ஏனோக்கு தேவபக்தியற்ற உலகில் கடவுளுடன் நடந்தார்
மனிதர்கள் அனைவரையும் கடவுளிடமிருந்து விலக வைக்க முடியும் என்று பிசாசு அடித்துக் கூறுகிறான். சில சமயங்களில் அதில் அவனுக்கு வெற்றி கிடைத்திருப்பது போலவும் தோன்றலாம். ஆபேலின் மரணத்துக்குப்பின் சுமார் ஐந்து நூற்றாண்டுகளுக்கு கடவுளுடைய உண்மையுள்ள ஊழியன் என்ற பெயரை யாரும் எடுக்கவில்லை. அதற்கு பதிலாக, தேவபக்தியற்ற பாவ நடத்தையே எங்கும் காணப்பட்டது.
ஆன்மீக நிலை சீர்கெட்டிருந்த அந்தக் காலகட்டத்தில்தான் ஏனோக்கு பூமியில் வாழ்ந்து வந்தார். பைபிள் கால கணக்குப்படி, அவர் பொ.ச.மு. 3404-ல் பிறந்தார். தன் காலத்தில் வாழ்ந்தவர்களைப் போலில்லாமல் ஏனோக்கு கடவுளுக்கு உகந்தவராக விளங்கினார். கிறிஸ்தவர்களுக்கு விசுவாசத்தில் முன்மாதிரியாக திகழும் யெகோவாவின் ஊழியர்களுடைய பட்டியலில் இவருடைய பெயரையும் அப்போஸ்தலன் பவுல் சேர்த்திருக்கிறார். ஏனோக்கு யார்? அவர் எதிர்ப்படவிருந்த சவால்கள் யாவை? அவற்றை எப்படி சமாளித்தார்? அவர் உத்தமராய் இருந்ததால் நமக்கென்ன பயன்?
ஏனோஸின் நாட்களில், அதாவது ஏனோக்கின் காலத்துக்கு சுமார் நான்கு நூற்றாண்டுகளுக்கு முன்பு “மனுஷர் யெகோவாவுடைய பெயரில் கூப்பிட ஆரம்பித்தார்கள்.” (ஆதியாகமம் 4:26, NW) மனித வரலாற்றின் ஆரம்பம் முதற்கொண்டே கடவுளுடைய பெயர் பயன்படுத்தப்பட்டு வந்திருக்கிறது. ஆகவே ஏனோஸின் காலத்தில் யெகோவாவின் பெயரில் கூப்பிட ஆரம்பித்தது, உண்மை வணக்கத்தில் யெகோவாவை விசுவாசத்தோடு கூப்பிடுவதாக இருக்கவில்லை. ‘தூஷிக்க ஆரம்பித்தார்கள்’ அல்லது ‘தூஷிப்பது ஆரம்பமானது’ என்றே ஆதியாகமம் 4:26-ஐ புரிந்துகொள்ள வேண்டும் என எபிரெய அறிஞர்கள் சிலர் கூறுகின்றனர். இந்தப் பெயரை மனிதர்கள் தங்களுக்கே வைத்துக் கொண்டிருக்கலாம் அல்லது இந்தப் பெயர் வைத்திருந்த மற்றவர்கள் மூலம் கடவுளை வணக்கத்தில் அணுகுவதுபோல் பாசாங்கு செய்திருக்கலாம். அல்லது அந்தப் பெயரை விக்கிரகங்களுக்கு சூட்டியிருக்கலாம்.
‘ஏனோக்கு உண்மை கடவுளோடு நடந்தார்’
ஏனோக்கை சுற்றியிருந்த அனைவருமே தேவ பக்தியற்றவர்களாக இருந்தபோதிலும், அவர் ‘உண்மை கடவுளாகிய’ யெகோவாவோடு ‘நடந்து கொண்டிருந்தார்.’ அவருடைய முன்னோர்கள், அதாவது, சேத், ஏனோஸ், கேனான், மகலாலெயேல், யாரேத் ஆகியோர் கடவுளோடு நடந்ததாக சொல்லப்படவில்லை. குறைந்தபட்சம் ஏனோக்கைப் போல அந்தளவுக்கு கடவுளோடு நடக்கவில்லை. ஏனெனில் ஏனோக்கு மற்றவர்களைப் போலில்லாமல் வித்தியாசமானவராக வாழ்ந்து காட்டினார்.—ஆதியாகமம் 5:3-27, NW.
யெகோவாவோடு நடப்பது என்பது அவரோடு நெருக்கமான உறவை அர்த்தப்படுத்தியது, ஏனோக்கு அவருடைய சித்தத்திற்கு இசைவாக வாழ்ந்ததால்தான் இது சாத்தியமானது. ஏனோக்கின் பக்தியை யெகோவா ஏற்றுக்கொண்டார். சொல்லப்போனால், ‘ஏனோக்கு கடவுளுக்கு மிகவும் பிரியமானவராய் இருந்தார்’ என்று கிரேக்க செப்டுவஜின்ட் சொல்கிறது. இதே கருத்தைத்தான் அப்போஸ்தலனாகிய பவுலும் குறிப்பிடுகிறார்.—ஆதியாகமம் 5:22; எபிரெயர் 11:5.
யெகோவாவோடு ஏனோக்கு நல்ல உறவை அனுபவிக்க முக்கிய காரணமாக இருந்தது அவருடைய விசுவாசமே. கடவுளுடைய “ஸ்திரீ”யின் வாக்குப்பண்ணப்பட்ட “வித்து”வின்மீது அவர் விசுவாசத்தை வெளிக்காட்டியிருக்க வேண்டும். ஒருவேளை ஆதாமை அவர் தனிப்பட்ட விதமாக அறிந்திருந்தால், ஏதேனில் முதல் தம்பதியோடு கடவுள் தொடர்புகொண்ட விதத்தைப் பற்றிய தகவலை ஏனோக்கு நேரில் கேட்டு தெரிந்து கொண்டிருக்கலாம். கடவுளைப் பற்றி ஏனோக்குக்கு இருந்த அறிவு, கடவுளை ‘உண்மையாய்த் தேடுகிற’ மனிதராக அவரை ஆக்கியது.—ஆதியாகமம் 3:15; எபிரெயர் 11:6, 13; NW.
ஏனோக்கின் விஷயத்திலும் சரி, நம்முடைய விஷயத்திலும் சரி, யெகோவாவோடு நல்லுறவை அனுபவிக்க அவரை பற்றி அறிந்திருப்பது மட்டுமே போதாது, இன்னும் அதிகம் தேவைப்படுகிறது. குறிப்பிட்ட ஒருவரோடு நெருங்கிய தொடர்பு வைத்திருப்பதை அதிக மதிப்புமிக்கதாக நாம் கருதினால், அவருடைய கருத்துக்கள் நம்முடைய சிந்தனைகளிலும் செயல்களிலும் செல்வாக்கு செலுத்துவது உண்மையல்லவா? அந்த உறவில் விரிசலை ஏற்படுத்தும் வார்த்தைகளை அல்லது செயல்களை நாம் தவிர்ப்போம். மேலும் நம்முடைய சூழ்நிலைமைகளில் ஏதாவது மாற்றத்தைச் செய்ய எண்ணினால் இது அந்த உறவில் ஏதேனும் பாதிப்பை ஏற்படுத்துமா என்றும் யோசிப்போம் இல்லையா?
அதே விதமாகவே, கடவுளோடு நல்லுறவை காத்துக்கொள்ள விரும்புவது நம் செயல்கள் மீது செல்வாக்கு செலுத்துகிறது. முதலாவதாக, அவர் எதை ஏற்றுக்கொள்கிறார், எதை ஏற்றுக்கொள்வதில்லை என்பதை நாம் திருத்தமாக அறிந்திருப்பது அவசியம். பிறகு அந்த அறிவால் வழிநடத்தப்பட வேண்டும், சிந்தையிலும் செயலிலும் அவரைப் பிரியப்படுத்த முயல வேண்டும்.
ஆம், கடவுளோடு நடப்பதற்கு நாம் அவரைப் பிரியப்படுத்த வேண்டும். இதைத்தான் ஏனோக்கு நூற்றுக்கணக்கான ஆண்டுகளாக செய்து வந்தார். ஏனோக்கு கடவுளோடு ‘நடந்தார்’ என்பதற்குரிய எபிரெய வினைச்சொல், திரும்பத் திரும்ப செய்யப்படும், தொடர்ச்சியான செயலை குறிக்கிறது. ‘கடவுளோடு நடந்த’ மற்றொரு உண்மையான மனிதர் நோவா.—ஆதியாகமம் 6:9, NW.
ஏனோக்குக்கு குடும்பம் இருந்தது, இவருக்கு மனைவியும் ‘குமாரரும் குமாரத்திகளும்’ இருந்தனர். அவருடைய ஒரு குமாரனின் பெயர் மெத்தூசலா. (ஆதியாகமம் 5:21, 22) ஏனோக்கு தன் குடும்பத்தை சிறந்த முறையில் தலைமைதாங்கி வழிநடத்த தன்னால் முடிந்த அனைத்தையும் செய்திருக்க வேண்டும். எனினும், அவரைச் சுற்றிலும் தேவபக்தியற்றவர்களே நிறைந்திருக்கையில் கடவுளுக்கு சேவை செய்வது அவருக்கு அவ்வளவு எளிதாக இருக்கவில்லை. நோவாவின் தகப்பன் லாமேக்கு மாத்திரமே அந்தச் சமயத்தில் யெகோவாவை விசுவாசிப்பவராக இருந்திருக்கலாம். (ஆதியாகமம் 5:28, 29) ஆனால் ஏனோக்கு தைரியமாக உண்மை வணக்கத்தைப் பின்பற்றினார்.
கடவுளுக்கு உண்மையுள்ளவராக நிலைத்திருக்க ஏனோக்குக்கு எது உதவியது? யெகோவாவின் நாமத்தை தூஷிக்கிறவர்களோடு அல்லது கடவுளுடைய வணக்கத்தார் தவிர்க்க வேண்டிய தோழர்களோடு அவர் சகவாசம் வைத்திருக்கவில்லை என்பதில் சந்தேகமில்லை. ஜெபத்தில் யெகோவாவின் உதவியை நாடியதும், கடவுளுக்குப் பிரியமில்லாத எதையும் செய்யாமலிருப்பதற்கு ஏனோக்கு எடுத்த திடத்தீர்மானத்தை பலப்படுத்தியிருக்க வேண்டும்.
தேவபக்தியற்றவர்களுக்கு எதிராக தீர்க்கதரிசனம்
அக்கம்பக்கத்திலுள்ள அனைவருமே தேவபக்தியற்றவர்களாய் இருக்கையில் நாம் உயர்ந்த தராதரங்களைக் காத்துக்கொள்வதே பெரும் பாடு. அதோடு பொல்லாதவர்களுக்கு எதிராக நியாயத்தீர்ப்பு செய்தியை அதன் கடுமையைக் குறைக்காமல் ஏனோக்கு அப்படியே அறிவித்தும் வந்தார். கடவுளுடைய ஆவியின் வழிநடத்துதலால் ஏனோக்கு இவ்வாறு தீர்க்கதரிசனம் உரைத்தார்: “இதோ, எல்லாருக்கும் நியாயத்தீர்ப்புக் கொடுக்கிறதற்கும், அவர்களில் அவபக்தியுள்ளவர்கள் யாவரும் அவபக்தியாய்ச் செய்துவந்த சகல அவபக்தியான கிரியைகளினிமித்தமும், தமக்கு விரோதமாய் அவபக்தியுள்ள பாவிகள் பேசின கடின வார்த்தைகளெல்லாவற்றினிமித்தமும், அவர்களைக் கண்டிக்கிறதற்கும், ஆயிரமாயிரமான தமது பரிசுத்தவான்களோடுங்கூட கர்த்தர் [“யெகோவா,” NW] வருகிறார்.”—யூதா 14, 15.
மோசமான அவிசுவாசிகளை அந்தச் செய்தி எப்படி பாதித்தது? வேதனையூட்டும் அந்த வார்த்தைகளால் ஏனோக்கு மக்களின் வெறுப்பை சம்பாதித்தார். அவர்கள் அவரை கேலிசெய்தார்கள், நிந்தித்தார்கள், மிரட்டினார்கள். சிலர் அவரை கொலை செய்யவும் விரும்பியிருப்பார்கள். ஆனால் ஏனோக்கு மிரட்டலுக்கு பயந்துவிடவில்லை. நீதிமானாக இருந்த ஆபேலுக்கு என்ன நேர்ந்தது என்பது அவருக்குத் தெரியும், ஆகவே அவரைப் போலவே என்ன நேர்ந்தாலும் கடவுளை தொடர்ந்து சேவிக்க ஏனோக்கு மனதில் உறுதிபூண்டிருந்தார்.
‘தேவன் அவரை எடுத்துக்கொண்டார்’
‘தேவன் அவரை எடுத்துக்கொண்டபோது’ ஏனோக்கின் உயிர் இக்கட்டான நிலையில் இருந்திருக்க வேண்டும். (ஆதியாகமம் 5:24) மூர்க்கவெறி கொண்ட விரோதிகளின் கைகளில் தம்முடைய உண்மையுள்ள தீர்க்கதரிசி துன்புறுவதை யெகோவா அனுமதிக்கவில்லை. “ஏனோக்கு மரணத்தைக் காணாதபடிக்கு இடம் மாற்றப்பட்டார்” என்று அப்போஸ்தலன் பவுல் கூறுகிறார். (எபிரெயர் 11:5, NW) ஏனோக்கு மரிக்கவே இல்லை, கடவுள் அவரை பரலோகத்துக்கு அழைத்துக்கொண்டார், அங்கே அவர் தொடர்ந்து வாழ்ந்துவந்தார் என அநேகர் சொல்கின்றனர். ஆனால் “பரலோகத்திலிருந்து இறங்கினவராகிய மனுஷ குமாரனேயல்லாமல் பரலோகத்துக்கு ஏறினவன் ஒருவனுமில்லை” என்று இயேசு மிகத் தெளிவாக சொன்னார். பரலோகத்துக்கு போகிற அனைவருக்கும் இயேசுவே ‘முன்னோடியாக’ இருந்தார்.—யோவான் 3:13, தி.மொ.; எபிரெயர் 6:19, 20.
ஆகவே ஏனோக்குக்கு என்ன சம்பவித்தது? அவர் ‘மரணத்தைக் காணாதபடிக்கு இடம் மாற்றப்பட்டது,’ கடவுள் ஒரு தீர்க்கதரிசன காட்சியை மெய்மறந்து காணச்செய்து, அந்த நிலையில் இருக்கும்போதே அவருடைய வாழ்க்கையை முடிவுக்கு கொண்டுவந்ததை அர்த்தப்படுத்தலாம். அந்த சூழ்நிலையில், ஏனோக்கு மரண அவஸ்தையை அனுபவித்திருக்க மாட்டார். அதன் பிறகு அவர் ‘காணப்படாமற்போனார்.’ மோசேயின் உடலை அப்புறப்படுத்தியது போலவே யெகோவா இவருடைய உடலையும் அப்புறப்படுத்தியிருக்க வேண்டும்.—உபாகமம் 34:5, 6.
ஏனோக்கு 365 வருடங்கள் மட்டுமே வாழ்ந்தார், அவருடைய காலத்தில் பெரும்பாலோர் இதற்கும் அதிகமான வருடங்கள் வாழ்ந்திருந்தார்கள். ஆனால் தங்கள் வாழ்நாள் முழுவதும் அவரை உண்மையோடு சேவிப்பதுதான் யெகோவாவை நேசிப்பவர்களுக்கு முக்கியம். ஏனோக்கு இதைச் செய்தார் என்பது நமக்குத் தெரியும், ஏனென்றால் “அவர் மாற்றப்படுவதற்கு முன்பாக கடவுளை நன்றாய்ப் பிரியப்படுத்தியிருந்தார் என்ற அத்தாட்சி அவருக்கு இருந்தது.” இதை யெகோவா எவ்வாறு ஏனோக்கிடம் தெரிவித்தார் என வேதவசனங்கள் சொல்வதில்லை. ஆனால் அவர் மரிப்பதற்கு முன்பு அவருக்கு கடவுளுடைய அங்கீகாரம் இருந்தது உறுதியளிக்கப்பட்டது. யெகோவா அவரை உயிர்த்தெழுதலின்போது நினைவுகூருவார் என்பதைக் குறித்து நாம் நிச்சயமாக இருக்கலாம்.
ஏனோக்கின் விசுவாசத்தைப் பின்பற்றுங்கள்
தேவபக்தியுள்ளவர்களின் விசுவாசத்தைப் பின்பற்றுவது மிகவும் பொருத்தமானதே. (எபிரெயர் 13:7) விசுவாசத்தினாலேயே ஏனோக்கு கடவுளுடைய உண்மையுள்ள முதல் தீர்க்கதரிசியாக சேவித்தார். ஏனோக்கின் நாளிலிருந்த உலகம் இன்றைய உலகத்தைப் போலவே இருந்தது. வன்முறையும் தூஷணமும் அவபக்தியும் நிறைந்த உலகமாய் இருந்தது. ஆனால் ஏனோக்கு வித்தியாசமானவராக இருந்தார். அவருக்கு உண்மையான விசுவாசமிருந்தது, தேவபக்தியில் முன்மாதிரியாக விளங்கினார். ஆம், மிக முக்கியமான நியாயத்தீர்ப்பு செய்தி ஒன்றை அறிவிக்கும் பொறுப்பை யெகோவா அவரிடம் ஒப்படைத்திருந்தார். மேலும் அதை அறிவிப்பதற்கு தேவையான பலத்தையும் அவருக்குக் கொடுத்தார். ஏனோக்கு தன்னிடம் ஒப்படைக்கப்பட்ட வேலையை தைரியமாக செய்து முடித்தார், விரோதிகள் எதிர்த்தபோது கடவுள் அவரை பாதுகாத்தார்.
ஏனோக்கைப் போன்ற விசுவாசம் நமக்கிருந்தால் இந்தக் கடைசி நாட்களில் அவருடைய செய்தியை அறிவிப்பதற்கு நம்மையும் அவர் பலப்படுத்துவார். எதிர்ப்பை தைரியமாக சந்திக்க அவர் நமக்கு உதவுவார், நம்முடைய தேவபக்தி, நம்மை தேவபக்தியற்ற மற்றவர்களிலிருந்து வெகு வித்தியாசமானவர்களாக்கும். கடவுளோடு நடக்கவும் அவருடைய இருதயத்தை சந்தோஷப்படுத்தும் விதத்தில் நடந்துகொள்ளவும் விசுவாசம் நமக்கு உதவும். (நீதிமொழிகள் 27:11) விசுவாசத்தினால் நீதிமானாகிய ஏனோக்கு தேவபக்தியற்ற உலகில் யெகோவாவோடு நடப்பதில் வெற்றி கண்டார், நாமும் வெற்றி காணலாம்.
[பக்கம் 30-ன் பெட்டி]
ஏனோக்கு புத்தகத்திலிருந்து பைபிள் மேற்கோள் காட்டுகிறதா?
ஏனோக்கு புத்தகம் என்பது தள்ளுபடியாகமத்தில் ஒரு புத்தகம், சில படைப்புகளை இன்னார் எழுதியதாக பொய்யாக கூறப்படும் நூல்களில் ஒன்று. அதை ஏனோக்கு எழுதியதாக பொய்யாக சொல்லப்படுகிறது. பொ.ச.மு. இரண்டாவது அல்லது முதல் நூற்றாண்டுகளின்போது எழுதப்பட்ட இப்புத்தகத்தில் நம்ப முடியாத, சரித்திரப்பூர்வமற்ற யூத கட்டுக்கதைகள் காணப்படுகின்றன. ஆதியாகம பதிவில் சுருக்கமாக கூறப்பட்டிருக்கும் விஷயங்களுக்கு விரிவான விளக்கங்கள் கொடுத்தே இதை உருவாக்கியிருக்க வேண்டும். கடவுளுடைய ஏவப்பட்ட வார்த்தையை நேசிப்போர் வாசிக்க தகுதியற்றது என்று இதை தள்ளுபடி செய்ய இதுவே போதுமானது.
பைபிளில் யூதா புத்தகத்தில் மட்டுமே ஏனோக்கின் தீர்க்கதரிசன வார்த்தைகள் காணப்படுகின்றன: “இதோ, எல்லாருக்கும் நியாயத்தீர்ப்புக் கொடுக்கிறதற்கும், அவர்களில் அவபக்தியுள்ளவர்கள் யாவரும் அவபக்தியாய்ச் செய்துவந்த சகல அவபக்தியான கிரியைகளினிமித்தமும், தமக்கு விரோதமாய் அவபக்தியுள்ள பாவிகள் பேசின கடின வார்த்தைகளெல்லாவற்றினிமித்தமும், அவர்களைக் கண்டிக்கிறதற்கும், ஆயிரமாயிரமான தமது பரிசுத்தவான்களோடுங்கூட கர்த்தர் வருகிறார்.” (யூதா 14, 15) தன் காலத்தில் வாழ்ந்த அவபக்தியுள்ளவர்களுக்கு எதிராக ஏனோக்கு உரைத்த தீர்க்கதரிசனம் ஏனோக்கின் புத்தகத்திலிருந்தே நேரடியாக எடுக்கப்பட்டது என்பது அறிஞர்களின் பலரின் கருத்து. நம்ப முடியாத தள்ளுபடியாகம புத்தகத்திலிருந்து யூதா தகவலை எடுத்திருப்பாரா?
ஏனோக்கு உரைத்த தீர்க்கதரிசனம் யூதாவுக்கு எப்படி தெரியும் என்பது வேதவசனங்களில் சொல்லப்படவில்லை. பூர்வத்தில் நம்பிக்கைக்குரியதாக கருதப்பட்ட பொதுவான பாரம்பரிய நூலிலிருந்து அவர் ஒருவேளை இந்த மேற்கோளை எடுத்திருக்கலாம். பார்வோனின் அவையில் மோசேயை எதிர்த்துநின்ற பெயர் குறிப்பிடப்படாத மந்திரவாதிகளின் பெயர்களை யந்நேயு என்றும் யம்பிரேயு என்றும் பவுலும் இப்படித்தான் அறிந்துகொண்டிருக்க வேண்டும். ஏனோக்கு புத்தகத்தை எழுதினவருக்கு இதுபோன்ற பூர்வகால புத்தகங்கள் கையில் கிடைத்திருக்க முடியும் என்றால், யூதாவுக்கு அது கிடைத்திருக்க சாத்தியமில்லை என்று நாம் ஏன் மறுக்க வேண்டும்?a—யாத்திராகமம் 7:11, 22; 2 தீமோத்தேயு 3:8.
ஏனோக்கு தேவபக்தியற்றவர்களுக்கு அறிவிக்க வேண்டிய செய்தியை எப்படி பெற்றார் என்பது ஒரு சிறிய விஷயம். கடவுளின் ஆவியின் ஏவுதலால் யூதா அதை எழுதினார் என்ற உண்மையிலிருந்து அதன் நம்பகத்தன்மை உறுதியாகிறது. (2 தீமோத்தேயு 3:16) உண்மையில்லாத எதையும் குறிப்பிடாதபடி கடவுளுடைய பரிசுத்த ஆவி அவரை காத்தது.
[அடிக்குறிப்பு]
a சீஷனாகிய ஸ்தேவானும்கூட பைபிளில் வேறெந்த இடத்திலும் காணப்படாத தகவலை அளித்துள்ளார். மோசேயின் எகிப்திய கல்வி, எகிப்தை விட்டு ஓடிப்போகையில் அவர் 40 வயதுள்ளவராய் இருந்தது, அவர் மீதியானில் 40 வருட காலம் தங்கியது, மோசேயின் நியாயப்பிரமாணத்தை கொடுப்பதில் தேவதூதரின் பங்கு ஆகியவை இதில் அடங்கும்.—அப்போஸ்தலர் 7:22, 23, 30, 38.
[பக்கம் 31-ன் படம்]
ஏனோக்கு தைரியமாக யெகோவாவின் செய்தியை அறிவித்தார்