சபையைப் பலப்படுத்தத் தவறாதீர்!
“ஒருவரையொருவர் ஆறுதல்படுத்திக்கொண்டும் ஒருவரையொருவர் பலப்படுத்திக்கொண்டும் இருங்கள்.”—1 தெ. 5:11.
1. நாம் கிறிஸ்தவச் சபையின் அங்கத்தினராக இருப்பதால் வரும் ஆசீர்வாதங்கள் என்ன, நம்மில் சிலர் என்ன பிரச்சினைகளை எதிர்ப்படலாம்?
கி றிஸ்தவச் சபையின் அங்கத்தினர்களாக இருப்பது உண்மையிலேயே ஒரு பெரிய ஆசீர்வாதம். இது, யெகோவாவோடு நெருங்கிய பந்தத்தை வைத்துக்கொள்ள உதவுகிறது. அவருடைய வார்த்தையை வழிகாட்டியாக ஏற்றுக்கொண்டிருப்பது, மோசமான வாழ்க்கையால் வரும் விளைவுகளிலிருந்து தப்பித்துக்கொள்ள உதவுகிறது. நிஜமான நண்பர்களைச் சம்பாதிக்க உதவுகிறது. இப்படி எத்தனையோ ஆசீர்வாதங்களை வரிசையாக அடுக்கிக்கொண்டே போகலாம். என்றாலும், நம்மில் பெரும்பாலோர் பல விதமான பிரச்சினைகளோடு போராடிக்கொண்டிருக்கிறோம். கடவுளுடைய வார்த்தையின் ஆழமான சத்தியங்களைப் புரிந்துகொள்ள சிலருக்கு உதவி தேவைப்படலாம். இன்னும் சிலர் நோயினால் படாத பாடுபடலாம், மனச் சோர்வால் வாடி வதங்கலாம், அவசரப்பட்டு முடிவெடுத்ததால் விபரீத விளைவுகளைச் சந்திக்கலாம். போதாக்குறைக்கு, நாம் வாழ்கிற இந்த உலகமே தேவபக்தியற்ற ஓர் உலகமாக இருக்கிறது.
2. நம் சகோதரர்கள் கஷ்டப்படும்போது நாம் என்ன செய்ய வேண்டும், ஏன்?
2 சக வணக்கத்தார் கஷ்டப்படுவதையோ போராடுவதையோ பார்க்க நம்மில் யாருக்குமே விருப்பமில்லை. அப்போஸ்தலன் பவுல், சபையை ஓர் உடலுக்கு ஒப்பிட்டுப் பேசினார். “ஓர் உறுப்பு வேதனைப்பட்டால் மற்ற எல்லா உறுப்புகளும் அதனோடு சேர்ந்து வேதனைப்படும்” என்றார் அவர். (1 கொ. 12:12, 26) அப்படியானால், நம் சகோதர சகோதரிகளுக்குப் பக்கபலமாக இருக்கவே நாம் முயல வேண்டும். சவால்களைச் சமாளிப்பதற்குச் சக வணக்கத்தார் ஒருவருக்கொருவர் எப்படி ஒத்தாசையாக இருந்தார்கள் என்பது பற்றிய ஏராளமான பதிவுகள் பைபிளில் உள்ளன. அவற்றைச் சிந்திக்கையில், நீங்களும் அவ்வாறே உதவி செய்ய முடியுமா என யோசித்துப் பாருங்கள். உங்கள் சகோதரர்களுக்கு ஆன்மீக ரீதியில் உதவி செய்வதன் மூலம் யெகோவாவின் சபையை நீங்கள் எவ்வாறு பலப்படுத்தலாம்?
‘அவரைத் தங்களுடன் அழைத்துக்கொண்டு போனார்கள்’
3, 4. ஆக்கில்லாவும் பிரிஸ்கில்லாளும் அப்பொல்லோவுக்கு எப்படி உதவினார்கள்?
3 அப்பொல்லோ, எபேசுவில் தங்கியிருந்தபோது ஏற்கெனவே பக்திவைராக்கியத்துடன் நற்செய்தியைப் பிரசங்கித்து வந்தார். “கடவுளுடைய சக்தியினால் நிறைந்து ஆர்வத்துடிப்புடன் இயேசுவைப் பற்றிய விஷயங்களைப் பேசிக்கொண்டு வந்தார், திருத்தமாகக் கற்பித்துக்கொண்டும் வந்தார்; ஆனால், யோவான் பிரசங்கித்துவந்த ஞானஸ்நானத்தைப் பற்றி மட்டுமே அறிந்திருந்தார்” என்று அப்போஸ்தலர் புத்தகம் சொல்கிறது. ஆனால், ‘பரலோகத் தகப்பனின் பெயரிலும், அவருடைய மகனின் பெயரிலும், அவருடைய சக்தியின் பெயரிலும் கொடுக்கப்பட்ட ஞானஸ்நானத்தை’ பற்றி அவருக்குத் தெரிந்திருக்கவில்லை. அப்படியானால், கி.பி. 33, பெந்தெகொஸ்தே தினத்திற்கு முன்பிருந்த யோவான் ஸ்நானகருடைய சீடர்களோ, இயேசுவின் சீடர்களோ அவருக்குச் சாட்சி கொடுத்திருக்க வேண்டும் என்று தெரிகிறது. அப்பொல்லோ பக்திவைராக்கியமுள்ளவராய் இருந்தபோதிலும் முக்கியமான சில விஷயங்கள் அவருக்குப் புரியாமலேயே இருந்தன. அவற்றைப் புரிந்துகொள்ள, சக வணக்கத்தாரோடு அவர் வைத்திருந்த சகவாசம் எப்படி உதவியது?—அப். 1:4, 5; 18:25; மத். 28:19.
4 அப்பொல்லோ ஜெபக்கூடங்களில் தைரியமாகப் பேசியதைக் கிறிஸ்தவத் தம்பதியரான ஆக்கில்லாவும் பிரிஸ்கில்லாளும் கேட்டார்கள்; பின்பு, அவரைத் தங்களுடன் அழைத்துக்கொண்டு போய்க் கூடுதலான விஷயங்களை அவருக்குக் கற்பித்தார்கள். (அப்போஸ்தலர் 18:24-26-ஐ வாசியுங்கள்.) இது ஓர் அன்பான செயல் என்பதை நம்மால் மறுக்க முடியாது! அப்படிக் கற்பித்தபோது, அவரை மட்டம்தட்டுவதாக நினைக்கும் விதத்தில் அவர்கள் பேசியிருக்க மாட்டார்கள்; சாதுரியமாக அவருக்கு எடுத்துச்சொல்லி உதவியிருப்பார்கள். ஏனென்றால், கிறிஸ்தவச் சபையின் ஆரம்ப வரலாறு பற்றி அவருக்குத் தெரியாமல் இருந்தது. இப்படிப்பட்ட முக்கியமான விஷயங்களைத் தன்னுடைய புதிய நண்பர்கள் தன்னிடம் தெரிவித்ததற்காக அப்பொல்லோ நிச்சயம் நன்றியுள்ளவராய் இருந்திருப்பார். இந்த விஷயங்களைத் தெரிந்துகொண்ட பின், அகாயாவிலுள்ள சகோதரர்களுக்கு அவர் “பெரிதும் உதவியாக இருந்தார்”; வலிமைமிக்க விதத்தில் சாட்சி கொடுத்தார்.—அப். 18:27, 28.
5. பல்லாயிரக்கணக்கான பிரஸ்தாபிகள் என்ன அன்பான உதவியைச் செய்கிறார்கள், இதனால் என்ன பலன்களைக் கண்டிருக்கிறார்கள்?
5 இன்று கிறிஸ்தவச் சபையிலுள்ள அநேகர் பைபிள் சத்தியங்களைப் புரிந்துகொள்ளத் தங்களுக்கு உதவிய சகோதர சகோதரிகளுக்கு மிகுந்த நன்றியுள்ளவர்களாக இருக்கிறார்கள். அவர்களுக்கும் அவர்களுக்கு பைபிளைக் கற்றுக்கொடுத்தவர்களுக்கும் இடையே நீண்டநாள் நட்பு மலர்ந்திருக்கிறது; ஏராளமானோரின் விஷயத்தில் இது உண்மையாக இருந்திருக்கிறது. பெரும்பாலும், மக்கள் பைபிள் சத்தியங்களைப் புரிந்துகொள்வதற்காக, அவர்களோடு பல மாதங்களுக்குத் தவறாமல் படிப்பு நடத்த வேண்டியிருக்கிறது. என்றாலும், பிரஸ்தாபிகள் சுய தியாக மனப்பான்மையோடு அப்படி நடத்த விருப்பமுள்ளவர்களாக இருக்கிறார்கள்; காரணம், மக்களின் உயிர் ஆபத்தில் இருப்பதை அவர்கள் அறிந்திருக்கிறார்கள். (யோவா. 17:3) பைபிள் சத்தியங்களை மக்கள் கற்றுக்கொள்வதையும், அவற்றுக்கு இசைய வாழ்வதையும், யெகோவாவின் சித்தத்தைச் செய்ய தங்களுடைய வாழ்க்கையை அர்ப்பணிப்பதையும் பார்ப்பது நமக்கு எப்பேர்ப்பட்ட மகிழ்ச்சி!
‘சகோதரர்களால் உயர்வாகப் பேசப்பட்டார்’
6, 7. (அ) பவுல் ஏன் தீமோத்தேயுவைத் தன் பயணத் தோழனாகத் தேர்ந்தெடுத்தார்? (ஆ) பவுலோடு பழகியது எந்த விதத்தில் முன்னேற்றம் செய்ய தீமோத்தேயுவுக்கு உதவியது?
6 அப்போஸ்தலர்களான பவுலும் சீலாவும் இரண்டாம் மிஷனரி பயணத்தின்போது லீஸ்திராவுக்குச் சென்றார்கள்; அங்கு, தீமோத்தேயு என்ற இளைஞனைச் சந்தித்தார்கள்; அவருக்குச் சுமார் 18-23 வயதிருக்கும். அவர் “லீஸ்திராவிலும் இக்கோனியாவிலும் இருந்த சகோதரர்களால் உயர்வாகப் பேசப்பட்டு வந்தார்.” அவருடைய தாய் ஐனிக்கேயாளும், பாட்டி லோவிசாளும் கிறிஸ்தவர்கள், ஆனால் அவருடைய தந்தை கிறிஸ்தவர் அல்ல. (2 தீ. 1:5) ஓரிரு வருடங்களுக்கு முன்பு பவுல் முதன்முறையாக அங்கு சென்றபோது இந்தக் குடும்பத்தாரோடு பழக்கம் ஏற்பட்டிருக்கலாம். ஆனால், அவர் இந்த முறைதான் தீமோத்தேயுவைத் தன்னுடன் அழைத்துக்கொண்டு போக விரும்பினார்; ஏனென்றால், தீமோத்தேயு சபையில் தனித்து விளங்கினார். எனவே பவுல், சபை மூப்பர் குழுவின் அங்கீகாரத்துடன், தீமோத்தேயுவை மிஷனரி வேலையில் தன் உதவியாளராக ஆக்கிக்கொண்டார்.—அப்போஸ்தலர் 16:1-3-ஐ வாசியுங்கள்.
7 தீமோத்தேயு, வயதில் மூத்த தன்னுடைய தோழரிடமிருந்து நிறைய விஷயங்களைக் கற்றுக்கொள்ள வேண்டியிருந்தது. அவற்றையெல்லாம் அவர் கற்றுக்கொண்டதால், பிற்பாடு அவரைத் தன்னுடைய பிரதிநிதியாக பல்வேறு சபைகளுக்கு பவுல் தைரியமாய் அனுப்பி வைத்தார். குறைந்த அனுபவமுள்ளவராகவும் கூச்ச சுபாவமுள்ளவராகவும் இருந்த தீமோத்தேயு, ஏறக்குறைய 15 வருடங்கள் பவுலோடு பழகிய காலத்தில் மிகச் சிறந்த கண்காணியாய் ஆகும் அளவுக்கு முன்னேற்றம் செய்தார்.—பிலி. 2:19-22; 1 தீ. 1:3.
8, 9. இளம் சகோதர சகோதரிகளுக்குச் சபை அங்கத்தினர்கள் எவ்வாறு ஊக்கம் அளிக்கலாம்? ஓர் உதாரணம் தருக.
8 இன்று கிறிஸ்தவச் சபையிலுள்ள அநேக இளம் சகோதர சகோதரிகளிடம் ஏராளமான திறமைகள் ஒளிந்திருக்கின்றன. ஆன்மீகச் சிந்தையுள்ள தோழர்கள் அவற்றை வளர்க்க உதவினால், அந்த இளைஞர்கள் பிற்காலத்தில் யெகோவாவின் மக்களிடையே பெரியபெரிய பொறுப்புகளை ஏற்க தகுதிபெறலாம். உங்கள் சபையைக் கொஞ்சம் நினைத்துப் பாருங்கள். யாரெல்லாம் உங்கள் கண்முன் வருகிறார்கள்? தீமோத்தேயுவைப் போல சேவை செய்யத் தயாராயிருக்கிற இளைஞர்கள் யாராவது தெரிகிறார்களா? உங்களுடைய உதவியும் ஊக்கமும் இருந்தால், அப்படிப்பட்டவர்கள் பிற்பாடு பயனியர்களாகவோ, பெத்தேல் ஊழியர்களாகவோ, மிஷனரிகளாகவோ, பயணக் கண்காணிகளாகவோ ஆகலாம். இத்தகைய இலக்குகளை அடைய அவர்களுக்கு நீங்கள் எப்படி உதவலாம்?
9 மார்ட்டின் என்பவரின் உதாரணத்தை எடுத்துக்கொள்ளுங்கள்; 20 வருடங்களாக பெத்தேலில் அவர் சேவை செய்துவந்திருக்கிறார். 30 வருடங்களுக்கு முன்பு வட்டாரக் கண்காணி ஒருவரோடு ஊழியம் செய்தபோது, அவர் தன்மீது மிகுந்த அக்கறை காட்டியதை நன்றியோடு நினைத்துப் பார்க்கிறார். அந்தக் கண்காணி இளைஞனாக இருந்தபோது பெத்தேலில் ஊழியம் செய்தது பற்றி ஆர்வம்பொங்க பேசினாராம். அதைக் கேட்ட பிறகுதான் தானும் அவரைப் போலவே யெகோவாவின் அமைப்பில் நிறையச் சேவை செய்ய வேண்டுமென்ற ஆசை தனக்கு வந்ததாக மார்ட்டின் சொல்கிறார். மறக்க முடியாத அந்த உரையாடல், தன் வாழ்க்கையில் நல்ல தீர்மானங்களை எடுக்க மார்ட்டினுக்குப் பெரிதும் உதவியது. எனவே, ஆன்மீக இலக்குகளைப் பற்றி இளம் நண்பர்களிடம் பேச நீங்கள் பிரத்தியேக முயற்சி எடுங்கள்; யாருக்குத் தெரியும், உங்களுடைய ஊக்கமூட்டும் வார்த்தைகளுக்கு நல்ல பலன்கள் கிடைக்கலாம்!
“சோகமாயிருப்பவர்களிடம் ஆறுதலாகப் பேசுங்கள்”
10. எப்பாப்பிரோதீத்து எப்படி உணர்ந்தார், அதற்குக் காரணம் என்ன?
10 சிறையிலிருந்த பவுலைச் சந்திப்பதற்காக எப்பாப்பிரோதீத்து பிலிப்பியிலிருந்து ரோமாபுரிக்கு நெடுந்தூரப் பயணம் செய்தார்; அது மிகவும் களைப்பூட்டிய பயணமாக இருந்தது. பிலிப்பி சபையாரின் தூதுவராக அவர் செயல்பட்டார். பவுலுக்காக அந்தச் சபையார் அனுப்பிய பரிசுப் பொருள்களை அவர் எடுத்துக்கொண்டு வந்தார்; அதுமட்டுமல்ல, பவுலோடு சில காலம் தங்கி அவருக்கு ஒத்தாசையாக இருக்கவும் திட்டமிட்டிருந்தார். ஆனால், அங்கு வந்தபின் எப்பாப்பிரோதீத்து நோய்வாய்ப்பட்டு ‘சாகும் நிலைக்கே’ வந்துவிட்டார். பவுலுக்கு உதவியாக இருக்க முடியாததை எண்ணி, அவர் சோகத்தில் ஆழ்ந்துவிட்டார்.—பிலி. 2:25-27.
11. (அ) சபையில் சிலர் மனச்சோர்வுக்கு ஆளாகியிருப்பதைப் பார்த்து நாம் ஏன் ஆச்சரியப்பட வேண்டியதில்லை? (ஆ) எப்பாப்பிரோதீத்துவிடம் எப்படி நடந்துகொள்ள வேண்டுமென பிலிப்பியருக்கு பவுல் எழுதினார்?
11 இன்று மக்கள் பல்வேறு பிரச்சினைகளின் காரணமாகச் சோகத்தில் ஆழ்ந்து, மனச்சோர்வுக்கு ஆளாகிறார்கள். உலக சுகாதார நிறுவனத்தின் சுற்றாய்வு கூறுகிறபடி, உலக மக்கள்தொகையில் 5 பேரில் ஒருவர் தங்கள் வாழ்க்கையின் ஏதோவொரு கட்டத்தில் மனச்சோர்வுக்கு ஆளாகிறார்கள். யெகோவாவின் மக்களும் இதற்கு விதிவிலக்கல்ல. உடல்நலப் பிரச்சினைகள், தோல்வியினால் வரும் ஏமாற்றங்கள், குடும்பத்தில் பொருளாதாரப் பிரச்சினைகள் போன்றவற்றால் சபையிலுள்ள ஒருவர் விரக்தியடைந்துவிடலாம். எப்பாப்பிரோதீத்துவுக்கு பிலிப்பியர்கள் எப்படி உதவி செய்ய வேண்டியிருந்தது? பவுல் இவ்வாறு எழுதினார்: “நம் எஜமானரைப் பின்பற்றுகிறவர்களை வழக்கமாக ஏற்றுக்கொள்கிறபடியே அவரையும் மிகுந்த சந்தோஷத்தோடு ஏற்றுக்கொள்ளுங்கள்; அவரைப் போன்ற சகோதரர்களை உயர்வாக மதியுங்கள். அவரையும் உயர்வாக மதியுங்கள்; ஏனென்றால், எனக்குப் பணிவிடை செய்ய நீங்கள் இங்கு இல்லாத குறையை அடியோடு போக்குவதற்காக அவர் தன்னுடைய உயிரையே பணயம் வைத்து, கிறிஸ்துவின் ஊழியத்தை முன்னிட்டு மரண வாசல்வரை போனார்.”—பிலி. 2:29, 30.
12. மனச்சோர்வுக்கு ஆளாகியிருப்பவர்களுக்கு எது ஆறுதல் அளிக்கும்?
12 மன வாட்டத்திற்கோ மன உளைச்சலுக்கோ ஆளாகியிருக்கிற சகோதர சகோதரிகளை நாமும்கூட ஊக்கப்படுத்த வேண்டும். யெகோவாவுக்கு அவர்கள் செய்துவரும் சேவையில் மெச்சத்தக்க விஷயங்கள் நிச்சயம் ஏதாவது இருக்கும். கிறிஸ்தவர்களாய் ஆவதற்கு அல்லது முழுநேர ஊழியத்தில் ஈடுபடுவதற்குத் தங்கள் வாழ்க்கையில் பெரியபெரிய மாற்றங்களை அவர்கள் செய்திருக்கலாம். அவர்கள் எடுத்திருக்கிற முயற்சிகளை நாம் மதித்துணருகிறோம், யெகோவாவும் மதித்துணருகிறார் என்று சொல்லி அவர்களுக்கு நம்பிக்கை அளிக்கலாம். சிலரால் வயோதிகத்தின் காரணமாகவோ நோயின் காரணமாகவோ முன்புபோல் ஊழியம் செய்ய முடியாமல் போகலாம்; என்றாலும், அவர்கள் வருடக்கணக்காகச் செய்த சேவையை மனதில் வைத்து அவர்களுக்கு நாம் மதிப்புக் காட்ட வேண்டும். சூழ்நிலை என்னவாக இருந்தாலும் சரி, யெகோவா தருகிற ஆலோசனை இதுவே: “சோகமாயிருப்பவர்களிடம் ஆறுதலாகப் பேசுங்கள், பலவீனமானவர்களுக்கு ஆதரவாக இருங்கள், எல்லாரிடமும் நீடிய பொறுமையோடு நடந்துகொள்ளுங்கள்.”—1 தெ. 5:14.
‘அவனை மனதார மன்னித்து ஆறுதல்படுத்துங்கள்’
13, 14. (அ) கொரிந்து சபை என்ன கடும் நடவடிக்கை எடுத்தது, ஏன்? (ஆ) சபைநீக்க நடவடிக்கையால் ஏற்பட்ட பலன் என்ன?
13 முதல் நூற்றாண்டில், கொரிந்து சபையிலிருந்த ஒருவன் பாலியல் முறைகேட்டில் துணிந்து ஈடுபட்டுவந்தான். அவனுடைய நடத்தை சபையின் தூய்மைக்கே அச்சுறுத்தலாக இருந்தது, அவிசுவாசிகளுக்கும்கூட அதிர்ச்சி அளிப்பதாக இருந்தது. அதனால்தான், அந்த மனிதனை சபையிலிருந்து நீக்கிவிடும்படி பவுல் கட்டளையிட்டார்.—1 கொ. 5:1, 7, 11-13.
14 அப்படிப்பட்ட நடவடிக்கைக்கு நல்ல பலன் கிடைத்தது. தீய செல்வாக்கிலிருந்து அந்தச் சபை பாதுகாக்கப்பட்டது; அதேசமயம், அவனும் தன் தவறை ஒப்புக்கொண்டு மனந்திரும்பினான். தான் மனந்திரும்பிவிட்டதைத் தன் செயல்களில் அவன் வெளிக்காட்டியபோது, பவுல் அவனை மறுபடியும் சபைக்குள் சேர்த்துக்கொள்ளும்படி தன்னுடைய இரண்டாவது கடிதத்தில் குறிப்பிட்டார். அப்படிச் சேர்த்துக்கொள்வது மட்டுமல்லாமல், “அவன் ஒரேயடியாக வருத்தத்தில் ஆழ்ந்துவிடாதபடி . . . அவனை மனதார மன்னித்து ஆறுதல்படுத்த வேண்டும்” என்றும் பவுல் அந்தச் சபையாருக்குக் கட்டளையிட்டார்.—2 கொரிந்தியர் 2:5-8-ஐ வாசியுங்கள்.
15. மனந்திரும்பியபின், மீண்டும் சபைக்குள் சேர்த்துக்கொள்ளப்படுகிறவர்களை நாம் எப்படிக் கருத வேண்டும்?
15 இந்தப் பதிவிலிருந்து நாம் என்ன தெரிந்துகொள்கிறோம்? யாரையாவது சபைநீக்கம் செய்ய வேண்டியிருப்பது வருத்தமான விஷயம்தான். ஆனால், கடவுளுடைய பெயருக்கு அவமதிப்பையும், சபைக்கு அவப்பெயரையும் அவர்கள் ஏற்படுத்தியிருக்கலாம். தனிப்பட்ட விதத்தில் நமக்கு எதிராகவும் அவர்கள் பாவம் செய்திருக்கலாம். என்றாலும், மனந்திரும்புகிற ஒரு பாவி மீண்டும் சபையில் சேர்த்துக்கொள்ளப்பட வேண்டுமென யெகோவாவின் வழிநடத்துதலால் நீதி விசாரணைக் குழுவிலுள்ள மூப்பர்கள் தீர்மானிக்கும்போது, யெகோவா அந்தப் பாவியை மன்னித்துவிட்டார் என்றே அர்த்தம். (மத். 18:17-20) அப்படியானால், அவரைப் போலவே நாமும் மனந்திரும்புகிறவர்களை மன்னிக்க வேண்டும், அல்லவா? கடுகடுப்பாக நடந்துகொள்பவர்களாகவும் மன்னிக்க மனமில்லாதவர்களாகவும் இருந்தால், நாம் யெகோவாவை எதிர்ப்பவர்களாகவே இருப்போம். யெகோவாவின் சபையில் சமாதானத்தையும் ஐக்கியத்தையும் வளர்க்க வேண்டுமானால், அவருடைய அங்கீகாரத்தைப் பெற வேண்டுமானால், உண்மையாக மனம்திரும்பியபின், மீண்டும் சபைக்குள் சேர்த்துக்கொள்ளப்படுகிறவர்களுக்கு ‘நம் அன்பை உறுதிப்படுத்த’ வேண்டும், அல்லவா?—மத். 6:14, 15; லூக். 15:7.
‘ஊழியத்தில் அவர் எனக்கு உதவியாக இருப்பார்’
16. மாற்குவின் விஷயத்தில் பவுல் ஏன் ஏமாற்றமடைந்தார்?
16 நமக்கு ஏமாற்றமளித்தவர்களுக்கு எதிராக நம் மனதில் வன்மத்தை வளர்த்துக்கொள்ளக் கூடாது என்பதை மற்றொரு பைபிள் பதிவு காட்டுகிறது. உதாரணத்திற்கு, மாற்கு என்றழைக்கப்பட்ட யோவான், அப்போஸ்தலன் பவுலுக்கு மிகுந்த ஏமாற்றத்தை அளித்தார். எப்படி? பவுலும் பர்னபாவும் தங்கள் முதல் மிஷனரி பயணத்தைத் தொடங்கியபோது, அவர்களுக்கு உதவியாக மாற்குவும் சென்றார். ஆனால், அவர்களுடைய பயணத்தின் ஒரு கட்டத்தில், குறிப்பிடப்படாத ஏதோவொரு காரணத்தினால், மாற்கு தன்னுடைய பயணத் தோழர்களை விட்டுப் பிரிந்து வீடு திரும்பினார். இதைக் கண்ட பவுல் மிகுந்த ஏமாற்றமடைந்தார்; அதனால்தான், இரண்டாம் மிஷனரி பயணத்தைத் தொடங்குவதற்குத் திட்டமிட்டுக்கொண்டிருந்தபோது, மாற்குவை அழைத்துச் செல்வது சம்பந்தமாக பர்னபாவுக்கும் பவுலுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. முதல் பயணத்தின்போது நடந்த சம்பவத்தின் காரணமாக, மாற்குவை அழைத்துக்கொண்டு போக பவுல் விரும்பவில்லை.—அப்போஸ்தலர் 13:1-5, 13; 15:37, 38-ஐ வாசியுங்கள்.
17, 18. பவுலுக்கும் மாற்குவுக்கும் இடையே எழுந்த பிரச்சினை தீர்க்கப்பட்டதென நமக்கு எப்படித் தெரியும், இதிலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்கிறோம்?
17 பவுல் தன்னை இப்படி ஒதுக்கியதை நினைத்து மாற்கு ஒரேயடியாகத் துவண்டுவிடவில்லை; ஏனென்றால், பர்னபாவுடன் சேர்ந்து வேறொரு பிராந்தியத்தில் மிஷனரி ஊழியத்தை அவர் தொடர்ந்தார் என நாம் பைபிளில் வாசிக்கிறோம். (அப். 15:39) அவர் உண்மையுள்ளவராக, நம்பிக்கைக்குப் பாத்திரமானவராக இருந்தார் என்பது சில வருடங்கள் கழித்து பவுல் அவரைப் பற்றி எழுதிய விஷயத்திலிருந்து தெரிகிறது. ரோமாபுரியில் சிறைக்கைதியாக இருந்தபோது தீமோத்தேயுவை வரச்சொல்லி பவுல் கடிதம் எழுதியிருந்தார். அதே கடிதத்தில், “மாற்குவை உன்னோடு அழைத்துக்கொண்டு வா; ஏனென்றால், ஊழியத்தில் அவர் எனக்கு உதவியாக இருப்பார்” என்று குறிப்பிட்டிருந்தார். (2 தீ. 4:11) ஆம், பவுல் எதிர்பார்த்தளவுக்கு மாற்கு முன்னேற்றம் செய்திருந்தார்.
18 இதிலிருந்து நாம் ஒரு பாடத்தைக் கற்றுக்கொள்கிறோம். ஒரு நல்ல மிஷனரிக்குரிய பண்புகளை மாற்கு வளர்த்துக்கொண்டார். பவுல் தன்னை ஒதுக்கியதால் அவர் இடறல் அடைந்துவிடவில்லை. அவரும் சரி பவுலும் சரி, ஆன்மீகச் சிந்தையுள்ளவர்களாக இருந்தார்கள்; அவர்களுக்கிடையே நடந்த கசப்பான அனுபவத்தைக் காலங்காலமாக மனதில் வைத்துக்கொண்டிருக்கவில்லை. மறுபட்சத்தில், மாற்கு பிரயோஜனமான ஓர் உதவியாளர் என்பதை பவுல் பிற்பாடு புரிந்துகொண்டார். ஆகவே, சகோதரர்கள் தங்களிடையே எழுகிற பிரச்சினைகளைத் தீர்த்துக்கொண்ட பின்பு, தங்கள் ஆன்மீக ஓட்டத்தை நிறுத்திவிடாமல், அதைத் தொடர வேண்டும், மற்றவர்களும் இந்த ஆன்மீக ஓட்டத்தில் கலந்துகொள்ள தொடர்ந்து உதவி செய்ய வேண்டும்; இதுவே சரியான செயலாகும். மற்றவர்களிடம் நல்லதையே பார்ப்பது சபையைப் பலப்படுத்தும்.
சபையும் நீங்களும்
19. சபையிலுள்ளவர்கள் அனைவரும் ஒருவருக்கொருவர் என்ன உதவியை அளிக்கலாம்?
19 ‘சமாளிப்பதற்குக் கடினமான இந்தக் கொடிய காலங்களில்,’ சகோதர சகோதரிகளின் உதவி உங்களுக்குத் தேவை, உங்களுடைய உதவி அவர்களுக்கும் தேவை. (2 தீ. 3:1) பொதுவாக, தாங்கள் எதிர்ப்படுகிற பிரச்சினைகளை வெற்றிகரமாக எப்படிச் சமாளிப்பதென்று தனிப்பட்ட விதத்தில் கிறிஸ்தவர்களுக்குத் தெரியாமல் இருக்கலாம், ஆனால் யெகோவாவுக்குத் தெரியும். சரியான வழிநடத்துதலைத் தருவதற்காகச் சபையிலுள்ள வெவ்வேறு நபர்களை அவர் பயன்படுத்தலாம்; அவர்களில் நீங்களும் ஒருவராக இருக்கலாம். (ஏசா. 30:20, 21; 32:1, 2) அப்படியானால், அப்போஸ்தலன் பவுலுடைய பின்வரும் அறிவுரையை மனதில் கொள்ளுங்கள்: “எப்போதும் ஒருவரையொருவர் ஆறுதல்படுத்திக்கொண்டும் ஒருவரையொருவர் பலப்படுத்திக்கொண்டும் இருங்கள்.”—1 தெ. 5:11.
எப்படிப் பதிலளிப்பீர்கள்?
• சக வணக்கத்தாரை ஏன் ஊக்கப்படுத்த வேண்டியிருக்கிறது?
• எப்படிப்பட்ட பிரச்சினைகளைச் சந்திக்க மற்றவர்களுக்கு நீங்கள் உதவலாம்?
• சபையில் சகோதர சகோதரிகளின் உதவி நமக்கு ஏன் தேவை?
[பக்கம் 11-ன் படம்]
பிரச்சினைகளில் போராடிக்கொண்டிருக்கிற சக விசுவாசிக்கு நாம் பக்கபலமாக இருக்கலாம்
[பக்கம் 12-ன் படம்]
இன்று கிறிஸ்தவச் சபையிலுள்ள அநேக இளம் சகோதர சகோதரிகளிடம் ஏராளமான திறமைகள் ஒளிந்திருக்கின்றன