நன்மை பயக்கும் ஒரு சந்திப்பு
1 இயேசு தன்னுடைய வீட்டுக்கு விருந்தினராக வருவதை சகேயு மகிழ்ச்சி பொங்க ஏற்றுக்கொண்டார். அந்தச் சந்திப்பு எந்தளவுக்கு நன்மை பயக்குவதாக இருந்தது!—லூக். 19:2-9.
2 இன்று, சபையின் தலைவராகிய இயேசு கிறிஸ்து, ‘தேவனுடைய மந்தையை . . . மேயுங்கள்’ என்று மூப்பர்களுக்கு கட்டளையிடுகிறார். (1 பே. 5:2, 3; யோவா. 21:15-17) கூட்டங்களில் போதிப்பது, வெளி ஊழியத்தில் முன்நின்று நடத்துவது ஆகியவற்றோடுகூட, சபையின் கண்காணிகள் சபையிலுள்ள ஒவ்வொரு ஆட்களுக்கும் அன்பான, தனிப்பட்ட உதவியை அளிக்கிறார்கள். எனவே, அவ்வப்போது, உங்களுடைய வீட்டிலோ, ராஜ்ய மன்றத்திலோ, வெளி ஊழியத்தில் ஒன்றுசேர்ந்து ஈடுபடுகையிலோ, அல்லது மற்ற சந்தர்ப்பங்களிலோ மூப்பர்கள் உங்களிடம் தனிப்பட்ட கவனம் செலுத்தலாம். மூப்பர்களின் சந்திப்பைக் குறித்து நீங்கள் பயப்பட வேண்டுமா? வேண்டவே வேண்டாம். அவர்கள் உங்களை சந்திப்பது உங்களிடம் ஏதோ ஒரு குறை இருக்கிறது என்பதால் அல்ல. அப்படியானால், மேய்ப்பு சந்திப்பின் நோக்கம்தான் என்ன?
3 “சகோதரர்கள் எப்படியிருக்கிறார்களென்று” பார்ப்பதற்காக அவர்களை சந்திக்க விரும்பியதாக பவுல் சொன்னார். (அப். 15:36) ஆம், அன்பான மேய்ப்பர்களாக, நீங்கள் எப்படியிருக்கிறீர்கள் என்பதை அறிய மூப்பர்கள் அதிக ஆவலாக இருக்கிறார்கள். உங்களுக்கு பயனளிப்பதாகவும், உங்களை கட்டியெழுப்புகிறதாகவும் இருக்கிற ஆவிக்குரிய உதவிகளை அளிக்க அவர்கள் விரும்புகிறார்கள். நம்முடைய அன்பான மேய்ப்பார் யெகோவா நாம் ஒவ்வொருவரும் இத்தகைய தனிப்பட்ட கவனிப்பை பெறவேண்டுமென்றே விரும்புகிறார்.—எசே. 34:11.
4 மூப்பர்களின் சந்திப்புகளை மனமார ஏற்றுக் கொள்ளுங்கள்: ‘அவர்கள் ஸ்திரப்படுவதற்கு ஆவிக்குரிய வரம் ஏதேனும் கொடுக்கும்படியும், . . . அவர்களோடேகூட ஒன்றாய் உற்சாகமடையும்படியும்’ தன் சகோதரர்களை சந்திக்க பவுல் எண்ணம் கொண்டார். (ரோ. 1:11, 12, NW) இந்தக் கடினமான கடைசி நாட்களில், நம் அனைவருக்குமே ஆவிக்குரிய உற்சாகமூட்டுதல் தேவை; விசுவாசத்தில் உறுதியாக நிலைத்திருப்பதற்கு உதவியும் தேவை. மேய்ப்பு சந்திப்பை சரியான விதத்தில் பயன்படுத்திக் கொண்டால், அது சந்தேகமில்லாமல் இருசாராருமே உற்சாகமடைவதில் விளைவடையும்.
5 மூப்பர்களின் மேய்ப்பு சந்திப்புகளால் கிடைக்கவிருக்கும் அநேக நன்மைகளை மனமார ஏற்றுக் கொள்ளுங்கள். உங்களை கவலைக்குள்ளாக்கும் ஏதாவதொரு விஷயமோ, கேள்வியோ இருந்தால், உதவி செய்ய சபை மூப்பர்கள் இருக்கிறார்கள் என்பதை நினைவில் வையுங்கள். உங்களுடைய ஆவிக்குரிய ஆரோக்கியத்தை பாதிக்கக்கூடிய எந்த விஷயமானாலும்சரி அதைக்குறித்து அவர்களுடன் கலந்துபேச தயங்காதீர்கள். யெகோவாவின் இந்த அன்பான ஏற்பாட்டை மதித்துணருங்கள்; இத்தகைய சந்திப்பு தரும் ஆசீர்வாதங்களால் மனமகிழ்ச்சி அடையுங்கள்.