உயிர்-ஒழுக்கவியலும் இரத்தமில்லாத அறுவை சிகிச்சையும்
சமீப ஆண்டுகள் மருத்துவத்துறையில் முன்னொருபோதும் இருந்திராத முன்னேற்றத்தைக் கண்டிருக்கின்றன. இருப்பினும், மருத்துவ பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் அதே சமயத்தில், சில முன்னேற்றங்கள் ஒழுக்கவியல் பிரச்சினைகளை உருவாக்கியுள்ளன.
மருத்துவர்கள் இதுபோன்ற சங்கடமான நிலைமைகளைக் குறித்து சிந்திக்கவேண்டும்: நோயாளி கண்ணியத்தோடு மரிக்கும்படி அனுமதிப்பதற்காக சில சமயங்களில் கடுமையான மருத்துவ சிகிச்சை கைவிடப்பட வேண்டுமா? நோயாளிக்கு நன்மையாக இருக்கும் என்பதாக ஒரு மருத்துவர் நினைப்பாரேயானால், அவர் நோயாளியின் தீர்மானத்தை ஒதுக்கித் தள்ளிவிட வேண்டுமா? பெருஞ்செலவை உட்படுத்தும் சிகிச்சை அனைவருக்கும் கிடைக்காதபோது, உடல்நல பராமரிப்பு நியாயமாக எப்படி பகிர்ந்தளிக்கப்பட வேண்டும்?
இப்படிப்பட்ட சிக்கலான பிரச்சினைகள் உயிர்-ஒழுக்கவியல் (Bioethics) என்றழைக்கப்படும் ஒரு மருத்துவ ஆய்வு துறையை முன்னிலைக்குக் கொண்டுவந்துள்ளன. இந்த உயர்-ஒழுக்கவியல், உயிரியல் ஆய்வு மற்றும் மருத்துவ முன்னேற்றங்களுடைய ஒழுக்க சம்பந்தமான நிபந்தனைகளைக் கையாளுவதற்கு மருத்துவர்களுக்கும் அறிவியல் அறிஞர்களுக்கும் உதவி செய்வதை குறிக்கோளாக கொண்டுள்ளது. கடுமையாக இருக்கும் பெரும்பாலான தீர்மானங்கள் மருத்துவமனைகளில் எழும்புவதால், அநேக மருத்துவமனைகள் உயிர்-ஒழுக்கவியல் குழுக்களை ஏற்படுத்தியுள்ளன. பொதுவாக குழு உறுப்பினர்கள்—மருத்துவர்களும் நீதிபதிகளும் உட்பட—மருத்துவத்திலுள்ள ஒழுக்க சம்பந்தமான பிரச்சினைகள் அலசி ஆராயப்படுகிற கருத்தரங்குகளில் கலந்துகொள்கின்றனர்.
பின்வரும் சில கேள்விகள் இப்படிப்பட்ட கருத்தரங்குகளில் அடிக்கடி எழுப்பப்படுகின்றன: முக்கியமாக மத சம்பந்தமான காரணங்களுக்காக இரத்தமேற்றுதலை ஏற்க மறுக்கும் யெகோவாவின் சாட்சிகளுடைய நம்பிக்கைகளை மருத்துவர்கள் எந்தளவுக்கு மதிக்கவேண்டும்? மருத்துவரீதியில் இரத்தமேற்றுதல் “பரிந்துரைக்கத்தக்கதாக” தோன்றினால், ஒரு மருத்துவர் தன்னுடைய நோயாளியின் விருப்பத்துக்கு மாறாக இரத்தமேற்ற வேண்டுமா? ‘நோயாளிக்கு தெரியாத பட்சத்தில் அது அவருக்குத் தீங்கிழைக்காது,’ என்பது போல நோயாளிக்குத் தெரியாமலே அவ்விதமாகச் செய்வது ஒழுக்க சம்பந்தமாக ஏற்றுக்கொள்ளப்படத்தக்கதாக இருக்குமா?
இப்படிப்பட்ட பிரச்சினைகளைப் பொருத்தமாக கையாளுவதற்கு, சாட்சிகளின் நோக்குநிலையைப் பற்றி உணர்ச்சிகளுக்கு அப்பாற்பட்ட ஒரு புரிந்துகொள்ளுதல் மருத்துவர்களுக்கு அவசியமாகும். யெகோவாவின் சாட்சிகள் தங்களுடைய பங்கில், பரஸ்பர புரிந்துகொள்ளுதல் எதிர்ப்பைத் தவிர்ப்பதற்கு துணையாக இருக்கும் என்பதை உணர்ந்தவர்களாய் தங்கள் நிலைநிற்கையை மருத்துவர்களுக்கு விளக்குவதற்கு ஆவலாக உள்ளனர்.
மனங்களின் ஒரு சந்திப்பு
ஸ்பானிய நாட்டைச் சேர்ந்த பிரபல உயிர்-ஒழுக்கவியல் பேராசிரியர் டையகோ கிரேஸியா தன் வகுப்பு இப்படிப்பட்ட ஒரு உரையாடலில் கலந்துகொள்ளவேண்டுமென விரும்பினார். “இரத்தமேற்றுதலின் சம்பந்தமாக உங்களுக்கு இருந்திருக்கும் பிரச்சினைகளின் காரணமாக . . . [யெகோவாவின் சாட்சிகளாகிய] உங்களுக்கு உங்கள் கருத்துக்களை வெளிப்படுத்துவதற்கு ஒரு வாய்ப்பை அளிப்பது பொருத்தமாகவே இருக்கிறது,” என்பதாக அந்தப் பேராசிரியர் சொன்னார்.
இதன் காரணமாக, 1996 ஜூன் 5-ம் தேதி, யெகோவாவின் சாட்சிகளின் மூன்று பிரதிநிதிகள் தங்கள் நோக்குநிலையை விளக்குவதற்காக ஸ்பெயினில் மாட்ரிட்டிலுள்ள கம்ப்பிளியூட்டன்ஸ் பல்கலைக்கழகத்துக்கு அழைக்கப்பட்டனர். சுமார் 40 மருத்துவர்களும் மற்ற நிபுணர்களும் அங்கிருந்தனர்.
சாட்சிகள் சுருக்கமாக பேசிய பின்பு, நிகழ்ச்சிநிரலில் கேள்விகள் அனுமதிக்கப்பட்டன. வயது வந்த ஒரு நோயாளிக்கு (adult patient) குறிப்பிட்ட ஒரு மருத்துவ சிகிச்சையை மறுப்பதற்கு உரிமை கொடுக்கப்பட வேண்டும் என்பதை அங்கிருந்த அனைவரும் ஒப்புக்கொண்டனர். நோயாளி தகவலறிந்து ஒப்புதல் அளித்தால் தவிர, இரத்தமேற்றுதல் ஒருபோதும் செய்யப்படக்கூடாது என்பதை வகுப்பிலுள்ளவர்களும்கூட நம்பினர். என்றபோதிலும் சாட்சிகளுடைய நிலைநிற்கையில் ஒருசில அம்சங்கள் அவர்களுக்குக் கவலை தருவனவாய் இருந்தன.
ஒரு கேள்வி பணம் சம்பந்தப்பட்டதாக இருந்தது. சில சமயங்களில் இரத்தமில்லாத அறுவை சிகிச்சையில் லேசர் அறுவை போன்ற விசேஷமான கருவிகளும் இரத்தத்தில் சிவப்பு அணு உற்பத்தியைத் தூண்டுவதற்கு பயன்படும் எரித்ரோபொய்டீன் போன்ற விலையுயர்ந்த மருந்துகளும் உட்பட்டிருக்கின்றன. குறைந்த செலவை உட்படுத்தும் ஒரு தெரிவை மறுப்பதன் மூலம், பொது சுகாதார தொண்டு நிறுவனங்கள் தங்களுக்கு விசேஷித்த சலுகைகளை தரும்படி சாட்சிகள் எதிர்பார்க்கின்றனரா என்பதை ஒரு மருத்துவர் அறிய ஆவலாக இருந்தார்.
பணம் என்பது மருத்துவர்கள் அவசியமாகவே கருத்தில் கொள்ள வேண்டிய ஒரு விஷயமாக இருப்பதை ஒப்புக்கொள்ளும் அதே சமயத்தில், ஒரே விதமான இரத்தத்தை ஏற்றுவதில் உட்பட்டுள்ள மறைந்திருக்கும் செலவுகளை அலசி ஆராயும் பிரசுரிக்கப்பட்டுள்ள ஆராய்ச்சி ஏடுகளை சாட்சிகளின் ஒரு பிரதிநிதி குறிப்பிட்டார். இதில் இரத்தமேற்றுதல் சம்பந்தமான சிக்கல்களுக்கு சிகிச்சையளிப்பற்காகும் செலவும் இப்படிப்பட்ட சிக்கல்களின் காரணமாக ஏற்படும் வருமான இழப்பும் உட்பட்டுள்ளது. சராசரி அளவான இரத்தத்தின் ஆரம்ப விலை 250 டாலராக இருந்தபோதிலும், உண்மையில் 1,300-க்கும் அதிகமான டாலர் செலவை—ஆரம்ப தொகையைவிட ஐந்து மடங்கு அதிகம்—ஏற்படுத்தியதைச் சுட்டிக்காண்பித்த ஐக்கிய மாகாணங்களில் செய்யப்பட்ட விரிவான ஒரு ஆராய்ச்சி ஏட்டை அவர் மேற்கோள் காண்பித்தார். ஆகவே அனைத்து காரணிகளும் கவனத்தில் எடுத்துக்கொள்ளப்படுகையில், இரத்தமில்லாத அறுவை சிகிச்சை சிக்கனமானதே. மேலுமாக, இரத்தமில்லாத அறுவை சிகிச்சையின் கூடுதலான செலவு என்பதாக அழைக்கப்படுவது மறுபடியும் பயன்படுத்தமுடிந்த கருவியினுடையதாகும்.
பல மருத்துவர்களின் மனங்களிலிருந்த மற்றொரு கேள்வி அத்தொகுதியைச் சேர்ந்தவர்களிடமிருந்து வரும் அழுத்தம் சம்பந்தப்பட்டதாகும். சாட்சி ஒருவர் தடுமாற்றமடைந்து இரத்தம் ஏற்றிக்கொண்டால் என்ன நடக்கும் என்பதைப்பற்றி அவர்கள் யோசித்தனர். சாட்சிகளின் சமுதாயத்திலிருந்து அவர் தள்ளிவைக்கப்படுவாரா?
முடிவு உண்மையான நிலைமையின்மீது சார்ந்திருக்கும், ஏனென்றால் கடவுளுடைய சட்டத்துக்குக் கீழ்ப்படியாமல் போவது வினைமையான ஒரு விஷயமாகும்; இது சபையின் மூப்பர்கள் ஆராயவேண்டிய ஒன்றாகும். உயிருக்கு ஆபத்தான ஒரு அறுவை சிகிச்சையின் மன அதிர்ச்சிதரும் அனுபவத்தைப் பெற்று, இரத்தமேற்றிக்கொண்டுவிட்ட எவருக்கும் சாட்சிகள் உதவிசெய்ய விரும்புவர். சந்தேகமின்றி இப்படிப்பட்ட ஒரு சாட்சி மிகவும் மோசமாக உணர்ந்து கடவுளோடுள்ள தன்னுடைய உறவைப்பற்றி கவலையுள்ளவராக இருப்பார். இப்படிப்பட்ட ஒரு நபருக்கு உதவியும் புரிந்துகொள்ளுதலும் தேவைப்படலாம். கிறிஸ்தவத்தின் அஸ்திவாரமே அன்பாக இருப்பதன் காரணமாக, எல்லா நியாய விசாரணைக்குரிய வழக்குகளிலும் செய்வது போலவே மூப்பர்கள் உறுதியோடு இரக்கத்தையும் சேர்த்து காண்பிக்க வேண்டும்.—மத்தேயு 9:12, 13; யோவான் 7:24.
“உங்களுடைய ஒழுக்க சம்பந்தமான நிலைநிற்கையை விரைவில் நீங்கள் மறுமதிப்பீடு செய்யமாட்டீர்களா?” என்பதாக ஐக்கிய மாகாணங்களிலிருந்து வந்த உயிர்-ஒழுக்கவியல் பேராசிரியர் கேட்டார். “மற்ற மதங்கள் சமீப ஆண்டுகளில் அதைச் செய்திருக்கின்றன.”
இரத்தத்தின் புனித தன்மையின் சம்பந்தமான சாட்சிகளின் நிலைநிற்கை அவ்வப்போது மறுபரிசீலனைக்கு உட்படுத்தப்படும் ஒழுக்க சம்பந்தமான நோக்குநிலையாக இருப்பதற்கு பதிலாக, அது ஒரு கோட்பாடு சம்பந்தப்பட்ட நம்பிக்கை என்பதாக அவருக்கு சொல்லப்பட்டது. தெளிவாக இருக்கும் பைபிளின் கட்டளை ஒத்திணங்கிப் போவதற்கு இடமளிப்பதில்லை. (அப்போஸ்தலர் 15:28, 29) இப்படிப்பட்ட தெய்வீக சட்டத்தை மீறுவது விக்கிரகாராதனை அல்லது வேசித்தனத்தைப் பொறுத்துக்கொள்வது எப்படியோ அப்படியே சாட்சிகளுக்கு ஏற்றுக்கொள்ளப்பட முடியாததாக உள்ளது.
யெகோவாவின் சாட்சிகள் தங்களுடைய பைபிள் ஆதாரமுள்ள நம்பிக்கைகளுக்கு ஏற்றதாயிருக்கும் மாற்று சிகிச்சையை நாடும் தங்கள் தீர்மானத்தை மதிக்கிற, மருத்துவர்களின்—மாட்ரிட் மாநாட்டில் ஆஜராயிருந்தவர்களைப் போன்றவர்களின்—ஒத்துழைப்பை வெகுவாக போற்றுகின்றனர். மருத்துவர்-நோயாளி உறவுகளை மேம்படுத்துவதிலும் நோயாளியின் விருப்பங்களுக்கு கூடுதலான மரியாதையை வளர்ப்பதிலும் உயிர்-ஒழுக்கவியல் முக்கியமான ஒரு பங்கை வகிக்கும் என்பதில் சந்தேகமில்லை.
ஸ்பானிய நாட்டு பிரபலமான ஒரு வைத்தியர் சொன்னதாக அறிவிக்கப்படும் விதமாகவே, மருத்துவர்கள் தாங்கள் “அபூரணமான கருவிகளையும் தவறு ஏற்பட சாத்தியமுள்ள வழிமூலங்களையும் வைத்தே வேலை செய்வதை” எப்போதும் நினைவில் கொள்ள வேண்டும். ஆகவே “அறிவால் எட்டமுடியாத இடங்களை அன்பு எப்போதும் எட்டவேண்டும் என்ற உறுதியான நம்பிக்கையை” அவர்கள் கொண்டிருப்பது அவசியமாயிருக்கிறது.