சலொமோனின் சல்வவளம் மிகைப்படக் கூறப்பட்டிருக்கிறதா?
“ஒவ்வொரு வருஷத்திலும் அவனுக்கு [சாலொமோனுக்கு] வந்த பொன் அறுநூற்று அறுபத்தாறு தாலந்து நிறையாயிருந்தது.”—1 இராஜாக்கள் 10:15.
அந்தபைபிள் வசனத்தின்படி, அரசனாகிய சாலொமோன் ஒரே வருடத்தில் 25 டன்னுக்கும் அதிகமான தங்கத்தைச் சேகரித்தார்! இன்று இது $24,00,00,000-ஆக மதிப்பிடப்படும். 1800-ம் வருடம் உலகெங்கிலும் தோண்டி எடுக்கப்பட்ட தங்கத்தைவிட ஏறக்குறைய இரண்டு மடங்கு அதிகமானது இது. இது சாத்தியமா? அகழாய்வு அத்தாட்சி என்ன காண்பிக்கிறது? சாலொமோனின் செல்வவளம் பற்றிய பைபிள் பதிவு நிச்சயமாக நம்பத்தக்கதே என்று அது தெரியப்படுத்துகிறது. பைபிள் சார்ந்த அகழாய்வு பரிசீலனை (ஆங்கிலம்) இவ்வாறு சொல்கிறது:
◻ எகிப்தின் அரசனாகிய தூட்மோஸா III (பொ.ச.மு. இரண்டாம் ஆயிர ஆண்டுகாலம்) சுமார் 13.5 டன் தங்கத்தாலான பொருட்களை கார்னக்கிலுள்ள அம்மோன்-ரா கோயிலுக்கு நன்கொடையாக அளித்தான்—இது நன்கொடையின் வெறும் ஒரு பாகமாகவே இருந்தது.
◻ அரசனாகிய ஓஸார்கான் I (பொ.ச.மு. முதலாம் ஆயிர ஆண்டின் ஆரம்பப்பகுதி) மொத்தமாக சுமார் 383 டன் தங்கத்தையும் வெள்ளியையும் நன்கொடையாய் தேவர்களுக்கு அளித்ததாக எகிப்திய எழுத்துப்பொறிப்புகள் பதிவுசெய்திருக்கின்றன.
மேலுமாக, க்ரேட் ஏஜஸ் ஆஃப் மேன் என்ற தொடரின் க்ளாஸிக்கல் க்ரீஸ் தொகுதி இவ்வாறு அறிக்கை செய்கிறது:
◻ த்ரேஸிலுள்ள பாங்கேயன் சுரங்கங்கள், அரசனாகிய ஃபிலிப் II (பொ.ச.மு. 359-336) என்பவருக்காக ஒவ்வொரு வருடமும் 37 டன்னுக்கும் அதிகமான தங்கத்தை வழங்கியது.
◻ ஃபிலிப்பின் மகன் மகா அலெக்ஸான்டர் (பொ.ச.மு. 336-323) பெர்சிய பேரரசின் தலைநகராகிய சூஸாவைக் கைப்பற்றியபோது, 1,000 டன்னுக்கும் அதிகமான எடையுள்ள தங்க பொக்கிஷங்கள் கண்டெடுக்கப்பட்டன.—தி நியூ என்ஸைக்ளோப்பீடியா பிரிட்டானிக்கா.
ஆகவே அரசனாகிய சாலொமோனின் செல்வவளத்தைப் பற்றிய பைபிளின் விவரிப்பு சாத்தியமற்றதாக இல்லை. அந்தக் காலத்தில் சாலொமோன் ‘பூமியின் சகல ராஜாக்களைப்பார்க்கிலும், ஐசுவரியத்திலும் ஞானத்திலும் சிறந்தவராய் இருந்தார்,’ என்பதையும் நினைவில் கொள்ளுங்கள்.—1 இராஜாக்கள் 10:23.
சாலொமோன் தன்னுடைய செல்வவளத்தை எவ்வாறு பயன்படுத்தினார்? அவருடைய சிங்காசனம் “பசும்பொன்தகட்டால்” மூடப்பட்டது; அவருடைய பானபாத்திரங்கள் எல்லாம் ‘பொன்னால்’ ஆனவை; மேலும் “அடித்த பொன்தகட்டால்” ஆன 200 பெரிய பரிசைகளையும் 300 கேடகங்களையும் வைத்திருந்தார். (1 இராஜாக்கள் 10:16-21) எல்லாவற்றிற்கும் மேலாக, சாலொமோனின் தங்கம், எருசலேமிலுள்ள யெகோவாவினுடைய ஆலயத்தின் தொடர்பாக பயன்படுத்தப்பட்டது. ஆலய விளக்குத்தண்டுகள் மற்றும் முள்குறடுகள், கலங்கள், கைப்பிடிகளுள்ள பெரிய கூஜாக்கள் (NW), கிண்ணங்கள் போன்ற பரிசுத்த பணிமுட்டுகள், பொன்னாலும் வெள்ளியாலும் செய்யப்பட்டிருந்தன. மகா பரிசுத்த ஸ்தலத்திலுள்ள 4.5 மீட்டர் உயரமுள்ள கேருபீன்கள், தூபவர்க்க பலிபீடம், மற்றும் ஆலயத்தின் உட்புறம் முழுவதும்கூட பொன்னால் மூடப்பட்டிருந்தன.—1 இராஜாக்கள் 6:20-22; 7:48-50; 1 நாளாகமம் 28:17.
பொன்தகட்டால் பொதியப்பட்ட ஆலயத்தைக் குறித்து என்ன? அக்கறைக்குரியவிதத்தில், பொன் அவ்வாறு பயன்படுத்தப்படுவது பண்டைய உலகில் எவ்விதத்திலும் வழக்கத்திற்கு மாறானதாக இருக்கவில்லை. எகிப்தைச் சேர்ந்த அமீனாஃபிஸ் III, “‘முழுவதுமாக பொன்னால் பொதியப்பட்டதும், அதன் தரை வெள்ளியாலும் அதன் நுழைவாயில்கள் அனைத்தும் எலெக்ட்ரமாலும் அலங்கரிக்கப்பட்ட’ ஒரு கோயிலை திப்ஸில் கட்டி, அமுன் என்ற மகா தேவனைக் கனம் பண்ணினான்,” என்று பைபிள் சார்ந்த அகழாய்வு பரிசீலனை குறிப்பிடுகிறது; எலெக்ட்ரம் என்பது பொன்னும் வெள்ளியும் கலந்த ஒரு கலப்பு உலோகம். மேலுமாக, அசீரியாவின் எசரத்தோன் (பொ.ச.மு. ஏழாம் நூற்றாண்டு) ஆஷுர் கோயில் கதவுகளைப் பொற்தகட்டால் பொதிந்து, சுவர்களுக்குப் பொற்பூச்சு பூசினான். ஆரானிலுள்ள சீன் கோயிலைக் குறித்து, பாபிலோனின் நபோனிடஸ் (பொ.ச.மு. ஆறாம் நூற்றாண்டு) இவ்வாறு பதிவு செய்தான்: “அதன் சுவர்களைப் பொன் மற்றும் வெள்ளியால் அணிவித்து, சூரியனைப்போல அவற்றைப் பிரகாசிக்கச் செய்தேன்.”
இவ்வாறாக, அரசனாகிய சாலொமோனின் செல்வவளத்தைப் பற்றிய பைபிள்பூர்வ பதிவு மிகைப்படுத்திக் கூறப்படவில்லை என்று வரலாற்றுப் பதிவுகள் தெரியப்படுத்துகின்றன.