கனவுகள் எதிர்காலத்தை முன்னுரைக்க முடியுமா?
பண்டைய காலங்கள் முதற்கொண்டே, கனவுகளின்பேரில் மனிதவர்க்கமானது தணியாத ஆர்வத்தைக் கொண்டிருந்தது. எகிப்தியர்கள் கனவுகளின் பொருள் விளக்கங்களுக்காக விலாவாரியான புத்தகங்களைத் தயாரித்தனர், பாபிலோனியர்கள் கனவுகளுக்கு அர்த்தம் சொல்லும் ஆட்களை வைத்திருந்தனர். நோயாளிகள் தங்கள் கனவில் உடல்நல போதனைகளை பெறுவதற்காக அவர்களை அஸ்க்லீப்பியஸின் கோவில்களில் தூங்க வைப்பது கிரேக்கர்களிடையே பழக்கமாக இருந்தது. நம் பொது சகாப்தத்தின் இரண்டாம் நூற்றாண்டில், ஆர்டமெடோரஸ் என்பவர் ஒரு புத்தகத்தை படைத்தார், அதில் கனவு சின்னங்களுக்கு பொருள் விளக்கங்களைக் கொடுத்தார். அன்றிருந்து அதுபோன்ற பல புத்தகங்கள் அவரது புத்தகத்தை தழுவி உருவாக்கப்பட்டன. இன்றுவரையாக, கனவுகளுக்குப் பொருள் விளக்கம் கொடுப்பதற்கான முயற்சிகள் செய்யப்பட்டிருக்கின்றன, ஆனால் அவை உண்மையில் எதிர்கால சம்பவங்களின்பேரில் உட்பார்வையை அளிக்கின்றனவா?
எதிர்கால முக்கியத்துவம் இருக்க வேண்டுமென்றால், மேலான ஒரு வல்லமையால் அவை செல்வாக்கு செலுத்தப்படவேண்டும். கடவுள் அத்தகைய வல்லமையைப் பல சந்தர்ப்பங்களில் அளித்ததை நாம் பைபிளில் காண்கிறோம். அவர் தீர்க்கதரிசன கனவுகளை தம்முடைய ஊழியக்காரர்களுக்கும் தம்மை வழிபடாத சிலருக்கும் அளித்தார். உண்மையில், யோபு 33:14-16 சொல்கிறது: ‘கனநித்திரை மனுஷர்மேல் இறங்கி, அவர்கள் படுக்கையின்மேல் அயர்ந்திருக்கையில், அவர் இராக்காலத்துத் தரிசனமான சொப்பனத்திலே மனுஷருடைய செவிக்குத் தாம் செய்யும் காரியத்தை வெளிப்படுத்துகிறார்.’
யோசேப்பின் காலத்தில் எகிப்திய பார்வோனின் விஷயத்தில் இது நடந்தேறும்படி கடவுள் செய்தார், அவர் பொது சகாப்தத்திற்கு முன் 1,700 வருடங்களுக்கும் முன்பு வாழ்ந்தவர். பார்வோனின் கனவு ஆதியாகமம் 41:1-7-ல் காணப்படுகிறது, அதன்பின் வசனங்கள் 25 முதல் 32-ல் யோசேப்பு, “பரிபூரணமான விளைவு உண்டாயிருக்கும்” ஏழு வருடங்கள் வரும் என்பதை அது முன்னுரைக்கிறது என்றும், அதைப் பின்தொடர்ந்து ஏழு வருடங்கள் பஞ்சம் வரும் என்றும் அதற்கு விளக்கத்தை கொடுக்கிறார். யோசேப்பு பார்வோனுக்கு விளக்கினார்: “தேவன் தாம் செய்யப்போகிறதைப் பார்வோனுக்குக் காண்பித்திருக்கிறார்.” (ஆதியாகமம் 41:28) அந்தக் கனவு அப்படியே நடந்தேறிய தீர்க்கதரிசனமாக இருந்தது.
பாபிலோனியர்களின் முதன்மையான ஓர் அரசனுக்கும் அதுபோன்ற அனுபவம் இருந்தது. நேபுகாத்நேச்சார் தன்னை மிகவும் கலக்கிய ஒரு கனவை கண்டார், ஆனால் அவரால் அதை ஞாபகப்படுத்த முடியவில்லை. ஆகவே தன் கனவையும் அதன் அர்த்தத்தையும் தனக்குத் தெரிவிக்கும் பொருட்டு தன்னுடைய சூனியக்காரர்களை அவர் அழைத்தார். இந்த வேண்டுகோளை நிறைவேற்றுவது அவர்களால் இயலாததாய் இருந்தது.—தானியேல் 2:1-11.
ராஜாவுக்கு அந்தக் கனவை கடவுள் கொடுத்திருந்ததால், அவர் தானியேல் தீர்க்கதரிசியை கனவை வெளிப்படுத்தவும், அதன் அர்த்தத்தைச் சொல்லவும் வைத்தார். தானியேல் 2:19 சொல்கிறது: “பின்பு இராக்காலத்தில் தரிசனத்திலே தானியேலுக்கு மறைபொருள் வெளிப்படுத்தப்பட்டது.” இந்தக் கனவுக்கான மகிமையை தானியேல் கடவுளுக்குச் செலுத்தினார்: “ராஜா கேட்கிற மறைபொருளை ராஜாவுக்குத் தெரிவிக்க ஞானிகளாலும், ஜோசியராலும், சாஸ்திரிகளாலும், குறிசொல்லுகிறவர்களாலும் கூடாது. மறைபொருள்களை வெளிப்படுத்துகிற பரலோகத்திலிருக்கிற தேவன் கடைசிநாட்களில் சம்பவிப்பதை ராஜாவாகிய நேபுகாத்நேச்சாருக்குத் தெரிவித்திருக்கிறார்.”—தானியேல் 2:27, 28.
சில சமயங்களில் கனவுகளின் மூலம் கடவுள் தம் மக்களுக்கு போதனைகளை வழங்கினார், வேறு சில சமயங்களில் அவர்களுக்கு தெய்வீக கருணையின் உறுதியை அளித்தார், அல்லது தாம் எவ்வாறு அவர்களுக்கு உதவுகிறார் என்பதைப் புரிந்துகொள்வதற்கு உதவினார். யாக்கோபின் விஷயத்தில், கனவின் மூலம் தம்முடைய அங்கீகாரத்தை வெளிப்படுத்தினார்.—ஆதியாகமம் 48:3, 4.
இயேசுவின் வளர்ப்புத் தந்தையாகிய யோசேப்பு, மரியாள் கருவுற்றிருக்கிறார் என அறிய வந்ததும், அவரை விவாகரத்து செய்ய முடிவுசெய்தார். பிறகு அவ்வாறு செய்யக்கூடாது என்ற கட்டளைகளை ஒரு கனவிலே அவர் பெற்றார். மத்தேயு 1:20 சொல்கிறது: “அவன் இப்படிச் சிந்தித்துக்கொண்டிருக்கையில், கர்த்தருடைய தூதன் சொப்பனத்தில் அவனுக்குக் காணப்பட்டு: தாவீதின் குமாரனாகிய யோசேப்பே, உன் மனைவியாகிய மரியாளைச் சேர்த்துக்கொள்ள ஐயப்படாதே; அவளிடத்தில் உற்பத்தியாயிருக்கிறது பரிசுத்த ஆவியினால் உண்டானது.” பிற்பாடு கனவிலே ஒரு எச்சரிக்கையை அவர் பெற்றார்: ‘கர்த்தருடைய தூதன் சொப்பனத்தில் யோசேப்புக்குக் காணப்பட்டு: . . . நீ எழுந்து, பிள்ளையையும் அதின் தாயையும் கூட்டிக்கொண்டு எகிப்துக்கு ஓடிப் போ . . . என்றான்.’—மத்தேயு 2:13.
கடவுளிடமிருந்து வராத கனவுகள்
கடவுளின் ஜனங்களாக இல்லாதவர்களிடத்தில் சொப்பனத்திற்கு அர்த்தம் சொல்லுதல் சாதாரணமாக இருந்தது என்ற உண்மை பொதுவாகவே கனவுகள் எதிர்காலத்தை நம்பகமான முறையில் வெளிப்படுத்துவதாகக் கருதப்படலாகாது என்பதைக் சுட்டிக்காட்டுகிறது. கடவுளுடைய தீர்க்கதரிசியாகிய எரேமியாவின் காலத்தில் இருந்த பொய்த் தீர்க்கதரிசிகள் “சொப்பனங்கண்டேன், சொப்பனங்கண்டேன்” என்று சொல்லிக்கொண்டிருந்தார்கள். (எரேமியா 23:25) அவர்கள் மூலம் கடவுள் பேசுகிறார் என்று மக்கள் நினைக்குமாறு தவறாக வழிநடத்த வேண்டும் என்பது அவர்களது உள்ளெண்ணங்களாக இருந்தன. இந்தச் சொப்பனக்காரர்களைப்பற்றி இவ்வாறு சொல்ல எரேமியா ஏவப்பட்டார்: “உங்கள் நடுவிலிருக்கிற உங்கள் தீர்க்கதரிசிகளும் உங்கள் குறிகாரரும் உங்களை மோசம்போக்கவொட்டாதிருங்கள்; சொப்பனம் காணப்பண்ணுகிற உங்கள் சொப்பனக்காரருக்குச் செவிகொடாமலும் இருங்கள் என்று இஸ்ரவேலின் தேவனாகிய சேனைகளின் கர்த்தர் சொல்கிறார். அவர்கள் என் நாமத்தைச் சொல்லி உங்களுக்குப் பொய்யான தீர்க்கதரிசனம் உரைக்கிறார்கள் . . . என்று கர்த்தர் சொல்லுகிறார்.”—எரேமியா 29:8, 9.
இந்தப் பொய்த் தீர்க்கதரிசிகள் ‘குறிகாரர்களாக’ இருந்ததால், மக்களை மோசம்போக்கவேண்டும் என்ற நோக்கத்துடன் அவர்களது கனவுகள் அசுத்த ஆவி சேனைகளால் தூண்டப்பட்டவையாக இருந்திருக்கும். சகரியா 10:2-ல் குறிப்பிடப்பட்டிருப்பதிலும் இதுவே சுட்டிக்காட்டப்படுகிறது: ‘சுரூபங்கள் அபத்தமானதைச் சொல்லிற்று; குறிசொல்லுகிறவர்கள் பொய்யைத்தரித்தார்கள்; சொப்பனக்காரர் வீணானதைச் சொன்னார்கள்.’
எரேமியாவின் மற்றும் சகரியாவின் நாட்களில் பொய்த் தீர்க்கதரிசிகள் செய்த வண்ணமே, கடவுள் தங்களிடத்தில் தரிசனங்கள் வாயிலாகவும் சொப்பனங்களின் வாயிலாகவும் பேசியிருப்பதாய் பொய்யாக உரிமை கொண்டாடும் மதத் தலைவர்களை ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக பிரதான மோசக்காரனாகிய பிசாசு உபயோகித்திருக்கிறான். அப்படிப்பட்டவர்களைக் குறித்து முதல் நூற்றாண்டு கிறிஸ்தவர்களுக்கு எழுதும்படி பைபிள் எழுத்தாளர் யூதா ஏவப்பட்டார்: “ஏனெனில் நமது தேவனுடைய கிருபையைக் காமவிகாரத்துக்கேதுவாகப் புரட்டி, ஒன்றான ஆண்டவராகிய தேவனையும், நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவையும் மறுதலிக்கிற பக்தியற்றவர்களாகிய சிலர் பக்கவழியாய் நுழைந்திருக்கிறார்கள்; அவர்கள் இந்த ஆக்கினைக்குள்ளாவார்களென்று பூர்வத்திலே எழுதியிருக்கிறது.” சொல்லப்போனால் இந்த மனிதர்கள் ‘சொப்பனக்காரர்’ என்பதாக அவர் சொன்னார்.—யூதா 4, 8.
உரிமை பாராட்டல்களை சோதிக்கவும்
ஒரு நபர் தன்னிடம் கடவுள் கனவில் பேசியதாகவோ எதிர்கால சம்பவங்களைப்பற்றிய தனது கனவுகள் பலித்துவிட்டதாகவோ உரிமை பாராட்டலாம், இருப்பினும் அவரை நம்புவதற்கும், குருட்டுத்தனமாக அவரை பின்பற்றுவதற்கும் இது போதுமான காரணம் அல்ல. உபாகமம் 13:1-3, 5-ல் காணப்படும் இஸ்ரவேலர்களுக்காக எழுதப்பட்ட போதனைகளைக் கவனிக்கவும்: “உங்களுக்குள்ளே ஒரு தீர்க்கதரிசியாகிலும், சொப்பனக்காரனாகிலும் எழும்பி: நீங்கள் அறியாத வேறே தேவர்களைப் பின்பற்றி, அவர்களைச் சேவிப்போம் வாருங்கள் என்று சொல்லி, உங்களுக்கு ஒரு அடையாளத்தையும் அற்புதத்தையும் காண்பிப்பேன் என்று குறிப்பாய்ச் சொன்னாலும், அவன் சொன்ன அடையாளமும் அற்புதமும் நடந்தாலும், அந்தத் தீர்க்கதரிசியாகிலும், அந்தச் சொப்பனக்காரனாகிலும் சொல்லுகிறவைகளைக் கேளாதிருப்பீர்களாக; . . . அந்தத் தீர்க்கதரிசியும், அந்தச் சொப்பனக்காரனும் கொலைசெய்யப்படக்கடவன்.” கடவுள் தம்முடைய ஜனங்களின் உண்மைப்பற்றுறுதிக்கு ஒரு சோதனையாக அத்தகைய ஆட்கள் பொய்யைப் பேசும்படி அனுமதித்தார்.
ஆவியின் கூட்டத்தாரினுடைய சொப்பனக்காரர்களின் உரிமை பாராட்டல்களை குருட்டுத்தனமாக நம்புவதற்கு மாறாக, ‘உலகமனைத்தையும் மோசம்போக்கிக்கொண்டிருக்கும்,’ கண்ணுக்குப் புலப்படாத அந்தப் பிரதான மோசக்காரனால் மோசம்போவதைத் தவிர்ப்பதற்கு அவர்களது உரிமை பாராட்டல்களை சோதிப்பதே நமக்கு ஞானமான போக்கு. (வெளிப்படுத்துதல் 12:9) ஆனால் உண்மையிலேயே அவற்றை எவ்வாறு சோதிக்க முடியும்?
கடவுளுடைய எழுதப்பட்ட வார்த்தையானது தேவனால் வழங்கப்பட்ட சத்தியத்திற்கான வழிகாட்டி. அதைக் குறித்து இயேசு கிறிஸ்து கூறினார்: “உம்முடைய வசனமே சத்தியம்.” (யோவான் 17:17) எனவே நாம் 1 யோவான் 4:1-ல் அறிவுறுத்தப்படுகிறோம்: “பிரியமானவர்களே, உலகத்தில் அநேகங் கள்ளத்தீர்க்கதரிசிகள் தோன்றியிருப்பதினால், நீங்கள் எல்லா ஆவிகளையும் நம்பாமல், அந்த ஆவிகள் தேவனால் உண்டானவைகளோ என்று சோதித்தறியுங்கள்.” அவர்களது உரிமை பாராட்டல்களையும், தத்துவங்களையும் செயல்களையும் பைபிளுடன் கவனமாக ஒப்பிடும்போது, அவை அதிலிருந்து முரண்படுகின்றன. எது சத்தியம் என்பதற்கு கடவுளுடைய வார்த்தையே அதிகாரமுடையது.
விசேஷ அறிவு இருப்பதாக உரிமை பாராட்டும் சொப்பனக்காரர், உண்மையில் குறிசொல்லுதலையோ மற்ற ஆவியுலக பழக்கங்களையோ உபயோகிக்கிறாரா? அப்படியென்றால், கடவுளுடைய வார்த்தையால் அவர் கண்டனம் செய்யப்படுகிறார். “குறிசொல்லுகிறவனும், நாள்பார்க்கிறவனும், அஞ்சனம் பார்க்கிறவனும், சூனியக்காரனும், மந்திரவாதியும், சன்னதக்காரனும், மாயவித்தைக்காரனும், செத்தவர்களிடத்தில் குறிகேட்கிறவனும் உங்களுக்குள்ளே இருக்கவேண்டாம். இப்படிப்பட்டவைகளைச் செய்கிறவன் எவனும் கர்த்தருக்கு அருவருப்பானவன்.”—உபாகமம் 18:10-12.
ஒருவேளை அந்தச் சொப்பனக்காரர் தன்னுள் ஓர் ஆத்துமாவை கொண்டிருப்பதாக உரிமை பாராட்டினால், கடவுளுடைய வார்த்தையிலிருந்து அவர் முரண்படுகிறார், அது தெளிவாக குறிப்பிடுகிறது: “பாவஞ்செய்கிற ஆத்துமாவே சாகும்.” (எசேக்கியேல் 18:4) அவர் தன்னைத்தானே உயர்த்தி, தனிப்பட்டவிதத்தில் பின்பற்றும்படி ஈர்க்கிறாரா? மத்தேயு 23:12 எச்சரிக்கிறது: “தன்னை உயர்த்துகிறவன் தாழ்த்தப்படுவான்.” அப்போஸ்தலர் 20:30 கிறிஸ்தவர்களை எச்சரிக்கிறது: “உங்களிலும் சிலர் எழும்பி, சீஷர்களைத் தங்களிடத்தில் இழுத்துக்கொள்ளும்படி மாறுபாடானவைகளைப் போதிப்பார்களென்று அறிந்திருக்கிறேன்.”
சொப்பனக்காரர் வன்முறை செயல்களை தூண்டுவிக்கிறாரா? யாக்கோபு 3:17, 18 அவரை கண்டனம் செய்கிறது: “பரத்திலிருந்து வருகிற ஞானமோ முதலாவது சுத்தமுள்ளதாயும், பின்பு சமாதானமும் சாந்தமும் இணக்கமுமுள்ளதாயும், இரக்கத்தாலும் நற்கனிகளாலும் நிறைந்ததாயும், பட்சபாதமில்லாததாயும், மாயமற்றதாயுமிருக்கிறது. நீதியாகிய கனியானது சமாதானத்தை நடப்பிக்கிறவர்களாலே சமாதானத்திலே விதைக்கப்படுகிறது.” அவர் அரசியல் அதிகாரத்தையோ உலகின் செல்வாக்கையோ நாடுகிறாரா? “உலகத்துக்குச் சிநேகிதனாயிருக்க விரும்புகிறவன் தேவனுக்குப் பகைஞனாகிறான்” என்று சொல்வதன்மூலம் கடவுளுடைய வார்த்தை அவரை அழுத்தம்திருத்தமாக இடித்துரைக்கிறது. இவ்வாறாக, பொய் எதுவோ அதனை பைபிள் பகிரங்கமாக்குகிறது.—யாக்கோபு 4:4.
ஒருவேளை ஒரு நபருக்கு தன் குடும்ப அங்கத்தினர் ஒருவரின் அல்லது ஒரு நண்பனின் மரணத்தைப்பற்றிய கனவு வருமானால், அநேகமாக இந்த நபரைப்பற்றி அவர் கரிசனையாக இருப்பதன் காரணமாக இருக்கலாம். ஒருவேளை அந்த நபர் மிகத் துல்லியமாக கனவுகண்ட அதே இரவில் இறந்திருக்கலாம் என்பதுதானே அந்தக் கனவு ஒரு தீர்க்கதரிசன கனவாக இருந்தது என்று நிரூபிப்பதில்லை. இந்த வகையான ஒவ்வொரு கனவும் நடந்தேறுவதாக தோன்றினாலும், நடந்தேறாதவை நூற்றுக்கணக்கில் உள்ளன.
தீர்க்கதரிசன சம்பவங்களை வெளிப்படுத்துவதற்கும், அவருடைய எழுதப்பட்ட வார்த்தை தயாரிக்கப்படுகையில் போதனைகளை கொடுப்பதற்கும் கடவுள் கனவுகளைப் பயன்படுத்தியபோதிலும், இன்று அவ்வாறு செய்வதற்கான அவசியம் அவருக்கில்லை. இந்தச் சமயத்தில் மனிதவர்க்கத்திற்கு தேவையான கடவுளுடைய அனைத்து போதனைகளும் அந்த எழுதப்பட்ட வார்த்தையில் அடங்கியுள்ளன, அதன் தீர்க்கதரிசன சம்பவங்கள் ஆயிர வருடங்களுக்கு மேல் எதிர்காலத்தில் பொருந்தக்கூடியவையாக இருக்கின்றன. (2 தீமோத்தேயு 3:16, 17) ஆகவே நம் கனவுகளெல்லாம் எதிர்கால சம்பவங்களை கடவுளிடமிருந்து சுட்டிக்காட்டுவன அல்ல; ஆனால் நம் மன ஆரோக்கியத்தை பேணுவதற்காக மூளையினுடைய முக்கிய செயல்கள் என்று நம்பிக்கையோடு இருக்கலாம்.
[பக்கம் 7-ன் படம்]
வரவிருந்ததை பார்வோனுடைய கனவு காட்டியதுபோல், நம் எதிர்காலத்தின்பேரில் கடவுளுடைய வார்த்தை வெளிச்சம் பாய்ச்சுகிறது