நாம் கனவுகாண வேண்டும்
நீங்கள் கனவு காண்கிறீர்களா? காண்கிறீர்கள் என்று ஊகிப்பதே முரண்பாடற்றதாக இருக்கிறது; ஏனென்றால் இல்லை என்று நாம் உரிமை பாராட்டினாலும்கூட, தூங்கும்போது நாம் அனைவருமே கனவு காண்கிறோம். கனவுகள் அனைத்திலும் 95 சதவிகிதத்திற்கும் அதிகமானவை நினைவுகூரப்படுவதில்லை என்பதாக கணக்கிடப்பட்டுள்ளது. எவற்றை நீங்கள் நினைவுகூருகிறீர்கள்? உண்மையில், நாம் விழிப்பதற்கு சற்று முன்பு கண்டவற்றையே பொதுவாக நினைவுகூருகிறோம்.
தூக்கம் என்பது படிப்படியாக நடைபெறும் ஒரு செயல், அது முதல் சில மணிநேரங்களுக்கு ஆழ்ந்ததாகவும் அதன் பிறகு எளிதில் கலைந்துவிடக்கூடியதாகவும் இருப்பதாக கனவை ஆய்வுசெய்வோர் கண்டுபிடித்துள்ளனர். REM தூக்கம் என்று அழைக்கப்படும், துரிதமான கண் அசைவு (rapid eye movement) ஏற்படும் சமயத்தில்தான் விசேஷமாக கனவு ஏற்படுகிறது. இதனை மாறிமாறி துரிதமான கண் அசைவு இல்லாத (non-REM) தூக்கம் வருகிறது. non-REM/REM தூக்கத்தின் ஒவ்வொரு சுழற்சியும் சுமார் 90 நிமிடங்களுக்கு நீடிக்கிறது, இரவின்போது இந்தச் சுழற்சி ஐந்து அல்லது ஆறு தடவைகள் மாறிமாறி வருகின்றன, நாம் விழிப்பதற்கு சற்று முன்பாக கடைசி சுழற்சி ஏற்படுகிறது.
தூங்கும்போது, உங்களது மூளை செயல்படும் அளவு தாழ்ந்த நிலையில் இருக்கும் என்று யோசிப்பது தவறு. கவனம்செலுத்துவதுடனும் நினைவுகூருவதுடனும் தொடர்புடைய மூளைத் தண்டிலுள்ள சில நியூரான்களைத் தவிர, நாம் விழித்திருக்கும் சில நிலைகளில் இருப்பதைவிட கனவு காணும்போது மூளையானது அதிக சுறுசுறுப்பாக இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. REM தூக்கத்தின்போதுதான் இவை ஓய்வெடுப்பதாகத் தோன்றுகிறது. ஆனால், பொதுவாகவே மூளையில் இருக்கும் நரம்பு செல்கள், செல்களுக்கு இடையே தொடர்ந்து தொடர்புகளைக் கொண்டுள்ளன.
ஒரு நொடிக்கு சுமார் நூறிலிருந்து இருநூறு அல்லது முன்னூறு சமிக்கைகளை உற்பத்தி செய்யும் கோடிக்கணக்கான மூலக்கூறுகளை உடைய நம் மூளையானது உடலின் வியப்பூட்டும் சிக்கலான பாகமாக இருக்கிறது. பூமியில் இருக்கும் மக்களைக் காட்டிலும் அதிகமான மூலக்கூறுகள் ஒரு மனித மூளையில் இருக்கின்றன. அதிலுள்ள மூலக்கூறுகள் 2,000 கோடி முதல் 5,000 கோடிக்கும் அதிகம் இருப்பதாக சில ஆராய்ச்சியாளர்கள் கணக்கிடுகின்றனர். அதனுடைய சிக்கலானத்தன்மை பைபிள் எழுத்தாளராகிய தாவீது மனித உடலைப்பற்றி கூறியதை உறுதிப்படுத்துகிறது: “நான் பிரமிக்கத்தக்க அதிசயமாய் உண்டாக்கப்பட்டபடியால், உம்மைத் துதிப்பேன்; உமது கிரியைகள் அதிசயமானவைகள்.”—சங்கீதம் 139:14.
கனவுலகம்
நாம் விழித்திருக்கும் நேரங்களில், நமது ஐம்புலன்களும் மூளைக்குத் தொடர்ந்து செய்தியையும் உருவங்களையும் அனுப்பிக்கொண்டே இருக்கின்றன, ஆனால் தூங்கும்போது இவ்வாறு நடப்பதில்லை. எந்தவொரு வெளி உணர்வின் உதவி இன்றியே மூளையானது உருவங்களை அதனுள்ளே உண்டாக்குகிறது. ஆகவே, நாம் கனவில் காண்பவையும், அவற்றில் அனுபவிக்கும் செயல்களும் சிலசமயங்களில் மாயத்தோற்றங்களைப்போன்று உள்ளன. இது பீட்டர் பான் பறப்பது போன்ற அல்லது காயமேதுமின்றி மலையுச்சியிலிருந்து விழுவது போன்ற இயற்கை விதிகளை மீறிய காரியங்களையும் நம்மால் செய்யக்கூடியவையாக ஆக்குகிறது. காலங்கள் புரட்டப்படலாம், அதனால், கடந்தகாலத்தை நிகழ்காலம் போன்றே காண நேர்கிறது. அல்லது ஒருவேளை நாம் ஓட முயற்சித்தால் நம் செயல்களின்மீது கட்டுப்பாடு ஏதும் இல்லாததுபோல் தோன்றுகிறது—நம் கால்கள் செயல்பட மறுக்கின்றன. நாம் விழித்திருக்கும்போது நமக்கு இருக்கும் மனதில் பதியும் வலிமையான கருத்துக்களும் அனுபவங்களும் உண்மையிலேயே நம் கனவுகளைப் பாதிக்கலாம். போரின் திகிலூட்டும் அட்டூழியங்களை அனுபவித்த பலருக்கு எளிதில் அவற்றை மறக்க முடியாது, அவ்வாறே குற்றவாளி ஒருவனால் தாக்கப்பட்ட உணர்வையும் சிலரால் மறக்க முடியாது. நாம் விழித்திருக்கும்போது நேரும் அத்தகைய அலைக்கழிக்கும் அனுபவங்கள் நம் கனவுகளில் புகுந்து, பயங்கரமான கனவுகளை ஏற்படுத்துகின்றன. நாம் தூங்கப்போகும்போது நம் மனதில் இருக்கும் பொதுவான காரியங்கள் நம் கனவுகளில் தோன்றலாம்.
சில சமயங்களில் நாம் பிரச்சினையைத் தீர்க்க முயற்சிக்கும்போது, நமக்கு அந்தத் தீர்வு தூங்கும்போது வருகிறது. தூக்கம் அனைத்தும் கனவுகளை மாத்திரம் உள்ளடக்கியதாக இல்லை என்பதை இது வெளிக்காட்டக்கூடும். ஒரு பகுதி யோசித்துக்கொண்டிருக்கிறது.
கனவுகள் மற்றும் நம் மூளையைப்பற்றிய ஒரு புத்தகம் குறிப்பிடுகிறது: “தூக்கத்தில் நடைபெறும் சர்வசாதாரணமான மனஞ்சார்ந்த செயல் வகையானது கனவு காண்பதல்ல ஆனால் சிந்தனை செய்வதே ஆகும். தூக்க சிந்தனையோடுகூட உணர்வு சார்ந்த மாயத்தோற்றங்களும் வருவதில்லை மற்றும் அது கற்பனைசார்ந்த ஒன்றும் அல்ல. அது பழக்கப்பட்ட ஒன்றை, நேற்றைய அல்லது நாளைய உண்மை வாழ்க்கை சம்பவங்களுடன் அடிக்கடி தொடர்புடையதும், பொதுவாகவே அற்பமான, செயல் திறமற்றதான, மீண்டும் மீண்டும் நிகழக்கூடிய ஒன்றாகவும் இருக்கும் போக்கையுடையது.”
சிலர் தங்கள் கனவுகளின் தலைப்புப் பொருள்கள் தங்களுக்கு விசேஷ செய்திகளைக் கொண்டிருப்பதாக உணருகிறார்கள். கனவுகளின் பொருள் விளக்கம் பெறுவதற்காகவேண்டி, தாங்கள் விழிக்கும்போது அவற்றை எழுதிவைக்க தங்கள் படுக்கையில் ஒரு நோட்டுப்புத்தகத்தை வைத்திருக்கிறார்கள். அன் ஃபிராடேயின் கனவு விளையாட்டு (ஆங்கிலம்) என்ற புத்தகம், கனவு சின்னங்களின் அர்த்தத்தை கொடுப்பதற்கு முயற்சிக்கும் புத்தகங்களின் பயனைப்பற்றி சொல்வதாவது: “கனவு கருப்பொருள்களுக்கும் சின்னங்களுக்கும் அர்த்தம் காண நீங்கள் பார்க்கும் கனவு புத்தகங்கள் பாரம்பரியமானவையாக இருந்தாலும்சரி, சில நவீன மனோவியல் கோட்பாட்டை அடிப்படையாக கொண்டவையாக இருந்தாலும்சரி, அவை இரண்டுமே ஒரே மாதிரி உபயோகமற்றவை.”
கனவுகள் பிரதானமாக மூளைக்குள்ளிருந்தே உண்டாகின்றனவென்று தோன்றுவதனால், அவை நமக்கு விசேஷ செய்திகளைக் கொண்டிருக்கும் என்று யோசிப்பது நியாயமற்றதாக இருக்கும். மூளையின் ஆரோக்கிய நிலையைக் காத்துக்கொள்ள உதவும் இயல்பான செயல் என்று நாம் அவற்றை நோக்கவேண்டும்.
ஆனால், ஒரு உறவினருடைய அல்லது நண்பருடைய மரணத்தைப்பற்றி கனவு கண்டதாகவும், அடுத்த நாள் அந்த நபர் இறந்துவிட்டதை அறிய வந்ததாகவும் சொல்லும் நபர்களைப் பற்றியது என்ன? இது, கனவுகள் எதிர்காலத்தை முன்னுரைக்க முடியும் என்பதைச் சுட்டிக்காட்டவில்லையா? தீர்க்கதரிசன கனவுகளின் பின்னால் இருப்பது என்ன என்பதை நாம் பின்வரும் கட்டுரையில் சிந்திக்கலாம்.