உபவாசமிருப்பதை கடவுள் தேவைப்படுத்துகிறாரா?
மோசேயின் மூலம் கொடுக்கப்பட்ட கடவுளுடைய சட்டம் ஒரே ஒரு சந்தர்ப்பத்தின்போது—வருடந்தோறும் பாவநிவாரண நாளின்போது—மட்டுமே உபவாசமிருப்பதை தேவைப்படுத்தியது. அந்த நாளின்போது இஸ்ரவேலர் ‘தங்கள் ஆத்துமாவை உபத்திரவப்படுத்த’ வேண்டும் என்று நியாயப்பிரமாணம் கட்டளையிட்டது; அது அவர்கள் உபவாசமிருந்ததை அர்த்தப்படுத்தியதாக புரிந்துகொள்ளப்படுகிறது. (லேவியராகமம் 16:29-31; 23:27; சங்கீதம் 35:13) இருப்பினும், இந்த உபவாசம் வெறும் ஒரு சடங்காக மட்டும் இருக்கவில்லை. இஸ்ரவேல மக்கள் தங்கள் பாவ நிலையையும் மீட்புக்கான தேவையையும் குறித்து மிகவும் அதிகமாக உணர்வுள்ளவர்களாவதற்கு பாவநிவாரண நாளை கடைப்பிடிப்பது அவர்களை உந்துவித்தது. அவர்கள் தங்கள் பாவங்களுக்காக வருத்தத்தையும் கடவுளுக்கு முன்பாக மனந்திரும்புதலையும் வெளிப்படுத்திக் காண்பிப்பதற்கும்கூட அந்த நாளில் அவர்கள் உபவாசம் இருந்தனர்.
மோசேயின் நியாயப்பிரமாணத்தின்படி இதுமட்டுமே கட்டாயமாய் செய்யப்பட வேண்டிய உபவாசமாக இருந்தாலும், மற்ற சமயங்களிலும்கூட இஸ்ரவேலர் உபவாசமிருந்தனர். (யாத்திராகமம் 34:28; 1 சாமுவேல் 7:6; 2 நாளாகமம் 20:3; எஸ்றா 8:21; எஸ்தர் 4:3, 16) மனந்திரும்புதலை வெளிக்காட்டுவதற்கு ஒரு வழியாக, மனமுவந்து செய்யும் உபவாசங்கள் இவற்றில் சேர்க்கப்பட்டிருந்தன. தவறு செய்துகொண்டிருந்த யூதா தேசத்து மக்களை யெகோவா இவ்விதமாக ஊக்குவித்தார்: “உபவாசத்தோடும் அழுகையோடும் புலம்பலோடும் உங்கள் முழு இருதயத்தோடும் என்னிடத்தில் திரும்புங்கள்.” இது வெளித்தோற்றத்துக்காக செய்யப்படும் செயலாக இருக்கக்கூடாது, ஏனென்றால் கடவுள் தொடர்ந்து சொல்கிறார்: ‘நீங்கள் உங்கள் வஸ்திரங்களையல்ல, உங்கள் இருதயங்களைக் கிழியுங்கள்.’—யோவேல் 2:12-15.
காலப்போக்கில் அநேகர் வெளித்தோற்றத்துக்காக செய்யப்படும் சடங்கைப் போல் உபவாசமிருந்தனர். அப்படிப்பட்ட உள்ளொன்றும் புறமொன்றுமாயிருந்த உபவாசமிருத்தலை யெகோவா வெறுத்தார்; ஆகையால் மாய்மாலக்காரராயிருந்த இஸ்ரவேலரை இவ்வாறு கேட்டார்: “மனுஷன் தன் ஆத்துமாவை ஒடுக்குகிறதும், தலைவணங்கி நாணலைப் போல் இரட்டிலும் சாம்பலிலும் படுத்துக்கொள்ளுகிறதும், எனக்குப் பிரியமான உபவாச நாளாயிருக்குமோ? இதையா உபவாசமென்றும் கர்த்தருக்குப் பிரியமான நாளென்றும் சொல்லுவாய்?” (ஏசாயா 58:5) தன்னிச்சையாக நடந்த இந்த ஜனங்கள் தாங்கள் உபவாசமிருப்பதை பகட்டாகக் காட்டுவதற்குப் பதிலாக, மனந்திரும்புதலுக்கு ஏதுவான செயல்களை பிறப்பிக்கும்படி கேட்டுக்கொள்ளப்பட்டனர்.
யூதர்கள் நிலைநாட்டியிருந்த சில உபவாசங்களை கடவுள் ஆரம்பத்திலிருந்தே அங்கீகரிக்கவில்லை. உதாரணமாக, பொ.ச.மு. ஏழாம் நூற்றாண்டில் எருசலேமின் முற்றுகை மற்றும் பாழ்க்கடிப்பின் சம்பந்தமாக ஏற்பட்ட பேராபத்தான சம்பவங்களை நினைவில் வைப்பதற்கு யூதா தேசத்து மக்கள் ஒரு சமயம் நான்கு வருடாந்தர உபவாசங்களை கொண்டிருந்தனர். (2 இராஜாக்கள் 25:1-4, 8, 9, 22-26; சகரியா 8:19) பாபிலோனின் சிறையிருப்பிலிருந்து யூதர்கள் விடுதலை செய்யப்பட்ட பிறகு, சகரியா தீர்க்கதரிசியின் மூலம் யெகோவா இவ்வாறு சொன்னார்: “நீங்கள் இந்த எழுபது வருஷமாக . . . உபவாசம்பண்ணித் துக்கங்கொண்டாடினபோது நீங்கள் எனக்கென்றுதானா உபவாசம் பண்ணினீர்கள்?” யெகோவாவிடமிருந்தே வந்திருந்த நியாயத்தீர்ப்புகளின் காரணமாக யூதர்கள் உபவாசமிருந்து துக்கங்கொண்டாடியதால் கடவுள் அப்படிப்பட்ட உபவாசங்களை அங்கீகரிக்கவில்லை. அவர்களுக்கு நேரிட்ட பேராபத்தின் காரணமாக அவர்கள் உபவாசம் இருந்தனர், அதற்கு வழிநடத்திய தங்கள் சொந்த தவறுக்காக அல்ல. அவர்கள் தங்கள் சொந்த தேசத்திற்கு திரும்பியபோது, கடந்தகாலத்தைக் குறித்து வருந்துவதற்குப் பதிலாக அவர்கள் களிகூருவதற்கு அது சமயமாயிருந்தது.—சகரியா 7:5.
கிறிஸ்தவர்கள் உபவாசம் இருக்க வேண்டுமா?
இயேசு கிறிஸ்து தம்முடைய சீஷர்கள் உபவாசமிருக்க வேண்டும் என்று ஒருபோதும் கட்டளையிடவில்லையென்றாலும், அவரும் அவரைப் பின்பற்றியவர்களும் பாவநிவாரண நாளின்போது உபவாசம் இருந்தனர், ஏனென்றால் அவர்கள் மோசேயின் நியாயப்பிரமாணத்தின்கீழ் இருந்தனர். கூடுதலாக, அவருடைய சீஷர்களில் சிலர் மற்ற சமயங்களில் மனமுவந்து உபவாசம் இருந்தனர், ஏனென்றால் அந்தப் பழக்கத்தை முற்றிலுமாய் தவிர்க்கும்படி இயேசு அவர்களுக்கு கட்டளையிடவில்லை. (அப்போஸ்தலர் 13:2, 3; 14:23) இருப்பினும், ஒருபோதும் அவர்கள் ‘தாங்கள் உபவாசிக்கிறதை மனுஷர் காணும்பொருட்டாக தங்கள் முகங்களை வாடப்பண்ணக்கூடாது.’ (மத்தேயு 6:16) அப்படி கடவுட்பற்றுள்ளவர் போல் வெளித்தோற்றத்துக்காக செய்வது மற்ற மனிதர்களிடமிருந்து பாராட்டுதலையும் அதற்கு அங்கீகாரத்தையும் கொண்டுவரலாம். இருந்தபோதிலும், அப்படிப்பட்ட போலியான வெளித்தோற்றத்தின் பேரில் கடவுள் பிரியப்படுவதில்லை.—மத்தேயு 6:17, 18.
இயேசு தம்முடைய மரணத்தின்போது அவரைப் பின்பற்றியவர்கள் உபவாசமிருப்பதைப் பற்றியும்கூட பேசினார். அவ்வாறு சொல்வதன் மூலம் அவர் சடங்குமுறையான உபவாசத்தை நிறுவிக்கொண்டில்லை. அதற்கு மாறாக, அவர்கள் அனுபவிக்கப்போகும் ஆழ்ந்த துயரத்துக்கான பிரதிபலிப்பை குறிப்பிட்டுக் கொண்டிருந்தார். அவர் உயிர்த்தெழுப்பப்பட்டவுடன் அவர்களோடு மறுபடியும் இருப்பார், அப்போது அவர்கள் உபவாசமிருப்பதற்கு அப்படிப்பட்ட காரணம் ஒருபோதும் இருக்காது.—லூக்கா 5:34, 35.
‘கிறிஸ்து அநேகருடைய பாவங்களைச் சுமந்து தீர்க்கும்படிக்கு ஒரேதரம் பலியிடப்பட்டபோது’ மோசேயின் நியாயப்பிரமாணம் முடிவுக்கு வந்தது. (எபிரெயர் 9:24-28) நியாயப்பிரமாணம் முடிவடைந்தபோது, பாவநிவாரண நாளின்போது உபவாசமிருக்க வேண்டும் என்ற கட்டளையும் முடிவுக்கு வந்தது. இவ்வாறு, பைபிளில் குறிப்பிடப்பட்டிருக்கும் கட்டாயமாய் செய்யப்பட வேண்டிய ஒரே உபவாசமும் நீக்கப்பட்டது.
லெந்து நாட்களைப் பற்றியென்ன?
அப்படியென்றால், லெந்து நாட்களின்போது உபவாசமிருக்கும் கிறிஸ்தவ மண்டலத்தின் பழக்கத்துக்கு அடிப்படை என்ன? லெந்து நாட்களைக் கடைப்பிடிக்கும் முறையில் சர்ச்சுக்கு சர்ச்சு வித்தியாசமிருந்தாலும் கத்தோலிக்க மற்றும் புராட்டஸ்டன்ட் சர்ச்சுகள் அவற்றை அங்கீகரிக்கின்றன. ஈஸ்டருக்கு முன் வரும் 40-நாள் காலப்பகுதியின்போது சிலர் ஒருபொழுது மட்டுமே உணவு உண்கின்றனர். மற்றவர்கள் சாம்பல் புதன்கிழமை மற்றும் புனித வெள்ளி போன்ற நாட்களில் மட்டுமே முழு உபவாசம் இருக்கின்றனர். சிலர் லெந்து நாட்களின்போது மாம்சம், மீன், முட்டைகள் மற்றும் பால் உணவுகள் ஆகியவற்றிலிருந்து முழுவதுமாக விலகியிருக்கின்றனர்.
இயேசு தம்முடைய முழுக்காட்டுதலுக்குப் பிறகு 40 நாட்கள் உபவாசமிருந்ததன் பேரில் லெந்து நாட்கள் சார்ந்திருப்பதாக நம்பப்படுகிறது. அப்படியென்றால் ஒவ்வொரு வருடமும் பின்பற்ற வேண்டிய ஒரு சடங்கை அவர் நிறுவிக்கொண்டிருந்தாரா? இல்லவே இல்லை. பூர்வ கிறிஸ்தவர்கள் மத்தியில் இப்படிப்பட்ட பழக்கம் இருந்ததாக பைபிள் பதிவு எதுவுமில்லை என்ற உண்மையிலிருந்து இது புலனாகிறது. கிறிஸ்துவுக்குப் பின் நான்காம் நூற்றாண்டில் லெந்து நாட்கள் முதலாவது அனுசரிக்கப்பட்டன. கிறிஸ்தவமண்டலத்தின் மற்ற அநேக போதனைகளைப் போலவே அதை புறமத மூலங்களிலிருந்து தனதாக அது ஏற்றுக்கொண்டது.
இயேசு முழுக்காட்டுதல் பெற்ற பின்பு வனாந்தரத்தில் உபவாசம் இருந்ததை பார்த்து பின்பற்றுவதாக லெந்து நாட்கள் இருந்தால், ஈஸ்டருக்கு வழிநடத்திய வாரங்களின்போது—அவருடைய உயிர்த்தெழுதலின் சமயத்தின்போது அது ஏன் அனுசரிக்கப்படுகிறது? இயேசு தம் மரணத்திற்கு முன்பிருந்த நாட்களின்போது உபவாசமிருக்கவில்லை. தாம் மரிப்பதற்கு சில நாட்களுக்கு முன்பு அவரும் அவருடைய சீஷர்களும் பெத்தானியாவில் வீடுகளைச் சந்தித்து உணவருந்தினர் என்று சுவிசேஷப் பதிவுகள் சுட்டிக் காண்பிக்கின்றன. அவர் தம் மரணத்திற்கு முந்தின இரவு பஸ்காவைப் புசித்தார்.—மத்தேயு 26:6, 7; லூக்கா 22:15; யோவான் 12:2.
இயேசு முழுக்காட்டுதல் பெற்ற பின்பு உபவாசம் இருந்ததிலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய காரியம் ஒன்று உள்ளது. அவர் ஒரு முக்கியமான ஊழியத்தை மேற்கொள்ள புறப்பட்டுக் கொண்டிருந்தார். யெகோவாவின் உன்னத அரசாட்சி நியாயநிரூபணம் செய்யப்படுவதும் முழு மனித இனத்தின் எதிர்காலமும் அதில் உட்பட்டிருந்தது. ஆழ்ந்து தியானிப்பதற்கும் உதவிக்காகவும் வழிநடத்துதலுக்காகவும் யெகோவாவிடம் ஜெபத்தில் திரும்புவதற்கும் இது சமயமாயிருந்தது. பொருத்தமாகவே இந்தச் சமயத்தின்போது இயேசு உபவாசம் இருந்தார். சரியான உள்நோக்கத்தோடும் பொருத்தமான சமயத்தின்போதும் செய்யப்படும்போது உபவாசம் பயனுள்ளதாய் இருக்கக்கூடும் என்பதை இது குறிப்பிட்டுக் காண்பிக்கிறது.—ஒப்பிடுக கொலோசெயர் 2:20-23.
உபவாசமிருத்தல் பயனளிக்கக்கூடிய சமயங்கள்
இன்று கடவுளுடைய வணக்கத்தார் ஒருவர் உபவாசம் இருக்கக்கூடிய சில சமயங்களை நாம் சிந்திப்போம். பாவம் செய்த ஒரு நபர் ஒரு காலப்பகுதிக்கு உண்ண விரும்பாமல் இருக்கலாம். இது மற்றவர்களைக் கவர்ச்சிப்பதற்கோ அல்லது பெற்றுக்கொள்ளப்பட்ட சிட்சையைக் குறித்து கோபப்படுவதற்கோ அல்ல. உபவாசமிருப்பதுதானே கடவுளோடு விஷயங்களை சரிசெய்து விடாது. என்றபோதிலும், உண்மையாகவே மனந்திரும்பியிருக்கும் ஒரு நபர், யெகோவாவையும் ஒருவேளை நண்பர்களையும் குடும்பத்தாரையும் புண்படுத்தியதற்காக ஆழமான துயரத்தை உணருவார். கடுந்துயரமும் மன்னிப்புக்காக ஊக்கமான ஜெபமும் உணவின் பேரிலான ஆசையை தடைசெய்யலாம்.
இஸ்ரவேலின் அரசனாகிய தாவீது அதைப் போன்ற ஒரு அனுபவத்தைப் பெற்றிருந்தார். பத்சேபாள் மூலம் பெற்ற தன் மகனை இழக்கும் எதிர்பார்ப்பை எதிர்ப்பட்டபோது, அந்தப் பிள்ளையின் விஷயத்தில் இரக்கம் பெறுவதற்காக அவருடைய முயற்சிகள் அனைத்தையும் அவர் ஒருமுகப்படுத்தி யெகோவாவிடம் ஜெபித்தார். அவருடைய உணர்ச்சிகளையும் பலத்தையும் முழுவதுமாக ஜெபத்தில் ஈடுபடுத்தி அவர் உபவாசம் இருந்தார். அதேபோல், இன்று, சில குறிப்பிட்ட அழுத்தம்நிறைந்த நிலைமைகளின்கீழ் உணவு உண்பது பொருத்தமானதாய் இருக்காது.—2 சாமுவேல் 12:15-17.
தேவபக்தியுள்ள நபர் ஒருவர் சில ஆழமான ஆவிக்குரிய விஷயங்களின் பேரில் கவனத்தை ஒருமுகப்படுத்துவதற்கு விரும்பும் சமயங்களும்கூட இருக்கலாம். பைபிளிலும் கிறிஸ்தவ பிரசுரங்களிலும் ஆராய்ச்சி அவசியமாயிருக்கலாம். தியானம் செய்வதற்காக ஒரு குறிப்பிட்ட காலப்பகுதி ஒருவேளை தேவைப்படலாம். அப்படி உட்கிரகித்துக்கொள்ளும் படிப்பு பகுதியின்போது, ஒரு நபர் உணவு உட்கொள்வதன் மூலம் கவனத்தை சிதறடிக்க விரும்பாமல் இருக்கலாம்.—ஒப்பிடுக எரேமியா 36:8-10.
ஆழமாய் சிந்தித்து முக்கியமான தீர்மானங்கள் எடுக்க வேண்டிய சமயங்களின்போது கடவுளுடைய ஊழியர்கள் உபவாசித்ததற்கு வேதப்பூர்வமான உதாரணங்கள் இருக்கின்றன. நெகேமியாவின் நாட்களில் யெகோவாவுக்கு ஒரு உடன்படிக்கை செய்ய வேண்டியதாய் இருந்தது; அதை யூதர்கள் மீறினால் அவர்கள் சாபத்துக்கு ஆளாவார்கள். அவர்கள் தங்கள் அந்நியநாட்டு மனைவிகளை விட்டுவிடவும் சுற்றிலுமுள்ள தேசங்களிலிருந்து தங்களைப் பிரித்துவைத்துக்கொள்ளவும் உறுதியளிக்க வேண்டியதாயிருந்தது. இந்த உடன்படிக்கையை செய்வதற்கு முன்பும் தங்கள் குற்றத்தை அறிக்கையிடும்போதும் முழு சபையும் உபவாசமிருந்தது. (நெகேமியா 9:1, 38; 10:29, 30) நன்கு யோசித்து எடுக்க வேண்டிய முக்கியமான தீர்மானங்களை எதிர்ப்படும்போது, ஒரு கிறிஸ்தவர் ஒரு குறுகிய காலப்பகுதிக்கு உணவு உட்கொள்ளாமல் இருக்கலாம்.
பூர்வ கிறிஸ்தவ சபையில் மூப்பர் குழுவினர் தீர்மானங்கள் எடுத்தபோது, அவர்கள் சில சமயங்களில் உபவாசம் இருந்தனர். இன்று சபை மூப்பர்கள் கடினமான தீர்மானங்களை எதிர்ப்படும்போது, ஒருவேளை நியாய விசாரணை வழக்கு சம்பந்தமாக இருந்தால், அந்த விஷயத்தை சிந்திக்கையில் உணவு உட்கொள்வதிலிருந்து விலகியிருக்கலாம்.
சில குறிப்பிட்ட சந்தர்ப்பங்களின்போது உபவாசமிருக்க தெரிந்துகொள்வது ஒரு தனிப்பட்ட நபரின் தீர்மானம். இந்த விஷயத்தைக் குறித்து ஒருவர் மற்றொருவரை நியாயந்தீர்க்கக்கூடாது. ‘மனுஷருக்கு நீதிமான்கள் என்று புறம்பே காணப்பட’ நாம் விரும்பக்கூடாது; அதே சமயத்தில் முக்கியத்துவம் வாய்ந்த கடமைகளை நாம் கவனித்துக்கொள்வதில் குறுக்கிடும்படி உணவை அவ்வளவு முக்கியமானதாக நாம் கருதிவிடக்கூடாது. (மத்தேயு 23:28; லூக்கா 12:22, 23) நாம் உபவாசமிருக்கும்படி கடவுள் தேவைப்படுத்துவதுமில்லை அல்லது உபவாசமிருப்பதிலிருந்து அவர் நம்மைத் தடைசெய்வதுமில்லை என்று பைபிள் காண்பிக்கிறது.
[பக்கம் 7-ன் படம்]
இயேசு தம் முழுக்காட்டுதலுக்குப் பின் 40 நாட்கள் ஏன் உபவாசமிருந்தார் என்று உங்களுக்குத் தெரியுமா?