இடிபாடுகளின் மத்தியில் நிவாரணம் அளித்தல்
பேரழிவை அடுத்து, உடனே நிவாரணம் அளிக்க முற்படும் மனிதனின் முயற்சி உண்மையில் மெச்சத்தகுந்ததே. பல நிவாரணத் திட்டங்கள் வீடுகளை மீண்டும் கட்டுவதற்கும், குடும்பங்கள் இணைவதற்கும் உதவியுள்ளன. எல்லாவற்றிற்கும் மேலாக உயிர்களைக் காப்பாற்ற உதவியுள்ளன.
பேரழிவு தாக்கும்போது, உலகப்பிரகாரமான நிவாரணத் திட்டங்களின் மூலம் அளிக்கப்படும் எத்தகைய உதவிப்பொருட்களையும் யெகோவாவின் சாட்சிகள் பயன்படுத்திக்கொள்கிறார்கள், அவற்றிற்காக நன்றியுள்ளவர்களாக இருக்கிறார்கள். அதேசமயத்தில், ‘விசேஷமாக விசுவாச குடும்பத்தார்களுக்கு, நன்மைசெய்யக்கடவோம்’ என்ற வேதப்பூர்வமான ஓர் உத்தரவாதத்தையும் கொண்டுள்ளனர். (கலாத்தியர் 6:10) ஆம், சாட்சிகள், ஒருவரையொருவர் உறவினர்களைப்போல் கருதுகிறார்கள்; ஒரே “குடும்பம்” என நோக்குகிறார்கள். அதனால்தான், ஒருவரையொருவர் “சகோதரர்” என்றும் “சகோதரி” என்றும் அழைக்கின்றனர்.—மாற்கு 3:31-35-ஐ ஒப்பிடுக; பிலேமோன் 1, 2.
ஆகவே, ஒரு பேரழிவால் அக்கம் பக்கம் பாதிக்கப்படுகையில், சபையின் அங்கத்தினர் ஒவ்வொருவரும் எங்கே உள்ளனர், அவர்களது தேவைகள் என்ன என்று அறியவும், தேவைப்படும் உதவிக்கான ஏற்பாடுகளைச் செய்யவும் யெகோவாவின் சாட்சிகளின் மத்தியிலிருக்கும் மூப்பர்கள் கடின முயற்சிகளை எடுக்கிறார்கள். கானாவிலுள்ள அக்ராவிலும், அ.ஐ.மா.-வின் சான் ஏன்ஜலோவிலும், ஜப்பானிலுள்ள கோப்பிலும் இது எவ்வாறு உண்மையில் நடந்தது என்பதைப் பார்க்கலாம்.
அக்ரா—“சிறியளவில் நோவாவின் நாள்”
இரவு சுமார் 11 மணியளவில் மழைபெய்ய ஆரம்பித்தது, அது மணிக்கணக்கில் இடைவிடாமல் கொட்டியது. “அவ்வளவு பலமாக மழைபெய்ததால், என் குடும்பத்திலுள்ள அனைவராலும் தூங்க முடியவில்லை” என்பதாக அக்ராவிலுள்ள யெகோவாவின் சாட்சிகளில் ஒருவரான ஜான் டூமாசி கூறுகிறார். டெய்லி கிராஃபிக் அதனை “சிறியளவில் நோவாவின் நாள்” என அழைத்தது. “சில விலையுயர்ந்த பொருட்களை, மேல் மாடிகளில் கொண்டுசெல்ல நாங்கள் முயன்றோம், ஆனால் மாடிக்கி போகும் கதவை நாங்கள் திறந்தமாத்திரத்தில், வெள்ளம் உள்ளே பெருக்கெடுத்தது” என்று ஜான் தொடர்ந்து கூறுகிறார்.
அவ்விடத்தைவிட்டு வெளியேறும்படி அதிகாரிகள் எச்சரித்தார்கள், இருப்பினும் பலர், ஆளில்லாத வீடு, தண்ணீரால் நிறைந்திருந்தாலும், அநேகமாக கொள்ளையர்களை ஆசைக்காட்டி அழைப்பதாய் இருக்கும் என பயந்து வெளியேற தயங்கினார்கள். சிலரால் வெளியேற வேண்டும் என்று விரும்பினாலும்கூட அவர்களால் வெளியேற முடியவில்லை. “என் அம்மாவாலும் என்னாலும் கதவை திறக்கவே முடியவில்லை. தண்ணீர் மேலே மேலே ஏறிக்கொண்டிருந்தது, ஆகவே மர பீப்பாய்களின் மேல் ஏறி நின்று, வீட்டுக்கூரையின் உத்தரத்தைப் பிடித்துக்கொண்டிருந்தோம். கடைசியில், காலை சுமார் ஐந்து மணியளவில், எங்களுடைய அக்கம் பக்கத்தார் வந்து எங்களைக் காப்பாற்றினார்கள்” என்பதாக பாலினா என்ற ஒரு பெண் கூறினாள்.
கூடியவரையில், வெகுவிரைவிலேயே, யெகோவாவின் சாட்சிகள் செயலில் இறங்கினார்கள். பியட்ரஸ் என்ற ஒரு கிறிஸ்தவ சகோதரி விவரிக்கிறார்: “சபையின் மூப்பர்கள் எங்களைத் தேடிக்கொண்டிருந்தார்கள், அவர்கள் எங்களை ஓர் உடன் சாட்சியின் வீட்டில் கண்டுபிடித்தார்கள், அங்குதான் நாங்கள் அடைக்கலம் புகுந்தோம். வெள்ளம் வந்துபோன மூன்றாம் நாளே, சபையின் மூப்பர்களும், இளைஞர்களும் எங்களுடைய பகுதிக்கு ஓடோடி வந்தார்கள், வீட்டிற்குள்ளேயும் வெளியேயும் சேற்றைச் சுரண்டி கழுவினார்கள். சலவைப் பொருட்களையும், கிருமிநாசினிகளையும், பெயின்ட், மெத்தைகள், போர்வைகள், துணி, குழந்தைகளுக்கு உடைகள் ஆகியவற்றையும் உவாட்ச் டவர் சொஸைட்டி அளித்தது. பல நாட்களுக்கு சகோதரர்கள் எங்களுக்கு உணவை அனுப்பி வைத்தார்கள். நான் மிகவும் நெகிழ்ந்துபோனேன்!”
முன்பு குறிப்பிடப்பட்ட ஜான் டூமாசி, அறிவிக்கிறார்: “முழு அப்பார்ட்மென்டையும் கழுவுவதற்குப் போதுமான சலவைப்பொருட்களையும் கிருமிநாசினிகளையும் எங்களுடைய சொஸைட்டி அனுப்பி வைத்துள்ளது என்று மற்ற குடித்தனக்காரர்களிடம் நான் சொன்னேன். சுமார் 40 குடித்தனக்காரர்கள் சுத்தம் செய்வதில் உதவினார்கள். நான் சலவைப் பொருட்களில் சிலவற்றை அக்கம் பக்கத்தில் உள்ளவர்களுக்குக் கொடுத்தேன், அதில் உள்ளூர் பாதிரியார் ஒருவரும் அடங்குவார். என்னுடன் வேலைசெய்பவர்கள், யெகோவாவின் சாட்சிகள் தங்களுடைய சொந்த மக்களுக்கு மாத்திரம் உதவுவார்கள் என்று தவறாக நினைத்திருந்தார்கள்.”
தங்களுக்கு அளிக்கப்பட்ட அன்பான உதவியைக் கிறிஸ்தவ சகோதர சகோதரிகள் பெரிதும் போற்றினார்கள். சகோதரர் டூமாசி இவ்வாறு முடிக்கிறார்: “நான் பெற்ற நிவாரணப் பொருட்களின் மதிப்பைவிட, வெள்ளத்தில் இழந்த பொருட்களின் பணமதிப்பு அதிகமாக இருந்தாலும்கூட, உணர்ச்சி ததும்ப செய்யும் இந்த உதவிப்பொருட்களை சொஸைட்டியிடமிருந்து பெற்றதினால், நாங்கள் இழந்ததைக் காட்டிலும் அதிகம் பெற்றதாக என் குடும்பமும் நானும் உணர்ந்தோம்.”
சான் ஏன்ஜலோ—“உலகமே இடிந்து விழுவதுபோல் இருந்தது”
மே 28, 1995 அன்று சான் ஏன்ஜலோவை உலுக்கிய சூறாவளி காற்று, மரங்களை வேரோடு பிடுங்கி எறிந்து, மின்சார கம்பங்களை முறித்து, மின்சாரம் பாய்ந்துகொண்டிருந்த மின் கம்பிகளை ரோடுகளின் குறுக்கே அறுத்துப்போட்டது. காற்று மணிக்கு 160 கிலோமீட்டர் வேகத்தில் வீசி, பொதுப்பணி கட்டடங்களையெல்லாம் சேதப்படுத்தியது. 20,000-க்கும் மேற்பட்ட வீடுகள் இருளில் மூழ்கின. பிறகு கல்மழை வந்தது. தேசிய வானிலை நிலையம் அறிவித்தது: “எலுமிச்சை அளவில் இருந்தது கல்மழை” பிறகு “சாத்துக்குடி அளவில் இருந்தது கல்மழை” கடைசியாக “பம்பளிமாசு அளவில் இருந்தது கல்மழை.” காதைக் கிழிக்கும் ஓசையுடன் கல்மழை விழுந்தது. அங்குக் குடியிருக்கும் ஒருவர் கூறினார்: “உலகமே இடிந்து விழுவதுபோல் இருந்தது.”
புயலுக்குப்பின் மயான அமைதி நிலவியது. சேதத்தைப் பார்வையிட மக்கள் மெல்ல மெல்ல தங்களுடைய தாக்கப்பட்ட வீடுகளிலிருந்து வெளியே வந்தார்கள். சாயாதிருந்த மரங்கள் குச்சி குச்சாக நின்றிருந்தன. அப்பொழுதும் நிலையாக இருந்த வீடுகள் மொட்டையாக்கப்பட்டவைபோல் காட்சியளித்தன. சில இடங்களில் ஒரு மீட்டர் உயரத்திற்கு சகதியால் தரையை மூடியது கல்மழை. வீடுகளிலிருந்த ஆயிரக்கணக்கான சன்னல்களும் வாகனங்களும் புயலில் நொறுங்கியதால் தரையை மூடியுள்ள பனிக்கட்டிகளோடு உடைந்த கண்ணாடி துண்டுகளும் சேர்ந்து மின்னின. ஒரு பெண் கூறினார், “நான் வீட்டை நெருங்கியவுடன், டிரைவ்வேயில் (driveway) அப்படியே என் காரில் உட்கார்ந்து அழுதேன். சேதம் அவ்வளவு மோசமாக இருந்தது, அது என்னை அப்படியே துயரில் ஆழ்த்தியது.”
நிவாரணத் திட்டங்களும் மருத்துவ மனைகளும் பொருளாதார உதவி, கட்டடப் பொருட்கள், மருத்துவ சிகிச்சை மற்றும் ஆலோசனை ஆகியவற்றை உடனடியாக வழங்கின. புயலுக்கு பலியான பலரும் தங்களால் முடிந்த அளவுக்கு மற்றவர்களுக்கு உதவினார்கள் என்பது பாராட்டத்தக்க விஷயம்.
யெகோவாவின் சாட்சிகளுடைய சபைகளும்கூட செயல்பட்டன. சான் ஏன்ஜலோவைச் சேர்ந்த அப்பிரி கார்னர் என்னும் ஒரு மூப்பர் அறிவிக்கிறார்: “புயல் நின்றவுடனேயே, நிலைமையை அறிந்துகொள்ள ஒருவரோடொருவர் போனில் தொடர்புகொண்டோம். முடிந்தளவுக்கு ஜன்னல்களுக்குப் பலகைப் போட, கூரைகளுக்குப் பிளாஸ்ட்டிக் போட, வீடுகளுக்கு சீதோஷ்ண பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்ய எங்களுக்குள் ஒருவருக்கொருவர் உதவினோம் மற்றும் சாட்சிகள் அல்லாத எங்கள் அண்டை வீட்டாருக்கும் உதவினோம். சபையில் வீடு பாதிக்கப்பட்ட ஒவ்வொரு நபரின் பெயரும் அடங்கிய ஒரு பதிவேட்டை தயாரித்தோம். சுமார் நூறு வீடுகளைப் பழுதுபார்க்கவேண்டிய தேவை இருந்தது. நிவாரண ஏஜென்ஸிகளால் வழங்கப்பட்ட பொருட்கள் போதவில்லை. ஆகவே, நாங்கள் கூடுதலான பொருட்களை வாங்கி, வேலையை ஒழுங்கமைத்தோம். ஒவ்வொரு வார இறுதியிலும் கிட்டத்தட்ட 250 பேர் என்ற கணக்கில் ஒட்டுமொத்தமாக, சுமார் 1,000 சாட்சிகள் தாமாகவே உதவ முன்வந்தார்கள். அவர்கள் 740 கிலோமீட்டர் தூரத்திலிருந்தும் வந்தார்கள். பெரும்பாலும் 40 டிகிரி செல்சியஸ் சீதோஷ்ணநிலையில் அனைவரும் சலிக்காமல் உழைத்தார்கள். ஒரே ஒரு வாரம் தவிர மற்ற எல்லா வார இறுதியிலும் ஒரு 70 வயது சகோதரியும் எங்களோடு பணிபுரிந்தார்; அன்று அவர்களுடைய வீடு பழுதுபார்க்கப்படவிருந்தது. அந்த வார இறுதியில், தன்னுடைய கூரையின்மீது இருந்துகொண்டு, பழுதுபார்க்க அவர் உதவிக்கொண்டிருந்தார்!
“வேடிக்கை பார்த்தவர்கள் இவ்வாறு கூறியது அடிக்கடி எங்கள் காதுகளில் விழுந்தது: ‘மற்ற மதங்களும் அவர்களுடைய அங்கத்தினர்களுக்கு இப்படி செய்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்?’ 10 முதல் 12 வாலண்டியர்கள் (சகோதரிகளையும் சேர்த்து) அடங்கிய குழு, வெள்ளிக்கிழமை அதிகாலையிலேயே ஓர் உடன் சாட்சியின் வீட்டிற்கு வந்து, இலவசமாக பழுதுபார்க்க அல்லது முழு கூரையையும் மீண்டும் கட்ட தயாராவதைக் கண்டு எங்களுடைய அண்டை வீட்டார் மிகவும் கவரப்பட்டார்கள். அநேக சந்தர்ப்பங்களில், ஒரே வார இறுதிக்குள் வேலை முடிந்துவிட்டது. சில நேரங்களில், சாட்சி அல்லாத ஒரு கான்ட்ராக்டர் கூரையைப் போடும் வேலையில் முழுமையாக ஈடுபட்டிருப்பார், அப்போதுதான் அடுத்த வீட்டில் நம் குழு வந்து இறங்கும். அவர்கள் வேலையை முடிப்பதற்கு முன்பே நாங்கள் கூரையைப் பிய்த்து எறிந்துவிட்டு, மீண்டும் கூரையைப் போட்டுவிட்டு, தாழ்வாரத்தைச் சுத்தம் செய்து முடித்திருப்போம். சில நேரங்களில் எங்களை வேடிக்கை பார்ப்பதற்காகவே அவர்களுடைய வேலையை நிறுத்திவிட்டார்கள்!”
சகோதரர் கானர் இவ்வாறு முடிக்கிறார்: “எல்லாரும் ஒன்றுசேர்ந்து மகிழ்ந்து களித்த அனுபவங்களை நாங்கள் அனைவருமே இழக்கப்போகிறோம். முன்னோருபோதும் இல்லாத அளவில் சகோதர அன்பைக்காட்டியும் அன்பைப்பெற்றும், வித்தியாசமான ஒரு கோணத்தில் ஒருவரையொருவர் அறிந்துகொண்டோம். கடவுளுடைய புதிய உலகில் சகோதரர்களும் சகோதரிகளும் ஒருவருக்கொருவர் உதவிசெய்யும்போது எப்படி இருக்கும் என்பதற்கு இது சிறியளவிலான வெறும் ஒரு மாதிரியே என நாங்கள் நினைக்கிறோம். ஏனென்றால் உண்மையில் அவ்வாறு செய்யவேண்டுமென அவர்கள் விரும்புகிறார்கள்.”—2 பேதுரு 3:13.
கோப்—“சிதைந்த மரச்சட்டங்கள், சுவர்கள், மனித உடல்கள்”
கோபியிலிருந்த குடிமக்கள், தயார்நிலையில் இருந்ததாகவே கருதப்படுகிறது. பார்க்கப்போனால், ஒவ்வொரு செப்டம்பர் 1-ம் தேதியை அவர்கள் இயற்கை நாசத்தை தடுக்கும் நாளாக அனுஷ்டிக்கிறார்கள். அன்று, பூமியதிர்ச்சி வரும்போது செயல்படுவதற்கான பயிற்சிகளைப் பள்ளிப் பிள்ளைகள் பழகுவார்கள், இராணுவத்தினர் ஹெலிகாப்டரில் சென்று காப்பாற்றும் பணியைப் செய்து பார்ப்பார்கள். தீயணைக்கும் துறை தங்களுடைய பூமியதிர்ச்சியைப் போலியாக தூண்டும் இயந்திரங்களை வெளியே கொண்டுவருவார்கள், அதில் ஓர் அறையின் அளவில் ஒரு பெட்டி இருக்கும், அது உண்மையில் பூமியதிர்ச்சி ஏற்பட்டதைப்போல் அசையும் மற்றும் அதிரும். விருப்பம் உள்ளவர்கள் அதில் சென்று தங்களுடைய தப்பித்துக்கொள்ளும் திறமைகளைப் பழகிக்கொள்ளலாம். ஆனால், ஜனவரி 17, 1995-ல் உண்மையிலேயே பூமியதிர்ச்சி வந்தபோது, எல்லா தயாரிப்புகளும் ஒன்றுக்கும் பயன் அற்றவை என தோன்றியது. பத்தாயிரக்கணக்கான கூரைகள் விழுந்தன. இது அந்த இயந்திரங்களில் ஒருபோதும் நிகழ்ந்ததே கிடையாது. இரயில்கள் தடம்புரண்டன; நெடுஞ்சாலை துண்டுத் துண்டாக பிளந்தன; எரிவாயு மற்றும் தண்ணீர் குழாய்கள் விரிசல் விட்டன; அட்டையால் செய்யப்பட்டவைப்போல் வீடுகள் நொறுங்கி விழுந்தன. அந்தக் காட்சியை “சிதைந்த மரச்சட்டங்கள், சுவர்கள், மனித உடல்கள்” என்பதாக டைம் பத்திரிகை விவரித்தது.
பிறகு, தீ பிடித்துக்கொண்டது. இங்கோ கட்டடங்கள் தீயில் கொழுந்துவிட்டு எரிகையில், அங்கோ பல கிலோமீட்டர்களுக்கு நீண்டிருந்த போக்குவரத்து நெரிசலில் பரிதவிக்கும் தீயணைப்பு படையினர் மாட்டிக்கொண்டனர். தீ பிடித்த இடத்தை சென்றடைந்த வீரர்கள், சேதமடைந்த நகர நீர் வாரியத்திலிருந்து தண்ணீர் எடுக்க முடியாமல் அடிக்கடி திண்டாடினர். ஒரு அதிகாரி கூறியதாவது: “முதல் நாள் முழுவதும் ஒரே திகில் நிறைந்திருந்தது. அதோ எரிந்துகொண்டிருக்கும் அந்த வீடுகளில் எத்தனையோ ஆட்கள் மாட்டிக்கொண்டிருக்கின்றனர் என்று தெரிந்தும், என்னால் எதுவுமே செய்யமுடியவில்லையே என அறிந்தபோது, என் கையாலாகத்தனத்தை இவ்வளவாய் நான் ஒருபோதும் வாழ்க்கையில் உணர்ந்ததே இல்லை.”
சுமார் 5,000 ஆட்கள் கொல்லப்பட்டனர் எனவும், கிட்டத்தட்ட 50,000 கட்டடங்கள் சிதைந்துவிட்டன எனவும் அனைவரும் கூறினர். கோபியில், தேவைப்பட்ட உணவில் மூன்றில் ஒரு பங்குதான் இருந்தது. தண்ணீரைப் பெற, சிலர் அந்த உடைந்த தண்ணீர் குழாய்களின் கீழே இருந்த அழுக்கு நீரை வழித்து எடுத்தனர். வீடுகளை இழந்தவர்களில் பலர் புகலிடங்களை நோக்கி ஓடினார்கள், சில புகலிடங்களில் ஒவ்வொருவருக்கும் நாள் ஒன்றுக்கு ஒரு உருண்டை அளவு சாப்பாடு அளந்து தரப்பட்டது. அதிருப்தி விரைவாகப் பரவியது. “அதிகாரிகள் ஒன்றுமே செய்யவில்லை. அவர்களை தொடர்ந்து நம்பினால், பட்டினி கிடந்தே நாங்கள் சாகவேண்டியதுதான்” என்பதாக ஒருவர் புகார் செய்தார்.
கோபியிலும் அதன் அருகிலும் இருந்த யெகோவாவின் சாட்சிகளுடைய சபைகள் உடனே தங்களைப் பணிக்காக ஒழுங்கமைத்துக்கொண்டன. அவர்களது பணியை நேரில் கண்ட ஹெலிகாப்டர் பைலட் ஒருவர் கூறினார்: “பூமியதிர்ச்சி ஏற்பட்ட நாளன்று, பேரழிவு நிகழ்ந்த இடத்திற்கு சென்று, அங்கே ஒரு வாரத்தைச் செலவிட்டேன். ஒரு புகலிடத்திற்கு நான் சென்றபோது, அங்கே அனைத்தும் ஒரே தாறுமாறாக இருந்தன. எத்தகைய நிவாரணப்பணியும் செய்யப்படாமலேயே இருந்தது. யெகோவாவின் சாட்சிகள் மாத்திரம் இவ்விடத்திற்கு விரைந்தோடிவந்து, தேவையானவற்றைச் செய்துகொண்டிருந்தனர்.”
உண்மையில், செய்வதற்கோ அதிகம் இருந்தது. பத்து ராஜ்ய மன்றங்கள் உபயோகிக்க லாயிக்கற்று இருந்தன, 430-க்கும் மேற்பட்ட சாட்சிகள் வீடு இன்றி இருந்தனர். இன்னும்கூடுதலாக, 1,206 பேர் இருந்த வீடுகள் பழுதுபார்க்க வேண்டியிருந்தன. அதுமட்டும் அல்ல, பேரழிவில் இறந்துபோன 15 சாட்சிகளின் குடும்பத்தினருக்கு ஆறுதல் மிக அவசியமாக தேவைப்பட்டது.
பழுதுபார்க்கும் வேலையில் உதவுவதற்காக நாடெங்குமிருந்து சுமார் 1,000 சாட்சிகள் தங்களுடைய நேரத்தைக் கொடுக்க முன்வந்தனர். “இன்னும் முழுக்காட்டப்படாத பைபிள் மாணாக்கர்களின் வீடுகளில் நாங்கள் வேலை செய்தபோது, ‘இவை எல்லாவற்றிற்கும் நாங்கள் எவ்வளவு காசு கொடுக்க வேண்டும்?’ என்று எப்போதும் எங்களிடம் கேட்பார்கள். இந்த வேலையானது சபைகளினால் ஆதரிக்கப்படுகிறது என்று நாங்கள் சொல்லும்போது, ‘ஆக, நாங்கள் படித்தவை இப்பொழுது நிஜமாகக் காண்கிறோமே!’ என்று வியந்து, எங்களுக்கு நன்றி கூறினார்கள்” என்பதாக ஒரு சகோதரர் குறிப்பிடுகிறார்.
பேரழிவுக்கு சாட்சிகள் துரிதமாகவும் முழுமையாகவும் செயல்பட்டதால் பலர் கவரப்பட்டனர். முன்பு குறிப்பிட்ட பைலட் கூறுகிறார்: “நான் மிகவும் கவரப்பட்டேன். நீங்கள் ஒருவரையொருவர் ‘சகோதரர்’ என்றும் ‘சகோதரி’ என்றும் அழைக்கிறீர்கள். ஒருவருக்கொருவர் எவ்வாறு உதவுகிறீர்கள் என்பதைக் கண்டேன்; உண்மையிலேயே நீங்கள் ஒரு குடும்பம்தான்.”
அந்தப் பூமியதிர்ச்சியிலிருந்து சாட்சிகளும் நல்ல படிப்பினையைக் கற்றுக்கொண்டனர். ஒரு சகோதரி பெற்றுக்கொண்ட பரிவுமிக்க பராமரிப்பு அவரது கருத்தையே மாற்றியது. அவர் இவ்வாறு ஒத்துக்கொண்டார்: “ஒரு அமைப்பு பெரிதாக பெரிதாக, தனிப்பட்ட கவனிப்பை அளிப்பது கடினமாக இருக்கும் என்பதாக நான் எப்போதும் நினைத்திருந்தேன். யெகோவா நம்மை ஒரு அமைப்பாக மாத்திரம் அல்லாமல் தனிப்பட்டவர்களாகவும் பராமரிக்கிறார் என்பது இப்போது எனக்குத் தெரியும்.” இருப்பினும் பேரழிவுகளிலிருந்து நிரந்தரமான நிவாரணம் வரவிருக்கிறது.
நிரந்தர நிவாரணம் விரைவில்!
மனித வாழ்க்கையும், ஜீவாதாரமும் பேரழிவுகளால் குறைக்கப்படாத ஒரு காலத்திற்காக யெகோவாவின் சாட்சிகள் முன்நோக்கி உள்ளனர். கடவுளின் புதிய உலகில், பூமியின் சுற்றுச்சூழலுடன் எவ்வாறு ஒத்திசைந்துபோவது என்பது மனிதனுக்கு கற்றுக்கொடுக்கப்படும். மனிதர்கள் தன்னல பழக்கங்களை விட்டுவிடும்போது, அவர்கள் இயற்கை சீற்றங்களுக்கு ஆளாவதும் குறையும்.
மேலும், இயற்கை சக்திகளின் படைப்பாளராகிய யெகோவா தேவன், மனித குடும்பமும், பூலோக சிருஷ்டிகளும் ஒருபோதும் இயற்கை சக்திகளால் அச்சுறுத்தப்படாமல் இருக்கும்படி பார்த்துக்கொள்வார். அப்போது, பூமி உண்மையிலேயே ஒரு பரதீஸாக இருக்கும். (ஏசாயா 65:17, 21, 23; லூக்கா 23:43) வெளிப்படுத்துதல் 21:4-ல் உள்ள தீர்க்கதரிசனம் மகத்தான விதத்தில் நிறைவேறியிருக்கும்: “அவர்களுடைய கண்ணீர் யாவையும் தேவன் துடைப்பார்; இனி மரணமுமில்லை, துக்கமுமில்லை, அலறுதலுமில்லை, வருத்தமுமில்லை; முந்தினவைகள் ஒழிந்துபோயின என்று விளம்பினது.”
[பக்கம் 5-ன் படம்]
பியட்ரஸ் ஜோன்ஸ் (இடப்பக்கம்) தானும் மற்றவர்களும் எவ்வாறு கைகளைக் கோர்த்துக்கொண்டு வெள்ளப்பெருக்கை கடந்தார்கள் என நடித்துக்காட்டுகிறார்
[பக்கம் 6-ன் படம்]
சூறாவளி காற்றுக்குப் பின் நிவாரணப் பணி