யெகோவா தரும் ஆறுதலை பகிர்ந்துகொள்ளுதல்
“நீங்கள் எங்களோடேகூடப் பாடுபடுகிறதுபோல, எங்களோடேகூட ஆறுதலும் அடைகிறீர்களென்று நாங்கள் அறிந்து, உங்களைக் குறித்து உறுதியான நம்பிக்கையுள்ளவர்களாயிருக்கிறோம்.”—2 கொரிந்தியர் 1:7.
1, 2. இன்று கிறிஸ்தவர்களாக ஆகியிருக்கிற அநேகருடைய அனுபவம் என்னவாக இருந்திருக்கிறது?
தற்போதைய காவற்கோபுர வாசகர்கள் அநேகர் கடவுளுடைய சத்தியத்தை அறியாமல் வளர்ந்தனர். நீங்களும் ஒருவேளை அவ்வாறே வளர்ந்திருக்கலாம். அப்படியானால், உங்களுடைய அறிவுக் கண்கள் திறக்க ஆரம்பித்தபோது நீங்கள் எவ்வாறு உணர்ந்தீர்கள் என்பதை ஞாபகப்படுத்திப் பாருங்கள். உதாரணமாக, இறந்தவர்கள் துன்பப்படுவதில்லை ஆனால் உணர்வற்றவர்களாக இருக்கிறார்கள் என்பதாக நீங்கள் முதன்முதலில் புரிந்துகொண்டபோது, அது உங்களுக்கு நிம்மதி அளிப்பதாய் இருக்கவில்லையா? கடவுளுடைய புதிய உலகில் கோடிக்கணக்கானோர் உயிர்த்தெழுப்பப்படுவார்கள் என்ற இறந்தோருக்கான நம்பிக்கையைக் குறித்து நீங்கள் கற்றுக்கொண்டபோது ஆறுதலடையவில்லையா?—பிரசங்கி 9:5, 10; யோவான் 5:28, 29.
2 துன்மார்க்கத்தை முடிவுக்குக் கொண்டுவருவதற்கும் இந்தப் பூமியை ஒரு பரதீஸாக்குவதற்குமான கடவுளுடைய வாக்குறுதியைப் பற்றியென்ன? இதைப் பற்றி நீங்கள் கற்றுக்கொண்டபோது, அது உங்களை ஆறுதல்படுத்தி, ஆவல் மிகுந்த எதிர்பார்ப்பால் நிரப்பவில்லையா? ஒருபோதும் சாகாமலேயே வரவிருக்கும் பூமிக்குரிய பரதீஸில் தப்பிப்பிழைக்கும் சாத்தியத்தைக் குறித்து முதலாவதாக கற்றுக்கொண்டபோது நீங்கள் எவ்வாறு உணர்ந்தீர்கள்? நீங்கள் கிளர்ச்சியடைந்தீர்கள் என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை. ஆம், இப்பொழுது யெகோவாவின் சாட்சிகளால் உலகமுழுவதும் பிரசங்கிக்கப்படுகிற கடவுளுடைய ஆறுதலளிக்கும் செய்தியைப் பெற்றுக்கொண்டவர்களானீர்கள்.—சங்கீதம் 37:9-11, 29; யோவான் 11:26; வெளிப்படுத்துதல் 21:3-5.
3. மற்றவர்களுடன் கடவுளுடைய ஆறுதலளிக்கும் செய்தியைப் பகிர்ந்துகொள்கிறவர்களும் ஏன் உபத்திரவப்படுகிறார்கள்?
3 என்றபோதிலும், பைபிள் செய்தியை மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்வதற்கு நீங்கள் முயன்றபோது, “விசுவாசம் எல்லாரிடத்திலும் இல்லையே” என்பதையும் உணர ஆரம்பித்தீர்கள். (2 தெசலோனிக்கேயர் 3:2) பைபிள் வாக்குறுதிகளில் விசுவாசம் வைப்பதற்காக உங்களுடைய முன்னாள் நண்பர்களில் சிலர் ஒருவேளை உங்களை கேலிசெய்திருக்கலாம். யெகோவாவின் சாட்சிகளுடன் கூட்டுறவுகொண்டு தொடர்ந்து பைபிளைப் படித்து வந்ததற்காக நீங்கள் துன்புறுத்துதலையும்கூட அனுபவித்திருக்கலாம். உங்களுடைய வாழ்க்கையை பைபிள் நியமங்களுக்கு இசைவாக கொண்டுவருவதற்கு நீங்கள் மாற்றங்களை செய்ய ஆரம்பித்தபோது அந்தத் துன்புறுத்துதல் தீவிரமடைந்திருக்கலாம். சாத்தானும் அவனுடைய உலகமும் கடவுளுடைய ஆறுதலை ஏற்றுக்கொள்ளுகிற அனைவர்மீதும் கொண்டுவரும் உபத்திரவத்தை நீங்கள் அனுபவிக்க ஆரம்பித்தீர்கள்.
4. அக்கறைகாட்டும் புதியவர்கள் என்ன வித்தியாசமான வழிகளில் உபத்திரவத்திற்கு பிரதிபலிக்கிறார்கள்?
4 வருத்தகரமாக, இயேசு முன்னறிவித்தபடி, உபத்திரவமானது சிலர் இடறலடையும்படியும் கிறிஸ்தவ சபையுடன் தங்களுடைய கூட்டுறவை நிறுத்திக்கொள்ளும்படியும் செய்கிறது. (மத்தேயு 13:5, 6, 20, 21) மற்றவர்கள் தாங்கள் கற்றுக்கொண்டுவருகிற ஆறுதலளிக்கும் வாக்குறுதிகளின்மீது தங்களுடைய மனதை ஊன்றச்செய்வதன் மூலம் உபத்திரவத்தை சகிக்கின்றனர். இறுதியில் தங்களுடைய வாழ்க்கையை யெகோவாவுக்கு ஒப்புக்கொடுத்து, அவருடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவின் சீஷர்களாக முழுக்காட்டுதல் பெறுகிறார்கள். (மத்தேயு 28:19, 20; மாற்கு 8:34) நிச்சயமாகவே, ஒரு கிறிஸ்தவர் முழுக்காட்டப்பட்டவுடன் உபத்திரவம் நின்றுவிடுவதில்லை. உதாரணமாக, ஒழுக்கயீனமான வாழ்க்கை நடத்திய ஒரு நபருக்கு கற்பை காத்துக்கொள்வது கடினமான ஒரு போராட்டமாய் இருக்கலாம். விசுவாசத்திலில்லாத குடும்ப அங்கத்தினர்களிடமிருந்து வரும் தொடர்ச்சியான எதிர்ப்பினால் மற்றவர்கள் போராட வேண்டியதாயிருக்கலாம். எந்த உபத்திரவமாக இருந்தாலும்சரி, கடவுளுக்கு ஒப்புக்கொடுக்கப்பட்ட வாழ்க்கையை உண்மையோடு தொடரும் அனைவரும் ஒரு காரியத்தைக் குறித்து நிச்சயமாய் இருக்கலாம். மிகவும் தனிப்பட்ட ஒரு முறையில், அவர்கள் கடவுளுடைய ஆறுதலையும் உதவியையும் அனுபவிப்பார்கள்.
“சகல ஆறுதலின் தேவன்”
5. பவுல் அனுபவித்த அநேக சோதனைகளோடுகூட, அவர் எதையும் அனுபவித்தார்?
5 கடவுள் அளிக்கும் ஆறுதலை ஆழ்ந்த விதத்தில் போற்றிய ஒருவர்தான் அப்போஸ்தலனாகிய பவுல். ஆசியாவிலும் மக்கெதோனியாவிலும் ஏற்பட்ட ஒரு குறிப்பிடத்தக்க சோதனை காலத்திற்குப் பிறகு, கடிந்து எழுதிய அவருடைய கடிதத்திற்கு கொரிந்து சபை நன்கு பிரதிபலித்ததைக் கேள்விப்பட்டதால் அவர் அதிக நிம்மதியடைந்தார். இது, அவர்களுக்கு இரண்டாவது கடிதத்தை எழுதும்படி அவரைத் தூண்டியது, அதில் பின்வரும் துதியின் வார்த்தைகள் அடங்கியுள்ளது: “நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் பிதாவாகிய தேவனும் [“கனிவான,” NW] இரக்கங்களின் பிதாவும், சகலவிதமான ஆறுதலின் தேவனுமாயிருக்கிறவருக்கு ஸ்தோத்திரம். . . . எங்களுக்கு வரும் சகல உபத்திரவங்களிலேயும் அவரே எங்களுக்கு ஆறுதல்செய்கிறவர்.”—2 கொரிந்தியர் 1:3, 4.
6. 2 கொரிந்தியர் 1:3, 4-ல் காணப்படுகிற பவுலுடைய வார்த்தைகளிலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்கிறோம்?
6 ஏவப்பட்டு எழுதப்பட்ட இந்த வார்த்தைகள் ஏராளமான தகவலளிக்கின்றன. நாம் அவற்றை பகுத்தாராயலாம். கடவுளுக்கு துதியை அல்லது நன்றியை பவுல் தெரிவிக்கையில், அல்லது தன்னுடைய கடிதங்களில் அவரிடம் வேண்டிக்கொள்கையில், கிறிஸ்தவ சபையின் தலைவராகிய இயேசுவுக்காக ஆழ்ந்த போற்றுதலை அவர் சேர்த்துக்கொள்வதையும் நாம் பொதுவாக காண்கிறோம். (ரோமர் 1:8; 7:25; எபேசியர் 1:3; எபிரெயர் 13:20, 21) எனவே, ‘நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் பிதாவாகிய தேவனுக்கு’ இந்தத் துதியின் வார்த்தைகளை பவுல் சொல்கிறார். பின்பு, தன்னுடைய எழுத்துக்களில் ‘கனிவான இரக்கங்கள்’ என்பதாக மொழிபெயர்க்கப்பட்ட கிரேக்க பெயர்ச்சொல்லை முதல் தடவையாக அவர் பயன்படுத்துகிறார். மற்றொருவர் துன்பம் அனுபவிக்கையில் வருத்தம் தெரிவிப்பதற்கு பயன்படுத்துகிற ஒரு வார்த்தையிலிருந்து இந்தப் பெயர்ச்சொல் வருகிறது. இவ்விதமாக, உபத்திரவத்தை அனுபவிக்கிற அவருடைய உண்மையுள்ள ஊழியர்கள் எவருக்கும் காண்பிக்கப்படுகிற கடவுளுடைய கனிவான உணர்ச்சிகளை—அவர்களுடைய சார்பில் இரக்கத்துடன் செயல்படுவதற்கு கடவுளை உந்துவிக்கிற கனிவான உணர்ச்சிகளை—பவுல் விவரிக்கிறார். கடைசியாக, ‘கனிவான இரக்கங்களின் பிதா’ என்பதாக அவரை அழைப்பதன் மூலம் இந்த விரும்பத்தக்க பண்பின் ஊற்றுமூலராக யெகோவாவை பவுல் நோக்கியிருந்தார்.
7. யெகோவாவே ‘சகல ஆறுதலின் தேவன்’ என்று ஏன் சொல்லப்படலாம்?
7 கடவுளுடைய ‘கனிவான இரக்கங்கள்,’ உபத்திரவத்தை அனுபவிக்கிற ஒருவருக்கு நிம்மதியைக் கொண்டுவருகின்றன. எனவே, “சகல ஆறுதலின் தேவன்” என்பதாக யெகோவாவை பவுல் தொடர்ந்து விவரிக்கிறார். இவ்வாறு, உடன் விசுவாசிகளுடைய தயவிலிருந்து வரும் எந்தவொரு ஆறுதலை நாம் அனுபவித்தாலும், நாம் யெகோவாவை ஊற்றுமூலராக நோக்கியிருக்கலாம். எந்தவொரு உண்மையான, நிரந்தர ஆறுதலும் கடவுளிடமிருந்தே வருகிறது. மேலும், தம்முடைய சாயலாக மனிதனை படைத்தவர் அவரே, இவ்விதமாக நாம் ஆறுதலளிப்பவர்களாய் இருக்கும்படி நமக்கு உதவுகிறார். மேலும், ஆறுதலில்லாமல் இருப்பவர்களிடம் கனிவான இரக்கத்தைக் காண்பிப்பதற்கு அவருடைய ஊழியர்களை உந்துவிப்பது கடவுளுடைய பரிசுத்த ஆவியே.
ஆறுதலளிப்பவர்களாய் இருக்க பயிற்றுவிக்கப்படுதல்
8. நம்முடைய சோதனைகளுக்கு கடவுள் காரணராக இல்லாதபோதிலும், நாம் உபத்திரவத்தை சகிப்பது நம்மீது என்ன நன்மையான விளைவை ஏற்படுத்தக்கூடும்?
8 யெகோவா தேவன் தம்முடைய உண்மையுள்ள ஊழியர்களுக்கு வருகிற பல்வேறு சோதனைகளை அனுமதிக்கிறபோதிலும், அப்படிப்பட்ட சோதனைகளுக்கு அவர் ஒருபோதும் காரணர் அல்ல. (யாக்கோபு 1:13) என்றபோதிலும், நாம் உபத்திரவத்தை சகித்திருக்கும்போது அவர் தருகிற ஆறுதல், மற்றவர்களுடைய தேவைகளுக்கு அதிக உணர்வுள்ளவர்களாக இருப்பதற்கு நம்மை பயிற்றுவிக்கக்கூடும். என்ன விளைவுடன்? ‘தேவனால் அருளப்படுகிற ஆறுதலினாலே, எந்த உபத்திரவத்திலாகிலும் அகப்படுகிறவர்களுக்கு ஆறுதல் செய்யத் திராணியுள்ளவர்களாவோம்.’ (2 கொரிந்தியர் 1:4) இவ்விதமாக, நாம் கிறிஸ்துவைப் பின்பற்றி “துயரப்பட்ட அனைவருக்கும் ஆறுதல் செய்”கையில், நாம் உடன் விசுவாசிகளுடனும் நம்முடைய ஊழியத்தில் சந்திக்கிறவர்களுடனும் யெகோவா அளிக்கும் ஆறுதலை திறம்பட்ட விதத்தில் பகிர்ந்துகொள்ளுகிறவர்களாய் இருப்பதற்கு அவர் நம்மை பயிற்றுவிக்கிறார்.—ஏசாயா 61:2; மத்தேயு 5:4.
9. (அ) துன்பத்தை சகித்திருப்பதற்கு நமக்கு எது உதவிசெய்யும்? (ஆ) நாம் உண்மையுடன் உபத்திரவத்தை சகித்திருக்கும்போது எவ்வாறு மற்றவர்கள் ஆறுதலளிக்கப்படுகிறார்கள்?
9 கடவுளிடமிருந்து கிறிஸ்துவின் மூலமாக பெற்ற அபரிமிதமான ஆறுதலின் காரணமாக பவுல் தனக்கு வந்த அநேக துன்பங்களை சகித்திருந்தார். (2 கொரிந்தியர் 1:5) கடவுளுடைய அருமையான வாக்குறுதிகளை தியானிப்பதன் மூலமாக, கடவுளுடைய பரிசுத்த ஆவியின் ஆதரவுக்காக ஜெபிப்பதன் மூலமாக, நம்முடைய ஜெபங்களுக்கான கடவுளுடைய பதில்களை அனுபவிப்பதன் மூலமாக நாமும்கூட அபரிமிதமான ஆறுதலை அனுபவிக்க முடியும். இவ்வாறு, யெகோவாவின் அரசாட்சியை தொடர்ந்து ஆதரித்து, பிசாசை ஒரு பொய்யனாக நிரூபிப்பதற்கு நாம் பலப்படுத்தப்படுவோம். (யோபு 2:4; நீதிமொழிகள் 27:11) எந்தவிதமான உபத்திரவத்தையும் நாம் உண்மையோடு சகித்திருக்கும்போது, பவுலைப் போல, நாம் எல்லா மகிமையையும் யெகோவாவுக்கு கொடுக்க வேண்டும்; அவர் தரும் ஆறுதல் சோதனையின்கீழ் உண்மையுடன் நிலைத்திருக்க கிறிஸ்தவர்களுக்கு உதவுகிறது. உண்மையுள்ள கிறிஸ்தவர்களின் சகிப்புத்தன்மை, மற்றவர்களும் ‘அதே பாடுகளை சகித்திருப்பதற்கு’ தீர்மானமுள்ளவர்களாய் இருக்கும்படி செய்து, சகோதரத்துவத்தின் மீது ஆறுதலான விளைவை ஏற்படுத்துகிறது.—2 கொரிந்தியர் 1:6.
10, 11. (அ) பூர்வ கொரிந்து சபைக்கு துன்பத்தை ஏற்படுத்திய சில காரியங்கள் யாவை? (ஆ) கொரிந்து சபையை பவுல் எவ்வாறு ஆறுதல்படுத்தினார், என்ன நம்பிக்கையை வெளிப்படுத்தினார்?
10 அனைத்து உண்மை கிறிஸ்தவர்களும் படுகிற பாடுகளைப் போலவே கொரிந்தியர்களும் தங்கள் பங்கில் பாடனுபவித்தார்கள். அதோடு, மனந்திரும்பாமல் வேசித்தனம் செய்துவந்தவரை சபைநீக்கம் செய்வதற்கான அறிவுரை அவர்களுக்குத் தேவைப்பட்டது. (1 கொரிந்தியர் 5:1, 2, 11, 13) இந்த நடவடிக்கையை எடுப்பதற்கும், சண்டை சச்சரவுக்கும் பிரிவினைக்கும் முடிவு கட்டுவதற்கும் தவறியது சபையின்மீது அவகீர்த்தியைக் கொண்டுவந்தது. ஆனால் அவர்கள் கடைசியாக பவுலுடைய அறிவுரையைப் பொருத்தி, உண்மையான மனந்திரும்புதலை காண்பித்தார்கள். எனவே, அவர்களை கனிவோடு பாராட்டினார், மேலும் தன்னுடைய கடிதத்திற்கான அவர்களுடைய சிறந்த பிரதிபலிப்பு அவரை ஆறுதல்படுத்தியது என்று சொன்னார். (2 கொரிந்தியர் 7:8, 10, 11, 13) தெளிவாகவே, சபைநீக்கம் செய்யப்பட்ட நபரும் மனந்திரும்பியிருந்தார். ஆகவே, ‘அப்படிப்பட்ட மனிதன் அதிக துக்கத்தில் அமிழ்ந்துபோகாதபடிக்கு, அவனுக்கு மன்னித்து ஆறுதல்செய்யும்படி’ பவுல் அவர்களுக்கு அறிவுரை கூறினார்.—2 கொரிந்தியர் 2:7.
11 பவுலுடைய கடிதம் நிச்சயமாகவே கொரிந்து சபையை ஆறுதல்படுத்தியிருக்க வேண்டும். இது அவருடைய நோக்கங்களில் ஒன்றாக இருந்தது. அவர் இவ்வாறு விளக்கினார்: “நீங்கள் எங்களோடேகூடப் பாடுபடுகிறதுபோல, எங்களோடேகூட ஆறுதலும் அடைகிறீர்களென்று நாங்கள் அறிந்து, உங்களைக்குறித்து உறுதியான நம்பிக்கையுள்ளவர்களாயிருக்கிறோம்.” (2 கொரிந்தியர் 1:7) அவருடைய கடிதத்தின் முடிவில், பவுல் இவ்விதமாக உந்துவித்தார்: “ஆறுதலடையுங்கள்; . . . அப்பொழுது அன்புக்கும் சமாதானத்துக்கும் காரணராகிய தேவன் உங்களோடேகூட இருப்பார்.”—2 கொரிந்தியர் 13:11.
12. கிறிஸ்தவர்கள் அனைவருக்கும் என்ன தேவை இருக்கிறது?
12 எப்பேர்ப்பட்ட முக்கியமான பாடத்தை இதிலிருந்து நாம் கற்றுக்கொள்ளலாம்! கிறிஸ்தவ சபையின் அங்கத்தினர்கள் அனைவரும், கடவுள் தம்முடைய வார்த்தை, தம்முடைய பரிசுத்த ஆவி, மற்றும் தம்முடைய பூமிக்குரிய அமைப்பின் மூலம் தருகிற ‘ஆறுதலைப் பகிர்ந்துகொள்வது’ அவசியம். சபைநீக்கம் செய்யப்பட்டவர்கள் மனந்திரும்பி தங்களுடைய தவறான போக்கை சரிசெய்திருப்பார்களானால், அவர்களும்கூட ஆறுதல் தேவைப்படுகிறவர்களாக இருக்கலாம். இதனால், அவர்களுக்கு உதவிசெய்வதற்கு “உண்மையும் விவேகமுமுள்ள அடிமை” ஒரு இரக்கமுள்ள ஏற்பாட்டை செய்திருக்கிறது. சபைநீக்கம் செய்யப்பட்ட குறிப்பிட்ட சிலரை வருடத்திற்கு ஒரு முறை இரண்டு மூப்பர்கள் சந்திக்கலாம். இவர்கள் இனிமேலும் கலகத்தனமான மனப்பான்மையை காண்பிக்காதவர்களாய் அல்லது மோசமான பாவத்தில் ஈடுபடாதவர்களாய் இருந்து, திரும்பவும் நிலைநாட்டப்படுவதற்கு தேவையான படிகளை எடுப்பதற்கு உதவி தேவைப்படுகிறவர்களாய் இருக்கலாம்.—மத்தேயு 24:45, NW; எசேக்கியேல் 34:16.
ஆசியாவில் பவுல் அனுபவித்த உபத்திரவம்
13, 14. (அ) ஆசியாவில் பவுல் அனுபவித்த கடுமையான உபத்திரவத்தை எவ்வாறு விவரித்தார்? (ஆ) எந்தச் சம்பவத்தை பவுல் தன்னுடைய மனதில் கொண்டிருந்திருக்கக்கூடும்?
13 இதுவரையாக கொரிந்து சபை அனுபவித்திருந்த துன்பத்தின் விதம், பவுல் சகிக்க வேண்டியிருந்த அநேக உபத்திரவங்களுடன் ஒப்பிடப்பட முடியாது. இதனால், அவர்களுக்கு இவ்வாறு நினைப்பூட்ட முடிந்தது: “சகோதரரே, ஆசியாவில் எங்களுக்கு நேரிட்ட உபத்திரவத்தை நீங்கள் அறியாதிருக்க எங்களுக்கு மனதில்லை. என்னவெனில், பிழைப்போம் என்கிற நம்பிக்கை அற்றுப்போகத்தக்கதாக, எங்கள் பலத்திற்கு மிஞ்சின அதிக பாரமான வருத்தம் எங்களுக்கு உண்டாயிற்று. நாங்கள் எங்கள்மேல் நம்பிக்கையாயிராமல், மரித்தோரை எழுப்புகிற தேவன்மேல் நம்பிக்கையாயிருக்கத்தக்கதாக, மரணம் வருமென்று நாங்கள் எங்களுக்குள்ளே நிச்சயித்திருந்தோம். அப்படிப்பட்ட மரணத்தினின்றும் அவர் எங்களைத் தப்புவித்தார், இப்பொழுதும் தப்புவிக்கிறார், இன்னும் தப்புவிப்பார் என்று அவரை நம்பியிருக்கிறோம்.”—2 கொரிந்தியர் 1:8-10.
14 எபேசுவில் நடந்த கலகத்தைப் பற்றி பவுல் குறிப்பிட்டுக் கொண்டிருந்தார் என்பதாக பைபிள் அறிஞர்கள் சிலர் நம்புகின்றனர்; அது பவுலுடைய உயிரையும், மக்கெதோனியாவை சேர்ந்த இரண்டு பயணத் தோழர்களாகிய காயுவு மற்றும் அரிஸ்தர்க்குவின் உயிரையும் பலிவாங்கியிருக்கும். இந்தக் கிறிஸ்தவர்கள் இருவரும், ‘எபேசியருடைய தியானாளே பெரியவள்!’ என்பதாக ‘இரண்டுமணி நேரமளவும் ஏகமாய்ச் சத்தமிட்டுக்கொண்டிருந்த’ ஒரு கலகக் கும்பல் நிறைந்திருந்த அரங்கசாலைக்குள் பலவந்தமாக கொண்டுசெல்லப்பட்டார்கள். கடைசியாக, பட்டணத்து அதிகாரி ஒருவர் அந்தக் கூட்டத்தை வெற்றிகரமாக அமைதிப்படுத்தினார். காயுவு மற்றும் அரிஸ்தர்க்குவின் உயிருக்கு ஏற்பட்ட இந்த அச்சுறுத்துதல், பவுலை அதிகமாக அலைக்கழித்திருக்க வேண்டும். உண்மையில் சொல்லப்போனால், அவர் உள்ளே சென்று வெறிபிடித்திருந்த கலகக் கும்பலுடன் நியாயங்காட்டிப் பேச விரும்பினார், ஆனால் இந்த விதத்தில் அவர் தன்னுடைய உயிரை ஆபத்திற்குட்படுத்துவதிலிருந்து தடுத்துநிறுத்தப்பட்டார்.—அப்போஸ்தலர் 19:26-41.
15. 1 கொரிந்தியர் 15:32-ல், என்ன கவலைக்குரிய சூழ்நிலைமை விவரிக்கப்பட்டிருக்கலாம்?
15 என்றபோதிலும், மேலே சொல்லப்பட்ட சம்பவத்தைவிட மிதமிஞ்சிய அளவில் இருந்த ஒரு சூழ்நிலைமையை பவுல் விவரித்துக் கொண்டிருந்திருக்கலாம். கொரிந்தியருக்கான அவருடைய முதல் கடிதத்தில், பவுல் இவ்விதமாக கேட்டார்: “நான் எபேசுவிலே துஷ்டமிருகங்களுடனே போராடினேனென்று மனுஷர் வழக்கமாய்ச் சொல்லுகிறேன்; அப்படிப் போராடினதினாலே எனக்குப் பிரயோஜனமென்ன?” (1 கொரிந்தியர் 15:32) வெறுமனே மிருகத்தனமான மனிதர்களிடமிருந்து மட்டுமல்ல, ஆனால் எபேசுவிலுள்ள அரங்கத்திலிருந்த சொல்லர்த்தமான கொடிய விலங்குகளாலும் பவுலுடைய உயிர் அச்சுறுத்தப்பட்டது என்பதை இது அர்த்தப்படுத்தலாம். இரத்த வெறிகொண்ட கூட்டத்தினர் பார்த்துக்கொண்டிருக்கையில், கொடிய மிருகங்களுடன் சண்டையிட பலவந்தப்படுத்தப்படுவதன் மூலம் குற்றவாளிகள் சிலசமயங்களில் தண்டிக்கப்பட்டார்கள். பவுல் சொல்லர்த்தமான கொடிய மிருகங்களை எதிர்ப்பட்டதாக அர்த்தப்படுத்தியிருந்தால், சொல்லர்த்தமான சிங்கங்களின் வாயிலிருந்து தானியேல் பாதுகாக்கப்பட்டது போலவே, கடைசி நேரத்தில் கொடூரமான மரணத்திலிருந்து அவர் அற்புதகரமாக காப்பாற்றப்பட்டிருக்க வேண்டும்.—தானியேல் 6:22.
நவீனநாளைய உதாரணங்கள்
16. (அ) பவுல் அனுபவித்த உபத்திரவங்களை யெகோவாவின் சாட்சிகள் ஏன் புரிந்துகொள்ள முடியும்? (ஆ) தங்களுடைய விசுவாசத்தின் நிமித்தமாக இறந்தவர்களின் சம்பந்தமாக நாம் எதைக் குறித்து நிச்சயமாயிருக்கலாம்? (இ) மரணத்திலிருந்து கிறிஸ்தவர்கள் சிலர் மயிரிழையில் தப்பிப்பிழைக்கையில் என்ன நல்ல விளைவை ஏற்படுத்தியிருக்கிறது?
16 பவுல் அனுபவித்த உபத்திரவங்களை தற்கால கிறிஸ்தவர்கள் அநேகர் புரிந்துகொள்ள முடியும். (2 கொரிந்தியர் 11:23-27) இன்றும்கூட, கிறிஸ்தவர்கள், ‘[தங்களுடைய] பலத்திற்கு மிஞ்சின அதிக பாரமான வருத்தத்தை’ அனுபவித்திருக்கிறார்கள், ‘பிழைப்போம் என்கிற நம்பிக்கை அற்றுப்போகத்தக்கதான’ சூழ்நிலைமைகளை அநேகர் எதிர்ப்பட்டிருக்கிறார்கள். (2 கொரிந்தியர் 1:8) கொலைசெய்யும் கூட்டத்தினர் மற்றும் கொடூரமான துன்புறுத்துபவர்களின் கைகளில் சிலர் இறந்திருக்கிறார்கள். கடவுளுடைய ஆறுதலளிக்கும் வல்லமை சகித்திருப்பதற்கு அவர்களுக்கு உதவியது என்பதிலும், பரலோக நம்பிக்கையாக இருந்தாலும்சரி பூமிக்குரிய நம்பிக்கையாக இருந்தாலும்சரி, தாங்கள் வைத்திருக்கும் நம்பிக்கையின் நிறைவேற்றத்தின்மீது இருதயத்தையும் மனதையும் உறுதியாக ஊன்றியவர்களாய் இறந்தார்கள் என்பதிலும் நாம் நிச்சயமாயிருக்கலாம். (1 கொரிந்தியர் 10:13; பிலிப்பியர் 4:13; வெளிப்படுத்துதல் 2:10) வேறுசில சந்தர்ப்பங்களில், யெகோவா காரியங்களை வழிநடத்தியிருக்கிறார், நம்முடைய சகோதரர்கள் மரணத்திலிருந்து விடுதலை செய்யப்பட்டிருக்கிறார்கள். இப்படிப்பட்ட விடுதலையை அனுபவித்திருக்கிறவர்கள் “மரித்தோரை எழுப்புகிற தேவன்மேல்” அதிகமான நம்பிக்கையை வளர்த்திருக்கிறார்கள் என்பதில் சந்தேகமில்லை. (2 கொரிந்தியர் 1’:9) அதன்பிறகு, கடவுளுடைய ஆறுதலளிக்கும் செய்தியை மற்றவர்களுடன் அவர்கள் பகிர்ந்துகொண்டபோது இன்னும் அதிக நம்பிக்கையுடன் அவர்களால் பேச முடிகிறது.—மத்தேயு 24:14.
17-19. ருவாண்டாவிலுள்ள நம்முடைய சகோதரர்கள் கடவுளுடைய ஆறுதலைப் பகிர்ந்துகொள்கிறவர்களாக இருந்திருக்கிறார்கள் என்பதை என்ன அனுபவங்கள் காட்டுகின்றன?
17 பவுலும் அவருடைய தோழர்களும் எதிர்ப்பட்டது போன்ற அனுபவத்தை ருவாண்டாவிலுள்ள நம்முடைய சகோதரர்கள் சமீப ஆண்டுகளில் அனுபவித்தார்கள். அநேகர் தங்களுடைய உயிரை இழந்தார்கள், ஆனால் அவர்களுடைய விசுவாசத்தை அழிப்பதற்கான சாத்தானுடைய முயற்சிகள் தோல்வியடைந்தன. அதற்குப் பதிலாக, இந்த நாட்டிலுள்ள நம்முடைய சகோதரர்கள் கடவுளுடைய ஆறுதலை அநேக தனிப்பட்ட முறைகளில் அனுபவித்திருக்கிறார்கள். ருவாண்டாவில் வாழும் டூட்ஸி மற்றும் ஹூட்டூ இன அழிவின்போது, டூட்ஸியைப் பாதுகாப்பதற்கு தங்களுடைய உயிரையே ஆபத்திற்குள்ளாக்கிய ஹூட்டூக்கள் இருந்தார்கள்; மேலும் ஹூட்டுக்களைப் பாதுகாத்த டூட்ஸிக்களும் இருந்தார்கள். தங்களுடைய உடன் விசுவாசிகளைப் பாதுகாத்ததற்காக சிலர் தீவிரவாதிகளால் கொல்லப்பட்டார்கள். உதாரணமாக, சன்ட்டல் என்ற பெயருள்ள ஒரு டூட்ஸி சகோதரியை காஹிஸி என்ற பெயருள்ள ஒரு ஹூட்டூ சாட்சி மறைத்து வைத்திருந்த பிறகு கொல்லப்பட்டார். சன்ட்டலுடைய டூட்ஸி கணவராகிய ஷா என்பவரை கேர்லோட் என்ற பெயருள்ள ஒரு ஹூட்டூ சகோதரி மற்றொரு இடத்தில் மறைத்து வைத்தார். 40 நாட்களாக ஷாவும் மற்றொரு டூட்ஸி சகோதரரும் ஒரு பெரிய புகைப்போக்கியில் மறைந்திருந்தார்கள், இரவில் சிறிது நேரத்திற்கு மட்டுமே வெளியே வருவார்கள். இந்தச் சமயத்திலெல்லாம், ஹூட்டூக்களின் இராணுவ முகாம் ஒன்றிற்கு அருகில் வசித்துவந்தபோதிலும் கேர்லோட் அவர்களுக்கு உணவையும் பாதுகாப்பையும் கொடுத்தார். ஒன்றுசேர்க்கப்பட்ட ஷாவையும் சன்ட்டலையும் இந்தப் பக்கத்திலுள்ள ஒரு படத்தில் நீங்கள் காணலாம்; பிரிஸ்கில்லாளும் ஆக்கில்லாவும் அப்போஸ்தலனாகிய பவுலுக்கு செய்ததுபோல, ஹூட்டூ உடன் வணக்கத்தார் ‘தங்கள் கழுத்தைக் கொடுத்ததற்காக’ இவர்கள் நன்றியுள்ளவர்களாக இருக்கிறார்கள்.—ரோமர் 16:3, 4.
18 ரூவாகபுபு என்ற மற்றொரு ஹூட்டூ சாட்சி, டூட்ஸி இனத்து உடன் விசுவாசிகளைப் பாதுகாத்ததற்காக என்டாரமாரா என்ற செய்தித்தாளினால் புகழப்பட்டார்.a அது கூறியதாவது: “யெகோவாவின் சாட்சிகளில் ஒருவராகிய ரூவாகபுபு தன்னுடைய சகோதரர்கள் (இப்படித்தான் உடன் விசுவாசிகள் ஒருவரையொருவர் அழைத்துக்கொள்வார்கள்) மத்தியிலிருந்த ஆட்களை இங்குமங்கும் தொடர்ந்து ஒளித்து வந்தார். அவர் ஒரு ஆஸ்துமா நோயாளியாக இருந்தபோதிலும் அவர்களுக்காக உணவையும் குடிநீரையும் கொண்டுசெல்வதற்கு முழுநாளையும் செலவழிப்பது வழக்கம். ஆனால் கடவுள் அவரை அசாதாரண விதத்தில் பலப்படுத்தினார்.”
19 நிக்கடோம் மற்றும் அட்டனாசே என்ற பெயருள்ள அக்கறையுடைய ஹூட்டூ தம்பதியினரையும் சிந்தித்துப்பாருங்கள். இன அழிவு ஆரம்பிப்பதற்கு முன்பாக, திருமணமான இந்தத் தம்பதியினர் அல்ஃபோன்ஸ் என்ற பெயருடைய டூட்ஸி சாட்சி ஒருவருடன் பைபிளைப் படித்துக்கொண்டிருந்தார்கள். தங்களுடைய உயிரைப் பணயம் வைத்து, அல்ஃபோன்ஸை தங்களுடைய வீட்டில் மறைத்து வைத்தார்கள். தங்களுடைய வீடு பாதுகாப்பான இடமல்ல என்பதை பின்பு அவர்கள் உணர்ந்தார்கள், ஏனென்றால் அவர்களுடைய ஹூட்டூ அயலகத்தார் டூட்ஸி நண்பரைப் பற்றி அறிந்திருந்தார்கள். ஆகையால், நிக்கடோமும் அட்டனாசேயும் தங்களுடைய முற்றத்திலுள்ள ஒரு பொந்தில் அல்ஃபோன்ஸை மறைத்துவைத்தார்கள். இவ்வாறு இடமாறியது ஒரு நல்ல காரியமாக இருந்தது, ஏனென்றால் அந்த அயலகத்தார் ஏறக்குறைய ஒவ்வொரு நாளும் அல்ஃபோன்ஸை தேடிவர ஆரம்பித்தார்கள். இந்தப் பொந்தில் 28 நாட்களாக பதுங்கியிருந்தபோது, பைபிள் விவரப்பதிவுகளை அல்ஃபோன்ஸ் தியானம் செய்தார்; அவற்றில் ஒன்று எரிகோவில் ராகாப் தன்னுடைய வீட்டு கூரையில் இரண்டு இஸ்ரவேலரை ஒளித்துவைத்திருந்ததைப் பற்றியதாகும். (யோசுவா 6:17) இன்று அல்ஃபோன்ஸ் ருவாண்டாவில் நற்செய்தியைப் பிரசங்கிக்கும் ஒருவராக தன்னுடைய சேவையை தொடர்ந்து செய்கிறார், அவருக்காக தங்களுடைய உயிரையே ஆபத்திற்குள்ளாக்கிய அவருடைய ஹூட்டூ பைபிள் மாணாக்கருக்காக நன்றியுள்ளவராய் இருக்கிறார். நிக்கடோமையும் அட்டனாசேயையும் பற்றியென்ன? அவர்கள் இப்பொழுது யெகோவாவின் முழுக்காட்டுதல் பெற்ற சாட்சிகளாய் இருக்கிறார்கள், மேலும் அக்கறையுள்ள நபர்களுடன் 20-க்கும் மேற்பட்ட பைபிள் படிப்புகளை நடத்துகிறார்கள்.
20. ருவாண்டாவிலுள்ள நம்முடைய சகோதரர்களை என்ன வழியில் யெகோவா ஆறுதல்படுத்தியிருக்கிறார், ஆனால் என்ன தொடர்ச்சியான தேவை அவர்களில் அநேகருக்கு இருக்கிறது?
20 ருவாண்டாவில் இன அழிவு ஆரம்பமான சமயத்தில், அந்த நாட்டில் 2,500 பேர் நற்செய்தியை அறிவிப்போராக இருந்தார்கள். நூற்றுக்கணக்கானோர் தங்களுடைய உயிரை இழந்தபோதிலும் அல்லது அந்நாட்டை விட்டு தப்பிச்செல்லும்படி கட்டாயப்படுத்தப்பட்டபோதிலும், சாட்சிகளுடைய எண்ணிக்கை 3,000-க்கும் மேலாக உயர்ந்தது. நம்முடைய சகோதரர்களுக்கு கடவுள் உண்மையிலேயே ஆறுதலளித்தார் என்பதற்கு அது நிரூபணமாயிருக்கிறது. யெகோவாவின் சாட்சிகள் மத்தியில் அனாதைகளாகவும் விதவைகளாகவும் இருக்கிற அநேகரைப் பற்றியென்ன? இயல்பாகவே, இவர்கள் இன்னும் உபத்திரவத்தை அனுபவிக்கிறார்கள், அவர்களுக்கு தொடர்ந்து ஆறுதல் தேவை. (யாக்கோபு 1:27) கடவுளுடைய புதிய உலகில் உயிர்த்தெழுதல் நடைபெறும்போது அவர்களுடைய கண்ணீர் முழுமையாக துடைக்கப்படும். என்றபோதிலும், தங்கள் சகோதரர்களுடைய தொண்டின் காரணமாகவும், ‘சகல ஆறுதலின் தேவனுடைய’ வணக்கத்தாராக இருப்பதன் காரணமாகவும் வாழ்க்கையை அவர்களால் சமாளிக்க முடிகிறது.
21. (அ) வேறு எந்த இடங்களில் நம்முடைய சகோதரர்கள் கடவுளுடைய ஆறுதலுக்கான அவசரத் தேவையில் இருந்துவருகிறார்கள், நாமனைவரும் உதவிசெய்யக்கூடிய ஒரு வழி என்ன? (“நான்காண்டுகால போரின்போது ஆறுதல்” என்ற பெட்டியைக் காண்க.) (ஆ) ஆறுதலுக்கான நம்முடைய தேவை எப்போது பூரணமாக திருப்திசெய்யப்படும்?
21 எரித்ரியா, சிங்கப்பூர், முன்னாள் யுகோஸ்லாவியா போன்ற மற்றநேக இடங்களில், உபத்திரவத்தின் மத்தியிலும் நம்முடைய சகோதரர்கள் யெகோவாவை தொடர்ந்து உண்மையுடன் சேவைசெய்து வருகிறார்கள். அவர்கள் ஆறுதலைப் பெற்றுக்கொள்வதற்கு தவறாமல் விண்ணப்பங்கள் செய்வதன் மூலம் இப்படிப்பட்ட சகோதரர்களுக்கு உதவிசெய்வோமாக. (2 கொரிந்தியர் 1:11) இயேசு கிறிஸ்துவின் மூலமாக முழு கருத்தில் கடவுள் ‘[நம்முடைய] கண்ணீர் யாவையும் துடைக்கும்’ சமயம் வரும்வரை நாம் உண்மையுடன் சகித்திருப்போமாக. கடவுள் தம்முடைய நீதியுள்ள புதிய உலகில் அளிக்கப்போகும் ஆறுதலை முழு அளவில் பின்பு நாம் அனுபவிப்போம்.—வெளிப்படுத்துதல் 7:17; 21:4; 2 பேதுரு 3:13.
[அடிக்குறிப்பு]
a காவற்கோபுரம், ஜனவரி 1, 1995, பக்கம் 26, ரூவாகபுபுவின் மகள் டெபராவின் அனுபவத்தை விவரித்தது. அவளுடைய ஜெபம் ஹூட்டூ படைவீரர்களுடைய ஒரு தொகுதியினரின் மனதைத் தொட்டது; இது கொலைசெய்யப்படுவதிலிருந்து அந்தக் குடும்பத்தைப் பாதுகாத்தது.
உங்களுக்குத் தெரியுமா?
◻ ஏன் யெகோவா ‘சகல ஆறுதலின் தேவன்’ என்று அழைக்கப்படுகிறார்?
◻ உபத்திரவங்களை நாம் எவ்வாறு நோக்க வேண்டும்?
◻ நாம் யாருடன் ஆறுதலைப் பகிர்ந்துகொள்ள முடியும்?
◻ ஆறுதலுக்கான நம்முடைய தேவை எவ்வாறு பூரணமாக திருப்திசெய்யப்படும்?
[பக்கம் 17-ன் படம்]
ஷாவும் சன்ட்டலும், டூட்ஸி சாட்சிகளாக இருந்தபோதிலும், ருவாண்டாவில் நடந்த இன அழிவின்போது ஹூட்டூ சாட்சிகளால் தனித் தனி இடங்களில் மறைத்துவைக்கப்பட்டார்கள்
[பக்கம் 17-ன் படம்]
யெகோவாவின் சாட்சிகள் ருவாண்டாவிலுள்ள தங்களுடைய அயலகத்தாருடன் கடவுளுடைய ஆறுதலளிக்கும் செய்தியை தொடர்ந்து பகிர்ந்துகொள்கிறார்கள்