எப்பாப்பிரோதீத்து—பிலிப்பியருக்கு தூதுவர்
“நீங்கள் கர்த்தருக்குள் மிகுந்த சந்தோஷத்தோடே அவனை ஏற்றுக்கொண்டு, இப்படிப்பட்டவர்களைக் கனமாய் எண்ணுங்கள்,” என்று பவுல் பிலிப்பியருக்கு எழுதினார். ஒரு கிறிஸ்தவ கண்காணி நம்மைக் குறித்து இப்படிப்பட்ட பாராட்டு தெரிவிக்கும் வார்த்தைகளை கூறினால் நாம் சந்தோஷப்படுவோம் என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை. (பிலிப்பியர் 2:29) ஆனால் பவுல் யாரைப் பற்றி பேசிக்கொண்டிருந்தார்? அப்படிப்பட்ட அன்பான பாராட்டுதலுக்கு தகுதிபெற அந்த நபர் என்ன செய்திருந்தார்?
முதல் கேள்விக்கான பதில் எப்பாப்பிரோதீத்து. இரண்டாவது கேள்விக்கு பதிலளிக்க, இந்த வார்த்தைகளை எழுதுவதற்கு பவுலை தூண்டிய சூழ்நிலையை நாம் சிந்திப்போம்.
பவுல் ஆலயத்துக்கு வெளியே இழுத்துச் செல்லப்பட்டு, எருசலேமில் மிகவும் கோபமாயிருந்த ஜனக்கூட்டத்தால் அடிக்கப்பட்டு, அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்டு, பின்னர் அவரைக் குறித்து தீர்மானம் எதுவும் எடுக்கப்படாமல் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டு சங்கிலிகளினால் கட்டப்பட்டு ரோமுக்கு மாற்றப்பட்டார் என்று சுமார் பொ.ச. 58-ல் பிலிப்பியர் கேள்விப்பட்டனர். (அப்போஸ்தலர் 21:27-33; 24:27; 27:1) அவருடைய நலனைக் குறித்து கவலைப்பட்ட பிலிப்பியர், அவருக்காக என்ன செய்யக்கூடும் என்று தங்களையே கேட்டுக்கொண்டிருக்க வேண்டும். அவர்கள் பொருள் சம்பந்தமாக ஏழைகளாக இருந்ததாலும் பவுலை விட்டு வெகுதொலைவில் இருந்ததாலும், அவர்கள் அளிக்கக்கூடிய உதவி குறைவாகவே இருந்தது. இருப்பினும், கடந்தகாலத்தில் அவருடைய ஊழியத்தை ஆதரிப்பதற்கு பிலிப்பியரை தூண்டுவித்த அன்பான உணர்வு அவர்களை இன்னும் உந்துவித்துக் கொண்டிருந்தது; இப்போது அவர் இக்கட்டான சூழ்நிலையில் இருந்ததன் காரணமாக அந்த உணர்வு இன்னும் அதிகமாய் இருந்தது.—2 கொரிந்தியர் 8:1-4; பிலிப்பியர் 4:16.
அவர்களில் ஒருவர் வெகுமதியோடு சென்று பவுலைச் சந்தித்து, ஏதாவது தேவைப்படுமென்றால் அதை அவருக்கு அளித்து உதவலாமா என்பதைக் குறித்து பிலிப்பியர் சிந்தித்துப் பார்த்திருக்க வேண்டும். ஆனால் அது மிகவும் நீண்ட பயணமாயும் களைப்படையச் செய்யும் பயணமாயும் இருந்தது, மேலும் அவருக்கு உதவி செய்வது ஆபத்தானதாய் இருக்கக்கூடும்! யோயாக்கிம் நில்க்கா குறிப்பிடுகிறார்: “சிறையிலிருப்பவரைச் சந்திப்பதற்கு தைரியம் தேவைப்பட்டது, விசேஷமாக ‘குற்றச்செயல்’ தெளிவாக விளக்கப்படாமல் இருந்த ஒருவரை சந்திப்பதற்கு தைரியம் இன்னும் கூடுதலாக தேவைப்பட்டது.” எழுத்தாளர் பிரயன் ராப்ஸ்க்கே சொல்கிறார்: “சிறைவாசியிடமோ அல்லது அவருடைய எண்ணங்கள் பேரிலோ பரிவிரக்கம் தெரிவித்தாலோ அல்லது வெறுமனே மிகவும் நெருக்கமாக கூட்டுறவு கொண்டாலோ கூடுதலான ஆபத்து இருந்தது. . . . எவ்வித உள்நோக்கமுமின்றி சொல்லப்படும் சொல்லோ அல்லது செய்யப்படும் செயலோ சிறைவாசியின் மரணத்துக்கு மட்டுமல்லாமல் உதவி செய்பவரின் மரணத்துக்கும்கூட வழிநடத்தக்கூடும்.” பிலிப்பியர் யாரை அனுப்புவது?
இவ்வகையான பயணம் கவலையையும் அநிச்சயத்தையும் எழுப்பியிருக்கக்கூடும் என்று நாம் சரியாகவே கற்பனை செய்யலாம்; ஆனால் எப்பாப்பிரோதீத்து (கொலோசெயிலிருந்த எப்பாப்பிராவோடு குழப்பிக்கொள்ளக் கூடாது) அந்தக் கடினமான பணியை மேற்கொள்வதற்கு விருப்பமுள்ளவராயிருந்தார். அவருடைய பெயரை சிந்தித்துப் பார்க்கையில், ஆஃபிரோடைட் (ஆங்கிலம்) என்ற பெயர் அதில் சேர்க்கப்பட்டிருப்பது, அவர் கிறிஸ்தவ மதத்துக்கு மாறியிருந்த புறஜாதியாராய் ஒருவேளை இருந்திருக்கலாம் என்பதைக் காண்பிக்கிறது—அன்புக்கும் கருவளத்துக்குமான கிரேக்க தேவதையின் பேரில் பக்தியாயிருந்த பெற்றோரின் மகன் அவர். பிலிப்பியரின் தாராள குணத்துக்காக நன்றி தெரிவித்து பவுல் அவர்களுக்கு எழுதியபோது, அவர் எப்பாப்பிரோதீத்துவை ‘உங்கள் ஸ்தானாபதியும், என் குறைச்சலுக்கு உதவிசெய்தவனும்’ என்று சரியாகவே அவரை விவரித்தார்.—பிலிப்பியர் 2:25.
இந்தச் சேவையில் பவுலுக்காகவும் தன் சொந்த சபைக்காகவும் தன்னைப் பயன்படுத்திக்கொள்வதற்கு அவர் தயாராக இருந்த புகழத்தக்க குணம் அவரிடம் இருந்தபோதிலும், நமக்கு இருக்கும் அதேவகையான பிரச்சினைகள் எப்பாப்பிரோதீத்துவுக்கு இருந்தன என்பதை அவரைக் குறித்து பைபிள் சொல்பவற்றிலிருந்து நாம் புரிந்துகொள்ள முடிகிறது. அவருடைய முன்மாதிரியை நாம் சிந்திப்போம்.
‘என் குறைச்சலுக்கு உதவிசெய்தவன்’
நமக்கு விவரங்கள் தெரியாது, ஆனால் பயணம் செய்த களைப்போடு எப்பாப்பிரோதீத்து ரோம் போய் சேர்ந்திருப்பார் என்று நாம் கற்பனை செய்துகொள்ளலாம். அவர் ஒருவேளை மக்கெதோனியாவின் வழியே குறுக்காக வளைந்து வளைந்து சென்ற வியா எக்னேஷியா என்ற ரோம சாலை வழியாய் பயணம் செய்திருக்கலாம். அவர் ஏட்ரியாடிக் கடலைக் கடந்து இத்தாலிய தீபகற்பத்தின் “குதிங்கால்” போன்ற பகுதிக்குச் சென்று பின்னர் ஏப்பியன் வே வழியாய் ரோமுக்கு சென்றிருக்கக்கூடும். அது களைப்படையச் செய்யும் பயணமாக (ஒரு வழி செல்வதற்கு 1,200 கிலோமீட்டர்) ஒரு மாதத்துக்கும் மேலாக ஒருவேளை எடுத்திருக்கக்கூடும்.—பக்கம் 29-ல் உள்ள பெட்டியைப் பார்க்கவும்.
என்ன மனநிலையோடு எப்பாப்பிரோதீத்து தன் பணியை ஆரம்பித்தார்? அவர் பவுலுக்கு ‘தனிப்பட்ட சேவை’ அல்லது லீட்டர்கியா (lei·tour·giʹa) செய்வதற்கு அனுப்பப்பட்டிருந்தார். (பிலிப்பியர் 2:30) ஒரு குடிமகன் அரசாங்கத்துக்காக தானாகவே மனமுவந்து மேற்கொள்ளும் வேலையை இந்தக் கிரேக்க வார்த்தை மூல மொழியில் குறிப்பிட்டது. அந்த வேலையை செய்வதற்கு குறிப்பாக தகுதி பெற்றிருக்கும் குடிமக்களை அரசு கட்டாயமாக தேவைப்படுத்தியதை அது பின்னர் அர்த்தப்படுத்தியது. கிரேக்க வேதாகமத்தில் இந்த வார்த்தை பயன்படுத்தியிருக்கும் விதத்தைக் குறித்து ஒரு கல்விமான் சொல்கிறார்: “கிறிஸ்தவர் என்பவர் கடவுளுக்காகவும் மனிதருக்காகவும் வேலை செய்யும் ஒரு நபர், ஏனென்றால் முதலாவதாக அவர் முழு இதயத்தோடு வேலை செய்ய விரும்புகிறார், இரண்டாவதாக அவர் கட்டாயப்படுத்தப்படுகிறார், ஏனென்றால் கிறிஸ்துவின் அன்பு அவரைக் கட்டாயப்படுத்துகிறது.” ஆம், எப்பாப்பிரோதீத்து என்னே ஒரு மிகச்சிறந்த மனப்பான்மையைக் காண்பித்தார்!
“அவன் தன் பிராணனையும் எண்ணாமல்”
சூதாட்டத்தில் பயன்படுத்திய சொல்லை உபயோகித்து, எப்பாப்பிரோதீத்து ‘தன் பிராணனையும் எண்ணாமல் [பாராபோலிசமேனாஸ் (pa·ra·bo·leu·saʹme·nos)] மரணத்திற்குச் சமீபமாயிருந்தான்,’ அல்லது சொல்லர்த்தமாக, “கிறிஸ்துவின் சேவைக்காக தன் ஜீவனை ஆபத்துக்குள்ளாக்கினார்,” என்று பவுல் சொல்கிறார். (பிலிப்பியர் 2:30) எப்பாப்பிரோதீத்து முட்டாள்தனமாக எதையும் செய்தார் என்று நாம் நினைத்துக்கொள்ள வேண்டாம்; மாறாக, அவர் செய்த பரிசுத்த சேவையின் நிறைவேற்றம் ஒரு குறிப்பிட்ட ஆபத்தை உட்படுத்தியது. அவர் ஒருவேளை கடுமையான சீதோஷ்ண நிலை நிலவிய சமயத்தின்போது இடருதவி பணியை மேற்கொள்ள முயற்சி செய்தாரா? பயணத்தின்போது வழியில் நோயுற்ற பிறகு, அப்பயணத்தை முடிப்பதற்கு எடுத்த முயற்சியில் அவர் விடாமுயற்சியுடன் இருந்தாரா? எதுவாயிருப்பினும், எப்பாப்பிரோதீத்து “வியாதிப்பட்டு மரணத்திற்குச் சமீபமாயிருந்தது மெய்தான்.” அவர் பவுலோடு தங்கியிருந்து சேவை செய்ய வேண்டும் என்று நோக்கம் கொண்டிருந்தார், ஆகையால் எதிர்பார்த்ததற்கு முன்பே எப்பாப்பிரோதீத்து ஏன் திரும்பி வர வேண்டும் என்று அப்போஸ்தலன் விளக்க விரும்பினார்.—பிலிப்பியர் 2:27.
இருப்பினும், எப்பாப்பிரோதீத்து ஒரு தைரியமுள்ள நபராக இருந்தார், தேவையில் இருப்பவர்களுக்கு உதவியளிக்க தன்னையே சுயநலமற்றவிதத்தில் அளிக்க விரும்பினார்.
‘கடினமான சூழ்நிலைகளின் மத்தியில் இருக்கும் என் ஆவிக்குரிய சகோதரர்களுக்கு உதவிட நான் எந்த அளவுக்கு செல்வேன்?’ என்று நம்மைநாமே கேட்டுக்கொள்ளலாம். அப்படி தயாராக இருக்கும் மனநிலை கிறிஸ்தவர்களுக்கு கட்டாயமற்ற ஒன்றல்ல. இயேசு சொன்னார்: ‘நீங்கள் ஒருவரிலொருவர் அன்பாயிருங்கள்; நான் உங்களில் அன்பாயிருந்ததுபோல நீங்களும் ஒருவரிலொருவர் அன்பாயிருங்கள் என்கிற புதிதான கட்டளையை உங்களுக்குக் கொடுக்கிறேன்.’ (யோவான் 13:34) எப்பாப்பிரோதீத்து தன் சேவையை ‘மரணத்திற்கு சமீபமாயிருக்கும்வரை’ நிறைவேற்றினார். அப்படியென்றால் பிலிப்பியர் பெற்றிருக்க வேண்டும் என்று பவுல் விரும்பிய “மனநிலைக்கு” எடுத்துக்காட்டாக எப்பாப்பிரோதீத்து இருந்தார். (பிலிப்பியர் 2:5, 8, 30, கிங்டம் இன்டர்லீனியர்) நாம் அந்த அளவுக்கு செல்ல தயாராக இருப்போமா?
அவ்வாறு இருந்தபோதிலும் எப்பாப்பிரோதீத்து மனச்சோர்வடைந்தார். ஏன்?
அவருடைய மனச்சோர்வு
எப்பாப்பிரோதீத்து இருந்த சூழ்நிலையில் உங்களை வைத்துப் பாருங்கள். பவுல் அறிக்கை செய்தார்: “அவன் உங்கள் எல்லார்மேலும் வாஞ்சையுள்ளவனும், தான் வியாதிப்பட்டதை நீங்கள் கேள்விப்பட்டதினாலே மிகவும் வியாகுலப்படுகிறவனுமாயிருந்தான்.” (பிலிப்பியர் 2:26) தான் நோயுற்றிருந்ததையும் அவர்கள் விரும்பிய விதத்தில் பவுலுக்கு உதவிசெய்ய முடியவில்லை என்பதையும் தன் சபையிலிருந்த சகோதரர்கள் அறிந்திருந்தார்கள் என்பதை எப்பாப்பிரோதீத்து அறிந்திருந்தார். உண்மையில், எப்பாப்பிரோதீத்து பவுலுக்கு கூடுதலான கவலையை ஏற்படுத்தியிருந்தார் என்பதாக தோன்றலாம். பவுலின் தோழராயிருந்த மருத்துவர் லூக்கா எப்பாப்பிரோதீத்துவை கவனித்துக்கொள்வதற்காக மற்ற விஷயங்களை கவனியாமல் விட்டுவிட வேண்டுமா?—பிலிப்பியர் 2:27, 28; கொலோசெயர் 4:14.
பெரும்பாலும் இந்தச் சூழ்நிலையின் காரணமாக, எப்பாப்பிரோதீத்து மனச்சோர்வடைந்தார். ஒருவேளை தான் தகுதியில்லாதவர் என்று தன் சபையிலிருந்த சகோதரர்கள் கருதுவதாக அவர் கற்பனை செய்திருக்கலாம். அவர் ஒருவேளை குற்ற உணர்வுள்ளவராகவும் தன்னுடைய உண்மைத்தன்மையைக் குறித்து அவர்களுக்கு மறுபடியும் உறுதியளிப்பதற்காக அவர்களைக் காண ‘வாஞ்சையுள்ளவராகவும்’ இருந்திருக்கலாம். “மனச்சோர்வடைந்திருப்பது” என்று எப்பாப்பிரோதீத்துவினுடைய நிலையை விவரிப்பதற்கு பவுல் அடிமானியோ (a·de·mo·neʹo) என்ற மிகவும் கடுமையான கிரேக்க சொல்லை பயன்படுத்தினார். கல்விமான் ஜே. பி. லைட்புட் என்பவரின்படி, “சரீர கோளாறு அல்லது வேதனை, அவமானம், ஏமாற்றம் போன்றவற்றால் ஏற்படும் மன வருத்தம் உண்டாக்கும் குழம்பிய, அமைதியற்ற, கவனத்தை சிதறடிக்கும் நிலையை” இந்த வார்த்தை குறிப்பிடலாம். இயேசு கெத்செமனே தோட்டத்தில் அனுபவித்த கடுமையான மனவேதனையைக் குறிக்கும் சொல்லுக்கு மட்டுமே இந்தக் கிரேக்க வார்த்தை வேதாகமத்தில் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.—மத்தேயு 26:37.
எதிர்பாராத விதத்தில் தங்களுடைய தூதுவர் திரும்பி வருவதை விளக்கும் ஒரு கடிதத்தோடு எப்பாப்பிரோதீத்துவை பிலிப்பியரிடம் மறுபடியுமாக திரும்பி அனுப்புவதே சிறந்த காரியம் என்ற முடிவுக்கு பவுல் வந்தார். “எப்பாப்பிரோதீத்துவை உங்களிடத்தில் அனுப்பவேண்டுமென்று எண்ணினேன்,” என்று சொல்வதன் மூலம் அவர் திரும்பி வருவதற்கான பொறுப்பை பவுல் ஏற்றுக்கொள்கிறார்; எப்பாப்பிரோதீத்து தவறினதன் காரணமாக வருகிறார் என்று நினைத்து எழக்கூடிய சந்தேகத்தை இவ்வாறு நீக்கிப்போட்டார். (பிலிப்பியர் 2:25) அதற்கு மாறாக, எப்பாப்பிரோதீத்து தன் பணியை நிறைவேற்றி முடிப்பதற்காக ஏறக்குறைய தன் ஜீவனை இழந்த நிலையில் இருந்தார்! “ஆனபடியினாலே நீங்கள் கர்த்தருக்குள் மிகுந்த சந்தோஷத்தோடே அவனை ஏற்றுக்கொண்டு, இப்படிப்பட்டவர்களைக் கனமாய் எண்ணுங்கள். ஏனெனில் நீங்கள் எனக்குச் செய்யவேண்டிய ஊழியத்திலே உங்கள் குறைவை நிறைவாக்கும்படிக்கு, அவன் தன் பிராணனையும் எண்ணாமல், கிறிஸ்துவின் ஊழியத்தினிமித்தம் மரணத்திற்குச் சமீபமாயிருந்தான்,” என்று பவுல் அன்பாக அவர்களிடம் சிபாரிசு செய்கிறார்.—பிலிப்பியர் 2:29, 30.
“இப்படிப்பட்டவர்களைக் கனமாய் எண்ணுங்கள்”
எப்பாப்பிரோதீத்துவை போலவே மனநிலையை உடைய ஆண்களுக்கும் பெண்களுக்கும் உண்மையிலேயே போற்றுதல் தெரிவிக்க வேண்டும். அவர்கள் சேவை செய்வதற்காக தங்களையே தியாகம் செய்கின்றனர். மிஷனரிகள், பயணக் கண்காணிகள் போன்றவர்கள், அல்லது உவாட்ச் டவர் கிளையலுவலகங்களில் ஒன்றில் சேவிப்பவர்கள் வீட்டிலிருந்து வெகு தொலைவில் இருந்து சேவிப்பதற்கு தங்களையே அளித்திருப்பதைக் குறித்து சிந்தித்துப் பாருங்கள். சிலர் வயதின் காரணமாகவோ அல்லது படிப்படியாகத் தளர்வுறும் ஆரோக்கியத்தின் காரணமாகவோ முன்பு செய்ததுபோல் செய்ய முடியாமலிருக்கலாம், அவர்கள் பல ஆண்டுகளாக செய்த உண்மையுள்ள சேவைக்காக மரியாதையும் கண்ணியமும் பெறத் தகுதியுள்ளவர்கள்.
இருப்பினும், மனச்சோர்வு அல்லது குற்ற உணர்ச்சிகளுக்கு தளர்வூட்டும் நோய் காரணமாய் இருக்கலாம். ஒருவர் அதிகத்தைச் செய்ய விரும்பலாம். அது எவ்வளவு ஏமாற்றம்! அப்படிப்பட்ட சூழ்நிலையில் இருக்கும் எவரும் எப்பாப்பிரோதீத்துவிடமிருந்து கற்றுக்கொள்ளலாம். அதைச் சற்று சிந்தித்துப் பார்த்தால், அவர் நோயுற்றது அவருடைய தவறா? நிச்சயமாகவே இல்லை! (ஆதியாகமம் 3:17-19; ரோமர் 5:12) கடவுளுக்கும் சகோதரர்களுக்கும் சேவை செய்ய வேண்டும் என்று எப்பாப்பிரோதீத்து விரும்பினார், ஆனால் நோய் அவரைத் தடைசெய்தது.
நோயால் ஏற்பட்ட மனச்சோர்வின் காரணமாக எப்பாப்பிரோதீத்துவை பவுல் கடிந்துகொள்ளவில்லை, ஆனால் அவரிடம் நெருக்கமாக இருக்கும்படி பிலிப்பியருக்கு கூறினார். அதேபோல், நம் சகோதரர்கள் மனச்சோர்வுற்றிருக்கையில் அவர்களை நாம் ஆறுதல்படுத்த வேண்டும். அவர்களுடைய உண்மைத்தன்மையுள்ள முன்மாதிரியான சேவையைக் குறித்து நாம் அவர்களை போற்றலாம். எப்பாப்பிரோதீத்துவை பாராட்டி அவரைக் குறித்து பவுல் உயர்வாக பேசியது, அவரை ஆறுதல்படுத்தி, அவருடைய மனச்சோர்வை நீக்கியிருக்க வேண்டும். ‘நம் கிரியையையும், நாம் பரிசுத்தவான்களுக்கு ஊழியஞ்செய்ததினாலும் செய்து வருகிறதினாலும் தமது நாமத்திற்காகக் காண்பித்த அன்புள்ள பிரயாசத்தையும் மறந்துவிடுகிறதற்குத் தேவன் அநீதியுள்ளவரல்லவே,’ என்பதைக் குறித்து நாமும்கூட நிச்சயமாயிருக்கலாம்.—எபிரெயர் 6:10.
[பக்கம் 29-ன் பெட்டி]
பயணத்தின்போது அசௌகரியங்கள்
எப்பாப்பிரோதீத்து மேற்கொண்ட பயணத்தைப் போன்று இன்றைய நாட்களில் இரண்டு முக்கியமான ஐரோப்பிய பட்டணங்களுக்கிடையே பயணம் செய்வது, அந்த அளவுக்கு பெரும் முயற்சியைத் தேவைப்படுத்தாது. அந்தப் பயணத்தை ஜெட் விமானத்தில் இரண்டொரு மணிநேரத்தில் சௌகரியமாக முடித்துவிடலாம். முதல் நூற்றாண்டில் அப்படிப்பட்ட பயணத்தை மேற்கொள்வது முற்றிலும் வித்தியாசமான விஷயமாக இருந்தது. முற்காலங்களில், ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்துக்கு செல்வது மிகவும் அசௌகரியமாக இருக்கும். நடந்து செல்லும் பயணி ஒரு நாளுக்கு 30 முதல் 35 கிலோமீட்டர் வரை செல்லக்கூடும், அதே சமயத்தில் அவர் ‘அந்நிய ஜனங்களிடமிருந்து வந்த மோசங்கள்’ உட்பட வானிலை மற்றும் பல்வேறு ஆபத்துக்களுக்கு ஆளாகக்கூடும்.—2 கொரிந்தியர் 11:26.
இரவு நேரங்களில் தங்குவதைப் பற்றியும் உணவுப்பொருள் கிடைப்பதைப் பற்றியும் என்ன?
ரோம சாலைகள் ஓரமாய், “பிரயாணிகள் விடுதிகள், கடைகள், குதிரை இலாயங்கள், பணியாளர் தங்குவதற்கான இடங்கள் போன்ற எல்லா வசதிகளுமுள்ள விடுதிகள், இருந்தன; அடுத்தடுத்துள்ள பிரயாணிகளின் விடுதிகளுக்கு இடையே அநேக மியூட்டாடியோன்ஸ், அல்லது நிறுத்தும் இடங்கள் இருந்தன, அங்கே ஒருவர் குதிரைகள் அல்லது வண்டிகளை மாற்றலாம் மேலும் உணவுப் பொருட்களை பெற்றுக்கொள்ளலாம்,” என்று சரித்திர ஆசிரியர் மைக்கலான்ஜலோ கேஜியானோ டி அசிவேடோ குறிப்பிடுகிறார். இப்படிப்பட்ட விடுதிகளுக்கு சமுதாயத்திலுள்ள மிகவும் கீழ்த்தரமான வகுப்பார் அடிக்கடி சென்றதால் அவை மிகவும் மோசமான பெயர் பெற்றிருந்தன. விடுதியாளர்கள் பயணிகளை வழிப்பறி செய்தது மட்டுமல்லாமல், வேசிகளிடமிருந்து பெற்றுக்கொண்ட பணத்தின் மூலம் தங்கள் வருவாயை பெருக்கிக்கொண்டனர். அந்த வகையான விடுதியில் தங்குவதற்கு கட்டாயப்படுத்தப்படும் எவரும், “கொடூரமான, ஒழுக்க நியதியற்ற ஒருவர் பக்கத்தில் படுத்துக்கொள்ள வேண்டியிருக்கும், படகோட்டிகள், திருடர்கள், தப்பி ஓடிய அடிமைகள், கொலையாளிகள், பிணப்பெட்டி செய்பவர்கள் ஆகியோரோடு கூடியிருக்க வேண்டும். . . . எல்லாரும் ஒரே குவளையையே உபயோகிப்பர்; அவரவருக்கென்று ஒரு கட்டிலோ அல்லது மேஜையோ எவருக்குமே இருக்காது,” என்று வஞ்சப்புகழ்ச்சியாக எழுதும் லத்தீன் கவிஞர் ஜூவனல் குறிப்பிட்டார். அசுத்தமான தண்ணீரையும், அழுக்காகவும், ஈரக் கசிவாகவும், ஆட்கள் நிறைந்ததாகவும், பூச்சிகளால் சூழப்பட்டதாகவும் இருந்த அறைகளைப் பற்றியும் மற்ற பண்டையகால எழுத்தாளர்கள் புலம்பினர்.
[பக்கம் 27-ன் வரைப்படம்/படம்]
ரோம்
[படம்]
ரோமருடைய காலங்களில் ஒரு பயணி
[படத்திற்கான நன்றி]
Map: Mountain High Maps® Copyright © 1995 Digital Wisdom, Inc.; Traveler: Da originale del Museo della Civiltà Romana, Roma