கிறிஸ்துவின் பிரமாணத்தின்படி வாழ்தல்
“ஒருவர் பாரத்தை ஒருவர் சுமந்து, இப்படியே கிறிஸ்துவினுடைய பிரமாணத்தை நிறைவேற்றுங்கள்.”—கலாத்தியர் 6:2.
1. இன்று கிறிஸ்துவின் பிரமாணம் நன்மைக்கேதுவான வல்லமைவாய்ந்த சக்தியாயிருக்கிறது என்று ஏன் சொல்லலாம்?
ருவாண்டாவில், ஹூட்டூ மற்றும் டூட்ஸி இனத்தாரில், யெகோவாவின் சாட்சிகளாக இருந்தவர்கள், அந்த நாடு முழுவதிலும் சமீபத்தில் நடந்த இனப் படுகொலையிலிருந்து ஒருவரையொருவர் பாதுகாப்பதற்குத் தங்கள் உயிரையே ஆபத்தில் வைத்தனர். ஜப்பானிலுள்ள கோபில் பேரழிவை உண்டாக்கின பூமியதிர்ச்சியில் குடும்ப அங்கத்தினரை இழந்தவர்களான யெகோவாவின் சாட்சிகள், தங்கள் இழப்பால் உடைந்து போனார்கள். எனினும், அதில் அகப்பட்ட மற்றவர்களைக் காப்பாற்றுவதற்கு உடனடியாகச் சென்றனர். ஆம், உலகம் முழுவதிலிருந்தும் வரும் இருதயத்தை மகிழ்விக்கும் உதாரணங்கள், இன்று கிறிஸ்துவின் பிரமாணம் செயல்பட்டு பயன்தருகிறது என்பதை மெய்ப்பித்துக் காட்டுகின்றன. அது நன்மைக்கேதுவான வல்லமைவாய்ந்த சக்தியாயிருக்கிறது.
2. எவ்வாறு கிறிஸ்துவின் பிரமாணத்தைப் புரிந்துகொள்ள கிறிஸ்தவமண்டலம் தவறிவிட்டது, அந்தப் பிரமாணத்தை நிறைவேற்றுவதற்கு நாம் என்ன செய்யலாம்?
2 அதே சமயத்தில், இந்தக் கொடிய ‘கடைசிநாட்களைப்’ பற்றிய பைபிள் தீர்க்கதரிசனம் ஒன்றும் நிறைவேற்றமடைகிறது. பலர், ‘தேவபக்தியின் வேஷத்தைத் தரித்து,’ ஆனால் ‘அதின் பலனை மறுதலிக்கிறவர்களாய்’ இருக்கிறார்கள். (2 தீமோத்தேயு 3:1, 5) முக்கியமாய் கிறிஸ்தவமண்டலத்தில், மதம், இருதயப்பூர்வமானதாக இராமல், புற ஆசாரமாகவே பெரும்பாலும் உள்ளது. கிறிஸ்துவின் பிரமாணத்தின்படி வாழ்வது மட்டுக்குமீறி கடினமாக இருப்பதன் காரணமாகவா அவ்வாறுள்ளது? இல்லை. பின்பற்றமுடியாத ஒரு பிரமாணத்தை இயேசு நமக்குக் கொடுத்திருக்க மாட்டார். கிறிஸ்துவின் பிரமாணத்தைப் புரிந்துகொள்ள கிறிஸ்தவமண்டலம் தவறினதே அதன் காரணம். தேவாவியால் ஏவப்பட்ட இவ்வார்த்தைகளுக்குச் செவிகொடுக்க அது தவறிவிட்டிருக்கிறது: “ஒருவர் பாரத்தை ஒருவர் சுமந்து, இப்படியே கிறிஸ்துவினுடைய பிரமாணத்தை நிறைவேற்றுங்கள்.” (கலாத்தியர் 6:2) பரிசேயரின் மாதிரியைப் பின்பற்றி, நம்முடைய சகோதரரின் பாரங்களோடு நியாயமில்லாமல் மேலும் கூட்டுவதால் அல்ல, ஒருவருக்கொருவர் பாரங்களைச் சுமப்பதினாலேயே நாம், ‘கிறிஸ்துவினுடைய பிரமாணத்தை நிறைவேற்றுகிறோம்.’
3. (அ) கிறிஸ்துவின் பிரமாணத்தில் அடங்கியுள்ள சில கட்டளைகள் யாவை? (ஆ) கிறிஸ்துவின் நேரடியான கட்டளைகளைத் தவிர, வேறெந்த விதிமுறைகளையும் கிறிஸ்தவ சபை கொண்டிருக்கக்கூடாது என்று முடிவுசெய்வது ஏன் தவறாயிருக்கும்?
3 கிறிஸ்துவின் பிரமாணம், கிறிஸ்து இயேசுவின் கட்டளைகள்—அவை பிரசங்கித்தல் மற்றும் போதித்தல், கண்ணை தூய்மையாயும் தெளிவாயும் வைத்தல், நம் அயலாரோடு சமாதானத்தைக் காத்துக்கொள்ள உழைத்தல், அல்லது சபையிலிருந்து தூய்மைக்கேட்டை நீக்குதல் போன்ற எதுவாயினும்—எல்லாம் அடங்கியதாயிருக்கிறது. (மத்தேயு 5:27-30; 18:15-17; 28:19, 20; வெளிப்படுத்துதல் 2:14-16) கிறிஸ்துவைப் பின்பற்றுவோருக்குக் கொடுக்கப்பட்ட பைபிளிலுள்ள எல்லா கட்டளைகளையும் கைக்கொள்ள கிறிஸ்தவர்கள் நிச்சயமாகவே கடமைப்பட்டிருக்கிறார்கள். இன்னும் அதிகமும் உண்டு. நல்லொழுங்கை பாதுகாப்பதற்கு, யெகோவாவின் அமைப்பும் அதோடுகூட தனிப்பட்ட சபைகளும் அவசியமான விதிமுறைகளையும், செயல்படுவதற்குரிய முறைகளையும் அமைக்க வேண்டியதாக இருக்கிறது. (1 கொரிந்தியர் 14:33, 40) கூட்டங்களை எப்போது, எங்கே, எவ்வாறு நடத்த வேண்டும் என்பவற்றைக் குறித்து விதிமுறைகள் இல்லையென்றால், கிறிஸ்தவர்கள் ஒன்றாகக் கூடவும் முடியாதே! (எபிரெயர் 10:24, 25) அமைப்பில் அதிகாரம் அளிக்கப்பட்டிருப்போர் நிலைநாட்டியிருக்கும் நியாயமான வழிகாட்டும் விதிகளோடு ஒத்துழைப்பதும், கிறிஸ்துவின் பிரமாணத்தை நிறைவேற்றுவதன் ஒரு பாகமாக இருக்கிறது.—எபிரெயர் 13:17.
4. தூய்மையான வணக்கத்தின் பின்னாலுள்ள உந்தும் சக்தி என்ன?
4 இருப்பினும், உண்மையான கிறிஸ்தவர்கள், தங்கள் வணக்கம், பிரமாணங்கள் அடங்கிய அர்த்தமற்ற ஓர் அமைப்புமுறையாகும்படி அனுமதிக்கிறதில்லை. யெகோவாவைச் சேவிக்கும்படி ஒரு நபர் அல்லது அமைப்பு தங்களுக்குச் சொல்வதன் காரணமாக அவர்கள் யெகோவாவைச் சேவிப்பதில்லை. மாறாக, அன்பே அவர்களுடைய வணக்கத்தின் பின்னாலுள்ள உந்தும் சக்தியாக இருக்கிறது. பவுல் எழுதினார்: “கிறிஸ்துவினுடைய அன்பு எங்களை நெருக்கி ஏவுகிறது.” (2 கொரிந்தியர் 5:14, NW, அடிக்குறிப்பு) ஒருவரையொருவர் நேசிக்கும்படி இயேசு தம்முடைய சீஷர்களுக்குக் கட்டளையிட்டார். (யோவான் 15:12, 13) சுய தியாக அன்பே, கிறிஸ்துவின் பிரமாணத்தினுடைய மூலாதாரமாக இருக்கிறது, அதுவே, எங்குமுள்ள உண்மையான கிறிஸ்தவர்களை, குடும்பத்திலும் சபையிலும் செயல்படும்படி நெருக்கி ஏவுகிறது அல்லது உந்துவிக்கிறது. எவ்வாறு என்பதை நாம் பார்க்கலாம்.
குடும்பத்தில்
5. வீட்டில் பெற்றோர் எவ்வாறு கிறிஸ்துவின் பிரமாணத்தை நிறைவேற்றலாம்? (ஆ) பெற்றோரிடமிருந்து பிள்ளைகளுக்கு என்ன தேவை, அதை அளிப்பதற்கு என்ன இடையூறுகளைச் சில பெற்றோர் மேற்கொள்ள வேண்டும்?
5 அப்போஸ்தலன் பவுல் இவ்வாறு எழுதினார்: “புருஷர்களே, உங்கள் மனைவிகளில் அன்புகூருங்கள்; அப்படியே கிறிஸ்துவும் சபையில் அன்புகூர்ந்து, . . . தம்மைத்தாமே அதற்காக ஒப்புக்கொடுத்தார்.” (எபேசியர் 5:25, 27) ஒரு கணவர், கிறிஸ்துவின் மாதிரியைப் பின்பற்றி தன் மனைவியை அன்புடனும் புரிந்துகொள்ளுதலுடனும் நடத்துகையில், கிறிஸ்துவின் பிரமாணத்தினுடைய மிக முக்கியமான அம்சத்தை நிறைவேற்றுகிறார். மேலும், இயேசு, பிள்ளைகளைத் தம் கரங்களில் எடுத்து, அவர்களின் மேல் கைகளை வைத்து ஆசீர்வதித்தார்; வெளிப்படையாக அவர்களுக்குப் பாசத்தைக் காட்டினார். (மாற்கு 10:16) கிறிஸ்துவின் பிரமாணத்தை நிறைவேற்றுகிற பெற்றோரும் தங்கள் பிள்ளைகளுக்குப் பாசத்தை வெளிப்படுத்திக் காட்டுகின்றனர். உண்மைதான், இந்தக் காரியத்தில் இயேசுவின் முன்மாதிரியைப் பின்பற்றுவது ஒரு சவாலாக இருப்பதாய்க் காணும் பெற்றோரும் இருக்கின்றனர். உணர்ச்சிகளை வெளிப்படையாகக் காட்டும் இயல்புடையோராகச் சிலர் இல்லை. பெற்றோரே, உங்கள் பிள்ளைகளின்பேரில் நீங்கள் உணரும் அன்பை அவர்களுக்கு வெளிப்படுத்திக் காட்டுவதை, அத்தகைய காரணம் உங்களைத் தடுத்துவைக்க அனுமதியாதீர்கள்! உங்கள் பிள்ளைகளை நேசிக்கிறீர்களென்று நீங்கள் அறிந்திருப்பது மட்டும் போதுமானதல்ல. அவர்களும் அதை அறிய வேண்டும். உங்கள் அன்பைக் காட்டுவதற்கு நீங்கள் வழிவகைகளைக் கண்டறிந்தால் தவிர, அதை அவர்கள் அறிந்துகொள்ள மாட்டார்கள்.—மாற்கு 1:11-ஐ ஒப்பிடுக.
6. (அ) பிள்ளைகளுக்குப் பெற்றோரின் விதிமுறைகள் தேவைப்படுகின்றனவா, ஏன் அவ்வாறு பதிலளிக்கிறீர்கள்? (ஆ) குடும்ப விதிமுறைகளுக்கு அடிப்படையான என்ன காரணத்தைப் பிள்ளைகள் புரிந்துகொள்ள வேண்டும்? (இ) குடும்பத்தினருக்குள் கிறிஸ்துவின் பிரமாணம் நடப்பில் இருந்துவருகையில் என்ன ஆபத்துகள் தவிர்க்கப்படுகின்றன?
6 அதேசமயத்தில், பிள்ளைகளுக்குக் கட்டுப்பாடுகள் தேவை, இது, அவர்களுடைய பெற்றோர் விதிமுறைகளை வைத்து அவற்றை மீறுவதைத் தடுத்து, நடைமுறைப்படுத்துவதற்குச் சிலசமயங்களில் சிட்சையளிப்பது தேவைப்படுவதைக் குறிக்கிறது. (எபிரெயர் 12:7, 9, 11) அப்படியிருந்தாலும், இந்த விதிமுறைகளுக்கு அடிப்படையான காரணம், அவர்களுடைய பெற்றோர் அவர்களை நேசிப்பதுதான் என்பதைப் பிள்ளைகள் படிப்படியாகக் கண்டறியும்படி அவர்களுக்கு உதவிசெய்ய வேண்டும். மேலும், தாங்கள் பெற்றோருக்குக் கீழ்ப்படிவதற்கு மிகச் சிறந்த காரணம் அன்பே என்பதை அவர்கள் கற்றுக்கொள்ள வேண்டும். (எபேசியர் 6:1; கொலோசெயர் 3:20; 1 யோவான் 5:3) முடிவில் இளைஞர் தாங்களாகவே நல்ல தீர்மானங்களைச் செய்யும்படி, தங்கள் ‘பகுத்தறியும் வல்லமையைப்’ பயன்படுத்த அவர்களுக்குக் கற்பிப்பது அறிவுக்கூர்மையுள்ள பெற்றோரின் இலக்காக இருக்கிறது. (ரோமர் 12:1; 1 கொரிந்தியர் 13:11-ஐ ஒப்பிடுக.) மறுபட்சத்தில், விதிமுறைகள் மட்டுக்குமீறிய எண்ணிக்கையானவையாக, அல்லது சிட்சை, மீறிய கடுமையாக இருக்கக்கூடாது. பவுல் இவ்வாறு கூறுகிறார்: “பிதாக்களே, உங்கள் பிள்ளைகள் மனந்தளர்ந்துபோகாதபடி அவர்களுக்கு எரிச்சலுண்டாக்காதிருங்கள்.” (கொலோசெயர் 3:21, தி.மொ.; எபேசியர் 6:4) குடும்பத்தினருக்குள் கிறிஸ்துவின் பிரமாணம் நடப்பில் இருந்துவந்தால், அடக்கமுடியாத கோபத்தோடு அல்லது மனதைப் புண்படுத்தும் பழிப்புச் சொற்களோடு சிட்சை அளிப்பதற்கு இடமிராது. அத்தகைய வீட்டில், பிள்ளைகள், பாரம் சுமத்தப்படுவோராக அல்லது ஒடுக்கப்படுவோராக அல்ல, சுகபத்திரமாயும் கட்டியெழுப்பப்படுவோராயும் உணருகின்றனர்.—சங்கீதம் 36:7-ஐ ஒப்பிடுக.
7. வீட்டில் விதிமுறைகள் நியமிப்பதற்கு வருகையில், என்ன வகைகளில் பெத்தேல் வீடுகள் முன்மாதிரியை அளிக்கலாம்?
7 உலகெங்குமுள்ள பெத்தேல் வீடுகளுக்கு சென்று வந்திருப்போர் சிலர், ஒரு குடும்பத்திற்கான விதிமுறைகளின் காரியத்தில், சமநிலைக்குரிய நல்ல முன்மாதிரிகளாக அவை இருக்கின்றனவென்று சொல்கின்றனர். வயதுவந்தவர்கள் அடங்கியவையாக அவை இருக்கிறபோதிலும், அத்தகைய நிறுவனங்கள் குடும்பங்களைப் போன்று இயங்குகின்றன.a பெத்தேல் இயங்குமுறைகள் சிக்கலானவையாய் இருக்கின்றன, போதிய அளவான விதிமுறைகள்—நிச்சயமாகவே, பொதுவான குடும்பத்தில் இருப்பவற்றைப் பார்க்கிலும் அதிகமானவை—தேவைப்படுகின்றன. இருப்பினும், பெத்தேல் வீடுகள், அலுவலகங்கள், தொழிற்சாலைகள் ஆகியவற்றின் செயல்பாடுகளில் தலைமை வகிக்கும் மூப்பர்கள், கிறிஸ்துவின் பிரமாணத்தைப் பொருத்திப் பயன்படுத்த முயற்சி செய்கின்றனர். வேலையை ஒழுங்குபடுத்துவது மட்டுமல்லாமல், தங்கள் உடன் ஊழியர்களுக்குள் ஆவிக்குரிய படிப்படியான வளர்ச்சியையும், ‘யெகோவாவினால் வரும் மகிழ்ச்சியையும்’ முன்னேற்றுவிப்பதும் தங்கள் ஊழிய நியமிப்பென்று அவர்கள் கருதுகின்றனர். (நெகேமியா 8:10, தி.மொ.) ஆகையால், காரியங்களை உடன்பாடான மற்றும் ஊக்கமூட்டும் முறையில் செய்ய அவர்கள் பிரயாசப்பட்டு, நியாயமான விதத்தில் கடுமுயற்சி செய்கின்றனர். (எபேசியர் 4:31, 32) பெத்தேல் குடும்பங்கள் மகிழ்ச்சியுள்ள குடும்பங்களாக இருப்பவையாக அறியப்படுவது ஆச்சரியமாயில்லை!
சபையில்
8. (அ) எப்போதும், சபையில் நம்முடைய இலக்கு என்னவாக இருக்க வேண்டும்? (ஆ) எந்தச் சந்தர்ப்பங்களின்கீழ் சிலர் விதிமுறைகள் வேண்டுமென்று கேட்டனர் அல்லது அவற்றை உண்டாக்கும்படி முயற்சி செய்தனர்?
8 அவ்வாறே சபையில், அன்புக்குரிய மனப்பான்மையில் ஒருவரையொருவர் கட்டியெழுப்புவது நம்முடைய இலக்காக இருக்கிறது. (1 தெசலோனிக்கேயர் 5:11) ஆகையால், தனிப்பட்டவரின் சொந்த விருப்பத் தெரிந்துகொள்ளுதலுக்குரிய காரியங்களில், தங்கள் அபிப்பிராயங்களை உட்படுத்தி, மற்றவர்களின் பாரங்களோடு மேலும் கூட்டாதபடி கிறிஸ்தவர்கள் எல்லாரும் கவனமாயிருக்க வேண்டும். குறிப்பிட்ட திரைப்படங்கள், புத்தகங்கள், மற்றும் விளையாட்டுப் பொருட்கள் போன்ற காரியங்களையுங்கூட, தாங்கள் எவ்வாறு கருதவேண்டும் என்பதன்பேரில் தீர்வுமுடிவுகளைக் கேட்டு சிலர், உவாட்ச் டவர் சொஸைட்டிக்கு எழுதுகின்றனர். எனினும், சொஸைட்டி அத்தகைய காரியங்களை நுண்ணாய்வு செய்து, அவற்றின்பேரில் தீர்ப்புகளைக் கூறுவதற்கு அதிகாரமளிக்கப்படுகிறதில்லை. பெரும்பான்மையானவற்றில், இவை, ஒவ்வொரு தனி நபரும் அவரவரே, அல்லது குடும்பத் தலைவர், பைபிள் நியமங்களின்பேரில் தன் அன்பை அடிப்படையாகக் கொண்டு தீர்மானிக்கப்பட வேண்டிய காரியங்கள். மற்றும் சிலர், சொஸைட்டியின் ஆலோசனைகளையும் வழிகாட்டு குறிப்புகளையும் விதிமுறைகளாக மாற்றும் போக்குடையோராக இருக்கின்றனர். உதாரணமாக, மார்ச் 15, 1996-ன் காவற்கோபுர வெளியீட்டில், சபை உறுப்பினரைத் தவறாமல் மேய்ப்பு சந்திப்புகள் செய்யும்படி, மூப்பர்களை ஊக்குவித்த ஒரு நல்ல கட்டுரை இருந்தது. அதன் நோக்கம் விதிமுறைகளை உண்டாக்குவதா? இல்லை. அந்த ஆலோசனைகளைப் பின்பற்ற இயன்றவர்கள் பல நன்மைகளை அடைகிறபோதிலும், சில மூப்பர்கள் அவ்வாறு செய்ய முடிகிறதில்லை. அவ்வாறே, ஏப்ரல் 1, 1995-ன் காவற்கோபுர வெளியீட்டில், “வாசகரிடமிருந்து வரும் கேள்விகள்” கட்டுரை, கட்டுப்பாடற்ற விருந்து விளையாட்டுகள், கொண்டாட்ட ஆரவாரங்கள் போன்றவற்றை ஏற்படுத்துவதன்மூலம் மிதமீறி சென்று, முழுக்காட்டப்படும் நிகழ்ச்சியின் பயபக்திக்குரியத் தன்மையைக் குலைப்பதற்கு எதிராக எச்சரித்தது. இந்த முதிர்ச்சி தன்மைவாய்ந்த கட்டுரையைச் சிலர் மட்டுக்குமீறிய கருத்தில் பொருத்திப் பயன்படுத்தியிருக்கின்றனர்; இந்த நிகழ்ச்சியின்போது ஊக்குவிக்கும் வார்த்தைகளைக்கொண்ட ஓர் கார்டை அனுப்புவதும் தவறு என்ற விதியை உண்டாக்கியிருக்கின்றனர்!
9. மட்டுக்குமீறி குறைகாண்போராயும் ஒருவரையொருவர் தீர்ப்பு செய்வோராயும் இருப்பதை நாம் தவிர்ப்பது ஏன் முக்கியம்?
9 “சுயாதீனப் பிரமாணமாகிய பூரணப்பிரமாணம்” நம் மத்தியில் நடப்பில் இருக்க வேண்டுமானால், எல்லா கிறிஸ்தவ மனச்சாட்சிகளும், ஒன்றுபோல் ஒத்திருக்கிறதில்லை என்பதை நாம் ஒப்புக்கொள்ள வேண்டும் என்பதையும் கவனியுங்கள். (யாக்கோபு 1:25) வேதப்பூர்வ நியமங்களை மீறுபவையாக இராதபோது, தங்கள் விருப்பத்துக்கேற்ப, தனிப்பட்ட தெரிவுகளை ஆட்கள் கொண்டிருக்கையில், நாம் அதைப்பற்றி விவாதிக்க வேண்டுமா? இல்லை. நாம் அவ்வாறு செய்தால், பிரிவினை உண்டாக்குவோராக இருப்போம். (1 கொரிந்தியர் 1:10) உடன் கிறிஸ்தவர்களின்பேரில் தீர்ப்பு செய்வதற்கு எதிராக எச்சரித்தபோது, பவுல் இவ்வாறு சொன்னார்: “அவன் நின்றாலும் விழுந்தாலும் அவனுடைய எஜமானுக்கே அவன் உத்தரவாதி; அவன் நிலைநிறுத்தப்படுவான்; தேவன் [“யெகோவா,” NW] அவனை நிலைநிறுத்த வல்லவராயிருக்கிறாரே.” (ரோமர் 14:4) தனிப்பட்டவருடைய மனச்சாட்சிக்கு விடப்படவேண்டிய காரியங்களின்பேரில், ஒருவர் மற்றொருவருக்கு எதிராக நாம் பேசினால், யெகோவாவுக்குப் பிரியமில்லாததைச் செய்யும் ஆபத்துக்குள்ளாவோம்.—யாக்கோபு 4:10-12.
10. சபையின்மீது காவல் காப்பதற்கு யார் நியமிக்கப்பட்டிருக்கின்றனர், நாம் அவர்களை எவ்வாறு ஆதரிக்க வேண்டும்?
10 கடவுளின் மந்தையின்மீது காவல் காப்பதற்கு மூப்பர்கள் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதையும் நாம் நினைவில் வைப்போமாக. (அப்போஸ்தலர் 20:28) உதவிசெய்வதற்கு அவர்கள் அங்கு இருக்கிறார்கள். அறிவுரைக்காக அவர்களை அணுக நாம் தடங்கலற்றவர்களாக உணரவேண்டும்; ஏனெனில் அவர்கள் பைபிள் மாணாக்கர்களாகவும், உவாட்ச் டவர் சொஸைட்டியின் பிரசுரங்களில் ஆராயப்பட்டிருக்கிறவற்றோடு நன்றாய் அறிமுகமானவர்களாகவும் இருக்கின்றனர். வேத நியமங்களை மீறுவதற்குப் பெரும்பாலும் வழிநடத்தக்கூடிய நடத்தையை மூப்பர்கள் காண்கையில், தேவைப்படும் அறிவுரையை அவர்கள் பயமில்லாமல் அளிக்கின்றனர். (கலாத்தியர் 6:1) சபை உறுப்பினர், தங்கள் மத்தியில் வழிகாட்டும் பொறுப்பை ஏற்கிற இந்த அன்பான மேய்ப்பர்களோடு ஒத்துழைப்பதால், கிறிஸ்துவின் பிரமாணத்தைப் பின்பற்றுகின்றனர்.—எபிரெயர் 13:7.
மூப்பர்கள் கிறிஸ்துவின் பிரமாணத்தைப் பொருத்திப் பயன்படுத்துகின்றனர்
11. மூப்பர்கள் எவ்வாறு சபையில் கிறிஸ்துவின் பிரமாணத்தைப் பொருத்திப் பயன்படுத்துகின்றனர்?
11 சபையில் கிறிஸ்துவின் பிரமாணத்தை நிறைவேற்றுவதற்கு மூப்பர்கள் ஆவலுள்ளவர்களாக இருக்கிறார்கள். நற்செய்தியைப் பிரசங்கிப்பதில் அவர்கள் தலைமை வகித்து நடத்துகிறார்கள், இருதயத்தை எட்டும்படி பைபிளிலிருந்து போதிக்கிறார்கள், மேலும், அன்புள்ள கனிவான மேய்ப்பர்களாக, ‘மனந்தளர்ந்தவர்களிடம்’ பேசுகிறார்கள். (1 தெசலோனிக்கேயர் 5:14, தி.மொ.) கிறிஸ்தவமண்டல மதங்கள் மிகப் பலவற்றில் இருந்துவருகிற கிறிஸ்தவமற்ற மனப்பான்மைகளை அவர்கள் தவிர்க்கிறார்கள். உண்மைதான், இந்த உலகம் விரைவாகச் சீர்கெட்டு வருகிறது; பவுலைப்போல், மூப்பர்கள் மந்தைக்காகக் கவலைகொண்ட அக்கறையை உணரலாம்; ஆனால் அத்தகைய அக்கறைகளின்பேரில் அவர்கள் நடவடிக்கை எடுக்கையில் சமநிலையைக் காத்து வருகிறார்கள்.—2 கொரிந்தியர் 11:28.
12. கிறிஸ்தவர் ஒருவர் உதவிக்காக ஒரு மூப்பரை அணுகுகையில், அந்த மூப்பர் எவ்வாறு பதில் செயல்படலாம்?
12 உதாரணமாக, நேர்முகமான வேதப்பூர்வ வசனக் குறிப்பால் குறிப்பிடப்படாத, அல்லது வெவ்வேறுபட்ட கிறிஸ்தவ நியமங்களைச் சமநிலைப்படுத்துவதை தேவைப்படுத்துகிற ஒரு முக்கியமான காரியத்தைப் பற்றி மூப்பர் ஒருவரிடம் கலந்துபேச ஒரு கிறிஸ்தவர் விரும்பலாம். ஒருவேளை, மேலும் உயர்வான சம்பளமும் ஆனால் மேலுமதிக பொறுப்புவாய்ந்ததுமான வேலைக்குப் பதவி உயர்வு ஒன்று அவருக்கு அளிக்கப்பட்டிருக்கலாம். அல்லது ஓர் இளம் கிறிஸ்தவனின் ஊழியத்தைப் பாதிக்குமளவாகக் காரியங்களை அவிசுவாசியான தகப்பன் வற்புறுத்தலாம். இத்தகைய சூழ்நிலைமைகளில் மூப்பர் தன் சொந்த கருத்தைத் தெரிவிப்பதைத் தவிர்க்கிறார். மாறாக, அவர் ஒருவேளை பைபிளைத் திறந்து, பொருத்தமான நியமங்களின்பேரில் சிந்திக்கும்படி அந்த நபருக்கு உதவிசெய்யலாம். இந்தப் பொருளின்பேரில் “உண்மையும் விவேகமுமுள்ள அடிமை,” காவற்கோபுரத்தின் பக்கங்களிலும் மற்ற பிரசுரங்களிலும் சொல்லியிருப்பவற்றைக் கண்டுபிடிப்பதற்கு, உவாட்ச் டவர் பப்ளிக்கேஷன்ஸ் இன்டெக்ஸ் கிடைக்கக்கூடியதாக இருந்தால், அதை அவர் பயன்படுத்தலாம். (மத்தேயு 24:45, NW) அந்த மூப்பருக்கு ஞானமாகத் தோன்றாத ஒரு தீர்மானத்தை அந்தக் கிறிஸ்தவர் அதன்பின் செய்தால் என்ன செய்வது? அந்தத் தீர்மானம் பைபிள் நியமங்களை அல்லது பிரமாணங்களை நேரடியாக மீறுகிறதில்லையென்றால், “அவனவன் தன்தன் பாரத்தைச் சுமப்பானே,” என்பதை அந்த மூப்பர் அறிந்தவராக, தீர்மானம் செய்ய தனி நபருக்கு இருக்கும் உரிமையை அவர் மதிக்கிறாரென அந்தக் கிறிஸ்தவர் காண்பார். எனினும், “மனுஷன் எதை விதைக்கிறானோ அதையே அறுப்பான்,” என்பதை அந்தக் கிறிஸ்தவர் நினைவில் வைக்க வேண்டும்.—கலாத்தியர் 6:5, 7.
13. கேள்விகளுக்கு நேர்முகமான பதில்களை அல்லது தங்கள் சொந்த அபிப்பிராயங்களை அளிப்பதைப் பார்க்கிலும், காரியங்களின்பேரில் பகுத்தாராய்ந்து சிந்தனை செய்யும்படி மூப்பர்கள் ஏன் மற்றவர்களுக்கு உதவிசெய்கிறார்கள்?
13 அனுபவமுள்ள மூப்பர் ஏன் இவ்வாறு செயல்படுகிறார்? குறைந்தது இரண்டு காரணங்களினிமித்தமாகும். முதலாவதாக, பவுல், ஒரு சபையினிடம், ‘அவர்களுடைய விசுவாசத்திற்கு அதிகாரியாக’ தான் இல்லை என்று சொன்னார். (2 கொரிந்தியர் 1:24) வேதவாக்கியங்களின்பேரில் பகுத்தாய்ந்து, அந்த அறிவின்பேரில் சார்ந்து தன் சொந்த தீர்மானத்தைச் செய்யும்படி, அந்த மூப்பர் தன் சகோதரனுக்கு உதவிசெய்வதில், பவுலின் மனப்பான்மையைப் பின்பற்றுகிறார். இயேசு, தம்முடைய அதிகாரத்துக்கு வரையறைகள் இருந்தன என்று உணர்ந்ததுபோல், தன் அதிகாரத்துக்கு வரையறைகள் இருக்கின்றன என்று அவர் உணருகிறார். (லூக்கா 12:13, 14; யூதா 9) அதேசமயத்தில், தேவைப்படுகையில், உதவியாயுள்ள, நேரடியான வேதப்பூர்வ அறிவுரையையும் மூப்பர்கள் உடனடியாக அளிக்கின்றனர். இரண்டாவதாக, மூப்பர் தன் உடன் கிறிஸ்தவரைப் பயிற்றுவிக்கிறார். அப்போஸ்தலன் பவுல் இவ்வாறு சொன்னார்: “பலமான ஆகாரம் வயதேறினவர்களுக்கே தகும். இவர்கள் நன்மை தீமை இன்னதென்று பகுத்தறியப் பயிற்சியின் மூலமாய்ப் பழகின ஞானேந்திரியங்களையுடையவர்கள்.” (எபிரெயர் 5:14, தி.மொ.) ஆகையால், முதிர்ச்சிக்கு வளர, நமக்கு பதில்களைக் கொடுக்கும்படி எப்போதும் வேறு எவர்மீதாவது நாம் சார்ந்திராமல், நம் சொந்த பகுத்துணர்வறிவு சக்திகளை நாம் பயன்படுத்த வேண்டும். வேதவாக்கியங்களின்பேரில், பகுத்தறிந்து சிந்திப்பது எவ்வாறென மூப்பர், தன் உடன் கிறிஸ்தவருக்குக் காண்பிப்பதன்மூலம், அவர் முன்னேறுவதற்கு இவ்வகையில் உதவிசெய்கிறார்.
14. தாங்கள் யெகோவாவில் நம்பிக்கை வைத்திருக்கின்றனர் என்று முதிர்ச்சியுள்ளவர்கள் எவ்வாறு காட்டலாம்?
14 யெகோவா தேவன் தம்முடைய பரிசுத்த ஆவியின் மூலமாக, உண்மையான வணக்கத்தாரின் இருதயங்களைக் கனிவித்து செயல்பட செய்வார் என்று நாம் விசுவாசமுடையோராக இருக்கலாம். இவ்வாறு, முதிர்ச்சியடைந்த கிறிஸ்தவர்கள் தங்கள் சகோதரரின் இருதயங்களுக்குக் கவனத்தைச் செலுத்தி, அப்போஸ்தலன் பவுல் செய்ததைப்போல், அவர்களைப் பரிந்து கேட்கின்றனர். (2 கொரிந்தியர் 8:8; 10:1; பிலேமோன் 8, 9) நீதிமான்களுக்கல்ல அநீதிமான்களுக்கே முக்கியமாய், அவர்களைச் சரியானபடி நடந்துகொள்ள வைப்பதற்கு நுட்பவிவரமான பிரமாணங்கள் தேவையென பவுல் அறிந்திருந்தார். (1 தீமோத்தேயு 1:9) அவர் தன் சகோதரரின்பேரில் சந்தேகத்தை அல்லது அவநம்பிக்கையை அல்ல, விசுவாசத்தையே வெளிப்படுத்திக் காட்டினார். ஒரு சபைக்கு அவர் இவ்வாறு எழுதினார்: “உங்களைக்குறித்துக் கர்த்தருக்குள் நம்பிக்கையாயிருக்கிறோம்.” (2 தெசலோனிக்கேயர் 3:4) பவுலின் விசுவாசமும், உறுதியான நம்பிக்கையும், அந்தக் கிறிஸ்தவர்களைத் தூண்டியியக்குவதற்கு நிச்சயமாகவே அதிகம் செய்தது. இன்று மூப்பர்களும் பயணக் கண்காணிகளும் அதைப்போன்ற நோக்கங்களை உடையோராக இருக்கிறார்கள். இந்த உண்மையுள்ள மனிதர்கள், தேவனுடைய மந்தையை அன்பாக மேய்க்கையில் எத்தகைய புது ஊக்கமளிப்போராக உள்ளனர்!—ஏசாயா 32:1, 2; 1 பேதுரு 5:1-3.
கிறிஸ்துவின் பிரமாணத்தின்படி வாழ்தல்
15. நம் சகோதரருடன் நமக்குள்ள உறவில் கிறிஸ்துவின் பிரமாணத்தை நாம் பொருத்திப் பயன்படுத்துகிறோமா என்பதைக் காண, நம்மை நாமே கேட்டுக்கொள்ளக்கூடிய சில கேள்விகள் யாவை?
15 நாம் கிறிஸ்துவின் பிரமாணத்தின்படி வாழ்ந்து அதை முன்னேற்றுவிக்கிறோமா என்று, நாம் எல்லாரும் நம்மை நாமே தவறாமல் தொடர்ந்து ஆராய்ந்து வருவது அவசியம். (2 கொரிந்தியர் 13:5) உண்மையாகவே, இவ்வாறு கேட்டுக்கொள்வதன்மூலம் நாம் எல்லாரும் பயனடையலாம்: ‘நான் கட்டியெழுப்புபவனாக இருக்கிறேனா அல்லது குறைகாண்பவனாக இருக்கிறேனா? நான் சமநிலைப்பட்டவனா அல்லது மட்டுமீறுபவனா? நான் மற்றவர்களுக்கு கரிசனை காட்டுகிறேனா அல்லது என் சொந்த உரிமைகளை வற்புறுத்துபவனாக இருக்கிறேனா?’ பைபிளில் திட்டமாய்க் குறிப்பிடப்படாத காரியங்களில் தன் சகோதரன் என்ன படிகளை ஏற்கவேண்டும் அல்லது ஏற்கக்கூடாது என்று கட்டளையிட ஒரு கிறிஸ்தவன் முயற்சி செய்கிறதில்லை.—ரோமர் 12:1; 1 கொரிந்தியர் 4:6.
16. தங்களைத் தாழ்வாக மதிப்பிட்டுக்கொள்வோருக்கு நாம் எவ்வாறு உதவிசெய்து, இவ்வாறு கிறிஸ்துவின் பிரமாணத்தினுடைய முக்கிய அம்சத்தை நிறைவேற்றலாம்?
16 இந்தக் கொடிய காலங்களில், நாம் ஒருவரையொருவர் ஊக்கப்படுத்துவதற்கு வழிவகைகளைத் தேடுவது நமக்கு முக்கியம். (எபிரெயர் 10:24, 25; மத்தேயு 7:1-5-ஐ ஒப்பிடுக.) நம்முடைய சகோதர சகோதரிகளை நாம் காண்கையில், அவர்களுடைய பலவீனங்களைப் பார்க்கிலும் அவர்களுடைய நல்ல பண்புகளே நமக்கு அதிகத்தைக் குறிக்கிறது அல்லவா? யெகோவாவுக்கு, ஒவ்வொருவரும் அருமையானவர்கள். வருந்தத்தக்கதாக, தங்களைக் குறித்துங்கூட அவ்வாறு எல்லாரும் உணருகிறதில்லை. தங்கள் சொந்த தனிப்பட்ட குறைபாடுகளையும் அபூரணங்களையும் மாத்திரமே காணும் போக்குடையோராகப் பலர் இருக்கின்றனர். அத்தகையோரை—மற்றவர்களையுங்கூட—ஊக்குவிப்பதற்கு, ஒவ்வொரு கூட்டத்தின்போதும் இரண்டொரு பேருடன் பேசி, அவர்கள் வந்திருப்பதையும் சபையில் அவர்கள் வகிக்கும் பங்கையும் நாம் ஏன் உயர்வாய் மதிக்கிறோம் என்பதை அவர்களுக்குத் தெரியப்படுத்த நாம் முயற்சி செய்ய முடியுமா? இவ்வகையில் அவர்களுடைய பாரத்தை இலகுவாக்குவதும், அதன்மூலம் கிறிஸ்துவின் பிரமாணத்தை நிறைவேற்றுவதும் எத்தகைய மகிழ்ச்சி!—கலாத்தியர் 6:2.
கிறிஸ்துவின் பிரமாணம் செயல்படுகிறது!
17. கிறிஸ்துவின் பிரமாணம் உங்கள் சபையில் செயல்படுவதை என்ன வெவ்வேறுபட்ட வழிகளில் நீங்கள் காண்கிறீர்கள்?
17 கிறிஸ்தவ சபையில் கிறிஸ்துவின் பிரமாணம் செயல்படுகிறது. நாம் இதை நாள்தோறும் காண்கிறோம்—உடன் சாட்சிகள் நற்செய்தியைப் பேராவலுடன் பகிர்ந்துகொள்கையில், அவர்கள் ஒருவரையொருவர் ஆறுதல்படுத்தி ஊக்குவிக்கையில், மிகக் கடுமையான பிரச்சினைகளின் மத்தியிலும் யெகோவாவைச் சேவிப்பதற்கு அவர்கள் கடுமுயற்சி செய்கையில், மகிழ்ச்சியுள்ள இருதயத்துடன் யெகோவாவை நேசிக்கும்படி பெற்றோர் தங்கள் பிள்ளைகளை வளர்க்க பிரயாசப்படுகையில், கண்காணிகள், கடவுளுடைய வார்த்தையை அன்புடனும் கனிவுடனும் கற்பித்து, யெகோவாவை என்றென்றுமாகச் சேவிக்க உள்ளார்வ எழுச்சியுடனிருக்கும்படி மந்தைக்குத் தூண்டுதலளிக்கையில். (மத்தேயு 28:19, 20; 1 தெசலோனிக்கேயர் 5:11, 14) தனிப்பட்டவர்களாக நாம் ஒவ்வொருவரும் கிறிஸ்துவின் பிரமாணத்தை நம் சொந்த வாழ்க்கையில் செயல்படும்படி செய்கையில், யெகோவாவின் இருதயம் எவ்வளவாய்க் களிகூருகிறது! (நீதிமொழிகள் 23:15) தம்முடைய பரிபூரண பிரமாணத்தை நேசிக்கிறவர்கள் எல்லாரும் என்றென்றுமாக வாழும்படி அவர் விரும்புகிறார். வரவிருக்கும் பரதீஸில், மனிதவர்க்கம் பரிபூரணமாயிருக்கும் ஒரு காலத்தை, பிரமாணத்தை மீறுவோர் இராத ஒரு காலத்தை, நம் இருதயத்தின் ஒவ்வொரு மனச்சாய்வும் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும் ஒரு காலத்தை, நாம் காண்போம். கிறிஸ்துவின் பிரமாணத்தின்படி வாழ்வதற்கு எத்தகைய மகிமையான பலன்!
[அடிக்குறிப்பு]
a அத்தகைய வீடுகள், கிறிஸ்தவமண்டலத்தின் துறவிமடங்களைப்போல் இல்லை. “மடாதிபதி,” அல்லது “பிதாக்கள்,” போன்ற கருத்தில் அங்கு எவரும் இல்லை. (மத்தேயு 23:9) பொறுப்புள்ள சகோதரர்கள் மதிப்பளிக்கப்படுகின்றனர், ஆனால் அவர்களுடைய சேவை, எல்லா மூப்பர்களையும் நடத்தும் அதே நியமங்களால் வழிநடத்தப்படுகிறது.
நீங்கள் என்ன நினைக்கிறீர்கள?
◻ கிறிஸ்துவின் பிரமாணத்தைப்பற்றிய குறிப்பை கிறிஸ்தவமண்டலம் ஏன் தவறவிட்டிருக்கிறது?
◻ எவ்வாறு குடும்பத்தில் கிறிஸ்துவின் பிரமாணம் செயல்படும்படி நாம் செய்யலாம்?
◻ சபையில் கிறிஸ்துவின் பிரமாணத்தைப் பொருத்திப் பயன்படுத்துவதற்கு எதை நாம் தவிர்க்க வேண்டும், எதை நாம் செய்ய வேண்டும்?
◻ சபையோடுள்ள தங்கள் தொடர்புகளில் மூப்பர்கள் எவ்வாறு கிறிஸ்துவின் பிரமாணத்திற்குக் கீழ்ப்படியலாம்?
[பக்கம் 23-ன் படம்]
உங்கள் பிள்ளைக்கு மிக அதிகம் தேவைப்படுவது அன்பு
[பக்கம் 24-ன் படம்]
நம் அன்பான மூப்பர்கள் எத்தகைய புது ஊக்கமளிப்போராக உள்ளனர்!