செல்வமும் ஞானமும் பெற்றிருந்த ஒரு ராஜா
செல்வங்கள் உங்களை சந்தோஷப்படுத்தும் என்று நீங்கள் நினைக்கிறீர்களா? எவராவது ஒருவர் உங்களிடம் பெரும் பணத்தொகையை கொடுத்தால் நீங்கள் மகிழ்ச்சியடையமாட்டீர்களா? அநேகமாக நீங்கள் மகிழ்ச்சியடைவீர்கள். பெரும்பாலும் அதை செலவழிப்பதற்கான வழிகளைக் குறித்து நீங்கள் சிந்திக்கக்கூடும்.
மறுப்புக்கிடமின்றி, வாழ்க்கையை அதிக வசதியுள்ளதாகவும் மகிழ்ச்சியுள்ளதாகவும் ஆக்குவதற்கென வாங்குவதற்கு நிறைய பொருட்கள் இருக்கின்றனவே. நோய் அல்லது வேலையின்மை போன்ற எதிர்பாராத பிரச்சினைகளை சமாளிப்பதற்கு பணம் ‘ஒரு பாதுகாப்பாகவும்’கூட இருக்கலாம்.—பிரசங்கி 7:12, NW.
ஆனால் பணத்திற்கும் சந்தோஷத்திற்கும் இடையே உள்ள தொடர்பு என்ன? செல்வத்தினால் விளையும் உபபொருளே சந்தோஷம் என்று அநேகர் நினைப்பது போல் நீங்கள் நினைக்கிறீர்களா? இக்கேள்விகளுக்கு விடைகளைக் கண்டுபிடிப்பது கடினமாய் இருக்கலாம், ஏனெனில் பணத்தை எளிதில் அளவிடலாம் அல்லது எண்ணிவிடலாம், ஆனால் சந்தோஷத்தை அவ்வாறு எளிதில் அளவிட முடியாது. சந்தோஷத்தை தராசில் வைத்து நீங்கள் எடை போட முடியாது.
மேலும், சில செல்வந்தர்கள் சந்தோஷமாய் இருப்பது போல் தோன்றுகின்றனர், ஆனால் மற்றவர்களோ துயரத்தின் எல்லையில் இருக்கின்றனர். ஏழைகளாய் இருப்பவர்களுடைய விஷயத்திலும்கூட இது உண்மையாயிருக்கிறது. இருப்பினும், பெரும்பாலான மக்கள், ஏற்கெனவே செல்வந்தர்களாய் இருப்பவர்களும்கூட அதிக பணம் அவர்களுக்கு அதிக சந்தோஷத்தை தரும் என்று நம்புகின்றனர்.
பண்டைய இஸ்ரவேலின் ராஜாவாகிய சாலொமோன் அப்படிப்பட்ட விஷயங்களைப் பற்றி எழுதிய நபர்களுள் ஒருவர். எக்காலத்திலும் வாழ்ந்த மிகப்பெரிய செல்வந்தர்களுள் ஒருவராக அவர் இருந்தார். பைபிள் புத்தகமாகிய ஒன்று இராஜாக்கள், பத்தாம் அதிகாரத்தில் மிகப்பெரிய அளவில் அவர் வைத்திருந்த செல்வத்தைப் பற்றிய விவரிப்பின் பட்டியலை நீங்கள் வாசிக்கலாம். உதாரணமாக, 15-ஆம் வசனம் குறிப்பிடுவதை கவனியுங்கள்: ‘ஒவ்வொரு வருஷத்திலும் அவனுக்கு வந்த பொன் அறுநூற்று அறுபத்தாறு தாலந்து நிறையாயிருந்தது.’ அந்த எண்ணிக்கை 25 டன் தங்கத்துக்கு சமம். இன்று, அந்த அளவு தங்கம் 775,00,00,000 ரூபாய்க்கும் அதிக மதிப்புள்ளதாய் இருக்கும்!
இருப்பினும், சாலொமோன் வெறும் செல்வந்தராக மட்டும் இருக்கவில்லை; கடவுள் அவருக்கு ஞானத்தைக் கொடுத்து அவரை ஆசீர்வதித்திருந்தார். பைபிள் இவ்வாறு கூறுகிறது: “பூமியின் சகல ராஜாக்களைப் பார்க்கிலும், ராஜாவாகிய சாலொமோன் ஐசுவரியத்திலும் ஞானத்திலும் சிறந்தவனாயிருந்தான். சாலொமோனின் இருதயத்திலே தேவன் அருளிய ஞானத்தைக் கேட்கிறதற்காக, சகல தேசத்தாரும் அவன் முகதரிசனத்தைத் தேடினார்கள்.” (1 இராஜாக்கள் 10:23, 24) நாமும்கூட சாலொமோனின் ஞானத்திலிருந்து பயனடையலாம், ஏனென்றால் அவருடைய எழுத்துக்கள் பைபிள் பதிவின் பாகமாய் உள்ளன. செல்வத்துக்கும் சந்தோஷத்துக்கும் இடையே உள்ள தொடர்பைப் பற்றி அவர் சொல்லவிருப்பதை நாம் பார்க்கலாம்.
[பக்கம் 3-ன் படத்திற்கான நன்றி]
Reproduced from Die Heilige Schrift - Übersetzt von Dr. Joseph Franz von Allioli. Druck und Verlag von Eduard Hallberger, Stuttgart