கடவுளும் இராயனும்
“அப்படியானால், இராயனுடையதை இராயனுக்கும், தேவனுடையதைத் தேவனுக்கும் செலுத்துங்கள்.”—லூக்கா 20:25.
1. (அ) யெகோவாவின் உயர்ந்த ஸ்தானம் என்ன? (ஆ) இராயனுக்கு நாம் ஒருபோதும் கொடுக்கமுடியாத எதை யெகோவாவுக்கு கொடுக்க நாம் கடமைப்பட்டிருக்கிறோம்?
இயேசு கிறிஸ்து அந்தக் கட்டளையைக் கொடுத்தபோது, கடவுள் தம்முடைய ஊழியர்களிடமாக தேவைப்படுத்தும் காரியங்கள் இராயனோ அல்லது அரசாங்கமோ அவர்களிடம் கேட்கக்கூடிய எதையும்விட முக்கியத்துவம் வாய்ந்தவை என்பதைக் குறித்து அவருடைய மனதில் எந்தச் சந்தேகமும் இருக்கவில்லை. யெகோவாவிடம் ஏறெடுக்கப்பட்ட பின்வரும் சங்கீதக்காரனின் ஜெபம் உண்மையாயிருந்ததை வேறு எவரைக்காட்டிலும் இயேசு அதிக முழுமையாக புரிந்துகொண்டிருந்தார்: “உம்முடைய ராஜ்யம் சதாகாலங்களிலுமுள்ள ராஜ்யம், உம்முடைய ஆளுகை [உன்னத அரசதிகாரம்]a தலைமுறை தலைமுறையாகவும் உள்ளது.” (சங்கீதம் 145:13) குடியிருக்கப்பட்ட பூமியின் எல்லா ராஜ்யங்களின்மீதும் அதிகாரத்தை இயேசுவுக்கு பிசாசு அளிக்க முன்வந்தபோது இயேசு இவ்வாறு பதிலளித்தார்: “உன் தேவனாகிய கர்த்தரைப் பணிந்துகொண்டு, அவர் ஒருவருக்கே ஆராதனை செய்வாயாக என்று எழுதியிருக்கிறதே.” (லூக்கா 4:5-8) இராயன் ரோம பேரரசராகவோ வேறு எந்த ஒரு மனித ஆட்சியாளராகவோ அல்லது அரசாங்கமாகவோ இருந்தாலும்சரி, வணக்கம் “இராயனுக்கு” ஒருபோதும் கொடுக்கப்பட முடியாது.
2. (அ) இந்த உலகத்தின் சம்பந்தமாக சாத்தானின் ஸ்தானம் என்ன? (ஆ) யாருடைய அனுமதியோடு சாத்தான் இந்த ஸ்தானத்தில் இருக்கிறான்?
2 உலக ராஜ்யங்கள் சாத்தானுடையவையாக இருந்ததை இயேசு மறுதலிக்கவில்லை. பின்னர், அவர் சாத்தானை, “இந்த உலகத்தின் அதிபதி” என்பதாக அழைத்தார். (யோவான் 12:31; 16:11) பொ.ச. முதல் நூற்றாண்டின் முடிவு சமயத்தில் அப்போஸ்தலன் யோவான் எழுதினார்: “நாம் தேவனால் உண்டாயிருக்கிறோமென்றும், உலகமுழுவதும் பொல்லாங்கனுக்குள் கிடக்கிறதென்றும் அறிந்திருக்கிறோம்.” (1 யோவான் 5:19) யெகோவா பூமியின்மீது தம்முடைய உன்னத அரசதிகாரத்தைத் துறந்துவிட்டார் என்பதை இது அர்த்தப்படுத்தவில்லை. அரசியல் ராஜ்யங்களின்மீது இயேசுவுக்கு சாத்தான் ஆளுகையை கொடுக்க முன்வந்தபோது இவ்வாறு சொன்னதை நினைவில் வையுங்கள்: “இவைகள் எல்லாவற்றின்மேலுமுள்ள அதிகாரத்தையும் . . . உமக்குத் தருவேன், இவைகள் எனக்கு ஒப்புக்கொடுக்கப்பட்டிருக்கிறது.” (லூக்கா 4:6) கடவுளுடைய அனுமதியினால் மாத்திரமே சாத்தான் உலக ராஜ்யங்களின்மீது அதிகாரத்தை செலுத்திவருகிறான்.
3. (அ) யெகோவாவுக்கு முன்பாக தேசங்களின் அரசாங்கங்கள் என்ன ஸ்தானத்தில் இருக்கின்றன? (ஆ) இந்த உலகத்தின் அரசாங்கங்களுக்கு கீழ்ப்படிதல், இந்த உலகத்தின் கடவுளாகிய சாத்தானுக்கு நம்மைக் கீழ்ப்படுத்துவதை அர்த்தப்படுத்தவில்லை என்று நாம் எவ்வாறு சொல்லலாம்?
3 அதேவிதமாகவே அரசாங்கமும்கூட பேரரசராகிய ஆட்சியாளராக கடவுள் அவ்விதமாக செய்யும்படி அனுமதிப்பதன் காரணமாக மாத்திரமே அதன் அதிகாரத்தை செலுத்திவருகிறது. (யோவான் 19:11) இதன் காரணமாக, “உண்டாயிருக்கிற அதிகாரங்கள்,” ‘தேவனாலே அதன் சம்பந்தப்பட்ட ஸ்தானங்களில் நியமிக்கப்பட்டிருப்பதாக’ சொல்லப்படலாம். யெகோவாவின் ஈடற்ற உன்னத அரசதிகாரத்தோடு ஒப்பிட, அவற்றினுடையது மிகவும் குறைந்த அதிகாரமாக உள்ளது. இருப்பினும், அவசியமான சேவைகளை அளித்து, சட்டம் ஒழுங்கைப் பாதுகாத்து, தீமை செய்கிறவர்களைத் தண்டிப்பதன் காரணமாக அவர்கள் ‘தேவஊழியக்காரராக,’ ‘தேவனுடைய பொது ஊழியக்காரர்களாக’ இருக்கிறார்கள். (ரோமர் 13:1, NW, 4, 6) ஆகவே சாத்தானே இந்த உலகத்தின் அல்லது ஒழுங்கின் காணக்கூடாத ஆட்சியாளனாக இருந்தாலும்கூட அரசாங்கத்துக்குத் தங்களுடைய சம்பந்தப்பட்ட கீழ்ப்படிதலைக் காட்டும்போது அவர்கள் தங்களைச் சாத்தானுக்கு கீழ்ப்படுத்தவில்லை என்பதை கிறிஸ்தவர்கள் புரிந்துகொள்வது அவசியமாகும். அவர்கள் கடவுளுக்கே கீழ்ப்படிகிறார்கள். இந்த வருடத்தில், 1996-ல், அரசியல் அரசாங்கமானது இன்னும் ‘கடவுளுடைய ஏற்பாட்டின்’ ஒரு பாகமாகவே, கடவுள் அனுமதிக்கும் ஒரு தற்காலிகமான ஏற்பாடாகவே இருந்துவருகிறது. இது யெகோவாவின் பூமிக்குரிய ஊழியர்களால் அவ்வாறே அங்கீகரிக்கப்பட வேண்டும்.—ரோமர் 13:2.
யெகோவாவின் பண்டைய ஊழியர்களும் அரசாங்கமும்
4. யோசேப்பு எகிப்திய அரசாங்கத்தில் பிரதானமானவராக ஆக யெகோவா ஏன் அனுமதித்தார்?
4 கிறிஸ்தவத்துக்கு முற்பட்ட காலங்களில், யெகோவா தம்முடைய ஊழியர்களில் சிலர் அரசின் அரசாங்கங்களில் பிரதான பதவிகளை வகிக்க அனுமதித்தார். உதாரணமாக பொ.ச.மு. 18-வது நூற்றாண்டில், ஆட்சிசெலுத்திவந்த பார்வோனுக்கு அடுத்த இரண்டாவது ஸ்தானத்தில் எகிப்தில் யோசேப்பு பிரதான மந்திரியாக ஆனார். (ஆதியாகமம் 41:39-43) அதைப் பின்தொடர்ந்து வந்த சம்பவங்கள், யெகோவா தம்முடைய நோக்கங்களை நிறைவேற்றும் பொருட்டு ‘ஆபிரகாமின் வித்தை,’ அதாவது அவருடைய சந்ததியைப் பாதுகாப்பதற்கு யோசேப்பு ஒரு கருவியாக சேவிக்கும்படியாக இதை இவ்விதமாக கையாண்டார் என்பதைத் தெளிவாக்கின. யோசேப்பு எகிப்தில் அடிமைத்தனத்திற்குள் விற்கப்பட்டிருந்தார் என்பதையும் கடவுளுடைய ஊழியர்களுக்கு மோசேயின் நியாயப்பிரமாணமோ ‘கிறிஸ்துவின் பிரமாணமோ’ இல்லாத ஒரு சமயத்தில் அவர் வாழ்ந்துவந்தார் என்பதையும் நினைவில் வைக்கவேண்டும்.—ஆதியாகமம் 15:5-7; 50:19-21; கலாத்தியர் 6:2.
5. நாடு கடத்தப்பட்டிருந்த யூதர்கள் பாபிலோனின் ‘சமாதானத்தை தேடும்’படியாக ஏன் கட்டளையிடப்பட்டார்கள்?
5 பல நூற்றாண்டுகளுக்குப் பின்னர் பாபிலோனில் நாடுகடத்தப்பட்டவர்களாக இருக்கையில் ஆட்சியாளர்களுக்கு கீழ்ப்பட்டிருக்கும்படியாகவும் அந்த நகரத்தின் சமாதானத்துக்காக ஜெபிக்கும்படியாகவும்கூட நாடுகடத்தப்பட்டிருந்த யூதர்களுக்கு சொல்ல உண்மையுள்ள தீர்க்கதரிசியாகிய எரேமியாவை யெகோவா ஏவினார். அவர்களுக்கு எழுதிய கடிதத்தில் அவர் இவ்வாறு எழுதினார்: “இஸ்ரவேலின் தேவனாகிய சேனைகளின் கர்த்தர் . . . சிறைப்பட்டுப்போகப்பண்ணின அனைவருக்கும் அறிவிக்கிறது என்னவென்றால் . . . நான் உங்களைச் சிறைப்பட்டுப் போகப்பண்ணின பட்டணத்தின் சமாதானத்தைத் தேடி, அதற்காகக் கர்த்தரை விண்ணப்பம் பண்ணுங்கள்; அதற்குச் சமாதானமிருக்கையில் உங்களுக்கும் சமாதானமிருக்கும்.” (எரேமியா 29:4, 7) யெகோவாவை வழிபடும் சுதந்திரம் இருக்கும்பொருட்டு, யெகோவாவின் மக்கள் தங்களுக்காகவும் தாங்கள் வாழ்ந்துவரும் தேசத்துக்காகவும் ‘சமாதானத்தைத் தேட’ எல்லா சமயங்களிலும் காரணத்தை உடையவர்களாக இருக்கின்றனர்.—1 பேதுரு 3:11.
6. அரசாங்கத்தில் உயர் பதவிகள் அளிக்கப்பட்டிருந்தபோதிலும், என்ன விதங்களில் தானியேலும் அவருடைய மூன்று தோழர்களும் யெகோவாவின் நியாயப்பிரமாணத்தின் சம்பந்தமாக விட்டுக்கொடுக்க மறுத்தனர்?
6 பாபிலோனுக்கு நாடுகடத்தப்பட்டிருந்த சமயத்தில், பாபிலோனில் அடிமைத்தனத்தில் கைதிகளாக இருந்த தானியேலும் அவருடைய மற்ற மூன்று உண்மையுள்ள யூதர்களும் அரசாங்கத்தின் பயிற்சிக்குத் தங்களைக் கீழ்ப்படுத்திக் கொண்டு பாபிலோனியாவில் உயர் பதவிவகித்த அரசு ஊழியர்களாக ஆனார்கள். (தானியேல் 1:3-7; 2:48, 49) இருப்பினும் அவர்களுடைய பயிற்சி காலத்தின்போதேகூட, அவர்களுடைய கடவுளாகிய யெகோவா மோசே மூலமாக கொடுத்திருந்த நியாயப்பிரமாணத்தை மீறுவதற்கு அவர்களை வழிநடத்தியிருக்கும் உணவு சம்பந்தமான விஷயங்களில் உறுதியான நிலைநிற்கையை எடுத்தனர். இதற்காக அவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டார்கள். (தானியேல் 1:8-17) ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் ஒரு அரசு சிலையொன்றை நிறுத்தியபோது, தானியேலின் மூன்று எபிரெய தோழர்களும் தங்கள் உடன் அரசு நிர்வாகிகளோடுகூட அந்நிகழ்ச்சியில் ஆஜராயிருக்க கட்டாயப்படுத்தப்பட்டனர். இருப்பினும், அவர்கள் அரசு விக்கிரகத்தை “தாழ விழுந்து அதைப் பணிந்துகொள்ள” மறுத்தனர். மறுபடியுமாக யெகோவா அவர்களுடைய உத்தமத்துக்கு பலனளித்தார். (தானியேல் 3:1-6, 13-28) அதேவிதமாகவே இன்று, யெகோவாவின் சாட்சிகள் தாங்கள் வசிக்கும் தேசத்தின் கொடிக்கு மரியாதை செலுத்துகிறார்கள், ஆனால் அதனிடமாக ஒரு வணக்கச் செயலை நடப்பிக்கமாட்டார்கள்.—யாத்திராகமம் 20:4, 5; 1 யோவான் 5:21.
7. (அ) பாபிலோனிய அரசாங்க அமைப்பில் ஒரு உயர்ந்த பதவியை வகித்தபோதிலும் என்ன சிறந்த நிலைநிற்கையை தானியேல் எடுத்தார்? (ஆ) கிறிஸ்தவ காலங்களில் என்ன மாற்றங்கள் நிகழ்ந்தன?
7 புதிய பாபிலோனிய வல்லரசு வீழ்ச்சியடைந்த பின்பு, அதற்கு பதிலாக பாபிலோனில் ஏற்படுத்தப்பட்ட புதிய மேதிய பெர்சிய ஆட்சியின்கீழ் தானியேலுக்கு உயர்ந்த அந்தஸ்துள்ள அரசாங்கப் பதவி கொடுக்கப்பட்டது. (தானியேல் 5:30, 31; 6:1-3) ஆனால் தன்னுடைய உயர்ந்த பதவி தன்னுடைய உத்தமத்தை விட்டுக் கொடுப்பதற்கு வழிநடத்த அவர் அனுமதிக்கவில்லை. அரசாங்க சட்டம் ஒன்று யெகோவாவுக்குப் பதிலாக தரியு ராஜாவை அவர் வணங்க வேண்டும் என்று தேவைப்படுத்தியபோது அவர் மறுத்துவிட்டார். இதற்காக அவர் சிங்கங்களுக்குள் எறியப்பட்டார், ஆனால் யெகோவா அவரை விடுவித்தார். (தானியேல் 6:4-24) நிச்சயமாகவே இது கிறிஸ்தவத்துக்கு முற்பட்ட காலங்களில் நடந்ததாகும். கிறிஸ்தவ சபை ஸ்தாபிக்கப்பட்ட பிறகு கடவுளுடைய ஊழியர்கள் “கிறிஸ்துவின் பிரமாணத்”தின் கீழ் வந்தார்கள். யூத ஒழுங்கின்கீழ் அனுமதிக்கப்பட்டிருந்த அநேக காரியங்கள், யெகோவா இப்பொழுது அவருடைய ஜனங்களை கையாண்டுவந்த விதத்தின் அடிப்படையில் வித்தியாசமாக நோக்கப்பட வேண்டியதாக இருந்தன.—1 கொரிந்தியர் 9:21; மத்தேயு 5:31, 32; 19:3-9.
அரசாங்கத்திடமாக இயேசுவின் மனநிலை
8. அரசியல் ஈடுபாட்டை தவிர்க்க இயேசு தீர்மானமாயிருந்தார் என்பதை என்ன சம்பவம் காட்டுகிறது?
8 இயேசு கிறிஸ்து பூமியில் இருந்தபோது, தம்மைப் பின்பற்றுவோருக்கு உயர்ந்த தராதரங்களை வைத்தார், மேலும் அரசியல் அல்லது இராணுவ விவகாரங்களில் எல்லா வகையான ஈடுபாட்டையும் அவர் மறுத்துவிட்டார். ஒருசில அப்பங்களையும் இரண்டு சிறிய மீன்களையும் கொண்டு இயேசு பல ஆயிரக்கணக்கானோருக்கு அற்புதமாக உணவளித்தப் பின்பு, யூதர்கள் அவரைப் பிடித்து அவரை ஒரு அரசியல் ராஜாவாக்கவேண்டும் என்று விரும்பினர். ஆனால் இயேசு மலைகளுக்கு உடனடியாக விலகிச் செல்வதன் மூலம் அவர்களைத் தவிர்த்துவிட்டார். (யோவான் 6:5-15) இந்தச் சம்பவத்தைக் குறித்து தி நியூ இன்டர்நேஷனல் கம்மென்டரி ஆன் தி நியூ டெஸ்டமென்ட் இவ்வாறு சொல்கிறது: “அந்தக் காலத்திலிருந்த யூதர்கள் மத்தியில் தீவிரமான தேசிய ஏக்கங்கள் இருந்தன, அந்த அற்புதத்தைக் கண்ட அநேகர் ரோமர்களுக்கு எதிராக தங்களை வழிநடத்தக்கூடிய சரியான, கடவுளால் அங்கீகரிக்கப்பட்ட தலைவர் என்பதாக நினைத்தார்கள். ஆகவே அவர்கள் அவரை ராஜாவாக்க தீர்மானமாயிருந்தனர்.” இயேசு இந்த அரசியல் தலைமைத்துவத்தின் அளிப்பை “தீர்மானமாக நிராகரித்துவிட்டார்,” என்பதாக அது மேலுமாக சொல்கிறது. ரோம ஆதிக்கத்துக்கு எதிராக யூதர்களின் எந்த எழுச்சிக்கும் கிறிஸ்து ஆதரவு கொடுக்கவில்லை. ஆம், தம்முடைய மரணத்துக்குப் பின்பு நிகழவிருக்கும் புரட்சியின் விளைவு என்னவாக இருக்கும் என்பதை அவர் முன்னறிவித்தார்—எருசலேமின் குடிமக்களுக்கு விவரிக்கமுடியாத ஆபத்துகளும் அந்த நகரத்திற்கு அழிவும் உண்டாகும்.—லூக்கா 21:20-24.
9. (அ) உலகத்தோடு தம்முடைய ராஜ்யத்தின் சம்பந்தத்தை இயேசு எவ்வாறு விளக்கினார்? (ஆ) உலக அரசாங்கங்களோடு தங்களுடைய செயல்தொடர்புகளைப் பற்றியதில் இயேசு தம்மைப் பின்பற்றுவோருக்கு என்ன வழிநடத்தலைக் கொடுத்தார்?
9 தம்முடைய மரணத்துக்குச் சற்று முன்பாக, இயேசு யூதேயாவிலிருந்த ரோம பேரரசரின் விசேஷித்த பிரதிநிதியிடம் இவ்வாறு சொன்னார்: “என் ராஜ்யம் இவ்வுலகத்திற்குரியதல்ல, என் ராஜ்யம் இவ்வுலகத்திற்குரியதானால் நான் யூதரிடத்தில் ஒப்புக்கொடுக்கப்படாதபடிக்கு என் ஊழியக்காரர் போராடியிருப்பார்களே; இப்படியிருக்க என் ராஜ்யம் இவ்விடத்திற்குரியதல்ல.” (யோவான் 18:36) அவருடைய ராஜ்யம் அரசியல் அரசாங்கங்களின் ஆட்சிக்கு முடிவைக் கொண்டுவரும் வரையாக, கிறிஸ்துவின் சீஷர்கள் அவருடைய முன்மாதிரியைப் பின்பற்றுகிறார்கள். ஸ்தாபிக்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்குத் தங்கள் கீழ்ப்படிதலைக் காண்பிக்கின்றனர். ஆனால் அவற்றின் அரசியல் அலுவல்களில் அவர்கள் தலையிடுவது கிடையாது. (தானியேல் 2:44; மத்தேயு 4:8-10) இயேசு பின்வருமாறு சொல்லி, தம்முடைய சீஷர்களுக்கு வழிகாட்டி குறிப்புகளை விட்டுச்சென்றிருக்கிறார்: “அப்படியானால், இராயனுடையதை இராயனுக்கும், தேவனுடையதைத் தேவனுக்கும் செலுத்துங்கள்.” (மத்தேயு 22:21) இதற்கு முன்னால், இயேசு தம்முடைய மலைப்பிரசங்கத்தில் “ஒருவன் [“அதிகாரத்திலுள்ள யாராவது ஒருவர்,” NW] உன்னை ஒரு மைல் தூரம் வரப் பலவந்தம் பண்ணினால், அவனோடு இரண்டு மைல் தூரம் போ,” என்பதாக சொல்லியிருந்தார். (மத்தேயு 5:41) இந்தப் பிரசங்கத்தின் சூழமைவில், மனித உறவுகளில் இருந்தாலும் சரி அல்லது அரசாங்கம் கடவுளுடைய சட்டத்துக்கு இசைவாக தேவைப்படுத்துகிறவற்றில் இருந்தாலும் சரி நியாயமான தேவைகளுக்கு மனமுவந்து கீழ்ப்படிய வேண்டிய நியமத்தை இயேசு விளக்கிக்கொண்டிருந்தார்.—லூக்கா 6:27-31; யோவான் 17:14, 15.
கிறிஸ்தவர்களும் இராயனும்
10. சரித்திராசிரியர் ஒருவரின் பிரகாரம், இராயனின் சம்பந்தமாக, மனச்சாட்சிக்குட்பட்ட என்ன நிலைநிற்கையை பூர்வ கிறிஸ்தவர்கள் எடுத்தனர்?
10 சுருக்கமான இந்த வழிகாட்டி குறிப்புகள் கிறிஸ்தவர்களுக்கும் அரசாங்கத்திற்குமிடையே உள்ள உறவைக் கட்டுப்படுத்த வேண்டியதாக இருந்தன. கிறிஸ்தவத்தின் எழுச்சி என்ற தன்னுடைய ஆங்கில புத்தகத்தில் சரித்திராசிரியர் இ. டபிள்யூ. பார்ன்ஸ் இவ்விதமாக எழுதினார்: “கிறிஸ்து இந்தக் கட்டளையைக் கொடுத்தப்பின்பு தொடர்ந்து வந்த நூற்றாண்டுகளில் அரசாங்கத்திடமாக தன்னுடைய கடமையைப் பற்றி ஒரு கிறிஸ்தவனுக்கு சந்தேகமெழும்பிய போதெல்லாம், அவன் கிறிஸ்துவின் அதிகாரப்பூர்வமான போதகத்தினிடமாக திரும்பினான். அவன் வரிகளைச் செலுத்துவான்: வசூல் செய்யப்படும் தொகை அதிகமாக இருக்கலாம்—மேற்கத்திய பேரரசு வீழ்ச்சியடைவதற்கு முன்பு வரிகள் தாங்க முடியாதவையாக இருந்தன—ஆனால் கிறிஸ்தவன் அவற்றைச் சகித்துக்கொள்வான். கடவுளுக்குரியதை இராயனுக்குக் கொடுக்கும்படியாக கேட்கப்படாதவரை, அரசாங்கத்திற்குரிய மற்ற எல்லா பொறுப்புகளையும் அதேவிதமாகவே அவன் ஏற்றுக்கொள்வான்.”
11. உலக ஆட்சியாளர்களோடு எவ்விதமாக தொடர்புகொள்ளும்படியாக பவுல் கிறிஸ்தவர்களுக்கு அறிவுரை கூறினார்?
11 இந்த நியமத்திற்கிசைவாக, கிறிஸ்துவின் மரணத்துக்கு 20-க்கும் சற்று அதிகமான ஆண்டுகளுக்குப் பின், அப்போஸ்தலன் பவுல் ரோமாபுரியிலிருந்த கிறிஸ்தவர்களிடம் இவ்வாறு சொன்னான்: “எந்த மனுஷனும் மேலான அதிகாரமுள்ளவர்களுக்குக் கீழ்ப்படியக்கடவன்.” (ரோமர் 13:1) சுமார் 10 ஆண்டுகளுக்குப் பின்பு, ரோமில் இரண்டாவது முறையாக கைதுசெய்யப்பட்டு கொல்லப்படுவதற்கு சற்று முன்பாக பவுல் தீத்துவுக்கு இவ்வாறு எழுதினார்: “துரைத்தனங்களுக்கும் அதிகாரங்களுக்கும் கீழ்ப்படிந்து அடங்கியிருக்கவும், சகலவிதமான நற்கிரியைகளையும் செய்ய ஆயத்தமாயிருக்கவும், ஒருவனையும் தூஷியாமலும், சண்டை பண்ணாமலும், பொறுமையுள்ளவர்களாய் எல்லா மனுஷருக்கும் சாந்தகுணத்தைக் காண்பிக்கவும் அவர்களுக்கு [கிரேத்தாவிலுள்ள கிறிஸ்தவர்களுக்கு] நினைப்பூட்டு.”—தீத்து 3:1, 2.
‘மேலான அதிகாரங்களை’ பற்றிய படிப்படியான புரிந்துகொள்ளுதல்
12. (அ) அரசாங்க அதிகாரங்களின் சம்பந்தமாக ஒரு கிறிஸ்தவனின் சரியான நிலைநிற்கை என்னவென சார்ல்ஸ் டேஸ் ரஸல் கருதினார்? (ஆ) போர் படையில் சேவை செய்வதன் சம்பந்தமாக, அபிஷேகம் செய்யப்பட்ட கிறிஸ்தவர்கள் முதல் உலகப் போரின்போது என்ன வித்தியாசமான நோக்குநிலைகளை ஏற்றிருந்தனர்?
12 1886-ம் ஆண்டிலேயே, சார்ல்ஸ் டேஸ் ரஸல் தி பிளான் ஆஃப் தி ஏஜஸ் புத்தகத்தில் பின்வருமாறு எழுதினார்: “இயேசுவோ அப்போஸ்தலர்களோ எந்தவிதத்திலும் உலக ஆட்சியாளர்களோடு தலையிடவில்லை. . . . சட்டங்களுக்குக் கீழ்ப்படியவும் அதிகாரத்திலுள்ளவர்களுக்கு அவர்களுடைய பதவியின் நிமித்தமாக மரியாதை செலுத்தவும், . . . தங்களுக்கு நியமிக்கப்படும் வரிகளைச் செலுத்தவும் கடவுளுடைய சட்டங்களோடு (அப்போஸ்தலர் 4:19; 5:29) முரண்பட்டாலொழிய ஸ்தாபிக்கப்பட்ட எந்தச் சட்டத்துக்கும் எதிர்ப்பு தெரிவிக்காதிருக்கும்படியாக சர்ச் அங்கத்தினருக்கு அவர்கள் போதித்தார்கள். (ரோமர் 13:1-7; மத்தேயு 22:21) இயேசுவும் அப்போஸ்தலர்களும் பூர்வ சர்ச் அங்கத்தினர்களும் இந்த உலகத்தின் அரசாங்கங்களில் எந்தப் பங்கையும் வகிக்காமல் அவற்றிலிருந்து விலகியிருந்தபோதிலும் அவர்கள் அனைவரும் சட்டத்துக்குக் கீழ்ப்படிகிறவர்களாக இருந்தனர்.” இந்தப் புத்தகம் அப்போஸ்தலன் பவுல் குறிப்பிட்ட “ஆளும் அதிகாரம் கொண்டவர்களை” அல்லது ‘மேலான அதிகாரங்களை’ சரியாகவே மனித அரசாங்க அதிகாரங்கள் என்று அடையாளங்காட்டியது. (ரோமர் 13:1, கிங் ஜேம்ஸ் மொழிபெயர்ப்பு) உண்மை கிறிஸ்தவர்கள் “கிளர்ச்சி செய்பவர்களாக, சண்டை பண்ணுகிறவர்களாக அல்ல—தற்காலத்தில் சட்டத்துக்கு மிகவும் கீழ்ப்படிந்து நடக்கிறவர்கள் மத்தியில் காணப்படுகிறவர்களாக இருக்கவேண்டும்,” என்பதாக 1904-ல் தி நியூ க்ரியேஷன் புத்தகம் குறிப்பிட்டது. முதல் உலக யுத்தத்தின் போது போர்ப் படையில் சேவை செய்வதை ஏற்றுக்கொள்ளும் அளவுக்கும்கூட அரசாங்க அதிகாரங்களுக்கு முழுமையாக கீழ்ப்பட்டிருப்பதை இது அர்த்தப்படுத்துவதாக சிலரால் புரிந்துகொள்ளப்பட்டது. என்றபோதிலும், மற்றவர்களோ, “பட்டயத்தை எடுக்கிற யாவரும் பட்டயத்தால் மடிந்துபோவார்கள்,” என்ற இயேசுவின் கூற்றுக்கு முரணாக இருப்பதாக இதைக் கருதினர். (மத்தேயு 26:52) தெளிவாகவே மேலான அதிகாரங்களுக்கு கிறிஸ்தவ கீழ்ப்படிதலைக் குறித்து தெளிவான புரிந்துகொள்ளுதல் அவசியமாயிருந்தது.
13. ஆளும் அதிகாரம் கொண்டவர்களை அடையாளம் கண்டுகொள்ளும் புரிந்துகொள்ளுதலில் 1929-ல் என்ன மாற்றம் அளிக்கப்பட்டது, இது எவ்விதமாக பிரயோஜனமாயிருந்தது?
13 1929-ல், பல்வேறு அரசாங்கங்களின் சட்டங்கள் கடவுள் கட்டளையிடும் காரியங்களைத் தடைசெய்யவும் அல்லது கடவுளுடைய கட்டளைகள் தடைசெய்யும் காரியங்களைக் கேட்கவும் ஆரம்பித்த காலத்தில், ஆளும் அதிகாரம் கொண்டவர்கள் என்பது யெகோவா தேவனும் இயேசு கிறிஸ்துவுமாக இருக்கவேண்டும் என்று நம்பப்பட்டது.b இரண்டாம் உலகப் போருக்கு முன்பும் போர் காலத்திலும், சமநிலை திகிலோடும் இராணுவ ஆயத்த நிலையோடும் பனிப்போர் வரையிலுமாக இருந்த அந்த நெருக்கடியான காலப் பகுதியின்போது யெகோவாவின் ஊழியர்கள் கொண்டிருந்த புரிந்துகொள்ளுதல் இதுவாகவே இருந்தது. பின்னோக்கிப் பார்க்கையில், யெகோவா மற்றும் அவருடைய கிறிஸ்துவின் தலைமை அதிகாரத்தையும் உயர்த்திய இந்த நோக்குநிலையானது இந்தக் கஷ்டமான காலப்பகுதி முழுவதிலுமாக உறுதியாக நடுநிலையைக் காத்துக்கொள்வதற்கு கடவுளுடைய மக்களுக்கு உதவியது.
சம்பந்தப்பட்ட கீழ்ப்படிதல்
14. ரோமர் 13:1, 2 மற்றும் அது சம்பந்தப்பட்ட வேதவாக்கியங்களின்பேரில் 1962-ல் எவ்விதமாக கூடுதலான விளக்கம் அளிக்கப்பட்டது?
14 1961-ல் பரிசுத்த வேதாகமத்தின் புதிய உலக மொழிபெயர்ப்பு தயாரிப்பு வேலை முடிவுபெற்றது. அதைத் தயாரிப்பது வேதாகமத்தின் வாசக மொழியை ஆழமாக ஆராய்வதை தேவைப்படுத்தியது. ரோமர் 13-ம் அதிகாரத்தில் மட்டுமல்லாமல், தீத்து 3:1, 2 மற்றும் 1 பேதுரு 2:13, 17 போன்ற பகுதிகளிலும்கூட உபயோகப்படுத்தியுள்ள வார்த்தைகளின் சரியான மொழிபெயர்ப்பு, ‘மேலான அதிகாரங்கள்’ என்ற பதம் யெகோவா மற்றும் அவருடைய குமாரன் இயேசுவின் உன்னத அரசதிகாரத்தை அல்ல, ஆனால் மனித அரசாங்க அதிகாரங்களையே குறிப்பிட்டது என்பதைத் தெளிவுபடுத்தியது. 1962-ன் பிற்பகுதியில், ரோமர் 13-ம் அதிகாரத்துக்கு திருத்தமான விளக்கத்தை அளித்த கட்டுரைகள் காவற்கோபுர பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்டன, மேலுமாக சி. டி. ரஸலின் காலத்தில் கொண்டிருந்ததைவிட தெளிவான கருத்தை அளித்தன. இந்த அதிகாரங்களுக்கு கிறிஸ்தவ கீழ்ப்படிதல் முழுமையாக இருக்க முடியாது என்பதை இந்தக் கட்டுரைகள் சுட்டிக்காட்டின. கீழ்ப்படிதல் சம்பந்தப்பட்டதாக இருக்கவேண்டும், கடவுளுடைய ஊழியர்களை கடவுளுடைய கட்டளைகளுக்கு முரணாகக் கொண்டுவராத நிபந்தனைக்கு அது உட்பட்டதாக இருத்தல் வேண்டும். காவற்கோபுர பத்திரிகையின் மேலுமான கட்டுரைகள் முக்கியமான இந்தக் குறிப்பை வலியுறுத்தி இருக்கின்றன.c
அக்கறையூட்டும் விதமாக, ரோமர் 13-ம் அதிகாரத்தின் பேரில் தன்னுடைய விளக்கவுரையில் பேராசிரியர் எஃப். எஃப். புரூஸ் இவ்விதமாக எழுதுகிறார்: “அப்போஸ்தலர்களின் எழுத்துக்களின் பொது சூழமைவிலிருந்து தெரிவது போலவே, அடுத்துள்ள சூழமைவிலிருந்து, எந்த நோக்கங்களுக்காக அரசாங்கம் கடவுளால் ஏற்படுத்தப்பட்டுள்ளதோ அவற்றின் வரம்புக்குள் மாத்திரமே கீழ்ப்படிதலை சரியாகவே அது உத்தரவிட முடியும்—குறிப்பாக, கடவுளுக்கு மாத்திரமே உரித்தான பற்றுறுதியை அரசாங்கம் வற்புறுத்துகையில் அதை எதிர்க்கலாம், எதிர்க்கவும் வேண்டும் என்பது தெளிவாக இருக்கிறது.”
15, 16. (அ) ரோமர் 13-ம் அதிகாரத்தின் புதிதான புரிந்துகொள்ளுதல் என்ன சமநிலைப்படுத்தப்பட்ட நோக்குநிலைக்கு வழிநடத்தியது? (ஆ) என்ன கேள்விகள் பதிலளிக்கப்பட வேண்டியிருக்கின்றன?
15 ரோமர் 13-ம் அதிகாரத்தின் பேரிலான திருத்தமான புரிந்துகொள்ளுதலுக்கு இந்தக் குறிப்பு, அரசியல் அதிகாரங்களுக்கான தகுதியான மரியாதையை இன்றியமையாத வேதப்பூர்வமான நியமங்களை விட்டுக்கொடுக்காத நிலைநிற்கையோடு சமநிலைப்படுத்த யெகோவாவின் மக்களுக்கு உதவியிருக்கிறது. (சங்கீதம் 97:11; எரேமியா 3:15) இது கடவுளோடு தங்களுடைய உறவைக் குறித்தும் அரசாங்கத்தோடு தங்கள் செயல்தொடர்புகளைக் குறித்தும் சரியான நோக்குநிலையைக் கொண்டிருக்க அவர்களுக்கு உதவியிருக்கிறது. இராயனுடையதை இராயனுக்குச் செலுத்துகையில், கடவுளுடையதை கடவுளுக்குச் செலுத்துவதை அவர்கள் அசட்டை செய்யாதிருப்பதை இது நிச்சயப்படுத்தியிருக்கிறது.
16 ஆனால் இராயனுடையவைதான் என்ன? நியாயமாக எவற்றை ஒரு அரசாங்கம் கிறிஸ்தவனிடம் கேட்க முடியும்? பின்வரும் கட்டுரையில் இந்தக் கேள்விகள் கலந்தாலோசிக்கப்படும்.
[அடிக்குறிப்புகள்]
a சங்கீதம் 103:22, NW அடிக்குறிப்பைக் காண்க.
b நவம்பர் 1 மற்றும் 15, டிசம்பர் 1, 1962 (ஆங்கிலம்); நவம்பர் 1, 1990; மே 1, 1993; ஜூலை 1, 1994 (தமிழ்) காவற்கோபுரத்தைக் காண்க.
c ஜூன் 1 மற்றும் 15, 1929 காவற்கோபுரம் (ஆங்கிலம்).
உங்களால் விளக்கமுடியுமா?
◻ மேலான அதிகாரங்களுக்குக் கீழ்ப்பட்டிருத்தல் சாத்தானுக்கு கீழ்ப்பட்டிருத்தலை ஏன் அர்த்தப்படுத்துவது இல்லை?
◻ தம்முடைய நாளின் அரசியலிடமாக இயேசுவின் மனநிலை என்னவாக இருந்தது?
◻ இராயனோடு செயல்தொடர்பு கொள்வதன் சம்பந்தமாக இயேசு தம்மைப் பின்பற்றுவோருக்கு என்ன அறிவுரையைக் கொடுத்தார்?
◻ தேசங்களின் ஆட்சியாளர்களோடு எவ்வாறு செயல்தொடர்புகொள்ளுமாறு பவுல் கிறிஸ்தவர்களுக்கு புத்திமதி கொடுத்தார்?
◻ மேலான அதிகாரங்களை அடையாளங்கண்டுகொள்வதைப் பற்றிய புரிந்துகொள்ளுதல் எவ்விதமாக ஆண்டுகளினூடாக வளர்ந்திருக்கிறது?
[பக்கம் 10-ன் படம்]
இயேசுவுக்கு அரசியல் அதிகாரத்தை சாத்தான் அளிக்க முன்வந்தபோது, அவர் அதைப் பெற மறுத்துவிட்டார்
[பக்கம் 13-ன் படம்]
உண்மைக் கிறிஸ்தவர்கள் “தற்காலத்தில் சட்டத்துக்கு மிகவும் கீழ்ப்படிந்து நடக்கிறவர்கள் மத்தியில் காணப்படுகிறவர்களாக இருக்கவேண்டும்,” என்பதாக ரஸல் எழுதினார்