்லாவற்றையும் மிஞ்சிவிட்டிருக்கிறது, அது நம்முடைய அவநம்பிக்கை உணர்வு, திகில், நாம் ‘மதிப்பற்றவர்கள்,’ ‘நேசிக்கப்படாதவர்கள்,’ யெகோவாவின் அன்பை ‘பெறுவதற்கு’ போதுமானதை செய்யவே முடியாது போன்ற பயங்களை தணிப்பதற்கு உதவுகிறது. நம்முடைய சகோதரர்களுக்கு மிகவும் அவசரமாய்த் தேவையாயிருக்கும் ஆவிக்குரிய உதவி இந்த காவற்கோபுரம் பத்திரிகையில் அடங்கியுள்ளது. மேய்க்கும் வேலை செய்யும்போது இந்தக் கட்டுரைகளை மறுபடியும் மறுபடியுமாக உபயோகிக்க வேண்டும் என்பதே என்னுடைய எண்ணம்.”—எஃப். கே.
“தாழ்வான சுய-மதிப்பு, அல்லது சுய-வெறுப்பு உணர்வுகளோடும்கூட போராடிக்கொண்டிருக்கும் நம்மில் சிலருக்கு, சத்தியத்தில் தொடர்ந்து நிலைத்திருப்பதற்காக நம்முடைய பலத்தை திரட்டிக்கொள்வது அதிக கடினமாக இருக்கலாம். இந்தக் கட்டுரை இரக்கத்தையும் புரிந்துகொள்ளுதலையும் அவ்வளவு ஆழமாக பிரதிபலித்ததால், அது இருதயத்துக்கு நேரடியாக இதமான குணமாக்கும் மருந்தை பூசுவது போல் இருந்தது. அப்படிப்பட்ட வார்த்தைகளை காவற்கோபுரம் பத்திரிகையில் வாசிப்பதும், எந்த சந்தேகமுமின்றி யெகோவா நிச்சயமாக புரிந்துகொள்கிறார் என்பதை அறிந்துகொள்வதும் எவ்வளவு ஆறுதலாய் உள்ளது! யெகோவா தம்முடைய ஜனங்களை குற்ற உணர்வு, வெட்கம் அல்லது பயம் ஆகியவற்றால் உந்துவிக்க முயற்சி செய்வதில்லை என்பதை எங்களுக்கு நினைப்பூட்டியதற்கு நன்றி. சமீபத்தில் எங்களுடைய குடும்பத்தில் பணப்பிரச்சினைகளும் உடல்நலப் பிரச்சினைகளும் இருந்ததன் காரணத்தால் பிரசங்க வேலையில் என்னுடைய பங்கைச் செய்வது அதிகமாக மட்டுப்படுத்தப்பட்டிருந்தாலும், என்னால் செய்யமுடிந்ததைக் குறித்து நான் திருப்தியடைகிறேன். அன்பு என்னைக் கட்டாயப்படுத்தும் வல்லமையாக அனுமதிக்கும்போது நான் சேவையில் அதிக மகிழ்ச்சியைக் கண்டடைவதாகக் காண்கிறேன்.”—டி. எம்.
“‘கடவுளின் பார்வையில் நீங்கள் அருமையானவர்கள்!’ என்ற கட்டுரையை நான் இப்போதுதான் வாசித்து முடித்தேன். ஒவ்வொரு பாராவும் என் கண்களிலிருந்து கண்ணீரை வடிக்கச் செய்தது. குறைவாக அன்பைக் காண்பித்த குடும்பத்திலிருந்து நான் வந்தேன். நான் சிறுமைப்படுத்தப்பட்டேன், கேலி செய்யப்பட்டேன், பிறர் என்னைப் பார்த்து சிரித்தனர். ஆகையால் வாழ்க்கையின் ஆரம்பத்திலேயே நான் மதிப்பற்றவனாக உணர்ந்தேன். நான் பெருந்துன்பத்தை அனுபவிக்கும்போது, கடந்த காலத்தில் என்னை ஒடுக்கிய உணர்வுகளை நான் இன்னும் சுமந்துகொண்டிருப்பதால் அது என்னை நெருக்குகிறது. நான் ஒரு சபை மூப்பராக சேவிப்பதை நிறுத்திக்கொண்டபோது, நான் தோல்வியுற்றவனைப் போல் உணர்ந்தேன்—கடவுளுக்கு, என் குடும்பத்துக்கு, என் சபையில் இருந்த சகோதரர்களுக்கு. அந்த உணர்ச்சிகள் உடனடியாக போய்விடுவதில்லை, ஆனால் காலத்துக்கேற்ற இந்தக் கட்டுரை ஓரளவு சமநிலையைப் பெற்றுக்கொள்ள எனக்கு உதவியிருக்கிறது. அது என்னுடைய மனநிலையை பிரகாசமாக்கியிருக்கிறது.”—டி. எல்.
“‘கடவுளின் பார்வையில் நீங்கள் அருமையானவர்கள்!’ என்ற கட்டுரைக்காக உங்களுக்கு நன்றி. நான் கடுமையான சுய-விரோதம் மற்றும் மதிப்பற்றவள் என்ற ஆழமான உணர்வுகளோடு போராடிக் கொண்டிருக்கிறேன், பிள்ளைப் பிராயத்தில் துர்ப்பிரயோகம் செய்யப்பட்டதே அதற்கான மூலகாரணம். திரித்துக் கூறப்பட்ட இந்த எண்ணத்தை சாத்தானின் தந்திரமான செயல் என்று நோக்குவது நிச்சயமாகவே பொருத்தமானதாய் உள்ளது. அது வாழ்வதற்கு ஒருவருடைய விருப்பத்தையும்கூட அழித்துவிடக்கூடும். நான் நேசிக்கப்படத்தகாதவள் என்ற பொய்யை எதிர்த்துப் போராடுவதற்கு ஒவ்வொரு நாளும் உண்மையாய் உழைக்க வேண்டும். நீங்கள் அறிந்திருப்பதைக் காட்டிலும் இந்தக் கட்டுரை எனக்கு அதிகத்தைக் குறிக்கிறது.”—சி. எஃப்.
“கட்டாயப்படுத்துதல் அல்லது அழுத்தத்தின் காரணமாக அல்லாமல் அன்பின் காரணமாக தூண்டப்பட்ட செயல்களை யெகோவா போற்றுகிறார் என்ற எண்ணத்துக்கு சகோதரர்கள் இன்று விசேஷமாக பிரதிபலிக்கின்றனர். யெகோவாவின் அன்பான பாசமிக்க ஆள்தன்மையை சிந்திப்பது, தனிப்பட்டவர்களாக யெகோவா அவருடைய ஜனங்கள் பேரில் காண்பிக்கும் அக்கறை, அன்பான விதத்தில் அவர் தன்னையே அளிக்கும் விதம் புத்துயிரளிப்பதாயும் தூண்டுதலளிப்பதாயும் உள்ளது. இதன் காரணமாக, ‘கடவுளின் பார்வையில் நீங்கள் அருமையானவர்கள்!’ என்ற கட்டுரையை நாங்கள் பெற்றுக்கொண்டவுடனேயே இந்தக் கட்டுரைக்கு அநேகர் போற்றுதல் தெரிவித்தனர். அது அநேகருக்கு யெகோவாவோடு தனிப்பட்ட உறவை வளர்த்துக்கொள்வதற்கு வழியைத் திறந்து வைப்பது போல் தோன்றுகிறது. சமீபத்தில் வெளிவந்திருக்கும் காவற்கோபுரம் பத்திரிகைகளில் விஷயங்கள் சொல்லப்பட்டிருக்கும் விதத்துக்காகவும் கூருணர்ச்சிக்காகவும் நானும் என் மனைவியும் போற்றுதலைத் தெரிவிக்க விரும்புகிறோம். நாங்கள் சபைகளை சந்திக்கையில் இந்தக் குறிப்புகளில் பலவற்றை பொருத்த முயற்சி செய்து கொண்டிருக்கிறோம்.”—ஒரு பயணக் கண்காணியிடமிருந்து.
“நான் சுமார் 30 வருடங்களாக உண்மைத்தன்மையோடு இந்தப் பத்திரிகையை வாசித்து வந்திருக்கிறேன், ஆனால் இந்த அளவுக்கு தூண்டுதலையும், மேம்படுத்துதலையும் அளித்த வேறு எதையும் நான் இதுவரை வாசித்ததில்லை. வல்லமையோடும் திறமையோடும் பொருத்தப்பட்டிருந்த வேதவசனங்கள், என்னுடைய சொந்த உணர்ச்சிகளில் மறைந்திருந்த பொய்களை பிடுங்கி எறிந்துவிட்டு யெகோவாவோடு நெருங்கிசேர அனுமதித்து எனக்கு உதவியிருக்கிறது. நான் பல வருடங்களாக யெகோவாவை குற்ற உணர்ச்சியோடு சேவித்திருக்கிறேன். மீட்கும்பொருள் மற்றும் கடவுளின் அன்பு ஆகியவற்றைக் குறித்து எனக்கு வெறும் அறிவுப்பூர்வமான புரிந்துகொள்ளுதலே இருந்தது. அப்படிப்பட்ட உட்பார்வையுள்ள சிந்தனைமிக்க கட்டுரைகளுக்காக நன்றி. நான் அதைப் போன்ற அநேக கட்டுரைகளை வாசிக்க விரும்புகிறேன்.”—எம். எஸ்.
“நான் சத்தியத்தில் 29 ஆண்டுகளாக இருந்தபோதிலும், எனக்குள் நன்றியும் ஆழமான உணர்ச்சியும் உட்பட்ட பிரதிபலிப்பை ஏற்படுத்திய ஒரு கட்டுரை எனக்கு நினைவில் இல்லை. நான் அதிகமான அன்பும் அக்கறையும் காண்பித்த குடும்பத்தில் வளர்க்கப்பட்டிருந்தபோதிலும், உயிரோடிருப்பதற்கே தகுதியற்றவள் என்று உணர்ந்திருக்கிறேன். இப்படியிருக்கையில் யெகோவாவைச் சேவிப்பதற்கு தகுதியுள்ளவளாக உணர்ந்தேனா என்று சொல்வானேன். இந்தக் கட்டுரையைப் படித்த பின்பு, நான் முழங்கால்படியிட்டு தேம்பி அழுது யெகோவாவுக்கு நன்றி சொன்னேன். நான் இந்தக் கட்டுரையை என்றைக்கும் மதித்துப் போற்றுவேன். நான் என்னை வித்தியாசமாக நோக்குவேன், ஏனென்றால் நான் யெகோவாவுக்கு அருமையானவளாய் இருக்கிறேன் என்ற புரிந்துகொள்ளுதலை இப்போது பெற்றிருக்கிறேன்.”—டி. பி.