ராஜ்ய அறிவிப்பாளர் அறிக்கை
“உமது கற்பனைகளெல்லாம் உண்மை”
மோசே தான் மரிப்பதற்கு சற்று முன், யெகோவாவினுடைய கட்டளைகள் ஒவ்வொன்றுக்கும் கீழ்ப்படியுமாறு இஸ்ரவேல் ஜனத்தாரை அறிவுறுத்தினார். அவர் கூறினார்: “இந்த நியாயப்பிரமாண வார்த்தைகளின்படியெல்லாம் உங்கள் பிள்ளைகள் செய்யும்படி கவனமாயிருக்க, நீங்கள் அவர்களுக்குக் கற்பிக்கும்படி, நான் இன்று உங்களுக்குச் சாட்சியாய் ஒப்புவிக்கிற வார்த்தைகளையெல்லாம் உங்கள் மனதிலே வையுங்கள். இது உங்களுக்கு வியர்த்தமான காரியம் அல்லவே; இது உங்கள் ஜீவனாயிருக்கிறது.”—உபாகமம் 32:46, 47.
நூற்றுக்கணக்கான ஆண்டுகளுக்குப் பின்னர், “கர்த்தாவே, நீர் சமீபமாயிருக்கிறீர்; உமது கற்பனைகளெல்லாம் உண்மை” என்று சங்கீதக்காரன் கூறியபோது கடவுளுடைய எல்லா போதனைகளின் முக்கியத்துவத்தை மேம்படுத்திக்காட்டினார். (சங்கீதம் 119:151) முதல் நூற்றாண்டில் இயேசு தாமே, ‘தேவனுடைய வாயிலிருந்து புறப்படுகிற ஒவ்வொரு வார்த்தையின்’ மதிப்பைக் குறிப்பிட்டார். (மத்தேயு 4:4) கடவுளின் வழிநடத்துதலின்கீழ், அப்போஸ்தலனாகிய பவுல் எழுதினார், “வேதவாக்கியம் முழுவதும் கடவுளால் ஏவப்பட்டது, பயனுள்ளது.”—2 தீமோத்தேயு 3:16, NW.
தெளிவாகவே, யெகோவா தேவன், தம்முடைய வார்த்தையில் நமக்குத் தெரிவித்துள்ள முழு செய்திக்கும் கருத்தூன்றிய சிந்தையைக் கொடுக்கும்படி தம்முடைய வணக்கத்தாரிடம் அவர் எதிர்பார்க்கிறார். பைபிளில், மதிப்பின்றி ஒரு பகுதிக்கூட இல்லை. இவ்விதமாகத்தான் கடவுளுடைய வார்த்தையைப்பற்றி யெகோவாவின் சாட்சிகள் உணருகிறார்கள் என்பதை மாரிஷியஸிலிருந்து வரும் பின்வரும் அனுபவம் சித்தரிக்கிறது.
திரு. டி என்பவர் ஒரு குக்கிராமத்தில் வாழ்ந்துவந்தார், அங்கே இரவு காவலராக இருந்தார். நீண்ட காலமாகவே, கடவுளை வழிபடுவதற்கான சரியான வழியை அவர் உண்மையிலேயே தேடிக்கொண்டிருந்தார். இரவுவேளைகளில் அவர் காவல்புரியும்போது, பைபிளை படிக்க ஆரம்பித்தார். முடிவாக, முழு பைபிளையும் அவர் படித்துவிட்டிருந்தார். கடவுளுடைய பெயர் யெகோவா என்று கற்றுக்கொண்டார், அந்தப் பெயர் அவருடைய ஹிந்தி பைபிளில் பலமுறை வருகிறது. வெளிப்படுத்துதல் புத்தகம் விசேஷமாக ஆவலைத்தூண்டுவதாய் இருக்க கண்டார்.
பிறகு, பைபிளை முழுமையாகப் பின்பற்றிய மதம் எங்கேனும் இருக்குமா என்று தன்னைத்தானே கேட்டுக்கொண்டார். அவர் அறிமுகமாகியிருந்த மதங்கள், அதிக சாதகமான சூழ்நிலைமைகளிலும் பைபிளின் சில பகுதிகளையே வெறுமனே பின்பற்றின. சில மதங்கள் எபிரெய வேதாகமத்தை ஏற்றுக்கொண்டன, கிறிஸ்தவ கிரேக்க வேதாகமத்தைப் புறக்கணித்தன. மற்ற மதங்கள் கிறிஸ்தவ கிரேக்க வேதாகமத்துக்கு மட்டும் நடைமுறையான மதிப்பைக் காண்பித்து, எபிரெய வேதாகமத்தை அசட்டை செய்தன.
ஒருநாள் திரு. டி ஒரு தம்பதி மழையில் நனைந்துகொண்டிருந்ததைப் பார்த்து, அவர்களைத் தன் வீட்டில் ஒதுங்கும்படி அழைத்தார். அவர்கள் யெகோவாவின் சாட்சிகளாக இருந்தார்கள். மனைவியானவர் வெளிப்படுத்துதல்—அதன் மகத்தான உச்சக்கட்டம் சமீபித்துவிட்டது!a என்ற புத்தகத்தைப் பிடித்துக்கொண்டிருந்தார். உடனே திரு. டி அந்தப் புத்தகத்தைக் கேட்டார். வெளிப்படுத்துதலின் தீர்க்கதரிசன பொருளை அவர் புரிந்துகொள்ள மிகவும் கடினமாக இருக்கும் என்று அந்தச் சாட்சிகள் நினைத்தார்கள், எனவே அதற்குப் பதிலாக வேறொரு பிரசுரத்தை அளித்தார்கள். ஆனால், திரு. டி வெளிப்படுத்துதல் புத்தக்கத்தைப் பெறுவதிலேயே குறியாக இருந்தார்.
அவருடைய பிரதி கிடைத்ததும், அந்தப் புத்தகத்தைச் சீக்கிரத்தில் படித்தார். பிறகு அவர் யெகோவாவின் சாட்சிகளிடம் பைபிள் படிப்பை ஏற்றுக்கொண்டார். சாட்சிகள் முழு பைபிளையும் உயர்ந்த மதிப்புக்குரியதாகக் கருதுகிறார்கள் என்ற உண்மையினால் வெகுவிரைவிலேயே அவர் கவரப்பட்டார். யெகோவாவின் சாட்சிகளினுடைய ராஜ்ய மன்றத்தில் நடக்கும் கூட்டங்களுக்கு ஒழுங்காக வர ஆரம்பித்தார், அங்கே எபிரெய வேதாகமமும் கிறிஸ்தவ கிரேக்க வேதாகமமும் கவனமாகப் படிக்கப்படுகின்றன. இப்பொழுது அவர் ஒரு ராஜ்ய அறிவிப்பாளராகவும் கிறிஸ்தவ சபையின் முழுக்காட்டப்பட்ட ஒரு நபராகவும் இருக்கிறார்.
[அடிக்குறிப்பு]
a உவாட்ச் டவர் பைபிள் அண்ட் டிராக்ட் சொஸைட்டி ஆஃப் இண்டியாவால் பிரசுரிக்கப்பட்டது.