கடவுளுடைய வார்த்தை மறுபிறப்பைக் கற்பிக்கிறதா?
மறுபிறப்பு கோட்பாட்டுக்கு ஆதாரத்தைக் கண்டுபிடிக்கும் நம்பிக்கையுடன் பைபிளை ஆராய்ச்சி செய்யும் எவரும் ஏமாற்றமடைவது நிச்சயமாகும். பைபிளில் எந்த இடத்திலும் மனிதர்கள் முற்பிறவி வாழ்க்கைகளை வாழ்ந்திருக்கின்றனர் என்பதை நீங்கள் காணமுடியாது. மேலுமாக, “மறுபிறப்பு” அல்லது “ஆத்துமா கூடுவிட்டுக் கூடு பாய்தல்” அல்லது “சாவாமையுள்ள ஆத்துமா,” போன்ற சொற்றொடர்களை நீங்கள் பைபிளில் காணமாட்டீர்கள்.
மேலுமாக, மறுபிறப்பில் நம்பிக்கை வைத்திருப்பவர்கள், மறுபிறப்பு கருத்து பண்டையக் காலங்களில் அத்தனை சாதாரணமாக இருந்த காரணத்தால் எந்த விளக்கமும் தேவையற்றதாகவே இருந்திருக்கும் என்பதாகச் சொல்வதன்மூலம் பைபிள் ஆதாரம் இதற்கில்லாதிருப்பதை விளக்க முற்படுகிறார்கள். மறுபிறப்பு கோட்பாடு மிகப் பழமையானது என்பது உண்மையே, ஆனால் அது எத்தனை பழமையானதாக அல்லது எத்தனை சாதாரணமானதாக இருந்தது அல்லது இல்லாமல் இருந்தது என்பதன் மத்தியிலும் கேள்வி இன்னும் நிலைத்திருக்கிறது, பைபிள் அதைக் கற்பிக்கிறதா?
அப்போஸ்தலன் பவுல் 2 தீமோத்தேயு 3:16, 17-ல் எழுதினார்: “வேதவாக்கியங்களெல்லாம் தேவஆவியினால் அருளப்பட்டிருக்கிறது; தேவனுடைய மனுஷன் தேறினவனாகவும், எந்த நற்கிரியையுஞ் செய்யத் தகுதியுள்ளவனாகவும் இருக்கும்படியாக, அவைகள் உபதேசத்துக்கும், கடிந்துகொள்ளுதலுக்கும், சீர்திருத்தலுக்கும், நீதியைப் படிப்பிக்குதலுக்கும் பிரயோஜனமுள்ளவைகளாயிருக்கிறது.” ஆம், பைபிள் கடவுளுடைய ஆவியால் ஏவப்பட்டெழுதப்பட்ட வார்த்தை, மனிதகுடும்பத்துக்கு அவருடைய கடிதம். பவுல் எழுதியவிதமாகவே, கடந்தகாலம், தற்காலம் மற்றும் எதிர்காலத்தைப்பற்றிய கேள்விகள் உட்பட, வாழ்க்கையைப் பற்றிய முக்கியமான எல்லா கேள்விகளுக்கும் விடையளிக்க “தேறினவனாகவும், எந்த நற்கிரியையுஞ் செய்யத் தகுதியுள்ளவனாகவும் இருக்கும்படியாக,” நேர்மையாக தகவல் கோருபவருக்கு அது உதவிசெய்கிறது.
பவுல் மேலுமாகச் சொன்னார்: “நீங்கள் தேவவசனத்தை எங்களாலே கேள்விப்பட்டு ஏற்றுக்கொண்டபோது, அதை மனுஷர் வசனமாக ஏற்றுக்கொள்ளாமல், தேவவசனமாகவே ஏற்றுக்கொண்”டீர்கள். “அது மெய்யாகவே தேவவசனந்தான்.” (1 தெசலோனிக்கேயர் 2:13) பைபிள் அபூரண மனிதர்களுடையதை அல்ல, ஆனால் கடவுளுடைய எண்ணங்களைக் கொண்டிருப்பதால், பைபிள் அடிக்கடி மனிதனுடைய எண்ணங்களிலிருந்து வித்தியாசப்படுவதைக் காண்பது நம்மை ஆச்சரியமடையச் செய்யக்கூடாது. காலாகாலமாக இவை பிரபலமாக இருந்தாலும்கூட அவ்விதமாக இருக்கக்கூடாது. ‘ஆனால் பைபிள், ஒருசில இடங்களில் மறுபிறப்பை குறைந்தப்பட்சம் குறிப்பாகவாவது தெரிவிப்பதில்லையா?’ என்பதாக நீங்கள் ஒருவேளைச் சொல்லலாம்.
தவறாக புரிந்துகொள்ளப்பட்டிருக்கும் வேதவசனங்கள்
மறுபிறப்பில் நம்பிக்கை வைத்திருப்பவர்கள், இயேசு முழுக்காட்டுபவனாகிய யோவானைப் பண்டைய தீர்க்கதரிசியாகிய எலியாவோடு சம்பந்தப்படுத்திப் பேசும் மத்தேயு 17:11-13-ல், பைபிள் இந்தப் பொருளைச் சுருக்கமாக குறிப்பிடுகிறது என்பதாகச் சொல்கின்றனர். இந்த வசனம் வாசிக்கிறது: “எலியா முந்திவந்து எல்லாவற்றையும் சீர்ப்படுத்துவது மெய்தான். ஆனாலும், எலியா வந்தாயிற்று என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்; . . . அவர் யோவான்ஸ்நானனைக்குறித்துத் தங்களுக்குச் சொன்னார் என்று சீஷர்கள் அப்பொழுது அறிந்துகொண்டார்கள்.”
இப்படிச் சொல்வதால், முழுக்காட்டுபவனாகிய யோவான் எலியா தீர்க்கதரிசியின் மறுபிறப்பாக இருக்கிறார் என்பதை இயேசு அர்த்தப்படுத்தினாரா? யோவான்தானே தான் அவ்விதமாக இல்லை என்பதை அறிந்திருந்தார். ஒருசமயம் அவரிடம் “நீர் எலியாவா” என்று கேட்கப்பட்டபோது யோவான் தெளிவாக “நான் அவன் அல்ல,” என்று பதிலளித்தார். (யோவான் 1:21) ஆனால் யோவான் மேசியாவுக்கு முன்பாக ‘எலியாவின் ஆவியும் பலமும் உடையவராய்’ நடப்பார் என்று முன்னறிவிக்கப்பட்டிருந்தது. (லூக்கா 1:17; மல்கியா 4:5, 6) வேறு வார்த்தைகளில் சொல்லப்போனால், முழுக்காட்டுபவனாகிய யோவான் எலியாவினுடையதற்கு ஒப்பான ஒரு வேலையை நிறைவேற்றினார் என்ற கருத்தில் அவர் “எலியா”வாக இருந்தார்.
யோவான் 9:1, 2-ல் நாம் வாசிக்கிறோம்: “அவர் [இயேசு] அப்புறம் போகையில் பிறவிக்குருடனாகிய ஒரு மனுஷனைக் கண்டார். அப்பொழுது அவருடைய சீஷர்கள் அவரை நோக்கி: ரபீ, இவன் குருடனாய்ப் பிறந்தது யார் செய்த பாவம், இவன் செய்த பாவமோ, இவனைப் பெற்றவர்கள் செய்த பாவமோ என்று கேட்டார்கள்.” இந்த மனிதன் பிறவிக் குருடனாய் இருந்தபடியால், அவன் முற்கால வாழ்க்கையில் பாவம் செய்திருக்கவேண்டும் என்பதாக மறுபிறப்பில் நம்பிக்கை வைத்திருக்கும் சிலர் குறிப்பிடுகிறார்கள்.
ஆனால் சீஷர்களின் கேள்வியை எழுப்பியது எதுவாக இருந்தாலும், இயேசு கொடுத்த பதிலே தீர்மானிக்கும் காரியமாக இருக்கவேண்டும். அவர் சொன்னார்: “அது இவன் செய்த பாவமுமல்ல, இவனைப் பெற்றவர்கள் செய்த பாவமுமல்ல.” (யோவான் 9:3) ஊனங்கள் முற்கால வாழ்க்கையின் பாவங்களைச் சார்ந்திருக்கிறது என்பதாக குறிப்பாக உணர்த்தும் மறுபிறப்புக்கு இது முரணாக உள்ளது. ஈசாவையும் யாக்கோபையும் பற்றி பவுலும்கூட “பிள்ளைகள் இன்னும் பிறவாமலும், நல்வினை தீவினை ஒன்றும் செய்யாமலுமிருக்கையில்,” என்று எழுதியபோது எவருமே பிறப்பதற்கு முன்பே பாவம் செய்யமுடியாது என்ற குறிப்பைச் சொன்னார்.—ரோமர் 9:11.
உயிர்த்தெழுதல், மறுபிறப்பு அல்ல
பைபிள் மறுபிறப்புக் கோட்பாட்டை ஆதரிக்காதபோதிலும், எவரும் ஏமாற்றமடைந்ததாக உணரவேண்டியதில்லை. நோயும் துயரமும் வருத்தமும் மரணமும் நிறைந்த ஓர் உலகில் மறுபடியும் பிறக்கும் எண்ணத்தைவிட மிக அதிகமாக ஆறுதலளிக்கக்கூடிய ஏதோவொன்றை பைபிளின் செய்தி அளிக்கிறது. பைபிள் அளிப்பது ஆறுதலாக இருப்பது மட்டுமல்லாமல், ஆனால் அதுவே உண்மையாக, கடவுளுடைய சொந்த வார்த்தையாக இருக்கிறது.
பவுல் அந்த ஊக்கமளிக்கும் கோட்பாட்டை இவ்விதமாக வெளிப்படுத்தினார்: ‘நீதிமான்களும் அநீதிமான்களுமாகிய மரித்தோர் உயிர்த்தெழுந்திருப்பது உண்டென்று நான் தேவனிடத்தில் நம்பிக்கைகொண்டிருக்கிறேன்.’ “உயிர்த்தெழுதல்” என்ற வார்த்தை அல்லது அதன் ஒரு வடிவம் கிறிஸ்தவ கிரேக்க வேதாகமத்தில் 50-க்கும் மேற்பட்ட தடவைகள் வருகிறது, பவுல் அதைக்குறித்து கிறிஸ்தவ விசுவாசத்தின் ஓர் அடிப்படைக் கோட்பாடு என்று பேசுகிறார்.—அப்போஸ்தலர் 24:15; எபிரெயர் 6:1, 2.
மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுதல் என்பது, மரணம் உண்டு என்பதை தெளிவாக அர்த்தப்படுத்துகிறது. மனிதனுக்குச் சாவாமையுள்ள ஓர் ஆத்துமா இருக்கிறது என்பது பைபிளில் எந்த இடத்திலும் ஜாடையாகக்கூட குறிப்பிட்டிருப்பதை நீங்கள் காணமாட்டீர்கள். மரணத்தின்போது சரீரத்திலிருந்து பிரிந்துபோகும் ஒரு சாவாமையுள்ள ஆத்துமா மனிதனுக்கு இருந்து பரலோகத்திலோ நரகத்திலோ நித்திய முடிவுக்காக சென்றாலோ மறுபிறப்பு எடுத்தாலோ, அப்பொழுது ஓர் உயிர்த்தெழுதலுக்கும் அங்கு அவசியமிராது. மறுபட்சத்தில், சுமார் நூறு பைபிள் வசனங்கள் மனித ஆத்துமா சாவாமையுள்ளதென்று அல்ல, ஆனால் சாகிறதென்றும் அழிக்கப்படுகிறதென்றும் காண்பிக்கின்றன. பைபிள் எப்பொழுதும் மரணத்தை உயிருக்கு எதிர்ப்பதமாக இருப்பதாக, அதாவது, உயிருடன் இருப்பதற்கு எதிர்மாறாக இல்லாதிருப்பதாகவே பேசுகிறது.
மரணம் அல்லது இல்லாதிருப்பதே கடவுளுக்கு எதிராக ஆதாமும் ஏவாளும் பாவம் செய்ததற்கான தண்டனையாக இருந்தது. அது வேறு ஏதோ ஓர் இடத்தில் சாவாமையுள்ள வாழ்க்கைக்கு ஒரு நுழைவாயிலாக இல்லாமல் ஒரு தண்டனையாகவே இருந்தது. அவர்கள் எங்கிருந்து வந்தார்களோ அதே இடத்திற்கே—மண்ணுக்கே—திரும்புவார்கள் என்பதாக கடவுள் தெளிவாக அறிவித்திருந்தார்: ‘நீ பூமியிலிருந்து எடுக்கப்பட்டாய், நீ மண்ணாயிருக்கிறாய், மண்ணுக்குத் திரும்புவாய்.’ (ஆதியாகமம் 3:19) கடவுளால் படைக்கப்பட்டு பூமியின் மீது ஏதேன் தோட்டத்தில் அவர்கள் வைக்கப்படுவதற்கு முன்பாக அவர்களுக்குச் சாவாமையுள்ள ஆத்துமா இருக்கவில்லை, அவர்கள் மரித்தப்பின்பும் அவர்களுக்கு அப்படி எதுவும் இருக்கவில்லை.
மரணத்திலிருந்து உயிர்த்தெழுதல் நித்திரையிலிருந்து அல்லது இளைப்பாறுதலிலிருந்து எழுந்திருப்பதற்கு ஒப்பிடப்படுகிறது. உதாரணமாக, இயேசு தாம் உயிர்த்தெழுப்பவிருந்த லாசருவைக் குறித்து இவ்வாறு சொன்னார்: “லாசரு நித்திரையடைந்திருக்கிறான், நான் அவனை எழுப்பப்போகிறேன்.” (யோவான் 11:11) தானியேல் தீர்க்கதரிசியைக் குறித்து நாம் இவ்வாறு வாசிக்கிறோம்: “நீ இளைப்பாறிக்கொண்டிருந்து, நாட்களின் முடிவிலே உன் சுதந்தர வீதத்துக்கு எழுந்திருப்பாய்.”—தானியேல் 12:13.
பூமியில் நித்திய வாழ்க்கை
மரணத்திலிருந்து உயிர்த்தெழுப்பப்படுகிறவர்களின் முடிவு என்னவாக இருக்கும்? பைபிள் இரண்டு விதமான உயிர்த்தெழுதல்களைப் பற்றி பேசுகிறது—பரலோகத்துக்குரியது மற்றும் பூமிக்குரியது. எக்காலத்திலும் வாழ்ந்திருந்து மரித்துப்போன பெரும்பாலான ஆட்களின் முடிவு பூமிக்குரிய உயிர்த்தெழுதலாக இருக்கப்போகிறது. மிகச் சிலர் கிறிஸ்துவோடுகூட கடவுளுடைய பரலோக ராஜ்யத்தில் ஆட்சிசெய்வதற்காக பரலோக உயிர்த்தெழுதலைக் கொண்டிருக்கின்றனர். (வெளிப்படுத்துதல் 14:1-3; 20:4) பூமிக்குரிய உயிர்த்தெழுதல் எப்போது ஆரம்பமாகும்? தற்போதைய பொல்லாத ஒழுங்குமுறை கடவுளால் அழிக்கப்பட்டு நீதியுள்ள புதிய மனித சமுதாயமாகிய “புதிய பூமி” மெய்ம்மையாகும்போது அது ஆரம்பமாகும்.—2 பேதுரு 3:13; நீதிமொழிகள் 2:21, 22; தானியேல் 2:44.
“புதிய பூமி”யில் வியாதியோ துன்பமோ இனிமேலும் இருக்காது. மரணம்கூட இனி இராது, அதற்குப் பதிலாக நித்திய வாழ்க்கைக்குரிய எதிர்பார்ப்பு இருக்கும். “அவர்களுடைய கண்ணீர் யாவையும் தேவன் துடைப்பார்; இனி மரணமுமில்லை, துக்கமுமில்லை, அலறுதலுமில்லை, வருத்தமுமில்லை; முந்தினவைகள் ஒழிந்துபோயின.” (வெளிப்படுத்துதல் 21:4) மேலும், சங்கீதக்காரன் முன்னறிவித்தார்: “நீதிமான்கள் பூமியைச் சுதந்தரித்துக்கொண்டு, என்றைக்கும் அதிலே வாசமாயிருப்பார்கள்.” (சங்கீதம் 37:29) அதேவிதமாகவே இயேசு சொன்னார்: “சாந்தகுணமுள்ளவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் பூமியைச் சுதந்தரித்துக்கொள்ளுவார்கள்.”—மத்தேயு 5:5.
கடவுளின் அந்த மகத்தான வாக்குறுதிகளை மறுபிறப்புக் கோட்பாடோடு ஒப்பிட்டுப்பாருங்கள். அந்தக் கருத்துப்படி, இதே சீரழிந்த பழைய ஒழுங்குமுறையில் வாழ்வதற்காக நீங்கள் அடிக்கடி வருவதாக கருதப்படுகிறது. நீங்கள் எப்பொழுதும் பொல்லாப்பு, துயரம், வியாதி, மற்றும் மரணத்தில் ஏறக்குறைய முடிவில்லா ஒரு சுழற்சியில் தொடர்ந்து சூழப்பட்டிருப்பதை அது அர்த்தப்படுத்தும். அது என்னே நம்பிக்கையற்ற ஓர் எதிர்கால நிலவரம்!
முன்பு நீங்கள் வாழ்ந்திருக்கிறீர்களா? மற்றும் மறுபடியும் நீங்கள் வாழ்வீர்களா என்ற கேள்விகளுக்கு பைபிள் இவ்வாறாக பதிலளிக்கிறது: இல்லை, தற்போதைய வாழ்க்கையைத் தவிர, வேறு எந்த ஒரு வாழ்க்கையையும் நீங்கள் வாழ்ந்தது இல்லை. ஆனால் உங்கள் வாழ்க்கையை நிலையான ஒன்றாக, ஆம், நித்தியமான ஒன்றாக ஆக்கிக்கொள்வது உங்களுக்குச் சாத்தியமே. இன்று, இந்தத் தற்போதைய ஒழுங்குமுறையின் “கடைசிநாட்களில்,” இந்த உலகின் முடிவைத் தப்பிப்பிழைத்து மரிக்காமலே கடவுளுடைய புதிய உலகிற்குள் பிரவேசிக்கும் நம்பிக்கையைக் கொண்டிருக்கலாம். (2 தீமோத்தேயு 3:1-5; வெளிப்படுத்துதல் 7:9-15) அல்லது கடவுளுடைய புதிய உலகம் வருவதற்குள் நீங்கள் மரித்துவிட்டால், ஒரு பரதீஸிய பூமியில் உயிர்த்தெழுப்பப்படும் நம்பிக்கையை நீங்கள் கொண்டிருக்கலாம்.—லூக்கா 23:43.
என்ன சம்பவித்தாலும் சரி, நீங்கள் இயேசுவில் விசுவாசத்தைக் காண்பித்தீர்களேயானால், மார்த்தாளிடம் அவளுடைய சகோதரன் லாசரு மரித்தபோது இயேசு சொன்ன வார்த்தைகள் உங்களுக்கும்கூட பொருந்துகிறது: “நானே உயிர்த்தெழுதலும் ஜீவனுமாயிருக்கிறேன், என்னை விசுவாசிக்கிறவன் மரித்தாலும் பிழைப்பான்; உயிரோடிருந்து என்னை விசுவாசிக்கிறவனெவனும் என்றென்றைக்கும் மரியாமலும் இருப்பான்.”—யோவான் 11:25, 26.
[பக்கம் 8-ன் சிறு குறிப்பு]
ஆதாமுக்கு சாவாமையுள்ள ஓர் ஆத்துமா இருக்கவில்லை, ஆனால் அவன் மரித்தபோது மண்ணுக்குத் திரும்பினான்
[பக்கம் 9-ன் படம்]
கடவுளுடைய வார்த்தை மறுபிறப்பை அல்ல, ஆனால் உயிர்த்தெழுதலையே கற்பிக்கிறது