நீங்கள் மறுபிறப்பை நம்ப வேண்டுமா?
கிரேக்க தத்துவஞானி பிளேட்டோ காதல் வயப்படுவதை மறுபிறப்பு எண்ணத்தோடு தொடர்புபடுத்தினார். உடலின் மரணத்துக்குப் பின் சாவாமையுள்ளதாக இருக்கும் ஆத்துமா “தூய்மையான வடிவங்களின் எல்லைக்கு” இடம் மாறிச்செல்கிறது என்பதாக அவர் நம்பினார். சரீரம் எதுவுமின்றி வடிவங்களை சிந்தித்த வண்ணமாகவே அது அங்கே கொஞ்ச காலத்துக்குத் தங்கியிருக்கிறது. அது பின்பு மற்றொரு உடலுக்குள் மறுபிறப்பை எடுத்துக்கொள்ளும்போது, ஆத்துமா அடியுணர்வில் வடிவங்களின் எல்லையை நினைவுகூர்ந்து அதற்காக ஏக்கம் கொள்கிறது. பிளேட்டோவின் பிரகாரம், மங்கலாக அவர்கள் நினைவிலிருப்பதும் அவர்கள் தேடிக்கொண்டிருப்பதுமான அந்த அழகின் உயர்வான வடிவத்தை தாங்கள் நேசிப்பவரில் காணும்போது அவர்கள் காதல் வயப்படுகிறார்கள்.
ஆரம்பத்தையும் அடிப்படையையும் அடையாளங்கண்டுகொள்ளுதல்
ஆத்துமா சாவாமையுள்ளதாக இருப்பதை மறுபிறப்பு போதனை தேவைப்படுத்துகிறது. அப்படியென்றால், இப்படிப்பட்ட ஒரு நம்பிக்கையை வைத்திருந்த ஜனங்களில் அல்லது தேசங்களில் இது தோன்றியிருக்க வேண்டும். இதன் அடிப்படையில், சிலர் இது பண்டைய எகிப்தில் தோன்றியதாக நினைக்கின்றனர். மற்றவர்கள் இது பண்டைய பாபிலோனியாவில் ஆரம்பமானது என்பதாக நம்புகிறார்கள். பாபிலோனிய மதத்துக்கு செல்வாக்கை உண்டுபண்ணுவதற்காக, அதன் பூசாரிகள் ஆத்துமா கூடுவிட்டு கூடு பாய்கிறது என்ற கோட்பாட்டை உருவாக்கினர். இவ்விதமாக அவர்களுடைய மதத்தலைவர்கள், வெகு காலத்துக்கு முன்னே இறந்துவிட்ட பிரசித்திப்பெற்ற மூதாதையரின் மறுபிறப்புகளே என்பதாக உரிமைபாராட்ட முடியும்.
இருப்பினும் இந்தியாவில்தான் மறுபிறப்பு கோட்பாடு முழு மலர்ச்சி அடைந்தது. எங்கும் காணப்படுகின்ற தீவினைப் பிரச்சினைகளைப்பற்றியும் மனிதர்கள் மத்தியிலுள்ள துன்பத்தைப்பற்றியும் இந்து மத சாதுக்கள் ஆழ்ந்து சிந்தித்தனர். ‘நீதியுள்ள ஒரு படைப்பாளர் இருக்கிறார் என்ற கருத்தோடு இவற்றை எவ்விதமாக பொருந்தும்படி செய்ய முடியும்?’ என்பதாக அவர்கள் கேட்டனர். கடவுளுடைய நீதிக்கும் எதிர்பாராத அழிவுகள் மற்றும் உலகிலுள்ள அநீதிகளுக்குமிடையே உள்ள முரண்பாட்டை தீர்க்க முயன்றனர். காலப்போக்கில் அவர்கள் காரண காரியம் என்ற “கர்மத்தின் சட்டத்தை”—‘மனிதன் எதை விதைக்கிறானோ அதையே அறுப்பான்’ என்ற விதியை வகுத்தனர். ஒரு வாழ்க்கையின் பாவ புண்ணியங்கள் அடுத்ததில் பலனளிக்கவோ அல்லது தண்டிக்கவோபடும் வகையில் அவர்கள் ஒரு விவரமான ‘இருப்புநிலை ஏட்டை’ தயார் செய்தனர்.
“கர்மம்” என்பது வெறுமனே “வினை” என்று பொருள்படுகிறது. ஒரு இந்து, சமுதாய மற்றும் சமய சட்டதிட்டங்களுக்கு ஏற்ப வாழும்போது அவன் நல்வினை செய்பவனாகவும் இல்லாவிட்டால் தீவினைச் செய்பவனாகவும் கருதப்படுகிறான். அவனுடைய செயல் அல்லது கர்மா, அடுத்தடுத்து வரும் ஒவ்வொரு மறுபிறவியிலும் அவனுடைய எதிர்காலத்தை தீர்மானிக்கிறது. “உடலின் விசேஷ குணங்களை அவர்களுடைய பரம்பரை தீர்மானித்தபோதிலும், எல்லா மனிதருமே, முக்கியமாக அவர்களுடைய முந்தைய வாழ்க்கையின் செயல்களின்படி தயாரிக்கப்பட்ட நடத்தைக்குரிய ஒரு முதனிலைப் படிவத்தோடு (blue print) பிறக்கின்றனர்,” என்பதாக நிக்கிலானந்தா என்ற தத்துவஞானி சொல்கிறார். “[இப்படியாக] மனிதனே தன்னுடைய சொந்த விதியின் காரண கர்த்தாவாக, தன்னுடைய சொந்த தலையெழுத்தை எழுதுகிறவனாக இருக்கிறான்.” இருப்பினும், கூடுவிட்டு கூடுபாயும் இந்த சுழற்சியிலிருந்து விடுபட்டு பரம்பொருளோடு—ஐக்கியமாகிவிடுவதே முடிவான குறிக்கோளாகும். சமுதாயத்தில் ஏற்புடையவராய் நடந்துகொள்வதன் மூலமாயும் இந்து மதத்தில் புலமை பெறுவதன் மூலமாயும் இதை அடையமுடியும் என்பதாக நம்பப்படுகிறது.
இப்படியாக மறுபிறப்பு பற்றிய போதனை, ஆத்துமா சாவாமையுள்ளது என்ற கோட்பாட்டை அஸ்திபாரமாக வைத்து வினைப்பயன் விதியைப் பயன்படுத்தி கட்டடத்தை எழுப்புகிறது. இந்தக் கருத்துக்களைப் பற்றி கடவுளுடைய ஏவப்பட்டெழுதப்பட்ட வார்த்தையாகிய பைபிள் என்ன சொல்கிறது என்பதை நாம் பார்க்கலாம்.
மனிதனின் ஒரு பாகம் சாவாமையுள்ளதா?
இந்தக் கேள்விக்குப் பதிலளிக்க, இந்தப் பொருளைப் பற்றி சொல்லுகிற மேலான ஊற்றுமூலத்திடம்—ஏவப்பட்டெழுதப்பட்ட படைப்பாளரின் வார்த்தையிடம்—நாம் நம்முடைய கவனத்தைத் திருப்புவோம். முதல் மனிதனாகிய ஆதாமின் படைப்பைப் பற்றி விவரிக்கையில், பைபிளின் முதல் புத்தகம் இவ்வாறு சொல்லுகிறது: “தேவனாகிய கர்த்தர் மனுஷனைப் பூமியின் மண்ணினாலே உருவாக்கி, ஜீவசுவாசத்தை அவன் நாசியிலே ஊதினார், மனுஷன் ஜீவாத்துமாவானான் [நெபெஷ்].”a (ஆதியாகமம் 2:7) தெளிவாகவே, ஜீவாத்மா என்பது முதல் மனிதனிலிருந்து தனிவேறான ஒன்றென பைபிள் குறிப்பிடுகிறதில்லை. ஒரு மனிதன் ஆத்துமாவை உடையவனாக இல்லை, ஆனால் அவனே ஆத்துமா. இங்கே ஆத்துமா என்பதற்கு பயன்படுத்தப்பட்டுள்ள எபிரெய வார்த்தை நெபெஷ் ஆகும். இது பைபிளில் சுமார் 700 தடவை காணப்படுகிறது; அது மனிதனிலிருந்து பிரிந்திருக்கும் சடப்பொருள் சாராத ஒரு பாகத்தை ஒருபோதும் குறிப்பதில்லை, ஆனால் அது எப்போதும் தொட்டு உணரக்கூடியதும் சரீர சம்பந்தமானதையுமே குறிக்கிறது.—யோபு 6:7; சங்கீதம் 35:13; 107:9; 119:28.
மரணத்தின்போது ஆத்துமாவுக்கு என்ன நேரிடுகிறது? ஆதாம் இறந்தபோது என்ன நடந்தது என்பதைச் சிந்தித்துப்பாருங்கள். அவன் பாவம்செய்த போது, கடவுள் அவனிடம் இவ்வாறு சொன்னார்: ‘நீ பூமியிலிருந்து எடுக்கப்பட்டபடியால், நீ பூமிக்குத் திரும்புவாய். நீ மண்ணாயிருக்கிறாய், மண்ணுக்குத் திரும்புவாய்.’ (ஆதியாகமம் 3:19) அது எதை அர்த்தப்படுத்துகிறது என்பதை எண்ணிப்பாருங்கள். கடவுள் அவனை மண்ணிலிருந்து உருவாக்குவதற்கு முன்பாக, ஆதாம் எங்குமே இல்லை. அவனுடைய மரணத்துக்குப் பின்பும்கூட, ஆதாம் எங்குமே இல்லாதிருக்கும் அதே நிலைக்குத் திரும்பினான்.
சுருங்கச் சொன்னால் மரணம் ஜீவனுக்கு எதிரானது என்பதாக பைபிள் போதிக்கிறது. பிரசங்கி 9:5, 10-ல் நாம் இவ்வாறு வாசிக்கிறோம்: “உயிரோடிருக்கிறவர்கள் தாங்கள் மரிப்பதை அறிவார்களே, மரித்தவர்கள் ஒன்றும் அறியார்கள்; இனி அவர்களுக்கு ஒரு பலனுமில்லை, அவர்கள் பேர்முதலாய் மறக்கப்பட்டிருக்கிறது. செய்யும்படி உன் கைக்கு நேரிடுகிறது எதுவோ, அதை உன் பெலத்தோடே செய்; நீ போகிற பாதாளத்திலே செய்கையும் வித்தையும் அறிவும் ஞானமும் இல்லையே.”
இறந்தவர்களால் எதையும் செய்யவோ அல்லது உணரவோ முடியாது என்பதை இது அர்த்தப்படுத்துகிறது. அவர்களுக்கு இனிமேலும் எந்த யோசனைகளும் இல்லை, எதையும் அவர்கள் ஞாபகத்தில் வைத்திருப்பதும் இல்லை. சங்கீதக்காரன் சொன்னார்: “பிரபுக்களையும், இரட்சிக்கத் திராணியில்லாத மனுபுத்திரனையும் நம்பாதேயுங்கள். அவனுடைய ஆவி பிரியும், அவன் தன் மண்ணுக்குத் திரும்புவான்; அந்நாளிலே அவன் யோசனைகள் அழிந்துபோம்.”—சங்கீதம் 146:3, 4.
மரணத்தின்போது ஆத்துமா மற்றொரு உடலுக்குள் சென்றுவிடுவதில்லை, ஆனால் அது இறந்துபோகிறது என்பதாக பைபிள் தெளிவாக காண்பிக்கிறது. “பாவஞ்செய்கிற ஆத்துமாவே சாகும்” என்பதாக பைபிள் அழுத்தந்திருத்தமாக சொல்கிறது. (எசேக்கியேல் 18:4, 20; அப்போஸ்தலர் 3:23; வெளிப்படுத்துதல் 16:3) இதன் காரணமாக, ஆத்துமா சாவாமையுள்ளது என்ற கோட்பாட்டுக்கே—மறுபிறப்பு கோட்பாட்டின் அஸ்திபாரத்துக்கே—வேதாகமத்தில் எந்த ஆதாரமும் இல்லை. அதில்லாமல், மறுபிறப்பு கோட்பாடும் நொறுங்கிவிழுகிறது. அப்படியென்றால் நாம் உலகத்தில் காணும் துன்பத்தை எவ்வாறு விளக்குவோம்?
மக்கள் ஏன் துன்பப்படுகின்றனர்?
பாவமுள்ள ஆதாமிடமிருந்து நாமனைவரும் சுதந்தரித்திருக்கும் அபூரணமே மனிதர் துன்பப்படுவதற்கு அடிப்படைக் காரணமாகும். “ஒரே மனுஷனாலே பாவமும் பாவத்தினாலே மரணமும் உலகத்திலே பிரவேசித்ததுபோலவும், எல்லா மனுஷரும் பாவஞ்செய்தபடியால், மரணம் எல்லாருக்கும் வந்ததுபோலவும் இதுவுமாயிற்று” என்று பைபிள் சொல்கிறது. (ரோமர் 5:12) நாமனைவரும் ஆதாமிலிருந்து பிறந்த காரணத்தால், நாம் நோயுற்று, முதுமை அடைந்து இறந்துபோகிறோம்.—சங்கீதம் 41:1, 3; பிலிப்பியர் 2:25-27.
மேலுமாக படைப்பாளரின் மாற்றமுடியாத ஒழுக்கச் சட்டம் இவ்வாறு சொல்கிறது: “மோசம்போகாதிருங்கள். தேவன் தம்மைப் பரியாசம்பண்ணவொட்டார்; மனுஷன் எதை விதைக்கிறானோ அதையே அறுப்பான். தன் மாம்சத்திற்கென்று விதைக்கிறவன் மாம்சத்தினால் அழிவை அறுப்பான்.” (கலாத்தியர் 6:7, 8) இதன் காரணமாக, கட்டுப்பாடற்ற வாழ்க்கை முறையானது உணர்ச்சிப்பூர்வமான வேதனைக்கும், விரும்பப்படாத கருத்தரிப்புகளுக்கும், பாலுறவினால் கடத்தப்படும் நோய்களுக்கும் வழிநடத்தக்கூடும். “[ஐக்கிய மாகாணங்களில்] திகைப்புண்டாக்கும் அளவுக்கு, 30 சதவீதத்தினருக்கு ஏற்படும் சாவுக்கேதுவான புற்றுநோய் முக்கியமாக புகைபிடிப்பதாலும், அதே அளவான எண்ணிக்கையினருக்கு அவர்களுடைய வாழ்க்கைப் பாணியாலும், விசேஷமாக உணவுப்பழக்கங்கள் மற்றும் உடற்பயிற்சி இல்லாமையாலுமே வருகிறது” என்பதாக சையன்டிஃபிக் அமெரிக்கன் பத்திரிகை சொல்கிறது. துன்பத்தைக் கொண்டுவரும் சில அழிவுகள், பூமியின் வளங்களை மனிதன் தவறாக நிர்வகித்திருப்பதால் ஏற்பட்ட விளைவுகளாகும்.—வெளிப்படுத்துதல் 11:18-ஐ ஒப்பிடுக.
ஆம், மனிதனே தன்னுடைய பெரும்பாலான துன்பங்களுக்கு பொறுப்புள்ளவனாக இருக்கிறான். இருப்பினும் ஆத்துமா சாவாமையுள்ளதாக இல்லை என்பதால், ‘நீங்கள் விதைப்பதை அறுக்கும்’ நியதியை, மனித துன்பங்களை கர்மத்தோடு—முற்பிறவியில் செய்யப்பட்டதாக கருதப்படும் செயல்களோடு—சம்பந்தப்படுத்துவதற்கு பயன்படுத்தமுடியாது. “மரித்தவன் பாவத்துக்கு நீங்கி விடுதலையாக்கப்பட்டிருக்கிறானே” என்பதாக பைபிள் சொல்கிறது. (ரோமர் 6:7, 23) இதன் காரணமாக பாவத்தின் பலன் மரணத்துக்குப் பின்னான ஒரு வாழ்க்கைக்கு எடுத்துச்செல்லப்படுவது கிடையாது.
பிசாசாகிய சாத்தானும்கூட அதிகமான துன்பத்தை உண்டுபண்ணுகிறான். உண்மையில், இந்த உலகம் சாத்தானின் அதிகாரத்தில் இருக்கிறது. (1 யோவான் 5:19) இயேசு கிறிஸ்து முன்னுரைத்தவிதமாகவே, அவருடைய சீஷர்கள், ‘அவருடைய நாமத்தினிமித்தம் எல்லாராலும் பகைக்கப்படுவார்கள்.’ (மத்தேயு 10:22) இதன் விளைவாக, நீதிமான்களே அநேகமாக பொல்லாதவர்களைவிட அதிகமாக பிரச்சினைகளை எதிர்ப்படுகிறார்கள்.
காரணங்களை தெளிவாக தெரிந்துகொள்ள முடியாத சில சம்பவங்கள் இந்த உலகில் சம்பவிக்கின்றன. மிக வேகமாக ஓடும் ஒரு ஓட்டப்பந்தயக்காரன் இடறிவிழுந்து பந்தயத்தில் தோல்வியடைந்துவிடலாம். பலமுள்ள ஒரு படை, குறைந்த பலமுள்ள படையின் முன்னால் தோற்றுப்போய்விடலாம். ஞானமுள்ள மனிதனுக்கு ஒரு நல்ல வேலை கிடைக்காமல் அவன் பசியினால் துன்புறலாம். வியாபார நிர்வாகத்தைப்பற்றிய மிகநேர்த்தியான அறிவை உடைய ஆட்கள், சூழ்நிலைமைகள் காரணமாக, தங்கள் அறிவை நடைமுறையில் பயன்படுத்த முடியாமல் வறுமையில் வாடலாம். புத்திக்கூர்மையுள்ள நபர்கள் அதிகாரத்திலுள்ளவர்களின் கோபத்துக்கு உள்ளாகி வெறுப்புக்கு ஆளாகலாம். இது ஏன் இப்படி? “சமயமும் எதிர்பாராத சம்பவமும் அவர்கள் எல்லாருக்கும் நேரிடுகிறது” என்பதாக அரசனாகிய சாலொமோன் ஞானி பதிலளிக்கிறார்.—பிரசங்கி 9:11, NW.
துன்பங்கள் ஏன் ஏற்படுகின்றன என்பதை இந்து மத சாதுக்கள் விளக்குவதற்கு வெகு காலத்துக்கு முன்பிருந்தே மனிதவர்க்கம் துன்பமனுபவித்து வருகிறது. ஆனால் மேம்பட்ட ஒரு எதிர்காலத்துக்கான நம்பிக்கை இருக்கிறதா? மேலும் இறந்தோருக்கு என்ன வாக்குறுதியை பைபிள் கொடுக்கிறது?
சமாதானமுள்ள ஒரு எதிர்காலம்
சாத்தானுடைய கட்டுப்பாட்டின்கீழிருக்கும் தற்போதைய உலக சமுதாயத்தை தாம் சீக்கிரத்தில் முடிவுக்குக் கொண்டுவரப் போவதாக படைப்பாளர் வாக்களித்திருக்கிறார். (நீதிமொழிகள் 2:21, 22; தானியேல் 2:44) அப்போது நீதியுள்ள ஒரு புதிய மனித சமுதாயம்—“புதிய பூமி”—மெய்யான ஒன்றாக இருக்கும். (2 பேதுரு 3:13) அந்தச் சமயத்தில் “வியாதிப்பட்டிருக்கிறேன் என்று நகரவாசிகள் சொல்வதில்லை.” (ஏசாயா 33:24) மரணத்தின் வேதனையும்கூட ஒழிக்கப்பட்டிருக்கும், ஏனென்றால் “அவர்களுடைய கண்ணீர் யாவையும் தேவன் துடைப்பார்; இனி மரணமுமில்லை, துக்கமுமில்லை, அலறுதலுமில்லை, வருத்தமுமில்லை; முந்தினவைகள் ஒழிந்துபோயின.”—வெளிப்படுத்துதல் 21:4.
வாக்களிக்கப்பட்டிருக்கும் கடவுளுடைய புதிய உலகின் குடிமக்களைப் பற்றி சங்கீதக்காரன் இவ்வாறு முன்னுரைத்தார்: “நீதிமான்கள் பூமியைச் சுதந்தரித்துக்கொண்டு, என்றைக்கும் அதிலே வாசமாயிருப்பார்கள்.” (சங்கீதம் 37:29) மேலுமாக, சாந்தகுணமுள்ளவர்கள் “பூமியைச் சுதந்தரித்து, மிகுந்த சமாதானத்தினால் மனமகிழ்ச்சியாயிருப்பார்கள்.”—சங்கீதம் 37:11.
முந்தைய கட்டுரையில் குறிப்பிடப்பட்டிருக்கும் முக்கான்பய் கடவுளுடைய அதிசயமான வாக்குறுதிகளை அறிந்துகொள்ளாமலே இறந்துபோய்விட்டார். ஆனால் கடவுளை அறிந்துகொள்ளாமலே இறந்துவிட்டிருக்கும் கோடிக்கணக்கானோருக்கு இத்தகைய சமாதானமுள்ள ஒரு புதிய உலகில் உயிர்த்தெழுப்பப்படும் வாய்ப்பு இருக்கிறது; ஏனென்றால் பைபிள் இவ்வாறு வாக்களிக்கிறது: ‘நீதிமான்களும் அநீதிமான்களுமாகிய மரித்தோர் உயிர்த்தெழுந்திருப்பது உண்டு.’—அப்போஸ்தலர் 24:15; லூக்கா 23:43.
இங்கே, “உயிர்த்தெழுதல்” என்பதாக மொழிபெயர்க்கப்பட்டிருக்கும் வார்த்தை கிரேக்க சொல்லாகிய அனாஸ்டாசிஸ் என்பதிலிருந்து வருகிறது; இதன் நேர்பொருள் “மறுபடியுமாக எழுந்து நிற்பது” என்பதாகும். இவ்விதமாக உயிர்த்தெழுதல் என்பது தனிநபரின் வாழ்க்கை இயக்கத்தை மீண்டும் தூண்டுவதாகும்.
வானத்தையும் பூமியையும் படைத்தவரின் ஞானத்துக்கு எல்லையே இல்லை. (யோபு 12:13) இறந்தோரின் வாழ்க்கை இயக்கங்களை நினைவுகூருவது அவருக்கு கடினம் இல்லை. (ஏசாயா 40:26-ஐ ஒப்பிடுக.) யெகோவா அபரிமிதமான அன்புள்ளவராகவும்கூட இருக்கிறார். (1 யோவான் 4:8) ஆகவே, இறந்தோரை அவர்கள் செய்த கெட்ட காரியங்களுக்காக தண்டிப்பதற்காக அல்ல, ஆனால் இறப்பதற்கு முன்பாக அவர்களுக்கிருந்த ஆளுமையோடு பரதீஸிய பூமியின்மீது அவர்களை ஜீவனுக்குக் கொண்டுவர அவர் தம்முடைய பரிபூரண நினைவாற்றலை பயன்படுத்திக்கொள்ள முடியும்.
முக்கான்பய் போன்ற கோடிக்கணக்கானோருக்கு, ஒரு உயிர்த்தெழுதல் அவர்களுடைய அன்பானவர்களோடு மறுபடியுமாக இருப்பதை அர்த்தப்படுத்தும். ஆனால் இப்பொழுது உயிர்வாழ்ந்துகொண்டிருக்கும் ஆட்களுக்கு அது எதை அர்த்தப்படுத்தம் என்பதை எண்ணிப்பாருங்கள். உதாரணமாக, கடவுளையும் அவருடைய நோக்கங்களையும் பற்றிய அதிசயமான சத்தியத்தை அறிந்துகொண்டவராக இருக்கும் முக்கான்பயின் மகனை எடுத்துக்கொள்ளுங்கள். ஒவ்வொரு பிறப்பும் பொல்லாப்பினாலும் துன்பத்தினாலும் சூழப்பட்டிருக்கும் ஏறக்குறைய முடிவில்லாத மறுபிறப்புகளின் ஒரு சுழற்சியில் தன்னுடைய அப்பா மாட்டிக்கொண்டில்லை என்பதை அறிவது அவருக்கு எத்தனை ஆறுதலளிப்பதாக உள்ளது! அவர் வெறுமனே மரணத்தில் நித்திரைசெய்துகொண்டு உயிர்த்தெழுதலுக்காக காத்துக்கொண்டிருக்கிறார். பைபிளிலிருந்து அவர்தாமே கற்றுக்கொண்டிருப்பவற்றை ஒரு நாள் தன்னுடைய அப்பாவோடு பகிர்ந்துகொள்ள வாய்ப்பிருப்பதைச் சிந்தித்துப்பார்க்கையில் அவருக்கு அது எத்தனை கிளர்ச்சியூட்டுவதாக இருக்கிறது!
“எல்லா மனுஷரும் இரட்சிக்கப்படவும், சத்தியத்தை அறிகிற அறிவை அடையவும்” வேண்டும் என்பது கடவுளுடைய சித்தமாயிருக்கிறது. (1 தீமோத்தேயு 2:3, 4) நீங்கள் எவ்வாறு ஏற்கெனவே கடவுளுடைய சித்தத்தைச் செய்துகொண்டிருக்கும் மற்ற லட்சக்கணக்கானவர்களோடு சேர்ந்து ஒரு பரதீஸிய பூமியில் என்றுமாக வாழலாம் என்பதைக் கற்றுக்கொள்வதற்கு இதுவே சமயமாக இருக்கிறது.—யோவான் 17:3.
[பக்கம் 7-ன் சிறு குறிப்பு]
“சமயமும் எதிர்பாராத சம்பவமும் அவர்கள் எல்லாருக்கும் நேரிடுகிறது.”—பிரசங்கி 9:11, NW
[பக்கம் 6-ன் பெட்டி]
கடவுளுடைய ஆளுமையும் கர்மத்தின் சட்டமும்
“கர்மத்தின் சட்டம் மாற்றமுடியாததும் தட்டிக்கழிக்க முடியாததுமாக இருக்கிறது” என்பதாக மோகன்தாஸ் கே. காந்தி விளக்கினார். “ஆகவே கடவுள் தலையிடுவதற்கு எந்த அவசியமும் இல்லை. அவரே இந்தச் சட்டத்தை ஸ்தாபித்துவிட்டு, அடையாள அர்த்தத்தில் மேலுமாக தலையிடாமல் விலகிக்கொண்டுவிட்டார்.” இந்த விளக்கம் குழப்பத்தை உண்டுபண்ணுவதாக காந்தி கண்டார்.
மறுபட்சத்தில், உயிர்த்தெழுதல் வாக்குறுதியானது, கடவுள் தம்முடைய படைப்பில் ஆழ்ந்த அக்கறையுள்ளவராக இருப்பதை வெளிப்படுத்துகிறது. இறந்த ஒரு நபரை பரதீஸிய பூமிக்குள் உயிரோடு கொண்டுவருவதற்கு அந்த நபரைப் பற்றிய எல்லாவற்றையும் அவர் அறிந்திருப்பவராகவும் நினைவில் வைத்திருப்பவராகவும் இருக்கவேண்டும். கடவுள் நிச்சயமாகவே நம் ஒவ்வொருவரிலும் அக்கறையுள்ளவராக இருக்கிறார்.—1 பேதுரு 5:6, 7.
[பக்கம் 5-ன் படம்]
இந்துமத வாழ்க்கைச் சக்கரம்
[பக்கம் 8-ன் படம்]
கடவுளுடைய வார்த்தை உயிர்த்தெழுதலைப் போதிக்கிறது
[அடிக்குறிப்புகள்]
a இந்திய மொழிகளிலுள்ள பைபிளில் நெபெஷ் என்ற எபிரெய வார்த்தையும் சைக்கி என்ற கிரேக்க வார்த்தையும், “ஆத்மா,” “ஜீவன்,” “ஜீவாத்மா,” “பிராணி,” “தெஹி,” “வெக்தி” என்பதாக பல்வேறு விதங்களில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. (உதாரணமாக, தமிழ் ஆதரைஸ்டு வர்ஷன் மற்றும் நியூ ஹிந்தி பைபிள்-ல் எசேக்கியேல் 18:4-ஐயும் மத்தேயு 10:28-ஐயும் காண்க.) மூல மொழியிலுள்ள வார்த்தைகளை உங்களுடைய பைபிள், “ஆத்துமா,” “பிராணி,” அல்லது வேறுவிதத்தில் மொழிபெயர்த்திருந்தாலும், நெபெஷ் மற்றும் சைக்கி என்ற வார்த்தைகள் வருகிற வசனங்களை ஆராய்ந்துபார்ப்பதானது, பூர்வ காலங்களில் கடவுளுடைய மக்களுக்கு இந்தப் பதங்கள் எதை அர்த்தப்படுத்தின என்பதைக் காண உதவிசெய்யும். இவ்வாறு ஜீவாத்மா என்ன என்பதை நீங்களே தீர்மானிக்க முடியும்.