யெகோவா எங்களை ஒருபோதும் கைவிடவில்லை
நாஷோ டோரி சொன்னபடி
எம்ப்ரெஷ்டான், கிரீஸுக்கு அருகில், தெற்கு அல்பேனியாவிலுள்ள ஒரு சிறிய மலைக் கிராமம். நான் 1907-ல் அங்கே பிறந்தேன். நான் ஐந்து வயதாயிருந்தபோது, கிரேக்கப் பள்ளி ஒன்றுக்குச் செல்லத் தொடங்கினேன். ஆனால் முதல் உலகப் போரின்போது இத்தாலிய படைகள் அல்பேனியாவுக்குள் படையெடுத்த சமயத்தில், என் பள்ளி படிப்பு தடை செய்யப்பட்டது. போருக்குப் பின், நான் திரும்ப பள்ளிப் படிப்பைத் தொடர்ந்தேன், ஆனால் அல்பேனிய மொழியில் படித்தேன்.
என் பெற்றோர் அவ்வளவு மதப்பற்றுடையோராக இராதபோதிலும், அல்பேனிய ஆர்த்தடாக்ஸ் சர்ச்சின் பாரம்பரியங்களைக் கைக்கொண்டனர். என் பாட்டனாரின் உடன்பிறந்தார் எம்ப்ரெஷ்டானில் பாதிரியாக இருந்தார். ஆகையால் சர்ச்சில் நான் வேலைசெய்து, அதற்குள் நடந்துகொண்டிருந்தவற்றைப் பற்றி நேரில் கண்டறிந்தேன். அதன் ஆசாரங்கள் முற்றிலும் கருத்தற்றவையாகத் தோன்றின, அந்த மாய்மாலம் எனக்கு மனசங்கடத்தை அளித்தது.
அவ்விடத்து வழக்கத்தைப் பின்பற்றி, என் பெற்றோர், நான் மணம் செய்துகொள்ளும்படி ஓர் இளம் பெண்ணைத் தெரிந்தெடுத்தனர். அர்ஜீரோ, அருகிலிருந்த கிராபோவா கிராமத்தைச் சேர்ந்தவள்; 1928-ல் அவள் 18 வயதாயிருந்தபோது, எங்களுக்கு மணம் செய்விக்கப்பட்டது.
பைபிள் சத்தியத்தைக் கற்றல்
பெரும்பாலும் அந்தச் சமயத்தின்போதே ஐக்கிய மாகாணங்களிலிருந்து வந்திருந்த என் உறவினன் ஒருவனிடம் ஆர்த்தடாக்ஸ் சர்ச்சைப் பற்றி குறைகூறினேன். அவன் பதிலளித்து, “அமெரிக்காவில், என் வீட்டுக்கு அருகில், ஒரு தொகுதி ஆட்கள் இருக்கின்றனர், அவர்களுக்குச் சர்ச் கிடையாது, ஆனால் அவர்கள் பைபிளைப் படிக்கிறார்கள்,” என்று சொன்னான். சர்ச்சைக் கொண்டிராமல் பைபிளைப் படிக்கும் எண்ணம் என் மனதைக் கவர்ந்தது. ஆகையால் பைபிள் புத்தகங்கள் சிலவற்றை எனக்கு அவன் அனுப்பக்கூடுமாவெனக் கேட்டேன்.
ஏறக்குறைய ஓர் ஆண்டுக்குப் பின்னால், மில்வாக்கீ விஸ்கான்ஸின்னிலிருந்து ஒரு பொட்டலத்தை நான் பெற்ற சமயம் வரையில், எங்கள் உரையாடலைப் பற்றி நான் முற்றிலும் மறந்துவிட்டேன். அதனுள் கடவுளின் சுரமண்டலம் (ஆங்கிலம்) என்ற புத்தகம் அல்பேனிய மொழியிலும், காவற்கோபுரம் கிரேக்கிலும் இருந்தன. நான் அந்த புத்தகத்தை மேலீடாகப் பார்வையிட்டு, உண்மையான சர்ச் என்ற ஒரு குறிப்பீட்டைக் கவனித்தேன். அது என் மன அமைதியைக் கெடுத்தது. ‘சர்ச்சுடன் எதுவும் எனக்கு வேண்டியதில்லை,’ என்று நான் எனக்குள் சொல்லிக்கொண்டேன். ஆகவே அந்தப் புத்தகத்தை முழுமையான முறையில் நான் வாசிக்கவில்லை.
1929-ல் நான் இராணுவத்தில் சேர்ந்து, அல்பேனியாவின் தலைநகரான டிரானாவுக்கு அனுப்பப்பட்டேன். அங்கு ஸ்டாத்தி முக்கியைச் சந்தித்தேன், அவர் கிரேக்க பைபிள் ஒன்றை வாசித்துக் கொண்டிருந்தார். “நீர் சர்ச்சுக்குப் போவீரா?” என்று அவரைக் கேட்டேன். “இல்லை,” என்று அவர் பதிலளித்து, “நான் சர்ச்சை விட்டு விலகிவிட்டேன். நான் சர்வதேச பைபிள் மாணாக்கரில் ஒருவன்,” என்றார். மற்றொரு போர்வீரனும் நானும் ஞாயிற்றுக்கிழமையில் ஸ்டாத்தியுடன் ஒரு கூட்டத்துக்குச் சென்றோம். உண்மையான சர்ச்சானது ஒரு கட்டடமோ மதமோ அல்ல, அது கிறிஸ்துவின் அபிஷேகம் செய்யப்பட்ட ஊழியராலாகியது என்று அங்கு நான் கற்றறிந்தேன். கடவுளின் சுரமண்டலம் புத்தகம் சொன்னதை இப்போது நான் புரிந்துகொண்டேன்.
நாஷோ இட்ரிஸியும் ஸ்பிரோ வ்ருஹொவும் 1920-ன் மத்திபத்தில், ஐக்கிய மாகாணங்களிலிருந்து அல்பேனியாவுக்குத் திரும்பிவந்திருந்து, தாங்கள் அங்கு கற்றறிந்திருந்த பைபிள் சத்தியங்களைப் பரவச் செய்துகொண்டிருந்தனர். டிரானாவில் கூட்டங்களுக்கு, பைபிள் மாணாக்கர்கள் சிலரோடுகூட நான் செல்லத் தொடங்கினேன். நான் யெகோவாவின் அமைப்பைக் கண்டுபிடித்துவிட்டேனென வெகு சீக்கிரத்தில் எனக்குத் தெளிவாயிற்று. ஆகையால், 1930, ஆகஸ்ட் 4 அன்று, அருகிலிருந்த ஒரு நதியில் நான் முழுக்காட்டப்பட்டேன்.
அதன்பின் நான், புதைமிதி செய்யும் என் வேலையைத் தொடர்ந்து செய்யும்படி எம்ப்ரெஷ்டானுக்குத் திரும்பிச் சென்றேன். ஆனால் அதிக முக்கியமாக, நான் கற்றிருந்த பைபிள் சத்தியங்களை மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ளவும் தொடங்கினேன். “இயேசு கிறிஸ்து சர்ச்சிலுள்ள உருவச்சிலைகளைப் போல் இல்லை. அவர் உயிருடன் இருக்கிறார்!” என்று நான் அவர்களிடம் சொல்வேன்.
எதிர்ப்பின் மத்தியிலும் பிரசங்கித்தல்
1925-ல் ஆக்மெட் பே ஸோக்ய ஆட்சியைக் கைப்பற்றி, 1928-ல் தன்னை அரசன் ஸோக் I ஆக்கிக்கொண்டு, 1939 வரையில் ஆட்சி செய்தார். மனித உரிமைகள் துறையின் அவருடைய மந்திரி எங்கள் கிறிஸ்தவ ஊழியத்துக்கு அங்கீகாரம் அளித்தார். எனினும், எங்களுக்குப் பிரச்சினைகள் இருந்தன. இது ஏனெனில், உள்நாட்டு விவகார மந்திரி மூசா ஜூக்கா, ரோமிலுள்ள போப்புடன் நெருங்கிய நட்பு தொடர்புடையவராக இருந்தார். முஸ்லீம், ஆர்த்தடாக்ஸ், ரோமன் கத்தோலிக் ஆகிய இந்த மூன்று மதங்கள் மாத்திரமே அங்கீகரிக்கப்பட வேண்டுமென்று ஜூக்கா கட்டளையிட்டார். காவல் துறையினர் எங்கள் புத்தகங்களைக் கைப்பற்றி, எங்கள் பிரசங்க ஊழியத்தை நிறுத்தும்படி முயற்சி செய்தனர், ஆனால் அவர்கள் வெற்றிபெறவில்லை.
1930-களின்போது, பாராட் என்ற இடத்துக்கு நான் அடிக்கடி சென்றேன், அது அல்பேனியாவிலுள்ள மேலும் பெரிய ஒரு நகரம், அங்கிருந்தே மிஹல் ஸ்வீசி எங்கள் பிரசங்க ஊழியத்தை மேற்பார்வையிட்டு நடத்தினார். நாடு முழுவதிலும் பிரசங்கப் பயணங்களை நாங்கள் ஏற்பாடு செய்தோம். ஒருமுறை நான் ஷ்கோடர் பட்டணத்துக்கு இரண்டு வாரங்களுக்கு அனுப்பப்பட்டு, மிகுதியான பிரசுரங்களை விட்டுவரக் கூடியவனாயிருந்தேன். 1935-ல், எங்களில் ஒரு தொகுதி, கல்சைர பட்டணத்தில் பிரசங்கிப்பதற்கு, ஒரு பஸ்ஸை வாடகைக்கு எடுத்தோம். பின்பு, பர்மெட், லெஸ்கோவிக், எர்செக்கி, கார்ச்செ, பாக்ராடெட்ஸ், மற்றும் எல்பசான் ஆகிய இந்தப் பட்டணங்களுக்கு, அல்பேனியாவைச் சுற்றிவரும் மேலும் பெரிய பிரசங்கப் பயணம் ஒன்று திட்டமிடப்பட்டது. இந்தச் சுற்றுப் பயணத்தை, டிரானாவில், கிறிஸ்துவின் மரண நினைவு ஆசரிப்பைக் கைக்கொள்வதற்குரிய சரியான சமயத்தில் முடித்தோம்.
ஆவிக்குரிய உணவு தொடர்ந்து கிடைத்ததானது, ஆவிக்குரியப்பிரகாரம் எங்களைப் பலமாக வைத்துக்கொள்ள உதவி செய்தது. ஆகையால் நாங்கள் கைவிடப்பட்டவர்களாக ஒருபோதும் உணரவில்லை. 1930-லிருந்து 1939 வரையாக, கிரேக்கில் காவற்கோபுரத்தை நான் தொடர்ந்து பெற்று வந்தேன். மேலும், பைபிளை, குறைந்தது ஒரு மணிநேரமாவது நாள்தோறும் படிப்பதும் என் இலக்காக இருந்தது. இதை நான், என் கண்பார்வை மங்குவதற்கு முன்னால் ஏறக்குறைய 60 ஆண்டுகள் செய்துவந்தேன். சமீபத்தில்தானே முழு பைபிளும் அல்பேனிய மொழியில் கிடைக்கக்கூடியதாயிற்று, ஆகவே நான் சிறு பிள்ளையாக இருந்தபோது கிரேக்கைக் கற்றதற்காகச் சந்தோஷப்படுகிறேன். அந்தத் தொடக்க நாட்களில் அல்பேனிய சாட்சிகளான மற்றவர்களும், முழு பைபிளைத் தாங்கள் வாசிக்கக்கூடும்படி கிரேக்கை வாசிப்பதற்குக் கற்றனர்.
1938-ல் அர்ஜீரோ முழுக்காட்டுதலைப் பெற்றாள். 1939-க்குள்ளாக எங்கள் பத்து பிள்ளைகளில் ஏழு பேர் பிறந்திருந்தனர். துயரம் தருவதாய், எங்கள் முதல் ஏழு பிள்ளைகளில் மூவர் இளைஞராக இருக்கையிலேயே இறந்துவிட்டனர்.
இரண்டாம் உலகப் போரின்போது இக்கட்டுகள்
இரண்டாம் உலகப் போர் தொடங்குவதற்குச் சற்று முன்பான, ஏப்ரல் 1939-ல், இத்தாலிய வல்லாண்மைக் கட்சி படைகள் அல்பேனியாவைத் தாக்கின. அதன்பின் சீக்கிரத்தில் யெகோவாவின் சாட்சிகளுடைய ஊழியத்தின்பேரில் தடையுத்தரவு போடப்பட்டது. ஆனால் ஏறக்குறைய 50 பேரான ராஜ்ய பிரஸ்தாபிகளைக் கொண்ட எங்கள் சிறிய தொகுதியினர் தொடர்ந்து பிரசங்கித்துக் கொண்டிருந்தனர். இரண்டாம் உலகப் போரின்போது ஏறக்குறைய 15,000 எண்ணிக்கையான எங்கள் புத்தகங்களும் சிற்றேடுகளும் பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டன.
ஜானி கோமினோ, பிரசுரங்களைச் சேமித்து வைப்பதற்காகத் தன் வீட்டோடு சேர்ந்த ஒரு பெரிய சேமிப்பு அறையைக் கொண்டிருந்தார். புத்தகங்கள் ஐக்கிய மாகாணங்களில் அச்சடிக்கப்பட்டிருந்தனவென்று இத்தாலிய படையினருக்குத் தெரியவந்தபோது, அவர்கள் மூர்க்கமடைந்தனர். “நீங்கள் பரப்புக்குழு உறுப்பினர்! ஐக்கிய மாகாணங்கள் இத்தாலிக்கு விரோதமாயுள்ளது!” என்று அவர்கள் கூறினர். ஆர்வ வைராக்கியமுள்ள இளம் சகோதரரான தோமாயும் வாசிலி காமாவும் கைதுசெய்யப்பட்டனர். அவர்கள் விநியோகித்துக் கொண்டிருந்த புத்தகங்கள் கோமினோவிடமிருந்து கிடைத்தனவென்று அவர்களுக்குத் தெரியவந்தபோது, அவரும்கூட கைதுசெய்யப்பட்டார். சீக்கிரத்தில் எனக்கும், விசாரணைக்கு வரும்படியான கட்டளை காவல்துறையினரிடமிருந்து வந்தது.
“இந்த ஆட்களை உனக்குத் தெரியுமா?” என்று அவர்கள் கேட்டனர்.
“தெரியும்,” என்று பதிலளித்தேன்.
“நீ அவர்களோடு சேர்ந்து வேலை செய்கிறாயா?”
“ஆம்,” என்று நான் பதில் சொன்னேன். “நாங்கள் யெகோவாவின் சாட்சிகள். நாங்கள் அரசாங்கங்களுக்கு விரோதமாக இல்லை. நாங்கள் நடுநிலை வகிக்கிறோம்,” என்றேன்.
“இந்தப் பிரசுரங்களை நீ விநியோகித்துக் கொண்டிருந்தாயா?”
ஆம் என்பதாக நான் பதில் சொன்னபோது, அவர்கள் எனக்குக் கைவிலங்கு பூட்டினர். 1940, ஜூலை 6 அன்று நான் சிறைச்சாலைக்குள் போடப்பட்டேன். அங்கு என் கிராமத்தைச் சேர்ந்த மற்றும் ஐந்து பேரோடு—ஜோசஃப் காசி, லூக்கன் பார்க்கோ, ஜானி கோமினோ, மற்றும் காமா சகோதரர்களோடு—நான் சேர்ந்தேன். சிறையில் இருக்கையில் வேறு மூன்று சாட்சிகளையும்—கோரி நாசி, நிக்கோடிம் ஷைட்டி, மற்றும் லீயானடஸ் போப்—சந்தித்தோம். நாங்கள் ஒன்பது பேரும் 1.8 மீட்டர் அகலமும் 3.7 மீட்டர் நீளமுமுள்ள ஓர் அறைக்குள் நெருக்கி அடைக்கப்பட்டோம்!
சில நாட்களுக்குப் பின்பு, நாங்கள் ஒன்றாகச் சங்கிலியில் கட்டப்பட்டு பர்மெட் பட்டணத்துக்குக் கொண்டுசெல்லப்பட்டோம். மூன்று மாதங்களுக்குப் பின்பு, டிரானேவிலிருந்த சிறைச்சாலைக்கு நாங்கள் மாற்றப்பட்டு, கூடுதலான இன்னும் எட்டு மாதங்கள் விசாரணை இல்லாமலே வைக்கப்பட்டோம்.
கடைசியாக, இராணுவ விசாரணை மன்றத்துக்கு முன்பாகத் தோன்றினோம். சகோதரர் ஷைட்டியும் நானும் 27 மாத சிறையிருப்புக்கும் 24 மாதங்களுக்கும் தீர்ப்பளிக்கப்பட்டோம், சகோதரர் கோமினோ மற்றவர்கள் 10 மாதங்களுக்குப் பின் விடுதலை செய்யப்பட்டனர். நாங்கள் கிரகாஸ்டர் சிறைக்கு மாற்றப்பட்டோம். அங்கே சகோதரர் கோலி ஃபிலோகோ 1943-ல் நாங்கள் விடுதலை செய்யப்படுவதற்கான உதவிசெய்தார். அதன்பின் எங்கள் குடும்பம் பர்மெட் பட்டணத்தில் குடியேறினோம், அங்கிருந்த சிறிய சபைக்கு நான் கண்காணியானேன்.
எங்கள் ஊழியம் தடையுத்தரவு போடப்பட்டு, எங்களைச் சுற்றியிருந்த நாடுகளில் இரண்டாம் உலகப் போர் மும்முரமாக நடந்துகொண்டிருந்தபோதிலும், ராஜ்ய செய்தியைப் பிரசங்கிக்கும்படியான எங்கள் பொறுப்பை நிறைவேற்றுவதற்கு எங்களால் கூடியதைச் செய்தோம். (மத்தேயு 24:14) 1944-ல் மொத்தம் 15 சாட்சிகள் சிறையில் இருந்தனர். எனினும், இந்த இக்கட்டான காலங்களில், யெகோவாவால் கைவிடப்பட்டவர்களாக நாங்கள் ஒருபோதும் உணர்ந்ததில்லை.
நடுநிலை வகிப்பு பிரச்சினையின்பேரில் சோதிக்கப்பட்டது
போர் 1945-ல் முடிவடைந்தபோதிலும், எங்கள் இக்கட்டுகள் தொடர்ந்தன, இன்னுமதிகமாகவும் மோசமாயின. 1946, டிசம்பர் 2-ன் தேர்தலின்போது ஓட்டுகள் போடுவது வலுக்கட்டாய செயலாக்கப்பட்டது. அதற்கு விலகியிருக்க தைரியம் கொள்ளும் எவனும் அரசாங்கத்தின் சத்துருவாகக் கருதப்பட்டான். “நாங்கள் என்ன செய்வது?” என்று எங்கள் பர்மெட் சபையிலுள்ளோர் கேட்கத் தொடங்கினர்.
“நீங்கள் யெகோவாவில் நம்பிக்கை வைத்தால், என்ன செய்வதென்று என்னை நீங்கள் கேட்க வேண்டியதில்லலை. யெகோவாவின் ஜனங்கள் நடுநிலை வகிப்போரென ஏற்கெனவே அறிந்திருக்கிறீர்கள். அவர்கள் இந்த உலகத்தின் பாகமானவர்கள் அல்லர்,” என்று நான் பதிலளித்தேன்.—யோவான் 17:16.
தேர்தல் நாள் வந்தது, அரசாங்கப் பிரதிநிதிகள் எங்கள் வீட்டுக்கு வந்தார்கள். அவர்கள் அமைதியாகப் பேசத் தொடங்கி, “நாம் ஒரு கப் காப்பி அருந்திக்கொண்டே பேசலாம். இன்று என்ன நாள் என்று உங்களுக்குத் தெரியுமா?” என்றனர்.
“ஆம், இன்று தேர்தல்கள் நடத்தப்படுகின்றன,” என்று நான் பதிலளித்தேன்.
“நீங்கள் சீக்கிரமாகப் புறப்பட வேண்டும் அல்லது பிந்திவிடுவீர்கள்,” என்று ஓர் அதிகாரி சொன்னார்.
“இல்லை, நான் போகத் திட்டமிடவில்லை. எங்கள் ஓட்டு யெகோவாவுக்கே,” என்று நான் பதிலளித்தேன்.
“சரி, அப்படியானால் எதிர்ப்புக் கட்சிக்காக வந்து ஓட்டு போடும்.”
யெகோவாவின் சாட்சிகள் முழுமையாக நடுநிலை வகிப்பவர்கள் என்பதை நான் விளக்கினேன். எங்கள் நிலை நன்றாகத் தெரியவந்தபோது, எங்கள்மீது மேலும் அதிக வற்புறுத்தல் நடவடிக்கை எடுக்கப்பட்டது. நாங்கள் கூட்டங்கள் நடத்துவதை நிறுத்தும்படி கட்டளையிட்டனர், ஆகையால் இரகசியமாய்க் கூடுவதற்குத் தொடங்கினோம்.
எங்கள் சொந்த கிராமத்துக்குத் திரும்புதல்
1947-ல் என் குடும்பமும் நானும் எம்ப்ரெஷ்டானுக்குத் திரும்பினோம். அதற்குச் சிறிது பின்னால், டிசம்பரில் கடும் குளிரான பிற்பகல் ஒன்றில், சிகுரிமியின் (இரகசிய போலீஸின்) அலுவலகத்துக்கு வரும்படி அழைக்கப்பட்டேன். “நான் ஏன் உன்னை அழைத்தேனென்று உனக்குத் தெரியுமா?” என்று அந்த அதிகாரி கேட்டார்.
“எனக்கு விரோதமாய்க் குற்றச்சாட்டுகளை நீர் கேட்டிருப்பதனால் என்று நான் நினைக்கிறேன்,” என பதிலளித்தேன். “ஆனால், உலகம் உங்களைப் பகைக்கும் என்று பைபிள் சொல்லுகிறது, ஆகையால் குற்றச்சாட்டுகள் எனக்கு ஆச்சரியமுண்டாக்குகிறதில்லை.”—யோவான் 15:18, 19.
“பைபிளைப் பற்றி என்னிடம் பேசாதே,” என்று அவர் சீறிவிழுந்து, “உன் தலை தெறிக்க வைப்பேன்,” என்றார்.
அந்த அதிகாரியும் அவருடைய ஆட்களும் சென்றுவிட்டனர், ஆனால் நான் குளிரில் நிற்கும்படி கட்டளையிடப்பட்டேன். சிறிது நேரத்துக்குப் பின் அவர் என்னைத் தன் அலுவலகத்துக்குள் திரும்ப வரும்படி அழைத்து, எங்கள் வீட்டில் கூட்டங்கள் நடத்துவதை நிறுத்தும்படி கட்டளையிட்டார். “உன் கிராமத்தில் எத்தனை பேர் வாழ்கிறார்கள்?” என்று அவர் கேட்டார்.
“நூற்று இருபது,” என்றேன்.
“அவர்கள் என்ன மதத்தினர்?”
“அல்பேனிய ஆர்த்தடாக்ஸ்.”
“நீ?”
“நான் யெகோவாவின் சாட்சிகளில் ஒருவன்.”
“நூற்றிருபது ஆட்கள் ஒரு வழியில் செல்கின்றனர், நீ இன்னொன்றில் செல்கிறாயா?” பின்பு சர்ச்சில் மெழுகுவர்த்திகள் கொளுத்தும்படி எனக்குக் கட்டளையிட்டார். நான் அதைச் செய்ய மாட்டேன் என்று சொன்னபோது, அவர் என்னை ஒரு தடியால் அடிக்கத் தொடங்கினார். நான் கடைசியாக விடுதலை செய்யப்பட்டபோது ஏறக்குறைய காலை ஒரு மணி.
பிரசுரங்கள் வருவது நிறுத்தப்பட்டது
இரண்டாம் உலகப் போர் முடிந்தபோது, மறுபடியும் தபால் மூலமாய் காவற்கோபுரம் பெற்றுக்கொள்ளத் தொடங்கினோம். ஆனால், முடிவில் இந்தப் பத்திரிகைகள் அதற்கு மேலும் கொடுக்கப்படவில்லை. பின்பு, ஓர் இரவு பத்து மணிக்கு, இரகசிய காவல் துறையினர், நான் வரும்படி எனக்குக் கட்டளையிட்டனர். “கிரேக்கில் ஒரு பத்திரிகை வந்திருக்கிறது, அது எதைப் பற்றியது என்பதையெல்லாம் நீ விளக்கிக் கூறும்படி நாங்கள் விரும்புகிறோம்,” என்று என்னிடம் சொன்னார்கள்.
“எனக்கு கிரேக்கு மிக நன்றாய்த் தெரியாது,” என்று நான் சொன்னேன். “என் அயலகத்தாருக்கு என்னைவிட நன்றாய்த் தெரியும். ஒருவேளை அவர் உங்களுக்கு உதவி செய்யக்கூடும்,” என்றேன்.
“இல்லை, நீயே இதை விளக்கும்படி நாங்கள் விரும்புகிறோம்,” என்று, ஓர் அதிகாரி சில கிரேக்க மொழியில் காவற்கோபுரம் பிரதிகளை உறையிலிருந்து வெளியில் இழுத்துக்கொண்டு சொன்னார்.
“ஓ, இவை என்னுடையவை!” என்று வியப்போடு கூறினேன். “நிச்சயமாகவே, இதை நான் விளக்கக்கூடும். பாருங்கள், இந்தப் பத்திரிகைகள் புருக்லின், நியூ யார்க்கிலிருந்து வருகின்றன. அங்கேதான் யெகோவாவின் சாட்சிகளுடைய தலைமை அலுவலகம் இருக்கிறது. நான் யெகோவாவின் சாட்சிகளில் ஒருவன். ஆனால், விலாசத்தில் அவர்கள் ஏதோ தவறு செய்திருப்பதுபோல் தெரிகிறது. இந்தப் பத்திரிகைகள், உங்களுக்கல்ல, எனக்கே அனுப்பப்பட்டிருக்க வேண்டும்,” என்றேன்.
அவர்கள் அந்தப் பத்திரிகைகளை எனக்குக் கொடுக்கவில்லை, மேலும் அந்தச் சமயத்திலிருந்து, 40 ஆண்டுகளுக்குப் பின் வரையான, 1991 வரையில், அல்பேனியாவில் பைபிள் பிரசுரங்கள் எதையும் நாங்கள் பெறவில்லை. அந்த ஆண்டுகளின்போதெல்லாம், எங்கள் பைபிள்களை மாத்திரம் பயன்படுத்தி நாங்கள் தொடர்ந்து பிரசங்கித்து வந்தோம். 1949-ல் ஏறக்குறைய 20 சாட்சிகள் சிறைச்சாலையில் இருந்தனர்; சிலருக்கு ஐந்து-ஆண்டு தீர்ப்புகள் அளிக்கப்பட்டிருந்தன.
இக்கட்டுகள் அதிகரிக்கின்றன
1950-களில், ஆட்கள் இராணுவத்தைத் தாங்கள் ஆதரித்தனரென்று காட்டும் ஆவணம் ஒன்றைக் கையில் கொண்டு செல்லும்படி கட்டளையிடப்பட்டனர். ஆனால் யெகோவாவின் சாட்சிகள் அத்தகைய ஆவணங்களைக் கொண்டு செல்ல மறுத்தனர். இதனிமித்தம், சகோதரர் கோமினோவும் நானும் இன்னும் இரண்டு மாதங்கள் ஜெயிலில் செலவிட்டோம்.
சில மதங்கள் இருப்பதை அரசாங்கம் அனுமதித்த அந்தச் சமயத்தின்போது, எங்களுக்கு ஓரளவு சுயாதீனம் இருந்தது. எனினும், 1967-ல் எல்லா மதத்துக்கும் தடையுத்தரவு போடப்பட்டு, அல்பேனியா அதிகாரப்பூர்வமாய் முற்றிலும் நாத்திக நாடாக்கப்பட்டது. சாட்சிகள் தொடர்ந்து கூட்டங்கள் நடத்த முயற்சி செய்தனர், ஆனால் அது மிகக் கடினமாயிற்று. எங்களில் சிலர், ஒரு சிறிய பைபிளை நாங்கள் ஒளித்து வைக்கக்கூடும்படி, எங்கள் மேற்சட்டை உள்ளுறைக்குள் ஒரு தனிப்பட்ட சட்டைப் பையைத் தைத்துக் கொண்டோம். பின்பு அதை வாசிக்க ஒரு வயல்வெளிக்குள் செல்வோம்.
டிரானாவிலிருந்த சாட்சிகள் பைபிளை வாசிப்பது கண்டுபிடிக்கப்பட்டு, அவர்களில் மூவர், நெடும் தொலைவிலிருந்த கடும் உழைப்பு முகாம்களுக்கு ஐந்து ஆண்டுகள் அனுப்பப்படும்படி தீர்ப்பளிக்கப்பட்டனர். இதன் விளைவாக அவர்களுடைய குடும்பங்கள் துன்பமனுபவித்தன. தூரத் தனி இடங்களிலிருந்த சிறிய கிராமங்களிலிருந்து வந்தவர்களான எங்களில் சிலர், வினைமையான பயத்துக்கேதுவானவர்கள் அல்லரென்று கருதப்பட்டதால் அனுப்பப்படவில்லை. ஆனால் எங்கள் நடுநிலை வகிப்பு, உணவு பெறுவோர் பெயர்ப் பட்டியலிலிருந்து எங்கள் பெயர்களை நீக்குவதற்கு வழிநடத்தினது. ஆகையால், வாழ்க்கை மிகக் கடினமாயிருந்தது. மேலும், எங்கள் பிள்ளைகளில் இன்னும் இருவர் இறந்தனர். எனினும் யெகோவாவால் கைவிடப்பட்டவர்களாக நாங்கள் ஒருபோதும் உணரவில்லை.
அல்பேனியாவில் பயம் வியாபித்திருந்தது. ஒவ்வொருவருடைய நடவடிக்கையும் கவனிக்கப்பட்டது, ஆளும் கட்சியின் கருத்துக்கு வேறுபட்ட ஒன்றைச் சொல்ல தைரியம் கொள்கிற எவரின்பேரிலும் இரகசிய காவலாளர் அறிக்கைகளை எழுதினார்கள். ஆகையால் எங்கள் நடவடிக்கையைப் பற்றி எழுதப்பட்ட அறிவிப்புகள் செய்வதைக் குறித்ததில் நாங்கள் மிக எச்சரிக்கையாக இருந்தோம். ஆவிக்குரிய ஊக்கமூட்டுதலுக்காக, இரண்டு அல்லது மூன்று பேருக்கு மேலான தொகுதிகளில் நாங்கள் ஒன்றுகூட முடியாதவர்களாக இருந்தோம். இருப்பினும், பிரசங்கிப்பதை நாங்கள் ஒருபோதும் நிறுத்தவில்லை.
சகோதரருக்குள் குழப்பத்தை உண்டாக்கும்படி முயற்சி செய்து, இரகசிய காவலர், டிரானாவில் முதன்மையான சாட்சியாயிருந்த ஒருவரை வேவு பார்ப்பவரென்று கூறி ஒரு வதந்தியை பரப்பினர். இது, சிலரை நம்பிக்கை இழக்கும்படி செய்து எங்கள் ஒற்றுமையை ஒருவாறு குலைத்தது. புதிதாக வெளியிடப்பட்ட பைபிள் பிரசுரங்கள் எதுவும் இல்லாததாலும், யெகோவாவின் காணக்கூடிய அமைப்போடு தொடர்பு இல்லாததாலும், சிலர் பயத்துக்காளானார்கள்.
கூடுதலாக, அல்பேனியாவில் உயர்வாய் மதிக்கப்பட்ட கிறிஸ்தவ மூப்பரான ஸ்பிரோ வ்ருஹோ, தற்கொலை செய்துகொண்டாரென்ற வதந்தியை அதிகாரிகள் பரவச் செய்தனர். “பாருங்களே, வ்ருஹோவும்கூட விட்டுவிட்டார்,” என்று அவர்கள் கூறினர். சகோதரர் வ்ருஹோ உண்மையில் கொலை செய்யப்பட்டிருந்தாரென பின்னால் தெரியவந்தது.
1975-ல், அர்ஜீரோவும் நானும் டிரானாவில் எங்கள் மகனுடன் சில மாதங்கள் தங்கியிருந்தோம். தேர்தல் சமயத்தின்போது, அந்தப் பட்டணத்தில் அதிகாரிகள்: “நீங்கள் ஓட்டு போடாவிட்டால், உங்கள் மகனை வேலையிலிருந்து நீக்கிவிடுவோம்,” என்று பயமுறுத்தி எங்களை வற்புறுத்தினார்கள்.
“என் மகன் தன் வேலையில் 25 ஆண்டுகள் இருந்திருக்கிறான்,” என்று நான் சொல்லி, “அவனையும் அவனுடைய குடும்பத்தையும் பற்றிய நுட்பவிவரமான தனிப்பட்ட பதிவுகள் உங்களிடம் இருக்கிறது. நான் கடந்த 40 ஆண்டுகளுக்கு மேலாக ஓட்டு போட்டது கிடையாது. இந்தத் தகவல் பொதுவாய் ஆளின் தனிப்பட்ட பதிவுகளில் இருக்கும். இல்லையெனில், உங்கள் பதிவுகள் ஒழுங்காயில்லை. உங்கள் பதிவுகளில் இருந்தால், அவனை இத்தனை ஆண்டுகள் வேலை செய்ய அனுமதித்ததன்மூலம் நீங்கள் உங்கள் கட்சிக்கு உண்மையற்றவர்களாக இருந்திருக்கிறீர்கள்,” என்றேன். இதைக் கேட்டபோது, அந்த அதிகாரிகள், நாங்கள் எம்ப்ரெஷ்டானுக்குத் திரும்பிச் சென்றுவிட்டால், இந்தப் பிரச்சினையைத் தாங்கள் வற்புறுத்தமாட்டார்களென்று சொன்னார்கள்.
திடீர் மாற்றங்கள்
1983-ல் நாங்கள் எம்ப்ரெஷ்டானிலிருந்து லாக் பட்டணத்துக்கு மாறிச் சென்றோம். அதற்குச் சிறிது பின்பு, 1985-ல், சர்வாதிகாரி இறந்துவிட்டார். 1946-ல் சட்டப்படி கடமைப்படுத்தப்பட்ட அந்த முதல் தேர்தல் முதற்கொண்டு அவர் ஆட்சி செய்திருந்தார். டிரானாவில் முக்கிய சதுக்கத்தில் ஓங்கி நின்ற அவருடைய சிலையும் ஸ்டாலினுடைய சிலையும் காலப்போக்கில் விலக்கப்பட்டன.
எங்கள் ஊழியத்தின்பேரில் தடையுத்தரவு போடப்பட்டிருந்த அந்தப் பல பத்தாண்டுகளின்போது, சாட்சிகளில் பலர் கொடுமையாக நடத்தப்பட்டனர், சிலர் கொல்லப்பட்டனர். வீதியில் சாட்சிகள் சிலரிடம் ஒரு மனிதர் இவ்வாறு சொன்னார்: “கம்யூனிஸ்டுகளின் அந்தக் காலத்தின்போது, நாங்கள் எல்லாரும் கடவுளை விட்டு விலகிப் போய்விட்டிருந்தோம். யெகோவாவின் சாட்சிகள் மாத்திரமே, கடும் சோதனைகளுக்கும் இக்கட்டுகளுக்கும் மத்தியிலும் அவருக்கு உண்மையுள்ளவர்களாக நிலைத்திருந்தனர்.”
மேலும் அதிக சுயாதீனம் அளிக்கப்பட்டபோது, ஜூன் 1991-ல் ஒன்பது பேர் கிறிஸ்தவ ஊழிய நடவடிக்கையை அறிக்கை செய்தனர். தடையுத்தரவு நீக்கப்பட்ட ஒரு மாதத்துக்குப் பின்பு, ஜூன் 1992-ல் 56 பேர் பிரசங்க ஊழியத்தில் பங்கு கொண்டனர். அதற்கு முன்னால் அந்த ஆண்டில் கிறிஸ்துவின் மரண ஆசரிப்புக்கு 325 பேர் வந்திருந்ததைக் குறித்து நாங்கள் மிகுந்த மகிழ்ச்சியடைந்தோம். அப்போது முதற்கொண்டு, பிரசங்கிப்போரின் எண்ணிக்கை, 600-க்கு மேலாகப் பெருகிவிட்டது. 1995, ஏப்ரல் 14-ல் நினைவு நாள் ஆசரிப்புக்கு மொத்தம் 3,491 பேர் வந்திருந்தனர்! சமீப ஆண்டுகளில், இளைஞர் பலர் எங்கள் சபைகளில் சேர்க்கப்பட்டிருப்பதைக் காண்பது எனக்கு விவரிக்கமுடியாத சந்தோஷமாக இருந்திருக்கிறது.
அர்ஜீரோ யெகோவாவுக்கு உண்மையுள்ளவளாக நிலைத்திருக்கிறாள், இந்தப் பல ஆண்டுகளிலெல்லாம் என்னிடம் பற்றுறுதியுள்ளவளாக இருந்துவந்திருக்கிறாள். நான் சிறைச்சாலையில் இருந்தபோது அல்லது பிரசங்க ஊழியத்தில் பயணப்பட்டபோது, அவள் குறைகூறாமல், எங்கள் குடும்பத்தின் தேவைகளைப் பொறுமையுடன் கவனித்து வந்தாள். 1993-ல் எங்கள் மகன்களில் ஒருவனும் அவனுடைய மனைவியும் முழுக்காட்டப்பட்டார்கள். அது எங்களுக்கு மகிழ்ச்சியுண்டாக்கினது.
கடவுளுடைய ராஜ்யத்தின் சார்பாக மட்டுமே
அல்பேனியாவில் யெகோவாவின் அமைப்பு அவ்வளவு நன்றாய் ஒன்றுபட்டு ஆவிக்குரிய செழுமையை அனுபவிப்பதைக் காண்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். வெகு காலத்துக்கு முன்பாக வாக்குப்பண்ணப்பட்ட மேசியாவைத் தன் மரணத்துக்கு முன்னால் காணும் அருமையான சிலாக்கியம் அளிக்கப்பட்ட, எருசலேமிலிருந்த முதிர்வயதான சிமியோனைப்போல் நான் உணருகிறேன். (லூக்கா 2:31, 32) நான் விரும்புவது எந்த வகையான அரசாங்கமென இப்போது நான் கேட்கப்படுகையில், இவ்வாறு சொல்கிறேன்: “நான் விரும்புவது கம்யூனிஸமோ முதலாளித்துவமோ அல்ல. தேசத்தை உடையவர்கள் மக்களா அரசாங்கமா என்பது முக்கியமானதல்ல. அரசாங்கங்கள் பாதைகளை அமைக்கின்றன, தொலைதூரத்திலுள்ள கிராமங்களுக்கு மின்சாரம் கொண்டுவருகின்றன, மற்றும் ஓரளவான ஒழுங்கை ஏற்பாடு செய்கின்றன. எனினும், அல்பேனியாவையும் மீதியான உலகம் முழுவதையும்கூட எதிர்ப்படுகிற கடினமான பிரச்சினைகளுக்கு ஒரே பரிகாரம், யெகோவாவின் அரசாங்கமே, அவருடைய பரலோக ராஜ்யமேயாகும்.
கடவுளுடைய ராஜ்யத்தைப்பற்றி பிரசங்கிப்பதில் கடவுளுடைய ஊழியர்கள் உலகமெங்கும் செய்து வருவது எந்த மனிதனுக்குமுரிய வேலையல்ல. இது கடவுளுடைய வேலை. நாம் அவருடைய ஊழியர்கள். அல்பேனியாவில் எங்களுக்குப் பல இக்கட்டுகள் இருந்திருக்கிறபோதிலும் மற்றும் யெகோவாவின் காணக்கூடிய அமைப்பிலிருந்து வெகு காலம் தொடர்பற்று இருந்தபோதிலும், நாங்கள் ஒருபோதும் அவரால் கைவிடப்படவில்லை. அவருடைய ஆவி எப்போதும் இங்கே இருந்தது. வழியின் ஒவ்வொரு படியிலும் அவர் எங்களை வழிநடத்தினார். என் வாழ்க்கை முழுவதிலும் இதை நான் கண்டிருக்கிறேன்.