உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • w97 4/1 பக். 27-29
  • வாசகரிடமிருந்து வரும் கேள்விகள்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • வாசகரிடமிருந்து வரும் கேள்விகள்
  • காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1997
  • இதே தகவல்
  • உங்களுக்கு நினைவிருக்கிறதா?
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1997
  • உலகை கவனித்தல்
    விழித்தெழு!—1996
  • பாலினத் தொல்லை—ஓர் உலகளாவிய பிரச்சினை
    விழித்தெழு!—1996
  • இராயனுடையதை இராயனுக்குச் செலுத்துதல்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1996
காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1997
w97 4/1 பக். 27-29

வாசகரிடமிருந்து வரும் கேள்விகள்

ஜூரி சேவைக்கு அழைக்கப்படுகையில் ஒரு கிறிஸ்தவர் என்ன செய்ய வேண்டும்?

சில நாடுகளில், நீதித்தீர்ப்பு முறை, குடிமக்களிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட ஜூரிகளைப் பயன்படுத்துகிறது; இது நடைமுறையில் இருந்துவருகிற இடத்தில், ஜூரி சேவை செய்யும்படி கட்டளையிடப்படுகையில் எவ்வாறு பிரதிபலிக்க வேண்டுமென்பதை ஒரு கிறிஸ்தவர் தீர்மானிக்க வேண்டும். தூரா சமபூமியில் ஆஜராகும்படி பாபிலோனிய அரசாங்கம் கட்டளையிட்டதற்குச் சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ இணங்கியதைப்போலவும், ரோம அதிகாரிகளின் கட்டளையின்படி யோசேப்பும் மரியாளும் பெத்லகேமுக்குச் சென்றதைப்போலவும், அங்கு ஆஜராயிருப்பதை பைபிள் நியமங்கள் தடைவிதிப்பதில்லை என்று கிறிஸ்தவர்கள் பலர் நல்மனச்சாட்சியுடன் முடிவுசெய்திருக்கின்றனர். (தானியேல் 3:1-12; லூக்கா 2:1-4) எனினும் நேர்மையானக் கிறிஸ்தவர்கள் கவனிக்க வேண்டிய காரியங்கள் இருக்கின்றன.

ஜூரிகளைப் பயன்படுத்துவது பொதுவாக எல்லா இடங்களிலும் செய்யப்படுவதில்லை. சில நாடுகளில், சமுதாய மற்றும் தண்டனைக்குரிய குற்ற வழக்குகள், தகுதிபெற்ற நீதிபதியால் அல்லது நீதிபதிகளின் ஒரு குழுவால் தீர்மானிக்கப்படுகின்றன. வேறு இடங்களில் பொதுசட்டம் என்று அறியப்படுவது இருந்துவருகிறது, ஜூரிகள் நீதிவிசாரணையின் பாகமாக இருக்கின்றன. இருப்பினும், ஜூரிகள் எவ்வாறு தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள், அவர்கள் என்ன செய்கிறார்கள் என்பவற்றைப் பற்றி பெரும்பான்மையான மக்களுக்கு அதிகம் தெரியாது. ஆகையால், உங்களுக்கு ஜூரி பொறுப்பு இருந்தாலும் இராவிடினும் அதைப்பற்றி ஓரளவு தெரிந்திருப்பது உதவியாக இருக்கும்.

கடவுளுடைய ஜனங்கள், யெகோவாவையே ஈடற்ற உன்னத நீதிபதியாக ஏற்கிறார்கள். (ஏசாயா 33:22) பூர்வ இஸ்ரவேலில், நேர்மையுள்ளவர்களாயும் பாரபட்சமற்றவர்களாயும் இருந்த, அனுபவம் வாய்ந்த ஆண்கள், விவாதங்களைத் தீர்த்துவைப்பதற்கும் நியாயச் சட்ட தீர்மானங்களைச் செய்வதற்கும் நீதிபதிகளாகச் சேவித்தனர். (யாத்திராகமம் 18:13-22; லேவியராகமம் 19:15; உபாகமம் 21:18-21) இயேசு பூமியிலிருந்த காலத்தில், நீதி விசாரணை செய்வது, யூத உயர்நீதிமன்றமான சன்கெத்ரீனால் கையாளப்பட்டது. (மாற்கு 15:1; அப்போஸ்தலர் 5:27-34) பொதுத்துறை ஜூரியில் இருப்பதற்கான எந்த ஏற்பாடும் பொதுநிலையிலிருந்த யூதக் குடிமகனுக்கு இருக்கவில்லை.

குடிமக்களாலாகிய ஜூரிகளை மற்ற நாடுகள் பயன்படுத்தின. சாக்ரட்டீஸ் 501 ஜூரிகளால் விசாரணை செய்யப்பட்டார். ஜூரிகளால் விசாரணை செய்யப்படுவது ரோமப் பேரரசர்களால் ஒழிக்கப்பட்டபோதிலும், ரோம குடியரசில் இருந்துவந்தது. குற்றஞ்சாட்டப்பட்டவன் அவனுடைய அயலாரால் நியாயவிசாரணை செய்யப்படும்படி, இங்கிலாந்தின் அரசர் மூன்றாம் ஹென்ரி, பின்னால் ஏற்பாடு செய்தார். குற்றஞ்சாட்டப்பட்டவனை அவர்கள் அறிந்திருந்ததனால், அவர்களுடைய நீதித்தீர்ப்பு, அவன் தான் குற்றமற்றவன் என்பதைக் கடும் போராட்டத்தால் அல்லது கொடுமையான சோதனைமுறையினூடே தப்பிப் பிழைத்திருப்பதால் நிரூபிப்பதைப் பார்க்கிலும் நியாயமானதாக இருக்கும் என்று உணரப்பட்டது. காலம் செல்லச்செல்ல, இந்த ஜூரியின் தீர்ப்பு, குடிமக்களின் ஒரு தொகுதியால் வழக்கு விசாரணை செய்யப்பட்டு, சாட்சியத்தின் ஆதாரத்தின்பேரில் தீர்ப்பு செய்யும் ஓர் ஏற்பாட்டுக்கு மாறிற்று. நீதிபதியாய் இருப்பவர் சாட்சிய குறிப்புகளின்பேரில் அவர்களுக்கு வழிநடத்துதலை அளித்தார்.

ஜூரி வகைகளிலும், அவற்றின் எண்ணிக்கையிலும், ஒரு தீர்ப்புசெய்வதில் என்ன உட்பட்டிருக்கிறது என்பதிலும் பல வேறுபாடுகள் இருக்கின்றன. உதாரணமாக, அமெரிக்க ஐக்கிய மாகாணங்களில், ஓர் ஆள் ஒரு குற்றச் செயலுக்காகக் குற்றம் சாட்டப்படுவதற்கு போதிய சாட்சியம் இருக்கிறதா என்பதை 12-லிருந்து 23 வரையான உறுப்பினர்கள் அடங்கிய ஒரு கிராண்ட் ஜூரி தீர்மானிக்கிறது. குற்றமிருப்பதையோ குற்றமில்லாமையையோ அது தீர்மானிப்பதில்லை. அவ்வாறே பிண ஆய்வுக்குரிய ஜூரியில் (a coroner’s jury) (விசாரிக்கும் ஜூரியில்) உள்ள ஜூரிகள், தவறு நடந்ததா என்பதைத் தீர்மானிப்பதற்கு அதன் சாட்சியத்தைக் கவனித்தாராய்கின்றனர்.

ஜூரி ஒன்றைப் பற்றி மக்கள் பெரும்பான்மையர் சிந்திக்கையில், குடிமக்கள் 12 பேர் அடங்கிய ஒரு தொகுதி—ஒரு சமுதாய விவாதத்தை அல்லது ஒரு குற்ற வழக்கை விசாரணை செய்வதில் ஈடுபட்டிருப்பதை, குற்றம் இருப்பதை அல்லது குற்றமில்லாமையைத் தீர்மானிப்பதற்கு இவர்கள் சாட்சியத்தைக் கேட்பதை—அவர்கள் மனதில் கொண்டுள்ளனர். கிராண்ட் ஜூரிக்கு மாறாக, இது மிகச் சிறிய குற்றங்களை விசாரிக்கும் ஜூரி குழுவாகும். பொதுவாக, ஜூரி சேவைக்கு ஆஜராகும்படி, வாக்காளர்களின், அதிகாரம் பெற்றுள்ள ஊர்தி ஓட்டுபவர்களின், அல்லது இவர்களைப் போன்ற மற்றவர்களின் பட்டியல்களிலிருந்து தேர்ந்தெடுக்கப்படும் நபர்களுக்கு நீதிமன்றம் அறிக்கை அனுப்புகிறது. குற்றவாளிகளாகத் தீர்க்கப்பட்ட பாதகர்கள், மனத் திறமையற்றவர்கள் போன்ற சிலர் தாங்களாகத் தகுதியற்றிருக்கலாம். உள்ளூர் சட்டத்தின்பேரில் சார்ந்து, மற்றவர்கள்—மருத்துவர்கள், குருமார்கள், வழக்கறிஞர்கள், அல்லது சிறிய வியாபாரங்களின் உடைமையாளர்கள் போன்றோர்—தங்களுக்கு விலக்கமளிக்கப்படும்படி கேட்கலாம். (ஜூரி சேவைக்குத் திடமான, தனிப்பட்ட, மனச்சாட்சி சம்பந்தப்பட்ட ஆட்சேப உணர்ச்சியுடையோராக இருப்பதனிமித்தம் சிலர் விலக்களிக்கப்படலாம்.) எனினும், ஜூரி சேவையில் எல்லாரும் கலந்துகொள்ள கடமைப்பட்டவர்களாக இருக்கும்படி, பல ஆண்டுகளாக மறுபடியும் மறுபடியுமாகவுங்கூட அவ்வாறு செய்யும்படி, அதிகாரிகள் விலக்களிப்புகளை முழுமையாக ஒழித்துக்கட்டிக் கொண்டிருக்கின்றனர்.

ஜூரி சேவையில் கலந்துகொள்கிறவர்கள் எல்லாரும் ஒரு விசாரணையில் தீர்ப்பு செய்பவர்களாகப் பங்கெடுக்க வேண்டியதில்லை. ஜூரிக்கு அழைக்கப்படும் அநேகரில் அங்கொருவர் இங்கொருவராக வேண்டியபோது சிலர் ஒரு குறிப்பிட்ட வழக்குக்காக தெரிந்தெடுக்கப்படுகிறார்கள். பின்பு நீதிபதி வாதிகளையும் எதிர்வாதிகளையும் அவர்களுடைய வழக்கறிஞர்களையும் குறிப்பிட்டுக் காட்டி, அந்த வழக்கின் இயல்பை விவரிக்கிறார். ஜூரிகளாக இருக்கப்போகிற ஒவ்வொருவரையும் அவரும் வழக்கறிஞர்களும் ஆராய்கிறார்கள். அந்த வழக்கினுடைய இயல்பின் காரணமாக அதில் சேவை செய்யாதிருப்பதற்கு மனச்சாட்சி சம்பந்தப்பட்ட காரணம் ஒருவருக்கு இருந்தால் அதைத் தெரிவிப்பதற்கு இதுவே சமயம்.

அந்த வழக்கின் விசாரணையினூடே உண்மையில் உட்காரவிருப்போரின் எண்ணிக்கைக்கு ஜூரியில் இருக்கப்போகிறவர்கள் குறைக்கப்படுவது தேவை. அந்த வழக்கில் ஒருசார்பு அக்கறையுடையோராக இருக்கலாமெனச் சந்தேகிக்கப்படுகிறவர்களை நீதிபதி விலக்கி விடுவார்; மேலும், இரு சார்பிலுமுள்ள வழக்கறிஞர்களுக்கும், ஜூரிகள் சிலரை விலக்கி அனுப்பிவிட தனி உரிமை உள்ளது. அந்த ஜூரியிலிருந்து அனுப்பிவிடப்படுபவர்கள், மற்ற வழக்குகளுக்காகத் தெரிந்தெடுக்கப்படும்படி காத்திருக்கத் தங்கள் இடத்திற்குச் சென்றுவிடுகின்றனர். இந்தச் சூழ்நிலையில், கிறிஸ்தவர்கள் சிலர், சந்தர்ப்ப சாட்சி கொடுப்பதற்கு அந்த நேரத்தைப் பயன்படுத்தியிருக்கின்றனர். ஜூரியாக ஒருவர் உண்மையில் செயல்பட்டிருந்தாலும் இல்லாவிடினும், பல நாட்களுக்குப் பிறகு, அவருடைய சேவை முடிவடைகிறது.

கிறிஸ்தவர்கள், ‘மற்றவர்களின் காரியங்களில்’ தலையிட்டுக்கொள்ளாமல், ‘தங்கள் சொந்த அலுவல்களில் கவனத்தைச் செலுத்தப்’ பிரயாசப்படுகிறார்கள். (1 தெசலோனிக்கேயர் 4:11, NW; 1 பேதுரு 4:15, NW) சொத்துரிமையைப் பற்றிய ஒரு காரியத்தில் நியாயம் செய்யும்படி ஒரு யூதன் இயேசுவைக் கேட்டபோது, அவர் இவ்வாறு பதிலளித்தார்: “அதற்கு அவர்: மனுஷனே, என்னை உங்களுக்கு நியாயாதிபதியாகவும் பங்கிடுகிறவனாகவும் வைத்தவன் யார்”? (லூக்கா 12:13, 14) சட்டம் சம்பந்தப்பட்ட காரியங்களில் நடுவராக இருந்து தீர்ப்பளிப்பதற்கு அல்ல, ராஜ்ய நற்செய்தியை அறிவிப்பதற்கே இயேசு வந்தார். (லூக்கா 4:18, 43) சச்சரவுகளைத் தீர்ப்பதற்குக் கடவுளுடைய நியாயப்பிரமாணத்தில் கொடுக்கப்பட்டுள்ள முறையைப் பயன்படுத்தும்படி அந்த மனிதனை இயேசுவின் பதில் செய்வித்திருக்கலாம். (உபாகமம் 116, 17) இத்தகைய குறிப்புகள் நேர்மையாக இருக்கிறபோதிலும், ஜூரி சேவைக்கு ஆஜராகும்படியான கட்டளைக்கு இணங்குவது, மற்றவர்களின் அலுவலில் தலையிடுவதிலிருந்து வேறுபடுகிறது. இது, தானியேலின் மூன்று தோழர்களினுடைய சந்தர்ப்ப நிலைக்குப் பெரும்பாலும் பொருந்துவதாக இருக்கிறது. தூரா சமவெளிக்கு வரும்படி பாபிலோனிய அரசாங்கம் அவர்களுக்குக் கட்டளையிட்டது; அவர்கள் அவ்வாறு செய்தது கடவுளுடைய நியாயப்பிரமாணத்தை மீறினதாக இல்லை. பைபிள் காட்டுகிறபடி, அதன்பின் அவர்கள் செய்ததே மற்றொரு காரியமாக இருந்தது.—தானியேல் 3:16-18.

கடவுளுடைய ஊழியர்கள் மோசேயின் நியாயப்பிரமாணத்திற்குக் கீழ்ப்பட்டிருந்தது முடிவடைந்த பின்பு, பல்வேறு நாடுகளில் உலகப்பிரகாரமான நீதிமன்றங்களுடன் தொடர்புகொள்ள வேண்டியதாயிற்று. சச்சரவுகளைச் சபைக்குள்ளேயே தீர்க்கும்படி அப்போஸ்தலன் பவுல், கொரிந்துவிலிருந்த ‘பரிசுத்தவான்களுக்கு’ வற்புறுத்திக் கூறினார். நீதிமன்றங்களுக்குரிய நீதிபதிகளின் தொகுப்பை ‘அநீதக்காரர்’ என்று குறிப்பிடுகையில், உலகப்பிரகாரமான விவகாரங்களைக் கையாளுவதில் அத்தகைய நீதிமன்றங்களுக்கு ஓர் இடம் இருந்ததை பவுல் மறுக்கவில்லை. (1 கொரிந்தியர் 6:1) ரோம நீதிமன்ற அமைப்புக்கேற்றவாறு அவர், தன் சார்பாக எதிர் வழக்காடி, இராயனிடம் மேல்முறையீடு செய்தார். உலகப்பிரகாரமான நீதிமன்றங்கள் முற்றிலும் தவறு செய்பவை என்பதை இது குறிக்கவில்லை.—அப்போஸ்தலர் 24:10; 25:10, 11.

உலகப்பிரகாரமான நீதிமன்றங்கள் ‘மேலான அதிகாரங்களின்’ செயல்முறையாக இருக்கின்றன. அவை ‘அவற்றிற்குரிய சம்பந்தப்பட்ட ஸ்தானங்களில் கடவுளால் ஏற்படுத்தி வைக்கப்பட்டிருக்கின்றன’; அவை சட்டங்களை ஏற்படுத்தி, அவற்றை வலியுறுத்தி நடைமுறைப்படுத்துகின்றன. பவுல் இவ்வாறு எழுதினார்: “உனக்கு நன்மை உண்டாகும் பொருட்டு, அவன் தேவஊழியக்காரனாயிருக்கிறான். நீ தீமைசெய்தால் பயந்திரு; பட்டயத்தை அவன் விருதாவாய்ப் பிடித்திருக்கவில்லை; தீமைசெய்கிறவன்மேல் கோபாக்கினை வரப்பண்ணும்படி, அவன் நீதியைச் செலுத்துகிற தேவஊழியக்காரனாயிருக்கிறானே.” அதிகாரம் இத்தகைய சட்டப்பூர்வ செயல்களை நிறைவேற்றுகையில் கிறிஸ்தவர்கள் ‘அதிகாரத்தை எதிர்க்கிறதில்லை,’ ஏனெனில், அதற்கு ‘எதிர்த்துநின்று,’ தண்டனைத் தீர்ப்பை அடைவதற்கு அவர்கள் விரும்புகிறதில்லை.—ரோமர் 13:1-4, NW; தீத்து 3:1.

நோக்குநிலைகளைச் சமநிலைப்படுத்துவதில், இராயன் வற்புறுத்திக் கேட்கும் சில காரியங்களுக்கு நாம் உட்பட வேண்டுமா என்பதைக் கிறிஸ்தவர் ஒருவர் சிந்திக்க வேண்டும். பவுல் இவ்வாறு அறிவுரை கூறினார்: “ஆகையால் யாவருக்கும் செலுத்தவேண்டிய கடமைகளைச் செலுத்துங்கள்; எவனுக்கு வரியைச் செலுத்தவேண்டியதோ அவனுக்கு வரியையும், எவனுக்குத் தீர்வையைச் செலுத்தவேண்டியதோ அவனுக்குத் தீர்வையையும் செலுத்துங்கள்; எவனுக்குப் பயப்படவேண்டியதோ அவனுக்குப் பயப்படுங்கள்.” (ரோமர் 13:7) வரி பணத்தைக் குறித்ததில் அது தெளிவாக இருக்கிறது. (மத்தேயு 22:17-21) வீதிகளைச் சுத்தம் செய்வதற்கு அல்லது இராயனின் கடமைகளுக்குட்பட்ட மற்ற வேலைகளை நிறைவேற்றுவதற்கு, பிரஜைகள் தங்கள் நேரத்தையும் முயற்சிகளையும் அளிக்க வேண்டுமென்று இராயன் சொன்னால், அவற்றிற்கு உட்பட வேண்டுமா என்பதை ஒவ்வொரு கிறிஸ்தவரும் அவரவரே தீர்மானிக்க வேண்டும்.—மத்தேயு 5:41.

ஜூரி சேவையை, இராயனுக்குரியதை இராயனுக்குச் செலுத்துவதாகச் சில கிறிஸ்தவர்கள் கருதியிருக்கின்றனர். (லூக்கா 20:25) ஜூரி கடமையில், சான்றுகளைக் கேட்டு, உண்மையின்பேரில் அல்லது சட்டத்தைப் பற்றிய குறிப்புகளின்பேரில் நேர்மையான ஓர் அபிப்பிராயத்தை அளிப்பதே வேலையாக இருக்கிறது. உதாரணமாக, பெரும் ஜூரியில், விசாரணைக்காக ஒருவர் கொண்டுவரப்படுவதற்கு அந்தச் சாட்சியம் போதிய ஆதாரமுள்ளதாக இருக்கிறதாவென ஜூரிகள் தீர்மானிக்க வேண்டும். குற்றமுள்ளவரா இல்லாதவரா என்பதை அவர்கள் தீர்மானிப்பதில்லை. சாதாரண விசாரணையைப் பற்றியதென்ன? பொதுமுறையான வழக்கில், ஜூரி, இழப்பைச் சரிக்கட்ட தீர்ப்புச் செய்யலாம். கடுங்குற்ற வழக்கில், குற்றத் தீர்ப்பளிப்பை அந்தச் சாட்சியம் ஆதரிக்கிறதா என்பதை அவர்கள் தீர்மானிக்க வேண்டும். சிலசமயங்களில், சட்டத்தில் அமைந்த எந்தத் தீர்ப்பு அளிக்கப்பட வேண்டும் என்பதற்கு அவர்கள் ஆலோசனை கூறுகிறார்கள். பின்பு அரசாங்கம், “தீமைசெய்கிறவன்மேல் கோபாக்கினை வரப்பண்ணும்படி,” அல்லது “தீமைசெய்கிறவர்களுக்கு ஆக்கினை” அளிக்கும்படி அதன் அதிகாரத்தைப் பயன்படுத்துகிறது.—1 பேதுரு 2:14.

ஒரு குறிப்பிட்ட ஜூரியில் சேவிப்பதற்குத் தன் மனச்சாட்சி தன்னை அனுமதிக்கிறதில்லை என்று கிறிஸ்தவர் ஒருவர் உணர்ந்தால் என்ன செய்வது? ஜூரி சேவையை பைபிள் குறிப்பிடுகிறதில்லை, ஆகையால், ‘எந்த ஜூரியிலும் சேவை செய்வது என் மதத்திற்கு எதிரானது’ என்று அவர் சொல்ல முடியாது. அந்த வழக்கின்பேரில் சார்ந்ததாய், ஒரு குறிப்பிட்ட வழக்கு சம்பந்தமாக அந்த ஜூரியில் சேவை செய்வது தன் சொந்த மனச்சாட்சிக்கு விரோதமாக இருக்கிறது என்று அவர் சொல்லலாம். பால்சம்பந்த ஒழுக்கக்கேடு, கருச்சிதைவு, மனிதக்கொலை, அல்லது வெறும் உலகப்பிரகாரமான சட்டத்தால் மாத்திரமல்லாமல், பைபிள் அறிவால் பயிற்றுவிக்கப்பட்ட தன் சிந்தனையை உட்படுத்தும் வேறு ஏதோ பிரச்சினை போன்றவற்றில் அவ்வாறு இருக்கலாம். எனினும், உண்மையில், விசாரணை செய்யும்படி அவர் தெரிந்தெடுக்கப்பட்ட வழக்கு இத்தகைய பிரச்சினைகள் உட்படாமல் இருக்கலாம்.

நீதிபதிகளால் அளிக்கப்பட்ட தீர்ப்புக்கு, தான் ஏதாவது பொறுப்புடையவராக இருக்கிறாரா என்பதன்பேரிலும் முதிர்ச்சியடைந்த கிறிஸ்தவர் ஒருவர் சிந்திப்பார். (ஒப்பிடுக: ஆதியாகமம் 39:17-20; 1 தீமோத்தேயு 5:22.) குற்றமுள்ளவராக ஒருவர் தவறாகத் தீர்க்கப்பட்டு, மரண தண்டனை விதிக்கப்பட்டால், ஜூரியிலிருக்கும் ஒரு கிறிஸ்தவர் இரத்தப்பழியில் பங்குள்ளவராக ஆவாரா? (யாத்திராகமம் 22:2; உபாகமம் 21:8; 22:8; எரேமியா 2:34; மத்தேயு 23:35; அப்போஸ்தலர் 18:6) இயேசுவின் விசாரணையின்போது பிலாத்து, ‘‘இந்த நீதிமானுடைய இரத்தப்பழிக்கு . . . குற்றமற்றவ”ராக இருக்க விரும்பினார். யூதர்கள் உடனடியாக: “இவனுடைய இரத்தப்பழி எங்கள்மேலும் எங்கள் பிள்ளைகள்மேலும் இருப்பதாக” என்று சொன்னார்கள்.—மத்தேயு 27:24, 25.

கிறிஸ்தவர் ஒருவர், அரசாங்கத்தின் கட்டளையின்படி, ஜூரி சேவைக்குச் சென்று, ஆனால் தன் சொந்த மனச்சாட்சியின் காரணமாக, ஒரு குறிப்பிட்ட வழக்கில் சேவிக்க, நீதிபதி வற்புறுத்தினபோதிலும், மறுத்தால், அதன் விளைவுகளை—அது அபராதமாயிருந்தாலும் சிறையிருப்பாயிருந்தாலும்—எதிர்ப்பட அவர் ஆயத்தமாக இருக்கவேண்டும்.—1 பேதுரு 2:19.

முடிவாக, ஜூரி சேவையை எதிர்ப்படுகிற ஒவ்வொரு கிறிஸ்தவரும், தான் புரிந்துகொண்ட பைபிளின் விளக்கத்தையும் தன் சொந்த மனச்சாட்சியையும் ஆதாரமாகக் கொண்டு, என்ன போக்கை ஏற்கவேண்டும் என்பதை, தானே தீர்மானிக்க வேண்டும். கிறிஸ்தவர்கள் சிலர், ஜூரி சேவைக்குச் சென்று குறிப்பிட்ட சில ஜூரிகளில் சேவித்திருக்கின்றனர். மற்றவர்கள், தண்டனையை எதிர்ப்படுகையிலும் அதில் சேவிக்க மறுக்கும்படி உந்தப்படுவோராக உணர்ந்திருக்கின்றனர். ஒவ்வொரு கிறிஸ்தவனும் தான் செய்யப்போவதைத் தனக்குத் தானே தீர்மானிக்க வேண்டும், அவருடைய தீர்மானத்தை மற்றவர்கள் குற்றங்குறை கூறக்கூடாது.—கலாத்தியர் 6:5.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்