உபவாசமிருப்பது வழக்கற்று —போய்விட்டதா?
“நான் இளம் பெண்ணாய் இருந்த சமயம் முதற்கொண்டு ஒவ்வொரு திங்கட்கிழமையும் விரதமிருந்து வருகிறேன்,” என்று ம்ருட்யுலாபென் என்ற செல்வச்செழிப்புள்ள 78 வயது இந்திய பெண் சொல்கிறார். இது அவருடைய வழிபாட்டின் ஒரு பாகமாக இருந்து வந்திருக்கிறது, நல்ல மணவாழ்க்கை, ஆரோக்கியமுள்ள பிள்ளைகள் அதோடுகூட தன் கணவனுக்கு பாதுகாப்பு ஆகியவற்றை நிச்சயப்படுத்திக்கொள்வதற்கு ஒரு வழியாய் இருந்திருக்கிறது. இப்போது விதவையாயிருக்கும் இவர், நல்ல உடல்நலத்துக்காகவும் தன் பிள்ளைகளின் செல்வச்செழிப்புக்காகவும் திங்கட்கிழமைகளில் விடாது விரதமிருந்து வருகிறார். அவரைப் போன்றே இந்து மதத்தைச் சேர்ந்த பெரும்பாலான பெண்கள் ஒழுங்காக விரதமிருப்பதை தங்கள் வாழ்க்கையின் பாகமாக செய்து வருகிறார்கள்.
ஒவ்வொரு வருடமும் சாவன் (ஷ்ராவன்) மாதத்தில் வரும் திங்கட்கிழமைகளில் தான் விரதமிருப்பதாக இந்தியாவிலுள்ள மும்பையின் (பம்பாய்) புறநகர்ப்பகுதி ஒன்றில் வாழ்ந்துகொண்டிருக்கும் பிரகாஷ் என்ற ஒரு நடுத்தர வயதுள்ள வணிகர் ஒருவர் சொல்கிறார். இது இந்துமத நாட்காட்டியில் விசேஷ மதசம்பந்தப்பட்ட அர்த்தமுள்ள மாதம். பிரகாஷ் விளக்குகிறார்: “நான் மதசம்பந்தப்பட்ட காரணங்களுக்காக விரதமிருக்க ஆரம்பித்தேன், ஆனால் உடல்நல காரணங்களுக்காக தொடர்ந்து இருப்பதை இப்போது ஒரு கூடுதலான தூண்டுதலாக நான் காண்கிறேன். சாவன் மாதம் மழைக்கால முடிவின் சமயத்தில் வருவதால், மழைக்காலத்தில் மட்டுமே வரும் நோய்களிலிருந்து நீங்கி உடலை சுத்தப்படுத்திக்கொள்வதற்கு அது ஒரு சந்தர்ப்பத்தை அளிக்கிறது.”
உபவாசமிருப்பது உடல், மனம், மற்றும் ஆவிக்குரிய ரீதியில் ஒரு நபருக்கு உதவுகிறது என்று சிலர் நினைக்கின்றனர். உதாரணமாக, க்ராலியர் இன்டர்நேஷனல் என்ஸைக்ளோப்பீடியா இவ்வாறு குறிப்பிடுகிறது: “உபவாசமிருப்பது ஆரோக்கியமானதாக இருக்கலாம்; அதில் கவனமாக ஈடுபடும்போது, அது உணர்வு மற்றும் அறிவு நிலைகளில் உச்சநிலைகளைக் கொண்டுவரலாம் என்று சமீபத்திய அறிவியல் ஆராய்ச்சி குறிப்பிடுகிறது.” கிரேக்க தத்துவஞானியான பிளேட்டோ பத்து நாட்களுக்கு அல்லது அதற்கும் மேலாக உபவாசம் இருப்பார் என்றும் கணித வல்லுநர் பித்தகோரஸ் தன் மாணவர்களுக்குக் கற்பிப்பதற்கு முன்பு அவர்கள் உபவாசம் இருக்கும்படி செய்தார் என்றும் சொல்லப்படுகிறது.
உபவாசம் என்பது, ஒரு குறிப்பிட்ட காலப்பகுதியின்போது உணவையும் தண்ணீரையும் முழுவதுமாக தவிர்ப்பதை சிலருக்கு அர்த்தப்படுத்துகிறது, ஆனால் மற்றவர்களோ தங்கள் உபவாசங்களின்போது பானங்களை அருந்துகின்றனர். சில சமயங்களில் உணவு உண்ணாமல் இருப்பது அல்லது ஒரு குறிப்பிட்ட வகையான உணவை தவிர்ப்பது போன்றவற்றை அநேகர் உபவாசம் என்று கருதுகின்றனர். ஆனால் கவனமின்றி நீண்டகாலம் உபவாசமிருப்பது ஆபத்தானதாய் இருக்கக்கூடும். சேமித்து வைத்திருக்கும் மாவுப்பொருளை உடல் பிரித்தெடுத்துக்கொண்ட பிறகு, அது அடுத்ததாக தசை புரோட்டீன்களை குளுக்கோஸாகவும், அதற்குப் பிறகு கொழுப்பாகவும் மாற்றுகிறது என்று பத்திரிகை எழுத்தாளர் பருல் ஷெத் சொல்கிறார். கொழுப்பை குளுக்கோஸாக மாற்றும்போது அது நஞ்சு சார்ந்த கீட்டோன் பொருட்களை வெளியேற்றுகிறது. இவை ஒன்றுசேர்ந்து குவியும்போது, அவை மூளைக்குச் சென்று மத்திப நரம்பு மண்டலத்துக்கு தீங்கிழைக்கின்றன. “இந்தச் சமயத்தின்போதுதான் உபவாசமிருப்பது ஆபத்தானதாக ஆகிவிடலாம்,” என்று ஷெத் சொல்கிறார். “நீங்கள் குழப்பமடைந்து விடலாம், சீர்குலைவு ஏற்படலாம், அதற்கும் மேல் இன்னும் மோசமாக . . . முழு மயக்கநிலையும் இறுதியில் மரணத்தையும் [அது ஏற்படுத்தலாம்].”
ஒரு கருவி மற்றும் சடங்குமுறை
அரசியல் அல்லது சமூக நோக்கங்களுக்காக ஒரு வல்லமைவாய்ந்த கருவியாக உண்ணாவிரதம் பயன்படுத்தப்பட்டு வந்திருக்கிறது. இந்தக் கருவியை திறம்படப் பயன்படுத்திய முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நபர் இந்தியாவைச் சேர்ந்த மோகன்தாஸ் கே. காந்தி ஆவார். கோடிக்கணக்கான மக்களால் மிகவும் உயர்வாகக் கருதப்பட்ட இவர், இந்தியாவின் இந்து மதத்தைச் சேர்ந்த பெரும்பான்மையான பொது மக்கள் மீது ஒரு பலமான செல்வாக்கைச் செலுத்துவதற்கு உண்ணாவிரதத்தை பயன்படுத்தினார். தொழிற்சாலை தொழிலாளிகளுக்கும் முதலாளிகளுக்கும் இடையே ஏற்பட்ட சண்டையை தீர்த்து வைப்பதற்கு அவர் மேற்கொண்ட உண்ணாவிரதத்தின் விளைவை விவரித்து காந்தி இவ்வாறு சொன்னார்: “அதன் முடிவான விளைவு என்னவென்றால், அதில் உட்பட்டிருந்த அனைவர் மத்தியிலும் நல்லிணக்க சூழ்நிலை ஏற்பட்டது. அது முதலாளிகளின் மனதைத் தொட்டது . . . நான் மூன்று நாட்கள் மட்டுமே உண்ணாவிரதமிருந்த பிறகு வேலை நிறுத்தம் முடிவடைந்துவிட்டது.” தென் ஆப்பிரிக்காவின் ஜனாதிபதி, நெல்சன் மண்டேலா, அரசியல் கைதியாக இருந்த வருடங்களின்போது ஐந்து-நாட்கள் அடங்கிய உண்ணாவிரதத்தில் பங்குகொண்டார்.
ஆனால் விரதம் இருப்பதை பழக்கமாக செய்துவரும் பெரும்பான்மையர் மதசம்பந்தமான காரணங்களுக்காக மட்டுமே அவ்வாறு இருக்கின்றனர். விரதமிருப்பது இந்து மதத்தில் ஒரு முக்கியத்துவம் வாய்ந்த சடங்காகும். சில குறிப்பிட்ட நாட்களில், “முழு விரதம் மேற்கொள்ளப்படுகிறது . . . தண்ணீரும்கூட குடிப்பதில்லை. மகிழ்ச்சி, செல்வச்செழிப்பு, பாவங்களுக்கும் மீறுதல்களுக்கும் மன்னிப்பு ஆகியவற்றை உறுதிப்படுத்திக்கொள்வதற்கு ஆண்களும் பெண்களும் கடும் விரதம் இருக்கின்றனர்,” என்று இந்திய விரதமும் பண்டிகைகளும் என்ற ஆங்கில புத்தகம் குறிப்பிடுகிறது.
ஜைன மதத்தில் விரதமிருப்பது மிகவும் பரவலாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. தி சண்டே டைம்ஸ் ஆஃப் இண்டியா ரிவ்யூ இவ்வாறு அறிக்கை செய்கிறது: “பம்பாயிலுள்ள [மும்பை] ஒரு ஜைனமத முனிவர் [சாது] ஒரு நாளுக்கு இரண்டு டம்ளர் வீதம்—201 நாட்களுக்கு—கொதி நீர் மட்டுமே குடித்தார். அவர் 33 கிகி [73 பவுண்டு] எடை இழந்துவிட்டார்.” விரதமிருப்பது இரட்சிப்பைக் கொண்டுவரும் என்ற நம்பிக்கையோடு சிலர் பட்டினி கிடந்து சாகும் வரையாகவும்கூட விரதமிருக்கின்றனர்.
ரம்ஸான் மாதத்தின்போது நோன்பிருப்பது பொதுவாக இஸ்லாமை கடைப்பிடித்து வரும் பெரியவர்கள் செய்துமுடிக்க வேண்டிய கடமையாய் இருக்கிறது. அந்த முழு மாதமும் சூரியனின் தோற்றத்திலிருந்து மறைவு வரையுள்ள நேரத்தில் எந்த உணவும் தண்ணீரும் உட்கொள்ளப்படக்கூடாது. இந்தச் சமயத்தின்போது எவராவது நோய்வாய்ப்பட்டாலோ அல்லது பிரயாணப்பட்டுக் கொண்டிருந்தாலோ, அவர்கள் வேறொரு சமயத்தில் நோன்பிருக்க வேண்டும். ஈஸ்டருக்கு முன்பு வரும் 40-நாள் அடங்கிய காலப்பகுதியாகிய லெந்து நாட்களின்போது உபவாசமிருப்பது கிறிஸ்தவமண்டலத்திலுள்ள சிலருக்கு பழக்கமாயிருக்கிறது; அநேக மதசம்பந்தமான தொகுதியினர் மற்ற குறிப்பிட்ட நாட்களில் உபவாசம் இருக்கின்றனர்.
உபவாசமிருப்பது நிச்சயமாகவே படிப்படியாக மறைந்துகொண்டில்லை. மேலும், அது பெரும்பாலான மதங்களின் ஒரு பாகமாக இருப்பதால், உபவாசமிருப்பதை கடவுள் தேவைப்படுத்துகிறாரா என்று நாம் ஒருவேளை கேட்கலாம். உபவாசமிருக்கலாம் என்று ஒருவேளை கிறிஸ்தவர்கள் தீர்மானிக்கும் சமயங்கள் இருக்கின்றனவா? இது பயனளிக்கக்கூடுமா? இந்தக் கேள்விகளை அடுத்த கட்டுரை கலந்தாராயும்.
[பக்கம் 3-ன் படம்]
விரதமிருப்பதை ஜைன மதம் ஆத்துமா இரட்சிப்படைவதற்கான ஒரு வழியாக கருதுகிறது
[பக்கம் 4-ன் படம்]
மோகன்தாஸ் கே. காந்தி அரசியல் அல்லது சமூக நோக்கங்களுக்காக உண்ணாவிரதமிருப்பதை ஒரு சக்திவாய்ந்த கருவியாக பயன்படுத்தினார்
[பக்கம் 4-ன் படம்]
இஸ்லாமில் ரம்ஸான் மாதத்தின்போது நோன்பிருப்பது செய்து முடிக்கவேண்டிய கடமை
[படத்திற்கான நன்றி]
Garo Nalbandian