வாழ்க்கையின் புதிர்களுக்கு விளக்கம் மறுபிறப்பா?
முன்பு நீங்கள் வாழ்ந்திருக்கிறீர்களா?
மரித்தப் பின்பு ஏதோ ஒரு உயிர் வகையாக மறுபடியும் நீங்கள் வாழ்வீர்களா?
இந்தக் கேள்விகள் மறுபிறப்புக் கோட்பாட்டை உங்களுக்கு நினைப்பூட்டக்கூடும்.
தி நியூ என்ஸைக்ளோப்பீடியா பிரிட்டானிக்கா “மறுபிறப்பை” பின்வரும் விதமாக விளக்குகிறது: “ஒன்றன்பின் ஒன்றாகத் தொடரும் ஒன்று அல்லது அநேக வாழ்க்கைகளில் ஆத்துமா மறுபடியும் பிறக்கிறது என்பதில் நம்பிக்கை, இது மனிதனாகவோ மிருகமாகவோ அல்லது ஒருசிலருடைய விஷயத்தில் தாவரமாகவோ இருக்கலாம்.”
மறுபிறப்பு குறிப்பாக இந்தியாவில் தோன்றிய புத்த மதம், இந்து மதம், ஜைன மதம், சீக்கிய மதம் போன்ற கிழக்கத்திய மதங்களில் முக்கிய பங்கை வகிக்கிறது. உதாரணமாக இந்தியாவில் வாழும் இந்துக்களின் மத்தியில், மரணமும் மறுபிறப்பும் இடைவிடாமல் தொடர்ந்து நிகழ்கிற ஒரு சுழற்சியே வாழ்க்கை என்பதாக கருதப்படுகிறது.
எனினும், சமீப காலங்களில், மறுபிறப்பு கருத்து அநேக இளைஞர் உட்பட, மேற்கத்திய கோளார்த்தத்தில் வாழும் மக்களைக் கவர்ந்திருக்கிறது. கனடாவில் வெளியாகும் சண்டே ஸ்டார் செய்தித்தாளில் எழுதும் பத்தியெழுத்தாளர் ஒருவர் சொன்னபடி, இந்த அதிகமான ஆர்வத்துக்குக் காரணம், “1960-களில் ஆரம்பமான, நம்முடைய மேற்கத்திய சமுதாயத்தின்மீது கிழக்கத்திய சமய கருத்துக்கள் ஏற்படுத்தியிருக்கும் மாற்றத்தின் விளைவாகும்.”
மறுபிறப்பில் ஆர்வம் ஏற்பட்டிருப்பதற்கு மற்றொரு காரணம், ஒருசில புகழ் பெற்ற மனிதர்கள் தாங்கள் முன்பே ஒன்று அல்லது அதிகமான வாழ்க்கையை வாழ்ந்திருப்பதாக பகிரங்கமாகவும் வாஸ்தவமாகவே உறுதியாகவும் தெரிவித்திருப்பதே ஆகும். மருத்துவர்கள் மற்றும் ஆசிரியர்கள் போன்ற பல்வேறு தொழிலிலுள்ளவர்களும் செய்திருப்பது போலவே, வானொலி, டிவி, பத்திரிகைகள் இன்னும் மற்ற செய்தித்தொடர்பு துறைகளும் மறுபிறப்பில் அக்கறைக் காண்பித்திருக்கின்றன.
இவை அனைத்தும் அதிகமான ஆவலைத் தூண்டியிருக்கின்றன. இதன் காரணமாக, ஒருசில வாக்கெடுப்புகளின்படி, கனடாவிலும் ஐக்கிய மாகாணங்களிலும் நான்கில் ஒரு பகுதியினர் மறுபிறப்பை ஏதோ ஒருவகையில் ஏற்றுக்கொள்வதாக தெரிவித்திருக்கின்றனர்.
முற்பிறவி வாழ்க்கை அனுபவங்களைப் பற்றிய உரிமைபாராட்டல்கள்
நடிகை ஷர்லி மக்லேன் லேடீஸ் ஹோம் ஜர்னலில் வந்த பிலிஸ் பாட்டிலியோடு செய்த ஒரு பேட்டியின்போது, தான் பின்னால் கால ஓட்டத்தில் அநேக மாயத்தோற்றமான அனுபவங்களைக் கொண்டிருந்ததாக உரிமைபாராட்டியிருக்கிறாள். “என்னுடைய கடந்தகால வாழ்க்கையில் பலவற்றை என்னால் நினைவுகூர முடிகிறது—சிலசமயங்களில் நான் ஓர் ஆணாகவும் மற்ற சமயங்களில் ஒரு பெண்ணாகவும் இருந்திருக்கிறேன்,” என்று அவள் சொன்னாள்.
டாக்டர் ரேமண்ட் மூடி, தன்னுடைய மாணவர்களையும் மற்றவர்களையும் வைத்து நடத்திய பரிசோதனைகளைத் திரும்பி வருதல் (Coming Back) புத்தகத்தில் விளக்கியுள்ளார். அவர் அறிதுயில் நிலையின் மூலமாக அவர்களுடைய பிறப்புக்கு முன்னான காலத்துக்கு அவர்களை அழைத்துச் சென்றார், அவர்கள் முற்பிறவிக்குரிய வாழ்க்கை நினைவுகள் தங்களுக்கு ஏற்பட்டதாக தெரிவித்தார்கள். ஒருவர் தான் எஸ்கிமோ சமுதாயத்தில் ஒரு எஸ்கிமோவாக வாழ்ந்ததாகச் சொன்னார். மற்றொருவர் ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பாக ‘கற்காலத்தில்’ வாழ்ந்ததாக அடித்துச்சொன்னார்.
டாக்டர் மூடிதானேயும் தான் முற்காலங்களில் ஒன்பது வாழ்க்கையை வாழ்ந்திருப்பதாக உரிமைபாராட்டினார். இவை மர உச்சிகளில் “பண்டைய மனித உருவில்” வாழ்ந்த வாழ்க்கை முதல், ரோம பேரரசின் நாட்களில் தான் அரங்கத்தில் ஒரு சிங்கத்தால் தாக்கப்பட்டுக் கொல்லப்பட்டதாக அவர் கூறும் வாழ்க்கை வரையாக வித்தியாசப்பட்டதாய் இருந்தது.
அறிய ஆர்வமுள்ள ஆட்களை அவர்களுடைய பிறப்புக்கு முற்பட்டதாக நம்பப்படும் காலத்துக்கு எடுத்துச்செல்ல அறிதுயிலின் பயன்பாடு, மற்றவர்களுக்கு பிரயோஜனமாய் இருப்பதாகவும்கூட விளக்கப்பட்டுள்ளது. உணர்ச்சிக் கோளாறுகளுக்குச் சிகிச்சையளிக்க மருத்துவர்கள் இதை பயன்படுத்தியிருக்கிறார்கள். முன்னாளைய ஒரு வாழ்க்கையில் நடந்த ஏதோ ஒரு சம்பவத்துக்குப் பிரச்னையின் அடிச்சுவடுகளைப் பின்பற்றி கண்டுபிடிப்பதன் மூலம், தெளிவாக விளக்கமுடியாத பயங்களைப் போக்கமுடிந்திருப்பதாக விவாதிக்கப்படுகிறது. இந்தக் கருத்து எவ்வளவு நியாயமானதாக இருக்கிறது?
மரணதறுவாயில் ஏற்பட்ட அனுபவங்கள் விவரிக்கப்படுகின்றன
சில ஆட்கள் கூறும் மரணதறுவாயில் ஏற்பட்ட அனுபவங்கள் மறுபிறப்பு கருத்தை பிரபலமாக்க உதவியிருக்கிறது. வாழ்க்கைக்குப் பின் வாழ்க்கை (Life After Life) என்ற புத்தகத்தில் டாக்டர் மூடி, சுமார் 50 ஆட்கள் மரணதறுவாயில் பெற்ற அனுபவங்களைப் பற்றிய கண்டுபிடிப்புகளை அறிக்கைச் செய்கிறார்.
அவர்களுடைய அனுபவங்கள் வித்தியாசப்பட்டவையாக இருந்தாலும், அவை ஒரு மாதிரியை அமைப்பதாக மூடி கருதுகிறார். இந்த ஆட்கள் நீளமான, இருண்ட ஒரு குகைப் பாதையினூடாக பயணப்படும் உணர்வைக் கொண்டிருந்தனர். அவர்கள் தங்கள் சரீரங்களிலிருந்து பிரிக்கப்பட்டு விருப்பப்படி மிதந்துகொண்டிருப்பதாக உணர்ந்தார்கள். அவர்கள் மிகவும் பிரகாசமான ஒரு வெளிச்சத்தை நோக்கி குகையில் வேகமாக நகர்ந்து, குகையின் முடிவில் நீண்ட காலத்துக்கு முன்பாகவே மரித்துவிட்டிருந்த குடும்ப அங்கத்தினர்களைப் பார்த்ததாக உணர்ந்தார்கள். கடைசியாக, அவர்கள் தங்கள் சொந்த சரீரங்களில் விழித்துக்கொண்டார்கள். எனினும், அனைவருமே இந்த ஒவ்வொரு கட்டத்தையும் அனுபவிக்கவில்லை.
இப்படிப்பட்ட அனுபவங்கள் அவற்றைக் கொண்டிருந்தவர்கள் மீது சாதகமான ஒரு பாதிப்பை உடையதாக இருந்தது என்பதாகச் சொல்லப்படுகிறது. அப்படியானால், மரண பயத்தை கைவிட்டு வாழ்க்கைக்கு அர்த்தமுண்டு என்ற நம்பிக்கையை அவர்களுக்கு அது கொடுத்திருக்க வேண்டும். ஆனால் அது எப்பொழுதும் அவ்விதமாக இல்லை. அநேகர் தொடர்ந்து மரணத்துக்குப் பயப்படுகிறவர்களாகவும் வாழ்க்கைக்கு உண்மையான அர்த்தமிருப்பதை பற்றியதில் நம்பிக்கை குறைவுள்ளவர்களாகவுமே இருக்கின்றனர்.
மனித ஆத்துமா வித்தியாசமான உயிர் வகைகளில் மறுபடியும் பிறக்கிறது என்ற எண்ணத்துக்கு இப்படிப்பட்ட அனுபவங்களில் ஆதாரத்தை தாங்கள் காண்பதாக மறுபிறப்பை நம்புகிறவர்கள் சொல்கின்றனர். ஆனால் இந்தக் கோட்பாடு எவ்வகையிலும் நம்பத்தகுந்ததா? வாழ்க்கையின் புதிர்களுக்கு மறுபிறப்பு உண்மையில் விளக்கமளிக்கிறதா? முன்பு நீங்கள் வாழ்ந்திருக்கிறீர்களா, மறுபடியும் நீங்கள் வாழ்வீர்களா? மரணத்தின்போது சரீரத்தை விட்டுச்செல்லும் ஓர் ஆத்துமாவை மனிதர்கள் உடையவர்களாக இருக்கிறார்களா? என்ற கேள்விகளுக்கு ஏதாவது பதிலைத்தான் நாம் கண்டுபிடிக்க முடியுமா? பின்வரும் கட்டுரைகளில் இந்தக் கேள்விகள் கலந்தாலோசிக்கப்படும்.
[பக்கம் 4-ன் சிறு குறிப்பு]
மறுபிறப்பு கிழக்கத்திய மதங்களின் அடிப்படை கூறாகும்
[பக்கம் 4-ன் படம்]
இந்து ஆயுள் சக்கரம்