ராஜ்ய அறிவிப்பாளர் அறிக்கை
ரஷ்யாவில் ‘தாகத்தோடிருக்கும்’ நபர்களுக்கு உதவிசெய்தல்
“நீதியின்மேல் பசிதாகமுள்ளவர்கள் பாக்கியவான்கள் [“சந்தோஷமுள்ளவர்கள்,” NW]; அவர்கள் திருப்தியடைவார்கள்,” என்று இயேசு சொன்னார். (மத்தேயு 5:6) ரஷ்யாவில் 70 வருடங்களுக்கு மேல் மத சம்பந்தமான சுயாதீனத்தை இழந்திருக்கும் அநேகரின் ஆவிக்குரிய தாகத்தை திருப்திசெய்வதற்கு யெகோவாவின் சாட்சிகள் எவ்வாறு உதவி செய்துகொண்டிருக்கின்றனர் என்பதை பின்வரும் அனுபவங்கள் விளக்கிக் காண்பிக்கின்றன.
▪ வெலன்டின் என்ற பெயருடைய ஒரு பெண் கருத்தாழமுள்ள பைபிள் கேள்விகளைக் கொண்டிருந்தாள், அவை அநேக ஆண்டுகளாக பதிலளிக்கப்படாமலேயே இருந்தன. உதாரணமாக, ‘இயேசு யாரிடம் ஜெபம் செய்தார்?’ என்று அவள் யோசித்துப் பார்த்தாள். இயேசு தம்மைக்காட்டிலும் உன்னதமானவராய் இருந்த ஒருவரிடம் ஜெபித்திருக்க வேண்டும் என்ற முடிவுக்கு அவள் வந்தாள், அவருடைய பெயரைப் பற்றியும் அவள் சிந்தித்துப் பார்த்தாள்.
அவள் ரஷ்யன் ஆர்த்தடாக்ஸ் சர்ச்சுக்கு சென்றாள். இருப்பினும், அந்த மதத்தில் அவளுடைய கேள்விகளுக்கான பதில்களை அவள் பெற்றுக்கொள்ளவில்லை. திருப்தியற்றவளாய், ஒரு புராட்டஸ்டன்ட் சர்ச்சுக்கு அவள் சென்றாள், ஆனால் மறுபடியும் அவள் தெளிவான பதில்களை கண்டுபிடிக்கவில்லை. வேறு எங்கே செல்வது என்பதை அறியாதவளாய், வெலன்டின் பைபிளை வாசிக்க ஆரம்பித்தாள், தானாகவே பதில்களை கண்டுபிடிக்க முயற்சி செய்தாள்—எந்தப் பயனும் இல்லாமல் போனது. அவள் உதவிக்காக ஜெபித்தாள்.
கொஞ்ச காலத்துக்குப் பிறகு, யெகோவாவின் சாட்சிகள் அவளுடைய வீட்டுக் கதவைத் தட்டினர். கடவுளுடைய பெயர் யெகோவா என்பதை அவர்கள் பைபிளிலிருந்து அவளுக்கு எடுத்துக் காண்பித்தனர். கடைசியில், இயேசு யாரிடம் ஜெபித்தார் என்பதை அவள் கற்றுக்கொண்டாள்! அவள் சாட்சிகளோடு பைபிளை ஒழுங்காக படிக்க ஆரம்பித்தாள். அவள் பெரும்பாலான சமயங்களில் உவாட்ச் டவர் சொஸைட்டியால் பிரசுரிக்கப்பட்டிருக்கும் வெளியீடுகளை வாசிப்பதிலும் பைபிள் வசனங்களை எடுத்துப் பார்ப்பதிலும் இரவு முழுவதும் செலவழித்திருக்கிறாள். விரைவில் வெலென்டின் தான் சத்தியத்தை கண்டுபிடித்திருப்பதாக முடிவுக்கு வந்தாள். மூன்று மாதங்களுக்குள்ளாக அவள் பிரசங்க வேலையில் பங்குகொள்ள ஆரம்பித்தாள், அதற்குப் பிறகு இரண்டு மாதங்கள் கழித்து அவள் முழுக்காட்டப்பட்டாள். அவள் ஜெபசிந்தையோடு சத்தியத்தை தேடியது பலனளிக்கப்பட்டது.
▪ வெகு தொலைவில் ஒதுக்கமாயிருந்த ஒரு பிராந்தியத்தில் பிரசங்கிப்பதற்காக ஒரு சாட்சி பஸ்ஸில் பயணம் செய்தார். அந்தப் பயணத்தின்போது அவர் ஒரு இளம் பெண்ணிடம் பைபிளின் வாக்குறுதிகளைப் பற்றி பேசினார், ஆனால் அந்த இளம் பெண்ணோ அக்கறை காண்பிக்கவில்லை. இரண்டு மாதங்களுக்குப் பிறகு, பொது பேச்சு கொடுப்பதற்காக அதே பிராந்தியத்துக்கு அந்தச் சாட்சி இரண்டாவது முறை பயணம் செய்தார். பேச்சு முடிந்ததும், அவர் வருகை தந்திருந்த ஒருவரை அணுகி இவ்வாறு கேட்டார்: “பைபிளிலிருந்து நற்செய்தியைப் பற்றி யாராவது உங்களிடம் ஏற்கெனவே பேசியிருக்கிறார்களா?” “ஆம், நீங்கள் பேசியிருக்கிறீர்கள்,” என்று அந்த நபர் பதிலளித்தார். அவர் கிண்டலாக பேசுகிறார் என்று சாட்சி நினைத்தார். ஆனால் இரண்டு மாதங்களுக்கு முன்பு, பஸ் பயணத்தின்போது அந்த சாட்சி இளம் பெண்ணோடு கொண்டிருந்த சம்பாஷணையை ஒட்டுக்கேட்டுக்கொண்டிருந்ததாக அந்த இளம் நபர் விளக்கினார். “நான் கூடுதலாக அறிந்துகொள்ள விரும்பினேன், ஆனால் நீங்கள் பஸ்ஸை விட்டு இறங்கிவிட்டீர்கள், யெகோவாவின் சாட்சிகளை மறுபடியும் பார்க்கவே மாட்டேன் என்று நான் நினைத்தேன். பின்னர், நான் வேலை செய்யுமிடத்தில் சாட்சிகளோடு பைபிளை படித்துக்கொண்டிருக்கும் ஒரு நபரைச் சந்தித்தேன். ஆகையால் நான் இங்கு இருக்கிறேன்!”
அந்த நபரும் அவருடைய மனைவியும் பைபிளைப் படிக்க ஆரம்பித்தனர். அவருடைய வேலை பைபிள் நியமங்களுக்கு முரணாக இருந்தது என்பதை கொஞ்ச காலத்துக்குப் பிறகு அவரால் காணமுடிந்தது. கடவுளுக்கு முன்பாக நல்ல மனச்சாட்சியைக் காத்துக்கொள்ள விரும்பியதால், அவர் தன் வேலையை மாற்றிக்கொண்டார். இப்போது அவர் கடவுளுடைய ராஜ்யத்தைப் பற்றி மற்றவர்களிடம் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் சொல்லிக் கொண்டிருக்கிறார். அவருடைய மனைவியும்கூட தன் பைபிள் படிப்பில் முன்னேறிக் கொண்டிருக்கிறாள்.
ரஷ்யாவில் உள்ள மிகப் பெரிய பிராந்தியத்தில் எல்லா உண்மை மனதுள்ள மக்களுக்கும் பின்வருமாறு சொல்வதில் ஒரு பங்கைக் கொண்டிருப்பதற்கு யெகோவாவின் சாட்சிகள் மகிழ்ச்சியுள்ளவர்களாய் இருக்கின்றனர்: “தாகமாயிருக்கிறவன் வரக்கடவன்; விருப்பமுள்ளவன் ஜீவத்தண்ணீரை இலவசமாய் வாங்கிக்கொள்ளக்கடவன்.”—வெளிப்படுத்துதல் 22:17.