கிறிஸ்தவர்கள் ஒருவருக்கொருவர் தேவை
“நாம் ஒருவருக்கொருவர் சொந்தமான அங்கங்களாக இருக்கிறோம்.”—எபேசியர் 4:25, NW.
1. மனித உடலைப் பற்றி ஓர் என்ஸைக்ளோப்பீடியா என்ன சொல்கிறது?
மனித உடல் ஓர் அற்புத படைப்பு! த உவர்ல்ட் புக் என்ஸைக்ளோப்பீடியா இவ்வாறு குறிப்பிடுகிறது: “மனித உடல் சிலசமயங்களில் இயந்திரம் என்று அழைக்கப்படுகிறது, இதுவரை உருவாக்கப்பட்டதிலேயே மிக அற்புதமான இயந்திரம் எனப்படுகிறது. மனித உடல் உண்மையில் ஒரு இயந்திரம் அல்லதான். ஆனால் பல விதங்களில் அது இயந்திரத்திற்கு ஒப்பிடப்படலாம். இயந்திரத்தைப் போலவே உடலுக்கு பல பாகங்கள் உண்டு. இயந்திரத்தின் ஒவ்வொரு பாகத்தைப் போலவே உடலின் ஒவ்வொரு பாகமும் விசேஷ வேலைகளை செய்கிறது. ஆனால் எல்லா பாகங்களும் ஒருங்கே செயல்படுகின்றன; இதனால் உடல் அல்லது இயந்திரம் நன்கு இயங்குகிறது.”
2. மனித உடலும் கிறிஸ்தவ சபையும் எந்த விதத்தில் ஒத்திருக்கின்றன?
2 ஆம், மனித உடலில் பல பாகங்கள் அல்லது அங்கங்கள் உள்ளன; அவை ஒவ்வொன்றும் அத்தியாவசியமான ஏதோவொரு பங்கைச் செய்கின்றன. எந்தவொரு நரம்பும், எந்தவொரு தசையும், அல்லது எந்தவொரு அங்கமும்கூட பயனற்றதாக இல்லை. அதேபோல் கிறிஸ்தவ சபையின் ஒவ்வொரு அங்கத்தினரும் அதன் ஆன்மீக நலனுக்கும் அழகிற்கும் ஏதோவொரு விதத்தில் பங்களிக்க முடியும். (1 கொரிந்தியர் 12:14-26) சபையின் ஓர் அங்கத்தினர் மற்றவர்களைவிட உயர்ந்தவராக தன்னை எண்ணிக்கொள்ளக் கூடாது என்றாலும், எவருமே தன்னை முக்கியமற்றவராகவும் நினைத்துக்கொள்ளக் கூடாது.—ரோமர் 12:3.
3. கிறிஸ்தவர்கள் ஒருவருக்கொருவர் தேவை என்பதை எபேசியர் 4:25 எவ்வாறு காட்டுகிறது?
3 மனித உடலின் அங்கங்கள் எவ்வாறு ஒன்றையொன்று சார்ந்திருக்கின்றனவோ அவ்வாறே கிறிஸ்தவர்களும் ஒருவருக்கொருவர் தேவைப்படுகின்றனர். ஆவியால் அபிஷேகம் செய்யப்பட்ட உடன் விசுவாசிகளிடம் பவுல் இவ்வாறு சொன்னார்: “இப்போது நீங்கள் பொய்யைக் களைந்திருப்பதால், ஒவ்வொருவனும் தன் அயலானோடே உண்மையை பேசுங்கள், ஏனென்றால் நாம் ஒருவருக்கொருவர் சொந்தமான அங்கங்களாக இருக்கிறோம்.” (எபேசியர் 4:25, NW) “கிறிஸ்துவின் சரீரமாகிய” ஆவிக்குரிய இஸ்ரவேலின் அங்கத்தினர்கள் ‘ஒருவருக்கொருவர் சொந்தமானவர்கள்’ என்பதால், அவர்கள் மத்தியில் உண்மையே பேசப்படுகிறது, முழுமையான ஒத்துழைப்பும் காணப்படுகிறது. ஆம், அவர்கள் ஒவ்வொருவரும் மற்ற எல்லாருக்கும் சொந்தமானவர்கள். (எபேசியர் 4:11-13) பூமிக்குரிய நம்பிக்கை உள்ள உண்மையான கிறிஸ்தவர்கள் சந்தோஷமாக அவர்களோடு ஒத்துழைக்கிறார்கள்.
4. புதியவர்களுக்கு எந்தெந்த விதங்களில் உதவலாம்?
4 ஒவ்வொரு வருடமும், பூமிக்குரிய பரதீஸில் வாழும் நம்பிக்கை உள்ள ஆயிரக்கணக்கானோர் முழுக்காட்டுதல் எடுக்கிறார்கள். “முதிர்ச்சி நிலையை அடைய” சபையின் மற்ற அங்கத்தினர்கள் அவர்களுக்கு மகிழ்ச்சியோடு உதவுகிறார்கள். (எபிரேயர் 6:1-3, பொது மொழிபெயர்ப்பு) பைபிள் பேரிலான கேள்விகளுக்கு பதிலளிப்பதன் மூலமோ ஊழியத்தில் நடைமுறை உதவி அளிப்பதன் மூலமோ அவர்கள் உதவலாம். கிறிஸ்தவ கூட்டங்களில் தவறாமல் கலந்துகொண்டு நல்ல முன்மாதிரி வகிப்பதன் மூலமும் நாம் புதியவர்களுக்கு உதவலாம். சோதனை காலங்களில் நாம் உற்சாகத்தையோ ஆறுதலையோகூட அளிக்கலாம். (1 தெசலோனிக்கேயர் 5:14, 15) ‘சத்தியத்திலே தொடர்ந்து நடக்க’ எந்தெந்த விதங்களில் மற்றவர்களுக்கு உதவலாம் என நாம் சிந்திக்க வேண்டும். (3 யோவான் 4, NW) நாம் வயதில் சிறியவர்களாக இருந்தாலும் சரி பெரியவர்களாக இருந்தாலும் சரி, சத்தியத்திலே புதியவர்களாக இருந்தாலும் சரி பல வருடங்கள் இருந்தாலும் சரி, உடன் விசுவாசிகளின் ஆவிக்குரிய நலனை முன்னேற்றுவிக்க முடியும்; கண்டிப்பாக அவர்களுக்கு நாம் தேவை.
தேவையான உதவியை அவர்கள் அளித்தார்கள்
5. ஆக்கில்லாவும் பிரிஸ்கில்லாளும் பவுலுக்கு எவ்வாறு உதவியாக இருந்தார்கள்?
5 உடன் விசுவாசிகளுக்கு உதவி செய்து திருப்தி காண்பவர்களில் கிறிஸ்தவ தம்பதிகளும் அடங்குவர். உதாரணத்திற்கு ஆக்கில்லாவும் அவரது மனைவி பிரிஸ்கில்லாளும் பவுலுக்கு உதவி செய்தனர். அவரை அன்போடு தங்கள் வீட்டிற்கு அழைத்து, கூடார தொழிலில் அவரோடு சேர்ந்து பணியாற்றி, கொரிந்துவில் புதிய சபையை ஸ்திரப்படுத்துவதில் கைகொடுத்தனர். (அப்போஸ்தலர் 18:1-4) சொல்லப்படாத ஏதோ ஒரு விதத்தில் பவுலுக்காக தங்கள் உயிரையும் பணயம் வைத்தனர். கிறிஸ்தவர்களுக்கு பவுல் இவ்வாறு எழுதியபோது அவர்கள் ரோமில் வசித்துவந்தனர்: “கிறிஸ்து இயேசுவுக்குள் என் உடன் வேலையாட்களாகிய பிரிஸ்கில்லாளையும் ஆக்கில்லாவையும் வாழ்த்துங்கள். அவர்கள் என் பிராணனுக்காகத் தங்கள் கழுத்தைக் கொடுத்தவர்கள்; அவர்களைப்பற்றி நான்மாத்திரமல்ல, புறஜாதியாரில் உண்டான சபையாரெல்லாரும் நன்றியறிதலுள்ளவர்களாயிருக்கிறார்கள்.” (ரோமர் 16:3, 4) ஆக்கில்லாவையும் பிரிஸ்கில்லாளையும் போல இன்றும் சில கிறிஸ்தவர்கள் சபைகளை கட்டியெழுப்புகிறார்கள், பல்வேறு விதங்களில் உடன் வணக்கத்தாருக்கு உதவுகிறார்கள்; எதிரிகளால் துன்புறுத்தப்படும் அல்லது கொல்லப்படும் ஆபத்திலிருந்து கடவுளுடைய ஊழியர்களை பாதுகாக்க சிலசமயங்களில் தங்கள் உயிரையே பணயம் வைக்கிறார்கள்.
6. அப்பொல்லோ என்ன உதவியைப் பெற்றார்?
6 சொல்வன்மை வாய்ந்த கிறிஸ்தவரான அப்பொல்லோவுக்கும்கூட ஆக்கில்லாவும் பிரிஸ்கில்லாளும் உதவி செய்தார்கள். அவர் இயேசு கிறிஸ்துவைப் பற்றி எபேசு மக்களுக்கு போதித்து வந்தார். அந்தச் சமயத்தில், நியாயப்பிரமாண உடன்படிக்கைக்கு எதிரான பாவங்களிலிருந்து மனந்திரும்புவதற்கு அடையாளமாக யோவான் கொடுத்த முழுக்காட்டுதலைப் பற்றி மட்டுமே அப்பொல்லோ அறிந்திருந்தார். அவருக்கு கொஞ்சம் உதவி தேவைப்பட்டதை ஆக்கில்லாவும் பிரிஸ்கில்லாளும் புரிந்துகொண்டு, “கடவுளுடைய வழியை அதிக திருத்தமாக அவருக்கு விவரித்தார்கள்.” (NW) கிறிஸ்தவ முழுக்காட்டுதல் என்பது தண்ணீரில் முழுகி எழுவதையும் பரிசுத்த ஆவியால் அபிஷேகம் செய்யப்படுவதையும் உட்படுத்தியதென அவர்கள் ஒருவேளை விளக்கியிருப்பார்கள். கற்றுக்கொண்டதை அப்பொல்லோ கடைப்பிடித்தார். பிற்பாடு அகாயாவில், அவர் ‘வெளியரங்கமாக யூதர்களுடனே பலமாய்த் தர்க்கம்பண்ணி, இயேசுவே கிறிஸ்து என்று வேதவாக்கியங்களைக்கொண்டு திருஷ்டாந்தப்படுத்தினபடியால், கிருபையினாலே விசுவாசிகளானவர்களுக்கு மிகவும் உதவியாயிருந்தார்.’ (அப்போஸ்தலர் 18:24-28) உடன் வணக்கத்தார் சொல்லும் குறிப்புகளால், கடவுளுடைய வார்த்தையின் பேரிலான நம் புரிந்துகொள்ளுதல் பெரும்பாலும் அதிகரிக்கும். இந்த விஷயத்திலும்கூட நாம் ஒருவருக்கொருவர் தேவை.
பொருளுதவி அளித்தல்
7. உடன் கிறிஸ்தவர்களுக்கு பொருளுதவி தேவைப்பட்டபோது பிலிப்பியர்கள் என்ன செய்தார்கள்?
7 பிலிப்பியிலிருந்த கிறிஸ்தவ சபையின் அங்கத்தினர்கள் பவுலை மனதார நேசித்தார்கள்; அவர் தெசலோனிக்கேயில் தங்கியிருந்த போது தேவையான பொருட்களை அனுப்பி வைத்தார்கள். (பிலிப்பியர் 4:15, 16) எருசலேமிலிருந்த சகோதரர்களுக்கு பொருளுதவி தேவைப்பட்டபோது, பிலிப்பியர்கள் தங்கள் வசதிக்கும் அதிகமான நன்கொடையை உடனடியாக மனமுவந்து அளித்தார்கள். பிலிப்பியில் இருந்த தன் சகோதர சகோதரிகளின் உயர்ந்த மனப்பான்மையை பவுல் மிக அதிகம் போற்றியதால், விசுவாசிகளான மற்றவர்களுக்கு அவர்கள் சிறந்த எடுத்துக்காட்டென குறிப்பிட்டார்.—2 கொரிந்தியர் 8:1-6.
8. எப்பாப்பிரோதீத்து என்ன மனநிலையைக் காட்டினார்?
8 பவுல் சிறையில் இருந்தபோது பிலிப்பியர்கள் அவருக்கு பொருட்களை பரிசாக வழங்கியதோடு, எப்பாப்பிரோதீத்துவையும் தூது அனுப்பினார்கள். “நீங்கள் எனக்கு ஊழியம் புரிய இயலாமற்போன குறையை நீக்க அவர் [எப்பாப்பிரோதீத்து] தம் உயிரையே இழக்கத் துணிந்தார். கிறிஸ்துவுக்காக அவர் செயலாற்றிய காரணத்தினால்தான் இவ்வாறு அவர் சாகும் நிலைக்கு ஆளானார்” என பவுல் கூறினார். (பிலிப்பியர் 2:25-30, பொ.மொ.; 4:18) எப்பாப்பிரோதீத்து மூப்பராக இருந்தாரா அல்லது உதவி ஊழியராக இருந்தாரா என்பது எங்கும் சொல்லப்படவில்லை. இருந்தாலும் அவர் சுயதியாகமுள்ள, உதவும் குணம்படைத்த கிறிஸ்தவராக இருந்தார், பவுலுக்கு அவர் உண்மையிலேயே தேவைப்பட்டார். உங்கள் சபையில் எப்பாப்பிரோதீத்துவைப் போன்ற யாரேனும் இருக்கிறாரா?
அவர்கள் ‘பக்கபலமாக’ இருந்தார்கள்
9. அரிஸ்தர்க்கு நமக்கு எவ்வாறு நல்ல உதாரணம்?
9 ஆக்கில்லா, பிரிஸ்கில்லாள், எப்பாப்பிரோதீத்து போன்ற அன்பான சகோதர சகோதரிகள் எந்த சபையிலுமே பெரிதும் போற்றப்படுகிறார்கள். நம்முடைய உடன் வணக்கத்தாரில் சிலர் முதல் நூற்றாண்டில் வாழ்ந்த கிறிஸ்தவரான அரிஸ்தர்க்குவைப் போன்று இருக்கலாம். அவரும் மற்றவர்களும் ‘பக்கபலமாக’ இருந்தார்கள்; அதாவது அடிப்படையான, நடைமுறையான காரியங்களில் ஆறுதலின் அல்லது உதவியின் ஊற்றுமூலமாக அவர்கள் இருந்திருக்கலாம். (கொலோசெயர் 4:10, 11, NW) பவுலுக்கு உதவி செய்வதன் மூலம் அரிஸ்தர்க்கு துன்ப காலங்களில் உற்ற நண்பராக நிரூபித்தார். நீதிமொழிகள் 17:17-ல் குறிப்பிடப்பட்டிருக்கும் சிநேகிதனை போலவே அவர் நடந்துகொண்டார்: “சிநேகிதன் எல்லாக் காலத்திலும் சிநேகிப்பான்; இடுக்கணில் உதவவே சகோதரன் பிறந்திருக்கிறான்.” உடன் விசுவாசிகளுக்கு ‘பக்கபலமாக’ இருக்க நாம் அனைவருமே முயற்சி செய்ய வேண்டாமா? துன்பப்பட்டுக் கொண்டிருப்போருக்கு முக்கியமாக நாம் உதவிக்கரம் நீட்ட வேண்டும்.
10. கிறிஸ்தவ மூப்பர்களுக்கு பேதுரு என்ன முன்மாதிரி வைத்தார்?
10 குறிப்பாக கிறிஸ்தவ மூப்பர்கள் தங்கள் ஆவிக்குரிய சகோதர சகோதரிகளுக்கு பக்கபலமாக இருக்க வேண்டும். “உன் சகோதரரை ஸ்திரப்படுத்து” என அப்போஸ்தலனாகிய பேதுருவிடம் கிறிஸ்து சொன்னார். (லூக்கா 22:32) பேதுருவால் அதைச் செய்ய முடிந்தது; ஏனென்றால் வலிமையான, உறுதியான பண்புகளை அவர் வெளிக்காட்டினார், அதுவும் இயேசுவின் உயிர்த்தெழுதலுக்குப் பின்பு அதிகமாக வெளிக்காட்டினார். மூப்பர்களே, நீங்களும் அதையே மனப்பூர்வமாகவும் கனிவாகவும் செய்ய கடினமாக முயலுங்கள்; ஏனென்றால் உங்கள் உடன் விசுவாசிகளுக்கு நீங்கள் தேவை.—அப்போஸ்தலர் 20:28-30; 1 பேதுரு 5:2, 3.
11. தீமோத்தேயு காட்டிய மனப்பான்மையை சிந்திப்பதால் நாம் எவ்வாறு பயனடையலாம்?
11 பவுலின் பயணத் தோழராகிய தீமோத்தேயு, மற்ற கிறிஸ்தவர்கள் மீது ஆழ்ந்த அக்கறை கொண்ட மூப்பராக இருந்தார். அவருக்கு சில உடல்நல பிரச்சினைகள் இருந்தபோதிலும், உறுதியான விசுவாசத்தைக் காட்டினார், ‘பவுலுடன் சுவிசேஷத்தினிமித்தம் ஊழியஞ்செய்தார்.’ ஆகவே, “உங்கள் காரியங்களில் உண்மையாய்க் கவலைப்படுகிறதற்கு அதே மனதுள்ளவன் வேறொருவனும் என்னிடத்திலில்லை” என பிலிப்பியர்களுக்கு பவுல் எழுதினார். (பிலிப்பியர் 2:20, 22, தி.மொ.; 1 தீமோத்தேயு 5:23; 2 தீமோத்தேயு 1:5) தீமோத்தேயு காட்டிய மனப்பான்மையை நாமும் காட்டுவதன் மூலம் யெகோவாவின் வணக்கத்தாருக்கு ஆசீர்வாதமாக திகழ முடியும். நம்முடைய சொந்த குறைபாடுகளையும் பல்வேறு சோதனைகளையும் நாம் எதிர்த்துப் போராட வேண்டியிருந்தாலும், உறுதியான விசுவாசத்தையும் நம் ஆவிக்குரிய சகோதர சகோதரிகளின்பேரில் அன்பான அக்கறையையும் நம்மால் காட்ட முடியும், காட்டவும் வேண்டும். அவர்களுக்கு நாம் தேவை என்பதை எப்போதும் நினைவில் வைக்க வேண்டும்.
மற்றவர்கள் மேல் கரிசனை காட்டிய பெண்கள்
12. தொற்காளின் உதாரணத்திலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்ளலாம்?
12 மற்றவர்கள்மேல் கரிசனை காட்டிய தேவபக்தியுள்ள பெண்களில் தொற்காளும் ஒருவர். தொற்காள் இறந்தபோது சீஷர்கள் பேதுருவை வரவழைத்து அவரை மேல்வீட்டிற்கு அழைத்துச் சென்றனர். அங்கே “விதவைகளெல்லாரும் அழுது, தொற்காள் தங்களுடனேகூட இருக்கையில் செய்திருந்த அங்கிகளையும் வஸ்திரங்களையும் காண்பித்து, அவனைச் சூழ்ந்துநின்றார்கள்.” தொற்காள் உயிர்த்தெழுப்பப்பட்டார்; அதன் பின்னரும் ‘நற்கிரியைகளையும் தருமங்களையும் மிகுதியாய்ச் செய்துகொண்டுவந்தார்’ என்பதில் சந்தேகமே இல்லை. இன்றைய கிறிஸ்தவ சபையில், தொற்காளைப் போல் தேவையிலிருப்பவர்களுக்கு துணிமணிகளை தைத்து தரும் அல்லது வேறு விதங்களில் அன்பாக உதவும் சகோதரிகள் இருக்கிறார்கள். ராஜ்ய அக்கறைகளை முன்னேற்றுவிப்பதோடு சம்பந்தப்பட்ட செயல்களும் சீஷராக்கும் வேலையுமே அவர்களது நற்கிரியைகளில் முக்கியமானவை என்பதில் சந்தேகமில்லை.—அப்போஸ்தலர் 9:36-42; மத்தேயு 6:33; 28:19, 20.
13. உடன் கிறிஸ்தவர்கள் மீது லீதியாள் எவ்வாறு கரிசனை காட்டினாள்?
13 லீதியாள் என்ற தேவபயமுள்ள பெண் மற்றவர்கள்மீது கரிசனை காட்டினாள். தியத்தீரா ஊரைச் சேர்ந்த அவள், சுமார் பொ.ச. 50-ல் பவுல் பிலிப்பியில் பிரசங்கித்த சமயத்தில் அங்கு வசித்துவந்தாள். லீதியாள் ஒருவேளை யூத மதத்திற்கு மாறியிருக்கலாம், ஆனால் பிலிப்பியில் வெகு சில யூதர்களே இருந்திருக்கலாம், ஜெப ஆலயமும் இல்லாதிருந்திருக்கலாம். அவளும் பக்தியுள்ள மற்ற பெண்களும் ஓர் ஆற்றின் அருகே வணக்கத்திற்காக கூடினர்; அந்தச் சமயத்தில்தான் அப்போஸ்தலனாகிய பவுல் அவர்களுக்கு நற்செய்தியைப் பிரசங்கித்தார். பதிவு இவ்வாறு சொல்கிறது: “பவுல் சொல்லியவைகளைக் கவனிக்கும்படி கர்த்தர் அவள் [லீதியாள்] இருதயத்தைத் திறந்தருளினார். அவளும் அவள் வீட்டாரும் ஞானஸ்நானம் பெற்றபின்பு, அவள் எங்களை நோக்கி: நீங்கள் என்னைக் கர்த்தரிடத்தில் விசுவாசமுள்ளவளென்று எண்ணினால், என் வீட்டிலே வந்து தங்கியிருங்கள் என்று எங்களை வருந்திக் கேட்டுக்கொண்டாள்.” (அப்போஸ்தலர் 16:12-15) மற்றவர்களுக்கு நற்காரியங்களை செய்ய லீதியாள் விரும்பியதால், தன் வீட்டில் தங்கும்படி பவுலையும் அவரது நண்பர்களையும் சம்மதிக்க வைத்தாள். இன்றும் கிறிஸ்தவர்கள் அன்போடும் கரிசனையோடும் அதேபோல் உபசரிப்பு காட்டுவதை நாம் எவ்வளவாய் மெச்சுகிறோம்!—ரோமர் 12:13; 1 பேதுரு 4:9.
பிள்ளைகளே, எங்களுக்கு நீங்களும் தேவை
14. இயேசு பிள்ளைகளை எவ்வாறு நடத்தினார்?
14 பரிவும் கனிவும் நிறைந்த கடவுளுடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவே கிறிஸ்தவ சபையை ஸ்தாபித்தார். அவர் அன்போடும் இரக்கத்தோடும் நடந்துகொண்டதால் மக்கள் அவரை தயக்கமின்றி அணுகினார்கள். ஒருசமயம், சிலர் தங்கள் சிறுபிள்ளைகளை இயேசுவிடம் அழைத்துக் கொண்டு வந்தபோது அவர்களை அவரிடம் அண்டவிடாமல் தடுக்க சீஷர்கள் முயன்றனர். ஆனால் இயேசு, “சிறு பிள்ளைகள் என்னிடத்தில் வருகிறதற்கு இடங்கொடுங்கள்; அவர்களைத் தடைபண்ணாதிருங்கள்; தேவனுடைய ராஜ்யம் அப்படிப்பட்டவர்களுடையது. எவனாகிலும் சிறு பிள்ளையைப்போல் தேவனுடைய ராஜ்யத்தை ஏற்றுக் கொள்ளாவிட்டால், அவன் அதில் பிரவேசிப்பதில்லையென்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்” என்றார். (மாற்கு 10:13-15) நாம் சிறுபிள்ளைகளைப் போலவே மனத்தாழ்மையோடும் கற்றுக்கொள்கிற மனப்பக்குவத்தோடும் இருந்தால்தான் ராஜ்ய ஆசீர்வாதங்களைப் பெற முடியும். சிறுவர்களை அணைத்து, ஆசீர்வதிப்பதன் மூலம் இயேசு அவர்கள் மீது அன்பு காட்டினார். (மாற்கு 10:16) இன்று எங்களோடு இருக்கும் சிறுவர் சிறுமியர்களே, உங்களைப் பற்றி என்ன சொல்வது? சபையின் பாசத்திற்கு உரியவர்கள் நீங்கள், சபைக்கு வேண்டியவர்கள் நீங்கள், இதில் சந்தேகமே வேண்டாம்.
15. இயேசுவின் வாழ்க்கையில் நடந்த என்ன சம்பவங்கள் லூக்கா 2:40-52-ல் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன, சிறியவர்களுக்கு அவர் எவ்வாறு முன்மாதிரி வைத்தார்?
15 இயேசு இள வயதிலேயே கடவுளையும் வேதாகமங்களையும் நேசித்ததை வெளிக்காட்டினார். அவர் 12 வயதாக இருந்தபோது, தம் தாய் தந்தையாகிய மரியாளோடும் யோசேப்போடும் எருசலேமுக்கு பயணித்தார். பஸ்கா பண்டிகையை ஆசரிப்பதற்காகவே அவர்கள் தங்கள் சொந்த ஊராகிய நாசரேத்திலிருந்து எருசலேமுக்கு சென்றனர். திரும்பி வருகையில் இயேசு காணாமல் போய்விட்டதை அவரது பெற்றோர் உணர்ந்தனர். எப்படியோ தேடி அலைந்து கடைசியில் தேவாலயத்தில் அவரை கண்டுபிடித்தனர்; அங்கு அவர் யூத போதகர்கள் பேசியதைக் கேட்டுக்கொண்டும் அவர்களிடம் கேள்விகள் கேட்டுக்கொண்டும் இருந்தார். தாம் எங்கு போயிருப்பார் என்றுகூட யோசேப்புக்கும் மரியாளுக்கும் தெரியாதிருந்ததைக் குறித்து இயேசு ஆச்சரியப்பட்டு, “என் பிதாவின் வீட்டில் நான் இருக்கவேண்டியதென்று அறியீர்களோ” என கேட்டார். அதன் பிறகு தம் பெற்றோருடன் வீடு திரும்பி, தொடர்ந்து அவர்களுக்குக் கீழ்ப்படிந்து நடந்து, ஞானத்திலும் சரீரத்திலும் வளர்ந்தார். (லூக்கா 2:40-52, தி.மொ.) நம் மத்தியிலுள்ள சிறியவர்களுக்கு இயேசு எப்பேர்ப்பட்ட சிறந்த முன்மாதிரி! இயேசுவைப் போலவே அவர்களும் பெற்றோருக்குக் கீழ்ப்படிந்து, ஆவிக்குரிய விஷயங்களை கற்றுக்கொள்வதில் ஆர்வம் காட்ட வேண்டும்.—உபாகமம் 5:16; எபேசியர் 6:1-3.
16. (அ) இயேசு ஆலயத்தில் பிரசங்கித்துக் கொண்டிருந்தபோது சிறுவர்கள் சிலர் என்னவென்று ஆர்ப்பரித்தார்கள்? (ஆ) இன்றைய இளம் கிறிஸ்தவர்கள் என்ன பாக்கியத்தைப் பெற்றிருக்கிறார்கள்?
16 இளைஞராக நீங்கள் பள்ளியிலோ பெற்றோருடன் வீட்டுக்கு வீடு ஊழியம் செய்கையிலோ யெகோவாவைப் பற்றி சாட்சி கொடுத்து வரலாம். (ஏசாயா 43:10-12; அப்போஸ்தலர் 20:20, 21) இயேசு இறப்பதற்கு சற்று முன்னர் ஆலயத்தில் சாட்சி கொடுத்துக் கொண்டும் சுகப்படுத்திக் கொண்டும் இருந்தபோது சிறுவர்கள் சிலர், “தாவீதின் குமாரனுக்கு ஓசன்னா!” என்று ஆர்ப்பரித்தார்கள். இதைக் கண்டு கடுங்கோபமடைந்த பிரதான ஆசாரியர்களும் வேதபாரகர்களும், “இவர்கள் சொல்லுகிறதைக் கேட்கிறீரோ” என்றார்கள். “ஆம், கேட்கிறேன். குழந்தைகளுடைய வாயினாலும் பாலகருடைய வாயினாலும் துதி உண்டாகும்படி செய்தீர் என்பதை நீங்கள் ஒருக்காலும் வாசிக்கவில்லையா” என்று இயேசு பதிலளித்தார். (மத்தேயு 21:15-17) அந்தச் சிறுவர்களைப் போலவே, சபையிலுள்ள இளைஞர்களாகிய நீங்களும் கடவுளையும் அவரது குமாரனையும் துதிக்கும் பெரும் பாக்கியத்தைப் பெற்றிருக்கிறீர்கள். உடன் ராஜ்ய பிரசங்கிகளாக நீங்கள் எங்களுக்கு வேண்டும்; ஆம் நீங்கள் எங்களுக்கு கட்டாயம் தேவை.
துன்பம் நேரிடுகையில்
17, 18. (அ) யூதேயாவிலிருந்த கிறிஸ்தவர்களுக்கு நிதி திரட்டப்படும்படி பவுல் ஏன் ஏற்பாடு செய்தார்? (ஆ) யூதேய விசுவாசிகளுக்கு மனமுவந்து அளிக்கப்பட்ட நன்கொடைகள், யூத கிறிஸ்தவர்கள் மீதும் புறஜாதி கிறிஸ்தவர்கள் மீதும் என்ன பாதிப்பை ஏற்படுத்தியது?
17 நாம் எப்படிப்பட்ட சூழ்நிலைகளில் இருந்தாலும் சரி, தேவையில் இருக்கும் உடன் கிறிஸ்தவர்களுக்கு உதவிசெய்ய அன்பினால் தூண்டப்படுகிறோம். (யோவான் 13:34, 35; யாக்கோபு 2:14-17) யூதேயாவிலிருந்த சகோதர சகோதரிகள் மீது பவுலுக்கு அன்பிருந்தது; அந்த அன்பினால்தான் அகாயா, கலாத்தியா, மக்கெதோனியா, ஆசிய மாகாணம் ஆகிய இடங்களிலிருந்த சபைகளில் அவர்களுக்காக நிதி திரட்டும் ஏற்பாட்டை செய்தார். எருசலேமிலிருந்த சீஷர்கள் அனுபவித்த துன்புறுத்துதலும் உள்நாட்டுக் கலவரமும் பஞ்சமும், பவுல் குறிப்பிட்ட ‘மிகுந்த போராட்டத்திலும்,’ ‘உபத்திரவத்திலும்,’ ‘ஆஸ்திகள் கொள்ளையிடப்படுவதிலும்’ விளைவடைந்திருக்கலாம். (எபிரெயர் 10:32-34; அப்போஸ்தலர் 11:27–12:1) ஆகவே யூதேயாவிலிருந்த ஏழை கிறிஸ்தவர்களுக்கு அவர் நிதி திரட்டிக் கொடுத்தார்.—1 கொரிந்தியர் 16:1-3; 2 கொரிந்தியர் 8:1-4, 13-15; 9:1, 2, 7.
18 யூதேயாவிலிருந்த பரிசுத்தவான்களுக்கு மனமுவந்து அளிக்கப்பட்ட நன்கொடைகள், யெகோவாவை வணங்கிய யூதர்களுக்கும் புறஜாதியினருக்கும் இடையே சகோதர பிணைப்பு நிலவியதை நிரூபித்தது. புறமதத்திலிருந்து மாறிய கிறிஸ்தவர்கள் பண நன்கொடைகள் வழங்கியது, யூதேய உடன் வணக்கத்தார் தங்களுக்கு அளித்த ஆவிக்குரிய பொக்கிஷங்களுக்கு நன்றியுணர்வு காட்டும் வழியாகவும் இருந்தது. ஆகவே பொருட்கள் மட்டுமல்ல ஆவிக்குரிய விஷயங்களும் பரிமாறிக்கொள்ளப்பட்டன. (ரோமர் 15:26, 27) இன்று தேவையிலிருக்கும் உடன் விசுவாசிகளுக்கு நன்கொடைகள் மனமுவந்து அளிக்கப்படுகின்றன, அன்பினால் தூண்டப்பட்டு அளிக்கப்படுகின்றன. (மாற்கு 12:28-31) ‘கொஞ்சமாய் பெற்றிருப்பவனுக்குக் குறைவாக இராதபடி’ சமமாக பகிர்ந்துகொள்ளும் இந்த விஷயத்திலும் நாம் ஒருவருக்கொருவர் தேவை.—2 கொரிந்தியர் 8:15, NW.
19, 20. பேரழிவுகள் ஏற்படும்போது யெகோவாவின் மக்கள் உதவிக்கரம் நீட்டுவதற்கு ஓர் உதாரணம் தருக.
19 கிறிஸ்தவர்கள் ஒருவருக்கொருவர் தேவை என்பதை உணர்ந்தவர்களாக, விசுவாசத்திலுள்ள நம் சகோதர சகோதரிகளின் உதவிக்கு உடனடியாக வருகிறோம். உதாரணத்திற்கு, 2001-ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் எல் சால்வடாரில் பூமியதிர்ச்சிகளும் நிலச்சரிவுகளும் பேரழிவை ஏற்படுத்தியபோது என்ன நடந்ததென கவனியுங்கள். ஓர் அறிக்கையின்படி, “எல் சால்வடாரின் எல்லா பகுதிகளிலும் சகோதரர்கள் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டனர். குவாதமாலா, ஐக்கிய மாகாணங்கள், கனடா ஆகிய இடங்களிலிருந்து வந்த அநேக சகோதரர்கள் கைகொடுத்தார்கள். . . . 500-க்கும் அதிகமான வீடுகளும் அழகான 3 ராஜ்ய மன்றங்களும் விரைவில் கட்டி முடிக்கப்பட்டன. சுயதியாகத்தைக் காட்டிய இந்த சகோதரர்களின் கடின உழைப்பும் ஒத்துழைப்பும் மிகப் பெரிய சாட்சி கொடுத்திருக்கிறது.”
20 தென் ஆப்பிரிக்காவிலிருந்து வந்த ஓர் அறிக்கை இவ்வாறு குறிப்பிட்டது: “மொசாம்பிக்கின் பெரும் பகுதியை நாசப்படுத்திய கொடிய வெள்ளம் நம் கிறிஸ்தவ சகோதரர்கள் அநேகரையும் பாதித்தது. அவர்களது தேவைகள் பெரும்பாலானவற்றை மொசாம்பிக் கிளை அலுவலகம் கவனித்துக்கொண்டது. ஆனால் தேவையிலிருந்த சகோதரர்களுக்கு தரமான பழைய துணிமணிகளை அனுப்பும்படி அது எங்களைக் கேட்டுக்கொண்டது. மொசாம்பிக்கிலிருந்த எங்கள் சகோதரர்களுக்கு 12 மீட்டர் கன்டெய்னர் நிறைய துணிமணிகளை அனுப்பி வைத்தோம்.” ஆம், இந்த விதங்களில்கூட நாம் ஒருவருக்கொருவர் தேவை.
21. அடுத்த கட்டுரையில் என்ன சிந்திக்கப்படும்?
21 முன்பு குறிப்பிட்டபடி மனித உடலின் எல்லா பாகங்களுமே முக்கியமானவை. கிறிஸ்தவ சபையைப் பொறுத்ததிலும் அதுவே உண்மை. அதன் அங்கத்தினர்கள் அனைவருக்குமே மற்ற அனைவரும் தேவை. அவர்கள் தொடர்ந்து ஒன்றுபட்டு சேவிப்பதும் அவசியம். இதற்கு வழிவகுக்கும் சில விஷயங்களை அடுத்த கட்டுரை சிந்திக்கும்.
எப்படி பதிலளிப்பீர்கள்?
• மனித உடலுக்கும் கிறிஸ்தவ சபைக்கும் இடையிலுள்ள ஒற்றுமைகள் யாவை?
• உடன் விசுவாசிகளுக்கு உதவி தேவைப்பட்டபோது பூர்வ கிறிஸ்தவர்கள் என்ன செய்தனர்?
• கிறிஸ்தவர்கள் ஒருவருக்கொருவர் தேவை என்பதையும் ஒருவருக்கொருவர் உதவுகிறார்கள் என்பதையும் காட்டும் வேதப்பூர்வ உதாரணங்கள் சில யாவை?
[பக்கம் 10-ன் படம்]
ஆக்கில்லாவும் பிரிஸ்கில்லாளும் மற்றவர்கள் மீது கரிசனை காட்டினார்கள்
[பக்கம் 12-ன் படங்கள்]
பேரழிவு ஏற்படுகையில் யெகோவாவின் மக்கள் ஒருவருக்கொருவரும் மற்றவர்களுக்கும் உதவி செய்கிறார்கள்