மைக்கல்ஃபாரடே—விஞ்ஞானியும் விசுவாசியும்
“மின்சாரத்தின் தந்தை.” “எக்காலத்திலும் வாழ்ந்தவருள் மிகப் பெரிய ஆய்வாளர் விஞ்ஞானி.” இவை இரண்டும் மைக்கல் ஃபாரடேயைப் பற்றிய விவரிப்புகள். இவர் 1791-ல் இங்கிலாந்தில் பிறந்தார். இவர் கண்டுபிடித்த மின்காந்தத் தூண்டல், மின்சார மோட்டார்களும் மின்சார உற்பத்தி அமைப்பும் உருவாவதற்கு வழிநடத்தினது.
லண்டனில் உள்ள ராயல் இன்ஸ்டிட்யூஷனில் இரசாயனவியலின்பேரிலும் இயற்பியலின்பேரிலும், ஃபாரடே மிகுதியாக சொற்பொழிவாற்றினார். விஞ்ஞானத்தைப் பொதுமக்கள் விரும்பும்படி செய்வதற்கான அவருடைய சொற்பொழிவுகள், சிக்கலான கருத்துக்களைப் புரிந்துகொள்ள இளைஞருக்கு உதவிசெய்தன. பல்கலைக்கழகங்கள் மிகப் பலவற்றிலிருந்து அவர் விருதுகள் பெற்றார். எனினும் விளம்பரத்தை அவர் தவிர்த்தொதுக்கினார். அவர் உள்ளார்வமிகுந்த மதப்பற்றுள்ள மனிதராக இருந்தார், மூன்று அறைகளைக் கொண்டிருந்த அவருடைய குடியிருப்பிடத்தின் தனிமையிலும், தன் குடும்பத்தின் மற்றும் தன் உடன் விசுவாசிகளின் தோழமையிலும் மிக சந்தோஷமுள்ளவராக இருந்தார். “சாண்டமனியர்கள் என்று . . . அறியப்பட்ட, மிகச் சிறியதும் ஏளனமாகக் கருதப்பட்டதுமான, கிறிஸ்தவர்களின் ஒரு பிரிவினர்” என்று, தான் விவரித்தவர்களைச் சேர்ந்தவராக ஃபாரடே இருந்தார். அவர்கள் யார்? அவர்களுடைய நம்பிக்கை என்ன? இது ஃபாரடேயை எவ்வாறு பாதித்தது?
சாண்டமனியர்கள்
“ஃபாரடே குடும்பத்துக்கும் சாண்டமனியர் சர்ச்சுக்கும் இருந்த ஆரம்பகால தொடர்பு, மைக்கல் ஃபாரடேயின் பாட்டி பாட்டனாரால் உறுதிப்படுத்தப்பட்டது” என்று, மைக்கல் ஃபாரடே: சாண்டமனியரும் விஞ்ஞானியும் என்பதன் நூலாசிரியரான ஜியோஃப்ரே கான்டர் குறிப்பிடுகிறார். வட்டாரமாகச் சுற்றிவருபவரும் இங்கிலாந்து சர்ச்சின் கொள்கையை ஒப்புக்கொள்ளாதவருமான ஒரு மதகுருவைப் பின்பற்றினவர்களோடு அவருடைய பாட்டி பாட்டனார் கூட்டுறவு கொண்டிருந்தார்கள். இவருடைய கூட்டாளிகள் சாண்டமனியரின் நம்பிக்கைகளை ஆதரித்தனர்.
ராபர்ட் சாண்டமன் (1718-71), எடின்பர்க்கில் பல்கலைக்கழக மாணாக்கராக, கணக்கியலும், கிரேக்கும், மற்ற மொழிகளும் படித்துக்கொண்டிருந்தபோது, ஒரு நாள், பிரஸ்பிட்டேரியன் மதகுருவாக இருந்து விலகிய ஜாண் கிளாஸ் பிரசங்கிப்பதைச் செவிகொடுத்துக் கேட்டார். தான் கேட்டது, அந்தப் பல்கலைக்கழகத்தை அவர் விட்டுவிலகி, பெர்த்திலிருந்த தன் வீட்டுக்குத் திரும்பிச் சென்று, கிளாஸையும் அவருடைய கூட்டாளிகளையும் சேர்ந்துகொள்ளும்படி அவரைச் செய்வித்தது.
1720-ன் பத்தாண்டுகளில், ஸ்காட்லாந்து சர்ச்சின் போதனைகள் சிலவற்றை, ஜாண் கிளாஸ் சந்தேகிக்கத் தொடங்கியிருந்தார். பைபிளில் குறிப்பிட்டப்பட்டுள்ள இஸ்ரவேல் ஜனம், ஆவிக்குரிய ஒரு ஜனத்தை அடையாளமாகக் குறித்தது, அதன் குடிமக்கள் பல தேச ஜனத்தாரிலிருந்து வந்தவர்கள் என்ற முடிவுக்கு வரும்படி, அவர் கடவுளுடைய வார்த்தையை ஆராய்ந்து படித்தது அவரை வழிநடத்தினது. ஒவ்வொரு தேசத்துக்கும் தனித்தனி சர்ச் இருப்பதற்கான நியாயத்தை அவர் அதில் எங்கும் காணவில்லை.
ஸ்காட்லாந்தில், தண்டீக்குப் புறம்பே, டீலிங்கிலிருந்த தன் சர்ச்சில், அதற்கு மேலும் தனக்கு மன நிம்மதி இராமல், கிளாஸ், ஸ்காட்லாந்து சர்ச்சை விட்டு வெளியேறி, தான் சொந்தமாக கூட்டங்களை நடத்தினார். ஏறக்குறைய நூறு ஆட்கள் அவரைச் சேர்ந்துகொண்டனர். தொடக்கத்திலிருந்தே, தங்கள் தொகுதியில் ஒற்றுமையைக் காத்துவருவதற்கானத் தேவையை அவர்கள் உணர்ந்தனர். தங்களுக்கு உண்டாகக்கூடிய எந்தக் கருத்து வேறுபாடுகளையும் மத்தேயு 18-ம் அதிகாரம், 15-லிருந்து 17 வரையான வசனங்களில் பதிவுசெய்யப்பட்ட, கிறிஸ்துவின் கட்டளைகளைப் பின்பற்றி தீர்க்கும்படி அவர்கள் தீர்மானித்தனர். பின்னால், அவர்கள் வாராந்தரக் கூட்டங்களை நடத்தினர், அங்கே ஒன்றுபட்ட விசுவாசமுடையவர்கள் ஜெபத்துக்காகவும் போதனைக்காகவும் கூடினர்.
வெவ்வேறு தொகுதிகளின் கூட்டங்களுக்கு, போதிய எண்ணிக்கையான ஆட்கள் தவறாமல் வரத் தொடங்கினபோது, அவர்களுடைய வணக்கத்தை மேற்பார்வையிட பொறுப்புள்ள ஆண்கள் தேவைப்பட்டனர். ஆனால் தகுதிபெற்றவர்கள் யார்? இந்தக் காரியத்தின்பேரில் அப்போஸ்தலன் பவுல் எழுதினதற்கு, ஜாண் கிளாஸும் அவரைச் சேர்ந்தவர்களும் முக்கியமாய்க் கவனம் செலுத்தினர். (1 தீமோத்தேயு 3:1-7; தீத்து 1:5-9) பல்கலைக்கழகக் கல்வியோ, எபிரெயுவும் கிரேக்கும் புரிந்துகொள்ள வேண்டுமென்ற தேவையோ அதில் குறிப்பிடப்படுவதாக அவர்கள் காணவில்லை. ஆகையால் வேதப்பூர்வ வழிநடத்துதல்களின்பேரில் ஜெபத்துடன் சிந்தனை செய்த பின்பு, தகுதிபெற்ற ஆண்களை மூப்பர்களாகும்படி அவர்கள் நியமித்தனர். கல்வியறிவு பெறாதவர்களாகிய, “நெசவுத்தறிக்கும், ஊசிக்கும், அல்லது கலப்பைக்கொழுக்குமே பயிற்றுவிக்கப்பட்டிருக்கும்” ஆண்கள், பைபிளைப் புரிந்துகொண்டதாகப் பாவனைச் செய்து அதன் செய்தியைப் பிரசங்கிப்பது, பெரும்பாலும் “தேவதூஷணம்” என்பதாக, ஸ்காட்லாந்து சர்ச்சோடு பற்றுறுதியுடன் இருந்தவர்கள் கருதினர். 1733-ல், கிளாஸும் அவருடைய உடன் விசுவாசிகளும், கூட்டத்திற்கெனத் தங்கள் சொந்த மன்றத்தைப் பெர்த் பட்டணத்தில் கட்டினபோது, அவ்விடத்து மதகுருக்கள், அவர்களை அந்தப் பட்டணத்திலிருந்து வெளியேற்றும்படி மாஜிஸ்ட்ரேட்டுகளை வற்புறுத்த முயற்சி செய்தனர். அவர்கள் தோல்வியடைந்தனர், அந்த இயக்கம் மேலும் வளர்ந்தது.
ராபர்ட் சாண்டமன், கிளாஸின் மூத்த மகளை மணம் செய்து, 26-வது வயதில் கிளாஸைட்டுகளின் பெர்த் சபையில் ஒரு மூப்பரானார். மூப்பராக அவருடைய கடமைகள் அவ்வளவு அதிக பொறுப்பு வாய்ந்தவையாக இருந்ததனால், தன் முழு நேரத்தையும் போதக வேலைக்குச் செலவிடும்படி அவர் தீர்மானித்தார். பிற்பாடு, அவருடைய மனைவி இறந்தப் பின்பு, ராபர்ட், “தான் எங்கு தேவைப்படுகிறாரோ அங்கு கர்த்தரைச் சேவிப்பதற்கு மகிழ்ச்சியுடன் ஒப்புக்கொண்டார்,” என்று சுருக்கமான வாழ்க்கை வரலாற்று விவரம் ஒன்று குறிப்பிடுகிறது.
சாண்டமனியக் கொள்கை பரவுகிறது
சாண்டமன், ஸ்காட்லாந்திலிருந்து இங்கிலாந்துக்குள் தன் ஊழியத்தை ஆர்வத்துடன் விரிவாக்கினார், அங்கே உடன்விசுவாசிகளாலாகிய புதிய தொகுதிகள் பெருகி வளர்ந்தன. அந்தச் சமயத்தில், ஆங்கில கால்வனிஸ்டுகளுக்குள் கருத்துவேறுபாடுகள் உண்டாகியிருந்தன. இரட்சிப்புக்காகத் தாங்கள் முன்னதாகவே நியமிக்கப்பட்டுவிட்டதாக அவர்களில் சிலர் நம்பினர். மறுபட்சத்தில், இரட்சிப்புக்கு விசுவாசம் முதலாவதாகத் தேவை என்ற நம்பிக்கையைக் கடைப்பிடித்தோரை சாண்டமன் ஆதரித்தார். இந்தக் கருத்தை ஆதரித்து, ஒரு புத்தகத்தை அவர் பிரசுரித்தார். அது நான்கு தடவை மறுபடியும் மறுபடியுமாக அச்சடிக்கப்பட்டது, மேலும், இரு அமெரிக்க பதிப்புகளில் தோன்றினது. ஜியோஃப்ரே கான்டர் சொல்வதன்படி, இந்தப் புத்தகத் தொகுப்பு பிரசுரிக்கப்பட்டதுதானே, “அந்த [சாண்டமனியன்] மதப் பிரிவை, அதன் சிறு ஸ்காட்லாந்து தொடக்கங்களிலிருந்து மேம்பட்டு பரவச் செய்த முதன்மையான முக்கிய சம்பவம்” ஆகவிருந்தது.
1764-ல், சாண்டமன், மற்ற கிளாஸைட் மூப்பர்களும் உடன்சேர்ந்து வர, அமெரிக்காவுக்குப் பயணப்பட்டார். இது மிகுந்த விவாதத்தையும் எதிர்ப்பையும் தூண்டிவிட்ட ஒரு சந்திப்பாக இருந்தது. எனினும், டான்பரி, கனெடிகட்டில், இதே மனப்பான்மையுடைய கிறிஸ்தவர்களின் ஒரு தொகுதியை ஸ்தாபிப்பதில் இது பலனடைந்தது.a அங்கு, 1771-ல் சாண்டமன் இறந்தார்.
ஃபாரடேயின் மத நம்பிக்கைகள்
இளம் மைக்கல், தன் பெற்றோரின் சாண்டமனிய போதகங்களை உள்ளார ஏற்றிருந்தார். பைபிள் கற்பித்ததைக் கடைப்பிடிக்காதவர்களிலிருந்து சாண்டமனியர்கள் தங்களைத் தனிப்படுத்தி வைத்துக்கொண்டனரென்று அவர் கற்றறிந்தார். உதாரணமாக, தங்கள் திருமண ஆசாரங்களைச் சட்டப்பூர்வமாய்த் தேவைப்பட்டதற்கு மாத்திரமே மட்டுப்படுத்திக்கொள்ள விரும்பினவர்களாய் ஆங்கிலிக்கன் திருமண ஆராதனையில் பங்குகொள்ள அவர்கள் மறுத்தனர்.
அரசாங்கங்களுக்குக் கீழ்ப்பட்டிருப்பது, எனினும் அரசியலில் நடுநிலை வகிப்பது, சாண்டமனியர்களின் தனித்தன்மையாக இருந்தது. சமுதாயத்தின் மதிப்புபெற்ற உறுப்பினர்களாக இருந்தபோதிலும், அவர்கள் அரசியல் பதவிகளை ஏற்றது வெகு அரிது. அத்தகைய பதவிகளை ஏற்ற ஒருசில சந்தர்ப்பங்களிலும், கட்சி அரசியலை அவர்கள் தவிர்த்தனர். இந்த நிலைநிற்கையைக் காத்துவந்தது அவர்கள்மீது நிந்தனையைக் கொண்டுவந்தது. (யோவான் 17:14-ஐ ஒப்பிடுக.) கடவுளுடைய பரலோக ராஜ்யமே அரசாங்கத்துக்கான பரிபூரண ஏற்பாடு என்று சாண்டமனியர்கள் நம்பினர். அரசியலை, “ஒழுக்கநேர்மை இழந்த அற்ப, விளையாட்டு முறைமையாக அவர்கள் கருதினர்,” என்று கான்டர் குறிப்பிடுகிறார்.
மற்றவர்களிலிருந்து பிரிந்திருந்தபோதிலும், பரிசேயர்களைப் போன்ற சுயநீதியான மனப்பான்மைகளை அவர்கள் ஏற்கவில்லை. இவ்வாறு அவர்கள் கூறினர்: “பூர்வ பரிசேயர்கள் கொண்டிருந்த மனப்பான்மையையும் பழக்கச் செயலையும் தவிர்ப்பது முற்றிலும் அவசியம் என்று நாங்கள் கருதுகிறோம்; ஆகையால், வேதாகமம் குறிப்பிட்டிருக்கிற பாவங்களுக்கு அல்லது கடமைகளுக்கு மேலாக அதிகத்தை உண்டாக்குவதையும், மனித பாரம்பரியங்களால் அல்லது கடமை தவிர்ப்புகளால் கடவுளுடைய கட்டளைகளை அவமாக்குவதையும் நாங்கள் தவிர்ப்போம்.”
தங்கள் உறுப்பினரில் எவராவது, குடிவெறியராக, சட்டத்துக்குப் புறம்பாகப் பணம் பறிப்பவராக, வேசித்தனக்காரராக, அல்லது மற்ற வினைமையான பாவங்களைப் பழக்கமாய்ச் செய்பவராக ஆகிவிட்டால் அந்த நபரை சபைநீக்கம் செய்யும் வேதப்பூர்வ பழக்கத்தை அவர்கள் பின்பற்றினர். அந்தப் பாவி உண்மையில் மனந்திரும்பினால், அவரை மீண்டும் முன்னிலைக்கு நிலைநாட்ட முயற்சி செய்தனர். மற்றபடி, “அந்தப் பொல்லாதவனை . . . தள்ளிப்போடுங்கள்” என்ற வேதப்பூர்வ கட்டளையை அவர்கள் பின்பற்றினார்கள்.—1 கொரிந்தியர் 5:5, 11, 13.
இரத்தத்திற்கு விலகியிருங்கள் என்ற பைபிளில் கொடுக்கப்பட்ட கட்டளைக்கு சாண்டமனியர்கள் கீழ்ப்படிந்தார்கள். (அப்போஸ்தலர் 15:29) நன்மைதீமை அறியத்தக்க விருட்சத்தின் கனியைச் சாப்பிடுவதிலிருந்து விலகியிருக்கும்படி முதல் மனிதருக்குக் கடவுள் கட்டளையிட்டிருந்ததுபோல், இரத்தத்தின்பேரிலான தடையுத்தரவுக்கும், கடவுளுடைய ஜனங்கள் கீழ்ப்படிய வேண்டிய கடமைக்குட்பட்டிருக்கிறார்கள் என்று ஜாண் கிளாஸ் விவாதித்தார். (ஆதியாகமம் 2:16, 17) இரத்தத்தைப் பற்றிய இந்தக் கட்டளைக்குக் கீழ்ப்படியாமற்போவதானது, கிறிஸ்துவினுடைய இரத்தத்தின் சரியான உபயோகத்தை, அதாவது பாவநிவிர்த்தி செய்வதை, வேண்டாமெனத் தள்ளிவிடுவதற்கு ஒப்பாயிருந்தது. கிளாஸ் இவ்வாறு முடித்தார்: “இரத்தத்தைச் சாப்பிடக்கூடாதென்ற இந்தத் தடையுத்தரவு மிக அதிக மற்றும் மிக உயர்ந்த முக்கியத்துவம் உடையதாக எப்போதும் இருந்தது, இன்னும் இருக்கிறது.”
வேதாகமத்தை சாண்டமனியர்கள் பகுத்தாய்ந்ததானது பல படுகுழிகளைத் தவிர்க்க அவர்களுக்கு உதவியது. உதாரணமாக, பொழுதுபோக்கு காரியத்தில், கிறிஸ்துவின் போதனைகளை வழிகாட்டு குறிப்புகளாக அவர்கள் நோக்கினார்கள். “கிறிஸ்து உண்டாக்காத சட்டங்களை நாங்கள் உண்டாக்கவோ, அவர் நமக்கு அளித்துள்ள எவற்றையாவது விலக்கவோ நாங்கள் துணிய மாட்டோம். ஆகையால், பொதுவான அல்லது தனிப்பட்ட இன்பப் பொழுதுபோக்கு தடையுத்தரவிடப்படுவதாக நாங்கள் காணவில்லையாதலால், உண்மையில் பாவமுள்ள சூழ்நிலைகளோடு சம்பந்தப்படாதவரையில் எந்த இன்பப் பொழுதுபோக்கையும் நியாயமானதாக நாங்கள் கருதுகிறோம்,” என்று அவர்கள் சொன்னார்கள்.
சாண்டமனியர்கள் இவ்வாறு வேதாகமத்தில் திருத்தமாய் ஆதாரங்கொண்ட பல கருத்துக்களைக் கடைப்பிடித்தபோதிலும், உண்மையானக் கிறிஸ்தவர்களுக்குத் தனிச்சிறப்பாய் அமையும் அந்த நடவடிக்கையின் முக்கியத்துவத்தை, அதாவது, ஒவ்வொருவரும் ராஜ்யத்தின் நற்செய்தியை மற்றவர்களுக்குப் பிரசங்கிக்க வேண்டும் என்பதை அவர்கள் புரிந்துகொள்ளவில்லை. (மத்தேயு 24:14) எனினும், அவர்களுடைய கூட்டங்களுக்கு வர எல்லாருக்கும் வரவேற்பு இருந்தது, அங்கே, தங்கள் நம்பிக்கைக்கானக் காரணத்தைத் தங்களிடம் கேட்போர் யாவருக்கும் அளிக்க அவர்கள் முயற்சி செய்தனர்.—1 பேதுரு 3:15.
இந்த நம்பிக்கைகளின் மாதிரி விஞ்ஞானி மைக்கல் ஃபாரடேயை எவ்வாறு பாதித்தது?
சாண்டமனியரான ஃபாரடே
தன்னுடைய கண்டுபிடிப்புகளுக்காக மைக்கல் ஃபாரடே மதிப்பளிக்கப்பட்டு, விருதுகள் வழங்கப்பட்டு, உயர்வாக நோக்கப்பட்டபோதிலும், அவர் பகட்டாரவாரமற்ற எளிமையான முறையில் வாழ்ந்தார். பிரசித்திப்பெற்ற ஆட்கள் இறக்கையில், சமுதாயத்தில் பேர்பெற்றவர்கள் அவர்களுடைய சவ அடக்கங்களுக்கு வரும்படி எதிர்பார்க்கப்பட்டனர். ஃபாரடே கவனிக்கத்தக்க விதத்தில் வராதவராக இருந்தார், இங்கிலாந்து சர்ச்சின் ஆராதனைக்கு வந்து, அதில் உட்படுபவராவதற்கு அவருடைய மனச்சாட்சி அனுமதிக்கவில்லை.
விஞ்ஞானியாக ஃபாரடே, உண்மைகளென்று அவர் மெய்ப்பித்துக் காட்டக்கூடியவற்றையே நெருங்கக் கடைப்பிடித்தார். இவ்வாறு அவர், ஆதாரமற்ற தங்கள் சொந்த அனுமானங்களை முன்னேற்றுவித்து விவாதங்களில் ஒருபக்கத்தை ஆதரித்த கற்றறிவாளரான ஆட்களுடன் நெருங்கிய கூட்டுறவைத் தவிர்த்தார். ஒரு கேட்போர் கூட்டத்தினருக்கு அவர் ஒருசமயம் சொன்ன பிரகாரம், ‘அடிப்படையான ஓர் உண்மை ஒருபோதும் நம்மை ஏமாற்றமடைய செய்வதில்லை, அதன் அத்தாட்சி எப்போதும் உண்மையாக உள்ளது.’ ‘கவனமாய்க் கூர்ந்தறியப்பட்ட உண்மைகளின்பேரில்’ விஞ்ஞானம் சார்ந்திருப்பதாக அவர் அதை வருணித்தார். இயற்கையின் மூல ஆற்றல்களின்பேரில் ஒரு பேச்சை முடிப்பவராக, ஃபாரடே, “அவற்றைப் படைத்தவரின்பேரில்” ஆழ்ந்து சிந்திக்கும்படி, தன் பேச்சைக் கேட்டுக்கொண்டிருந்த கூட்டத்தினரை ஊக்குவித்தார். பின்பு, கிறிஸ்தவ அப்போஸ்தலனாகிய பவுல் சொன்னதை அவர் மேற்கோளாகக் குறிப்பிட்டார்: “காணப்படாதவைகளாகிய அவருடைய நித்திய வல்லமை தேவத்துவம் என்பவைகள், உண்டாக்கப்பட்டிருக்கிறவைகளினாலே, உலகமுண்டானதுமுதற்கொண்டு, தெளிவாய்க் காணப்படும்.”—ரோமர் 1:20.
கடவுளுடைய ஏவப்பட்ட வார்த்தையிலிருந்தும் அதோடுகூட இயற்கையின் புத்தகத்திலிருந்தும் கற்றுக்கொள்ள வேண்டுமென்ற அவருடைய ஆவலே, மற்ற பல விஞ்ஞானிகளிலிருந்து வேறுபட்டவராக ஃபாரடேயை தனிப்படுத்திக் காட்டியது. “கடவுளுடைய ஒழுக்கச் சட்டத்துக்கும் நித்திய ஜீவனுக்குரிய வாக்குத்தத்தத்துக்கும் கீழ்ப்படிந்து வாழ்வதற்கான வழியைத் தன்னுடைய சாண்டமனியக் கொள்கையின்மூலம் அவர் கண்டுபிடித்தார்,” என்று கான்டர் குறிப்பிடுகிறார். “சர்வலோகத்தை ஆளுவதற்குக் கடவுள் தெரிந்துகொண்டிருந்த இயற்பியல் சார்ந்த சட்டங்களோடு நெருங்கிய தொடர்புக்குள், தன்னுடைய விஞ்ஞானத்தின் மூலம் வந்தார்.” “பைபிளின் தனிமுதலான அதிகாரத்துவம் விஞ்ஞானத்தால் மறைகேடு செய்யப்பட முடியாது, மாறாக விஞ்ஞானம், உண்மையானக் கிறிஸ்தவ முறையில் செயற்படுத்தப்பட்டால், கடவுளுடைய மற்ற புத்தகத்தை ஒளிவிளக்கம் செய்ய முடியும்,” என்று ஃபாரடே நம்பினார்.
மற்றவர்கள் தனக்கு வழங்க விரும்பின சிறப்புப் பட்டங்கள் பலவற்றை ஏற்பதற்கு ஃபாரடே மனத்தாழ்மையுடன் மறுத்துவிட்டார். பிரபு பட்டத்தில் அக்கறையின்மையை அவர் தொடர்ந்து வெளிப்படுத்தினார். ‘வெறும் மிஸ்டர் ஃபாரடேயாக’ தொடர்ந்திருக்கவே அவர் விரும்பினார். நார்ஃபக் நாட்டுப்புறத்தில் வாழ்ந்த, தன்னைப்போன்ற விசுவாசிகளின் ஒரு சிறிய தொகுதியைக் கவனிப்பதற்காக தலைநகரிலிருந்து அங்கு தவறாமல் பயணப்பட்டுச் சென்று வந்தது உட்பட, மூப்பராகத் தன் வேலைகளுக்கு மிகுதியான நேரத்தைச் செலவிட்டார்.
ஆகஸ்ட் 25, 1867-ல் மைக்கல் ஃபாரடே இறந்து, வட லண்டனில் ஹைகேட்டிலுள்ள பிணம் புதைக்குமிடத்தில் புதைக்கப்பட்டார். ஃபாரடே “வேறு எந்த இயற்பியல் விஞ்ஞானியைப் பார்க்கிலும் அதிகமான, கலப்பற்ற விஞ்ஞான சாதனையின் அத்தாட்சியைச் சந்ததியாருக்கு விட்டுச் சென்றார், மற்றும் அவருடைய கண்டுபிடிப்புகளின் செயல்முறைக்குகந்த பலன்கள் நாகரீக பண்பாட்டு வாழ்க்கையின் இயல்பை மிக ஆழ்ந்த முறையில் நன்மைக்கேதுவாகப் பாதித்திருக்கிறது,” என்று வாழ்க்கை வரலாற்று ஆசிரியர் ஜாண் தாமஸ் நமக்குச் சொல்கிறார். ஃபாரடேயை இழந்த விதவையாகிய சாரா, இவ்வாறு எழுதினார்கள்: “அவருடைய வழிகாட்டியும் சட்டமுமாக இருந்ததென புதிய ஏற்பாட்டையே நான் குறித்துக் காட்ட முடியும்; ஏனெனில் அதைக் கடவுளுடைய வார்த்தையாக அவர் கருதினார் . . . அது எழுதப்பட்டபோது இருந்ததுபோல் தற்போதைய நாளிலும் கிறிஸ்தவர்களின்பேரில் சமமானக் கட்டுப்பாடாக அமைந்துள்ளது.”—தன் விசுவாசத்தின்படி கடவுள் பக்தியுடன் வாழ்ந்தவரான மதிப்புக்குரிய ஒரு விஞ்ஞானிக்குச் சொல்வன்மையான சாட்சியம்.
[அடிக்குறிப்பு]
a ஐக்கிய மாகாணங்களில் கடைசியாக மீந்திருந்த சாண்டமனிய அல்லது கிளாஸைட் தொகுதி, கடைசியாக இந்த நூற்றாண்டின் தொடக்கத்தில் இனிமேலும் இல்லாமல் முடிவடைந்தது.
[பக்கம் 29-ன் பெட்டி]
பிரிட்டனின் ராயல் இன்ஸ்டிட்யூஷனில் சொற்பொழிவாளராக அமர்த்தப்பட்டவராக, மைக்கல் ஃபாரடே, விஞ்ஞானத்தை இளைஞர்கூட புரிந்துகொள்ளும் வகையில் எடுத்துக் கூறினார். உடன் சொற்பொழிவாளர்களுக்கு அவர் கொடுத்த அறிவுரையில், யாவரறிய போதிக்கிற தற்கால கிறிஸ்தவர்கள் கவனிக்க வேண்டிய நடைமுறைக்குகந்த ஆலோசனைகள் அடங்கியுள்ளன.
◻ “பேச்சு வேகமாகவும் விரைவாகவும், அதன் விளைவாக புரிந்துகொள்ள முடியாததாகவும் இருக்கக்கூடாது; மாறாக ஆர்ந்தமர்ந்து, உளமார்ந்த உணர்ச்சியுடன் இருக்க வேண்டும்.”
◻ ஒரு பேச்சாளர், தன் சபையாரின் அக்கறையை, “சொற்பொழிவின் தொடக்கத்திலும், உணரமுடியாத மாறுதல் வரிசைப்படி நிலைகள்மூலமும் சபையார் அறியாத வகையில் எழுப்பி, அந்தப் பேச்சு விஷயம் தேவைப்படுத்தும் வரை அதை உயிர்ப்புள்ளதாக வைக்க” முயற்சி செய்ய வேண்டும்.
◻ “ஒரு சொற்பொழிவாளர், கைதட்ட வைப்பதற்காக தன் பேச்சைக் கீழ்த்தரப்படுத்தி, மெச்சுதலுக்காகக் கேட்கையில், தன் பண்புக்குரிய உண்மையான மதிப்புக்கு மிகக் கீழாக வீழ்கிறவராகிறார்.”
◻ குறிப்புத்தாள் பயன்படுத்துவதன்பேரில்: “[இவ்வாறு] நான் எப்போதும் செய்துதீரவேண்டியதாகக் காண்கிறேன் . . . காகிதத்தில் [பேச்சுப் பொருளின்பேரில்] ஒரு திட்டத்தை வரைந்து, சம்பந்தப்படுத்துவதனாலோ, மற்றபடியோ அந்தப் பாகங்களை நினைவுக்குக் கொண்டுவந்து நிரப்புவது. . . . பெரும் தலைப்புகளையும் சிறு தலைப்புகளையும் வரிசையாக ஒழுங்குபடி நான் வைத்திருக்கிறேன், இவற்றிலிருந்து என் பேச்சுப்பொருளுக்குரிய விஷயங்களை
நான் கிரகித்தறிந்துகொள்கிறேன்.”
[பக்கம் 26-ன் படத்திற்கான நன்றி]
Both pictures: By courtesy of the Royal Institution