ஆக்கில்லா மற்றும் பிரிஸ்கில்லாள்—முன்மாதிரியான ஒரு தம்பதி
“கிறிஸ்து இயேசுவுக்குள் என் உடன் வேலையாட்களாகிய பிரிஸ்கில்லாளையும் ஆக்கில்லாவையும் வாழ்த்துங்கள். அவர்கள் என் பிராணனுக்காகத் தங்கள் கழுத்தைக் கொடுத்தவர்கள்; அவர்களைப்பற்றி நான்மாத்திரமல்ல, புறஜாதியாரில் உண்டான சபையாரெல்லாரும் நன்றியறிதலுள்ளவர்களாயிருக்கிறார்கள்.”—ரோமர் 16:3, 4.
ரோமிலுள்ள கிறிஸ்தவ சபைக்கு அப்போஸ்தலன் பவுல் எழுதிய இவ்வார்த்தைகள், இந்தத் தம்பதியினர்மீது அவருக்கிருந்த பெரும் மதிப்பையும் கனிவான அன்பையும் சுட்டிக்காண்பிக்கின்றன. அவர்களுடைய சபைக்கு அவர் எழுதும்போது தான் அவர்களை மறந்துவிடவில்லை என்பதை உறுதிப்படுத்தினார். ஆனால் பவுலுடன் இருந்த இந்த ‘உடன் வேலையாட்கள்’ யார், அவருக்கும் சபையாருக்கும் அவர்கள் ஏன் அவ்வளவு பிரியமானவர்களாய் இருந்தனர்?—2 தீமோத்தேயு 4:19.
ஆக்கில்லா என்பவர் டையஸ்போராவை (சிதறுண்ட யூதர்கள்) சேர்ந்த ஒரு யூதரும், வட ஆசியா மைனரிலுள்ள ஒரு பகுதியாகிய பொந்துவை தாயகமாக கொண்டவரும் ஆவார். அவரும் அவருடைய மனைவியாகிய பிரிஸ்கில்லாளும் (பிரிஸ்கா) ரோமில் குடிபுகுந்திருந்தனர். அந்தப் பட்டணத்தில் ஓரளவுக்குப் பெரிய யூத சமுதாயம் ஒன்று இருந்துவந்தது; இது, பொ.ச.மு. 63-ல் எருசலேமை பாம்ப்பே கைப்பற்றினது முதற்கொண்டாவது இருந்துவந்தது, அந்த சமயத்தில் பெரும் எண்ணிக்கையான சிறைக்கைதிகள் ரோமுக்கு அடிமைகளாக கொண்டுசெல்லப்பட்டிருந்தனர். உண்மையில், அந்தப் பூர்வ பட்டணத்தில் ஒரு டஜனுக்கும் அல்லது அதற்கும் மேலான ஜெபாலயங்கள் (Synagogues) இருந்ததை ரோம கல்வெட்டுகள் வெளிப்படுத்துகின்றன. ரோமிலிருந்து வந்த எண்ணற்ற யூதர்கள் பொ.ச. 33 பெந்தெகொஸ்தே நாளன்று எருசலேமில் தங்கியிருந்தனர்; அந்தச் சமயத்தில் நற்செய்தியை அவர்கள் கேள்விப்பட்டனர். ஒருவேளை அவர்கள் மூலம்தான் முதல் தடவையாக ரோம பேரரசின் தலைநகரத்திற்கு கிறிஸ்தவ செய்தி சென்றிருக்கலாம்.—அப்போஸ்தலர் 2:10.
என்றபோதிலும், பொ.ச. 49-ம் வருடத்தில் அல்லது 50-ன் ஆரம்ப காலத்தில், பேரரசர் கிலாவுதியன் ஆணையின்படி யூதர்கள் ரோமிலிருந்து துரத்தப்பட்டார்கள். எனவே, ஆக்கில்லாவையும் பிரிஸ்கில்லாளையும் பவுல் சந்தித்தது கொரிந்துவிலுள்ள கிரேக்க பட்டணத்திலாகும். கொரிந்துவுக்கு பவுல் வந்துசேர்ந்தபோது, ஆக்கில்லாவும் பிரிஸ்கில்லாளும் அவரை உபசரித்து, வேலையையும் அன்புடன் அளித்தனர், ஏனெனில் அவர்கள் ஒரே தொழிலை—கூடாரம் கட்டும் தொழிலை—செய்துவந்தனர்.—அப்போஸ்தலர் 18:2, 3.
கூடாரம் கட்டுவோர்
இது சுலபமான வேலையாக இருக்கவில்லை. கூடாரம் கட்டுவது என்பது மொடமொடப்பான, சொரசொரப்பான துணி அல்லது தோல் துண்டுகளை வெட்டி ஒன்றாக இணைத்து தைப்பதை உட்படுத்தியது. சரித்திராசிரியனாகிய ஃபேர்னான்டோ பேயா சொல்லுகிறபடி, இது கூடாரம் கட்டுவோருடைய பங்கில் “கைதேர்ந்த திறமையையும் கவனத்தையும் தேவைப்படுத்தும் ஒரு வேலை;” அவர்கள் “சொரசொரப்பான, விறைப்பான துணியைக்” கொண்டு வேலைசெய்தனர்; “அவை பயணம் செய்கையில் கூடாரம்போடுவதற்கு, வெய்யிலிலிருந்தும் மழையிலிருந்தும் பாதுகாப்பளிப்பதற்கு, அல்லது கப்பலின் சரக்குத் தளத்திலுள்ள பொருட்களை சுற்றி வைப்பதற்கு பயன்படுத்தப்பட்டன.”
இது ஒரு கேள்வியை எழுப்புகிறது. பவுல், ‘கமாலியேலின் பாதத்தருகே போதிக்கப்பட்டிருந்து,’ இவ்விதமாய் பிற்காலங்களில் கெளரவமான ஒரு வேலையை தொடருவதற்கான அடித்தளத்தைப் போட்டிருந்ததாக சொல்லவில்லையா? (அப்போஸ்தலர் 22:3) இது உண்மையாய் இருக்கிறபோதிலும், முதல் நூற்றாண்டு யூதர்கள் ஒரு சிறுவனுக்கு, அவன் உயர்கல்வி பயிலவேண்டியதாய் இருந்தாலும்கூட, ஒரு தொழிலைக் கற்றுக்கொடுப்பதை மதிப்புக்குரியதாய் கருதினர். ஆகவே, ஆக்கில்லாவும் பவுலும் இளவயதாக இருந்தபோது ஒருவேளை கூடாரம் கட்டுவதில் தங்களுடைய திறமையைப் பெற்றிருந்திருக்கலாம். அந்த அனுபவம் பிற்காலத்தில் மிகவும் பிரயோஜனமாய் இருந்தது. ஆனால் கிறிஸ்தவர்களாக, உலகப்பிரகாரமான இப்படிப்பட்ட வேலையை தங்களுடைய முக்கிய இலக்காக அவர்கள் கருதவில்லை. ஆக்கில்லா மற்றும் பிரிஸ்கில்லாளுடன் சேர்ந்து கொரிந்துவில் பவுல் செய்த வேலை, அவருடைய முக்கிய வேலையை, அதாவது, “ஒருவனுக்கும் பாரமாயிராதபடி” நற்செய்தியைப் பிரசங்கிக்கும் வேலையை ஆதரிக்க சம்பாத்தியத்தை தந்தது என்பதாக அவர் விளக்கினார்.—2 தெசலோனிக்கேயர் 3:8; 1 கொரிந்தியர் 9:18; 2 கொரிந்தியர் 11:7.
தெளிவாகவே, பவுலுடைய மிஷனரி சேவையை எளிதாக்குவதற்கு ஆக்கில்லாவும் பிரிஸ்கில்லாளும் தங்களால் இயன்ற அனைத்தையும் செய்ய பிரியமுள்ளவர்களாய் இருந்தனர். இந்த மூன்று நண்பர்களும் தங்களுடைய வாடிக்கைக்காரருக்கு அல்லது வழிப்போக்கருக்கு சந்தர்ப்ப சாட்சி கொடுக்க அடிக்கடி வேலையை சற்று நிறுத்தியிருப்பது சாத்தியமே! அவர்கள் செய்துவந்த கூடாரம் கட்டும் வேலை தாழ்ந்ததாகவும் சோர்வூட்டுவதாகவும் இருந்தபோதிலும்கூட, அதைச் செய்வதில் அவர்கள் சந்தோஷமுள்ளவர்களாய் இருந்தனர்; கடவுளுடைய அக்கறைகளை முன்னேற்றுவிப்பதற்காக ‘இரவு பகல்’ பாராமல் வேலைசெய்தனர். அதைப் போலவேதான் நவீனகால கிறிஸ்தவர்கள் அநேகர், நற்செய்தியை மக்கள் கேட்கும்படி உதவிசெய்ய, தங்களுக்கு கிடைக்கும் பெரும்பாலான நேரத்தை அர்ப்பணிப்பதற்காக பகுதிநேர அல்லது அந்தந்த காலத்திற்கேற்ற வேலையைக் கொண்டு தங்களை ஆதரித்துக்கொள்கின்றனர்.—1 தெசலோனிக்கேயர் 2:9; மத்தேயு 24:14; 1 தீமோத்தேயு 6:6.
உபசரிப்புக்கான உதாரணங்கள்
கொரிந்துவில் 18 மாதங்கள் பவுல் தங்கியிருந்தபோது, ஒருவேளை ஆக்கில்லாவினுடைய வீட்டை மிஷனரி நடவடிக்கைகளுக்கான ஒரு மையமாக பயன்படுத்தியிருக்கலாம். (அப்போஸ்தலர் 18:3, 11) அப்படியானால், சீலாவும் (சில்வானு) தீமோத்தேயுவும் மக்கெதோனியாவிலிருந்து வந்துசேருகையில், அவர்களையும் விருந்தாளிகளாய் உபசரிக்கும் இன்பத்தை ஆக்கில்லாவும் பிரிஸ்கில்லாளும் ஒருவேளை அனுபவித்திருக்கலாம். (அப்போஸ்தலர் 18:5) தெசலோனிக்கேயர்களுக்கு பவுல் எழுதிய இரண்டு கடிதங்கள்—இவை பிற்பாடு பைபிளின் நம்பகத்தன்மையுள்ள புத்தகங்களின் வரிசையில் ஒரு பாகமாகின—ஆக்கில்லாவுடனும் பிரிஸ்கில்லாளுடனும் பவுல் தங்கியிருக்கையில் எழுதப்பட்டிருக்கலாம்.
இந்தச் சமயத்தில், பிரிஸ்கில்லாள் மற்றும் ஆக்கில்லாவினுடைய வீடு தேவராஜ்ய நடவடிக்கைக்கு உண்மையிலேயே ஒரு மையமாக இருந்ததை எளிதில் கற்பனை செய்து பார்க்கலாம். ஒருவேளை அன்பான நண்பர்கள்: பவுலாலேயே முழுக்காட்டப்பட்ட, அகாயா மாகாணத்திலுள்ள முதல் கிறிஸ்தவர்களாகிய ஸ்தேவானும் அவனுடைய வீட்டாரும்; பேச்சுகள் கொடுப்பதற்கு தன்னுடைய வீட்டை பயன்படுத்த பவுலை அனுமதித்தவராகிய தீத்து யுஸ்து; தன்னுடைய வீட்டாரோடுகூட சத்தியத்தை ஏற்றுக்கொண்ட ஜெப ஆலயத் தலைவனாகிய கிறிஸ்பு ஆகியோர் அங்கு அடிக்கடி சென்றிருக்கலாம். (அப்போஸ்தலர் 18:7, 8; 1 கொரிந்தியர் 1:16) அதோடு இவர்களும் அங்கு இருந்தனர்: பொர்த்துனாத்து, அகாயுக்கு மற்றும் காயு; காயுவின் வீட்டில் சபை கூட்டங்கள் நடத்தப்பட்டிருக்கலாம்; பட்டணத்து உக்கிராணக்காரனாகிய ஏரஸ்து; ரோமருக்கான கடிதத்தை பவுல் சொல்லச்சொல்ல அதை எழுதிய செயலாளர் தெர்தியு; அருகிலிருந்த கெங்கிரேயா சபையின் உண்மையுள்ள சகோதரியாகிய பெபேயாள்; ஒருவேளை பெபேயாள் கொரிந்துவிலிருந்து ரோமுக்கு கடிதத்தை எடுத்துச்சென்றிருக்கலாம்.—ரோமர் 16:1, 22, 23; 1 கொரிந்தியர் 16:17.
பயணக் கண்காணிக்கு உபசரிப்புத்தன்மையைக் காண்பிக்கும் வாய்ப்பை பெற்றிருந்திருக்கிற யெகோவாவின் நவீனகால ஊழியர்கள், அது எவ்வளவு ஊக்கமூட்டுவதாயும் நினைவில் நிற்பதாயும் இருக்கிறது என்பதை அறிந்திருக்கின்றனர். இப்படிப்பட்ட சந்தர்ப்பங்களில் விவரிக்கப்படும் கட்டியெழுப்புகிற அனுபவங்கள் அனைவருக்கும் ஆவிக்குரிய புத்துணர்ச்சியளிக்கும் உண்மையான ஓர் ஊற்றுமூலமாய் இருக்கக்கூடும். (ரோமர் 1:11, 12) மேலும், ஆக்கில்லாவும் பிரிஸ்கில்லாளும் செய்ததுபோல, கூட்டங்கள் நடத்துவதற்காக, ஒருவேளை சபை புத்தகப் படிப்புக்காக தங்களுடைய வீடுகளை அளிக்கும் ஆட்கள், தங்களால் இந்த முறையில் மெய் வணக்கத்தின் முன்னேற்றத்திற்கு உதவிசெய்ய முடிந்ததே என்ற சந்தோஷத்தையும் திருப்தியையும் அனுபவிக்கின்றனர்.
பொ.ச. 52 இளவேனிற்காலத்தில் கொரிந்து பட்டணத்தைவிட்டு பவுல் புறப்பட்டபோது, ஆக்கில்லாவும் பிரிஸ்கில்லாளும் எபேசு வரைக்கும் அவருடன் சேர்ந்து செல்லுமளவுக்கு பவுலுடன் அவர்கள் கொண்டிருந்த நட்பு அவ்வளவு நெருக்கமாய் இருந்தது. (அப்போஸ்தலர் 18:18-21) அவர்கள் அந்தப் பட்டணத்தில் தங்கியிருந்து, அப்போஸ்தலனின் அடுத்த சந்திப்புக்கான அஸ்திவாரத்தைப் போட்டனர். நற்செய்தியின் வரம்பெற்ற போதகர்களாகிய இவர்கள் சொல்வன்மைமிக்கவராகிய அப்பொல்லோவை ‘தங்களுடன் சேர்த்துக்கொண்டு,’ “தேவனுடைய மார்க்கத்தை அதிக திட்டமாய்” புரிந்துகொள்ள அவருக்கு உதவிசெய்யும் சந்தோஷத்தைப் பெற்றனர். (அப்போஸ்தலர் 18:24-26) ஏறக்குறைய பொ.ச. 52/53 குளிர்காலத்தில், பவுல் தன்னுடைய மூன்றாவது மிஷனரி பயணத்தின் சமயத்தில் எபேசுவிற்கு மீண்டும் சென்றபோது, ஆற்றல்மிக்க இந்தத் தம்பதியால் பண்படுத்தப்பட்டிருந்த இந்த இடம் ஏற்கெனவே அறுவடைக்காக தயாராயிருந்தது. சுமார் மூன்று ஆண்டுகளாக, ‘அந்த மார்க்கத்தைப்பற்றி’ பவுல் அங்கு பிரசங்கித்து போதித்துவந்தார், அந்தச் சமயத்தில் எபேசு சபை ஆக்கில்லாவுடைய வீட்டில் கூட்டங்களை நடத்தியது.—அப்போஸ்தலர் 19:1-20, 26; 20:31; 1 கொரிந்தியர் 16:8, 19.
பிற்பாடு, அவர்கள் ரோமுக்குத் திரும்பி வந்தபோது, பவுலுடைய இவ்விரண்டு நண்பர்கள் ‘உபசரிக்கும் பண்பை’ தொடர்ந்து பின்பற்றி, தங்களுடைய வீட்டை கிறிஸ்தவ கூட்டங்கள் நடத்துவதற்கு கொடுத்தனர்.—ரோமர் 12:13; 16:3-5.
அவர்கள் பவுலுக்காக ‘தங்கள் கழுத்தைக் கொடுத்தார்கள்’
எபேசுவில் பவுல் இருந்தபோது, ஒருவேளை ஆக்கில்லா மற்றும் பிரிஸ்கில்லாளுடன் அவர் தங்கி இருக்கலாம். வெள்ளி தட்டான்கள் ஏற்படுத்திய கலகத்தின் சமயத்தில் அவர்களுடன் அவர் தங்கியிருந்தாரா? அப்போஸ்தலர் 19:23-31-ல் உள்ள பதிவின்படி, நற்செய்தியைப் பிரசங்கிப்பதற்கு எதிராக சிறு கோயில்களை உருவாக்கிய கைவினைஞர்கள் அமளியுண்டாக்கியபோது, பவுல் அந்தக் கலகக்கூட்டத்துக்கு முன்பாக போவதன்மூலம் தன்னை ஆபத்திற்குட்படுத்துவதை அந்தச் சகோதரர்கள் தடுக்க வேண்டியதாயிருந்தது. பவுல் ‘தன்னுடைய சொந்த உயிரைக் குறித்தே நிச்சயமில்லாதவராய்’ உணருமளவுக்கு அது அப்பேர்ப்பட்ட ஓர் ஆபத்தான சந்தர்ப்பமாக இருந்திருக்கலாம் எனவும், ஆக்கில்லாவும் பிரிஸ்கில்லாளும் ‘தங்களுடைய கழுத்தைக் கொடுத்து’ ஏதாவது முறையில் குறுக்கிட்டார்கள் எனவும் சில பைபிள் விரிவுரையாளர்கள் ஊகித்திருக்கின்றனர்.—2 கொரிந்தியர் 1:8; ரோமர் 16:3, 4.
“கலகம் அமர்ந்த”போது, பவுல் ஞானமாய் அந்தப் பட்டணத்தை விட்டுச்சென்றார். (அப்போஸ்தலர் 20:1) ஆக்கில்லாவும் பிரிஸ்கில்லாளும்கூட எதிர்ப்பையும் பரிகாசத்தையும் எதிர்பட்டனர் என்பதில் சந்தேகமில்லை. இப்படிப்பட்ட காரியங்கள் அவர்களுடைய உள்ளம் வாடிவிடும்படி செய்ததா? அதற்கு மாறாக, ஆக்கில்லாவும் பிரிஸ்கில்லாளும் தங்களுடைய கிறிஸ்தவ முயற்சிகளில் தைரியமாய் தொடர்ந்து முன்னேறினர்.
நெருக்கமான ஒரு தம்பதி
கிலாவுதியனுடைய ஆட்சி முடிவடைந்தபோது, ஆக்கில்லாவும் பிரிஸ்கில்லாளும் ரோமுக்குத் திரும்பினர். (ரோமர் 16:3-15) என்றபோதிலும், பைபிளில் அவர்கள் குறிப்பிடப்பட்டுள்ள கடைசி தடவையில், அவர்கள் எபேசுவுக்குத் திரும்பி வந்திருந்ததாக நாம் காண்கிறோம். (2 தீமோத்தேயு 4:19) மீண்டும், வேதாகமத்திலுள்ள மற்ற அனைத்து இடங்களிலும் சொல்லப்பட்டுள்ளது போலவே, இந்தக் கணவனும் மனைவியும் ஒன்றுசேர்ந்தே குறிப்பிடப்பட்டிருக்கின்றனர். என்னே ஒரு நெருக்கமான, ஒற்றுமையான தம்பதி! உண்மையுடன் ஒத்துழைத்த ஆக்கில்லாவின் மனைவியை நினைவுகூராமல் பிரியமுள்ள அந்தச் சகோதரனாகிய ஆக்கில்லாவை பவுலால் நினைக்க முடியவில்லை. இன்றைய கிறிஸ்தவ தம்பதிகளுக்கு என்னே ஓர் சிறந்த முன்மாதிரி, ஏனென்றால் ஒப்புக்கொடுக்கப்பட்ட துணைவியரின் உண்மைப்பற்றுள்ள உதவி ‘கர்த்தருடைய வேலையில் அதிகத்தைச் செய்வதற்கு’ ஒரு நபரை அனுமதிக்கிறது, சிலசமயங்களில், மணமுடிக்காத ஒரு நபராக ஒருவேளை செய்யக்கூடியதைக் காட்டிலும் அதிகத்தைச் செய்ய அனுமதிக்கிறது.—1 கொரிந்தியர் 15:58, NW.
ஆக்கில்லாவும் பிரிஸ்கில்லாளும் அநேக வித்தியாசமான சபைகளில் சேவை செய்தனர். அவர்களைப் போலவே, வைராக்கியமுள்ள நவீனகால கிறிஸ்தவர்கள் அநேகர் தேவை அதிகமுள்ள இடங்களுக்கு மாறிச்செல்வதன் மூலம் தங்களையே மனமுவந்து அளித்திருக்கின்றனர். ராஜ்ய அக்கறைகள் வளருவதைப் பார்ப்பதிலிருந்தும் கனிவானதும் அருமையானதுமான கிறிஸ்தவ நட்புறவுகளை வளர்க்க முடிந்தவர்களாய் இருப்பதிலிருந்தும் கிடைக்கும் சந்தோஷத்தையும் திருப்தியையும்கூட அனுபவிக்கின்றனர்.
ஆக்கில்லாவும் பிரிஸ்கில்லாளும் தங்களுடைய உயரிய கிறிஸ்தவ அன்பினால், பவுல் மற்றும் ஏனையோருடைய போற்றுதலை பெற்றனர். ஆனால் அதைவிட முக்கியமாக, யெகோவாவுடன் தாமே அருமையான ஒரு நற்பெயரை உருவாக்கிக்கொண்டனர். வேதாகமம் நமக்கு இவ்வாறு உறுதியளிக்கிறது: “உங்கள் கிரியையையும், நீங்கள் பரிசுத்தவான்களுக்கு ஊழியஞ்செய்ததினாலும் செய்து வருகிறதினாலும் தமது நாமத்திற்காகக் காண்பித்த அன்புள்ள பிரயாசத்தையும் மறந்துவிடுகிறதற்கு தேவன் அநீதியுள்ளவரல்லவே.”—எபிரெயர் 6:10.
ஆக்கில்லாவும் பிரிஸ்கில்லாளும் செய்ததுபோன்ற வழிகளில் நம்மையே அளிப்பதற்கு நமக்கு வாய்ப்பில்லாமல் இருக்கலாம்; என்றபோதிலும், நாம் அவர்களுடைய மிகச் சிறந்த முன்மாதிரியைப் பின்பற்றலாம். ‘நன்மைசெய்வதும் தானதர்மம்பண்ணுவதுமாகிய இப்படிப்பட்ட பலிகளின்மேல் தேவன் பிரியமாயிருக்கிறார்’ என்பதை ஒருபோதும் மறவாமல், நம்முடைய சக்தியையும் உயிரையும் பரிசுத்த சேவைக்கு அர்ப்பணிக்கையில் ஆழ்ந்த திருப்தி நம்முடையதாய் இருக்கும்.—எபிரெயர் 13:15, 16.