ஏனோக்கு—எல்லா எதிர்ப்புகளின் மத்தியிலும் பயமற்றவராக இருந்தார்
நல்ல ஒரு மனிதனுக்கு, அது மிக மோசமானக் காலமாக இருந்தது. தேவபக்தியில்லாமை பூமியில் முழுமையாக நிரம்பியிருந்தது. மனிதவர்க்கத்தின் ஒழுக்க நிலை விடாது கேடடைந்துகொண்டிருந்தது. உண்மையில் அது, இவ்வாறு சீக்கிரத்தில் சொல்லப்படவிருந்தது: “மனுஷனின் அக்கிரமம் பூமியிலே பெருகிற்றென்றும் அவன் இருதயத்து நினைவுகளும் உத்தேசங்களும் நித்தமும் பொல்லாதவைகளே என்றும் யெகோவா கண்டார்.”—ஆதியாகமம் 6:5, திருத்திய மொழிபெயர்ப்பு.
ஆதாமிலிருந்து வரும் பரம்பரை வரிசையில் ஏழாவது மனிதராகிய ஏனோக்கு, வேறுபட்டவராக இருக்க தைரியமுடையவராக இருந்தார். விளைவுகளைப் பற்றிக் கவலையில்லாமல், நீதியின் சார்பாக அவர் உறுதியாய் நிலைநின்றார். பாவமுள்ள மனிதருக்கு ஏனோக்கின் செய்தி அவ்வளவு அதிக எரிச்சலுண்டாக்கியதால், அவரைக் கொலைசெய்வதை அவர்கள் குறிக்கோளாகக் கொண்டிருந்தனர், யெகோவா மாத்திரமே அவருக்கு உதவிசெய்ய முடியும்.—யூதா 14, 15.
ஏனோக்கும் சர்வலோக விவாதமும்
ஏனோக்கின் பிறப்புக்கு வெகு காலத்திற்கு முன்பே, சர்வலோக அரசாட்சியைப் பற்றிய இந்த விவாதம் எழுப்பப்பட்டிருந்தது. ஆளுவதற்கான உரிமை கடவுளுக்கு இருந்ததா? இல்லை என்று பிசாசான சாத்தான் செயல்முறையளவில் சொன்னான். கடவுளுடைய வழிநடத்துதல் இல்லாமல், தாங்களாகச் சுதந்திரமாய் இருந்தால், அறிவுள்ள சிருஷ்டிகள் மேம்பட்டிருப்பர் என்று அவன் விவாதித்தான். தந்திரமானச் சூழ்ச்சியால் மனிதரைத் தன் சார்பில் இழுப்பதன்மூலம், யெகோவாவுக்கு விரோதமாக அத்தாட்சியை ஸ்தாபிப்பதற்குச் சாத்தான் முயன்றான். தேவாட்சியைப் பார்க்கிலும் சுயாட்சியையே தெரிந்துகொண்டதால், ஆதாமும் அவனுடைய மனைவி ஏவாளும், அவர்களுடைய முதல் குமாரனான காயீனும் சாத்தான் பக்கத்தை ஆதரிப்போராய்த் தகா வழியில் பேர்போனவர்களாயினர். கடவுள் தடை விதித்திருந்த கனியைச் சாப்பிட்டதன்மூலம், அந்த முதல் மனித ஜோடி இதைச் செய்தனர். நீதிமானாக இருந்த தன் சகோதரன் ஆபேலை வேண்டுமென்றே கொலை செய்ததன்மூலம் காயீன் இதைச் செய்தான்.—ஆதியாகமம் 3:4-6; 4:8.
இந்த விவாதத்தில் ஆபேல், தைரியமாக யெகோவாவின் சார்பில் நிலைநின்றிருந்தார். ஆபேலின் உத்தமம் தூய்மையான வணக்கத்தை ஆதரித்ததனால், காயீன் அவர்மீது தன் கொலைபாதகக் கோபாவேசத்தைக் காட்டினதைக் கண்டதில் சாத்தான் சந்தேகமில்லாமல் மகிழ்ச்சியடைந்தான். அந்தச் சமயம் முதற்கொண்டு, சாத்தான், பயமுறுத்தி தன் விருப்பப்படி நடக்கச் செய்வதற்கு ஒரு கருவியாக, ‘மரணபயத்தைப்’ பயன்படுத்திவந்திருக்கிறான். மெய்யானக் கடவுளை வணங்குவதற்கு மனங்கொள்ளும் எவருடைய இருதயத்திலும் திகிலூட்ட அவன் விரும்புகிறான்.—எபிரெயர் 2:14, 15; யோவான் 8:44; 1 யோவான் 3:12.
யெகோவாவின் அரசாட்சியின் சார்பாக மனிதர் உறுதியாக நிலைநிற்கமாட்டார்கள் என்ற சாத்தானின் கருத்து, ஏனோக்குப் பிறந்த காலத்திற்குள் நன்றாய் ஆதரிக்கப்பட்டதாகத் தோன்றினது. ஆபேல் மரித்துவிட்டிருந்தார், அவருடைய உண்மையுள்ள முன்மாதிரி பின்பற்றப்படவில்லை. எனினும், ஏனோக்கு வேறுபட்டவராகத் தன்னை நிரூபித்தார். ஏதேன் தோட்டத்தில் நடந்த சம்பவங்களைப் பற்றி அவர் நன்றாய் அறிந்திருந்ததனால், விசுவாசத்திற்குரிய உறுதியான ஆதாரம் அவருக்கு இருந்தது.a வாக்குப்பண்ணப்பட்ட ஒரு வித்தானவர், சாத்தானுக்கும் அவனுடைய தந்திர சூழ்ச்சிகளுக்கும் ஒரு முடிவைக் கொண்டுவருவார் என்று காட்டின யெகோவாவின் தீர்க்கதரிசனத்தை அவர் எவ்வளவாய் மதித்துப் பாராட்டியிருந்திருப்பார்!—ஆதியாகமம் 3:15.
இந்த நம்பிக்கை, ஏனோக்கின் மனதில் எப்போதும் இருந்துவந்ததால், பிசாசால் தூண்டப்பட்டு ஆபேல் கொலைசெய்யப்பட்ட அந்தச் சரித்திரப்பூர்வ கொலையினால் ஏனோக்கு பயமூட்டப்படவில்லை. மாறாக அவர், தன் வாழ்நாள் முழுவதும் நீதியுள்ள போக்கைப் பின்தொடர்ந்து, யெகோவாவுடன் நடந்துகொண்டிருந்தார். அந்த உலகத்தின் சுயபோக்கு மனப்பான்மையை ஏனோக்கு அறவே தவிர்த்து, அந்த உலகத்திலிருந்து வேறுபட்டவராய்த் தன்னை காத்து வந்தார்.—ஆதியாகமம் 5:23, 24, NW.
மேலும் ஏனோக்கு, தைரியமாய்ப் பேசி, பிசாசானவனின் தீயச் செயல்கள் தோல்வியடையும் என்பதைத் தெளிவாக்கினார். கடவுளுடைய பரிசுத்த ஆவியின், அல்லது செயல்படும் சக்தியின் ஏவுதலினால் அந்தத் தீயோரைக் குறித்து ஏனோக்கு இவ்வாறு தீர்க்கதரிசனம் உரைத்தார்: “இதோ, எல்லாருக்கும் நியாயத்தீர்ப்புக் கொடுக்கிறதற்கும், அவர்களில் அவபக்தியுள்ளவர்கள் யாவரும் அவபக்தியாய்ச் செய்துவந்த சகல அவபக்தியான கிரியைகளினிமித்தமும், தமக்கு விரோதமாய் அவபக்தியுள்ள பாவிகள் பேசின கடின வார்த்தைகளெல்லாவற்றினிமித்தமும், அவர்களைக் கண்டிக்கிறதற்கும், ஆயிரமாயிரமான தமது பரிசுத்தவான்களோடுங்கூட கர்த்தர் [“யெகோவா,” NW] வருகிறார்.”—யூதா 14, 15.
அப்போஸ்தலன் பவுல் எபிரெயக் கிறிஸ்தவர்களுக்கு எழுதுகையில், ஏனோக்கின் பயமற்ற அறிவிப்புகளினிமித்தம், விசுவாசத்தை செயலில் காட்டிய மதிப்புவாய்ந்த முன்மாதிரியான ‘மேகம்போன்ற திரளான சாட்சிகளுக்குள்’ ஒருவராக அவரைச் சேர்த்தார்.b (எபிரெயர் 11:5; 12:1) விசுவாசமுள்ள ஒரு மனிதராக, ஏனோக்கு, 300 ஆண்டுகளுக்கு மேற்பட்ட காலம் உத்தமத்தைக் காத்த வாழ்க்கைப் போக்கில் விடாது தொடர்ந்தார். (ஆதியாகமம் 5:22) ஏனோக்கின் உண்மைத்தன்மையுள்ள வாழ்க்கைப் போக்கு, பரலோகத்திலும் பூமியிலும் இருந்த கடவுளுடைய எதிரிகளுக்கு எவ்வளவு எரிச்சல் உண்டாக்கியிருக்க வேண்டும்! சுரீரெனத் தாக்கின ஏனோக்கின் தீர்க்கதரிசனம், சாத்தானின் பகைமையை வருவித்தது, எனினும் யெகோவாவின் பாதுகாப்பை அது கொண்டுவந்தது.
கடவுள் ஏனோக்கை எடுத்துக்கொண்டார்—எவ்வாறு?
சாத்தான் அல்லது பூமிக்குரிய அவனுடைய ஊழியர்கள் ஏனோக்கைக் கொல்லுவதற்கு யெகோவா அனுமதிக்கவில்லை. அதற்குப் பதிலாக, தேவாவியால் ஏவப்பட்ட பதிவு இவ்வாறு சொல்லுகிறது: “தேவன் அவனை எடுத்துக்கொண்டார்.” (ஆதியாகமம் 5:24) அப்போஸ்தலனாகிய பவுல் காரியங்களை இவ்வகையில் விவரிக்கிறார்: “விசுவாசத்தினால் ஏனோக்கு மரணத்தைக் காணாதபடி மாற்றப்பட்டார், அவர் எங்கும் காணப்படவில்லை ஏனெனில் கடவுள் அவரை மாற்றிவிட்டிருந்தார்; ஏனென்றால் அவர் மாற்றப்படுவதற்கு முன்பாக, கடவுளை நன்றாய்ப் பிரியப்படுத்தியிருந்தார் என்ற சாட்சி அவருக்கு இருந்தது.”—எபிரெயர் 11:5, NW.
எவ்வாறு ஏனோக்கு “மரணத்தைக் காணாதபடி மாற்றப்பட்டார்”? அல்லது ஆர். ஏ. நாக்ஸின் மொழிபெயர்ப்பில் மொழிபெயர்த்திருக்கிறபடி, ஏனோக்கு எவ்வாறு “மரண அனுபவமில்லாமல் எடுத்துக்கொள்ளப்பட்டார்”? நோயுற்றோ அல்லது தன்னுடைய பகைஞரின் கைகளில் வன்முறையாலோ மரண வேதனைகளை அனுபவியாதபடி, ஏனோக்கின் உயிரைக் கடவுள் சமாதானமாய் முடிவுறச் செய்தார். ஆம், 365 வயதில் ஏனோக்கின் வாழ்க்கையை யெகோவா முடிவுறச் செய்தார்—அவருடைய உடன்காலத்தவர்களோடு ஒப்பிட அவர் இளம் வயதானவரே.
“கடவுளை நன்றாய்ப் பிரியப்படுத்தியிருந்தார் என்ற சாட்சி” ஏனோக்குக்கு எவ்வாறு கொடுக்கப்பட்டது? என்ன அத்தாட்சி அவருக்கு இருந்தது? பெரும்பாலும், கிறிஸ்தவ சபையின் எதிர்கால ஆவிக்குரிய பரதீஸைப் பற்றிய ஒரு தரிசனத்தைப் பெறுபவராய் அப்போஸ்தலன் பவுல் ‘எடுக்கப்பட்டது,’ அல்லது மாற்றப்பட்டது போலவே, கடவுள் ஏனோக்கை ஒரு பரவச நிலையில் வைத்திருக்கலாம். (2 கொரிந்தியர் 12:3, 4) ஏனோக்கு கடவுளைப் பிரியப்படுத்தி வந்தார் என்ற இந்தச் சாட்சி அல்லது அத்தாட்சி, வாழ்வோர் யாவரும் கடவுளுடைய அரசாட்சியை ஆதரிக்கும் எதிர்கால பூமிக்குரிய பரதீஸைப் பற்றிய ஒரு காட்சி அளிக்கப்பட்டதை உட்படுத்தியிருக்கலாம். ஏனோக்கு, தன்னை மறந்த நிலையில் இந்த மகிழ்ச்சிக்குரிய காட்சியை அனுபவித்துக் கொண்டிருந்தபோது, வேதனையற்ற மரணத்தில் தன் உயிர்த்தெழுதலின் நாள் வரையாகத் தூங்கும்படி கடவுள் அவரை எடுத்துக்கொண்டிருக்கலாம். மோசேயின் காரியத்தில் இருந்ததுபோல், ஏனோக்கின் உடலை யெகோவா முடிவுசெய்திருப்பார் என்று தோன்றுகிறது, ஏனெனில், அவர் ‘காணப்படாமற்போனார்.’—எபிரெயர் 11:5; உபாகமம் 34:5, 6; யூதா 9.
அந்தத் தீர்க்கதரிசனம் நிறைவேற்றமடைந்தது
இன்று, ஏனோக்கின் தீர்க்கதரிசனத்தினுடைய உட்பொருளை யெகோவாவின் சாட்சிகள் அறிவிக்கிறார்கள். தேவபக்தியற்றவர்களை சீக்கிரத்தில் கடவுள் அழிக்கப்போகையில், இது எவ்வாறு நிறைவேற்றப்படும் என்பதை வேதவசனங்களிலிருந்து அவர்கள் எடுத்துக் காட்டுகிறார்கள். (2 தெசலோனிக்கேயர் 1:6-10) அவர்களுடைய செய்தி அவர்களைப் பொதுவாய் விரும்பப்படாதவர்களாக ஆக்குகிறது, ஏனெனில் அது இந்த உலகத்தின் கருத்துக்களிலிருந்தும் இலக்குகளிலிருந்தும் பேரளவில் வேறுபடுகிறது. அவர்கள் எதிர்ப்படும் எதிர்ப்பு அவர்களுக்கு ஆச்சரியத்தைக் கொடுக்கிறதில்லை, ஏனெனில் இயேசு தம்மைப் பின்பற்றினோரை இவ்வாறு எச்சரித்தார்: “என் நாமத்தினிமித்தம் நீங்கள் எல்லாராலும் பகைக்கப்படுவீர்கள்.”—மத்தேயு 10:22; யோவான் 17:14.
எனினும் ஏனோக்கைப்போல், தற்கால கிறிஸ்தவர்கள், தங்கள் எதிரிகளிடமிருந்து முடிவான விடுதலையடைவார்களென உறுதியளிக்கப்படுகிறார்கள். அப்போஸ்தலன் பேதுரு இவ்வாறு எழுதினார்: யெகோவா “தேவபக்தியுள்ளவர்களைச் சோதனையினின்று இரட்சிக்கவும், அக்கிரமக்காரரை ஆக்கினைக்குள்ளானவர்களாக நியாயத்தீர்ப்பு நாளுக்கு வைக்கவும் அறிந்திருக்கிறார்.” (2 பேதுரு 2:9) ஒரு பிரச்சினையை அல்லது கடுமையான சூழ்நிலைமையை நீக்குவது தகுந்ததாயிருப்பதாகக் கடவுள் காணலாம். துன்புறுத்தல் ஒருவேளை முடிவடையலாம். முடிவடையாவிடினும், தம்முடைய ஜனங்கள் தங்கள் சோதனைகளை வெற்றிகரமாய்ச் சகிக்க முடியும்படி ‘தப்பும் வழியையும் உண்டாக்குவது’ எவ்வாறு என்று அவர் அறிந்திருக்கிறார். தேவைப்படுகையில், ‘இயல்புக்கு மிஞ்சிய வல்லமையையுங்கூட’ யெகோவா அருளுகிறார்.—1 கொரிந்தியர் 10:13; 2 கொரிந்தியர் 4:7, NW.
‘தம்மை ஆவலாய்த் தேடுகிறவர்களுக்குப் பலன் அளிக்கிறவராக,’ யெகோவா, தம்முடைய உண்மையுள்ள ஊழியர்களுக்கு நித்திய ஜீவனை அளித்து ஆசீர்வதிப்பார். (எபிரெயர் 11:6, தி.மொ.) அவர்களில் பெரும்பான்மையருக்கு, இது, பூமிக்குரிய ஒரு பரதீஸில் நித்திய ஜீவனாயிருக்கும். ஆகையால், ஏனோக்கைப்போல், கடவுளுடைய செய்தியைப் பயமில்லாமல் நாம் யாவரறிய அறிவிப்போமாக. விசுவாசத்துடன், எல்லா எதிர்ப்புகளின் மத்தியிலும் இதை நாம் செய்துவருவோமாக.
[அடிக்குறிப்புகள்]
a ஏனோக்கு பிறந்தபோது ஆதாம் 622 வயதானவராக இருந்தார். ஆதாமின் மரணத்திற்குப் பின் ஏறக்குறைய 57 ஆண்டுகள் ஏனோக்கு தொடர்ந்து வாழ்ந்தார். ஆகையால், அவர்களுடைய வாழ்நாட்கள் பேரளவு ஒரேகாலத்தில் இருந்தன.
b எபிரெயர் 12:1-ல் “சாட்சிகள்” என்று மொழிபெயர்த்திருப்பது, கிரேக்கச் சொல்லாகிய மார்ட்டிஸ் என்பதிலிருந்து வருகிறது. கிரேக்க புதிய ஏற்பாட்டிலிருந்து வூயெஸ்ட்டின் சொல்லாராய்ச்சிகள் (ஆங்கிலம்) புத்தகத்தின்படி, இந்தச் சொல், ‘தான் கண்டிருப்பதை அல்லது கேட்டிருப்பதை அல்லது வேறு எந்த வழிவகையிலாயினும் அறிந்திருப்பதைக் குறித்து சாட்சி பகருகிற அல்லது சாட்சி பகரக்கூடிய ஒருவன்,’ எனக் குறிக்கிறது. “சொந்த அனுபவத்திலிருந்தும் . . . உண்மைகளையும் கருத்துக்களையும் பற்றிய உறுதியிலிருந்தும்” பேசுகிற ஒருவன் என இந்தச் சொல் அர்த்தப்படுகிறதென்று, நிஜெல் டர்னர் எழுதின கிறிஸ்தவச் சொற்கள் (ஆங்கிலம்), சொல்லுகிறது.
[பக்கம் 30-ன் பெட்டி]
கடவுளுடைய பெயர் பரிசுத்தக் குலைச்சலாக்கப்பட்டது
ஏனோக்கின் காலத்திற்கு ஏறக்குறைய நான்கு நூற்றாண்டுகளுக்கு முன்பாக, ஆதாமின் பேரனாகிய ஏனோஸ் பிறந்தான். “அக்காலத்திலேதான் மனுஷர் யெகோவாவின் நாமத்தைத் தொழுதுகொள்ள ஆரம்பித்தார்கள்,” என்று ஆதியாகமம் 4:26 (தி.மொ.) சொல்லுகிறது. “பரிசுத்தக் குலைச்சலான முறையில்” கடவுளின் பெயரின்பேரில் கூப்பிட “தொடங்கினார்கள்” அல்லது, “அப்போது பரிசுத்தக் குலைச்சல் தொடங்கினது,” என்று இந்த வசனம் வாசிக்கப்பட வேண்டும் என்று எபிரெய மொழி அறிவாளர் சிலர் நம்புகின்றனர். அந்தச் சரித்திரக் காலப் பகுதியைப் பற்றி ஜெரூசலம் டார்கம் இவ்வாறு சொல்லுகிறது: “அந்தச் சந்ததியின் நாட்களிலேயே அவர்கள் தவறத் தொடங்கி, தங்களுக்கு உருவச் சிலைகளை உண்டாக்கவும், தங்கள் உருவச் சிலைகளுக்குக் கர்த்தருடைய வார்த்தையின் பெயரிட்டழைக்கவும் தொடங்கினார்கள்.”
ஏனோஸின் காலம், பரவலாக யெகோவாவின் பெயரைத் தவறாகப் பயன்படுத்துவதைக் கண்டது. கடவுளுடைய பெயரை மனிதர் தங்களுக்கு, அல்லது வணக்கத்தில் யெகோவா தேவனை அவர்கள் மூலமாக அணுகுவதாக அவர்கள் பாசாங்கு செய்த சில ஆட்களுக்குப் பொருத்திப் பயன்படுத்தினார்கள் என்பது சாத்தியமாயிருக்கிறது. அல்லது கடவுளுடைய பெயரை உருவச் சிலைகளுக்கு அவர்கள் பயன்படுத்தியிருக்கலாம். எவ்வாறாயினும், பிசாசான சாத்தான் மனிதகுலத்தை, உருவ வணக்கத்தில் உறுதியாய்ச் சிக்கவைத்திருந்தான். ஏனோக்கு பிறந்த காலத்திற்குள்ளாக, உண்மையான வணக்கம் அரிதாகிவிட்டது. சத்தியத்தின்படி வாழ்ந்து அதைப் பிரசங்கித்த ஏனோக்கைப் போன்ற எவரும் பொதுவாக விரும்பப்படாதவர்களாக இருந்தனர், ஆகவே துன்புறுத்தலுக்கு ஆளாயினர்.—மத்தேயு 5:11, 12-ஐ ஒப்பிடுக.
[பக்கம் 31-ன் பெட்டி]
ஏனோக்கு பரலோகத்திற்குச் சென்றாரா?
“விசுவாசத்தினாலே ஏனோக்கு மரணத்தைக் காணாதபடி மாற்றப்பட்டார்.” எபிரெயர் 11:5-ன் இந்தப் பகுதியை மொழிபெயர்த்ததில், பைபிள் மொழிபெயர்ப்புகள் சில, ஏனோக்கு உண்மையில் மரிக்கவில்லை என்று குறிப்பாக உணர்த்துகின்றன. உதாரணமாக, ஜேம்ஸ் மொஃபட் மொழிபெயர்த்த எ நியூ டிரான்ஸ்லேஷன் ஆஃப் தி பைபிள்: “விசுவாசத்தினாலேயே ஏனோக்கு ஒருபோதும் மரிக்காதபடி பரலோகத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டான்,” என்று சொல்லுகிறது.
எனினும், ஏனோக்கின் நாளுக்கு 3,000 ஆண்டுகளுக்குப் பின், இயேசு கிறிஸ்து இவ்வாறு சொன்னார்: “பரலோகத்திலிருந்திறங்கின . . . மனுஷகுமாரனேயல்லாமல் பரலோகத்துக்கு ஏறினவன் ஒருவனுமில்லை.” (யோவான் 3:13) தி நியூ இங்கிலிஷ் பைபிள் இவ்வாறு வாசிக்கிறது: “பரலோகத்திலிருந்து இறங்கிவந்தவரான மனுஷகுமாரனைத் தவிர, ஒருவரும் ஒருபோதும் மேலே பரலோகத்திற்குள் சென்றதில்லை.” இயேசு இதைச் சொன்னபோது, அவருங்கூட பரலோகத்திற்கு ஏறிச் சென்றிருக்கவில்லை.—லூக்கா 7:28-ஐ ஒப்பிடுக.
கிறிஸ்தவத்துக்கு முன்னிருந்த மேகம்போன்ற திரளான சாட்சிகளில் அடங்கியோரான ஏனோக்கும் மற்ற ‘எல்லாரும் மரித்தார்கள்,’ “வாக்குத்தத்தம்பண்ணப்பட்டதை அடையாமற்போனார்கள்,” என்று பவுல் சொல்லுகிறார். (எபிரெயர் 11:13, 39) ஏன்? ஏனெனில் ஏனோக்கு உட்பட எல்லா மனிதரும், ஆதாமிலிருந்து பாவத்தைச் சுதந்தரித்திருக்கிறார்கள். (சங்கீதம் 51:5; ரோமர் 5:12) இரட்சிப்பின் ஒரே வழி, கிறிஸ்து இயேசு செலுத்தின மீட்பின் கிரய பலியின் மூலமே உள்ளது. (அப்போஸ்தலர் 4:12; 1 யோவான் 2:1, 2)) ஏனோக்கின் நாளில் அந்த மீட்பின் கிரயம் இன்னும் செலுத்தப்பட்டில்லை. ஆகையால், ஏனோக்கு பரலோகத்திற்குச் செல்லவில்லை, ஆனால் பூமியில் ஓர் உயிர்த்தெழுதலை எதிர்பார்த்து காத்துக்கொண்டு அவர் மரணத்தில் நித்திரை செய்கிறார்.—யோவான் 5:28, 29.
[பக்கம் 29-ன் படத்திற்கான நன்றி]
பிரதியெடுக்கப்பட்டது: lllustrirte Pracht - Bibel/Heilige Schrift des Alten und Neuen Testaments, nach der deutschen Uebersetzung D. Martin Luther’s