வாழ்க்கை சரிதை
“இயல்புக்கு மீறிய வல்லமையை” யெகோவா அளித்திருக்கிறார்
ஹெலன் மார்க்ஸ் சொன்னபடி
அது 1986-ல் புழுக்கமான கோடைக்காலத்தில் ஒரு நாள். தூங்கிவழியும் ஐரோப்பாவின் விமான நிலையங்கள் ஒன்றில் கஸ்டம்ஸ் ஷெட்டில் தன்னந்தனியாக காத்திருந்தேன். அது அல்பேனியாவின் தலைநகரான டிரானா. “உலகிலேயே முதல் நாத்திக நாடு” என அது தன்னை பிரகடனப்படுத்திக் கொண்டிருந்தது.
என்ன நடக்குமோ ஏது நடக்குமோ என்ற தவிப்பும், பயமும் எனக்குள் போராட்டம் நடத்த, ஆயுதம் தரித்த அதிகாரி ஒருவர் என் பெட்டியை சோதனையிட ஆரம்பிக்கையில் பார்த்துக்கொண்டிருந்தேன். ஒருவேளை அவருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தும் விதத்தில் நான் ஏதாவது செய்தாலோ சொன்னாலோ அவ்வளவுதான், என்னை நாட்டிலிருந்து வெளியேற்றிவிடுவார்கள், எனக்காக வெளியில் காத்திருப்பவர்களை சிறைச்சாலைக்கு அல்லது கட்டாய உழைப்பு முகாமுக்கு அனுப்பிவிடுவார்கள். அந்த அதிகாரிக்கு சூயிங்கம்மையும் குக்கீசையும் கொடுத்து அவரை அதிக சிநேகப்பான்மையாக ஆக்கிக்கொண்டதில் எனக்கு சந்தோஷம். ஆனால், அதுவும், கிட்டத்தட்ட 65 வயதுள்ள ஒரு பெண்ணாக நான் எப்படி இந்த சூழ்நிலைக்கு ஆளானேன்? வசதியாக வாழ்வதை விட்டுவிட்டு, மார்க்ஸ்-லெனின் கொள்கைகளுக்கு கடைசி கோட்டைக் கொத்தளமாய் விளங்கிய ஒரு நாட்டில் ராஜ்ய அக்கறைகளை விஸ்தரிப்பதற்கு ஏன் துணிந்து வந்தேன்?
சுகவீனமுள்ள பெண்ணின் மனதில் பல கேள்விகள்
கிரீட்டிலுள்ள ஈராபெட்ராவில் நான் பிறந்து இரண்டு ஆண்டுகளுக்குப் பின் 1920-ல் என் அப்பா நிமோனியா காய்ச்சல் கண்டு இறந்துவிட்டார். அம்மாவோ ஏழை, படிப்பறிவு இல்லாதவர்கள். நான்கு பிள்ளைகளில் நான்தான் கடைக்குட்டி. எனக்கு மஞ்சட்காமாலை வந்து கஷ்டப்பட்டதால் வெளிறிப்போய் சுகவீனத்தோடிருந்தேன். தன் கவனத்தையும் இருந்த கொஞ்சநஞ்ச பொருட்களையும் ஆரோக்கியமாக இருக்கும் மற்ற மூன்று பிள்ளைகளைக் கவனித்துக் கொள்வதில் செலவழித்து, என்னை அப்படியே சாகும்படி விட்டுவிட அக்கம்பக்கத்தார் என் அம்மாவுக்கு ஆலோசனை கூறினார்கள். அவர்களுடைய பேச்சை அம்மா கேட்காததற்காக நான் சந்தோஷப்படுகிறேன்.
அப்பாவின் ஆத்துமா பரலோகத்தில் இளைப்பாறுவதை உறுதிப்படுத்திக் கொள்ள அடிக்கடி அம்மா கல்லறைக்குப் போய்வருவார்கள். அங்கு ஜெப பூசைக்காக பெரும்பாலும் ஒரு ஆர்த்தடாக்ஸ் பாதிரியை ஏற்பாடு செய்வார்கள். ஆனாலும் அந்தப் பூசைகளுக்கு வசூலிக்கப்பட்ட கட்டணம் ஒன்றும் குறைவானதல்ல! கடும் குளிராயிருந்த ஒரு கிறிஸ்துமஸ் அன்று, அம்மாவோடு ஒட்டிக்கொண்டு கல்லறையிலிருந்து நடுநடுங்கிக் கொண்டு வீடு திரும்பிய நாளை என்னால் மறக்கவே முடியாது. கடைசியாக மிச்சமீதியிருந்த எங்கள் பணத்தையும் அப்போதுதான் பாதிரியாருக்குக் காணிக்கையாக தானம் செய்துவிட்டு வந்திருந்தோம். பிள்ளைகளாகிய நாங்கள் சாப்பிட கொஞ்சம் கீரைகளை அம்மா சமைத்துக் கொடுத்துவிட்டு, பட்டினியோடு, துக்கத்தால் உருண்டோடிய கண்ணீர் கன்னத்தோடு அவர்கள் மற்றொரு அறைக்குள் போய்விட்டார்கள். பிற்பாடு நான் தைரியத்தை வரவழைத்துக்கொண்டு பாதிரியிடம் போய், என் அப்பா ஏன் இறந்துவிட்டார், ஏழையாக இருக்கும் என் அம்மா ஏன் பாதிரிக்குப் பணம் கொடுக்க வேண்டும் என்று கேட்டேன். மனசாட்சி உறுத்தலால் வெட்கம் பிடுங்கித் தின்ன, “கடவுள் அவரை எடுத்துக்கொண்டார். வாழ்க்கையில் அதெல்லாம் சகஜம். போகப் போக நீ சரியாகிவிடுவாய்” என கிசுகிசுத்தார்.
பள்ளியில் கற்றிருந்த கர்த்தருடைய ஜெபத்தையும் அவருடைய பதிலையும் இணைத்துப் பார்க்க முயன்று, முடியாமல் திண்டாடினேன். அதன் அழகான, அர்த்தமுள்ள ஆரம்ப வார்த்தைகள் இன்னும் எனக்கு நினைவிருக்கின்றன: “பரமண்டலங்களிலிருக்கிற எங்கள் பிதாவே, உம்முடைய நாமம் பரிசுத்தப்படுவதாக. உம்முடைய ராஜ்யம் வருவதாக; உம்முடைய சித்தம் பரமண்டலத்திலே செய்யப்படுகிறதுபோல பூமியிலேயும் செய்யப்படுவதாக.” (மத்தேயு 6:9, 10) தம்முடைய சித்தம் பூமியில் செய்யப்பட கடவுள் விரும்பினால் நாம் ஏன் இந்தளவுக்கு கஷ்டப்பட வேண்டியிருக்கிறது?
யெகோவாவின் சாட்சிகளின் முழுநேர பிரசங்கியான இம்மானுவில் லியோனூடாகிஸ் 1929-ல் எங்கள் வீட்டுக்கு வந்தபோது கிட்டத்தட்ட அந்தக் கேள்விக்கு பதில் எனக்குக் கிடைத்ததைப் போல்தான் தோன்றியது.a அவருக்கு என்ன வேண்டும் என்று என் அம்மா கேட்டபோது, பதிலேதும் சொல்லாமல் சாட்சி கார்டு ஒன்றை இம்மானுவில் அவர்களிடம் நீட்டினார். வாசிக்கும்படி அம்மா அதை என்னிடம் கொடுத்தார்கள். அப்போது எனக்கு ஒன்பது வயதாக இருந்ததால், ஏதோ கொஞ்சம் புரிந்தது. வந்திருக்கும் பிரசங்கி ஊமை என எண்ணிய அம்மா அவரிடம், “பாவம், உங்களுக்கோ பேச முடியாது, எனக்கோ வாசிக்கத் தெரியாது” என்றார்கள். பின்பு, தயவாக வாசலைக் காட்டி போய்வரும்படி சைகை செய்தார்கள்.
சில ஆண்டுகளுக்குப் பின், என் கேள்விகளுக்கு எல்லாம் பதிலைக் கண்டுபிடித்தேன். என் அண்ணன் இம்மானுவேல் பெட்டராக்கிஸ், அதே முழுநேர ஊழியரிடமிருந்து யெகோவாவின் சாட்சிகளால் பிரசுரிக்கப்பட்ட மரித்தோர் எங்கிருக்கிறார்கள்? என்ற (ஆங்கிலம்) சிறுபுத்தகத்தைப் பெற்றார்.b அதை வாசிக்கையில் என் அப்பாவை கடவுள் எடுத்துக்கொள்ளவில்லை என்பதை அறிந்து நிம்மதி அடைந்தேன். மனித அபூரணத்தின் விளைவே மரணம் என்பதையும், பரதீஸிய பூமியில் வாழும்படி உயிர்த்தெழுப்பப்படுவதற்கு என் அப்பா காத்திருக்கிறார் என்பதையும் புரிந்துகொண்டேன்.
“இந்தப் புத்தகம் உன்னை கெடுத்து குட்டிச்சுவராக்கிவிட்டது!”
பைபிள் சத்தியம் எங்கள் கண்களைத் திறந்தது. அப்பாவுடைய பழைய பைபிள் ஒன்றை நாங்கள் கண்டெடுத்தோம், பெரும்பாலும் கணப்படுப்பின் அருகே அமர்ந்து மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் படிக்க ஆரம்பித்தோம். அந்தப் பகுதியில் பைபிளில் அக்கறை காட்டிய ஒரே இளம் பெண் நான் மட்டுமே; அதனால் உள்ளூரிலிருந்த சாட்சிகளின் ஒரு சிறிய தொகுதியினர் ஈடுபட்ட வேலைகளில் நான் சேர்த்துக் கொள்ளப்படவில்லை. இந்த மதத்தில் ஆண்களுக்கு மட்டுமே இடமுண்டு போலும் என கொஞ்ச காலத்திற்கு உண்மையில் நம்பி வந்தேன். பின்னரே அது தப்புக்கணக்கு என்பதைப் புரிந்துகொண்டேன்.
பிரசங்க ஊழியத்திடம் என் அண்ணன் காட்டிய ஆர்வம் எனக்குப் பெரும் தூண்டுகோலாய் அமைந்தது. சீக்கிரத்தில் போலீஸாரின் முழு கவனமும் முக்கியமாய் எங்கள் குடும்பத்தின் மீதே இருந்தது. இம்மானுவேலையும் பிரசுரங்களையும் தேடிக்கொண்டு இன்ன நேரம் என்றில்லாமல் இரவிலும் பகலிலும் வரத் தொடங்கினார்கள். சர்ச்சுக்குத் திரும்பும்படி எங்களை சம்மதிக்க வைப்பதற்கு ஒரு பாதிரி வந்தது எனக்கு தெளிவாக நினைவிருக்கிறது. அப்போது கடவுளுடைய பெயர் யெகோவா என்பதை பைபிளிலிருந்து இம்மானுவேல் அவருக்குக் காட்டினபோது, அந்தப் பாதிரி பைபிளைப் பிடுங்கி, கோபத்துடன் என் அண்ணனின் முகத்திற்கு முன்பாக அதை ஆட்டி, “இந்தப் புத்தகம் உன்னை கெடுத்து குட்டிச்சுவராக்கிவிட்டது!” என சீறினார்.
படையில் சேர 1940-ல் இம்மானுவேல் மறுத்தபோது, அவர் கைதுசெய்யப்பட்டு அல்பேனிய போர் முனைக்கு அனுப்பப்பட்டார். அவரோடுள்ள தொடர்பு துண்டிக்கப்பட்ட போது அவர் இறந்துவிட்டதாகவே நாங்கள் நினைத்தோம். எனினும், எதிர்பாராத விதத்தில் இரண்டு ஆண்டுகளுக்குப் பின்பு அவர் சிறையிலிருந்து எழுதிய கடிதம் எங்களுக்குக் கிடைத்தது. அவர் உயிரோடிருந்தார்! அந்தக் கடிதத்தில் அவர் குறிப்பிட்டிருந்த ஒரு பைபிள் வசனம் அன்று முதல் இன்று வரை என் மனதைவிட்டு நீங்காதளவுக்குப் பதிந்து போனது. அது: “தம்மைப்பற்றி உத்தம இருதயத்தோடிருக்கிறவர்களுக்குத் தம்முடைய வல்லமையை விளங்கப்பண்ணும்படி, கர்த்தருடைய [யெகோவாவின்] கண்கள் பூமியெங்கும் உலாவிக்கொண்டிருக்கிறது.” (2 நாளாகமம் 16:9) இப்படிப்பட்ட ஊக்குவிப்பு எங்களுக்கு எவ்வளவாக தேவைப்பட்டது!
சிறையிலிருக்கையில், என்னைப் போய் சந்திக்கும்படி சில சகோதரர்களிடம் இம்மானுவேலால் சொல்ல முடிந்தது. உடனடியாக, அந்தப் பட்டணத்திற்கு வெளியே இருந்த ஒரு பண்ணை வீட்டில் இரகசிய கிறிஸ்தவக் கூட்டங்கள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது. நாங்கள் கண்காணிக்கப்படுவதை துளியும் அறியாதிருந்தோம்! ஒரு ஞாயிற்றுக்கிழமை அன்று, ஆயுதம் தரித்த போலீஸார் எங்களைச் சுற்றி வளைத்துக்கொண்டார்கள். திறந்தவெளி டிரக் ஒன்றில் எங்களை ஏற்றி, அந்த நகரம் எங்கும் ஊர்வலமாக அழைத்துச் சென்றார்கள். ஜனங்கள் எங்களைப் பார்த்து கேலி கிண்டல் செய்து சிரித்ததும், ஏளனமாக பேசியதும் இன்னும் என் காதுகளில் ஒலித்துக்கொண்டிருக்கின்றன. ஆனால் யெகோவா தம்முடைய ஆவியின் மூலம் எங்களுக்கு மன சமாதானத்தைத் தந்தார்.
நாங்கள் மற்றொரு நகரத்திற்கு மாற்றப்பட்டு, அங்கே கும்மிருட்டான, அழுக்கடைந்த சிறை அறைகளில் தள்ளப்பட்டோம். மூடப்படாத ஒரு பக்கெட்டுதான் என் சிறை அறையிலிருந்த கழிப்பிடம். அதுவும் ஒரு நாளுக்கு ஒரு முறைதான் அப்புறப்படுத்தப்படும். என்னை அந்தத் தொகுதியின் “ஆசிரியை”யாக கருதியதால் எனக்கு எட்டு மாத சிறை தண்டனை விதித்தார்கள். எனினும், அங்கு சிறைப்பட்டிருந்த ஒரு சகோதரன், எங்கள் வழக்கை ஏற்று நடத்தும்படி அவருடைய வழக்கறிஞரை ஏற்பாடு செய்தார். அவர் எங்களுடைய விடுதலைக்கு வழிசெய்தார்.
புதியதோர் வாழ்க்கை
இம்மானுவேல் சிறையிருப்பிலிருந்து விடுதலை செய்யப்பட்ட பின்பு பயணக் கண்காணியாக ஆதன்ஸிலிருந்த சபைகளைச் சந்திக்க ஆரம்பித்தார். 1947-ல் நானும் அங்கு குடிமாறினேன். கடைசியாக சாட்சிகளின் ஒரு பெரும் தொகுதியை, ஆண்கள் மட்டுமல்ல, பெண்களும் பிள்ளைகளும் அடங்கிய தொகுதியை சந்தித்தேன். இறுதியில், ஜூலை 1947-ல், யெகோவாவுக்கு என் ஒப்புக்கொடுத்தலை தண்ணீர் முழுக்காட்டுதல் மூலம் வெளிப்படுத்தினேன். அடிக்கடி மிஷனரி ஆவதைப் பற்றியே கனவு கண்டுகொண்டிருந்தேன். ஆகவே ஆங்கிலம் கற்றுக்கொள்ள மாலை நேர வகுப்புகளில் சேர்ந்து பயின்றேன். 1950-ல் பயனியரானேன். என்னோடு தங்குவதற்கு அம்மா வந்தார்கள். அவர்களும் பைபிள் சத்தியத்தை ஏற்றுக்கொண்டார்கள். 34 ஆண்டுகளுக்குப் பின்பு இறக்கும் வரை அவர்கள் யெகோவாவின் சாட்சியாகவே இருந்தார்கள்.
அதே ஆண்டில், ஜான் மார்க்ஸ் (மார்க்கபூலாஸ்) என்பவரை சந்தித்தேன். ஐக்கிய மாகாணங்களைச் சேர்ந்த மதிப்புமிக்க, ஆவிக்குரிய மனிதர் அவர். ஜான் தெற்கு அல்பேனியாவில் பிறந்தவர், ஐக்கிய மாகாணங்களுக்கு குடியேறிய பின்பு அவர் யெகோவாவின் சாட்சியானார். 1950-ல், அல்பேனியாவுக்கு செல்ல விசா பெறுவதற்காக கிரீஸ் வந்திருந்தார். அந்த சமயத்தில் அல்பேனியா அந்நியரையோ அந்நிய செல்வாக்கையோ அனுமதிக்காதளவுக்கு அதிக கட்டுப்பாடுமிக்க கம்யூனிஸ நாடாக இருந்தது. 1936-லிருந்து ஜான் தன் குடும்பத்தாரைப் பார்க்காதபோதிலும் அல்பேனியாவுக்குள் காலடியெடுத்து வைக்க அவர் அனுமதிக்கப்படவில்லை. அவர் யெகோவாவின் சேவையிடம் காட்டிய கட்டுக்கடங்கா ஆர்வத் தையும் சகோதரர்களிடம் காட்டிய ஆழமான அன்பையும் கண்டு நெகிழ்ந்து போனேன். 1953, ஏப்ரல் 3-ம் தேதி நாங்கள் மணமுடித்தோம். பின்பு, அ.ஐ.மா., நியூ ஜெர்ஸியிலுள்ள எங்கள் புதிய வீட்டில் அவருடன் குடிபுகுந்தேன்.
முழுநேர ஊழியத்தில் எங்களை பராமரித்துக் கொள்வதற்காக ஜானும் நானும் நியூ ஜெர்ஸி கடற்கரையோரத்தில் மீனவர்களுக்கு காலை உணவு தயாரித்து விற்கும் சிறிய தொழிலை நடத்தி வந்தோம். கோடைகால மாதங்களில் மட்டுமே நாங்கள் விடியலிலிருந்து காலை 9:00 மணி வரை வேலை செய்தோம். எங்கள் வாழ்க்கையை எளிமையாக வைத்துக்கொண்டு, ஆவிக்குரிய காரியங்களுக்கு முதலிடம் கொடுப்பதன் மூலம், எங்கள் பெரும்பாலான நேரத்தை பிரசங்க ஊழியத்தில் செலவிட்டோம். கடந்துசென்ற ஆண்டுகளில், பிரசங்கிப்போர் அதிகமாக தேவைப்பட்ட பல்வேறு நகரங்களுக்கு செல்லும்படி நாங்கள் அனுப்பப்பட்டிருக்கிறோம். அங்கு யெகோவாவின் உதவியுடன் ஆர்வம் காட்டுபவர்களுக்கு கைகொடுத்திருக்கிறோம், சபைகளை ஸ்தாபிக்க தோள்கொடுத்திருக்கிறோம், ராஜ்ய மன்றங்களைக் கட்ட உதவிக்கரம் நீட்டியிருக்கிறோம்.
தேவையிலிருக்கும் நம் சகோதரருக்கு உதவுதல்
எனினும், சீக்கிரத்தில் கிளர்ச்சியூட்டும் வேலை எங்களுக்கு காத்திருந்தது. நம்முடைய ஊழியம் தடை செய்யப்பட்டிருந்த பால்கன் நாடுகளிலுள்ள சக கிறிஸ்தவர்களுடன் தொடர்பை ஸ்தாபிக்க பொறுப்புள்ள சகோதரர்கள் விரும்பினார்கள். அந்த நாடுகளிலிருந்த யெகோவாவின் சாட்சிகள், மற்ற நாடுகளிலிருந்த சகோதரர்களுடன் வருடக்கணக்காக எந்தத் தொடர்பும் இல்லாதிருந்தார்கள்; பெரும்பாலும் ஆவிக்குரிய உணவுக்கே வழியில்லாமல் கொடூரமான எதிர்ப்பை சகித்து வந்தார்கள். அவர்களில் பெரும்பான்மையோர் எப்போதும் கண்காணிக்கப்பட்டார்கள், பலர் சிறைச்சாலையில் அல்லது உழைப்பாளர் முகாம்களில் சிக்கித் தவித்தார்கள். பைபிள் பிரசுரங்களும், வழிநடத்துதலும், ஊக்குவிப்பும் அவர்களுக்கு அவசரமாக தேவைப்பட்டன. உதாரணமாக, சங்கேத மொழியில் அல்பேனியாவிலிருந்து நாங்கள் பெற்ற ஒரு செய்தி இதுவே: “எங்களுக்காக கர்த்தரிடம் ஜெபியுங்கள். வீடுவீடாக புகுந்து புத்தகங்கள் பறிமுதல் செய்யப்படுகின்றன. அவர்கள் எங்களை படிக்க அனுமதிப்பதில்லை. மூவர் சிறையில்.”
இதனால், அந்த நாடுகள் சிலவற்றைச் சந்திப்பதற்காக நவம்பர் 1960-ல் எங்கள் ஆறு மாத கால பயணத்தை மேற்கொண்டோம். எங்கள் ஊழியத்தை செய்து முடிக்க “இயல்புக்கு மீறிய வல்லமை”யும் கடவுள் அருளும் தைரியமும், துணிவும், சாமர்த்தியமும் எங்களுக்குத் தேவை என்பது தெளிவாயிருந்தது. (2 கொரிந்தியர் 4:7, NW) எங்கள் பயணத்தில் முதலாவது நாங்கள் செல்லவிருந்த நாடு அல்பேனியா. பாரிஸில் ஒரு காரை வாங்கி அதில் புறப்பட்டோம். ரோமை அடைந்ததும், அல்பேனியா செல்ல ஜானுக்கு மட்டுமே விசா கிடைத்தது. நானோ கிரீஸிலுள்ள ஆதன்ஸுக்குப் போய் அவருக்காக காத்திருக்க வேண்டியிருந்தது.
1961, பிப்ரவரி முடிவில் ஜான் அல்பேனியாவுக்கு போய் மார்ச் மாதம் முடியும் வரை அங்கிருந்தார். டிரானாவில் 30 சகோதரர்களை தனிப்பட்ட விதத்தில் சந்தித்தார். பெரிதும் தேவைப்பட்ட பிரசுரங்களையும் உற்சாகத்தையும் பெற்றுக்கொண்டதில் அவர்கள் எவ்வளவாய் பூரித்துப்போனார்கள்! 24 ஆண்டுகளாக வேறு எங்கிருந்தும் சகோதரர்கள் வந்து அவர்களை சந்திக்கவில்லை.
அந்தச் சகோதரர்களுடைய உத்தமத்தன்மையும் சகிப்புத்தன்மையும் ஜானின் மனதைத் தொட்டது. கம்யூனிஸ நாட்டின் நடவடிக்கைகளில் பங்குகொள்ளாததனால் சகோதரர்கள் பலர் தங்கள் வேலைகளை இழந்திருந்ததையும் சிறைப்பட்டிருந்ததையும் அவர் அறிந்துகொண்டார். முக்கியமாய், 80-க்கும் அதிக வயதிலிருந்த சகோதரர்கள் இருவர் பிரசங்க ஊழியத்திற்காக சுமார் 5,000 ரூபாயை அவரிடம் கொடுத்தபோது அவர் நெகிழ்ந்துபோனார். அற்பசொற்பமாக கிடைத்த தங்கள் அரசாங்க ஓய்வூதியத்திலிருந்து குருவி சேர்க்கிற மாதிரி கொஞ்சம் கொஞ்சமாக அதை சேமித்து வைத்திருந்தார்கள்.
1961, மார்ச் 30-ம் தேதி வரை ஜான் அல்பேனியாவில் தங்கியிருந்தார்; அது, இயேசுவின் மரண நினைவு ஆசரிப்பு நாளாக இருந்தது. கூடியிருந்த 37 பேருக்கு நினைவு ஆசரிப்பு பேச்சை ஜான் கொடுத்தார். பேச்சு முடிந்ததும் சகோதரர்கள் பின் பக்க வாசல் வழியாக சீக்கிரத்தில் ஜானை அழைத்துக் கொண்டு, வண்டியில் ஏற்றி, டூரஸ் துறைமுகத்திற்குக் கொண்டு சென்றார்கள்; அங்கு கிரீஸிலுள்ள பிரேயஸுக்குச் செல்லும் துருக்கி வியாபாரக் கப்பலில் அவரை ஏற்றிவிட்டார்கள்.
அவர் பத்திரமாய் திரும்பி வந்ததில் எனக்கு மகிழ்ச்சி. இப்போது நாங்கள் சேர்ந்தே மீதமுள்ள இடங்களுக்கு செல்லும் எங்கள் ஆபத்துமிக்க பயணத்தை தொடரலாம். எங்கள் பயணத்தில் ஊழியம் தடை செய்யப்பட்டிருந்த வேறு மூன்று பால்கன் நாடுகளுக்கு சென்றோம். பைபிள் பிரசுரங்களையும், டைப்ரைட்டர்களையும், மற்ற பொருட்களையும் சுமந்துகொண்டு சென்றதால் பயணம் ஆபத்தானதாகவே இருந்தது. யெகோவாவுக்காக தங்கள் வேலைகளையும், சுதந்திரத்தையும், உயிரையும்கூட பணயம் வைக்க தயாராக இருந்த உண்மைத்தன்மை மிக்க சில சகோதர சகோதரிகளைச் சந்திக்கும் விசேஷ பாக்கியம் எங்களுக்குக் கிடைத்தது. அவர்களுடைய ஆர்வமும் உண்மையான அன்பும் தூண்டுதலளிப்பவையாய் இருந்தன. “இயல்புக்கு மீறிய வல்லமை”யை யெகோவா அளித்திருந்ததைக் கண்டும் பிரமித்துவிட்டோம்.
எங்கள் பயணத்தை வெற்றிகரமாய் முடித்துக் கொண்டு ஐக்கிய மாகாணங்களுக்குத் திரும்பினோம். பின்னான ஆண்டுகளில், அல்பேனியாவுக்கு பிரசுரங்களை அனுப்புவதற்கும் நம் சகோதரர்களின் வேலைகளைப் பற்றிய அறிக்கைகளைப் பெறுவதற்கும் தொடர்ந்து பல்வேறு வழிகளைப் பயன்படுத்தி வந்தோம்.
அநேக பிரயாணங்களிலும், மோசங்களிலும்
ஆண்டுகள் உருண்டோடின. 1981-ல் ஜான் தன் 76 வயதில் இறந்த பின் நான் தனிமரமானேன். அப்போது முதல் என் அக்கா மகள் இவாங்கிலியாவும் அவளுடைய கணவர் ஜார்ஜ் ஓர்ஃபனிடிஸும், அன்போடு என்னை அவர்களுடன் வைத்துக் கொண்டார்கள்; தொடர்ந்து உணர்ச்சி சம்பந்தமாகவும் நடைமுறையான விதத்திலும் மதிப்புமிக்க ஆதரவை அளித்து வருகிறார்கள். சூடானில் தடையுத்தரவின்கீழ் சேவை செய்கையில் அவர்களே யெகோவாவின் ஆதரிக்கும் கரங்களை கண்கூடாக கண்டிருக்கிறார்கள்.c
முடிவில், அல்பேனியாவிலிருந்த நம் சகோதரர்களுடன் தொடர்பு கொள்ள ஒரு புதிய முயற்சி மேற்கொள்ளப்படவிருந்தது. என்னுடைய கணவரின் உறவினர்கள் அங்கு வாழ்ந்ததால், அந்த நாட்டுக்கு போய் வர முடியுமா என்று என்னைக் கேட்டார்கள். என் சம்மதத்தைத் தெரிவித்தேன்!
பல மாத விடா முயற்சிக்குப் பின்பு, 1986 மே மாதத்தில் ஆதன்ஸிலிருக்கும் அல்பேனிய தூதரகத்திலிருந்து என் விசாவைப் பெற்றுக்கொண்டேன். எக்குத்தப்பாக ஏதாவது நடந்தால் வேற்று நாடுகளிலிருந்து எந்த உதவியையும் நான் எதிர்பார்க்க முடியாதென்று வெளிநாட்டு அரசியல் பிரதிநிதிகள் என்னை உறுதியாய் எச்சரித்தார்கள். அல்பேனியா செல்ல விமான டிக்கெட்டுகள் வாங்க டிராவல் ஏஜென்டிடம் சென்றபோது, அவர் வாயடைத்துப் போனார். எந்தப் பயமும் என்னைத் தடுத்து நிறுத்த இடங்கொடுக்காமல் ஆதன்ஸிலிருந்து டிரானாவுக்குச் செல்லும் ஒரேவொரு வாராந்தர விமானத்தில் உடனடியாக பயணப்பட்டேன். அந்த விமானத்தில் தள்ளாடும் வயதிலிருந்த மூன்று அல்பேனியர்கள் மட்டுமே இருந்தார்கள். அவர்கள் மருத்துவ காரணங்களுக்காக கிரீஸுக்கு வந்திருந்தவர்கள்.
அந்த விமானம் தரையிறங்கியதும் கஸ்டம்ஸ் அலுவலகமாக இருந்த காலியான ஒரு ஷெட்டுக்கு அழைத்து செல்லப்பட்டேன். என் கணவருடைய தம்பியும் தங்கையும் யெகோவாவின் சாட்சிகளாக இல்லாதபோதிலும், அங்கிருந்த சில சகோதரர்களுடன் தொடர்புகொள்ளுவதில் எனக்கு உதவ முன்வந்தார்கள். நான் வந்திருந்ததை அந்தச் சமுதாயத் தலைவரிடம் அவர்கள் தெரிவிக்க வேண்டும் என்பது சட்டம். இதனால் போலீஸார் என்னை தொடர்ந்து கண்காணித்து வந்தார்கள். எனவே, நான் அவர்கள் வீட்டிலேயே இருக்கும்படியாகவும், டிரானாவில் வாழும் இரண்டு சகோதரர்களை தேடிக் கண்டுபிடித்து அவர்களே என்னிடம் அழைத்து வருவதாகவும் என் உறவினர்கள் சொன்னார்கள்.
அந்தச் சமயத்தில், அல்பேனியா முழுவதிலும், ஒப்புக்கொடுத்த சகோதரர்கள் ஒன்பது பேர் இருப்பது தெரிய வந்தது. பல ஆண்டுகளாக தடையுத்தரவும், துன்புறுத்துதலும், எந்நேரமும் கண்காணிக்கப்படுதலும் சேர்ந்து அவர்களை அதிக எச்சரிக்கையுடன் இருக்க செய்திருந்தது. அவர்களுடைய முகங்களிலோ ஏகப்பட்ட சுருக்கம். இரண்டு சகோதரர்களுக்கும் என்மீது நம்பிக்கை பிறந்த பின்பு, அவர்கள் கேட்ட முதல் கேள்வி, “காவற்கோபுர பத்திரிகைகள் எங்கே?” என்பதே. பல ஆண்டுகளாக அவர்கள் கைகளில் இருந்தவை இரண்டு பழைய புத்தகங்கள் மட்டுமே; பைபிள்கூட கிடையாது.
அப்போதைய அரசாங்கம் அவர்களுக்கு இழைத்த கொடூரமான காரியங்களைப் பற்றி அவர்கள் எல்லா விவரத்தையும் சொன்னார்கள். வரவிருந்த தேர்தலில் அரசியலில் நடுநிலை வகிக்க தீர்மானமாய் இருந்த அன்பான சகோதரர் ஒருவரைப் பற்றியும் அவர்கள் சொன்னார்கள். எல்லாமே அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் இருந்ததால் இனி அவருடைய குடும்பத்துக்கு உணவு பங்கீடு செய்யப்படாது என்பதை அவருடைய நடுநிலை வகிப்பு அர்த்தப்படுத்தியது. அவருடைய மத நம்பிக்கைகளை ஆதரிக்காவிட்டாலும் மணமாகிய அவருடைய பிள்ளைகளும், அவர்களுடைய குடும்பத்தார் உட்பட எல்லாருமே சிறையில் தள்ளப்படுவார்கள். இந்த சகோதரனின் குடும்பத்தார் பயத்தின் காரணமாக, தேர்தலுக்கு முந்திய இரவில் அவரைக் கொன்று, அவருடைய உடலை கிணற்றுக்குள் போட்டுவிட்டு, பயந்துகொண்டு அவரே தற்கொலை செய்துகொண்டதாக சொல்லிவிட்டதாக அறிக்கை செய்யப்பட்டது.
அந்த சக கிறிஸ்தவர்கள் வறுமையின் பிடியில் சிக்கித் தவித்தது நெஞ்சை பிழிவதாக இருந்தது. இருப்பினும், அவர்கள் ஒவ்வொருவருக்கும் ஆயிரம் ரூபாய் கொடுக்க நான் முயன்றபோது, “எங்களுக்கு ஆவிக்குரிய உணவு மட்டுமே வேண்டும்” என கூறி அதை ஏற்க மறுத்துவிட்டார்கள். ஜனத்தில் பெரும்பான்மையோரை நாத்திகராக்குவதில் வெற்றி கண்ட சர்வாதிபத்திய ஆட்சியின்கீழ் இந்த அருமை சகோதரர்கள் பல பத்தாண்டுகளைக் கழித்தவர்கள். ஆனால், மற்ற இடங்களிலிருந்த சாட்சிகளைப் போலவே இவர்களுடைய விசுவாசமும் திடதீர்மானமும் அசைக்க முடியாதவையாக இருந்தன. இரண்டு வாரங்களுக்குப் பின்பு அல்பேனியாவை விட்டு புறப்படுகையில், விவரிக்க முடியாத கடும் சூழ்நிலைமைகளின் மத்தியிலும் “இயல்புக்கு மீறிய வல்லமை”யை அளிக்க யெகோவாவுக்கு இருக்கும் ஆற்றல் உண்மையிலேயே என்னை கவர்ந்தது.
மறுபடியுமாக 1989-லும், 1991-லும் அல்பேனியாவுக்குச் செல்லும் பாக்கியம் பெற்றேன். மெல்ல மெல்ல பேச்சு சுதந்திரமும் மத சுதந்திரமும் அந்த நாட்டில் தலைதூக்க ஆரம்பித்த போது யெகோவாவின் வணக்கத்தாருடைய எண்ணிக்கை மளமளவென அதிகரித்தது. 1986-ல் விரல்விட்டு எண்ண முடிந்தளவுக்கு இருந்த ஒப்புக்கொடுத்த கிறிஸ்தவர்கள் இப்போது 2,200-க்கு அதிக பிரஸ்தாபிகள் என்ற நிலைக்கு உயர்ந்திருக்கிறார்கள். இவர்களுக்குள் என் கணவருடைய தங்கை மெல்பாவும் ஒருத்தி. அந்த உண்மையுள்ள தொகுதியின்மீது யெகோவாவின் ஆசீர்வாதம் இருந்ததில் ஏதாவது சந்தேகம் இருக்கிறதா என்ன?
யெகோவாவின் வல்லமையால் திருப்தியான வாழ்க்கை
கடந்த காலத்தை எண்ணிப் பார்க்கையில் ஜானும் நானும் செய்த ஊழியம் வீணாகவில்லை என்ற நம்பிக்கை உள்ளது. இளமை துடிப்புமிக்க எங்கள் காலத்தை அதிக பயனுள்ள விதத்தில் நாங்கள் செலவழித்திருக்கிறோம். முழுநேர ஊழியத்தையே வாழ்க்கையாக ஏற்று பயனடைந்ததைப் போல் வேறு எதுவும் எங்களுக்கு அந்தளவு பயனளித்திருக்காது. பைபிள் சத்தியத்தைக் கற்றுக்கொள்ள நாங்கள் உதவிய அநேக அன்புள்ளம் படைத்தவர்களைக் குறித்து சந்தோஷப்படுகிறேன். இப்போது இந்த வயதில் இளைஞருக்கு நான் சொல்ல விரும்புவதெல்லாம், ‘தங்கள் வாலிபப்பிராயத்தில் தங்கள் மகத்தான சிருஷ்டிகரை நினைக்க’ வேண்டும் என்பதே.—பிரசங்கி 12:1, NW.
எனக்கு 81 வயதானாலும் நற்செய்தியின் முழுநேர பிரஸ்தாபியாக இன்னும் என்னால் சேவை செய்ய முடிகிறது. நான் காலையிலேயே எழுந்து, பஸ் நிறுத்தங்கள், வாகன நிறுத்தங்கள், தெருக்கள், கடைகள், அல்லது பூங்காக்கள் ஆகிய இடங்களுக்குப் போய் ஆட்களுக்குச் சாட்சி கொடுக்கிறேன். வயோதிபத்திற்கே உரிய பிரச்சினைகள் என்னை ஆட்டிப்படைத்தாலும் என் அன்புள்ள ஆவிக்குரிய சகோதர சகோதரிகள் அடங்கிய என்னுடைய பெரிய ஆவிக்குரிய குடும்பமும், அதோடு என் அக்கா மகளின் குடும்பமும் பக்கபலமாய் இருந்து கவனித்துக் கொள்கிறார்கள். எல்லாவற்றிற்கும் மேலாக, ‘இயல்புக்கு மீறிய இந்த வல்லமை எங்களுடையதாக இராமல் கடவுளுடையது’ என்பதை கற்றுக்கொண்டிருக்கிறேன்.—2 கொரிந்தியர் 4:7, NW.
[அடிக்குறிப்புகள்]
a இம்மானுவில் லியோனூடாகிஸின் வாழ்க்கை சரிதையை காவற்கோபுரம், செப்டம்பர் 1, 1999, பக்கங்கள் 25-9-ல் காண்க.
b காவற்கோபுரம், நவம்பர் 1, 1996, பக்கங்கள் 22-7-ல், இம்மானுவேல் பெட்டராக்கிஸின் வாழ்க்கை சரிதையை காண்க.
[பக்கம் 25-ன் படம்]
மேலே: 1950-ல், (இடக்கோடியில்) ஜான், (மத்தியில்) நான், என் இடப்புறத்தில் என் அண்ணன் இம்மானுவேல், அவருக்கு இடப்புறத்தில் எங்கள் அம்மா மற்றும் பெத்தேல் குடும்பத்தை சேர்ந்த சிலர், ஆதன்ஸில்
[பக்கம் 25-ன் படம்]
இடது: 1956-ல், நியூ ஜெர்ஸி கடற்கரையோரத்தில் ஜானுடன் வியாபாரத்தில்
[பக்கம் 26-ன் படம்]
1995-ல் அல்பேனியாவிலுள்ள டிரானாவில் மாவட்ட மாநாடு
[பக்கம் 26-ன் படம்]
அல்பேனியாவில், டிரானாவிலுள்ள பெத்தேல் வளாகம். 1996-ல் கட்டி முடிக்கப்பட்டது
[பக்கம் 26-ன் படம்]
என் அக்கா மகள் இவாங்கிலியா ஓர்ஃபனிடிஸுடனும் (வலது) அவளுடைய கணவர் ஜார்ஜுடனும்
[பக்கம் 26-ன் படம்]
மேலே: அல்பேனியன் மொழியில் இரகசியமாக மொழிபெயர்க்கப்பட்ட 1940-ம் ஆண்டு “காவற்கோபுர” கட்டுரை