ராஜ்ய அறிவிப்பாளர் அறிக்கை
யெகோவாவை மகிமைப்படுத்தும் நற்கிரியைகள்
இயேசு தம்முடைய மலைப் பிரசங்கத்தில், தம் சீஷர்களிடத்தில் கூறியதாவது: “மனுஷர் உங்கள் நற்கிரியைகளைக் கண்டு, பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதாவை மகிமைப்படுத்தும்படி, உங்கள் வெளிச்சம் அவர்கள் முன்பாகப் பிரகாசிக்கக்கடவது.” (மத்தேயு 5:16) அவ்விதமாகவே, உண்மை கிறிஸ்தவர்கள் இன்று ‘நற்கிரியைகளில்’ ஈடுபடுகிறார்கள், அவை யெகோவாவை மகிமைப்படுத்துகின்றன.
இந்த நற்கிரியைகள் யாவை? அவை நற்செய்தியைப் பிரசங்கிப்பதை உட்படுத்துகின்றன, ஆனால் நம்முடைய முன்மாதிரியான நல்நடத்தையும்கூட அதிமுக்கிய அம்சமாகும். பெரும்பாலும் நம் நல்நடத்தையே ஆரம்பத்தில் மக்களைக் கிறிஸ்தவ சபையினிடமாகக் கவர்ந்திழுக்கிறது. மார்ட்டினிக்கிலுள்ள யெகோவாவின் சாட்சிகள் எவ்வாறு ‘தங்களுடைய வெளிச்சத்தை மனிதர்களுக்கு முன்பாகப் பிரகாசிக்கச் செய்கிறார்கள்’ என்பதை பின்வரும் அனுபவங்கள் காட்டுகின்றன.
◻யெகோவாவின் சாட்சிகளில் ஒருவர் வீட்டுக்கு வீடு பிரசங்க ஊழியத்தைச் செய்துகொண்டிருக்கையில் ஒரு கத்தோலிக்க பெண்ணைச் சந்தித்தார். இந்தப் பெண் திருமணம் செய்துகொள்ளாமலே ஒரு ஆணுடன் 25 வருடங்களாகக் குடும்பம் நடத்திக்கொண்டிருந்தார். சுமார் ஏழு வருடங்களுக்கு முன், நீங்கள் பூமியில் பரதீஸில் என்றும் வாழலாம் என்ற புத்தகத்தை அவர் பெற்றுக்கொண்டது முதல் யெகோவாவின் சாட்சிகளுடைய போதனைகளைப் பற்றி அறிந்தவராக இருந்தார்.a அந்தச் சாட்சியினிடத்தில் அந்தப் பெண் கூறினார்: “அநேக மதங்கள் இருக்கின்றன. இந்த எல்லா குழப்பத்தின் மத்தியில் எதை நம்புவதென்றே எனக்குத் தெரியவில்லை.” பைபிளில் மாத்திரம் சத்தியத்தைக் கண்டடைய முடியும் என்பதையும், அதனைக் கண்டடைவதற்காக அவர் வேதவசனங்களைக் கவனமாகப் படிக்கவேண்டும் மற்றும் கடவுளிடத்தில் அவருடைய ஆவிக்காகவும் வழிநடத்துதலுக்காகவும் ஜெபிக்க வேண்டும் என்பதையும் அந்தச் சாட்சி விளக்கினார்.
பைபிள் படிப்பதில் ஆர்வமாக இருந்தபோதிலும், யெகோவாவின் சாட்சிகளுடைய ராஜ்ய மன்றத்தில் நடக்கும் கிறிஸ்தவ கூட்டங்களுக்கு வருமாறு பலமுறை விடுத்த அழைப்பை கொஞ்ச காலத்திற்கு அந்தப் பெண் மறுத்துவிட்டார். ஏன்? அவர் மிகவும் கூச்ச சுபாவம் உள்ளவராக இருந்தார். இருப்பினும், கிறிஸ்துவினுடைய மரண நினைவு ஆசரிப்புக்கான அழைப்பிதழை பெற்றுக்கொண்டபின் தன்னுடைய கூச்சத்தைத் தள்ளிவிட்டு அதில் கலந்துகொண்டார்.
ராஜ்ய மன்றத்தில் நிலவிய அன்பான சூழல்தான் கூட்டத்தைப் பற்றியதில் அவரை மிகவும் கவர்ந்த அம்சமாக இருந்தது. தன்னுடைய சர்ச்சில் அவர் அத்தகைய உண்மையான நட்புறவை ஒருபோதும் அனுபவித்ததே இல்லை! அந்தக் கூட்டத்திற்குப்பின், உள்ளூர் சாட்சிகளால் நடத்தப்பட்ட அனைத்துக் கூட்டங்களுக்கும் செல்லத் துவங்கினார்; விரைவிலேயே தான் குடும்பம் நடத்திக்கொண்டிருந்த அதே மனிதரைத் திருமணம் செய்துகொண்டார். இப்போது சபையில் ஒரு முழுக்காட்டப்பட்ட நபராக அவர் இருக்கிறார்.
◻மற்றொரு சாட்சியின் நற்கிரியைகள் நல்ல பலன்களை விளைவித்தன. அவர் அலுவலகம் ஒன்றில் பொறுப்புள்ள உத்தியோகத்தில் இருந்தார். ரீயூனியன் தீவிலிருந்து ஒருவரை கூலி ஒப்பந்த அடிப்படையில் அமர்த்திய பிறகு, அவருடைய குள்ளமான உருவத்தைச் சில பணியாளர்கள் கேலிசெய்ய ஆரம்பித்தனர். அவர்களுக்கு அவர் நகைப்புக்குரிய ஒரு பொருளாக ஆனார். அதற்கு நேரெதிராக, அந்தச் சாட்சி அந்த நபரிடத்தில் தயவாகவும் மரியாதையாகவும் இருந்தார். விரைவிலேயே, அவர் ஏன் அவ்வளவு வித்தியாசமாக இருக்கிறார் என்று அந்த மனிதர் கேட்டார்.
தான் யெகோவாவின் சாட்சிகளிடமிருந்து பைபிள் நியமங்களைக் கற்றுக்கொண்டதுதான் தன்னுடைய கண்ணியமான நடத்தைக்குக் காரணம் என்று அந்தச் சாட்சி விளக்கினார். கடவுளுடைய நோக்கங்களைப் பற்றியும், புதிய உலகத்தைப்பற்றிய நம்பிக்கையைப் பற்றியும் வேதவசனங்கள் என்ன சொல்கின்றன என்பதை அவருக்குக் காட்டினார். அந்த மனிதர் பைபிள் படிப்பை ஏற்றுக்கொண்டார், கிறிஸ்தவ கூட்டங்களுக்கு வர ஆரம்பித்தார்; தான் குடும்பம் நடத்திக்கொண்டிருந்த அதே பெண்ணைத் திருமணம் செய்துகொண்டார்.
கடைசியாக அவர் ரீயூனியனுக்குத் திரும்பிசென்றார். முன்பெல்லாம் தன்னுடைய உறவினர்களிடத்திலிருந்து, விசேஷமாகத் தன் மனைவியின் குடும்பத்திலிருந்து தொல்லைகளை அவர் அனுபவித்தார். ஆனால் இப்பொழுது அவருடைய நல்நடத்தையைக் கண்டு அவர்கள் மிகவும் கவரப்பட்டனர். அந்த மனிதர் முழுக்காட்டப்பட்டார், தற்போது அவர் ஒரு உதவி ஊழியராக இருக்கிறார். அவருடைய மனைவியும் இரு மகள்களும் உட்பட குடும்ப அங்கத்தினர் பலரும் கிறிஸ்தவ சபையில் கடவுளுடைய ராஜ்ய நற்செய்தியின் பிரஸ்தாபிகளாகச் சேவை செய்கின்றனர்.
[அடிக்குறிப்பு]
a உவாட்ச் டவர் பைபிள் அண்ட் டிராக்ட் சொஸைட்டி ஆஃப் இண்டியாவால் பிரசுரிக்கப்பட்டது.