ஆவியுலகும் மெய் ஆன்மீக தேடலும்
ஆன்மீக தேவைகளும் சரீர தேவைகளும் நம்மெல்லாருக்குமே உண்டு. அதனால்தான், வாழ்க்கையின் நோக்கம் என்ன, மக்கள் ஏன் துன்பப்படுகிறார்கள், நாம் இறந்துபோகையில் நமக்கு என்ன நேரிடுகிறது போன்ற பல கேள்விகளை அநேகர் கேட்கின்றனர். மரித்தவர்கள் ஆவிகளாக மாறிவிடுகிறார்கள் என்றும், தங்களால் அவர்களுடன் தொடர்புகொள்ள முடியும் என்றும் பலர் உண்மையாக நம்புவதால், இக்கேள்விகளுக்கும் இதுபோன்ற மற்ற கேள்விகளுக்கும் விடை காண ஆவியுலகை நாடுகிறார்கள். இவ்வாறு நாடுவதைத்தான் ஆவியுலகத் தொடர்பு என்கிறோம்.
ஆவியுலகத் தொடர்பை ஆதரிப்பவர்கள் அநேக நாடுகளில் இருக்கின்றனர், இவர்கள் சபைகளில் அல்லது சர்ச்சுகளில் கூடிவருகிறார்கள். உதாரணமாக பிரேஸிலை எடுத்துக்கொண்டால், இந்தக் கொள்கையினர் 40,00,000 பேர் இருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது. இவர்கள் ஈப்பாலீட் லேயான் டெனிஸார் ரீவாய் என்பவர் தொகுத்தமைத்த போதனைகளை பின்பற்றுகிறார்கள். அவர் 19-வது நூற்றாண்டைச் சேர்ந்த பிரெஞ்சு கல்விமானும் தத்துவஞானியுமாவார். இவர் ஆலன் கார்டெக் என்ற புனைபெயரில் புத்தகங்களை எழுதினார். கார்டெக்குக்கு முதல் முதலில் ஆவியுலக காரியங்களில் ஈடுபாடு ஏற்பட்டது 1854-ல்தான். அதன் பிறகு இவர் பல இடங்களிலுள்ள ஆவி மத்தியஸ்தர்களிடம் அநேக கேள்விகள் கேட்டு, தெரிந்துகொண்ட பதில்களை த புக் ஆஃப் ஸ்பிரிட்ஸ் என்ற புத்தகத்தில் 1857-ல் வெளியிட்டார். அவர் எழுதிய மற்ற இரண்டு நூல்கள் த மீடியம்ஸ் புக் மற்றும் த காஸ்பல் அக்கார்டிங் டு ஸ்பிரிட்டிஸம்.
ஆவியுலகத் தொடர்பில் சூனியம், பில்லிசூனியம், மாயவித்தை, பேய் வணக்கம் போன்றவை அடங்கும். ஆனால் ஆலன் கார்டெக்கின் போதனைகளை பின்பற்றுகிறவர்கள் தங்களுடைய நம்பிக்கைகள் வித்தியாசமானவை என்று சொல்கிறார்கள். அவர்களுடைய பிரசுரங்களில் பொதுவாக பைபிள் மேற்கோள்கள் உள்ளன. அவை இயேசுவை, “மனித சமுதாயம் அனைத்திற்கும் வழிகாட்டி, முன்மாதிரி” என்று குறிப்பிடுகின்றன. இயேசுவின் போதனைகளே “கடவுளுடைய சட்டங்களை மிகவும் தெளிவாக வெளிப்படுத்துகின்றன” என்றும் சொல்கின்றன. ஆவியுலகத் தொடர்பு சம்பந்தப்பட்ட புத்தகங்களை மூன்றாவது முறையாக மனிதவர்க்கத்துக்கு கடவுள் வெளிப்படுத்திய சட்டங்களாக கருதினார் ஆலன் கார்டெக். அவரது கருத்துப்படி, கடவுள் வெளிப்படுத்திய முதல் இரண்டு சட்டங்கள், மோசேயின் போதனைகளும் இயேசுவின் போதனைகளுமாகும்.
அயலானிடம் அன்பு காட்டுவதையும் தர்மம் செய்வதையும் ஆவியுலகத் தொடர்பு வலியுறுத்துவதால் அநேகர் இதனிடமாக வசீகரிக்கப்படுகிறார்கள். “தர்மம் இல்லையேல் விமோசனம் இல்லை” என்கிறது ஓர் ஆவியுலகத் தொடர்பு கொள்கை. இந்தக் கொள்கையினர் சமூக சேவையில் ஆர்வங்காட்டி மருத்துவமனைகளையும் பள்ளிகளையும் மற்ற நிறுவனங்களையும் ஸ்தாபிக்க உதவுகிறார்கள். இவை பாராட்டுக்குரியவை. ஆனால் பைபிளிலுள்ள இயேசுவின் போதனைகளோடு ஒப்பிட்டால் இந்தக் கொள்கை எப்படிப்பட்டது? இரண்டு உதாரணங்களை எடுத்துக்கொள்வோம்: மரித்தவர்களுக்கான நம்பிக்கை மற்றும் துன்பத்துக்குக் காரணம்.
மரித்தவர்களுக்கு என்ன நம்பிக்கை?
இந்த ஆவியுலகத் தொடர்பு கொள்கையினரில் பலருக்கு மறுபிறப்பில் நம்பிக்கை உண்டு. இக்கொள்கை சம்பந்தப்பட்ட ஒரு பிரசுரம் இவ்வாறு கூறுகிறது: “இந்த மறுபிறவிக் கொள்கை மாத்திரமே தெய்வ நீதி உண்டு என்ற எமது கருத்தை ஆதரிக்கிறது; இது மாத்திரமே எதிர்காலத்தை விளக்குகிறது, எமது நம்பிக்கைகளை பலப்படுத்துகிறது.” மரணத்தின்போது, ஆன்மா அல்லது “மறுபிறப்பு எடுத்துள்ள ஆவி,” கூட்டுப்புழு பருவத்திற்குப் பின்பு கூட்டைவிட்டு வெளிவரும் பட்டாம்பூச்சியைப் போல உடலைவிட்டு வெளிவருகிறது என்று ஆவியுலத் தொடர்பு கொள்கையினர் சொல்கிறார்கள். இந்த ஆவிகள்தான் முற்பிறவியில் செய்த பாவங்களுக்கு பரிகாரமாக பின்னால் மனித பிறவி எடுக்கின்றன. ஆனால் முற்பிறவியில் செய்த பாவங்கள் என்னென்ன என்பது இவருக்கு நினைவில் இருப்பதில்லை. “முற்பிறவியில் செய்த பாவங்களை மறந்துவிடும்படி செய்வதே பொருத்தமானது என்று கடவுள் கருதுகிறார்” என்கிறது த காஸ்பல் அக்கார்டிங் டு ஸ்பிரிட்டிஸம்.
“மறுபிறவிக் கொள்கையை மறுப்பது கிறிஸ்துவின் வார்த்தைகளையும் மறுப்பதாகும்” என்று எழுதினார் ஆலன் கார்டெக். ஆனால் இயேசுவோ “மறுபிறவி” என்ற வார்த்தையையும் உபயோகிக்கவில்லை இந்தக் கருத்தையும் குறிப்பிடவில்லை. (பக்கம் 22-ல், “மறுபிறப்பைப் பற்றி பைபிள் போதிக்கிறதா?” என்ற தலைப்பைப் பார்க்கவும்.) ஆனால் இயேசு மரித்தோரின் உயிர்த்தெழுதலைப் பற்றி போதித்தார். பூமியில் அவர் ஊழியம் செய்கையில் மூன்று பேரை அவர் உயிர்த்தெழுப்பினார்—நாயீன் ஊர் விதவையின் மகன், ஜெப ஆலயத் தலைவனின் மகள், அவருடைய நெருங்கிய நண்பன் லாசரு. (மாற்கு 5:22-24, 35-43; லூக்கா 7:11-15; யோவான் 11:1-44) குறிப்பிடத்தக்க அந்த நிகழ்ச்சிகளில் ஒன்றின் மூலம் “உயிர்த்தெழுதல்” என்றால் என்னவென்று இயேசு அர்த்தப்படுத்தினார் என்பதைக் காண்போம்.
லாசருவின் உயிர்த்தெழுதல்
தம் சிநேகிதன் லாசரு வியாதியாயிருப்பதாக இயேசு கேள்விப்பட்டார். இரண்டு நாட்களுக்குப்பின் அவர் தம் சீஷர்களிடம் “நம்முடைய சிநேகிதனாகிய லாசரு நித்திரையடைந்திருக்கிறான், நான் அவனை எழுப்பப்போகிறேன்” என்று சொன்னார். சீஷர்கள் அவர் சொல்வதை சரிவர புரிந்துகொள்ளாதபோது அவர் “லாசரு மரித்துப்போனான்” என்று நேரடியாகவே சொன்னார். கடைசியாக இயேசு லாசருவின் கல்லறையிடம் வந்தபோது அவன் மரித்து நான்கு நாட்கள் ஆகிவிட்டிருந்தன. ஆனாலும் அந்தக் கல்லறையை இறுக்கமாக மூடியிருந்த கல்லை அப்புறப்படுத்தும்படி இயேசு கட்டளையிட்டார். பிறகு “லாசருவே, வெளியே வா” என்று உரத்த சத்தமாய்க் கூப்பிட்டார். அப்பொழுது அதிசயமொன்று சம்பவித்தது. “மரித்தவன் வெளியே வந்தான். அவன் கால்களும் கைகளும் பிரேதச் சீலைகளினால் கட்டப்பட்டிருந்தது, அவன் முகமும் சீலையால் சுற்றப்பட்டிருந்தது. இயேசு அவர்களை நோக்கி: இவனைக் கட்டவிழ்த்துவிடுங்கள் என்றார்.”—யோவான் 11:5, 6, 11-14, 43, 44.
நிச்சயமாகவே இது மறுபிறப்பல்ல. மரித்த லாசரு நித்திரையில் இருந்தான், உணர்வின்றி இருந்தான் என்றே இயேசு சொன்னார். பைபிள் கூறுகிறபடி, ‘அவன் யோசனைகள் அழிந்துவிட்டிருந்தன.’ அவன் ‘ஒன்றும் அறியாதவனாய்’ இருந்தான். (சங்கீதம் 146:4; பிரசங்கி 9:5) உயிர்த்தெழுப்பப்பட்ட லாசரு, மறுபிறவி எடுத்திருந்த ஆவியுடைய வித்தியாசமான நபராக இருக்கவில்லை. அவனுக்கு அதே குணங்கள்தான் இருந்தன, அவன் அதே வயதில்தான் இருந்தான். அவனுக்கு முன்பிருந்த அதே நினைவுகள்தான் இருந்தன. அவன் அகால மரணமடைவதற்கு முன்னால் வாழ்ந்த அதே வாழ்க்கையைத் தொடர்ந்தான், அவனுடைய மரணத்தைக் குறித்து துக்கித்துக்கொண்டிருந்த அன்பானவர்களுடன் மீண்டும் சேர்ந்துகொண்டான்.—யோவான் 12:1, 2.
பிற்பாடு லாசரு மறுபடியும் மரித்துப்போனான். அப்படியென்றால், அவன் எதற்காக உயிர்த்தெழுப்பப்பட்டான்? இயேசு செய்த மற்ற உயிர்த்தெழுதல் சம்பவங்களோடுகூட இதுவும், கடவுள் குறித்திருக்கும் காலத்தில் அவருடைய உண்மையுள்ள ஊழியர்கள் மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுப்பப்படுவார்கள் என்ற அவருடைய வாக்குறுதியில் நம்முடைய நம்பிக்கையை இன்னும் அதிகமாக பலப்படுத்துகிறது. இயேசு செய்த அந்த அற்புதங்கள் அவருடைய இந்த வார்த்தைகளை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக ஆக்குகின்றன: “நானே உயிர்த்தெழுதலும் ஜீவனுமாயிருக்கிறேன், என்னை விசுவாசிக்கிறவன் மரித்தாலும் பிழைப்பான்.”—யோவான் 11:25.
எதிர்காலத்தில் நடக்கவிருக்கும் அந்த உயிர்த்தெழுதலைப் பற்றி இயேசு இவ்வாறு சொன்னார்: “பிரேதக்குழிகளிலுள்ள அனைவரும் [என்னுடைய] சத்தத்தைக் கேட்குங் காலம் வரும்; அப்பொழுது, நன்மைசெய்தவர்கள் ஜீவனை அடையும்படி எழுந்திருக்கிறவர்களாகவும், தீமைசெய்தவர்கள் ஆக்கினையை அடையும்படி எழுந்திருக்கிறவர்களாகவும் புறப்படுவார்கள்.” (யோவான் 5:28, 29) லாசருவுக்கு சம்பவித்ததைப் போலவே அதுவும் மரித்த மனிதர்களின் உயிர்த்தெழுதலாக இருக்கும். மண்ணோடு மண்ணாய் மக்கிப்போய், மற்ற உயிரிகளின் பாகமாகவும் ஆகியிருக்கக்கூடிய உடல்கள் உயிர்பெற்று, உணர்வுள்ள ஆவிகளோடு மறுபடியும் ஐக்கியமாவதை இது அர்த்தப்படுத்தாது. மரித்தோரை உயிர்த்தெழுப்புவது, எல்லையில்லா ஞானமும் வல்லமையும் உடைய, வானத்தையும் பூமியையும் படைத்தவரால் செய்ய முடியாத செயல் அல்ல.
இயேசு கிறிஸ்து கற்பித்த இந்த உயிர்த்தெழுதல் கோட்பாடு, மனிதர்களாகிய நம்மிடம் தனிப்பட்ட விதமாக கடவுள் வைத்திருக்கும் ஆழமான அன்பை வெளிப்படுத்துகிறதல்லவா? ஆனால் முன்னர் குறிப்பிடப்பட்ட இரண்டாவது கேள்வியைக் குறித்து என்ன சொல்லலாம்?
துன்பத்துக்குக் காரணமென்ன?
ஞானமில்லாத, அனுபவமில்லாத அல்லது பொல்லாத மக்களின் செயல்களால்தான் மனிதருக்கு பெரும்பாலும் துன்பங்கள் வருகின்றன. ஆனால் மனிதர்கள் நேரடியாக பொறுப்புள்ளவர்களாக இராதபோதிலும் சோகமான சம்பவங்களுக்கு யாரை நொந்துகொள்வது? உதாரணமாக ஏன் விபத்துக்களும் இயற்கை சேதங்களும் ஏற்படுகின்றன? சில குழந்தைகள் ஏன் பிறவியிலேயே குறைபாடோடு பிறக்கிறார்கள்? ஆலன் கார்டெக் இவை எல்லாம் தண்டனைகள் என்று கருதினார். அவர் இவ்வாறு எழுதினார்: “நாம் தண்டிக்கப்படுகிறோம் என்றால் நாம் தவறு செய்திருக்க வேண்டும். அந்த தவற்றை இந்தப் பிறவியில் செய்திராவிட்டால் முற்பிறவியில் செய்திருக்க வேண்டும்.” ஆவியுலகத் தொடர்பு கொள்கையினருக்கு இவ்வாறு ஜெபிக்கும்படி கற்றுக்கொடுக்கப்படுகிறது: “ஆண்டவரே, நீர் எல்லாவற்றிலும் நீதியுள்ளவர். உமக்கு சரியென்று தோன்றிய இந்த நோயை நான் அனுபவித்துத்தான் ஆக வேண்டும் . . . என்னுடைய கடந்த கால பாவத்திற்கு விமோசனமாகவும், என்னுடைய விசுவாசத்துக்கும் உம்முடைய சித்தத்துக்கு கீழ்ப்படிந்திருப்பதற்கும் வந்த சோதனையாகவும் இதை நான் ஏற்றுக்கொள்கிறேன்.”—த காஸ்பல் அக்கார்டிங் டு ஸ்பிரிட்டிஸம்.
இயேசு இப்படி எதையாவது கற்பித்தாரா? இல்லை. பைபிளில் உள்ள இந்த வார்த்தைகளை இயேசு நன்றாகவே அறிந்திருந்தார்: “சமயமும் எதிர்பாரா சம்பவமும் அனைவருக்கும் ஏற்படுகிறது.” (பிரசங்கி 9:11, NW) சில நேரங்களில் கெட்ட காரியங்கள் தற்செயலாக நடக்கின்றன என்பதை அவர் அறிந்திருந்தார். அவை பாவங்களுக்கு தண்டனையாக இருக்க வேண்டியதில்லை.
இயேசுவின் வாழ்க்கையில் நடந்த இந்தச் சம்பவத்தை எடுத்துக்கொள்ளுங்கள்: “அவர் [இயேசு] அப்புறம் போகையில் பிறவிக்குருடனாகிய ஒரு மனுஷனைக் கண்டார். அப்பொழுது அவருடைய சீஷர்கள் அவரை நோக்கி: ரபீ, இவன் குருடனாய்ப் பிறந்தது யார் செய்த பாவம், இவன் செய்த பாவமோ, இவனைப் பெற்றவர்கள் செய்த பாவமோ என்று கேட்டார்கள்.” இதற்கு இயேசு அளித்த பதில் நம்முடைய சந்தேகங்களை போக்குவதாக உள்ளது: “இவன் செய்த பாவமுமில்லை, இவனைப் பெற்றவர்கள் செய்த பாவமுமல்ல, தேவனுடைய கிரியைகள் இவனிடத்தில் வெளிப்படும் பொருட்டு இப்படிப் பிறந்தான். இவைகளைச் சொல்லி, அவர் தரையிலே துப்பி, உமிழ்நீரினால் சேறுண்டாக்கி அந்தச் சேற்றைக் குருடனுடைய கண்களின்மேல் பூசி: நீ போய் சீலோவாம் குளத்திலே கழுவு என்றார். . . . அப்படியே அவன் போய்க் கழுவி, பார்வையடைந்தவனாய்த் திரும்பி வந்தான்.”—யோவான் 9:1-3, 6, 7.
பிறப்பிலிருந்தே இருக்கும் இந்தக் குறைபாட்டுக்கு அவனோ அவனுடைய பெற்றோரோ காரணமல்ல என்பதைத்தான் இயேசுவின் வார்த்தைகள் காண்பித்தன. ஆகவே, முற்பிறவியில் செய்த பாவத்துக்காக அவன் தண்டனை அனுபவிப்பதாக அவர் சொல்லவில்லை. எல்லாருமே அபூரணத்தை சுதந்தரித்திருப்பது இயேசுவுக்குத் தெரியும். ஆனால் அவர்கள் சுதந்தரித்திருப்பது ஆதாமின் பாவம், அவர்கள் பிறப்பதற்கு முன் செய்த பாவமல்ல. ஆதாமின் பாவமே எல்லாரும் சரீரத்தில் அபூரணத்தோடு பிறப்பதற்கும் வியாதி, மரணம் ஆகியவற்றை அனுபவிப்பதற்கும் காரணம். (யோபு 14:4; சங்கீதம் 51:5; ரோமர் 5:12; 9:11) உண்மையில் இந்த நிலைமையை சரிசெய்யத்தான் இயேசு அனுப்பப்பட்டார். அதனால்தான் இயேசுவை “உலகத்தின் பாவத்தைச் சுமந்துதீர்க்கிற தேவ ஆட்டுக்குட்டி” என்று யோவான் ஸ்நானன் குறிப்பிட்டார்.—யோவான் 1:29.a
ஒருநாள் தாம் வந்து அவனைக் குணப்படுத்துவதற்காகவே கடவுள் அவனை குருடனாக பிறக்கும்படி செய்ததாக இயேசு சொல்லவில்லை என்பதைக் கவனியுங்கள். அப்படி செய்திருந்தால் அது எத்தனை கொடூரமான, ஈவிரக்கமற்ற செயலாக இருந்திருக்கும்! அது கடவுளுக்குத் துதியைக் கொண்டுவந்திருக்குமா? கொண்டுவந்திருக்காது. மாறாக குருடன் அற்புதமாக பார்வையடைந்தது ‘தேவனுடைய கிரியைகள் இவனிடத்தில் வெளிப்படுவதற்கு’ ஏதுவாக இருந்தது. இயேசுவின் மற்ற சுகப்படுத்துதல்களைப் போலவே துன்பப்படும் மனிதகுலத்தின்மீது கடவுளுக்கிருக்கும் உண்மையான அக்கறையை இது படம்பிடித்துக் காட்டுகிறது. குறித்த காலத்தில் மனிதரின் எல்லா நோய்களுக்கும் துன்பங்களுக்கும் முடிவை கொண்டுவருவதாக அவர் அளித்திருக்கும் வாக்குறுதியில் நம் நம்பிக்கையை உறுதிப்படுத்துகிறது.—ஏசாயா 33:24.
நம்முடைய துன்பத்துக்கு பரம தந்தை காரணரல்ல, ஆனால் அவர் “நன்மையானவைகளைக் கொடு”க்கிறவர் என்பதை அறிவது நமக்கு ஆறுதலாக இல்லையா? (மத்தேயு 7:11) குருடரின் கண்கள் திறக்கப்பட்டு, செவிடரின் செவிகள் திறவுண்டு, முடவன் நடந்து குதித்து ஓடும்போது உன்னதமானவருக்கு எந்தளவுக்கு மகிமையைத் தரும்!—ஏசாயா 35:5, 6.
ஆன்மீக ஆவலை தணித்தல்
“மனுஷன் அப்பத்தினாலேமாத்திரமல்ல, தேவனுடைய வாயிலிருந்து புறப்படுகிற ஒவ்வொரு வார்த்தையினாலும் பிழைப்பான்” என்று இயேசு சொன்னார். (மத்தேயு 4:4) ஆம், கடவுளுடைய வார்த்தையாகிய பைபிளை வாசித்து அதற்கேற்ப நடக்கும்போது நம்முடைய ஆன்மீக தேவைகள் பூர்த்தி செய்யப்படும். ஆவியுலக மத்தியஸ்தர்களுடன் உரையாடுவதால் உண்மையில் நம் ஆன்மீக தேவைகள் பூர்த்தி செய்யப்பட மாட்டாது. ஆம், கடவுளால் முதலாவதாக வெளிப்படுத்தப்பட்ட சட்டங்கள் என்று ஆலன் கார்டெக் கூறும் மோசேயின் போதனைகளில் இந்தப் பழக்கம் நேரடியாகவே கண்டனம் செய்யப்பட்டுள்ளது.—உபாகமம் 18:10-13.
ஆவியுலகத் தொடர்பில் நம்பிக்கை வைத்திருக்கும் அநேகர் கடவுள் உன்னதமானவர், நித்தியர், ஒப்பற்ற பரிபூரணர், தயாளர், நல்லவர், நீதியுள்ளவர் என்பதையெல்லாம் ஒப்புக்கொள்வர். ஆனால் பைபிள் இதைவிட இன்னும் அதிகத்தை சொல்கிறது. அவருக்கு யெகோவா என்ற தனிப்பட்ட பெயர் இருக்கிறது, இயேசு செய்தது போல அதை நாம் மகிமைப்படுத்த வேண்டும் என்று அது காண்பிக்கிறது. (மத்தேயு 6:9; யோவான் 17:6) கடவுள் நிஜமானவர், மனிதர்கள் அவரோடு தனிப்பட்ட உறவை அனுபவித்து மகிழலாம் என்று அது சொல்கிறது. (ரோமர் 8:38, 39) கடவுள் இரக்கமுள்ளவர், அவர் “நம்முடைய பாவங்களுக்குத்தக்கதாக நமக்குச் செய்யாமலும், நம்முடைய அக்கிரமங்களுக்குத்தக்கதாக நமக்குச் சரிக்கட்டாமலும் இருக்கிறார்” என்பதை நாம் பைபிளை வாசிக்கையில் அறிகிறோம். (சங்கீதம் 103:10) சர்வலோகத்துக்கும் ஆண்டவராகிய யெகோவா தம்முடைய அன்பு, ஈடற்ற அதிகாரம், நியாயத்தன்மை ஆகியவற்றை தம்முடைய ஏவப்பட்டெழுதப்பட்ட வார்த்தையில் வெளிப்படுத்தியுள்ளார். கீழ்ப்படிதலுள்ள மனிதர்களை வழிநடத்தி பாதுகாப்பது அவரே. யெகோவாவையும் அவருடைய மகன் இயேசு கிறிஸ்துவையும் பற்றி அறிந்துகொள்வது ‘நித்திய ஜீவனை’ குறிக்கிறது.—யோவான் 17:3.
கடவுளுடைய நோக்கங்களைப் பற்றி நாம் தெரிந்துகொள்ள வேண்டிய தகவல்கள் அனைத்தையும் பைபிள் அளிக்கிறது. நாம் அவரைப் பிரியப்படுத்த விரும்பினால் என்ன செய்ய வேண்டும் என்பதையும் அது நமக்குச் சொல்கிறது. பைபிளை கவனமாக ஆராய்ந்தால் நம்முடைய கேள்விகளுக்கு உண்மையான, திருப்தியளிக்கும் விடைகள் கிடைக்கின்றன. எது சரி, எது தவறு என்பதை அறிந்துகொள்ள செய்து, உறுதியான நம்பிக்கையையும் அளிக்கிறது. வெகு சீக்கிரத்தில், “[மனிதகுலத்தாரின்] கண்ணீர் யாவையும் தேவன் துடைப்பார்; இனி மரணமுமில்லை, துக்கமுமில்லை, அலறுதலுமில்லை, வருத்தமுமில்லை; முந்தினவைகள் ஒழிந்து[போய்விடும்]” என்று அது நமக்கு உறுதியாக சொல்கிறது. (வெளிப்படுத்துதல் 21:3, 4) இயேசு கிறிஸ்துவின் மூலமாக யெகோவா சுதந்தரிக்கப்பட்ட பாவத்திலிருந்தும் அபூரணத்திலிருந்தும் மனிதவர்க்கத்தை விடுவிப்பார். கீழ்ப்படிதலுள்ள மனிதர்கள் பரதீஸிய பூமியில் நித்திய ஜீவனை அனுபவிப்பார்கள். அந்தச் சமயத்தில் அவர்களுடைய சரீர தேவைகளும் ஆன்மீக தேவைகளும் முழுமையாக பூர்த்தி செய்யப்படும்.—சங்கீதம் 37:10, 11, 29; நீதிமொழிகள் 2:21, 22; மத்தேயு 5:5.
[அடிக்குறிப்பு]
a பாவமும் மரணமும் எவ்வாறு ஆரம்பமானது என்பதைப் பற்றிய கலந்தாலோசிப்புக்கு யெகோவாவின் சாட்சிகளால் வெளியிடப்பட்ட நித்திய ஜீவனுக்கு வழிநடத்துகிற அறிவு புத்தகத்தில் அதிகாரம் 6-ஐ காண்க.
[பக்கம் 22-ன் பெட்டி]
மறுபிறப்பை பைபிள் போதிக்கிறதா?
எந்த பைபிள் வசனமாவது மறுபிறப்பு கோட்பாட்டை ஆதரிக்கிறதா? இந்தக் கோட்பாட்டை நம்புகிறவர்கள் பயன்படுத்தும் சில வேதவசனங்களைக் கவனியுங்கள்:
“நியாயப்பிரமாணமும் தீர்க்கதரிசிகள் யாவரும் யோவான்வரைக்கும் தீர்க்கதரிசனம் உரைத்ததுண்டு. . . . வருகிறவனாகிய எலியா இவன்தான்.”—மத்தேயு 11:13, 14.
எலியாதான் யோவான் ஸ்நானனாக மறுபடியும் பிறந்தாரா? யோவானிடம் “நீர் எலியாவா?” என்று கேட்கப்பட்டபோது அவர் “நான் அவன் அல்ல” என்று மிகத் தெளிவாக பதிலளித்தார். (யோவான் 1:21) ஆனால் மேசியாவுக்கு முன்பு யோவான், “எலியாவின் ஆவியும் பலமும் உடையவனாய்” வருவார் என்று முன்னுரைக்கப்பட்டிருந்தது. (லூக்கா 1:17; மல்கியா 4:5, 6) வேறு வார்த்தையில் சொல்ல வேண்டுமானால், யோவான் ஸ்நானன் எலியா போன்ற ஒரு வேலையைச் செய்தார் என்ற அர்த்தத்தில் அவர் எலியாவாக இருந்தார்.
“ஒருவன் மறுபடியும் பிறவாவிட்டால் தேவனுடைய ராஜ்யத்தைக் காணமாட்டான். நீங்கள் மறுபடியும் பிறக்கவேண்டும் என்று நான் உனக்குச் சொன்னதைக் குறித்து அதிசயப்பட வேண்டாம்.”—யோவான் 3:3, 7.
அப்போஸ்தலர்களில் ஒருவர் பின்னர் இவ்வாறு எழுதினார்: “நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் பிதாவாகிய தேவனுக்கு ஸ்தோத்திரம் உண்டாவதாக; அவர், இயேசு கிறிஸ்து மரித்தோரிலிருந்து எழுந்ததினாலே, . . . தமது மிகுந்த இரக்கத்தின்படியே நம்மை மறுபடியும் ஜெநிப்பித்தார்.” (1 பேதுரு 1:3, 4; யோவான் 1:12, 13) மீண்டும் பிறப்பது பற்றி இயேசு குறிப்பிட்டபோது, தம்மை பின்பற்றுகிறவர்கள் உயிரோடியிருக்கையில் பெறும் ஆன்மீக அனுபவத்தையே அர்த்தப்படுத்தினார், மரணத்திற்குப் பின் மறுபிறவி எடுப்பது பற்றி அவர் சொல்லவில்லை.
“மனுஷன் செத்தபின் அவன் என்றென்றும் வாழ்கிறான்: பூமியில் நான் உயிரோடிருக்கும் நாட்கள் முடிவடைந்தபின் மறுபடியும் திரும்ப வருவதற்காக நான் காத்திருப்பேன்.”—யோபு 14:14-ன் ஒரு “கிரேக்க மொழிபெயர்ப்பு,” த காஸ்பல் அக்கார்டிங் டு ஸ்பிரிட்டிஸம் புத்தகத்தில் காணப்படும் மேற்கோள்.
தமிழ் யூனியன் பைபிள் இந்த வசனத்தை இவ்வாறு மொழிபெயர்க்கிறது: “மனுஷன் செத்தப்பின் பிழைப்பானோ? எனக்கு மாறுதல் [“விடுதலை,” NW] எப்போது வருமென்று எனக்குக் குறிக்கப்பட்ட போராட்டத்தின் நாளெல்லாம் நான் காத்திருக்கிறேன்.” அந்த வசனத்தின் சூழமைவை வாசியுங்கள். மரித்தோர் “விடுதலை”க்காக கல்லறையில் காத்திருக்கிறார்கள் என்பதை நீங்கள் புரிந்துகொள்வீர்கள். (வசனம் 13) காத்திருக்கும்போது அவர்கள் எங்கும் வாழ்வதில்லை. “மனுஷனோவென்றால் செத்தபின் ஒழிந்துபோகிறான், மனுபுத்திரன் ஜீவித்துப்போனபின் அவன் எங்கே?”—யோபு 14:10.
[பக்கம் 21-ன் படம்]
தனிப்பட்டவர்களாக நம்மிடம் கடவுள் அதிக அக்கறை காட்டுவதையே உயிர்த்தெழுதல் நம்பிக்கை சுட்டிக்காட்டுகிறது
[பக்கம் 23-ன் படங்கள்]
மனிதரின் துன்பத்திற்கெல்லாம் கடவுள் முற்றுப்புள்ளி வைப்பார்