நாமனைவரும் ஏன் கடவுளைத் துதிக்க வேண்டும்?
அல்லேலூயா! கிறிஸ்தவமண்டலத்திலுள்ள சர்ச்சுக்குப் போகிற ஆட்களுக்கு இந்த வார்த்தை நன்கு தெரியும். அவர்களில் சிலர் தங்களுடைய ஞாயிற்றுக்கிழமை கூட்டங்களில் அதை திடீரென சத்தமாக சொல்லுகின்றனர். இருந்தபோதிலும், அந்த வார்த்தை உண்மையிலேயே எதை அர்த்தப்படுத்துகிறது என்பது எத்தனை பேருக்குத் தெரியும்? சொல்லப்போனால், அது, “யாவைத் துதி” என்பதற்கான எபிரெய வார்த்தை. அது, யெகோவா என்ற பெயரையுடைய படைப்பாளருக்கு சந்தோஷத்துடன் ஆர்ப்பரிக்கும் ஒரு தொனி.a
“அல்லேலூயா” என்ற வார்த்தை பைபிளில் அடிக்கடி வருகிறது. ஏன்? ஏனெனில் கடவுளைத் துதிப்பதற்கு அநேக காரணங்கள் உள்ளன. யா (யெகோவா) என்பவர் பரந்த அண்டத்தின் படைப்பாளரும் காப்பாளருமாய் இருக்கிறார். (சங்கீதம் 147:4, 5; 148:3-6) பூமியில் ஜீவராசிகள் வாழ்வதை சாத்தியமாக்கும் சூழ்நிலை மண்டலங்களை (ecosystems) அவர் ஏற்படுத்தினார். (சங்கீதம் 147:8, 9; 148:7-10) மேலும் மனிதவர்க்கத்தின்மீது அவர் விசேஷ அக்கறை கொள்கிறார். நாம் அவரது சித்தத்தைச் செய்தால், இந்தத் தற்போதைய வாழ்க்கையில் நம்மை ஆசீர்வதித்து ஆதரிக்கிறார், வரவிருக்கும் மேம்பட்ட வாழ்க்கையைப் பற்றிய நிச்சயமான நம்பிக்கையையும் நமக்குத் தருகிறார். (சங்கீதம் 148:11-14) “நீதிமான்கள் பூமியைச் சுதந்தரித்துக்கொண்டு, என்றைக்கும் அதிலே வாசமாயிருப்பார்கள்,” என்ற இந்த வார்த்தைகளை ஏவியவரும் யா (யெகோவா) என்பவரே.—சங்கீதம் 37:29.
எனவே, அனைவருக்கும் இந்தப் புத்திமதி கொடுக்கப்படுகிறது: “அல்லேலூயா” “மக்களே, யாவைத் துதியுங்கள்!” (சங்கீதம் 104:35, NW அடிக்குறிப்பு) இருந்தபோதிலும், இதற்கு எல்லாரும் செவிகொடுப்பதில்லை என்பது வருந்தத்தக்கது. இன்று, மக்கள் துன்பப்பட்டுக் கொண்டிருக்கின்றனர். அநேகர் பசியாகவோ வியாதியாகவோ ஒடுக்கப்பட்டவர்களாகவோ இருக்கின்றனர். போதைப்பொருளையோ அல்லது மதுபானத்தையோ துர்ப்பிரயோகம் செய்வதன் காரணமாக அல்லது தங்களுடைய ஒழுக்கயீனத்தின் அல்லது கலகத்தின் விளைவாக எண்ணற்றோர் பெருந்துயரத்தை சகிக்கின்றனர். இப்படிப்பட்டவர்கள் ஏன் கடவுளைத் துதிக்க வேண்டும் என்பதற்கு ஏதாவது காரணம் இருக்கிறதா?
‘யெகோவா மட்டுந்தான் எனக்கு நம்பிக்கையளிக்க முடிந்தது’
ஆம், இருக்கிறது. அவரைப் பற்றி தெரிந்துகொள்வதற்கும் அவருடைய சித்தத்தைச் செய்ய கற்றுக்கொள்வதற்கும் மக்கள் அவரைத் துதிப்பதற்கு விரும்பும்படி செய்விக்கிற ஆசீர்வாதங்களை அனுபவித்து மகிழுவதற்கும் விதிவிலக்கின்றி அனைவரையும் யெகோவா அழைக்கிறார். அநேகர் பிரதிபலிக்கிறார்கள். உதாரணமாக, குவாதமாலாவிலுள்ள ஏட்ரியானாவை எடுத்துக்கொள்ளுங்கள். ஏட்ரியானா ஏழு வயதாக இருந்தபோது, அவளுடைய தாய் இறந்துவிட்டார். அதற்குப் பிறகு கொஞ்ச காலத்திலேயே அவளுடைய தகப்பனும் வீட்டைவிட்டு ஓடிப்போய்விட்டார். அவளுக்கு பத்து வயதாக இருந்தபோது, பிழைப்புக்காக வேலைசெய்ய ஆரம்பித்தாள். கடவுளுக்கும் சர்ச்சுக்கும் சேவைசெய்யும்படி அவளுடைய தாய் சொல்லியிருந்ததால், ஏட்ரியானா பல்வேறு கத்தோலிக்க தொகுதிகளுடன் கூட்டுறவுகொண்டாள். ஆனால் 12 வயதாக இருந்தபோது, அந்த மதத் தொகுதிகளால் அவள் ஏமாற்றப்பட்டாள், எனவே ஒரு தெரு கும்பலுடன் சேர்ந்துகொண்டாள். அவள் புகைபிடிக்கவும் போதைப் பொருட்களை எடுக்கவும் திருடவும் ஆரம்பித்தாள். இதுபோன்ற ஒரு சிறுமி ஏன் கடவுளைத் துதிக்க விரும்புகிறாள்?
ஏட்ரியானாவின் சகோதரி யெகோவாவின் சாட்சிகளுடன் பைபிளைப் படிக்க ஆரம்பித்தாள், ஆனால் ஏட்ரியானா அவளைப் பார்த்து சிரித்தாள். பின்பு அவர்களுடைய பெரியம்மா இறந்துபோனார். அவளுடைய பெரியம்மாவின் சவ அடக்க ஆராதனையின்போது, மனதை அலைக்கழிக்கிற கேள்விகளால் தொல்லைபடுத்தப்பட்டாள். அவளுடைய பெரியம்மா எங்கே போனார்? அவர் பரலோகத்தில் இருந்தாரா? ஒரு எரிநரகத்திற்கு போனாரா? அது மிகவும் குழப்புவதாய் இருந்தது, எனவே உதவிக்காக ஜெபிப்பதற்காக கல்லறையிலுள்ள சேப்பலுக்கு ஏட்ரியானா போனாள்; அவளுடைய சகோதரி கற்றுக்கொடுத்தபடி, கடவுளுடைய பெயராகிய யெகோவா என்பதைப் பயன்படுத்தினாள்.
விரைவிலேயே யெகோவாவின் சாட்சிகளுடன் படித்துக்கொண்டும் அவர்களுடைய கிறிஸ்தவ கூட்டங்களுக்கு ஆஜராகிக்கொண்டும் வந்தாள். இது, வாழ்க்கையைக் குறித்ததில் முழுவதும் ஒரு புதிய நோக்குநிலையை அவளுக்குக் கொடுத்தது; தெரு கும்பல்களுடன் அவள் வைத்திருந்த தொடர்புகளை தைரியமாய் முறித்துக்கொண்டாள். இப்பொழுது ஏறக்குறைய 25 வயதாக இருக்கும் ஏட்ரியானா சொல்கிறாள்: “யெகோவாவுக்கான அன்புதான் இப்படிப்பட்ட மோசமான வாழ்க்கையை விட்டுவிடும்படி என்னை செய்வித்தது. யெகோவா மட்டுந்தான் அவருடைய மிகுந்த இரக்கத்தினால் நித்திய ஜீவனுக்கான நம்பிக்கையை எனக்கு கொடுக்க முடிந்தது.” ஏட்ரியானா, தன்னுடைய வாழ்க்கையின் ஆரம்பத்தில் கடினமான சூழ்நிலைமையை அனுபவித்தபோதிலும், கடவுளைத் துதிப்பதற்கான மிகச் சிறந்த காரணங்களைக் கொண்டிருக்கிறாள்.
இன்னும் அதிக நம்பிக்கையற்ற ஒரு சூழ்நிலைமை உக்ரேனிலிருந்து அறிக்கை செய்யப்பட்டிருக்கிறது. ஒரு மனிதன் மரண தண்டனைக்காக காத்துக்கொண்டு சிறைச்சாலையில் உட்கார்ந்திருக்கிறார். அவர் தன்னைக் குறித்து பரிதாபப்பட்டுக் கொண்டிருக்கிறாரா? மனச்சோர்வடைந்துவிட்டாரா? இல்லை, அதற்கு முற்றிலும் வேறுபட்டவராய் இருக்கிறார். சமீபத்தில் யெகோவாவின் சாட்சிகளால் தொடர்புகொள்ளப்பட்டு யெகோவாவைப் பற்றி ஓரளவு அறிவைப் பெற்ற பின்பு, தன்னுடைய தாயை சந்திக்கும்படி அவர்களைக் கேட்டுக்கொண்டார். அவருடைய வேண்டுகோளை அவர்கள் நிறைவேற்றியதைக் கேள்விப்பட்டு, இப்பொழுது அவர்களுக்குக் கடிதம் எழுதுகிறார். அவர் சொல்லுகிறார்: “என்னுடைய தாயை சந்தித்ததற்காக உங்களுக்கு நன்றி. அது கடந்த வருடத்தில் எனக்குக் கிடைத்த மிகவும் சந்தோஷத்துக்குரிய செய்தியாய் இருந்தது.”
தன்னைக் குறித்தும் தான் சாட்சிகொடுத்த அந்த சிறைக்கைதிகளைக் குறித்தும் பேசுபவராய், அவர் இவ்வாறு எழுதுகிறார்: “இப்பொழுது எங்களுக்கு கடவுளிடம் விசுவாசம் இருக்கிறது, எங்களுடைய விசுவாசத்திற்கேற்ப செயல்படவும் முயற்சிக்கிறோம்.” அவர் தன்னுடைய கடிதத்தை இவ்வாறு முடிக்கிறார்: “அன்பு என்றால் என்ன என்பதைப் பற்றி கற்றுக்கொள்வதற்கும் விசுவாசத்தைப் பெற்றுக்கொள்வதற்கும் எங்களுக்கு உதவிசெய்ததற்காக உங்களுக்கு நன்றி. நான் உயிரோடிருந்தால், பிரசங்க வேலையில் நான் உங்களுக்கு உதவிசெய்வேன். நீங்கள் ஜீவித்திருப்பதற்காகவும் மற்றவர்கள் கடவுளில் அன்புகொண்டு அவரில் நம்பிக்கை வைப்பதற்கு உதவிசெய்வதற்காகவும் கடவுளுக்கு நன்றிசெலுத்துகிறேன்.” இந்த மனிதன் தன்னுடைய மரண தண்டனையைக் குறித்து அப்பீல் செய்திருக்கிறார். ஆனால் அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டாலும் அல்லது சிறைச்சாலையில் அநேக வருடங்களைக் கழிப்பதாக இருந்தாலும், தெளிவாகவே, கடவுளைத் துதிப்பதற்கான காரணத்தை உடையவராயிருக்கிறார்.
‘நான் குருடாக இருந்தாலும், என்னால் பார்க்க முடிகிறது’
இப்பொழுது, திடீரென்று தன்னுடைய பார்வையை இழந்துவிடுகிற துடிப்புள்ள ஒரு பருவப் பெண்ணை சிந்தித்துப் பாருங்கள். அர்ஜன்டினாவில் வசிக்கிற குளோரியாவுக்கு இதுதான் சம்பவித்தது. குளோரியா 19 வயதாக இருக்கும்போது திடீரென்று குருடாகிவிட்டாள், அவளுக்கு கண்பார்வை திரும்ப வரவே இல்லை. 29-வது வயதில், ஒரு மனிதனுக்கு வைப்பாட்டியாகி, அதற்குப் பின் சீக்கிரத்திலேயே கர்ப்பமாகிவிட்டாள். இப்பொழுது தன்னுடைய வாழ்க்கைக்கு ஓர் அர்த்தம் இருப்பதாக உணர்ந்தாள். ஆனால் அவள் தன்னுடைய குழந்தையை இழந்தபோதோ, கேள்விமேல் கேள்வி கேட்க ஆரம்பித்தாள். அவள் கேட்டாள், ‘எனக்குப் போய் ஏன் இதெல்லாம் நடக்குது? நான் என்ன செய்துட்டேன்? கடவுள் உண்மையிலேயே இருக்கிறாரா?’
இந்தச் சமயத்தில், யெகோவாவின் சாட்சிகளில் இருவர் அவளுடைய வீட்டிற்கு வந்தனர். அவள் பைபிளைப் படிக்க ஆரம்பித்து, புதிய உலகில் குருடர் மீண்டும் பார்வையடைவார்கள் என்ற அதன் நம்பிக்கையைப் பற்றி கற்றுக்கொண்டாள். (ஏசாயா 35:5) குளோரியாவுக்கு என்னே ஒரு அதிசயமான எதிர்பார்ப்பு! அவள் அதிக சந்தோஷப்பட்டாள், முக்கியமாக அவளுடைய கணவன் தங்களுடைய திருமணத்தை சட்டப்படியாக்குவதற்கு ஒத்துக்கொண்டபோது அவளுக்கு அதிக சந்தோஷமாய் இருந்தது. அதன் பின்பு அவளுடைய கணவனுக்கு ஒரு விபத்து ஏற்பட்டதால் ஒன்றும் செய்ய முடியாதவராகி, சக்கர நாற்காலியே கதி என்றாகிவிட்டார். குருடான அந்தப் பெண் இன்று பிழைப்புக்காக கடினமாக உழைக்க வேண்டியதாயிருக்கிறது. அதோடுகூட, வீட்டிலுள்ள எல்லா வேலைகளையும் செய்துகொண்டு, தன் கணவனுடைய தனிப்பட்ட தேவைகளையும் பார்த்துக்கொள்கிறாள். என்றபோதிலும் குளோரியா யெகோவாவைத் துதிக்கிறாள்! அவளுடைய கிறிஸ்தவ சகோதர சகோதரிகளுடைய உதவியால், பிரெய்ல் பைபிளைப் படிக்கிறாள்; ராஜ்ய மன்றத்தில் நடைபெறும் கிறிஸ்தவ கூட்டங்களினால் பேரளவில் உற்சாகப்படுத்தப்படுகிறாள். அவள் சொல்லுகிறாள்: “அதை விளக்குவது கஷ்டம், நான் குருடாக இருந்தாலும், என்னால் பார்க்க முடிவதுபோல் இருக்கிறது.”
கடவுளைத் துதிக்கையில் ஆட்கள் சிலசமயங்களில் துன்புறுத்தப்படுகிறார்கள். குரோயேஷியாவிலுள்ள ஒரு பெண் கடவுளைப் பற்றி கற்றுக்கொண்டபோது மகிழ்ச்சியாய் இருந்தாள்; ஆனால் அவளுடைய கணவன் அவள் புதிதாய் கண்டுபிடித்த மதத்தை எதிர்த்து, அவர்களுடைய ஒரு வயது மகளை எடுத்துக்கொண்டு அவளை ஒதுக்கிவிட்டார். தெருவில், கணவராலும் குடும்பத்தாராலும் கைவிடப்பட்டவளாய், ஒரு வீடோ வேலைவெட்டியோ இல்லாமல், தன்னுடைய குழந்தையும்கூட இல்லாமல், முதலில் அவள் அப்படியே இடிந்துபோய்விட்டாள். ஆனால், அந்தச் சின்னக் குழந்தை வளர்ந்து வருகையில் அவளுடைய மகளுடன் ஓரளவு தொடர்பே கொண்டபோதிலும், கடவுளுக்கான அவளுடைய அன்பு அவளைத் தாங்கியது. இந்தப் பெண் “விலையுயர்ந்த ஒரு முத்தைக்” கண்டுபிடித்திருந்தாள், அது தொலைந்துபோக அனுமதிக்கமாட்டாள். (மத்தேயு 13:45, 46) இப்படிப்பட்ட இக்கட்டான சமயங்களில் அவள் தன்னுடைய சந்தோஷத்தை எப்படி காத்துக்கொண்டாள்? அவள் சொல்லுகிறாள்: “சந்தோஷம் என்பது கடவுளுடைய ஆவியின் கனிகளில் ஒண்ணு. வெளியில வானிலை எப்படி இருந்தாலும் அதைச் சார்ந்து இருக்காமல் ஒரு கண்ணாடி கூண்டுக்குள் இருக்கிற செடிகள் வளர்ற மாதிரி வெளியில சூழ்நிலை என்னவாக இருந்தாலும் அந்த சந்தோஷத்தை வளர்க்க முடியும்.”
பின்லாந்தில் உள்ள ஆறு வயது மார்கஸுக்கு, குணப்படுத்த முடியாத தசை வியாதி (muscle disease) என்ற ஒரு வியாதி இருப்பதாக சொல்லப்பட்டது. விரைவில் சக்கர நாற்காலியே கதி என்றானான். சில வருடங்களுக்குப் பிறகு, அவனுடைய தாய் அவனை ஒரு பெந்தெகொஸ்தே ஆளிடம் கொண்டுசென்றார். அவர் வியாதியஸ்தரை குணப்படுத்துவதாக சொல்லிக்கொள்வதன் மூலம் பரவலாக பிரபலமாகி இருந்தார். ஆனால் எந்தவித அற்புத சுகப்படுத்தலும் ஏற்படவில்லை. எனவே கடவுள்மீது இருந்த விருப்பத்தை மார்கஸ் இழந்துவிட்டான், அறிவியலிலும் உலகப்பிரகாரமான வேறு துறைகளிலும் படிப்பைத் தொடர்ந்தான். அதன்பின், சுமார் ஐந்து வருடங்களுக்கு முன்பு, ஓர் இளைஞன் கூட்டிக்கொண்டுவர சக்கர நாற்காலியில் ஒரு பெண், மார்கஸ் வசித்துவந்த வீட்டிற்கு வந்தாள். அவர்கள் யெகோவாவின் சாட்சிகள். மார்கஸ் இப்பொழுது ஒரு நாத்திகனாக இருந்தான், ஆனால் மதத்தைப் பற்றி பேசுவதில் அவனுக்கு எந்த ஆட்சேபணையும் இல்லை, எனவே அவர்களை உள்ளே அழைத்தான்.
பிற்பாடு, ஒரு தம்பதியினர் அவனை சந்தித்தனர், ஒரு பைபிள் படிப்பும் ஆரம்பிக்கப்பட்டது. கடைசியில், பைபிள் சத்தியத்தின் வல்லமையானது காரியங்களைக் குறித்து மார்கஸுக்கு இருந்த நோக்குநிலையை மாற்றியது, தன்னுடைய இயலாமையின் மத்தியிலும் கடவுளைத் துதிப்பதற்கு உண்மையிலேயே தனக்குக் காரணங்கள் இருப்பதை உணர்ந்தான். அவன் கூறினான்: “நான் ரொம்ப சந்தோஷமாய் இருக்கிறேன், ஏனென்றால் சத்தியத்தையும் யெகோவா பயன்படுத்தி வருகிற அமைப்பையும் கண்டுபிடித்திருக்கிறேன். இப்பொழுது என்னுடைய வாழ்க்கைக்கு ஒரு இலக்கும் அர்த்தமும் இருக்கிறது. காணாமற்போன மற்றொரு ஆடு கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது, அது யெகோவாவின் மந்தையை விட்டுச்செல்ல விரும்பாது!”—மத்தேயு 10:6-ஐ ஒப்பிடுக.
அனைவரும் ‘யாவைத் துதிப்பார்களாக’
இன்று மனிதர்கள், தங்களுடைய சூழ்நிலைமைகள் என்னவாக இருந்தாலும்சரி, கடவுளைத் துதிப்பதற்கான காரணத்தைக் கொண்டிருக்கலாம் என்பதைக் காண்பிப்பதற்கு விவரிக்கக்கூடிய எண்ணற்ற அனுபவங்களில் இவையெல்லாம் ஒருசிலதான். அப்போஸ்தலன் பவுல் அதை இவ்வாறு விளக்கினார்: “தேவபக்தியானது இந்த ஜீவனுக்கும் இதற்குப் பின்வரும் ஜீவனுக்கும் வாக்குத்தத்தமுள்ளதாகையால் எல்லாவற்றிலும் பிரயோஜனமுள்ளது.” (1 தீமோத்தேயு 4:8) நாம் கடவுளுடைய சித்தத்தைச் செய்தால், ‘இந்த ஜீவனுக்கான வாக்குத்தத்தத்தை’ அவர் நிறைவேற்றுவார். நிச்சயமாகவே, அவர் இந்தக் காரிய ஒழுங்குமுறையில் ஏழைகளைப் பணக்காரராக்கவோ அல்லது வியாதியஸ்தர்களை சுகமுள்ளோராக்கவோ மாட்டார். ஆனால் அவரை சேவிப்போருக்கு தம்முடைய ஆவியை அருளுகிறார், இதனால் தங்களுடைய வெளிப்புற சூழ்நிலைமை எப்படியாக இருந்தாலும் அவர்கள் சந்தோஷத்தையும் திருப்தியையும் கண்டடைய முடியும். ஆம், ‘இந்த ஜீவனிலும்கூட,’ வியாதிப்பட்டோர், ஒடுக்கப்பட்டோர், ஏழ்மையானோர் கடவுளைத் துதிப்பதற்கான காரணத்தைக் கொண்டிருக்க முடியும்.
ஆனால் ‘பின்வரும்’ ஜீவனைப் பற்றியென்ன? ஏன், அந்த எண்ணம்தானேயும் பேரார்வத்துடன் நாம் கடவுளைத் துதிக்கும்படி செய்யவேண்டுமே! வறுமை என்பதையே கேள்விப்படாத ஒரு காலத்தை; ‘வியாதிப்பட்டிருக்கிறேன் என்று நகரவாசிகள் சொல்லாத’ ஒரு காலத்தை; யெகோவா தேவன் ‘அவர்களுடைய கண்ணீர் யாவையும் துடைத்து, இனி மரணமுமில்லை, துக்கமுமில்லை, அலறுதலுமில்லை, வருத்தமுமில்லை; முந்தினவைகள் ஒழிந்துபோயின’ என்று சொல்லக்கூடிய ஒரு காலத்தைப் பற்றி நாம் நினைத்துப் பார்க்கையில் மெய்சிலிர்த்துப் போகிறோம். (ஏசாயா 33:24; வெளிப்படுத்துதல் 21:3, 4; சங்கீதம் 72:16) கடவுளிடமிருந்து வரும் இந்த வாக்குறுதிகளை நீங்கள் எவ்வாறு கருதுகிறீர்கள்?
எல் சால்வடாரிலுள்ள ஓர் இளைஞர், இவற்றில் சிலவற்றை விளக்கிய பைபிள் துண்டுப்பிரதியைப் பெற்றுக்கொண்டார். அவரிடம் அதைக் கொடுத்த சாட்சியிடம் அவர் சொன்னார், “இந்தத் துண்டுப்பிரதி சொல்ற விஷயங்களெல்லாம் ரொம்ப பிரமாதமா இருக்குது, ஆனால் உண்மையென்று நம்பத்தான் முடியலை.” அநேகர் இப்படித்தான் பிரதிபலிக்கின்றனர். என்றபோதிலும், இவையெல்லாம் இந்த அகிலாண்டத்தைப் படைத்தவரும், நம்முடைய பூமியின் இயற்கை சுழற்சிகளை இயங்கும்படி செய்தவரும், ஏழைகளும் வியாதியஸ்தரும் சந்தோஷத்தைக் காண்பதற்கு உதவுகிறவருமானவர் கொடுக்கிற வாக்குறுதிகள். அவர் சொல்வதை நாம் நம்பமுடியும். மேற்குறிப்பிடப்பட்டுள்ள அந்த இளைஞர் யெகோவாவின் சாட்சிகளுடன் பைபிளைப் படித்து, இது உண்மையாய் இருப்பதைக் கண்டுபிடித்தார். நீங்கள் ஏற்கெனவே ஒரு பைபிள் படிப்பை கொண்டிருக்கவில்லையென்றால், அதைச் செய்யும்படி நாங்கள் உங்களை உற்சாகப்படுத்துகிறோம். அப்படியானால், இந்தத் தற்போதைய காரிய ஒழுங்குமுறை ஒழிந்து, “‘அல்லேலூயா!’ மக்களே, யாவைத் துதியுங்கள்!” என்ற ஆர்ப்பரிப்பில் அனைத்துப் படைப்பும் சேர்ந்துகொள்ளும்போது நீங்கள் அந்தப் புதிய உலகில் இருப்பீர்களாக.—சங்கீதம் 112:1; 135:1.
[அடிக்குறிப்புகள்]
a பைபிளில் “யெகோவா” என்பது சிலசமயங்களில் “யா” என்று சுருங்க சொல்லப்பட்டிருக்கிறது.
[பக்கம் 5-ன் படம்]
“அல்லேலூயா!” என்ற ஆர்ப்பரிப்பில் எல்லா படைப்பும் சேர்ந்துகொள்கையில் நீங்கள் அங்கு இருப்பீர்களாக