கொந்தளிப்புக்கிடையே களத்தில் இறங்கிய கிறிஸ்தவம்
ஒரு நாள், 1994 ஏப்ரல் மாதத்தில், இமைப்பொழுதில் எல்லாமே நடந்து முடிந்தது. விமான விபத்து ஒன்றில் புருண்டி, ருவாண்டா தேசத்து அதிபர்கள் கொல்லப்பட்டார்கள். ஒருசில மணிநேரத்திற்குள் ருவாண்டா முழுவதும் வன்முறை தாண்டவம் ஆடியது. வன்முறை துவங்கி மூன்று மாதங்களுக்குப்பிறகு பார்த்தால், ஆண், பெண், குழந்தை என்று கொல்லப்பட்ட ருவாண்டா மக்களின் எண்ணிக்கை 5,00,000-ஐ தாண்டியது. இந்தக் கால கட்டத்தை சிலர் “இனப்படுகொலை” என்றே விவரிக்கின்றனர்.
ருவாண்டா மக்கள் தொகையில் பாதிப் பேர், அதாவது 75 லட்சம்பேர் எல்லாவற்றையும் விட்டுவிட்டு ஓடினார்கள். அந்த எண்ணிக்கையில், அண்டை நாடுகளில் அடைக்கலம் புகுந்த 24 லட்சம் மக்களும் அடங்குவர். இதுவே, இன்றைய வரலாற்றில் அதிக எண்ணிக்கையிலும் அதிக வேகத்திலும் அகதிகளாய் குடியேறிய சம்பவம். ஜயர் (இன்றைய காங்கோ ஜனநாயக குடியரசு), டான்ஜானியா, புருண்டி போன்ற நாடுகளில் மளமளவென்று அகதி முகாம்கள் முளைத்தன. இவற்றில் ஒருசில முகாம்கள் உலகிலேயே மிகப் பெரியவை. இவை 2,00,000 மக்களுக்கு தங்க நிழல்தந்து அரவணைத்துக்கொண்டன.
யெகோவாவின் சாட்சிகள் பலரும் அகதிகளாக இருந்தனர். இவர்கள் பைபிள் கொள்கைகளின்படி நடக்கும், அமைதியை நாடும் மக்கள். இவர்கள் எந்த நாட்டில் வாழ்ந்தாலும், “தங்கள் பட்டயங்களை மண்வெட்டிகளாகவும், தங்கள் ஈட்டிகளை அரிவாள்களாகவும் அடிப்பார்கள்; ஜாதிக்கு விரோதமாய் ஜாதி பட்டயம் எடுப்பதில்லை, இனி அவர்கள் யுத்தத்தைக் கற்பதுமில்லை” என்ற ஏசாயா 2:4-ல் சொல்லப்பட்டிருக்கும் கொள்கையை அப்படியே ஏற்று, கொஞ்சமும் பிசகாமல் நடுநிலை வகிப்பவர்கள். ருவாண்டா இனப்படுகொலையில் பங்கேற்காத மத தொகுதியினராக யெகோவாவின் சாட்சிகள் பரவலாக அறியப்பட்டிருக்கிறார்கள்.
இயேசு தம்முடைய சீஷர்கள் “உலகத்தாரல்ல” என்று சொன்னார். ஆனாலும், அவர்கள் இந்த ‘உலகத்திலிருப்பதால்,’ நாடுகளில் நடக்கும் கொந்தளிப்பிலிருந்து எல்லா நேரங்களிலும் தப்பிக்க முடிவதில்லை. (யோவான் 17:11, 14) ருவாண்டாவில் நடந்த இனப்படுகொலையில் சுமார் 400 சாட்சிகள் உயிர் இழந்தனர். சுமார் 2,000 சாட்சிகளும், ராஜ்ய செய்தியில் அக்கறை உள்ளவர்களும் அகதிகளாய் நின்றார்கள்.
யெகோவாவின் சாட்சிகள் உலகத்தார் அல்ல என்பதற்காக, ஆபத்து என்று வந்தால் சும்மா கைகட்டிக்கொண்டு நிற்பார்கள் என்றா அர்த்தம்? இல்லை. கடவுளின் வார்த்தை இவ்வாறு சொல்கிறது: “ஒரு சகோதரனாவது சகோதரியாவது வஸ்திரமில்லாமலும் அநுதின ஆகாரமில்லாமலும் இருக்கும்போது, உங்களில் ஒருவன் அவர்களை நோக்கி: நீங்கள் சமாதானத்தோடே போங்கள், குளிர்காய்ந்து பசியாறுங்கள் என்று சொல்லியும், சரீரத்திற்கு வேண்டியவைகளை அவர்களுக்குக் கொடாவிட்டால் பிரயோஜனமென்ன? அப்படியே விசுவாசமும் கிரியைகளில்லாதிருந்தால் தன்னிலேதானே செத்ததாயிருக்கும்.” (யாக்கோபு 2:15-17) மேலும், யெகோவாவின் சாட்சிகள் மற்றவர்கள்மீது அன்பு வைத்திருக்கிறார்கள். இந்த அன்பே, வேற்று மதத்தினர் என்று வித்தியாசம் பார்க்காமல் உதவிட ஒரு தூண்டுகோலாக இருக்கிறது.—மத்தேயு 22:37-40.
ருவாண்டாவில் நடந்த அந்தக் கோர சம்பவத்தால் பாதிக்கப்பட்ட தங்கள் உடன் விசுவாசிகளுக்கு உதவிட உலகெங்கிலும் இருந்த யெகோவாவின் சாட்சிகள் துடியாய் துடித்தபோதிலும், நிவாரணப் பணியை ஒழுங்கமைக்கும் பொறுப்பு மேற்கு ஐரோப்பாவிடம் ஒப்படைக்கப்பட்டது. ஆப்பிரிக்காவில் உள்ள தங்கள் சகோதர சகோதரிகளுக்கு உதவிசெய்ய சாட்சிகளின் தன்னார்வ குழு ஒன்று 1994, கோடைக்காலத்தில் ஐரோப்பாவிலிருந்து ஓடோடி வந்தது. நன்கு ஒழுங்கமைக்கப்பட்ட தங்கும் முகாம்களையும், மருத்துவ முகாம்களையும் ருவாண்டா அகதிகளுக்காக அக்குழுவினர் அமைத்துக்கொடுத்தார்கள். துணிகள், போர்வைகள், உணவுகள், பைபிள் பிரசுரங்கள் என்று உதவிப்பொருட்கள் விமான மார்க்கமாகவும் அல்லது வேறுசில மார்க்கங்களிலும் ஏராளமாக வந்து குவிந்தன. இந்த நிவாரணப் பணியிலிருந்து 7,000-க்கும் அதிகமான பாதிக்கப்பட்ட மக்கள் பயனடைந்தார்கள். அதாவது அந்தச் சமயத்தில் அங்கிருந்த யெகோவாவின் சாட்சிகளின் எண்ணிக்கையைவிட கிட்டத்தட்ட மூன்று மடங்கு அதிகமான ருவாண்டா மக்கள் பயனடைந்தார்கள். டிசம்பர் மாதத்திற்குள், சாட்சிகள் உட்பட ஆயிரக்கணக்கான அகதிகள் மறுவாழ்வு பெற மீண்டும் ருவாண்டாவுக்குத் திரும்பினார்கள்.
காங்கோவில் போர்
1996-ல் காங்கோ ஜனநாயக குடியரசின் கிழக்குப் பிரதேசத்தில் திடீரென்று போர் மூண்டது. இப்பகுதி, ருவாண்டாவுக்கும் புருண்டிக்கும் எல்லைகளாக அமைந்திருக்கிறது. மறுபடியும் எங்குப் பார்த்தாலும் கற்பழிப்பு, கொலை. ஒருபுறம் சர். . .சர் என்று துப்பாக்கி குண்டுகள் சரமாரியாக பாய, மறுபுறம் கிராமங்கள் தீயில் கொழுந்துவிட்டு எரிய, மக்கள் உயிரை கையில் பிடித்துக்கொண்டு தலைதெறிக்க ஓடினார்கள். இந்தக் கொந்தளிப்பில் மாட்டிக்கொண்டு, சுமார் 50 யெகோவாவின் சாட்சிகள் உயிர் இழந்தார்கள். இவர்களில் சிலரது உயிரை எங்கிருந்தோ பாய்ந்து வந்த குண்டுகள் பதம்பார்த்தன. எஞ்சியவர்கள் குறிப்பிட்ட இனத்தவர் என்ற காரணத்திற்காகவும் எதிரிகள் என்று தவறாக நினைத்ததாலும் கத்திக்கு பலியானார்கள். 150 யெகோவாவின் சாட்சிகள் குடியிருந்த ஒரு கிராமம் தீக்கு இரையாக்கப்பட்டது. இன்னும் மற்ற கிராமங்களில் சாட்சிகளுடைய எத்தனையோ வீடுகளும், ஒருசில ராஜ்ய மன்றங்களும் கொளுத்தப்பட்டன. சாட்சிகள் தங்கள் வீடுகளையும், உடமைகளையும் இழந்து, மற்ற இடங்களுக்குத் தப்பி ஓடினார்கள். அங்கே இருந்த உடன் வணக்கத்தார் அவர்களுக்கு உதவிக்கரம் நீட்டினார்கள்.
போருக்குப்பின் பஞ்சம் தலைவிரித்தாடியது. போரில் பயிர்கள் எல்லாம் நாசம் செய்யப்பட்டன, உணவுக் கிடங்குகள் கொள்ளையடிக்கப்பட்டன, அத்தியாவசிய பொருட்கள் கிடைக்கும் வழிகள் துண்டிக்கப்பட்டன. மிச்சமீதி இருந்த பொருட்களின் விலையோ விஷம்போல் ஏறியது. 1997 மே மாத துவக்கத்தில் கிசங்கனி என்ற இடத்தில் ஒரு கிலோ உருளைக்கிழங்கு சுமார் 100 ரூபாய்க்கு விற்கப்பட்டது. இந்த விலை கொடுத்து அநேக மக்களால் வாங்க முடியவில்லை. நிறையப் பேர், வெறும் ஒருவேளை கஞ்சி குடித்தே காலம் தள்ளினார்கள். உணவுப் பஞ்சம் வந்தால் கூடவே நோயும் ஒட்டிக்கொண்டு வருகிறது. சத்துணவு குறைவால், மலேரியா, பேதி போன்ற நோய்களையும், வாயு கோளாறுகளையும் எதிர்க்கும் சக்தி உடலுக்கு இல்லாமல் போகிறது. குறிப்பாக பிள்ளைகள்தான் சத்துணவு குறைவால் கஷ்டப்பட்டு இறந்துபோகிறார்கள்.
நிலவரத்தை அறிதல்
இந்த மக்களின் அபயக் குரலுக்கு, மீண்டும் ஐரோப்பாவில் இருந்த சாட்சிகள் மின்னல் வேகத்தில் களத்தில் இறங்கினார்கள். ஏப்ரல் 1997-க்குள், இரண்டு டாக்டர்கள் அடங்கிய சாட்சிகளின் நிவாரணக் குழு, மருந்தையும் பணத்தையும் எடுத்துக்கொண்டு பறந்தோடி வந்தது. நிலவரங்களை அறிந்து, உடனடி-உதவி அளிப்பதற்காக, கோமா என்ற ஊரில் சாட்சிகள் ஏற்கெனவே நிவாரணக் கமிட்டிகளை அமைத்திருந்தனர். வந்து இறங்கிய குழு அந்த நகரத்திலும் அதை சுற்றி இருந்த பகுதியிலும் தேடி அலைந்து விவரங்களை சேகரித்தது. தொலைதூர இடங்களின் நிலவரங்களை அறிய ஆட்கள் அனுப்பப்பட்டனர். கோமாவின் மேற்கு பகுதியில் 1,000 கிலோமீட்டருக்கும் அதிக தூரத்தில் அமைந்திருந்த கிசங்கனி என்ற இடத்திலிருந்தும் விவரம் சேகரிக்கப்பட்டது. கோமாவில் செய்யப்பட்ட நிவாரணப் பணிகளில் உள்ளூர் சகோதரர்களும் ஒத்துழைத்தார்கள். அங்கே சுமார் 700 சாட்சிகள் இருக்கிறார்கள்.
கோமாவில் உள்ள ஒரு மூப்பர் இவ்வாறு சொன்னார்: “எவ்வளவோ தூரத்திலிருந்து, எங்களுக்காக உதவி செய்ய ஓடோடி வந்த சகோதரர்களை பார்த்த போது, நாங்க அப்படியே உருகிப்போனோம். அவங்க வரதுக்குள்ளே நாங்களே எங்களுக்குள்ளே உதவிசெஞ்சிக்கிட்டோம். நம்ம சகோதரர்கள், கோமாவில் இருந்த உள்ளூர் கிராமங்களுக்கு எல்லாம் ஓடிப்போய் ஒளியவேண்டிய கட்டாயம். சிலபேரு வீடுகளை இழந்துட்டாங்க, சிலரு அவங்க வயல்களை அப்படியே போட்டுட்டு ஓடிவந்தாங்க. அவங்கள எங்க வீடுகளில் தங்க வச்சு, துணிமணி கொடுத்து, இருந்த கொஞ்சநஞ்ச சாப்பாட்டை பங்குபோட்டு சாப்பிட்டோம். எங்களாலே அவ்வளவுதான் செய்ய முடிஞ்சது. எங்க மத்தியிலே ஒருசிலர் சத்துணவு குறைவால் அவதிப்பட்டாங்க.
“ஐரோப்பாவிலிருந்து வந்த சகோதரர்கள் பணம் கொண்டுவந்தாங்க. அதைவச்சு எங்களாலே உணவு வாங்க முடிஞ்சது. உணவு கிடைக்கிறது ரொம்ப கஷ்டமாக இருந்தது, அப்படியே கிடைச்சாலும் பயங்கர விலை. நிறையப் பேர் வீட்டுலே சாப்பிட ஒண்ணுமே இல்லை, அந்த நேரமா பார்த்து அப்பாடா! உணவு வந்து சேர்ந்திச்சு. சாட்சிகளுக்கும், சாட்சி அல்லாத மற்றவர்களுக்கும் சாப்பாடு கொடுத்தோம். சரியான நேரத்துல உணவு மாத்திரம் வரலேனா இன்னும் நிறையப் பேர் செத்துப்போய் இருப்பாங்க, குறிப்பா பிள்ளைங்க இறந்துபோய் இருப்பாங்க. யெகோவா அவருடைய மக்கள காப்பாத்திட்டாரு. சாட்சி அல்லாத ஆட்கள்கூட அப்படியே அசந்துபோயிட்டாங்க. நம்மகிட்ட இருக்கிற ஒற்றுமையையும் அன்பையும் பார்த்த நிறையப் பேரு ரொம்ப பாராட்டினாங்க. சிலபேரு நம்ம மதம்தான் உண்மையான மதம்னு ஒத்துக்கிட்டாங்க.”
உணவுப் பொருட்கள் உள்ளூரிலேயே வாங்கப்பட்டன; மருந்து பொருட்கள் ஒழுங்காக விநியோகிக்கப்பட்டன. அப்படியிருந்தும் செய்வதற்கோ இன்னும் நிறைய இருந்தன. துணிமணிகளும் போர்வைகளும் தேவைப்பட்டன. கூடவே இன்னும் நிறைய உணவுப் பொருட்களும் மருந்தும் தேவைப்பட்டன. இடிந்துபோன வீடுகளை மறுபடியும் கட்டுவதற்கும் உதவிக்கரம் தேவைப்பட்டது.
தாராளமாகக் கொடுக்கும் மக்கள்
ஐரோப்பாவில் இருந்த சகோதரர்கள் மறுபடியும் உதவிக்கரம் நீட்ட ஆவலோடு இருந்தார்கள். பிரான்ஸில் லூவியாவில் உள்ள யெகோவாவின் சாட்சிகளின் கிளை அலுவலகம், ரோன் பள்ளத்தாக்கிலும், நார்மன்டி என்ற இடத்திலும் இருந்த சபைகளுக்கும், பாரிஸில் இருந்த ஒருசில சபைகளுக்கும் உதவிக்கரம் நீட்டும்படி குரல் கொடுத்தது. இதோ மற்றொரு பைபிள் கொள்கை செயலில் காட்டப்பட்டது: “சிறுக விதைக்கிறவன் சிறுக அறுப்பான், பெருக விதைக்கிறவன் பெருக அறுப்பான். அவனவன் விசனமாயுமல்ல, கட்டாயமாயுமல்ல, தன் மனதில் நியமித்தபடியே கொடுக்கக்கடவன்; உற்சாகமாய்க் கொடுக்கிறவனிடத்தில் தேவன் பிரியமாயிருக்கிறார்.”—2 கொரிந்தியர் 9:6, 7.
உதவி செய்ய கிடைத்த இந்த வாய்ப்பை அப்படியே அள்ளிக் கொண்டவர்கள் ஆயிரம் ஆயிரம் பேர். துணிமணிகளும், ஷூக்களும், இன்னும் வேறு பொருட்களும் பெட்டிப் பெட்டியாகவும் மூட்டை மூட்டையாகவும் ராஜ்ய மன்றங்களில் வந்து குவிந்தன. பிறகு ராஜ்ய மன்றங்களில் இருந்து, பிரான்ஸிலிருந்த யெகோவாவின் சாட்சிகளுடைய கிளை அலுவலகத்திற்கு அவை அனுப்பி வைக்கப்பட்டன. அடுத்த கட்டமாக, “ஜயருக்கு உதவி” என்ற திட்டத்தில் பங்கேற்று, உதவிக்கரம் நீட்ட 400 தன்னார்வ தொண்டர்கள் தயாராக இருந்தார்கள். ஒருபுறம் நன்கொடையாக பொருட்கள் வந்து குவிந்துகொண்டிருக்க, வந்து குவிந்த பொருட்களை இந்தத் தொண்டர்கள் தனித்தனியே பிரித்து, மடித்து, துணிமணிகளை பெட்டிகளில் பேக் செய்தனர். அவற்றை 30 பெட்டிகள் வீதம், எடுத்துச்செல்லும் மரப்பலகையில் (pallet) அடுக்கினார்கள். சிறு பிள்ளைகளும் ஆப்பிரிக்காவில் உள்ள தங்கள் சின்னஞ்சிறு சகோதர சகோதரிகளை நினைத்து, குட்டிக்குட்டி கார்கள், பம்பரங்கள், பொம்மைகள், டெடி பேர்கள் என்று நிறைய விளையாட்டு சாமான்களை அனுப்பி வைத்தார்கள். மற்ற அத்தியாவசிய பொருட்களோடு இவற்றையும் சேர்த்து பேக் செய்தார்கள். எல்லாவற்றையும், 12 மீட்டர் நீளம் உள்ள ஒன்பது கன்டெய்னர்களில் நிரப்பி, காங்கோவுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
மத்திய ஆப்பிரிக்காவுக்கு பெல்ஜியம், பிரான்ஸ், ஸ்விட்ஸர்லாந்து போன்ற இடங்களிலிருந்து ஆயிரக்கணக்கான சாட்சிகள் அனுப்பி வைத்த உதவிப் பொருட்கள் எவ்வளவு இருக்கும்? ஜூன், 1997 கணக்கின்படி, ஒட்டுமொத்தமாக 500 கிலோ மருந்து பொருட்கள், 10 டன் உயர் புரோட்டீன் பிஸ்கெட்டுகள், 20 டன் உணவுப் பொருட்கள், 90 டன் துணிமணிகள், 18,500 ஜோடி ஷூக்கள், 1,000 போர்வைகள். பைபிள் பிரசுரங்களும் விமானத்தில் வந்து சேர்ந்தன. இந்தப் பொருட்களை எல்லாம் நன்றிபொங்க பெற்றுக்கொண்டார்கள். அகதிகளின் வேதனையைத் தாங்கிக்கொள்ள இந்தப் பொருட்கள் பெரிதும் உதவியதோடு, அவர்களுக்கு ஆறுதலும் அளித்தன. வந்து சேர்ந்த பொருட்களின் விலை மதிப்பு கிட்டத்தட்ட மூன்றரை கோடி ரூபாய் ஆகும். இத்தகைய நன்கொடைகள் யெகோவாவை வணங்கும் மக்களுக்கு இடையே காணப்படும் அன்புக்கும், சகோதரப் பிணைப்புக்கும் எடுத்துக்காட்டுகளாக திகழ்கின்றன.
காங்கோவில் விநியோகிப்பு
காங்கோவுக்கு பொருட்கள் வந்து சேர ஆரம்பித்தவுடன், நிவாரணக் கமிட்டிகளோடு சேர்ந்து உழைப்பதற்காக இரண்டு சகோதரர்களும் ஒரு சகோதரியும் பிரான்ஸிலிருந்து வந்து இறங்கினார்கள். காங்கோவில் இருந்த சாட்சிகள் வெளிக்காட்டிய நன்றி உணர்வை சகோதரி ஜாஸ்லின் விவரிக்கிறார்: “நன்றி சொல்லி எங்களுக்கு நிறைய கடிதங்களை அனுப்பி வைத்தார்கள். ஒருவகை பச்சை தாமிரத்தில் (malachite) செய்யப்பட்ட ஆபரணம் ஒன்றை ஒரு ஏழை சகோதரி எனக்குப் பரிசாக தந்தார். சிலர் தங்களுடைய போட்டோக்களை எங்களிடம் கொடுத்தார்கள். நாங்கள் புறப்படும்போது, சகோதரிகள் எனக்கு முத்தம்தந்து, கட்டித்தழுவி அழுதார்கள். நானும் அழுதுவிட்டேன். ‘யெகோவா நல்லவர். அவர் நம்மை மறப்பதே இல்லை’ என்று பலரும் சொன்னார்கள். இதிலிருந்து, பொருள் உதவி அளிக்கப்பட்டதன் பாராட்டு யெகோவாவுக்கே சேரவேண்டும் என்று அவர்கள் உணர்ந்துகொண்டது தெரியவந்தது. நாங்கள் உணவுப் பொருட்களை கொடுத்தபோது, சகோதர சகோதரிகள் ராஜ்ய பாடல்களைப் பாடி, யெகோவாவை துதித்தார்கள். இதைப் பார்த்து உள்ளம் கரைந்தது.”
நிவாரணக் குழுவில் டாக்டர் லூயிக் என்பவரும் இருந்தார். அவரிடம் சிகிச்சைப் பெறுவதற்காக ராஜ்ய மன்றத்தில் நிறையப் பேர் வந்து குவிந்தார்கள். அவர்கள் தங்கள் முறை வரும்வரை பொறுமையோடு காத்திருந்தார்கள். எப்படியாவது தானும் உதவ வேண்டும் என்று நினைத்த ஒரு காங்கோ சகோதரி, சுமார் 40 டொனட்டுகளை செய்துவந்து கொடுத்தார். ஆனால் வரிசையில் காத்திருந்தவர்களோ சுமார் 80 பேர். எனவே, ஆளுக்குப் பாதிப் பாதியாகப் பங்குபோட்டுக் கொண்டனர்.
சாட்சி அல்லாத மற்றவர்களுக்கு உதவிக்கரம்
மனிதாபிமானத்தில் செய்யப்பட்ட இத்தகைய உதவி, வெறும் யெகோவாவின் சாட்சிகளுக்கு மாத்திரம் அளிக்கப்படவில்லை. எவ்வாறு 1994-ல் மற்றவர்களும் பயனடைந்தார்களோ அதேபோல் இம்முறையும் நிறையப் பேர் பயனடைந்தார்கள். இப்படிப்பட்ட உதவி கலாத்தியர் 6:10-ல் சொல்லப்பட்டிருப்பதற்கு இசைவாக உள்ளது. அதில் இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது: ‘ஆகையால் நமக்குக் கிடைக்கும் சமயத்திற்குத்தக்கதாக, யாவருக்கும், விசேஷமாக விசுவாச குடும்பத்தார்களுக்கும், நன்மைசெய்யக்கடவோம்.’
பல ஆரம்பப் பள்ளிகளுக்கும், கோமாவுக்கு பக்கத்தில் இருந்த ஒரு அநாதை இல்லத்துக்கும் சாட்சிகள் போய், மருந்து பொருட்களையும் துணிமணிகளையும் விநியோகித்தார்கள். அந்த அநாதை இல்லம் 85 பிள்ளைகளுக்கு இல்லமாகத் திகழ்கிறது. இப்பகுதியில் நிலவரத்தை அறிய நிவாரணக் குழுவினர் முதன்முறையாக சென்றபோது, இந்த இல்லத்திற்கும் போனார்கள்; 50 பெட்டி உயர் புரோட்டீன் பிஸ்கெட்டுகளையும், பெட்டிப் பெட்டியாக துணிமணிகளையும், 100 போர்வைகளையும், மருந்து மற்றும் விளையாட்டுப் பொருட்களையும் கொண்டுவருவதாக சொல்லிவிட்டு வந்தார்கள். அந்தப் பிள்ளைகள் வராண்டாவில் வரிசையாக நின்றுகொண்டு, வந்திருந்தவர்களுக்காக பாடல் பாடினார்கள். பிறகு அவர்கள் விசேஷமாக ஒன்றை கேட்டார்கள்: ஃபுட்பால் விளையாட எங்களுக்கு ஒரு பந்து கிடைக்குமா?
பல வாரங்கள் கழித்து, அந்த நிவாரணக் குழுவினர், அவர்கள் சொன்னபடி எல்லா பொருட்களையும் கொண்டுபோய் கொடுத்தார்கள். தாராளமாக வந்து குவிந்த பொருட்களைப் பார்த்து அந்த அநாதை இல்லத்தின் நிர்வாக இயக்குநர் ஆச்சரியப்பட்டு போனார். அவருக்கு கொடுத்திருந்த பைபிள் பிரசுரத்தில் உள்ள விஷயத்தை படித்ததாலும் அவருக்கு தாங்க முடியாத ஆச்சரியம். இதையெல்லாம் பார்த்த அவர் தானும் ஒரு யெகோவாவின் சாட்சியாக மாறிக்கொண்டிருப்பதாக சொன்னார். பிள்ளைகளுக்கு ஒரு பந்து கொடுத்தாயிற்றா? “இல்லையே,” என்று பதிலளித்த கிளாடு, “நாங்கள் ஒரு பந்து அல்ல இரண்டு பந்துகள் கொடுத்தோம்” என்றார். அவர் பிரான்ஸிலிருந்து வந்திருந்த நிவாரணக் குழுவின் ஒழுங்கமைப்பாளர்.
அகதி முகாம்கள்
உதவிக்கரம் நீட்டுதல் காங்கோவோடு நின்றுவிடவில்லை. போர் எல்லையிலிருந்து தப்பியோடிய ஆயிரக்கணக்கான அகதிகள், அக்கம் பக்கத்தில் உள்ள நாடுகளில் அடைக்கலம் புகுந்தார்கள். அங்கே அவசரமாக மூன்று அகதி முகாம்கள் அமைக்கப்பட்டிருந்தன. தங்களால் என்ன உதவி அளிக்க முடியும் என்பதை அறிந்துகொள்ள சாட்சிகள் அங்கேயும் விரைந்தார்கள். அறிக்கை தயாரிக்கப்பட்டதும், முகாம்களில் இருந்த 2,11,000 அகதிகள், பெரும்பாலும் காங்கோவிலிருந்து வந்திருப்பது தெரியவந்தது. சாட்சிகள், அவர்களுடைய பிள்ளைகள், ராஜ்ய நற்செய்தியில் அக்கறை உள்ளவர்கள் என்று சுமார் 800 பேர் இருந்தார்கள். முகாம்களில் உணவுத் தட்டுப்பாடே உடனே தீர்க்கவேண்டிய பிரச்சினையாக இருந்தது. ஒரு முகாமில் வெறும் மூன்று நாட்களுக்குத்தான் போதுமான உணவு இருந்தது, அதில் மூன்று வருஷம் மக்கிப்போன பீன்ஸுகளும் இருந்தன.
இருந்தபோதிலும், சாட்சிகள் நல்ல உற்சாகத்தோடு தென்பட்டார்கள். அவர்களிடம் ஒருசில பைபிள் பிரசுரங்களே இருந்தன. அவற்றைக்கொண்டே திறந்தவெளியில் தவறாமல் கூட்டங்களை நடத்தி, தங்களை ஆன்மீக வழியில் பலப்படுத்திக் கொண்டார்கள். கடவுளுடைய ராஜ்ய நற்செய்தியை முகாம்களில் இருந்த மற்றவர்களுக்குப் பிரசங்கிப்பதிலும் அவர்கள் மும்முரமாக ஈடுபட்டிருந்தார்கள்.—மத்தேயு 24:14; எபிரெயர் 10:24, 25.
நிலவரத்தை ஆய்வு செய்த சாட்சிகளின் குழுவில் ஒரு டாக்டரும் இருந்தார். ஒவ்வொரு முகாமிலும் ஒருசில நாட்களை மாத்திரம் செலவிட அதிகாரிகளிடமிருந்து அவர்களுக்கு அனுமதி கிடைத்தது. ஆனாலும் அவர்கள் மருத்துவ சிகிச்சை கிடைக்க ஏற்பாடுகளைச் செய்தார்கள். அவர்கள் மருந்து பொருட்களையும் பணத்தையும் கிறிஸ்தவ மூப்பர்களிடத்தில் கொடுத்துவிட்டு வந்தார்கள். இவ்வாறாக, அந்தச் சகோதரர்களால் உயிர் பிழைக்க முடிந்தது. முகாம்களில் இருக்கும் சாட்சிகள் விரைவில் தங்கள் தாயகங்களுக்கு திரும்புவார்கள் என்ற நம்பிக்கையும் நிவாரணக் குழுக்களுக்கு இருக்கிறது.
எதிர்க்காலத்தைப் பற்றி என்ன? நம்முடைய காலம், பயங்கர போர்களும் உணவுப் பற்றாக்குறைகளும் நிறைந்த கொந்தளிப்பான ஒரு காலப்பகுதியாக இருக்கும் என்று இயேசு கிறிஸ்து ஏற்கெனவே சொல்லியிருக்கிறார். (மத்தேயு 24:7) இன்று பூமியில் இருக்கும் துன்பத்தை கடவுளுடைய ராஜ்யம் மாத்திரம் நீக்கும் என்று யெகோவாவின் சாட்சிகள் அறிந்திருக்கிறார்கள். அவருடைய ஆட்சியில், கீழ்ப்படிதலுள்ள மனிதகுலத்திற்கு அமைதியும், அமோக விளைச்சலும், நிரந்தர சந்தோஷமும் எந்நாளும் இருக்கப்போகும் ஒரு பரதீஸாக நம் பூளோக வீடு மாறும். (சங்கீதம் 72:1, 3, 16) இதற்கிடையில், சாட்சிகள் அந்தப் பரலோக ராஜ்யத்தின் நற்செய்தியை பிரசங்கித்துக்கொண்டும், தேவையில் உள்ள உடன் வணக்கத்தாருக்கும் மற்றவர்களுக்கும் தொடர்ந்து உதவி செய்துகொண்டும் இருப்பார்கள்.
[பக்கம் 4-ன் சிறு குறிப்பு]
1994 முதற்கொண்டு, ஐரோப்பாவில் உள்ள சாட்சிகள் மாத்திரம் 190 டன்னுக்கும் அதிகமான உணவு, துணி, மருந்து இன்னும் மற்ற நிவாரணப் பொருட்கள் என்று மத்திய கிழக்கு ஆப்பிரிக்க பிரதேசங்களுக்கு அனுப்பி வைத்துள்ளனர்
[பக்கம் 6-ன் பெட்டி]
கிறிஸ்தவ அன்பை செயலில் காட்டுதல்
பிரான்ஸில் “ஜயருக்கு உதவி” என்ற திட்டத்தில் பங்கேற்றவர்களில் ரூத் டெனாவும் ஒருவர். அவர் சிறுமியாக இருந்தபோது, கிறிஸ்தவ விசுவாசத்திற்காக அவர் எடுத்த நிலைநிற்கை, நாஸி சித்திரவதை முகாமில் அவரைத் தள்ளியது. அவர் இவ்வாறு குறிப்பிட்டார்: “ஆப்பிரிக்காவில் உள்ள நம் சகோதர சகோதரிகளுக்கு ஏதோ எங்களால் இயன்ற உதவி செய்ய முடிந்ததில் எங்களுக்கு தாங்க முடியாத சந்தோஷம்! ஆனா, இன்னொரு விஷயத்தாலே என் சந்தோஷம் இரண்டு மடங்கா ஆனது. 1945-ல், நாங்கள் ஜெர்மனியிலிருந்து வீடு திரும்பினோம், அப்போ எங்களுடையதுன்னு சொல்லிக்க எங்ககிட்ட சுத்தமா ஒண்ணுமே இல்லை. நாங்க போட்டிருந்த துணிகூட இரவல் வாங்கினது. ஆனா சீக்கிரத்திலேயே, அமெரிக்காவில் இருந்த நம்ம ஆன்மீக சகோதரர்கள் எங்களுக்குப் பொருட்களை அனுப்பிவைச்சு, உதவிக்கரம் நீட்டினாங்க. ரொம்ப காலத்திற்கு முன் எங்களுக்கு கிடைத்த அந்தத் தயவான செயலுக்கு கைமாறு செய்ற வாய்ப்பை இப்போ, இந்த நிவாரண ஏற்பாடு எனக்குத் தந்தது. கிறிஸ்தவ அன்பை செயலில் காட்டும் சகோதரர்களால் ஆன ஒரு மிகப் பெரிய குடும்பத்தில் இருக்கிறது ஆஹா! எப்பேர்ப்பட்ட ஒரு பாக்கியம்!”—யோவான் 13:34, 35.
[பக்கம் 7-ன் படம்]
விரைவில்—ஒரு பூளோக பரதீஸ்! அங்கு எல்லாருக்கும் ஏராளமாக கிடைக்கும்