ருவாண்டாவின் அவலத்திற்கு பலியானவர்களைக் கவனித்தல்
ஆப்பிரிக்காவின் நடுப்பகுதியில் அமைந்துள்ள ருவாண்டா “ஆப்பிரிக்காவின் ஸ்விட்ஸர்லாந்து” என்று அழைக்கப்பட்டு வந்திருக்கிறது. நாட்டின் மேல் விமானத்தில் பறந்து செல்லும்போது மக்கள் காணும் வளமிக்க செடிகொடிகள் ஏதேன் தோட்டத்தை அவர்களுக்கு நினைப்பூட்டுகின்றன. ருவாண்டாவை ஒரு பரதீஸாக அவர்கள் வருணித்தது குறித்து ஆச்சரியப்படுவதற்கில்லை.
வெட்டப்பட்ட ஒவ்வொரு மரத்துக்கும் இரண்டு மரங்கள் ஒரு காலத்தில் நடப்பட்டன. வருடத்தில் ஒரு நாள் மரம் நடுவதற்காக ஒதுக்கப்பட்டது. சாலைகளின் ஓரங்களில் பழ மரங்கள் நடப்பட்டன. தேசத்தைச் சுற்றி பயணம் செய்வது கட்டுப்பாடில்லாமலும் சுலபமாகவும் இருந்தது. பல்வேறு ஆட்சியரங்கத் தலைவர்களின் பணிமனைகளைத் தலைநகரான கிகலியோடு இணைத்த பிரதான சாலை கருங்கல் சாலையாக இருந்தது. தலைநகரம் வேகமாக வளர்ந்துகொண்டு இருந்தது. மாதம் முடியும்போது தன் செலவுகளைச் சமாளிப்பதற்கு ஒரு சராசரி வேலையாள் போதுமானதைச் சம்பாதித்தான்.
யெகோவாவின் சாட்சிகளுடைய கிறிஸ்தவ நடவடிக்கையும்கூட ருவாண்டாவில் செழித்தோங்கியது. இந்த வருட ஆரம்பத்தில் 2,600-க்கும் மேற்பட்ட சாட்சிகள், பெரும்பான்மையர் கத்தோலிக்கர்களாக இருக்கும் தேசத்தில் 80 லட்சத்துக்கும் மேலான ஆட்களுக்கு ராஜ்யத்தைப் பற்றிய செய்தியைக் கொண்டுசெல்வதில் ஈடுபட்டிருந்தனர். (மத்தேயு 24:14) மார்ச் மாதத்தில் சாட்சிகள் 10,000-க்கும் மேலான பைபிள் படிப்புகளை மக்களின் வீடுகளில் நடத்திக்கொண்டிருந்தனர். கிகலியிலும் அதைச் சுற்றியும் 15 சபைகள் இருந்தன.
யெகோவாவின் சாட்சிகளுடைய பயணக் கண்காணி ஒருவர் சொன்னார்: “நவம்பர் 1992-ல் நான் 18 சபைகளுக்கு சேவை செய்துகொண்டிருந்தேன். ஆனால் மார்ச் 1994-ற்குள்ளாக இவை 27-ஆக அதிகரித்திருந்தன. பயனியர்களின் (முழுநேர ஊழியர்களின்) எண்ணிக்கையும் ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்துக்கொண்டிருந்தது. சனிக்கிழமை, மார்ச் 26, 1994 அன்று கிறிஸ்துவின் மரண நினைவு ஆசரிப்பு நாளுக்கு வருகை தந்திருந்தவர்களின் எண்ணிக்கை 9,834 ஆக இருந்தது.
பின்னர், திடீரென்று ருவாண்டாவில் நிலைமை சோகமயமாய் மாறியது.a
ஸ்தாபிக்கப்பட்ட ஒழுங்கின் திடீர் முடிவு
ஏப்ரல் 6, 1994, சுமார் 8:00 மணிக்கு, ஹூட்டூ இனத்தைச் சேர்ந்த ருவாண்டா மற்றும் புருண்டியின் ஜனாதிபதிகள் கிகலியில் விமான விபத்து ஒன்றில் கொல்லப்பட்டனர். அன்றிரவு தலைநகரம் எங்கிலும் போலீஸாரின் விசில் சப்தங்கள் கேட்டுக்கொண்டிருந்தன. சாலைகள் அடைக்கப்பட்டன. பின்னர் அதிகாலையில், படைவீரர்களும் வெட்டுக்கத்தி ஆயுதங்களோடு டூட்ஸிகளாக இருந்தவர்களைக் கொல்ல ஆரம்பித்தனர். டாபானா இயூஷன்—கிகலியில் யெகோவாவின் சாட்சிகளுடைய நகரக் கண்காணி—அவருடைய மனைவி, மகன், மகள் ஆகியோர் முதலில் படுகொலை செய்யப்பட்டவர்களுள் அடங்குவர்.
யெகோவாவின் சாட்சிகளுடைய ஒரு ஐரோப்பிய குடும்பத்தினர், டூட்ஸிகளாக இருந்த தங்கள் அயலார் அநேகரோடு பைபிள் படிப்பை நடத்திக்கொண்டிருந்தனர். கட்டுப்படுத்த முடியாத இந்த மூர்க்கத்தனமான கொலையாளிகள் வீடு வீடாகச் சென்ற போது அயலாரில் இந்த ஒன்பது பேர் ஐரோப்பியரின் இல்லத்தில் அடைக்கலம் புகுந்தார்கள்.
சில நிமிடங்களுக்குள் கிட்டத்தட்ட 40 கொள்ளைக்காரர்கள் வீட்டிற்கு வந்து பொருட்களை நொறுக்கிக்கொண்டு தட்டுமுட்டு சாமான்களையெல்லாம் கவிழ்த்துக்கொண்டிருந்தார்கள். வருந்தத்தக்க விதமாக, இந்த டூட்ஸி அயலகத்தார் கொல்லப்பட்டனர். எனினும், மற்றவர்கள் தங்கள் நண்பர்களைக் காப்பாற்ற முயற்சி செய்தபோதிலும் அவர்கள் மாத்திரமே தப்பித்துக்கொள்ள அனுமதிக்கப்பட்டார்கள்.
படுகொலை வாரக்கணக்கில் தொடர்ந்தது. முடிவில் மதிப்பீட்டின்படி 5,00,000 அல்லது அதற்கும் அதிகமான ருவாண்டா மக்கள் கொல்லப்பட்டிருந்தனர். ஆயிரக்கணக்கானோர் முக்கியமாக டூட்ஸி தங்கள் உயிர்களைப் பாதுகாத்துக்கொள்வதற்காக ஓடினர். யெகோவாவின் சாட்சிகளுடைய ஜயர் கிளை அலுவலம் பிரான்ஸிலுள்ள சகோதரர்களுக்கு நிவாரண உதவிப்பொருட்களின் தேவையைக் குறித்து தெரிவித்தது. “பயன்படுத்தப்பட்ட துணிமணிகள் கொண்ட ஒரு பெட்டியை மட்டுமே நாங்கள் கேட்டிருந்தோம்,” என்பதாக ஜயர் கிளை அலுவலகம் விளக்குகிறது. “பிரான்ஸிலுள்ள சகோதரர்கள் பெரும்பாலும் புதிய துணிமணிகள் மற்றும் காலணிகள் அடங்கிய ஐந்து பெட்டிகளை அனுப்பியுள்ளனர்.” ஜூன் 11 அன்று சுமார் 65 டன் துணிமணிகள் அனுப்பப்பட்டன. அகதிகளுக்குக் கென்யா கிளையும்கூட துணிமணிகளையும் மருந்துகளையும் அவர்களின் சொந்த மொழியில் காவற்கோபுர பத்திரிகைகளையும் அனுப்பி வைத்தது.
ஜூலைக்குள், ருவாண்டாவின் தேசாபிமான முற்போக்கு அணி என அழைக்கப்பட்ட டூட்ஸி ஆதிக்கம் செலுத்தும் படைகள், ஹூட்டு ஆதிக்கம் செலுத்திய அரசாங்கப் படைகளைத் தோற்கடித்தன. அதற்குப் பின், ஹூட்டு இனத்தவர் லட்சக்கணக்கில் நாட்டைவிட்டு வெளியேற ஆரம்பித்தனர். அண்டை நாடுகளில் அவசரமாக அமைக்கப்பட்ட முகாம்களில் 20 லட்சத்திற்கும் மேலான ருவாண்டா மக்கள் புகலிடம் தேடியபோது குழப்பம் ஏற்பட்டது.
அவர்கள் ஒருவருக்கொருவர் உதவ முயன்றார்கள்
ஆனானி ம்பான்டா மற்றும் மூக்காகிஸாகாரா டனிஸ் என்பவர்கள் கிகலியிலுள்ள யெகோவாவின் சாட்சிகளின் மொழிபெயர்ப்பு அலுவலகத்தில் வேலைசெய்த ஆறு பேர்களில் இருவர் ஆவர். அவர்களுக்குப் பாதுகாப்பளிக்க ஹூட்டு சகோதரர்கள் எடுத்த முயற்சிகள் ஒருசில வாரங்களுக்கு மட்டுமே வெற்றிகரமாக இருந்தன. என்றபோதிலும், மே 1994-ன் முடிவில் இந்த இரண்டு டூட்ஸி சாட்சிகளும் கொல்லப்பட்டனர்.
தங்கள் சொந்த உயிரைப் பணயம் வைத்தோ தியாகம் செய்தோ, யெகோவாவின் சாட்சிகள் வித்தியாசமான இனப்பின்னணியிலிருந்து வரும் உடன் கிறிஸ்தவர்களைப் பாதுகாக்க முற்பட்டார்கள். (யோவான் 13:34, 35; 15:13) உதாரணமாக சான்டல் டூட்ஸியைச் சேர்ந்தவள். அவள் தங்கியிருந்த அரங்கத்தில் ஹூட்டுக்காக ருவாண்டாவின் தேசாபிமான முற்போக்கு அணியின் அங்கத்தினர்கள் தேடிக்கொண்டிருந்தபோது, அவளது ஹூட்டு நண்பர்களின் சார்பில் அவள் தலையிட்டாள். அவளின் முயற்சிகளைக் கண்டு அந்தக் கலகக்காரர்கள் எரிச்சலடைந்த போதிலும், “யெகோவாவின் சாட்சிகளான நீங்கள் உண்மையிலேயே ஒரு பலமான மற்றும் முறிக்கமுடியாத சகோதரத்துவத்தைக் கொண்டிருக்கிறீர்கள். இருப்பதிலேயே சிறந்த மதம் உங்களுடையதுதான்!” என ஒருவன் கூறினான்.”
இனவெறுப்பிலிருந்து விலகியிருத்தல்
ஆப்பிரிக்காவின் இந்தப் பகுதியில் ஆயிரக்கணக்கான வருடங்களாக இருந்துவரும் இனவெறுப்புகளுக்கு எதிராக யெகோவாவின் சாட்சிகள் மொத்தமாக பாதுகாப்பளிக்கப்பட்டிருக்கிறார்கள் என சொல்வதற்கில்லை. நிவராணப் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த பிரான்ஸிலிருந்து வந்த சாட்சி இவ்வாறு குறிப்பிட்டார்: “விவரித்துக் கூற முடியாத படுகொலைகளுக்குக் காரணமாக இருக்கும் வெறுப்பினால் கறைபடுத்தப்படுவதைத் தவிர்ப்பதற்காக அதிக முயற்சியை நம் கிறிஸ்தவ சகோதரர்களும்கூட எடுக்க வேண்டியவர்களாக இருக்கிறார்கள்.
“தங்கள் கண்களுக்கு முன்பாகவே தங்கள் குடும்பங்கள் படுகொலை செய்யப்படுவதைப் பார்த்த சகோதரர்களை நாங்கள் சந்தித்தோம். உதாரணமாக, ஒரு கிறிஸ்தவ சகோதரி இரண்டு நாட்களுக்கு முன்புதானே திருமணம் செய்திருந்தாள், அவளுடைய கணவன் கொல்லப்பட்டார். சில சாட்சிகள் தங்கள் பெற்றோர் மற்றும் பிள்ளைகள் கொல்லப்படுவதைக் கண் எதிரில் பார்த்தார்கள். இப்போது உகாந்தாவிலிருக்கும் ஒரு சகோதரி, தன் கணவன் உட்பட தன் முழு குடும்பமும் படுகொலை செய்யப்பட்டதைப் பார்த்தாள். யெகோவாவின் சாட்சிகளுடைய ஒவ்வொரு குடும்பத்தையும் மனரீதியிலும் உடல் ரீதியிலும் பாதித்திருக்கும் துன்பங்களை இது முக்கியப்படுத்திக் காட்டுகிறது.”
மொத்தமாக, சுமார் 400 யெகோவாவின் சாட்சிகள் இனக் கலவரத்தில் கொல்லப்பட்டிருக்கின்றனர். எனினும் இவர்களில் ஒருவர்கூட தங்கள் உடன் கிறிஸ்தவர்களால் கொல்லப்படவில்லை. ரோமன் கத்தோலிக்க மற்றும் புராட்டஸ்டன்ட் சர்ச்சுகளைச் சேர்ந்த டூட்ஸி மற்றும் ஹூட்டு அங்கத்தினர்கள் ஆயிரக்கணக்கானோரைப் படுகொலை செய்திருக்கின்றனர். ஆதாரம் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளபடி, யெகோவாவின் சாட்சிகள் உலகெங்கிலும் இந்த உலகத்தின் யுத்தங்கள், புரட்சிகள் மற்றும் எத்தகைய சர்ச்சைகளிலும் பங்கெடுப்பதில்லை.—யோவான் 17:14, 16; 18:36; வெளிப்படுத்துதல் 12:9.
விவரிக்க முடியாத துன்பம்
கடந்த கோடையில், கிட்டத்தட்ட நம்ப முடியாத மனித துயரங்களைப் பற்றிய திரைப்படங்களையும் புகைப்படங்களையும் உலகம் முழுவதிலுமுள்ள மக்கள் பார்த்தனர். அயல் நாடுகளுக்குள் லட்சக்கணக்கான ருவாண்டா அகதிகள் இடம் பெயர்ந்து செல்வதையும் சுகாதாரமற்ற நிலைமைகளின்கீழ் வாழ்வதையும் பார்க்கமுடிந்தது. பிரான்ஸிலிருந்து வந்த நிவாரணப் பணியாட்களின் குழுவைச் சேர்ந்த யெகோவாவின் சாட்சிகளில் ஒருவர் தன்னுடைய குழு ஜூலை 30-ல் பார்த்த நிலைமையைப் பின்வருமாறு விவரித்தார்.
“முற்றிலும் திகில் நிறைந்த காட்சிகளை நாங்கள் எதிர்ப்பட்டோம், அநேக கிலோமீட்டருக்கு பிணங்கள் சாலைகளில் வரிசையாக கிடந்தன. சமூக கல்லறைகள் ஆயிரக்கணக்கான பிணங்களால் நிரம்பி வழிந்தன. கலவரமடைந்த ஜனக்கூட்டத்தைக் கடந்துசெல்கையில், பிணங்கள் அருகே பிள்ளைகள் விளையாடிக்கொண்டிருக்க, துர்நாற்றம் சகிக்க முடியாததாக இருந்தது. உயிரோடிருந்த பிள்ளைகள் செத்துப்போன தங்கள் பெற்றோரின் பிணங்களைப் பற்றிக்கொண்டிருந்தனர். திரும்பத் திரும்ப பார்க்கப்பட்ட இத்தகைய காட்சிகள் மனதில் ஆழமாக பதிந்துவிடுகின்றன. முழுவதும் உதவியற்ற உணர்வினால் ஒரு நபர் நிலைகுலைந்துபோய் திகிலையும் பாழ்க்கடிப்பையும் பார்த்து மனம் நெகிழாமல் இருக்கமுடியாது.”
ஜூலை மத்தியில், ஜயருக்குள் பத்தாயிரக்கணக்கான அகதிகள் இடம்பெயர்ந்து சென்றபோது, ஜயரிலுள்ள யெகோவாவின் சாட்சிகள் எல்லைகளுக்குச் சென்று, தங்கள் கிறிஸ்தவ சகோதரர்களும் அக்கறையுள்ள ஆட்களும் தங்களை அடையாளம் கண்டுகொள்வதற்காக பைபிள் பிரசுரங்களைப் பிடித்துக்கொண்டு நின்றனர். ருவாண்டாவிலிருந்து வந்த அகதி சாட்சிகள் ஒன்றாகச் சேர்க்கப்பட்டு, அருகே இருந்த கோமாவில் உள்ள ராஜ்ய மன்றத்துக்கு அழைத்துச்செல்லப்பட்டு கவனித்துக்கொள்ளப்பட்டனர். மருந்துகளும் சரியான வசதிகளும் இல்லாதபோதிலும், மருத்துவ அனுபவமுள்ள சாட்சிகள் நோயுற்றவர்களின் துன்பத்தைக் குறைக்கக் கடினமாக உழைத்தார்கள்.
துன்பத்துக்கு உடனடியான பிரதிபலிப்பு
ஜூலை 22 வெள்ளிக்கிழமையன்று ஆப்பிரிக்காவிலிருந்து உதவி கேட்டு ஒரு செய்தியை பிரான்ஸிலிருந்த யெகோவாவின் சாட்சிகள் பெற்றார்கள். ருவாண்டாவிலிருந்து தப்பியோடும் கிறிஸ்தவ சகோதரர்களின் பரிதாபகரமான நிலைமையை அது விவரித்தது. செய்தியைப் பெற்றுக்கொண்ட ஐந்து அல்லது பத்து நிமிடங்களுக்குள்ளே, சகோதரர்கள் ஒரு சரக்கு விமானத்தில் அனைத்து நிவாரண உதவிப்பொருட்களையும் அனுப்பிவைக்க முடிவுசெய்தார்கள். தயாரிப்பு வேலைகள் வாரமுடிவில் தீவிரமாக செய்துமுடிக்கப்பட்டன. இத்தனை பெரிய நிவாரண வேலையை மிகக் குறைந்த காலத்திற்குள் ஒழுங்கமைப்பதில் அவர்களுக்கு அனுபவம் இல்லாதிருந்ததை முன்னிட்டுப் பார்க்கையில் அவர்களின் இந்தச் செயல் குறிப்பிடத்தக்கதாக இருந்தது.
நிவாரண நிதிக்கான தேவைக்குப் பிரமாண்டமான பிரதிபலிப்பு இருந்தது. பெல்ஜியத்திலும் பிரான்ஸிலும் ஸ்விட்ஸர்லாந்திலுமுள்ள சாட்சிகள் மட்டுமே 16,00,000-க்கும் அதிகமான அமெரிக்க டாலரை நன்கொடையாக அளித்தனர். உணவு, மருந்துகள், பிழைப்பதற்கான சாதனங்கள் உட்பட அனைத்து நிவாரண உதவிப்பொருட்களும் பிரான்ஸிலுள்ள லுவியாவிலும் பெல்ஜியத்திலுள்ள ப்ருஸ்ஸெல்ஸிலும் யெகோவாவின் சாட்சிகளுக்குச் சொந்தமான இடத்தில் அட்டைப்பெட்டிகளில் அடைக்கப்பட்டு மேலே பெயர் எழுதப்பட்டன. பெல்ஜியத்திலுள்ள ஆஸ்டென்டுக்குக் கொண்டுசெல்வதற்காக சரக்குகளைத் தயார்செய்வதற்கு இரவும் பகலும் சாட்சிகள் உழைத்தார்கள். அங்கே விமான நிலையத்தில், புதன்கிழமை ஜூலை 27 அன்று 35 டன்னுக்கும் மேலாக சரக்கு விமானத்தில் ஏற்றப்பட்டது. அடுத்த நாள் முக்கியமாக மருத்துவ உதவிப்பொருட்கள் குறைந்த அளவு அனுப்பப்பட்டன. இரண்டு நாட்களுக்குப் பின்பு, சனிக்கிழமையன்று, மற்றொரு விமானம் பலியாட்களுக்கு அதிகமான மருத்துவ உதவிப்பொருட்களை ஏற்றிச்சென்றது.
பெரும்சரக்கு சென்று சேருவதற்கு முன்பாகவே ஒரு மருத்துவர் உட்பட, பிரான்ஸிலிருந்த சாட்சிகள் கோமாவுக்குச் சென்றனர். டாக்டர் ஹென்றி டாலட் கோமாவுக்கு வந்தபோது ஏறக்குறைய 20 சாட்சிகள் காலரா நோயால் ஏற்கெனவே இறந்துவிட்டிருந்தனர். மற்றவர்கள் தினமும் இறந்துகொண்டிருந்தனர். சரக்கு 250 கிலோமீட்டர் தள்ளி புருண்டியிலிருந்த புஜும்புரா வழியாகக் கொண்டுசெல்லப்பட வேண்டியதாக இருந்ததால், அது ஜூலை 29, வெள்ளிக்கிழமை காலை வரை கோமாவுக்கு வந்து சேரவில்லை.
நோயைச் சமாளித்தல்
இதற்கிடையில், கோமாவில் சிறிய ராஜ்ய மன்றம் அமைந்திருந்த இடத்தில் சில 1,600 சாட்சிகள் மற்றும் அவர்களின் நண்பர்களும் சேர்ந்திருந்தார்கள். இந்த எல்லா ஆட்களுக்கும் ஒரே ஒரு கழிப்பறையும், குறைந்த அளவு உணவும் தண்ணீரே இல்லாமலும் இருந்தது. காலராவினால் பாதிக்கப்பட்ட அநேகர் ராஜ்ய மன்றத்துக்குள் அடைபட்டுக்கிடந்தார்கள். இறந்தவர்களின் எண்ணிக்கை உயர்ந்துகொண்டே போனது.
காலரா ஒரு நபரை முழுவதுமாக நீரிழக்கச் செய்கிறது. பார்வை மங்கலாகி, கண் மேல்நோக்கி மடிந்துபோகும். நேரத்தோடு இழந்த நீரைத் திரும்பப் பெறும் சிகிச்சை அளிக்கப்பட்டால், அந்த நபர் இரண்டு நாட்களில் குணமாகி விடுவார். எனவே கிடைக்கப்பெற்ற சிறிய அளவு மருந்தைப் பயன்படுத்தி சகோதரர்களின் இழந்த நீரை ஈடுசெய்வதற்கான முயற்சிகள் உடனடியாக மேற்கொள்ளப்பட்டன.
கூடுதலாக நோயுற்றவர்களைத் தனியாக வைப்பதற்கும் மற்றவர்களுக்கு நோய் பரவாமல் தடுப்பதற்கும் முயற்சிகளை சகோதரர்கள் எடுத்தனர். கோமாவில் இருந்த மோசமான நிலைமைகளிலிருந்து அகதிகளை மாற்றுவதற்கு முயன்றனர். காற்றினுள் எங்கும் பரவி இருந்த பிணங்களின் நாற்றத்திலிருந்தும் தூசியிலிருந்தும் பாதுகாக்கப்பட்ட கிவு ஏரி அருகே தகுந்த ஓரிடம் கண்டுபிடிக்கப்பட்டது.
கழிப்பறைகள் தோண்டப்பட்டன. சுகாதாரம் பற்றிய கண்டிப்பான விதிமுறைகள் வற்புறுத்தப்பட்டன. இவை கழிப்பறைக்குப் போய் வந்தப்பின் ஒருவரின் கைகளைக் குளோரின் கலந்த தண்ணீர் கொண்ட ஒரு பாத்திரத்தில் கழுவுவதை உட்படுத்தின. இந்த முன்னேற்பாடுகளின் முக்கியத்துவம் அழுத்திக்காட்டப்பட்டது, தங்களிடம் எதிர்பார்க்கப்பட்டதற்கு இணங்க செயல்பட்டனர். வெகு சீக்கிரத்தில் சாவுக்கேதுவான இந்த நோய் பரவாது குறைக்கப்பட்டது.
ஜூலை 29, வெள்ளியன்று நிவாரண உதவிப்பொருட்கள் வந்துசேர்ந்தபோது, கோமாவில் இருந்த ராஜ்ய மன்றத்தில் ஒரு சிறிய மருத்துவமனை அமைக்கப்பட்டது. மடக்கிவைக்கப்படக்கூடிய 60 கட்டில்களும் தண்ணீர் சுத்திகரிக்கும் அமைப்பு ஒன்றும் அமைக்கப்பட்டன. கூடுதலாக கிவு ஏரிக்கரையில் இருந்த சாட்சிகளுக்கும் கூடாரங்கள் எடுத்துச்செல்லப்பட்டன. சிறிது நேரத்தில் ஒழுங்கான வரிசைகளில் அவர்கள் 50 கூடாரங்களை அமைத்துவிட்டிருந்தனர்.
ஒரே சமயத்தில், சுமார் 150 சாட்சிகளும் அவர்களின் நண்பர்களும் கவலைக்கிடமாக நோய்வாய்ப்பட்டிருந்தனர். ஆகஸ்ட் முதல் வாரத்துக்குள் கோமாவில் 40-க்கும் மேற்பட்டோர் இறந்தனர். ஆனால் மருத்துவ உதவி மற்றும் உதவிப்பொருட்கள் நேரத்தோடு வந்து சேர்ந்ததால், அநேக உயிர்கள் காப்பாற்றப்பட்டு அதிக அளவு துன்பம் தவிர்க்கப்பட்டது.
நன்றியுள்ள ஆவிக்குரிய ஒரு ஜனம்
சாட்சி அகதிகள் தங்களுக்குச் செய்யப்பட்ட அனைத்திற்கும் அதிகளவான நன்றியுணர்ச்சியைக் காண்பித்தார்கள். மற்ற தேசங்களிலுள்ள அவர்களுடைய கிறிஸ்தவ சகோதரர்களால் காட்டப்பட்ட அன்பும், உண்மையில் சர்வதேச சகோதரத்துவத்தை சேர்ந்தவர்களாக இருக்கிறார்கள் என்பதற்கான அத்தாட்சியும் நெகிழவைத்தது.
தங்களுடைய கஷ்டங்களின் மத்தியிலும், அகதிகள் தங்கள் ஆவிக்குரிய தன்மையைக் காத்துக்கொண்டிருக்கிறார்கள். உண்மையில், “அவர்களுக்கு அனைத்தும் மிக மோசமாக தேவைப்பட்ட போதிலும் பொருளுதவியைக் காட்டிலும் ஆவிக்குரிய உணவைப் பெற்றுக்கொள்வதைக் குறித்தே அதிக அக்கறையுள்ளவர்களாக தோன்றினார்கள்,” என்பதாக பார்வையாளர் ஒருவர் குறிப்பிட்டார். அவர்கள் கேட்டுக்கொண்டதன் பேரில் நீங்கள் பூமியில் பரதீஸில் என்றும் வாழலாம் என்ற பைபிள் படிப்பு உதவி புத்தகத்தின் 5,000 பிரதிகள் ருவாண்டா மொழியாகிய கின்னியருவாண்டுவில் பல்வேறு அகதிகள் முகாம்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டன.b
அகதிகள் ஒவ்வொரு நாளும் ஒரு பைபிள் வசனத்தைக் கலந்தாலோசித்தார்கள், சபை கூட்டங்களையும் ஏற்பாடு செய்தார்கள். பிள்ளைகளுக்கென்று பள்ளி வகுப்புகளை நடத்தவும்கூட ஏற்பாடுகள் செய்யப்பட்டன. சுகாதாரம் பற்றிய விதிமுறைகளைப் போதிப்பதற்கு இந்த வகுப்புகளை ஆசிரியர்கள் அனுகூலப்படுத்திக்கொண்டு உயிர் தப்பிப் பிழைப்பது அவற்றைக் கடைப்பிடிப்பதன் பேரில் சார்ந்திருப்பதை வலியுறுத்தினார்கள்.
தொடர்ச்சியான கவனம் தேவை
நூற்றுக்கணக்கான சாட்சி முகாம்கள் கோமாவைத் தவிர, ருட்ஷூரு போன்ற மற்ற இடங்களில் அமைக்கப்பட்டிருந்தன. இதேவிதமாக உதவி இந்தச் சகோதரர்களுக்கும் அளிக்கப்பட்டது. ஜூலை 31 அன்று, ஏழு பேர் அடங்கிய சாட்சிகளின் ஒரு குழு கோமாவிலிருந்து தெற்குநோக்கி, சுமார் 450 சாட்சிகள் கொண்ட முகாமிருந்த புக்காவுக்கு விமானம் மூலம் பயணித்தது. இவர்களில் அநேகர் புருண்டியிலிருந்தும் வந்திருந்தனர். அங்கு காலரா பெருவாரியாக பரவத் தொடங்கியிருந்தது, சகோதரர்கள் மத்தியில் மரணம் நேரிடுவதைத் தவிர்ப்பதற்காக உதவி அளிக்கப்பட்டது.
அடுத்த நாள் காலை அந்தக் குழு சுமார் 150 மைல் சாலையில் ஜயரிலிருந்த யுவெராவுக்குப் பிரயாணம் செய்தது, வழி முழுவதிலும் சுமார் ஏழு இடங்களில், ருவாண்டா மற்றும் புருண்டியிலிருந்து வந்த ஏறக்குறைய 1,600 சாட்சிகள் இருந்தனர். நோயிலிருந்து எவ்வாறு தங்களைப் பாதுகாத்துக்கொள்ள முடியும் என்பதைக் குறித்து போதனைகள் வழங்கப்பட்டன. குழுவின் கண்டுபிடிப்புகளின் அடிப்படையில் அமைந்த அறிக்கை இவ்வாறு சொன்னது: “இதுவரை செய்யப்பட்டது ஆரம்பமாக மட்டுமே உள்ளது, இப்பொழுது எங்களுடைய உதவியைப் பெற்றுக்கொண்டிருக்கும் 4,700 பேருக்கு அநேக மாதங்களுக்குக் கூடுதலான உதவி தேவையாக இருக்கும்.”
நூற்றுக்கணக்கான சாட்சிகள் ஆகஸ்ட் மாதத்துக்குள் ருவாண்டாவுக்குத் திரும்பிவிட்டதாக சொல்லப்படுகிறது. என்றாலும் எல்லாருடைய வீடுகளும் உடைமைகளும் கொள்ளையடிக்கப்பட்டுவிட்டன. ஆகவே வீடுகளையும் ராஜ்ய மன்றங்களையும் மீண்டும் கட்டும் கடினமான வேலை இன்னும் இருக்கிறது.
இவ்வளவு பயங்கரமாக ருவாண்டாவில் துன்பமனுபவித்திருப்பவர்களுக்காக கடவுளுடைய ஊழியர்கள் தொடர்ந்து ஊக்கமாக ஜெபித்து வருகிறார்கள். இந்தக் காரிய ஒழுங்கின் முடிவு இன்னும் நெருங்கி வருகையில் வன்முறை அதிகரிக்கக்கூடும் என்பதை நாம் அறிவோம். என்றபோதிலும், உலகம் முழுவதிலுமுள்ள யெகோவாவின் சாட்சிகள் தொடர்ந்து தங்களுடைய கிறிஸ்தவ நடுநிலைமையைக் காத்துக்கொண்டும் உண்மையான இரக்கத்தைக் காண்பித்துக்கொண்டுமிருப்பார்கள்.
[அடிக்குறிப்புகள்]
a டிசம்பர் 15, 1994 காவற்கோபுரம் “ருவாண்டாவில் அவலம்—யார் பொறுப்பு?” கட்டுரையைப் பார்க்கவும்.
b நியூ யார்க் உவாட்ச் டவர் பைபிள் அண்ட் டிராக்ட் சொஸையிட்டி வெளியிட்டது.
[பக்கம் 12-ன் வரைப்படம்]
ருவாண்டா
புருண்டி
ஜயர்
உகாந்தா
கிகலி
கோமா
ருகுரு
புகாவு
புஜும்புரா
யுவிரா
கிவு ஏரி
[பக்கம் 15-ன் படங்கள்]
இடது: டாபானா இயூஷனும் அவருடைய குடும்பத்தாரும் படுகொலை செய்யப்பட்டனர். வலது: டூட்ஸியாக இருந்த மூக்காகிஸாகாரா டனிஸ், ஹூட்டு சகோதரர்கள் அவளைக் காப்பாற்ற செய்த முயற்சிகளின் மத்தியிலும் கொல்லப்பட்டாள்
[பக்கம் 16, 17-ன் படங்கள்]
மேலே: கோமாவில் உள்ள ராஜ்ய மன்றத்தில் நோயுற்றிருப்பவர்களைக் கவனித்தல். கீழே இடது பக்கத்தில்: 35 டன்னுக்கும் மேலான நிவாரண உதவிப்பொருட்கள் சாட்சிகளால் தயாரிக்கப்பட்டு சரக்கு விமானத்தில் அனுப்பப்பட்டது. கீழே: சாட்சிகள் இடம் மாறி சென்ற கிவு ஏரி அருகே. கீழே வலது: ஜயரிலுள்ள ராஜ்ய மன்றத்தில் ருவாண்டா அகதிகள்