உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • w94 12/15 பக். 26-29
  • ருவாண்டாவில் அவலம்—யார் பொறுப்பு?

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • ருவாண்டாவில் அவலம்—யார் பொறுப்பு?
  • காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1994
  • துணை தலைப்புகள்
  • இதே தகவல்
  • ஹூட்டூக்கள் மற்றும் டூட்ஸிகள்
  • யார் பொறுப்பு?
  • மதத்தின் பாகம்
  • உண்மைக் கிறிஸ்தவர்கள் வித்தியாசப்பட்டவர்கள்
  • ருவாண்டாவின் அவலத்திற்கு பலியானவர்களைக் கவனித்தல்
    விழித்தெழு!—1994
  • பிறரிடம் அன்பு காட்டாதது ஏன்?
    விழித்தெழு!—1998
  • யெகோவா தரும் ஆறுதலை பகிர்ந்துகொள்ளுதல்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1996
  • ஜனங்கள் எல்லாரும் ஒருவரையொருவர் நேசிக்கும் காலம் வருமா?
    ஜனங்கள் எல்லாரும் ஒருவரையொருவர் நேசிக்கும் காலம் வருமா?
மேலும் பார்க்க
காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1994
w94 12/15 பக். 26-29

ருவாண்டாவில் அவலம்—யார் பொறுப்பு?

“23 வயதுள்ள மெக்கானிக்கின் தலை வெட்டப்படுவதற்கு முந்தின கணத்தில், தாக்கியவர்களில் ஒருவன் ஹிட்டியிஸெயிடம் சொன்னான்: ‘நீ ஒரு டூட்ஸியாக இருப்பதால் சாக வேண்டும்,’” என்று ஐ.மா.செய்தி மற்றும் உலக அறிக்கை (ஆங்கிலம்) சொன்னது.

ஏப்ரல், மே மாதங்களில் மத்திய ஆப்பிரிக்க நாடாகிய ருவாண்டாவில் அப்படிப்பட்ட ஒரு காட்சி எவ்வளவு அடிக்கடி மீண்டும்மீண்டுமாகக் காணப்பட்டது! அந்தச் சமயத்தில், தலைநகராகிய கிகலியிலும் அதைச் சுற்றிலும் யெகோவாவின் சாட்சிகளின் சபைகள் 15 இருந்தன. நகரக் கண்காணியாகிய டாபானா இயூஷன் ஒரு டூட்ஸியாக இருந்தார். குற்றச்செயலின் சீற்றம் பொங்கியெழுந்தபோது கொல்லப்பட்ட முதல் ஆட்களில் அவர், அவருடைய மனைவி, அவருடைய மகன், அவருடைய ஒன்பது வயது மகள் ஷாமி ஆகியோர் அடங்குவர்.

ருவாண்டாவைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானோர்—ஒவ்வொரு வாரமும்—தினசரி கொல்லப்பட்டார்கள். “மத்திப 1970-களில் சம்பவித்த கம்போடியாவின் கீமர் ரூஷின் அழிவுக்குரிய இரத்தஞ்சிந்துதலுக்கும் போட்டியாக இந்த இன அழிப்பு மற்றும் வஞ்சத்தீர்ப்பு நடவடிக்கையில் 2,50,000 பேர் அளவான பெரும் எண்ணிக்கையான மக்கள் கடந்த ஆறு வாரங்களில் மரித்திருக்கின்றனர்,” என்று மேலே மேற்கோள் காட்டப்பட்ட செய்திப்பத்திரிகை மே மாத மத்திபத்தில் அறிக்கை செய்தது.

டைம் பத்திரிகை சொன்னது: “நாசி ஜெர்மனியை நினைவுக்குக் கொண்டுவரும் காட்சி ஒன்றில், 500 பேராலான ஒரு தொகுதியிலிருந்து சில பிள்ளைகள் வெறுமனே பார்ப்பதற்கு டூட்ஸிகளைப் போல் இருந்தார்கள் என்பதற்காகத் தனியாகப் பிரித்தெடுக்கப்பட்டார்கள். . . . தெற்கத்திய நகராகிய பூடாரெயின் மேயர் ஒரு டூட்ஸியைத் திருமணம் செய்திருப்பவர்; ஹூட்டூ விவசாயிகளால், [வேதனையூட்டும் ஒரு] தெரிவு அவர்முன் வைக்கப்பட்டது: அவர் தன்னுடைய மனைவியின் குடும்பத்தாரை—அவர்களுடைய பெற்றோரையும் தங்கையையும்—கொல்லும்படி விட்டுக்கொடுத்தால் அவர் தன்னுடைய மனைவி மற்றும் பிள்ளைகளின் உயிரைக் காத்துக்கொள்ள முடியும். அவர் அதற்கு ஒத்துக்கொண்டார்.”

கிகலியிலுள்ள யெகோவாவின் சாட்சிகளுடைய மொழிபெயர்ப்பு அலுவலகத்தில் ஆறுபேர் பணி புரிந்தனர்; அவர்களில் நான்கு பேர் ஹூட்டூக்களாகவும் இருவர் டூட்ஸிகளாகவும் இருந்தனர். ஆனானி ம்பான்டா மற்றும் மூக்காகிஸாகாரா டனிஸ் ஆகியோர் டூட்ஸிகளாக இருந்தனர். படைத்துறையைச் சேர்ந்தவர்கள் கொள்ளையடிப்பவர்களோடுகூட அந்த வீட்டிற்கு வந்தபோது, அங்கு ஹூட்டூக்களும் டூட்ஸிகளும் ஒன்றுசேர்ந்து வசிப்பதைக் கண்டதும் கோபமடைந்தார்கள். ம்பான்டாவையும் டனிஸையும் அவர்கள் கொல்லவேண்டும் என்றிருந்தார்கள்.

“தங்களுடைய வெடிகுண்டுகளிலிருந்து ஊசிகளை எடுத்துவிட்டு வெடிக்க தயாராக்கி, எங்கள் மத்தியில் அவர்களுடைய பகைவரைக் கொண்டிருந்ததற்காக எங்களைக் கொல்லப்போவதாக அச்சுறுத்திக் கொண்டிருந்தார்கள். . . . அவர்கள் அதிக பணத்தைக் கேட்டனர். எங்களிடம் கிடைத்த எல்லா பணத்தையும் நாங்கள் அவர்களுக்குக் கொடுத்தும், அவர்கள் திருப்தி அடையவில்லை. எங்கள் மொழிபெயர்ப்பு வேலையில் பயன்படுத்திய லாப்டாப் கம்ப்யூட்டர் உட்பட, எங்கள் ஃபோட்டோகாப்பியர், எங்கள் ரேடியோக்கள், எங்கள் ஷூக்கள், போன்றவையான அவர்களால் பயன்படுத்தப்படக்கூடிய எல்லாவற்றையும் பதிலீடாக எங்களிடமிருந்து எடுத்துச் செல்ல தீர்மானித்தார்கள். எங்களில் ஒருவரையும் கொல்லாமல் திடீரென்று விட்டுச்சென்றார்கள்; ஆனால் அவர்கள் திரும்பவும் வருவதாகச் சொன்னார்கள்,” என்று ஹூட்டூ சகோதரர்களில் ஒருவரான ஏம்மான்வெல் ங்கிரென்டெ கூறினார்.

தொடர்ந்துவந்த நாட்களில், கொள்ளையடிப்பவர்கள் திரும்பவும் திரும்பவும் வந்தார்கள்; ஒவ்வொரு முறையும் ஹூட்டூ சாட்சிகள் தங்களுடைய டூட்ஸி நண்பர்களின் உயிர்களுக்காகக் கெஞ்சினார்கள். கடைசியாக ம்பான்டாவும் டனிஸும் அங்கு இனிமேலும் தங்குவது அதிக ஆபத்தானபோது, மற்ற டூட்ஸி அகதிகளுடன் அருகாமையில் உள்ள ஒரு பள்ளிக்குச் செல்லும்படி ஏற்பாடுகள் செய்யப்பட்டன. அந்தப் பள்ளி தாக்கப்பட்டபோது, ம்பான்டாவும் டனிஸும் தப்பியோட முடிந்தது. அவர்களால் பல வழித்தடைகளைக் கடந்துசெல்ல முடிந்தது; ஆனால் முடிவாக, அவற்றில் ஒன்றில், எல்லா டூட்ஸிகளும் தனியாகக் கொண்டுசெல்லப்பட்டு ம்பான்டாவும் டனிஸும் கொல்லப்பட்டனர்.

அந்தப் படைவீரர்கள் மொழிபெயர்ப்பு அலுவலகத்திற்குத் திரும்பிவந்து, டூட்ஸி சாட்சிகள் போய்விட்டார்கள் என்பதைக் கண்டபோது, அந்தப் படைவீரர்கள் ஹூட்டூ சகோதரர்களைப் பயங்கரமாக அடித்தார்கள். பின்னர், அருகாமையில் சிறு பீரங்கி குண்டு ஒன்று வெடிக்க, அந்தச் சகோதரர்கள் எப்படியோ தங்கள் உயிர்தப்ப ஓடிவிட்டார்கள்.

நாடு முழுவதும் கொலைசெய்தல் தொடர்ந்தபோது, இறந்தவர்களின் எண்ணிக்கை சுமார் ஐந்து லட்சத்தைச் சென்றெட்டியது. கடைசியாக, ருவாண்டாவின் 80 லட்ச குடிமக்களில் 20 லட்சத்துக்கும் 30 லட்சத்துக்கும் இடைப்பட்டவர்கள் அல்லது அதற்கு அதிகமானோர் தங்கள் வீடுகளை விட்டுச்சென்றார்கள். அருகாமையிலுள்ள ஜயர் மற்றும் டான்ஜானியாவில் அவர்களில் அநேகர் அடைக்கலம் நாடினர். சில நூற்றுக்கணக்கான யெகோவாவின் சாட்சிகள் கொல்லப்பட்டனர்; நாட்டுக்கு வெளியே இருந்த முகாம்களுக்கு தப்பியோடியவர்களில் மற்றவர்கள் பலரும் உட்படுவர்.

என்றுமில்லாத இப்பேர்ப்பட்ட படுகொலையையும் வெளியேற்றத்தையும் தூண்டியது என்ன? இது தடுக்கப்பட்டிருக்க முடியுமா? இந்த வன்முறை எழும்புவதற்குமுன் என்ன நிலைமை இருந்தது?

ஹூட்டூக்கள் மற்றும் டூட்ஸிகள்

ருவாண்டாவும் அதன் அயல்நாடாகிய புருண்டியும், பொதுவாக குட்டையான, தடித்த பண்டூ மக்களான ஹூட்டூக்களாலும், பொதுவாக நெட்டையான செம்மேனியுள்ள வாட்டூஸி என்றும் அழைக்கப்பட்ட டூட்ஸிகளாலும் குடியேற்றப்பட்டவை. இரு நாடுகளிலும் மொத்த மக்கள்தொகையில் சுமார் 85 சதவீதம் ஹூட்டூக்களும் 14 சதவீதம் டூட்ஸிகளும் உள்ளனர். இந்த இனத் தொகுதிகளுக்கு இடையில் கலவரங்கள் 15-ம் நூற்றாண்டு வரையாகப் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. இருந்தாலும், பெரும்பாலுமாக அவர்கள் சமாதானமாக ஒன்றுசேர்ந்து வாழ்ந்திருக்கிறார்கள்.

“ஜயரிலிருந்து ஒருசில கிலோமீட்டர் கிழக்கே அமைந்திருக்கும் ரூகாண்டா கிராமத்தில் வாழும் 3,000 ஹூட்டூ மற்றும் டூட்ஸிகளைப் பற்றி, “நாங்கள் சமாதானமாக ஒன்றுசேர்ந்து வாழ்ந்துவந்தோம்,” என்று 29 வயது பெண்மணி ஒருவர் கூறினார். என்றபோதிலும், ஏப்ரலில் ஹூட்டூ குழுக்களால் நடத்தப்பட்ட திடீர் தாக்குதல்கள் அந்தக் கிராமத்திலுள்ள கிட்டத்தட்ட முழு டூட்ஸி மக்கள்தொகையையும் கொன்றுபோட்டன. தி நியூ யார்க் டைம்ஸ் விவரித்தது:

“இந்தக் கிராமத்தின் கதையே ருவாண்டாவின் கதையாகவும் இருக்கிறது: ஹூட்டூவும் டூட்ஸியும் ஒன்று சேர்ந்து வாழ்ந்துகொண்டும், கலப்பு திருமணங்களைச் செய்துகொண்டும், ஹூட்டூ யாரென்றும் டூட்ஸி யாரென்றும் கவலைப்படாமல் அல்லது அறியாமலும்கூட இருந்துவந்தனர்.

“பின்னர் ஏதோவொரு திடீர் மாற்றம் ஏற்பட்டது. ஏப்ரலில், நாடெங்குமுள்ள ஹூட்டூ கும்பல்கள் அங்குமிங்குமாக வன்முறை செயல்களில் தொடர்ந்து, டூட்ஸிகளைக் கண்ட இடத்திலெல்லாம் அவர்களைக் கொன்றார்கள். கொலைகள் துவங்கியபோது, டூட்ஸிகள் பாதுகாப்பிற்காக சர்ச்சுக்களுக்கு ஓடிப்போனார்கள். கும்பல்கள் பின்தொடர்ந்து, அடைக்கலம் புகுவதற்கான இடங்களை இரத்தம் சிதறப்பட்டுக் காணப்படும் புதைக்கும் இடங்களாக மாற்றிவிட்டன.”

இந்தக் கொலையைத் தூண்டியது எது? ஏப்ரல் 6 அன்று, கிகலியில் ஏற்பட்ட விமான விபத்து ஒன்றில், ஹூட்டூக்களாக இருந்த ருவாண்டா மற்றும் புருண்டியின் ஜனாதிபதிகளின் மரணமே இதற்குக் காரணம். இந்தச் சம்பவம் எப்படியோ டூட்ஸிகளின் படுகொலையை மட்டுமல்லாமல், அவர்களுக்குப் பரிதாபம் காட்டுவதாக எண்ணப்பட்ட எந்தவொரு ஹூட்டூவையும் கொலைசெய்வதை ஏவிவிட்டது.

அதேநேரத்தில், கலக சக்திகளுக்கும்—டூட்ஸிகளை அதிகமாகக் கொண்ட R.P.F. (ருவாண்ட தேசப்பற்று அணி)—ஹூட்டூக்களை அதிகமாகக் கொண்ட அரசாங்க சக்திகளுக்கும் இடையில் சண்டை மும்முரமானது. ஜூலைக்குள்ளாக R.P.F. அணி, அரசாங்க சக்திகளைத் தோற்கடித்து கிகலியின்மீதும் ருவாண்டாவின் மீதிபாகத்தின் பெரும்பகுதியின்மீதும் ஆதிக்கத்தைப் பெற்றது. ஜூலை ஆரம்பத்தில், பழிவாங்கும் நடவடிக்கைகளுக்குப் பயந்து, ஹூட்டூக்கள் இலட்சக்கணக்கானோர் நாட்டைவிட்டுத் தப்பியோடினர்.

யார் பொறுப்பு?

ஏப்ரலில் திடீரென்று வன்முறை ஏன் எழும்பியது என்று விவரிக்கச் சொன்னபோது, டூட்ஸி விவசாயி ஒருவர் சொன்னார்: “கெட்ட தலைவர்களின் காரணமாக அது தொடங்கியது.”

உண்மையில், நூற்றாண்டுகளினூடே, அரசியல் தலைவர்கள் தங்கள் பகைவர்களைப் பற்றி பொய்களை பரப்பிவிட்டிருக்கின்றனர். “உலகத்தின் அதிபதி”யாகிய பிசாசாகிய சாத்தானின் வழிநடத்துதலின்கீழ், உலக அரசியல்வாதிகள் தங்கள் சொந்த மக்கள் மற்றொரு இனம், குலமரபு அல்லது தேசத்தைச்சேர்ந்த மக்களுக்கு விரோதமாகச் சண்டைபோட்டுக் கொலை செய்யும்படி தூண்டுவித்திருக்கிறார்கள். (யோவான் 12:31; 2 கொரிந்தியர் 4:4; 1 யோவான் 5:19) ருவாண்டாவில் நிலைமை எவ்வளவும் வித்தியாசமானதாக இல்லை. தி நியூ யார்க் டைம்ஸ் சொன்னது: “அரசியல்வாதிகள் இனசம்பந்தமான உண்மைத்தன்மையையும் இனசம்பந்தமான பயங்களையும் வளர்ப்பதற்காக மீண்டும் மீண்டும் முயன்றிருக்கிறார்கள்—ஹூட்டூக்களின் காரியத்தில் அரசாங்கத்தை ஆதிக்கத்தில் வைத்திருப்பதற்கும், டூட்ஸியின் காரியத்தில், கலக அணிக்கு ஆதரவைத் திரட்டுவதற்கும் முயன்றிருக்கிறார்கள்.”

ருவாண்டாவிலுள்ள மக்கள் பல வழிகளில் ஒரேவிதமாக இருப்பதால், அவர்கள் ஒருவரையொருவர் பகைத்து, கொலை செய்வார்கள் என்று எவரும் ஒருபோதும் எதிர்பார்க்கமாட்டார்கள். “ஹூட்டூக்களும் டூட்ஸிகளும் ஒரே மொழியைப் பேசுகிறார்கள்; பொதுவாக ஒரே பாரம்பரியங்களைக் கொண்டிருக்கிறார்கள்,” என்று ரேமண்ட் பானர் என்ற அறிக்கையாளர் எழுதினார். “பல சந்ததிகளாக கலப்புத் திருமணங்களுக்குப்பின், உடல்சார்ந்த வேறுபாடுகளும்—நெட்டையும் ஒல்லியுமான டூட்ஸி, குட்டையும் பருமனுமான ஹூட்டூ—ஆகியவை பெரும்பாலும் ஒருவர் ஹூட்டூவா டூட்ஸியா என்று ருவாண்டர்களால் அடையாளம் காணமுடியாத அளவுக்கு மறைந்துவிட்டிருக்கின்றன.”

இருந்தாலும், சமீபத்திய சரமாரியான பிரச்சாரம், நம்பமுடியாத ஒரு பாதிப்பை ஏற்படுத்தி வந்திருக்கிறது. இந்தக் காரியத்தை விளக்குவதாய், ஆப்பிரிக்க உரிமைகள் தொகுதியின் இயக்குநராகிய ஆலக்ஸ் டி வால் சொன்னார்: “டூட்ஸி படைவீரர்களுக்குக் கொம்புகளும், வால்களும், இருட்டில் ஜொலிக்கும் கண்களும் இல்லை என்பதைக் கண்டு R.P.F.-ஆல் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளிலுள்ள குடியானவர்கள் ஆச்சரியப்பட்டதாக அறிக்கை செய்யப்பட்டது—அவர்கள் கேட்கிற வானொலி ஒலிபரப்புகளில் அவர்கள் அவ்வாறே விவரிக்கப்பட்டிருந்தனர்.”

அரசியல் தலைவர்கள் மட்டுமல்லாமல் மதமும் மக்களுடைய சிந்தனையை உருவமைக்கிறது. ருவாண்டாவின் முக்கிய மதங்கள் யாவை? இந்த அவலத்திற்கு அவையும் பொறுப்பாக இருந்திருக்கின்றனவா?

மதத்தின் பாகம்

ருவாண்டாவைப் பற்றி தி உவர்ல்ட் புக் என்ஸைக்ளோப்பீடியா (1994) சொல்கிறது: “பெரும்பாலான மக்கள் ரோமன் கத்தோலிக்கர்கள். . . . ரோமன் கத்தோலிக்க சர்ச்சுகளும் மற்ற கிறிஸ்தவ சர்ச்சுகளும் பெரும்பாலான தொடக்க மற்றும் உயர்நிலைப்பள்ளிகளை நடத்துகின்றன.” உண்மையில், நேஷனல் கேத்தலிக் ரிப்போர்ட்டர் ருவாண்டாவை “70% கத்தோலிக்க நாடு” என்பதாக அழைத்தது.

கிரேட் பிரிட்டனின் தி அப்ஸர்வர், இவ்வாறு விளக்குவதன்மூலம் ருவாண்டாவிலுள்ள நிலைமையின் பின்னணியை அளிக்கிறது: “1930-களில், கல்வி அமைப்பின் மீதான ஆதிக்கத்திற்காகச் சர்ச்சுகள் போராடிக்கொண்டிருந்தபோது, டூட்ஸிகளின் உயர்குடியாட்சிக்கு ஆதரவாகக் கத்தோலிக்கர்களும், ஒடுக்கப்பட்ட பெரும்பான்மையினரான ஹூட்டூகளுடன் புராட்டஸ்டன்டினரும் சேர்ந்துகொண்டனர். ஹூட்டூக்கள் 1959-ல் அதிகாரத்தைக் கைப்பற்றி, கத்தோலிக்கர் மற்றும் புராட்டஸ்டன்டினரின் ஆதரவை விரைவில் அனுபவிக்கலாயினர். பெரும்பான்மையினரான ஹூட்டூக்களுக்கு புராட்டஸ்டன்டினரின் ஆதரவு மிக பலமாக தொடர்ந்திருக்கிறது.”

உதாரணமாக, புராட்டஸ்டன்ட் சர்ச் தலைவர்கள், படுகொலைகளைக் கண்டனம் செய்திருக்கிறார்களா? தி அப்ஸர்வர் பதிலளிக்கிறது: “தலைகள் வெட்டப்பட்ட பிள்ளைகளால் ருவாண்டாவின் சர்ச்சுகளுடைய பக்கப்பகுதிகளை நிரப்பியிருக்கும் கொலைக்காரர்களைக் கண்டனம் செய்தார்களா என்று சர்ச் அங்கத்தினர் இருவர் [ஆங்கிலிக்கர்கள்] கேட்கப்பட்டார்கள்.

“அவர்கள் பதிலளிக்க மறுத்தார்கள். அவர்கள் கேள்விகளிலிருந்து நழுவிக்கொண்டும், கோபமடைந்தும், அவர்களுடைய குரல்கள் உச்சதொனிக்கும்கூட செல்வதாயும் இருந்ததில், ருவாண்டாவின் நெருக்கடியின் மூல காரணம் தெளிவாகப் புலப்பட்டது—கொலையைப் பிரசங்கித்து ஆறுகளை இரத்தத்தால் நிரப்பியிருக்கும் அரசியல் எஜமான்களுக்கு ஆங்கிலிக்கன் சர்ச்சின் மிகவும் மூத்த அங்கத்தினர்கள் தூதுவர்களாகச் செயல்பட்டுக்கொண்டிருந்தனர்.”

உண்மையில், ருவாண்டாவிலுள்ள கிறிஸ்தவமண்டல சர்ச்சுகள் மற்ற இடங்களிலுள்ள சர்ச்சுகளிலிருந்து எவ்விதத்திலும் வித்தியாசப்பட்டவையாக இல்லை. உதாரணமாக, முதல் உலகப் போரில் அவை அரசியல் தலைவர்களுக்கு ஆதரவளித்ததைக் குறித்து, பிரிட்டிஷ் படைப்பகுதித் தளபதி ஃபிராங்க் P. க்ரோஷர் சொன்னார்: “கிறிஸ்தவ சர்ச்சுகளே நாம் கொண்டிருக்கும் மற்றும் நாம் நன்கு பயன்படுத்திக்கொண்ட, இரத்தம் சிந்துதலின் மிகச் சிறந்த ஊக்குவிப்புகளாகும்.”

ஆம், என்ன சம்பவித்திருக்கிறதோ அதற்கு மதத் தலைவர்கள் பெருமளவிற்கு பொறுப்புள்ளவர்களாய் இருக்கிறார்கள்! ஜூன் 3, 1994-ன் நேஷனல் கேத்தலிக் ரிப்போர்ட்டர் இவ்வாறு அறிக்கை செய்தது: “ஆப்பிரிக்க தேசத்திலுள்ள சண்டை, ‘கவலைக்குரியவிதத்தில் கத்தோலிக்கர்கூட பொறுப்பாகி இருக்கும் ஒரு நிஜமான மற்றும் உண்மையான இன அழிவை’ உட்படுத்துகிறது என்று போப் சொன்னார்.”

ஏசாயா 2:4 மற்றும் மத்தேயு 26:52 போன்ற வசனங்களின் அடிப்படையிலான உண்மைக் கிறிஸ்தவ நியமங்களைக் கற்பிக்க தெளிவாகவே சர்ச்சுகள் தவறி இருக்கின்றன. பிரஞ்சு செய்தித்தாளாகிய ல மான்ட்டின்படி, ஒரு மத குரு இவ்வாறு வருத்தம் தெரிவித்தார்: “அவர்கள் சகோதரர்கள் என்பதை முழுமையாக மறந்துவிட்டு, ஒருவரையொருவர் வெட்டித் தள்ளுகிறார்கள்.” ருவாண்டாவின் மற்றொரு மத குரு இவ்வாறு ஒத்துக்கொண்டார்: “ஒரு நூற்றாண்டாக அன்பு மற்றும் மன்னிப்பைப் பற்றிய பிரசங்கங்களுக்குப்பின், கிறிஸ்தவர்கள் மற்ற கிறிஸ்தவர்களால் கொல்லப்பட்டிருக்கிறார்கள். அது ஒரு தோல்வியாக இருந்திருக்கிறது.” ல மான்ட் கேட்டது: “புருண்டியிலும் ருவாண்டாவிலும் போராடிக்கொண்டிருக்கும் டூட்ஸிகளும் ஹூட்டூக்களும் ஒரே கிறிஸ்தவ மிஷனரிகளால் பயிற்றுவிக்கப்பட்டு ஒரே சர்ச்சுகளுக்குச் சென்றார்கள் என்று எப்படி நினைக்காமல் இருக்கமுடியும்?”

உண்மைக் கிறிஸ்தவர்கள் வித்தியாசப்பட்டவர்கள்

இயேசு கிறிஸ்துவை உண்மையாகப் பின்பற்றுகிறவர்கள் “ஒருவரிலொருவர் அன்பாயிருங்கள்” என்ற அவருடைய கட்டளைக்கு இசைந்து செல்லுகிறார்கள். (யோவான் 13:34) இயேசுவோ அவருடைய அப்போஸ்தலர்களில் ஒருவரோ வெட்டுக்கத்தி ஒன்றை எடுத்துக்கொண்டு யாரையாவது வெட்டுவதை உங்களால் யோசித்துப் பார்க்க முடியுமா? அப்படிப்பட்ட சட்டவரம்பற்ற கொலை, மக்களைப் ‘பிசாசின் பிள்ளைகளாக’ அடையாளம் காட்டுகிறது.—1 யோவான் 3:10-12.

என்னவாயினும்சரி, யெகோவாவின் சாட்சிகள் போர்களில், புரட்சிகளில், அல்லது பிசாசாகிய சாத்தானின் ஆதிக்கத்தின்கீழ் இருக்கும் உலக அரசியல்வாதிகளால் முன்னேற்றுவிக்கப்பட்ட மற்ற எந்தச் சச்சரவுகளிலும் எந்தப் பாகமும் ஏற்பதில்லை. (யோவான் 17:14, 16; 18:36; வெளிப்படுத்துதல் 12:9) மாறாக, யெகோவாவின் சாட்சிகள் ஒருவருக்கொருவர் உண்மையான அன்பை வெளிக்காட்டுகிறார்கள். இதனால், அந்தப் படுகொலைகளின்போது, ஹூட்டூ சாட்சிகள் தங்களுடைய டூட்ஸி சகோதரர்களைப் பாதுகாக்கும் முயற்சிகளில் தங்கள் உயிர்களுக்கு வரும் ஆபத்தைப் பொருட்படுத்தாமல் மனமுவந்து செயல்பட்டார்கள்.

இருந்தாலும், அப்படிப்பட்ட அவலங்களைக் குறித்து ஆச்சரியப்படுவதற்கில்லை. ‘காரிய ஒழுங்குமுறையின் முடிவை’ பற்றிய இயேசுவின் தீர்க்கதரிசனத்தில் அவர் முன்னறிவித்தார்: ‘அப்பொழுது மக்கள் . . . உங்களைக் கொலை செய்வார்கள்.’ (மத்தேயு 24:3, 9, NW) மகிழ்ச்சிக்குரியவிதத்தில், உண்மையுள்ளவர்கள் மரித்தோரின் உயிர்த்தெழுதலில் நினைவுகூரப்படுவார்கள் என்று இயேசு வாக்களிக்கிறார்.—யோவான் 5:28, 29.

அதேநேரத்தில், ருவாண்டாவிலும் மற்றும் எவ்விடத்திலும் உள்ள யெகோவாவின் சாட்சிகள் ஒருவரையொருவர் அன்புகூருவதன்மூலம் தொடர்ந்து தங்களைக் கிறிஸ்துவின் சீஷர்களாக நிரூபிக்கும்படி தீர்மானமாய் இருக்கிறார்கள். (யோவான் 13:35) உடன் சேர்க்கப்பட்டுள்ள “அகதிகள் முகாம்களில் சாட்சிகள்” என்ற அறிக்கை காண்பிக்கிறபடி, தற்போதைய கடினமான சூழ்நிலைகளின் மத்தியிலும்கூட அவர்களுடைய அன்பு சாட்சி பகருகிறது. இயேசு தம்முடைய தீர்க்கதரிசனத்தில் சொன்னதை நாம் அனைவரும் நினைவுகூரவேண்டும்: “முடிவுபரியந்தம் நிலைநிற்பவனே இரட்சிக்கப்படுவான்.”—மத்தேயு 24:13.

[பக்கம் 29-ன் பெட்டி]

அகதிகள் முகாம்களில் சாட்சிகள்

இந்த வருடம் ஜூலையில், சுமார் 4,700 சாட்சிகளும் அவர்களுடைய கூட்டாளிகளும் அகதி முகாம்களில் இருந்தனர். ஜயரில், 2,376 பேர் கோமாவிலும், 454 பேர் புகாவுவிலும், 1,592 பேர் யூவிராவிலும் இருந்தனர். மேலுமாக, டான்ஜானியாவில் சுமார் 230 பேர் பெனாகோவிலும் இருந்தனர்.

வெறுமனே அகதி மையங்களுக்குச் செல்வது எளிதல்ல. 60 சாட்சிகளை உடைய ஒரு சபை ரூஸூமோ பாலத்தைக் கடக்க முயன்றது; அது டான்ஜானியாவிலுள்ள அகதி முகாம்களுக்குத் தப்பிச் செல்வதற்கான முக்கிய வழி. அவ்வாறு அவர்கள் கடந்து செல்வது தடைசெய்யப்பட்டபோது, அவர்கள் ஒரு வாரமாக அந்த நதிக்கரையோரங்களில் அலைந்துதிரிந்தனர். பின்னர் அவர்கள் படகுகள் வாயிலாக கடக்க முயலும்படி தீர்மானித்தனர். அவர்கள் அதில் வெற்றிபெற்று, ஒருசில நாட்கள் கழித்து, டான்ஜானியாவிலுள்ள முகாமை பத்திரமாகச் சென்றடைந்தனர்.

மற்ற நாடுகளிலுள்ள யெகோவாவின் சாட்சிகள் பெரிய நிவாரண முயற்சிகளுக்கு ஏற்பாடுகளைச் செய்தனர். பிரான்ஸிலுள்ள சாட்சிகள், நூறு டன்னுக்கும் மேலான துணிமணிகளையும் ஒன்பது டன் ஷூக்களையும் சேகரித்தனர்; அப்படிப்பட்ட தரவுகள், ஊட்டச் சத்துள்ள பொருட்கள் மற்றும் மருந்துகளுடன் சேர்த்து தேவையிருக்கும் பகுதிகளுக்கு அனுப்பப்பட்டன. என்றபோதிலும், பெரும்பாலும் அகதி முகாம்களில் இருந்த சகோதரர்கள் முதலில் கேட்டது என்னவென்றால், ஒரு பைபிள் அல்லது ஒரு காவற்கோபுரம் அல்லது விழித்தெழு! பத்திரிகையாக இருந்தது.

இடம் மாறி சென்றிருந்த இந்தச் சகோதரர்களைச் சந்தித்து உதவிய ஜயரிலும் டான்ஜானியாவிலுமுள்ள சாட்சிகளால் காண்பிக்கப்பட்ட அன்பால் அநேக பார்வையாளர்கள் கவரப்பட்டனர். “உங்கள் மதத்தைச் சேர்ந்த மக்கள் உங்களைச் சந்திக்க வருகிறார்கள், ஆனால் எங்களுடையதிலிருந்து ஒரு மத குருவும் எங்களை வந்து சந்திக்கவில்லை,” என்று அந்த அகதிகள் சொல்கிறார்கள்.

அந்தச் சாட்சிகள் தங்களுடைய ஒற்றுமை, கட்டுப்பாட்டுணர்வு, அன்பான மனநிலை ஆகியவற்றால் பெரும்பாலும் நன்கு அறியப்படலாயினர். (யோவான் 13:35) டான்ஜானியாவிலுள்ள பெனாகோவில், சுமார் 2,50,000 மக்கள் இருந்த முகாமில் சாட்சிகள் 15 நிமிடங்களிலேயே உடன் சாட்சிகளைக் கண்டுபிடித்துவிட்டார்கள் என்பது கவனிக்கத்தக்கதாகும்.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்