‘எங்களுக்கு நேர்மையுள்ள ஆட்கள் தேவை’
நேர்மை இன்றைய உலகில் அபூர்வமாக உள்ளது. என்றபோதிலும் கிறிஸ்தவர்களுக்கு அடிப்படையில் தேவைப்படும் ஒன்றாக இது இருக்கிறது. பவுல் எழுதினார்: ‘எல்லாவற்றிலும் யோக்கியமாய் [“நேர்மையாய்,” NW] நடக்க விரும்புகிறோம்.’ (எபிரெயர் 13:18) இத்தாலியில், ஃபேயன்சாவிலுள்ள யெகோவாவின் சாட்சிகளில் ஒருவரான வில்மா இதைத்தான் செய்ய விரும்பினார்கள்.
அவர்கள் தன்னுடைய நகரிலுள்ள ஒரு பல்பொருள் அங்காடிக்கு வெளியே பெரும் தொகையுள்ள ஒரு பணப்பையைக் கண்டெடுத்தபோது, அது அதனுடைய சொந்தக்காரரிடம் திரும்ப கொடுக்கப்படும்படியாக காவல் துறையினரிடம் அதை “எவ்வித தயக்கமுமின்றி” ஒப்படைத்தார்கள் என்பதாக எல் ரெஸ்டோ டெல் கார்லெனோ என்ற செய்தித்தாள் குறிப்பிடுகிறது.
அந்நகர மேயர் இதைப்பற்றி கேள்விப்பட்டபோது, நன்றி தெரிவித்த ஒரு சுருக்கமான குறிப்பை வில்மாவுக்கு உடனடியாக அனுப்பிவைத்தார். “நகரத்தின் சார்பாக, உங்களுடைய மிகச்சிறந்த செயலுக்காக நான் மனமார உங்களுக்கு நன்றிதெரிவிக்கிறேன். பிரசித்திப் பெற்ற நம்முடைய ஃபேயன்சா நகருக்கு நல்லவர்களும் நேர்மையுள்ளவர்களும் தேவை.”
நல்ல செயல்கள் தெரியவந்தாலும் தெரியவராவிட்டாலும் நாம் எப்போதும் நேர்மையானவர்களாக இருக்க முயலவேண்டும், பரிசுத்த வேதாகமம் அறிவுறுத்துகிறபடி, “கர்த்தருக்கு முன்பாக மாத்திரமல்ல, மனுஷருக்கு முன்பாகவும் சரியானவைகளைச் செய்யவே நாடுகிறோம்.”—2 கொரிந்தியர் 8:21, தி ஜெரூசலம் பைபிள்.