வாசகரிடமிருந்து வரும் கேள்விகள்
ஒரு கிறிஸ்தவர் மனநல மருத்துவரிடம் ஆலோசனை கேட்பது ஞானமானதாய் இருக்குமா?
இந்தக் “கடைசி நாட்களில்” உணர்ச்சி சம்பந்தமான மற்றும் மன சம்பந்தமான நோய்களில் அதிகரிப்பு இருப்பதாக சில தேசங்களிலிருந்து வரும் அறிக்கைகள் காண்பிக்கின்றன. (2 தீமோத்தேயு 3:1) உடன் விசுவாசிகள் பாதிக்கப்படும்போது கிறிஸ்தவர்கள் மிகவும் ஆழமான இரக்க உணர்ச்சிகளை கொண்டிருக்கின்றனர், ஆனால் தன் நோய்க்கு சிகிச்சை பெற்றுக்கொள்ள வேண்டுமா என்பதையும் அப்படி பெற்றுக்கொள்ள வேண்டுமென்றால் என்ன வகையான சிகிச்சை என்பதையும் அவரவர் தாங்களே தீர்மானித்துக்கொள்ள வேண்டும் என்பதை அவர்கள் மதித்துணருகின்றனர்.a “அவனவன் தன்தன் பாரத்தைச் சுமப்பானே.” (கலாத்தியர் 6:5) உளச்சிதைவு நோய், நேர் எதிர்மாறாய் இருக்கும் இயல்புடைய உடல்நிலைக் கோளாறு, நோய்ப்படுக்கை சார்ந்த மனச்சோர்வு, மன உறுத்தலுடைய-கட்டுப்படுத்த இயலா சீர்குலைவு, சுய உருக்குலைப்பு மற்றும் வேறுபல வருத்தந்தரும் கோளாறுகள் போன்றவற்றிலிருந்து சிலர் சரியான மருத்துவ உதவி பெற்றுக்கொண்ட பின் சாதாரண இயல்பான வாழ்க்கை வாழமுடிகிறது.
சில இடங்களில் சிகிச்சைப் பெற்றுக்கொள்வது பிரபலமாகிக் கொண்டு வருகிறது. அநேகருடைய விஷயங்களில், நோயாளி கடும் மனநல கோளாறை உடையவராக இருப்பதில்லை, ஆனால் வாழ்க்கையில் ஏதோவொரு சூழ்நிலையைச் சமாளிப்பதில் கஷ்டப்படுகிறார். என்றபோதிலும், வாழ்க்கையின் கடினமான பிரச்சினைகளைச் சமாளிப்பதில் பைபிள்தானே மிகவும் திறம்பட்ட உதவியை அளிக்கிறது. (சங்கீதம் 119:28, 143) பைபிளின் மூலம் யெகோவா ஞானம், சிந்திக்கும் திறமை, மெய்யான அறிவு ஆகியவற்றை அளிக்கிறார், அவை நம்மை மன சம்பந்தமாகவும் உணர்ச்சி சம்பந்தமாகவும் பலப்படுத்துகின்றன. (நீதிமொழிகள் 2:1-11; எபிரெயர் 13:6) சில சமயங்களில் கடும் மனக்குழப்பத்தின் காரணமாக விசுவாசமுள்ள கடவுளுடைய ஊழியர்கள் அறிவுக்கு மாறான காரியங்களைக் கூறலாம். (யோபு 6:2, 3) உதவிக்காகவும் புத்திமதிக்காகவும் மூப்பர்களிடம் செல்லும்படி அப்படிப்பட்டவர்களை யாக்கோபு 5:13-16 உற்சாகப்படுத்துகிறது. ஒரு கிறிஸ்தவர் ஆவிக்குரியப்பிரகாரமாய் நோயுற்றிருக்கலாம், அல்லது மாற்றமுடியாத சூழ்நிலையால் அல்லது கடுமையாய் ஒடுக்குகிற அழுத்தங்களால் அவர் வேதனைப்படலாம் அல்லது அவர் தான் அநீதியாக நடத்தப்பட்டிருப்பதாக ஒருவேளை உணரலாம். (பிரசங்கி 7:7; ஏசாயா 32:2; 2 கொரிந்தியர் 12:7-10) அப்படிப்பட்ட நபர் மூப்பர்களிடம் உதவியை நாடலாம், அவர்கள் ‘அவனுக்கு எண்ணெய்பூசுவார்கள்’—அதாவது, ஆறுதலளிக்கும் பைபிள் புத்திமதியைத் திறமையோடு அளித்து, ‘அவனுக்காக ஜெபம் பண்ணுவார்கள்.’ அதன் விளைவு? “அப்பொழுது விசுவாசமுள்ள ஜெபம் பிணியாளியை இரட்சிக்கும்; கர்த்தர் அவனை எழுப்புவார் [அவருடைய சோர்வு அல்லது கடவுளால் கைவிடப்பட்டவராக உணருதல் போன்றவற்றிலிருந்து அவனை விடுவிப்பார்].”
ஆவிக்குரிய மேய்ப்பர்களின் திறமைவாய்ந்த உதவி கிடைத்தபோதிலும், ஒரு நபருக்கு மன வேதனையும் குழப்பமும் தொடர்ந்து இருந்தால் அப்போது என்ன செய்வது? இந்தச் சூழ்நிலையில் இருக்கும் சிலர் ஒரு முழுமையான உடல் பரிசோதனை செய்துகொள்ள தெரிந்துகொண்டிருக்கின்றனர். (ஒப்பிடுக: நீதிமொழிகள் 14:30; 16:24; 1 கொரிந்தியர் 12:26.) உணர்ச்சிப்பூர்வமான அல்லது மனவேதனைக்கு உடல்நல பிரச்சினை ஒரு காரணமாக இருக்கலாம். அப்படிப்பட்ட பிரச்சினைக்கு சிகிச்சை பெற்றுக்கொள்வது, சிலருடைய விஷயங்களில் உணர்ச்சிப்பூர்வமாக நோயுற்றிருக்கும் நபருக்கு விடுதலை அளித்திருக்கிறது.b உடல்நல பிரச்சினை எதுவும் இல்லையென்றால், மனநல மருத்துவரைப் பார்க்கலாமா என்று நோயாளி கேட்டுக்கொண்டால், மருத்துவர் அதை சிபாரிசு செய்யலாம். அப்போது நீங்கள் என்ன செய்ய வேண்டும்? குறிப்பிட்டபடி, இந்தத் தீர்மானத்தை ஒவ்வொரு நபரும் தனக்குத்தானே மதிப்பிட வேண்டும். மற்றவர்கள் குறைகூறவோ அல்லது நியாயந்தீர்க்கவோ கூடாது.—ரோமர் 14:4.
இருப்பினும், நடைமுறையான ஞானத்தைப் பிரயோகிக்க வேண்டும், மேலும் பைபிள் நியமங்களை மறந்துவிடாமலிருப்பதற்கு கவனமாயிருக்க வேண்டும். (நீதிமொழிகள் 3:21; பிரசங்கி 12:13) உடல் சம்பந்தமான நோயாக இருந்தால், நோயாளிகள் பலவகைப்பட்ட சிகிச்சைமுறைகளைத் தேர்ந்தெடுக்கலாம், வழக்கமாக கொடுக்கப்படும் மருந்துகளிலிருந்து நேச்சுரோப்பதி, அக்குபஞ்சர், ஹோமியோபதி போன்ற சிகிச்சைமுறைகள் இருக்கின்றன. பல வகையான மனநல மருத்துவர்களும்கூட இருக்கின்றனர். அவர்களில் பகுத்தாராயும் மனநோய் மருத்துவர்களும் இன்னும் மற்றவர்களும் இருக்கின்றனர், அவர்கள் நோயாளியின் இயற்கைக்கு மாறான நடத்தை அல்லது வேதனை தரும் உணர்ச்சிகளுக்கான காரணங்களைக் கண்டுபிடிப்பதற்கு அவருடைய தனிப்பட்ட சரித்திரத்தை ஆராய்ச்சி செய்யலாம். புதிய நடத்தைப் பாங்குகளை நோயாளி கற்றுக்கொள்ள உதவி செய்வதற்கு நடத்தை சம்பந்தப்பட்ட மனநோய் மருத்துவர்கள் உதவி செய்யலாம். பெரும்பாலான மனநோய்கள் மருந்துகளைக் கொண்டு சரிசெய்யப்பட வேண்டும் என்று சில மனநல மருத்துவர்கள் நம்புகின்றனர்.c அறிக்கைகளின்படி, மற்றவர்கள் திட்ட உணவையும் வைட்டமின்களையும் சிபாரிசு செய்கின்றனர்.
நோயாளிகளும் அவர்களுடைய குடும்பங்களும் இப்படிப்பட்ட மருந்துகளைத் தேர்ந்தெடுப்பதைக் குறித்து சிந்தித்துப் பார்க்கையில் எச்சரிக்கையாய் இருக்க வேண்டும். (நீதிமொழிகள் 14:15) குறிப்பிடத்தக்கவிதமாய், மனநல தொழில் என்பது, “ஒரு அடிப்படையான மருத்துவ கலை. அதன் ஆலோசனைகளுக்கான அத்தாட்சிகளைப் பெற்றுக்கொள்வது சுலபமானதல்ல, மனித வாழ்க்கையின் மிகவும் சிக்கலான அம்சங்களான மனம் மற்றும் நடத்தைப் பற்றிய விஷயங்களைக் கையாளுகையில் அது அவ்விதமாய் இருக்கிறது,” என்று ஜான்ஸ் ஹாப்கின்ஸ் யூனிவர்சிட்டி ஸ்கூல் ஆஃப் மெடிசினைச் சேர்ந்த மனநலம் மற்றும் நடத்தை சம்பந்தமான விஞ்ஞானத் துறையின் இயக்குநர், பேராசிரியர் பால் மெக்யூ கூறினார். இந்த நிலையானது, விசித்திரமான நடத்தைக்கும் மோசடிக்கும், அதோடுகூட நன்மையைக் காட்டிலும் தீமையை விளைவிக்கக்கூடிய நல்ல-எண்ணமுள்ள சிகிச்சைகளுக்கும் சந்தர்ப்பத்தை அளிக்கிறது.
வாழ்க்கைத் தொழிலாகக்கொண்ட, மேற்படிப்பு பட்டங்களை மனநோய் மருத்துவர்களும் உளநூல் வல்லுநர்களும் பெற்றிருந்தபோதிலும், அந்தத் தொழிலுக்கு சம்பந்தமான தகுதிகளே இல்லாத அநேகர் மேற்பார்வை எதுவுமின்றி ஆலோசகர்களாகவோ அல்லது நோய்நீக்கல் கலைஞர்களாகவோ செயல்பட்டு வருகின்றனர் என்பதையும்கூட குறிப்பிட வேண்டும். சில நபர்கள் அப்படிப்பட்ட தகுதியற்ற நபர்களிடம் ஆலோசனை கேட்டு ஏராளமான பணத்தை செலவழித்திருக்கின்றனர்.
பயிற்சி பெற்ற தகுதியுள்ள மனநல மருத்துவராயிருந்தாலும்கூட சில காரியங்களைச் சிந்தித்துப் பார்ப்பது அவசியம். ஒரு மருத்துவரையோ அல்லது அறுவை மருத்துவரையோ தேர்ந்தெடுக்கையில், அவர் நம்முடைய பைபிள்-அடிப்படையிலான கருத்துக்களை மதிப்பாரா என்பதை நிச்சயப்படுத்திக்கொள்ள வேண்டும். அதேபோல், நம்முடைய மத சம்பந்தமான மற்றும் ஒழுக்க சம்பந்தமான கருத்துக்களை மதிக்காத மனநல மருத்துவரிடம் ஆலோசனை கேட்க செல்வது ஆபத்தானதாய் இருக்கும். அநேக கிறிஸ்தவர்கள், மனசம்பந்தமான மற்றும் உணர்ச்சிசம்பந்தமான பிரச்சினைகள் மத்தியிலும் ‘கிறிஸ்து இயேசு கொண்டிருந்த அதே மனநிலையை’ கொண்டிருப்பதற்கு கடினமாய் முயற்சி செய்துகொண்டிருக்கின்றனர். (ரோமர் 15:5) அப்படிப்பட்ட கிறிஸ்தவர்கள் தங்களுடைய சிந்தனையையோ அல்லது நடத்தையையோ பாதிக்கும் எவருடைய மனநிலைகளைக் குறித்தும் கவலைப்படுவது சரியாகவே இருக்கிறது. வேதப்பூர்வமான நம்பிக்கைகள் விதிக்கும் எந்தத் தடைகளும் தேவையற்றது என்றும் மனநலத்துக்கு தீங்கு விளைவிக்கக்கூடியது என்றும் சில மருத்துவ தொழில்புரிபவர்கள் கருதுகின்றனர். அவர்கள் பைபிளில் கண்டனம் செய்யப்பட்டிருக்கும் ஓரினப்புணர்ச்சி அல்லது திருமணத்தில் உண்மையற்றிருத்தல் போன்ற பழக்கவழக்கங்களை அங்கீகரிக்கலாம், சிபாரிசும்கூட செய்யலாம்.
இந்தக் கருத்துக்கள் எல்லாம் ‘ஞானமென்று பொய்யாய்ப் பேர்பெற்றிருக்கிற கொள்கையின் விபரீதங்கள்’ என்று அப்போஸ்தலனாகிய பவுல் அழைத்தவற்றில் சேர்க்கப்பட்டிருக்கின்றன. (1 தீமோத்தேயு 6:20) அவை கிறிஸ்துவைப் பற்றிய சத்தியத்துக்கு முரணாக இருக்கின்றன. மேலும் இந்த உலகின் ‘ஞானம் மற்றும் மாயமான தந்திரத்தின்’ பாகமாக இருக்கின்றன. (கொலோசெயர் 2:8) பைபிளின் சுத்தத்தன்மையைச் சோதிக்கும் உரைகல் தெளிவாயிருக்கிறது: “கர்த்தருக்கு விரோதமான ஞானமுமில்லை, புத்தியுமில்லை, ஆலோசனையுமில்லை.” (நீதிமொழிகள் 21:30) ‘நல்லதை கெட்டதென்றும் கெட்டதை நல்லதென்றும்’ கூறும் மனநல மருத்துவர்கள் ‘கெட்ட கூட்டுறவாய்’ இருக்கின்றனர். நிலையற்ற மனங்களைக் குணப்படுத்த உதவுவதற்குப் பதிலாக, அவர்கள் ‘நல்லொழுக்கங்களைக் கெடுத்து’ விடுவர்.—ஏசாயா 5:20; 1 கொரிந்தியர் 15:33.
மனநல மருத்துவத்தை வாழ்க்கைத்தொழிலாகக் கொண்டிருக்கும் மருத்துவர் ஒருவரின் அறிவுரையை நாடுவது அவசியம் என்று உணரும் ஒரு கிறிஸ்தவர், அவருடைய தகுதிகள், மனநிலை, அந்த மருத்துவரைப் பற்றிய பொதுக்கருத்து ஆகியவற்றையும் சிபாரிசு செய்யப்படும் எந்தச் சிகிச்சையினாலும் விளையக்கூடிய பாதிப்பையும் கூர்ந்து ஆராய வேண்டும். கடும் வேதனையில் இருக்கும் ஒரு கிறிஸ்தவர், தானே இவற்றை செய்யமுடியவில்லை என்றால், ஒருவேளை ஒரு முதிர்ச்சிவாய்ந்த, நெருங்கிய நண்பரோ அல்லது உறவினரோ உதவி செய்யக்கூடிய நிலையில் இருக்கலாம். ஒரு குறிப்பிட்ட சிகிச்சையின் சரியானத்தன்மையைக் குறித்து ஒரு கிறிஸ்தவர் நிச்சயமற்று இருந்தால், சபையில் இருக்கும் மூப்பர்களோடு கலந்து பேசுவது உதவியளிப்பதாய் இருக்கும்—இருந்தாலும் முடிவான தீர்மானம் அவருடைய சொந்த தீர்மானமாய் இருக்கும் (அல்லது அவருடைய பெற்றோருடையதாய் இருக்கும் அல்லது கணவனும் மனைவியும் ஒன்றுசேர்ந்து எடுத்த தீர்மானமாய் இருக்கும்).d
துன்பத்தைத் தணிப்பதற்கு கடந்த காலங்களைக் காட்டிலும் விஞ்ஞானம் இன்று அதிகத்தைச் செய்யக்கூடும். இருப்பினும், உடல்சம்பந்தமாகவும் மனசம்பந்தமாகவும் அநேக நோய்கள் இருக்கின்றன, அவை தற்போது குணப்படுத்த முடியாதவையாய் இருக்கின்றன, இந்த ஒழுங்குமுறையினூடே சகித்துக்கொள்ள வேண்டியவையாய் இருக்கின்றன. (யாக்கோபு 5:11) இதற்கிடையில், ‘உண்மையும் விவேகமுமுள்ள அடிமை,’ மூப்பர்கள், சபையிலுள்ள மற்றவர்கள் நோயுற்றோருக்கு பரிவிரக்கத்தையும் ஆதரவையும் அளித்து உதவுகின்றனர். நோய்களே இல்லாமல் போகும் அந்த மகத்தான காலம் வரும்வரை சகித்துக்கொள்வதற்கு யெகோவாதாமே அவர்களைப் பலப்படுத்துகிறார்.—மத்தேயு 24:45; சங்கீதம் 41:1-3; ஏசாயா 33:24.
[அடிக்குறிப்புகள்]
a ஒருவேளை நிர்வாக வேலைக்காக ஒரு நபர் பரிசீலிக்கப்படுகையில் மனநலத்தைக் குறித்து மதிப்பிடுவதற்காக பரிசோதனைக்கு உட்படுத்தப்படும்படி சில சமயங்களில் கேட்டுக்கொள்ளப்படலாம். அப்படிப்பட்ட மதிப்பிடுதலுக்கு ஒருவர் தன்னைக் கீழ்ப்படுத்துகிறாரா இல்லையா என்பது தனிப்பட்ட தீர்மானம், ஆனால் மனநலத்தை மதிப்பிடுதல் என்பது மனநல சிகிச்சை அல்ல என்பதை கவனத்தில் வைக்க வேண்டும்.
b காவற்கோபுரம், மார்ச் 1, 1990 (ஆங்கிலம்) இதழில், “மனச்சோர்வுக்கு எதிரான போராட்டத்தில் வெற்றிபெறுதல்” என்ற கட்டுரையைப் பாருங்கள்.
c சில மனநோய்கள் சரியான மருந்துகளுக்கு நல்ல விதத்தில் பிரதிபலிப்பதாக தோன்றுகின்றன. ஆனால் இந்த மருந்துகள் எச்சரிக்கையோடு திறமையுள்ள மற்றும் அனுபவமுள்ள மருத்துவர்கள் அல்லது மனநல மருத்துவர்களின் மேற்பார்வையின் கீழ் பயன்படுத்தப்பட வேண்டும், ஏனென்றால் மருந்தளவு சரியாக தகுந்தபடி கொடுக்கப்படவில்லையென்றால், கடும் தீங்கு விளைவிக்கும் பாதிப்புகள் ஏற்படலாம்.
d காவற்கோபுரம் (ஆங்கிலம்) இதழின் அக்டோபர் 15, 1988, “மன வேதனை—அது ஒரு கிறிஸ்தவரை தொல்லைப்படுத்தும்போது” என்ற கட்டுரையைப் பாருங்கள்.