கிறிஸ்தவ மேய்ப்பர்கள் உங்களுக்கு எவ்வகையில் சேவை செய்கின்றனர்
பல இடங்களில் மேய்ப்பர்கள் ஒரு மந்தையை எவ்வாறு கவனிக்கிறார்கள் என்பதைக் கூர்ந்து காண்பது கூடிய காரியமாக இருக்கிறது. ஆடுகளை அவர்கள் வழிநடத்தி, பாதுகாத்து, பராமரிக்கிறார்கள். இது கிறிஸ்தவ மூப்பர்களுக்கு அக்கறைக்குரியதாக இருக்கிறது, ஏனெனில் அவர்களுடைய ஊழியம், மேய்ப்பு நடவடிக்கைகள் அடங்கியதாக இருக்கிறது. மெய்யாகவே, ‘கடவுளின் சபையை மேய்ப்பதும்,’ ‘மந்தை முழுவதற்கும் கவனம் செலுத்துவதும்’ அவர்களுடைய பொறுப்பாக உள்ளது.—அப்போஸ்தலர் 20:28, NW.
நீங்கள் கிறிஸ்தவ சபையின் ஓர் உறுப்பினரென்றால், ஆவிக்குரிய மேய்ப்பர்கள் உங்களுக்கு எவ்வகையில் சேவை செய்யக்கூடும்? உங்களுக்காக அவர்கள் எடுக்கும் முயற்சிகளுக்கு, நீங்கள் எவ்வகையில் பிரதிபலிக்க வேண்டும்? சபைக்கு அவர்களுடைய உதவி ஏன் தேவைப்படுகிறது?
எதற்கு எதிராக பாதுகாப்பு?
பூர்வ காலங்களில் சிங்கங்களும் மற்ற மூர்க்க மிருகங்களும் மந்தைகளுக்கு ஆபத்தாக இருந்து, தனி ஆடுகளை இரையாகப் பிடித்து தின்றன. மேய்ப்பர்கள் பாதுகாப்பை அளிக்க வேண்டியதாக இருந்தது. (1 சாமுவேல் 17:34, 35) பிசாசான சாத்தானும் “கெர்ச்சிக்கிற சிங்கம்போல் எவனை விழுங்கலாமோ என்று வகைதேடிச் சுற்றித்திரிகிறான்.” (1 பேதுரு 5:8) முழுமையாக யெகோவாவின் பூமிக்குரிய அமைப்புக்கு எதிராக மட்டுமல்ல, தனித்தனியே கடவுளின் ஒவ்வொரு ஊழியனுக்கு எதிராகவும் அவன் கோபாவேசத்துடன் போரிடுகிறான். சாத்தானுடைய குறிக்கோள் என்ன? யெகோவாவின் ஜனங்களுக்கு மனத்தளர்வு உண்டாக்கி, ‘தேவனுடைய கற்பனைகளைக் கைக்கொள்வதிலிருந்தும், இயேசுகிறிஸ்துவைக் குறித்துச் சாட்சி’ கொடுக்கும் ஊழியத்தை நிறைவேற்றுவதிலிருந்தும் அவர்களைத் தடுத்து வைக்க அவன் விரும்புகிறான்.—வெளிப்படுத்துதல் 12:17.
தம்முடைய ஆடுகள் ‘காட்டுமிருகங்களுக்கெல்லாம் இரையாகி’விட்டிருந்ததால், அவற்றைக் கவனிக்கத் தவறினதற்காக, யெகோவா பூர்வ இஸ்ரவேலின் பொறுப்புடையோராக இருந்த மேய்ப்பர்களைக் குற்றம் சாட்டினார். (எசேக்கியேல் 34:8) எனினும், கவனிக்கத் தவறுவதன் மூலமோ, அல்லது சாத்தானின், இந்த உலகத்தின், அல்லது விசுவாசதுரோக ‘ஓநாய்களின்’ செல்வாக்கினாலோ, ஒருவரையும் இழக்காதபடி சபையிலுள்ளவர்களைப் பாதுகாப்பதற்கு, கிறிஸ்தவ மூப்பர்கள் இருதயப்பூர்வமான ஆவலுடையோராக இருக்கின்றனர். (அப்போஸ்தலர் 20:29, 30) மந்தையின் உறுப்பினர் யாவரும் தெளிந்த புத்தியுள்ளவர்களாயும் விழிப்புள்ளவர்களாயும் இருக்கும்படி மேய்ப்பர்கள் எவ்வாறு உதவி செய்கின்றனர்? ஒரு வழிவகையானது, நன்றாய்த் தயாரிக்கப்பட்ட வேதப்பூர்வ பேச்சுகளை, ராஜ்ய மன்ற மேடையிலிருந்து கொடுப்பதாகும். மற்றொன்றானது, கூட்டங்களுக்கு முன்பும் பின்பும் நம்பிக்கையும் ஊக்கமும் ஊட்டும் உரையாடல்களின் மூலமாகும். பலன்தரத்தக்க இன்னுமொரு வழிவகையானது, ‘ஆடுகளை’ அவரவருடைய வீட்டில், தானே நேரில் சென்று காண்பது. (சங்கீதம் 95:7-ஐ ஒப்பிடுக.) ஆனால் மேய்ப்பு சந்திப்பு என்பது என்ன? அத்தகைய சந்திப்பை எவ்வாறு நிறைவேற்றுவது? யார் சந்திக்கப்பட வேண்டும்?
மேய்ப்பு சந்திப்பு என்பது என்ன?
மேய்ப்பு சந்திப்பானது, பயனற்ற காரியங்களைப் பற்றி உரையாடும் வெறும் பொது நட்புமுறையான சந்திப்பு அல்ல. மூப்பர் ஒருவர் இவ்வாறு கூறினார்: “பிரஸ்தாபிகளில் பெரும்பான்மையர், வேதப் பகுதி ஒன்றை வாசிப்பதில் அல்லது பைபிளில் குறிப்பிட்டிருக்கும் ஒருவரைப்பற்றி கலந்து பேசுவதில் முற்றிலும் மகிழ்ச்சியடைகின்றனர். நிச்சயமாகவே, பேசுவதையெல்லாம் மூப்பரே செய்வதில்லை. சந்திக்கப்படுகிற ராஜ்ய பிரஸ்தாபி, பைபிளின்பேரில் தன் எண்ணங்களை வெளிப்படுத்திக் கூறுவதில் பொதுவாய் மகிழ்ச்சியடைகிறார். இவ்வாறு செய்வது அவருடைய சொந்த விசுவாசத்தைப் பலப்படுத்துகிறது. கட்டியெழுப்பும் கட்டுரை ஒன்றைக் கலந்தாலோசிப்பதற்கு காவற்கோபுரம் அல்லது விழித்தெழு! பத்திரிகை ஒன்றை மூப்பர் தன்னுடன் கொண்டுசெல்லலாம். ஒருவேளை இந்த ஆவிக்குரிய கலந்தாலோசிப்பே பொது நட்புமுறையான சந்திப்பிலிருந்து மேய்ப்பு சந்திப்பை வேறுபடுத்திக் காட்டுவதாக இருக்கலாம்.”
அனுபவமுள்ள மற்றொரு மூப்பர் இவ்வாறு குறிப்பிட்டார்: “சந்திப்புக்கு முன்பாக, நான் சந்திக்கவிருக்கிற அந்தப் பிரஸ்தாபிக்குத் தேவைப்படுபவற்றைப் பற்றி சிந்திப்பதில் மூப்பர் சிறிது நேரத்தைச் செலவிடுகிறார். எது அந்தப் பிரஸ்தாபியை இன்னும் மேம்படும்படி செய்யலாம்? உள்ளப்பூர்வமான போற்றுதல், மேய்ப்பு சந்திப்புகளின் இன்றியமையாத பாகமாக உள்ளது, ஏனெனில், அது சகித்து நிலைத்திருக்கும்படி ஒருவரைப் பலப்படுத்துகிறது.” ஆம், மேய்ப்பு சந்திப்பு ஒன்றானது, சபையிலுள்ள எவராவது சென்று சந்திக்கும் சிநேகப்பான்மையான ஒரு சந்திப்பைப் பார்க்கிலும் மேலானது.
மேய்ப்பர் ஒருவர் உங்களை ஏன் வந்து காண்கிறார்?
ஒருவரின் வீட்டுக்கு மூப்பர் ஒருவர் செல்கையில், உடன் விசுவாசிகளை ஊக்கப்படுத்தவும், விசுவாசத்தில் உறுதியாய் நிலைத்திருக்க அவர்களுக்கு உதவி செய்யவும் ஆயத்தமாக இருக்கிறார். (ரோமர் 1:11, தி.மொ.) ஆகையால் மூப்பர் ஒருவரோ அல்லது இருவரோ உங்களைச் சந்திக்க விரும்புகையில், நீங்கள் எவ்வாறு பிரதிபலிக்கிறீர்கள்? பயணக் கண்காணி ஒருவர் இவ்வாறு சொன்னார்: “ஏதோ சரியாக இல்லாதபோதே மேய்ப்பு சந்திப்பு செய்யப்படுகிறதென்றால், சந்திப்பு செய்யப்போவதாகச் சொல்லப்படுவதற்கு முதலாவது பிரதிபலிப்பானது, ‘நான் என்ன தவறு செய்தேன்?’ என்பதாக இருக்கலாம்.” அன்புள்ள ஆவிக்குரிய மேய்ப்பர்கள் யெகோவாவின் மாதிரியைப் பின்பற்றுகின்றனர். சங்கீதக்காரனை அவர் கவனித்து, எப்போதும், முக்கியமாய் துயரமும் தனிப்பட்ட தேவையும் இருந்த காலங்களில், ‘அவருடைய ஆத்துமாவைத் தேற்றினார்.’—சங்கீதம் 23:1-4.
மேய்ப்பு சந்திப்பின் நோக்கமானது, ‘இடித்துப்போடுவதல்ல ஊன்றக் கட்டுவதாகவே’ இருக்கிறது. (2 கொரிந்தியர் 13:10) சந்திக்கப்படுபவர் சகித்து நிலைத்திருப்பதற்கும், அவருடைய ஆர்வத்துக்கும், உண்மையுள்ள ஊழியத்துக்கும் மதித்துணர்வை வெளிப்படுத்தும் வார்த்தைகள் நிச்சயமாகவே ஊக்கமூட்டுபவையாக இருக்கின்றன. மூப்பர் ஒருவர் இவ்வாறு சொன்னார்: “மேய்ப்பு சந்திப்பில், பிரச்சினைகளைக் கண்டுபிடித்து கலந்துபேசும் நோக்கத்துடன் தான் வந்திருப்பதாகக் கருதும்படி செய்வது நல்லதல்ல. நிச்சயமாகவே, குறிப்பிட்ட ஏதோ பிரச்சினையைப் பற்றி பிரஸ்தாபிதானே பேச விரும்பலாம். ஓர் ஆடு நொண்டிக்கொண்டு அல்லது மந்தையின் மீதியாடுகளிலிருந்து தன்னைத் தனியே ஒதுக்கி வைத்துக்கொண்டு இருந்தால், உதவி செய்வதற்கு மூப்பர் ஏதாவது செய்ய வேண்டும்.”
பின்வரும் இவ்வார்த்தைகளில் விவரிக்கப்பட்டவர்களைப்போல் இருப்போர் எவருக்கும் கிறிஸ்தவ மூப்பர்கள் சந்தேகமில்லாமல் தனிப்பட்ட கவனம் செலுத்துவார்கள்: “காணாமற்போனதை நான் தேடிச் சிதறிப்போனதைத் திருப்பிக்கொண்டு வந்து கால்ஒடிந்ததைக் கட்டி பலவீனமானதைப் பலப்படுத்துவேன்.” (எசேக்கியேல் 34:16, தி.மொ.) ஆம், ஆட்டைத் தேடி, திருப்பிக்கொண்டு வந்து, கட்டுப்போடுவது, அல்லது பலப்படுத்துவது அதற்குத் தேவைப்படலாம். இஸ்ரவேலின் மேய்ப்பர்கள் இந்தப் பொறுப்புகளைக் கவனியாமல் விட்டனர். இத்தகைய ஊழியத்தை நிறைவேற்றுவது, மேய்ப்பர் ஒருவர் குறிப்பிட்ட ஓர் ஆட்டினிடம் நெருங்கி வந்து அதன் தேவைகளைக் கவனிப்பதை அவசியப்படுத்துகிறது. அடிப்படையாக, இதுவே இன்று ஒவ்வொரு மேய்ப்பு சந்திப்பின் முக்கியமான ஒரு அம்சமாக இருக்க வேண்டும்.
ஆரோக்கியமான ஆட்டுக்குக் கவனிப்பு தேவை
ஆரோக்கியமான ஆட்டுக்கு, தற்கால ஆவிக்குரிய மேய்ப்பர்கள் தனிப்பட்ட கவனத்தைச் செலுத்துவதற்குத் தேவையில்லை என்ற முடிவுக்கு நாம் வர வேண்டுமா? சொல்லர்த்தமான ஆடு ஒன்று தொந்தரவுக்குள் சிக்கிக்கொள்கையில், மேய்ப்பனில் அதற்கு நம்பிக்கை இருந்தால், அதற்கு உதவிசெய்வது மிக எளிதாக இருக்கிறது. “ஆடுகள் இயல்பாய் மனிதருக்குத் தயங்கி ஒதுங்குகின்றன, அவற்றின் நம்பிக்கையைப் பெறுவது எப்போதும் எளிதாக இல்லை,” என்று ஒரு கையேடு குறிப்பிடுகிறது. அதே புத்தகம், மற்ற காரியங்களோடுகூட, ஆடுகளின் நம்பிக்கையைப் பெறுவதற்கு இந்த அடிப்படையான வழிகாட்டு குறிப்பை யோசனையாகக் கூறுகிறது: “விடாது ஒழுங்காக அந்த மிருகங்களுடன் பேசுங்கள். அந்தக் குரலுக்கு அவை பழக்கமாகின்றன, இது அவற்றிற்கு நம்பிக்கையூட்டுகிறது. மேயுமிடத்தில் ஆடுகளை அடிக்கடி சென்று காணுங்கள்.”—ஆலிஸ் ஃபூவெர் டாஸ் ஷாஃப். ஹான்ட்புக் ஃபூவெர் ட் ஆர்ட்கெரெக்டி ஹால்டூங் (எல்லாம் ஆடுகளுக்கே. அவற்றை சரியாக காப்பது எவ்வாறு என்பதன்பேரில் கையேடு).
ஆகையால், மேய்ப்பனுக்கும் ஆட்டுக்குமிடையில் நம்பிக்கையான உறவு இருந்துவரவேண்டுமானால் நேரில் தொடர்புகொள்வது தேவை. கிறிஸ்தவ சபையிலும் இதுவே உண்மையாக இருக்கிறது. ஒரு மூப்பர் இவ்வாறு குறிப்பிட்டார்: “தவறாமல் ஒழுங்காக ஆடுகளைச் சந்தித்து வரும் ஒரு மூப்பர் என்று சபையில் அறியப்பட்டிருப்பதானது, பிரச்சினையுடைய ஒருவரிடம் சந்திப்பு செய்வதை எளிதாக்குகிறது.” ஆகையால், ஆவிக்குரிய மேய்ப்பர்கள், ராஜ்ய மன்றத்தில் மாத்திரமே ஆடுகளைப் போஷித்து கவனிப்பதற்கு முயற்சி செய்யக்கூடாது. சந்தர்ப்பங்கள் அனுமதிக்கும் வரையில், மூப்பர்கள் ஆடுகளின் வீடுகளில் மேய்ப்பு சந்திப்புகள் செய்வதன்மூலம் அவர்களை அறிந்துகொள்ள வேண்டும். கிறிஸ்தவர் ஒருவர் இதை நினைவுபடுத்தி சொல்கிறார், அவர் புதிதாக நியமிக்கப்பட்ட மூப்பராக இருந்தபோது, ஒரு பயங்கரமான சாலை விபத்தில் தன் மகளை அப்போதுதான் இழந்திருந்த ஒரு சகோதரனைச் சந்தித்து அவரை ஆறுதல்படுத்தும்படி, நடத்தும் கண்காணி தொலைபேசியில் அவரிடம் சொன்னார். அந்த மூப்பர் ஒப்புக்கொள்வதாவது: “நான் அவரை ஒருபோதும் போய்ச் சந்தித்ததில்லை, அவர் வசிக்கும் இடத்தையும்கூட நான் அறிந்திருக்கவில்லை, ஆதலால் எவ்வளவு சங்கடமிகுந்தவனாய் நான் உணர்ந்தேன்! முதிர்ச்சியுள்ள ஒரு மூப்பர் என்னுடன் வருவதற்கு முன்வந்தபோது என் கவலை தணிந்தது.” ஆம், மேய்ப்பு சந்திப்புகளில் மூப்பர்கள் ஒருவருக்கொருவர் உதவிசெய்துகொள்கின்றனர்.
குறிப்பிட்ட சில மேய்ப்பு சந்திப்புகளுக்காக ஒரு மூப்பர் ஆயத்தம் செய்வதிலும் செல்வதிலும், கண்காணிக்குரிய “நல்ல வேலையை” பெறுவதற்கு உழைக்கிற உதவி ஊழியர் ஒருவர் அவரோடு சேர்ந்துகொள்ளலாம். (1 தீமோத்தேயு 3:1, 13) மேய்ப்பு சந்திப்புகளில் மூப்பர் ஒருவர் ஆடுகளுக்கு எவ்வாறு சேவை செய்கிறார் என்பதைக் காண்பதில் உதவி ஊழியர் எவ்வளவு நன்றியுணர்வடைகிறார்! இவ்வாறு மூப்பர்களும் உதவி ஊழியர்களும் சபையிலுள்ள எல்லாரிடமும் நெருங்கிய உறவுடனிருந்து, கிறிஸ்தவ அன்பின் மற்றும் ஐக்கியத்தின் கட்டுகளைப் பலப்படுத்துகிறார்கள்.—கொலோசெயர் 3:14.
மேய்ப்பு சந்திப்புகளுக்காக நேரத்தைத் திட்டமிடுதல்
ஒரு மூப்பர் குழு மேய்ப்பு சந்திப்புகளை, சபை புத்தகப் படிப்பு நடத்துவோரின் முன்முயற்சிக்கு விட்டபோது, சில தொகுதிகளில், ஆறு மாதங்களுக்குள் பிரஸ்தாபிகள் எல்லாரும் சந்திக்கப்பட்டுவிட்டனர், மற்ற தொகுதிகளிலோ ஒருவருமே சந்திக்கப்படவில்லை. இது பின்வருமாறு சொல்லும்படி மூப்பர் ஒருவரைத் தூண்டியது: “சில மூப்பர்கள் முன்முயற்சி எடுத்து மிகுதியான மேய்ப்பு வேலையைச் செய்கிறார்கள், ஆனால் அவ்வாறு செய்ய மற்ற மூப்பர்களுக்கு தங்கள் உடன் மூப்பர்களின் ஊக்கமூட்டுதல் தேவைப்படுகிறதென்று தோன்றுகிறது.” ஆகையால் சில மூப்பர் குழுக்கள், திட்டமான ஒரு காலப் பகுதிக்குள் பிரஸ்தாபிகள் எல்லாரையும் மேய்ப்பர்கள் சந்திக்கும்படி ஏற்பாடுகள் செய்கின்றன.
நிச்சயமாகவே, ஒரு மூப்பராயினும் அல்லது வேறு எந்த பிரஸ்தாபியாயினும், தனிப்பட்ட ஏற்பாடுகள் செய்யப்படும்படி காத்திராமல், சபையிலுள்ள ஒருவரை சென்று சந்திக்கலாம். மேய்ப்பு சந்திப்பு ஒன்று செய்வதற்கு முன்பாக, ஒரு மூப்பர் தொலைபேசியில் அழைத்து, “ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு குடும்பத்தை நான் போய்ச் சந்திக்கிறேன். அடுத்த மாதத்தில் எப்போதாவது ஒரு மணிநேரம்போல் நான் உங்களை வந்து சந்திக்கலாமா? உங்களுக்கு எப்போது வசதியாயிருக்கும்?” என்று கேட்கிறார்.
மேய்ப்பு சந்திப்பின் ஆசீர்வாதங்கள்
இந்தப் பொல்லாத ஒழுங்குமுறையிலிருந்து வரும் நெருக்கடிகள் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டிருக்கையில், புரிந்துகொள்ளும் மேய்ப்பர்கள் செய்யும் ஊக்கமூட்டும் சந்திப்புகள் மேன்மேலும் அதிக பயனுள்ளதாகிக் கொண்டிருக்கின்றன. மேய்ப்பு சந்திப்புகளின்மூலம் மந்தையிலுள்ள எல்லாருக்கும் ஊக்கமூட்டுதலும் உதவியும் அளிக்கப்படுகையில், ஒவ்வொரு ஆடும் பத்திரமாயும் பாதுகாப்பாயும் இருப்பதாக உணருகிறது.
ராஜ்ய பிரஸ்தாபிகள் எல்லாரையும் மேய்ப்பர்கள் தவறாமல் ஒழுங்காய்ச் சந்தித்து வந்த ஒரு சபையைக் குறித்து இவ்வாறு அறிக்கை செய்யப்பட்டது: “மேய்ப்பு சந்திப்புகளைப் பற்றி பிரஸ்தாபிகள் மிக உறுதியுள்ளவர்களானார்கள். மூப்பர் மற்றொரு சந்திப்பை எப்போது செய்யப்போகிறார் என்று கேட்பதற்கு, பிரஸ்தாபி ஒருவர் மூப்பர் ஒருவரை அணுகுவது மிக சாதாரணமாக இருந்தது. கேட்பவர், முந்தின சந்திப்பின்போது கட்டியெழுப்பும் கலந்தாலோசிப்பை அனுபவித்திருந்ததால் அவ்வாறு செய்கிறார். சபையின் ஆவியை முன்னேற்றுவிப்பதற்கு உதவிசெய்த ஒரு காரணமாக மேய்ப்பு சந்திப்புகள் இருந்தன.” அத்தகைய முறையில் மேய்ப்பர்கள் அன்புடன் ஊழியம் செய்யும்போது, சபை அன்பிலும், ஐக்கியத்திலும், கனிவிலும் வளரக்கூடும் என்று மற்ற அறிக்கைகள் காட்டுகின்றன. எத்தகைய ஓர் ஆசீர்வாதம்!
ஆடுகளின் ஆவிக்குரிய சுகநலத்தை முன்னேற்றுவிப்பதற்கு கிறிஸ்தவ மேய்ப்பர்கள் சந்திப்பு செய்கின்றனர். மூப்பர்கள் தங்கள் உடன் விசுவாசிகளை ஊக்கப்படுத்தி, பலப்படுத்த விரும்புகின்றனர். ஒரு சந்திப்பின்போது, அறிவுரை தேவைப்படுகிற வினைமையான பிரச்சினை ஒன்று தெரியவந்தால், அதைக் கலந்து பேசுவதற்கு மற்றொரு சமயத்தை ஏற்பாடு செய்வது சிறந்ததாயிருக்கலாம், முக்கியமாய் மூப்பருடன் உதவி ஊழியர் ஒருவர் சென்றிருந்தால் அவ்வாறு செய்வது நலமாகும். எவ்வாறாயினும், மேய்ப்பு சந்திப்பை ஜெபம் செய்து முடிப்பது தகுந்தது.
ஆவிக்குரிய மேய்ப்பர் ஒருவர், சமீபத்தில் உங்கள் வீட்டில் சந்திப்புச் செய்ய விரும்புகிறாரா? அப்படியென்றால், உங்களுக்கு வரவிருக்கிற ஊக்கமூட்டுதலை மகிழ்ச்சியுடன் எதிர்பார்த்திருங்கள். அவர் உங்களுக்கு சேவை செய்யவும், நித்திய ஜீவனுக்கு வழிநடத்தும் பாதையில் நிலைத்திருக்கும்படியான உங்கள் தீர்மானத்தில் உங்களைப் பலப்படுத்தவும் வருகிறார்.—மத்தேயு 7:13, 14.
[பக்கம் 26-ன் பெட்டி]
மேய்ப்பு சந்திப்புகளுக்கு குறிப்புரைகள்
◻ சந்திக்க நேரம் குறிப்பிடுங்கள்: பொதுவாக சந்திக்க நேரம் குறிப்பிடுவது நல்லது. வினைமையான பிரச்சினை ஒன்றைக் கையாள மூப்பர் திட்டமிட்டால், இதைக் குறித்து முன்னதாகவே பிரஸ்தாபிக்குத் தெரிவிப்பது தகுந்ததாயிருக்கும்.
◻ முன் ஆயத்தம்: அந்த நபரின் இயல்பையும் சந்தர்ப்ப நிலைமையையும் கருத்தில் கொள்ளுங்கள். இருதயப்பூர்வமான போற்றுதலை அளியுங்கள். ஊக்கமூட்டி விசுவாசத்தைப் பலப்படுத்தும் ‘ஆவிக்குரிய வரம்’ ஒன்றை அளிப்பதை உங்கள் குறிக்கோளாக்குங்கள்.—ரோமர் 1:10, 11.
◻ யாரை உடன் அழைத்துச் செல்வது: மற்றொரு மூப்பரை அல்லது தகுதிபெற்ற உதவி ஊழியர் ஒருவரை.
◻ சந்திப்பின்போது: மூப்பர் அமரிக்கையாகவும், அன்பாகவும், இணக்கமுள்ளவராகவும், விட்டுக்கொடுப்பவராகவும் இருக்க வேண்டும். குடும்பத்தினரைப் பற்றி, அவர்களின் சுகநலம் போன்றவற்றை விசாரியுங்கள். கவனமாய்ச் செவிகொடுத்துக் கேளுங்கள். வினைமையான பிரச்சினை வெளிப்பட்டால், தனிப்பட்ட மேய்ப்பு சந்திப்பு ஒன்றுக்காக ஏற்பாடு செய்வது சிறந்ததாக இருக்கலாம்.
◻ சந்திப்பின் நீடிப்பு: ஒப்புக்கொண்ட நேரத்தைக் கடைப்பிடித்து, அந்தச் சந்திப்பை வீட்டுக்காரர் அனுபவித்து மகிழ்ந்துகொண்டிருக்கும்போதே விட்டுச் செல்லுங்கள்.
◻ சந்திப்பை முடித்தல்: ஜெபம் செய்வது பொருத்தமானது, உண்மையில் மதித்துணரப்படும்.—பிலிப்பியர் 4:6, 7.
[பக்கம் 24-ன் படம்]
கிறிஸ்தவ மேய்ப்பர்கள் ஆவிக்குரிய பாதுகாப்பளிக்கின்றனர்
[பக்கம் 26-ன் படங்கள்]
மேய்ப்பு சந்திப்புகள் ஆவிக்குரிய ஊக்கமூட்டுதலுக்கு நல்ல வாய்ப்புகளை அளிக்கின்றன